குமரியின் மூக்குத்தி/குமரியின் மூக்குத்தி
குமரியின் மூக்குத்தி
1
தேவி கன்னியாகுமரி அழகே வடிவமாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தாள். பராக்கிரம பாண்டியன் அம்பிகையைக் கண் கொட்டாமல் பார்த்தபடியே இருந்தான். அர்ச்சகர் லலிதாஸஹஸ்ர நாமத்தைத் தொடங்கினர். பாண்டிய மன்னனுடன் வந்தவர்களில் சிலர் மட்டும் கோயிலின் அர்த்த மண்டபத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.
தேவியின் மூக்குத்தி விளக்கொளியில் சுடர்விட்டு ஒளிர்ந்தது. அப்பா! அந்த ஒளியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டு நிற்க முடியாது போல் இருந்தது; அத்தனை ஒளி: கண்ணக் கூசச் செய்யும் ஒளி உள்ளே அர்ச்சகர், 'ஓம் தாரா காந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸூராயை நம:” (நட்சத்திரத்தினும் மிக்க ஒளி வீசும் மூக்குத்தியை அணிந்தவள்) என்ற நாமத்தைச் சொன்னர் பாண்டியனுடைய கண் அந்தச் சுடர் ஒளி ததும்பும் மூக்குத்தியில் லயிப்பதற்கும், அர்ச்சகர் அந்தத் திருநாமத்தைச் சொல்வதற்கும் பொருத்தமாக இருந்தது. பாண்டியனுக்குச் சிறிது உடம்பு குலுங்கியது. அர்ச்சகர் மேலே அர்ச்சனையை ஓட்டினார். பாண்டியனுக்கு மாத்திரம் கண் அந்த மூக்குத்தியில் நிலைத்துவிட்டது.அதன் சுடர் அலைகள் அவனுடைய உள்ளத்தில் ஒரு சிறிய ஆசை அலையை எழுப்பின. அவன் தன் மாதேவியை நினைத்தான். அவளுடைய மூக்கு அவனுடைய நினைவுக்கு வந்தது. கற்பனையினால் அம்பிகையின் மூக்குத்தியைத் தன் பட்டத்தரசியின் மூக்கில் பொருத்திப் பார்த்தான்.
அந்தச் சமயத்தில், “அகோ வாரும் பிள்ளாய்! பாண்டிய மகாராஜனே!” என்ற ஒலியைக் கேட்டு அம்மன்னன் திடுக்கிட்டுப் போனான். கன்னியாகுமரிக்கு முன் எரிந்து கொண்டிருந்த விளக்கைப் பிடிக்கும் பதுமை ஒன்றுதான் அவனை அழைத்தது. அது வாய் திறந்து பேசுவதை அவன் கண்ணாற கண்டான்; காதால் கேட்டான். பதுமை பேசத் தொடங்கியது.
ஹேபராக்கிரம பாண்டியனே! என்ன அபசாரம் செய்யத் துணிந்துவிட்டாய்! கன்னி பகவதி சொத்தைக் கொள்ளையிடலாமா? உன்னுடைய குடும்பத்தையே பாதுகாக்கும் தாயின் ஆபரணத்தின்மேல் உன் இச்சையை வீசினாயே! இது நியாயமா? அம்பிகை உன்னிடம் கருணை கொண்டவள்; ஆதலால் நீ இப்படி எண்ணியும் இங்கே நிற்கிறாய். இல்லாவிட்டால் உன் கண் இந்தக் கணத்தில் குருடாயிராதா? அது கிடக்கட்டும். ஶ்ரீ மாதாவாகிய அம்பிகையின் நாசிகாபரணத்தைப்பற்றிய கதை உனக்குத் தெரியுமா? தெரிந்திருந்தால் உனக்கு இந்த அடாத ஆசை தோன்றியிராது. ஆகையால், இப்போது அந்தக் கதையைச் சொல்கிறேன் கேள்.
ஈசனம் இல்லாச் சிறப்புடைய மீனவர் குலத் தோன்றலே! கலிங்கத்து மகா யுத்தத்தைப்பற்றிக் கேட்டிருப்பாயே! கலிங்க அரசனான அனந்தபதுமன் சோழ நாட்டுக்குக் கப்பம் செலுத்தாமையால் குலோத்துங்க சோழன் அவனோடு போர் செய்து வென்றான் என்பது தமிழ் நாட்டி னர் யாவருக்கும் தெரியும். சோழ சக்கரவர்த்தியின் மந்திரியாகிய கருணாகரத் தொண்டைமான் இந்தக் கலிங்கத்துப் போரில் வெற்றியடைந்த சிறப்பைக் கலிங்கத்துப் பரணி என்ற தமிழ்ப் பிரபந்தம் சொல்வதையும் நீ அறிந்திருக்கலாம். ஆனால் உலகம் அந்தப் போருக்கு உரிய உண்மைமையான காரணம் இன்னதென்பதை அறியாது. நீ எந்த மூக்குத்திக்கு ஆசைப்பட்டாயோ, அதுதான் கலிங்கப் போருக்கு மூல காரணம். அதைச் சொல்லுகிறேன் கேள்.
ஒரு சமயம் கலிங்க அரசனகிய அனந்தபதுமன் தன் பட்டத்து ராணியோடு தேசாடனம் செய்யப் புறப் பட்டான். அப்போதெல்லாம் சோழனுக்கும் அவனுக்கும் பகைமை இல்லை. சோழனுக்குக் கப்பம் கட்டுபவன் அவன். ஆகையால், அவன் சோழ நாட்டுக்கு வந்தபோது தஞ்சை யில் சில நாட்கள் சோழ அரசனுடைய அரண்மனையில் தங்கியிருந்தான். கலிங்கத்து அரசி பூண்டிருந்த மூக்குத்தி எல்லோருடைய கண்களையும் கொள்ளை கொண்டது. அவர்களிலும் அந்தப்புரத்தில் உள்ள பெண்கள் அதைக் கண்டு கண்டு வியந்தார்கள். குலோத்துங்கனுடைய பட்டத்தரசிக்கு அதனிடத்தில் ஆசையே உண்டாகிவிட்டது. அந்தமாதிரி வைரக்கல் எங்கே கிடைக்கும் என்று விசாரிக்கலானள். எவ்வளவு பொன் கொடுத்தாவது அந்த மூக்குத்தியை வாங்கிவிட வேண்டும் என்ற பைத்தி யக்கார ஆசை அவளுக்கு உண்டாயிற்று.
கலிங்கத்து அரசனும் அரசியும் தேசாடனத்தை முடித்துக்கொண்டு ஊர் போய்ச் சேர்ந்தார்கள். சோழ மன்னனுடைய மாபெருங் தேவிக்கு அந்த மூக்குத்தியின் நினைவாகவே இருந்தது. முடியுடை மன்னனின் மாதேவி யாக இருந்து அதை அணிவதற்கு இல்லேயே என்று அங்க லாய்த்தாள். நாளுக்கு நாள் அந்தக் குறை அவள் உள்ளத் தளவில் நில்லாமல் உடலையும் வருத்தத் தொடங்கியது. தூங்கிக்கொண்டே இருப்பாள் திடீரென்று எழுந்து, 4 குமரியின் மூக்குத்தி
'அந்த வைர மூக்குத்தி!' என்று கத்துவாள். குலோத் துங்க மன்னன் என்ன என்னவோ சமாதானம் செய்தான். ஒன்றாலும் அவள் ஆறுதல் அடையவில்லை. தன் கீழ்ச் சிற்றரசனாக இருக்கும் ஒருவனிடம் உள்ள பொருளைத் தா என்று கேட்பது சக்கரவர்த்தியின் நிலைக்கு ஏற்ற செயல் அல்லவே! அதனால் சோழ மன்னன் அந்த முக்குத்தியைப் பெற என்ன வழி என்ற ஆலோசனையில் ஆழ்ந்தான். - பட்டமகிஷி முக கமலம் வாட்டம் அடைந்தது. மன்ன னுடைய முகத்திலும் வாட்டம் தன் ரேகையை நீட்டியது. அதைக் கண்ட கருணாகரத் தொண்டைமான் என்ற மந்திரி ஒருநாள் மன்னனைத் தனியே கண்டான். நெடுநாளாக மன்னன் எதையோ நினைத்து மனம் கவல்கிறான் என்பதை உணர்ந்து, அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பு அவனுக்கு இருந்து வந்தது. இப்போது அவன் அரசனிடம், 'மகாராஜாவுக்கு ஏதோ கவலை உள்ளத்துக்குள் இருந்து வாட்டுகிறது. போலத் தோன்றுகிறது. மந்திரிமார்களும் படைத் தலைவர் களும் சான்றோர்களும் மன்னர்பிரானுக்கு வேண்டிய ஆலோசனைகளைச் சொல்ல எப்போதும் ஆயத்தமாக இருக்கும்போது, அவர்களிடம் சொல்லாத கவலை என்ன வென்று தெரியவில்லை. இதைப்பற்றி நினைத்தால் எனக்குத் துாக்கமே பிடிப்பதில்லை. மற்றவர்களுக்குத் தெரிவிக்கத் திருவுள்ளம் இல்லாவிட்டால் அடியேனுக்குச் சொல்ல லாமே. அடியேன் ஏதாவது செய்ய முடிந்தால் என் உயிரைக் கொடுத்தாவது செய்வேன்” என்றான்.
அரசன் சிறிது யோசித்தான். பிறகு புன்னகையை வருவித்துக் கொண்டான். 'நீ ஊகித்தது சரிதான். ஆனால் விஷயம் என்னவோ சிறியது. கவலேதான் பெரிதாக இருக் கிறது” என்றான்.
"எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லலாமே. மகாராஜாவின் திருவுள்ளத்தைத் தெரிந்துகொண்டு குமரியின் மூக்குத்தி 5
அதன்படி கடக்கும் கடமையை நான் எப்போதும் மேற் கொண்டிருக்கிறேன். அப்படி இருக்க, இதைத் தெரிந்து கொள்ளக் கூடாதபடி நான் என்ன அபராதம் செய்து விட்டேன்' என்றான் தொண்டைமான். -
'சொல்லக் கூடாது என்பது இல்லை. மிகச் சிறிய பண்டத்தைப்பற்றிய கவலே அது, பண்டம் சிறியது தானே என்று நான் அலட்சியமாக இருந்தேன். ஆனல் கவலை பெரிதாகி இப்போது விரிந்துவிட்டது.” . . . .
"அப்படி என்ன, கிடைக்காத பண்டம் அது?" "சொல்கிறேன் கேள். நம்முடைய பட்டத்துத் தேவிக்குத்தான் அதிகக் கவலே. ஊணும் உறக்கமும் இன்றி அவள் படுகிற துன்பத்தைப் பார்க்க முடியவில்லை. இவ் வளவுக்கும் காரணம் ஒரு சிறிய மூக்குத்திதான்.”
'என்ன வெறும் மூக்குத்திக்காகவா மன்னர் பெருமா னும் மாபெருந் தேவியும் கவலைப்படுவது!" என்று திடுக் கிட்டுக் கேட்டான் கருணாகரத் தொண்டைமான். s'
'மூக்குத்தி சிறியதுதான். ஆனல் அது கிடைக்க முடியாத இடத்தில் இருப்பதால் அதைப்பற்றிய கவலை அதிக மாக வளர்கிறது.' . . . .
"நம்முடைய நாட்டில் கிடைக்காத வைரமா? அல்லது வேற்று நாட்டில் கிடைப்பதாக இருந்தாலும் இங்கே வரு விக்க முடியாதா?" . . .
"வைரத்தைச் சொல்லவில்லை. ஒரு பெண்மணியின் மூக்கில் இருந்து அது ஒளிர்கிறது. அது வேண்டுமென்று கேட்கிறாள் தேவி.' . . . ."
" இதில் என்ன ஆச்சரியம்? பட்டத்தரசி யாருக்கு இல்லாத முக்குத்தி யாருக்கு வேணும்? அது எங்கே இருந்தாலும் தேடிப் பிடித்து வாங்கி வந்து விடலாமே." . . . . . - - கலிங்க அரசன் அனந்தபதுமனுடைய தேவியின் மூக்கில் இருக்கிறது அது. அவன் சில மாசங்களுக்கு முன்பு 6 குமரியின் மூக்குத்தி
இங்கே வந்தபோது அவன் மனைவி பூண்டிருப்பதை நம் மாதேவி கண்டாள். எங்கும் இல்லாத ஒளியும் பூரிப்பும் உடைய அதில் அவள் உள்ளம் சிக்கிக்கொண்டதாம்.'
'அனந்தபதுமன் நமக்கு அடங்கிய சிற்றரசன்தானே? அவனுக்கு ஒலை போக்கினால் அதை மகாராஜாவின் காலடி யில் காணிக்கையாகக் கொண்டு வந்து வைக்கிறான்’ என்று உற்சாகத்துடன் கூறினான் தொண்டைமான்.
'முடியுடை மன்னனாகிய சோழ சக்கரவர்த்தி தன் கீழ் அடங்கிய சிற்றரசன் ஒருவனிடம் மூக்குத்தியை இரப்பதா? அவனாக அறிந்து கொடுப்பதாக இருந்தால் பெற்றுக் கொள்ளலாமே ஒழிய, நீ தா என்று கேட்டுப் பெற்றுக் கொள்வது எந்தத் தமிழ் மகனுக்கும் ஏற்ற செயல் அன்று.”
'அதற்கு ஏதாவது வழி பண்ணுகிறேன். இதுபற்றி மகாராஜாவும் மாதேவியாரும் இனிமேல் கவலைப் பட வேண்டாம். எப்படியாவது அந்த மூக்குத்தியைக் கொண்டு வந்து மாதேவியாரின் மனசைக் குளிர்விப்பது அடியே னுடைய கடமை" என்று கருணாகரன் உறுதிமொழி கூறினன்.
இளைஞனகிய அவனுக்கு உலக இயல்பு நன்றாகத் தெரியாது. இதனால் தான் இப்படி வாக்களித்தான். ஆனல் அந்த வாக்கைக் காப்பாற்ற அவன் எவ்வளவு துன்பத்தை அடைந்தான் தெரியுமா?
2 கேளாய், மதுரை நகரிலிருந்து ஆட்சி புரியும் மகி பதியே சோழ மன்னனுக்கு, எப்படியாவது அந்த மூக் குத்தியைக் கொண்டு வருவதாகச் சொல்லி உறுதி கூறிய தொண்டைமான் அன்றுமுதல் சோழ நாட்டில் உள்ள வைர வியாபாரிகளுடன் பழகினான். வைரங்களைப்பற்றி யும் மற்ற மணிகளைப்பற்றியும் தெரிந்துகொண்டான். குமரியின் மூக்குத்தி 7
பலவிதமான மணிகளை வாங்கி வைத்துக்கொண்டான். அவனுக்குக் கொஞ்சம் தெலுங்கு பேசத் தெரியும். அதில் நன்றாகப் பேசத் தெரிந்துகொண்டான்.
எல்லாம் ஆறுமாத காலத்தில் நிகழ்ந்தவை. அப் போதப்போது அரசனிடம் எப்படியாவது மூக்குத்தியை வருவிப்பதாகச் சொல்லிக்கொண்டே வந்தான். ஒரு நாள் கருணாகரத் தொண்டைமான் ஒரு வைர வியாபாரியைப் போலக் கோலம் பூண்டு, கையில் நவமணிகள் அடங்கிய பையை எடுத்துக்கொண்டு கலிங்க நாட்டை நோக்கிப்புறப் பட்டான். அங்கே உள்ள செல்வர்களிடம் மிகவும் உயர்ந்த வைரங்கள் தன்னிடம் இருப்பதாகச் சொல்லி அவர்களுக்குக் காட்டினன். அரசனுடைய மந்திரிகளிடம் பழகினான்.
அவர்கள் வாயிலாக அரசனையும் அணுகினான்.
'எனக்கு வைரப் பரீட்சை நன்றாகத் தெரியும், மகா ராஜா. எந்த வைரத்தையும் கண்டு அதன் சரித்திரத்தையே சொல்லிவிடுவேன்' என்று சொன்னான். சோழ அரச னுடைய அரண்மனையில் உள்ள மணிகளை யெல்லாம் பார்த்திருப்பதாகச் சொன்னான். அப்போது அனந்த பதுமன் அவனே ஒரு கேள்வி கேட்டான். -
'என்னிடம் ஒரு வைரம் இருக்கிறது. அதற்கு ஒப் பானதை எங்கும் காணமுடியாது. நான் அதைக் காட்டு கிறேன். அதுபோல ஒன்றை நீ காட்ட முடியுமா?' என்று கேட்டான். . .
'என்னுடைய வழிபடு தெய்வம் முருகன். அவன் வைரமணி வேலை உடையவன். அவன் அருளால் வைர சம்பந்தமான செய்திகளே முன் கூட்டியே நான் அறிவேன். மாதேவி மூக்குத்தியில் உள்ள வைரத்தை மன்னர் பெருமான் நினைத்துப் பேசுகிறார் என்று தெரிகிறது. நான்
அதைப் பார்த்ததில்லை. பார்த்தால், அதற்குச் சமானம் .
என்ன, மேலான வைரத்தையே கொண்டுவந்து தருவேன்" என்றான் தொண்டைமான். அரசன் மூக்குத்தியை வருவித்தான். கருணாகரன் அதைப் பார்த்தான். யாராக இருந்தாலும் அதைக் கண்டால் சொக்கிப் போவார்கள். வைர லட்சணம் நன்றாகத் தெரிந்த தொண்டைமான் அதையே பார்த்துக்கொண்டிருந்தான். சோழ மன்னனுடைய அரண்மனையைச் சுடும் கவலைத் தீயை எழுப்பிய பொறியை அவன் தன் கண்ணே இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான்.
"என்ன ஐயா. அப்படிப் பார்க்கிறீர்? உம்முடைய பார்வையே சொல்கிறது. இது போல உம்முடைய வாழ்விலே ஒன்றை நீர் கண்டதில்லை யென்று" என்று சொல்லி அனந்தபதுமன் கைத்தான்.
உண்மையில் அந்தப் பேச்சைக் கேட்ட பிறகுதான் தொண்டைமான் தன் இயல்பான நிலைக்கு வ்ந்தான். ஆனாலும் அறிவாளி அல்லவா?. -
"மகாராஜா அப்படிச் சொன்னது ஓரளவு உண்மை தான். நான் இந்த மூக்குத்தியில் நவமணியில் ஒன்றாகிய வைரத்தைக் காணவில்லை. உள்ளத்தை வெதுப்பும் வைரத்தையே காணுகிறேன்' என்றான். -
"என்ன ஐயா உளறுகிறீர்?" என்று சிறிதே சினக் குறிப்போடு அரசன் கேட்டான். . . .
'மன்னர் பெருமான் சினம் கொள்ளக் கூடாது. இதைக் கண்ட மகளிர் எல்லாம் இதை நாம் அணிவதற்கு இல்லையே என்று பொருமுவார்கள்; அதைத்தான் சொல்ல வந்தேன்."
"அப்படிச் சொல்லும், அது கிடக்கட்டும். இந்தமாதிரி வைரம் உலகத்தில் எங்காவது கிடைக்குமா?” என்று கேட்டான் கலிங்கத்தரசன்.
"நான் சொல்வதைக் கேட்டு அரசர்பிரான் சினம் கொள்வதில்லை என்று உறுதி கொடுத்தால் இதைப் பற்றிச் சில செய்திகளைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இல்லையானல், உண்மையில் இதற்குச் சமானமான கல்லை உலகில் இல்லை என்று மாத்திரம் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்."
மன்னனுடைய ஆவலைத் தொண்டைமான் தூண்டி விட்டான். "சொல்லுமே, என்ன சொல்லப் போகிறீர்? வைரத்தில் ஏதாவது குற்றம் இருக்கிறதென்று சொல்வீர்? இது பரம்பரை பரம்பரையாக இந்த அரண்மனைச் சொத்தாக இருந்து வருகிறது. குற்றமற்றது என்று பரீட்சை செய்தே என் முன்னோர்கள் வாங்கியிருக்கிறார்கள். நீர் குற்றம் உடையது என்றால் இது குறைந்துவிடுமா?" என்றான் அரசன்.
"மன்னர் பிரான் சொன்னதில் உண்மை இல்லாமல் போகவில்லை. ஆனால் நான் சொல்லும் குற்றம் மற்றவர் சொல்வது போன்றது அன்று. இது வைரத்தை உண்டாக்கும் என்று முன்பு சொன்னேனே, அதைத்தான் மறுபடியும் சொல்லுகிறேன்."
"யாரிடம் வைரம் உண்டாகும்? ராணியின் மூக்குத்தியைக் கண்டு யார் வைரம் கொள்வார்கள்? இவ்வளவு காலமாக அப்படி ஒன்றும் நேரவில்லையே?’
"மகாராஜா, என்னுடைய துணிச்சலைப் பொறுத்தருள, வேண்டும். இந்த மூக்குத்தியின் மேல் அயல் நாட்டுக் காற்று வீசாமல் இருக்கிற வரைக்கும் ஆபத்து ஒன்றும் இல்லை. அயல் நாட்டுக் காற்று வீசினால், அதாவது இதைப் போட்டுக்கொண்டு கலிங்க நாட்டின் எல்லையை விட்டுத் தாண்டினல், நான் சொன்னபடி வைரம் உண்டாகும்.”
“என்ன ஐயா புரளி பண்ணுகிறீர்? உலகம் என்ன, கொள்ளைக்கார ராஜ்யமா? ஊரை விட்டுப் போனால் பறி போய் விடும் என்று சொல்கிறீரே; நாங்கள் சில மாதங்களுக்கு முன்புதான் சோழநாட்டுக்கும் பாண்டி நாட்டுக்கும் போய் வந்தோம். சுகமாகவே வந்து சேர்ந்தோம். நீர் சொன்ன வைரத்தை நான் காணவில்லையே!” 10குமரியின் முக்குத்தி
"சோழ நாட்டில் தங்கினீர்களோ?" "ஆம், தஞ்சையில் சோழ மன்னருடைய அரண்மனையில் தங்கினேன்." "சரி, வைரம் விதைத்தாகி விட்டது. இனி அறுவடையாக வேண்டிய காலம் எப்போது வருகிறதோ?" என்றான் கருணாகரன். "என்ன ஐயா, பயமுறுத்துகிறீர்?" "ஒருகால் இந்த மூக்குத்தியைச் சோழ மன்னர் விரும்பினாலும் விரும்பலாம். முடியுடை மன்னர்களின் அரண்மனையில் இருக்கும் தகுதி இதற்கு இருக்கிறது. மற்ற இடங்களில் இருந்தால் இது நெருப்புக்குச் சமானம். இதை அத்தகைய இடத்தில் சேர்ப்பித்து விடுவதே நல்லது” என்று தொண்டைமான் சொன்னபோது அரசனுக்கும் அவனைச் சார்ந்தவர்களுக்கும் வைர வியாபாரியிடமே சந்தேகம் பிறந்துவிட்டது.
ஒர் அமைச்சன் தொண்டமானைஅழைத்துச் சென்றான். சோழ நாட்டிலிருந்து வந்த ஒற்றன் என்று எண்ணியதால் ஏவலரைக் கொண்டு எச்சரிக்கை செய்துஅனுப்பினான். அடி படாமல் தப்பியது பெரிதாகப் போய்விட்டது.
வெறுங் கையோடு வீடு வந்துசேர்ந்தான் கருணாகரன். அடிபட்ட புலிபோல அவனுக்கு அனந்தபதுமன்மேல் சினம் மூண்டது. சோழ அரசனுடைய ஒற்றன் தன்னை அவமதித்ததாக எண்ணிய அனந்தபதுமன், தான் கட்ட வேண்டிய கப்பத்தை அனுப்பவில்லை. கருணாகரத் தொண்டைமானின் அறிவுரையின்படி சோழனிடமிருந்து ஓர் ஒலைஅவனுக்குப் போயிற்று.
"உன் மனைவியின் மூக்குத்தியைக் கொடுத்தால் எப்போதுமே நீ கப்பம் கட்ட வேண்டியதில்லைை" என்று சொல்லியது அந்த ஓலை.
அது கண்டு அனந்தபதுமன் சீறினான். முடியாது என்று சொல்லி அனுப்பிவிட்டான். அப்புறந்தான் குமரியின் மூக்குத்தி
போருக்கு வேண்டிய ஆயத்தங்கள் நடைபெற்றன. தன்னை அவமதித்த அனந்தபதுமனேத் தன் கையாலே தண்டிக்க வேண்டுமென்ற ஆசை கருணாகரனுக்கு. அதனால் அவனே படைகளுக்கெல்லாம் தலைமை பூண்டு கலிங்கம் சென்று போரை நிகழ்த்தினன்; வெற்றி பெற்றான், போர் நிகழும் போதே அந்தபுரத்தில் தக்க காவலைப் போட்டான். அவனுக்குக் கலிங்கத்து அரசியின் மூக்குத்தியிலே கண் அல்லவா!
கலிங்கப் போரில் கருணாகரன் வெற்றி பெற்றான்;போரை எழுப்புவதற்குக் காரணமான மூக்குத்தியைக் கொணர்ந்து சக்கரவர்த்தி குலோத்துங்கன் திருவடியில் வைத்தான். " நீ கலிங்கத்தை வென்றது பெரிதன்று. இதைக் கொண்டுவந்தது தான் மிகப்பெரிது” என்று சோழமன்னன் அவனைப் பாராட்டினன்.
3
"கேட்டாயா, பாண்டிய மகாராஜனே! கலிங்கப் போருக்கு மூல காரணம் ஒரு மூக்குத்தி என்பதைத் தெரிந்துகொண்டாயா? அது பின்னும் என்ன என்ன குழப்பங்களை உண்டாக்கியதுஎன்பதைஇன்னும்சொல்கிறேன், கேள்” என்று விளக்குப் பதுமை மறுபடியும் சொல்லத் தொடங்கியது.
பட்டத்துத் தேவியின் மூக்கில் ஏறிக்கொண்ட மூக்குத்தி மற்ற ராணிகளின் மனத்தில் ஆசையையும் பொறாமையையும் எழுப்பியது. குலோத்துங்கன் மனைவி மாரில் அவனுக்கு மிகவும் பிரியமுள்ளவள் ஒருத்தி அது தனக்கு வேண்டுமென்று கேட்டாள்.தன் அரண்மனைக்கு
வந்த பிறகும் அந்த வைர மூக்குத்தி மன்னனுக்குக் கவலை கொடுத்து வந்தது. அந்தப்புரத்தில் புயல் குமுறியது; பூசல் எழுந்தது. வீரனாகிய குலோத்துங்கன் எல்லா மனைவிமாரையும் ஒருநாள் அழைத்துக் கூட்டி வைத்துக் 12குமரியின் மூக்குத்தி
கொண்டு அந்த மூக்குத்தியைப் பற்றிப் பேசினன். ராணிமார்கள் ஒவ்வோர் ஆண்டு ஒவ்வொருவராக அணிய வேண்டும் என்று சொன்னார்கள். பட்டத்துத் தேவி அதற்கு இணங்கவில்லை. "இப்போது மூக்குத்திக்கு வந்த வழக்கே பின்பு சிங்காதனத்துக்கும் வரும். ஒவ்வோராண்டு ஒவ்வொருவராகப் பட்ட தேவியாக இருக்கலாமென்று சொல்வார்கள். இந்த மூக்குத்தி விஷயமாவது அந்தப்புரத் துக்குள் அடங்கியிருப்பது பட்டமகிஷிப் பதவி என்பது உலகமறிந்த செய்தி. இவர்கள் அதற்கும் உரிமை கொண்டாடி வருஷத்துக்கு ஒரு பட்டமகிஷி என்று வந்து விட்டால் உலகமே கைகொட்டிச் சிரிக்கும். ஆகையால் பட்டமகிஷி என்பதற்குரிய அடையாளமும், உரிமைகளும் சில உண்டு. அதை யாரும் மாற்றிக்கொள்ள முடியாது” என்று அவள் வாதிட்டாள். அதற்கு எதிர் கூற யாருக்கும் வாய் இல்லை.
மற்ற ராணிகள் எல்லாம் வீண் ஆசைப்பட்டு இதை ஒரு வழக்கமாகக் கொண்டு வந்ததைக் கண்டு மகாராணிக்கும் கோபம் கோபமாக வந்தது. 'மகாராஜா கொஞ்சம் அன்பாக இருக்கிறாரென்றால், அவர்களுக்குப் பேராசை பெருகிவிடுகிறது. அவர்கள் ஆசையில் மண்ணைப் போட வேண்டும் என்று அவள் எண்ணமிட்டாள். மெல்ல மெல்லக் குலோத்துங்கனுக்குப் பொய்யும் மெய்யும் சொல்லி ஒரு கருத்தை அவனிடம் தெரிவித்தாள்; அதற்கு அவனை இணங்கவும் செய்துவிட்டாள்.
பட்டத்துத் தேவி அணியும் அந்த வைர மூக்குத்தியை அவள் தன் மூத்த மகளுக்குச் சீதனமாகக் கொடுத்து விடுவதென்றும், இப்படியே மகளுக்குத் தாய் கொடுக்கும் சீதனமாகவே அது பரம்பரையாக இருந்து வரவேண்டுமென்றும் ஒரு சம்பிரதாயத்தை ஏற்படுத்திவிட்டாள். அம்பிகை கனவில் வந்து சொன்னதாகவும் வேறு காரணங்கள் இருப்பதாகவும் பட்டத்து ராணி சொல்லி இந்தத் தீர்குமரியின் மூக்குத்தி
மானத்துக்கு அரசனுடைய உடன்பாட்டைப் பெற்று விட்டாள்.
அதன்படி இந்த மூக்குத்தி அடுத்த தலைமுறையில் சோழன் மகளும் பாண்டிய அரசன் தேவியுமாகிய ஒருத்தியிடம் சென்றது. பெரும்பாலும் சோழ பாண்டிய குலத்தில் பெண் கொடுப்பதும் வாங்குவதும் தொடர்ச்சியாக வருவது உனக்குத் தெரிந்ததுதானே? அந்த வழக்கப் படியே இந்த மூக்குத்தி,சோழன் அரண்மனையிலும் பாண்டியன் அரண்மனையிலும் மாறி மாறித் தன் ஒளியை வீசத் தொடங்கியது.
"கேளாய், சந்திரவம்சத்தில் தோன்றிய சக்கரவர்த்தியே!இனிமேல்தான்முக்கியமான கதையைச் சொல்லப் போகிறேன், கவனமாய்க் கேள்" என்று கூறிப் பதுமை தன் கதையைத் தொடர்ந்து சொல்லலாயிற்று.
4
ஒரு சமயம் பராந்தக பாண்டியன் என்னும் அரசன் பாண்டிய நாட்டை ஆண்டுவந்தான்.
அவனுடைய பட்டத்துத் தேவியாகிய உலக முழுதுடையாள் மூக்கில் அந்த மூக்குத்தி ஒளிவிட்டது. அவள் மதுரை மாநகரில் எழுந்தருளியிருக்கும் மீனாட்சியம்மையை நாள்தோறும் தரிசிக்காமல் இருப்பதில்லை. மாதம் ஒரு முறை வெள்ளிக் கிழமையன்று இங்கே வந்து கன்னியாகுமரியம்பிகையைத் தரிசித்துச் செல்வாள். அதுவரையில் இந்த மூக்குத்தி தாயிடமிருந்து பெண்ணுக்குத் தடையின்றி வந்து கொண்டே இருந்தது. இப்போது உலக முழுதுடையாளுக்கு மைந்தன் பிறந்தான். மறுபடி இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அதற்குப் பின் குழந்தை ஒன்றும் பிறக்கவில்லை. அவளுக்குப் பெண்ணே பிறக்காமல் இருக்கவே அந்த மூக்குத்தி பல பேருடைய ஆசையைத் தூண்டியது. அவளுடைய மூத்த மகனாகிய அரிமர்த்தனனுடைய மனைவி அது தனக்குத்தான் கிடைக்கப் போகிறதென்று எண்ணி 14குமரியின் மூக்குத்தி
யிருந்தாள். பட்ட மகிஷிக்குப் பெண் குழந்தை இல்லையாதலால், அந்த மூக்குத்தியைப் பெறும் உரிமை, அடுத்தபடி பட்டமகிஷி ஸ்தானம் வகிக்கப்போகும் தனக்குத்தான் என்று அவள் எண்ணியதில் நியாயம் இருக்கத்தான் இருந்தது.
இந்த ஆசையை அவள் பேச்சுவாக்கில் ஒருநாள் அந்தப்புரத்தில் வெளியிட்டு விட்டாள். அதிலிருந்து தீப்பற்றிக் கொண்டது. பாண்டிய அரசர் காது வரைக்கும் அது சென்றது. உண்மையாகவே இது புதிய கலகத்துக்கு விதை என்று எண்ணி அவன்கவலைப்பட்டான்.
பட்டமகிஷிக்கு அடுத்த ராணிக்கு ஒரு மகள் இருந்தாள்."தாயிடமிருந்து மகளுக்குச்செல்வது தான் சம்பிரதாயமே ஒழிய மருமகளுக்குப் போவது தவறு.மகாராணிக்குச் சொந்தப்பெண் இல்லாவிட்டாலும் பெண் முறையில் இருப்பவள் நான். என்னுடைய பெரியம்மாவுக்கு நான் பெண்தானே? ஆதலால், மூக்குத்தியைப் பெறும் உரிமை எனக்குத்தான்” என்றாள் அவள்.
மற்றவர்கள் பார்த்தார்கள். தங்களுக்குக் கிடைக்காமல் தங்களோடு இருக்கும் வேறு ஒருத்திக்குப் போவதாவது என்ற பொறாமை அவர்களுக்கு. அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னர்கள்.
"இந்த மூக்குத்தி ஒரே இடத்தில் இருக்கிறது. மூன்று சோழர் அரண்மனையிலும் பாண்டியர் அரண்மனையிலும் மாறி மாறி இருந்து வருகிறது. இங்கிருக்கும் பெண் அங்கே போனால் உடன் போயிற்று; அங்கிருக்கும் பெண் இங்கே வந்தால் உடன் வந்தது. இப்போது இங்கிருக்கும் பெண் அங்கே போக வழி இல்லை. பெண் இல்லையே ஒழிய மூக்குத்தி இருக்கிறது. ஆதலால், சோழ காட்டு இளவரசனுக்குயாரைமணம்புரிவிக்கிறார்களோ,
அந்தப் பெண்ணுக்கே போக வேண்டியது இது" என்றார்கள்.குமரியின் மூக்குத்தி
15
"கையில் இருப்பதை வேண்டாம் என்று கொடுத்து விடுவதா?" என்று உரிமை கொண்டாடியவர்களில் ஒருத்தி கேட்டாள்.
"அப்படி அன்று;அப்படிப்போனதுமறுபடியும் அங்கிருந்து இங்கே பெண் வரும்போது இங்கேதானே வரப்போகிறது?" என்றாள் மற்ற ராணிகளில் ஒருத்தி.
"அப்படியானால் என்னையே சோழகுலத்தில் வாழ்க்கைப்படுத்தி மூக்குத்தியையும் கொடுத்துவிடுவது" என்று இரண்டாம் ராணியின் பெண் சொன்னாள்.
"உன்னைச் சோழ இளவரசன் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டுமே!"என்று மற்றவர்கள் சிரித்தார்கள். "ஏன், நான் முறையுடையவள் அல்லவா?” "நன்றாகச் சொன்னாய்! பட்டமகிஷியின் வயிற்றில் பிறந்தாலொழிய உனக்கு முறை எப்படி உண்டாகும்?" என்று கேட்டாள் ஒருத்தி.
இப்படியாக மறுபடியும் அந்த மூக்குத்தி பாண்டியனுடைய அந்தப்புரத்தில் குழப்பத்தை விளைத்தது. அரசி உலகமுழுதுடையாள் யோசனையில் ஆழ்ந்தாள். பராந்தக பாண்டியனுக்கு ஒன்றும் விளங்கவில்லை."இப்போதே அதைப்பற்றிய கவலை எதற்கு?” என்று மேலுக்கு அவன்சொல்லிவிட்டான்.ஆனாலும் நாளைக்கு இந்தச் சிக்கல் வந்தால் எப்படியாவது முடிவு காணத்தானே வேண்டும் என்ற கவலை மாத்திரம் அவன் உள்ளத்துள் இருந்தது.
மகாராணி இந்தச் சிக்கலைப்பற்றி யோசித்தாள். ஒரு முடிவும் அவளுக்குத் தோன்றவில்லை. ஒரு நாள், வெள்ளிக் கிழமை, இங்கே தேவி கன்னியாகுமரியைத் தரிசிக்க வந்திருந்தாள். "தாயே, இதற்கு நீ தான் ஒரு வழி காட்ட வேண்டும்” என்று அவள் பிரார்த்தித்தாள். அப்போது தேவியின் மூக்கில் இருந்த மூக்குத்தி பழையதாகப் போன படியால் கீழே விழுந்துவிட்டது. தான் பிரார்த்தனை செய்யும்போது அது விழவே, மகாராணி அதையே தேவி 16குமரியின் மூக்குத்தி
யின் குறிப்பாக ஏற்றுக்கொண்டாள். அவள் உடம்பு புளகம் போர்த்தது. கண்ணீர் தாரை தாரையாக வந்தது. கீழே விழுந்து வணங்கி எழுந்தாள்.சரசர வென்றுதன்மூக்குத்தியைக் கழற்றினாள். கங்கை நீர் அங்கே அபி ஷேகத்துக்கு வைத்திருந்தார்கள். அதைக் கொண்டு வரச்செய்து இதைக் கழுவினாள். "தாயே, இதை நீ ஏற்றுக் கொள். பாண்டிய குலத்தால் காப்பாற்றப் பெறும்குமரியென்று ஒரு வியாஜத்தை வைத்துக்கொண்டாலும் உண்மையில் நீ எங்களைக் காப்பாற்று கிறாய். உலகத்துக் கெல்லாம் தாயாகிய நீ பாண்டியனுக்குக் குமரியாக அவதாரம் செய்தாய். இன்னும் குமரியாகவே இருக்கிறாய். நீ தான் இதை ஏற்றுக் கொள்வதற்கு உரிய குமரி. என்னைப் போன்றவர்கள் நாசியில் இது இருந்தால் உலக மணத்தோடு இணைந்து காமக் குரோத லோப மோக மத மாச் சரியங்களை உண்டாக்கும். உன் நாசியில் இருந்தால் ஞான மணம் வீசும். அரண்மனையும் குலமும் நாடும் மாறி மாறிச் சென்று நிலையின்றி வாழும் இதற்கு இனிமேல் நிலையுள்ள வாழ்வு கிடைக்கட்டும். எவள் எப்போதும் குமரியோ அவளைஅடைந்தால் இதற்கு ஊர் சுற்றுகிற வேலை இல்லா மற் போய்விடும். தாயே! எங்கள் கவலை ஒய்ந்தது; சிக்கல் தீர்ந்தது. உடம்பிலுள்ள ஆதாரங்களில் உள்ள கிரந்திக ளாகிய முடிச்சைப் பேதிக்கும் லலிதாம்பிகை அல்லவா? நீ இந்த முடிச்சையும் பேதித்து விட்டாய். தாயே! எங்கள் குலத்துக்குக் குமாரியே! எனக்கும் நீ தான் குமாரி. இந்தா! நீ கன்னியாக இருந்தபடியே இந்தச் சீதனத்தை ஏற்றுக் கொள்” என்று கங்கையால் கழுவிய அதைத் தன் கண்ணீராலும் கழுவி அர்ச்சகர் கையில் அளித்தாள்.
அவர் பிரமித்துப் போனார். என்றும் இல்லாதபடி அம்பிகையின் பழைய மூக்குத்தி இன்று விழுந்தபோது உண்டான ஏக்கம் இப்போது நீங்கிவிட்டது. அதுகுமரியின் மூக்குத்தி
அம்பிகையின் திருநாசியில் நட்சத்திரத்தைப் போல் ஒளி விடத் தொடங்கியது.
பாண்டியன்இந்தமுடிவைஏற்றுக்கொண்டான். உலகமே ஏற்றுக்கொண்டது. அத்தகைய மூக்குத்தியை நீ உன் கண்ணாலும் கருத்தாலும் அழுக்கு ஆக்கலாமா? சொல். அது பாவம் அல்லவா?
5
பராக்கிரம பாண்டியன் கண்ணைத் திறந்து பார்த்தான்.பதுமை விளக்கு ஒளிர்ந்து கொண்டே யிருந்தது.லலிதாஸஹஸ்ரநாமம் முடியும் தறுவாயில் இருந்தது. 993-ஆம் நாமமாகிய “ஓம் அஞ்ஞான த்வாந்த தீபிகாயை நம:"(அஞ்ஞானமாகியஇருட்டைப் போக்கும் தீபம் போல் உள்ளவள்) என்பதைச் சொல்லிக் குங்குமத்தை அம்மையின் திருவடியில் இட்டார் அர்ச்சகர்.
பாண்டியன் கண்ணில் நீர் அரும்பியது. "ஆம், தாயே! நீ என் அஞ்ஞானத்தை இப்போது போக்கிவிட்டாய். இந்த விளக்குப் போக்கியதா? நீ தான் போக்கினாயா ? அல் லது உன் திருநாசியிலுள்ள அணி மாயையை உண்டாக்கிப் பின்பு துடைத்து விட்டதா?-எனக்கு ஒன்றும்விளங்கவில்லை. நான் மனசால் பாவியாகி விட்டேன். இதற்குப் பிராயச்சித்தம் செய்யத்தான் வேண்டும்” என்று சொல்லிக் கன்னத்தில் அறைந்துகொண்டான்.
"ஓம் லலிதாம்பிகாயை நம:" என்று அர்ச்சகர். அர்ச்சனையை நிறைவேற்றினர்.
பிறகு பாண்டியன் தான் செய்த அபசாரத்துக்குப் பிராயச்சித்தம் செய்தான். பல அரிய வைரங்களைத் தொகுத்து ஆபரணங்கள் செய்து அம்பிகைக்குப் பூட்டி னான். அவன் தான் நினைத்த பிழைக்கு இரங்கித் தன் கண்ணிலிருந்து முத்தை உதிர்த்து ஆரமாக்கின. அப்பொழுதே அவனைஅம்பிகைதான்மன்னித்துவிட்டாளே!
குமரீ-2