கும்மந்தான் கான்சாகிபு/கும்மந்தான் கான்சாகிபு

விக்கிமூலம் இலிருந்து
 

கும்மந்தான் கான்சாகிபு

நெல்லூர்ச் சுபேதார், ஈசப், யூசப், யூசப் கான், மகம்மது யூசப், கான் சாகிப், கும்மந்தான் என்று பலவேறு பெயர்களால் சுட்டப் பெறும் கும்மந்தான் கான் சாகிப் இராமநாதபுரத்துப் பனையூரில் இந்து வேளாளனாகப் பிறந்து, ‘மருதநாயகம் பிள்ளை’ என்ற பெயரைக் கொண்டிருந்தவன் என்று செவி வழிச் செய்திகள் கூறுகின்றன. இவன் இளைஞனாய் இருந்த பொழுதே பெற்றோருக்கு அடங்காப் பிள்ளையாய் இருந்தான். வீட்டை விட்டு ஓடி, இஸ்லாமிய சமயத்தைத் தழுவி, ‘முகம்மது யூசப்’ என்ற பெயர் தாங்கிப் புதுச்சேரிக்குப் போய்ச் சேர்ந்தான். அங்கே ஒரு படகோட்டியாகவும், தையல்காரனாகவும் இருந்தான் என்றும், ஓர் ஐரோப்பியனிடம் பணியாளனாய் அமர்ந்தான் என்றும், பெருந் தவறு ஒன்று செய்ததால், அவனிடமிருந்து விரட்டப்பட்டான் என்றும் கதைகள் கூறுகின்றன. இவை எந்த அளவுக்கு மெய்யானவை என்பது விளங்கவில்லை. ஆனால் புதுவையில் இருந்த போது, மார்ச்சந் என்ற ஒருவனோடு நட்புக் கொண்டான் என்பதும், அவன் நட்பே பிற்காலத்தில் அவன் நாசத்துக்குக் காரணமாயிற்று என்றும் கூறப்படும் செய்திகள் நம்பத்தக்கனவே.

கான் சாகிப் புதுவையை விட்டு அகன்ற பின், பிரன்டன் என்ற ஐரோப்பியனிடம் வேலைக்கு அமர்ந்தான் என்றும், அவன் துணையால் கல்வியறிவு பெற்றான் என்றும் கூறுவர். கான் சாகிப் ஆங்கிலம், பிரெஞ்சு, போர்ச்சுகீஸ் ஆகிய அந்நிய மொழிகளிலும், தென்னிந்திய மொழிகள் சிலவற்றிலும் நல்ல பழக்கம் பெற்றிருந்தான். ஆனால், இம்மொழியறிவால், அவன் மனப்பண்பாடு எதுவும் அடையவில்லை. கிடைக்கும் குறிப்புக்களை ஆராய்ந்து பார்த்தால், கான் சாகிப் ஆரம்பத்தில் நவாபு படையில் சேர்ந்து, மெல்ல மெல்ல உயர்நிலைகளைப் பெற்று, இறுதியில் ஆங்கிலக் கும்பினியின் சேவகத்தில் ஈடுபட்டான் என்பதும் விளங்கும். கான் சாகிப்பின் மனைவியின் பெயர் மாசா; அவள் போர்ச்சுகீசியப் பெண்.

கும்மந்தான் கான் சாகிபின் இராணுவ வாழ்வு பற்றி நமக்குத் தெரியும் முதல் உண்மை, ‘அவன் காவேரிப்பாக்கத்தில் நடந்த போருக்குப் பின்னால், கிளைவின் கீழ் நெல்லூரில் தான் உருவாக்கிய ஒரு சிப்பாய்ப் பட்டாளத்தோடு, ஆங்கில இராணுவத்தில் சேவைக்கு அமர்ந்தான்’ என்பதே. இந்த நிகழ்ச்சி நடந்த சந்தர்ப்பத்தில், ஐரோப்பாவில் இங்கிலாந்துக்கும், பிரான்சுக்கும் இடையில் அமைதி நிலவியது. ஆனால், இந்தியாவிலோ, ஆங்கிலக் கும்பினிக்கும், பிரஞ்சுக் கும்பினிக்கும் இடையே கடும் போர் நடந்தது. ‘கர்நாடகத்தில் யார் கொடி கட்டி ஆள்வது?’ என்பதே போருக்குக் காரணம். இதை உள்ளத்துக்குள்ளே வைத்து வெளிக்கு இரு பொம்மைகளை, இரு கம்பெனிகளும் கையில் வைத்துக் கொண்டு, ‘இதில் எந்தப் பொம்மை ஆர்க்காட்டு நவாப் ஆவது என்பதே எங்கள் போருக்குக் காரணம்’ என்று கூறிக் கொண்டன. ஆங்கிலக் கம்பெனியின் கையில் இருந்த பொம்மை முகம்மது அலி; பிரெஞ்சுக் கம்பெனியின் கையில் இருந்த பொம்மை சந்தா சாகிபு.

முகம்மது அலி கிருஷ்ணா நதி முதல் கன்னியாகுமரிக் கடல் வரை தம் நாடு என்று வாயால் அளந்து காட்டினார். ஆனால், திருச்சிராப் பள்ளியில் தவிர, வேறு ஓரிடத்தில் காலூன்றவும் முடியாத நிலை 1751இல் அவருக்கு இருந்தது. தலைநகராகிய ஆர்க்காடு உட்பட வட பகுதிகள் யாவும் பிரெஞ்சுக் கும்பெனி ஆட்டுவித்தபடி ஆடும் சந்தா சாகிபுக்கு ஆட்பட்டிருந்தன. நாட்டின் பிற பகுதிகளிலெல்லாம் குட்டி அரசுகள் கோலோச்சின. முகம்மது அலி ஒண்டி ஒடுங்கிக் கிடந்த திருச்சிராப்பள்ளியே, பிரஞ்சுப் படைகளால் எந்த நேரத்திலும் கைப்பற்றப்படும் நிலையில் இருந்தது. இந்நிலையில், முகம்மது அலிக்கு உயிர்ப் பிச்சை கொடுத்து, அவர் பெயரைச் சொல்லி நாடாளும் நிலை பெற்றுப் பிரஞ்சுக் கம்பெனியை ஒழித்துக் கட்ட உறுதி கொண்டது ஆங்கிலக் கும்பினி. எனவே, திருச்சிக்கு வந்த ஆபத்தைத் தவிர்க்கக் கருநாடகத்தின் தலைநகராகிய ஆர்க்காட்டுக்குத் தீ வைக்கும் இராஜ தந்திர முயற்சியில் ஆங்கிலக் கும்பினி ஈடுபட்டது. அதற்கு ஏற்ற தளபதியையும் கண்டு பிடித்தது. அவர்தாம் இராபர்ட் கிளைவ். ஆங்கிலப் பேரரசை அமைப்பதற்கு அடி கோலிய இராபர்ட் கிளைவ் அந்தத் திருப்பணியை வெற்றிகரமாக முடிப்பதற்கு மேற்கொண்ட முதல் நடவடிக்கை ஆர்க்காட்டுப் போர்தான். ஆம், ஆர்க்காட்டுப் போரில் அன்று இராபர்ட் கிளைவ் அடைந்த வெற்றியே, ஆங்கிலப் பேரரசு கருநாடகத்தில் அமைய நிகழ்த்தப் பெற்ற கால்கோள் விழா. ஆர்க்காட்டு வெற்றிக்குப் பின், திருச்சியைக் காக்கக் கிளைவ் விரைந்தார். அவரை நிழல் போல் தொடர்ந்தான் கான் சாகிப். திருச்சிப் போரில் கிளைவுக்குத் துணை புரிய வந்த வெள்ளைத் தளபதியின் பெயர் லாரென்ஸ். லாரென்ஸும், கிளைவும் திருச்சியைக் கைப்பற்ற, சந்தா சாகிபின் பொருட்டு முற்றுகையிட்டிருந்த பிரஞ்சுப் படைகளை எதிர்த்து மேற்கொண்ட நடவடிக்கை ஒவ்வொன்றிலும், கான் சாகிப் தன் கைவரிசைகளைக் காட்டினான். ஆங்கில ஏகாதிபத்தியத்துக்குச் சரியான கையாள் கிடைத்தான் என்று வெள்ளை வர்க்கம் கொள்ளை மகிழ்ச்சி கொண்டது. கிளைவின் நெருங்கிய நண்பனான ஜான் டால்டன், கான் சாகிப்பைப் புகழ்ந்து, புகழ்ந்து மேலிடத்துக்குப் பற்பல கடிதங்கள் எழுதினான்.

1752-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் தேதி சந்தா சாகிபு தஞ்சை மன்னன் கையில் சிக்கி, அவனாலேயே கொலை செய்யப்பட்டான். ஆங்கிலக் கும்பினி கொடி போட்டு, நாட்டு மக்களைக் கொள்ளையடித்தது. அக்கும்பினியால் அரச பதவி பெற்ற நெஞ்சுரமும் நேர்மைத் திறமும் இல்லா ஆர்க்காட்டு நவாபு, கும்பினி உருட்டியபடி உருண்டார். இச்சமயத்தில் பிரஞ்சுக் கும்பினி ஆங்கிலக் கும்பினியை ஒழித்துக் கட்ட இறுதி முயற்சி ஒன்றில் இறங்கியது. அம்முயற்சியை முறியடிக்க ஆங்கிலக் கம்பெனிக்குப் பெருந்துணை புரிந்தவன் கான் சாகிபே. இவ்வுண்மை அச்சமயத்தில் ஆங்கிலப் படைகளுக்குத் தலைமை தாங்கிய லாரென்ஸ் தம் கைப்பட எழுதியுள்ள பின் வரும் வாசகங்களால் விளங்கும்: “கான் சாகிப் சிறந்த தளபதி; நாட்டின் நிலையை நன்கு அறிந்தவன்; உறுதியும், வீரமும் நிறைந்தவன். போராட்டக் காலங்களில் அறிவோடும், அமைதியை இழக்காமலும் காரியங்களைச் சாதிப்பவன். ஒரு கணமும் ஓய்வு கொள்ளாமல், எல்லாப் பணிகளையும் தானே ஏற்றுச் செய்பவன். தன் கூர்த்த மதியால், எங்களுக்கு வேண்டும் உணவுப் பொருள்களைச் சேதமின்றிக் கொண்டு வந்து சேர்த்தவன்.” கான் சாகிபைப் பற்றிய இந்தக் குறிப்பைத் தம் பெரிய புத்தகத்தில் மேற்கோளாக எடுத்துக் காட்டும் அறிஞர் ஹில், அதே லாரென்ஸ், கிளைவைப் பற்றி எழுதியுள்ள வாசகத்தையும் எடுத்துக் காட்டி, “கிளைவையும், கான் சாகிபையும் லாரென்ஸ் ஒரே மாதிரி வருணித்துள்ளாரே” என்று வியந்து பாராட்டுகின்றார். அது மட்டுமன்று. அறிஞர் ஹில், கிளைவையும், கான் சாகிபையும் உணர்வோடு ஒப்பிட்டுக் கூறும் வாசகங்கள் கல் நெஞ்சையும் கரைக்கும். இந்தியாவில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு அடிக்கல் நாட்டிய இராபர்ட் கிளைவ், கடைசியில் தன் கழுத்தைத் தானே கத்தியால் அறுத்துக் கொண்டு செத்தான். ஏறத்தாழ அதே மாதிரியான முடிவே கான் சாகிப்புக்கும் ஏற்பட்டது. ஏகாதிபத்தியத்துக்கு அடிக்கல் நாட்டியவனும், அவனுக்குக் கல்லும் கரண்டியும் கொத்தனைப் போல் எடுத்துக் கொடுத்த கான் சாகிபும் ஒரே மாதிரி செத்தார்களே என்று ஏங்குகிறது ஆங்கில எழுத்தாளனின் இருதயம்!

ஒருவாறாக, 1755-ஆம் ஆண்டு ஜனவரியோடு பிரஞ்சுப் போர் முடிந்து, ஒப்பந்தம் ஏற்பட்டது. கருநாடகத்தில் ஆங்கிலேயர் கையே உயர்ந்தது. அப்பொழுது, மேஜர் லாரென்ஸ் சென்னையில் இருந்த கும்பெனியின் ஆட்சிக் குழுவுக்கு ஒரு கடிதம் வரைந்தான். அதன் வாசகம் வருமாறு:- “கனவான்களே, உங்கள் கவனத்துக்கு இன்னொருவரையும் கொண்டு வர அனுமதி வேண்டுகிறேன். அவர் பெயர் முகம்மது யூசுப். அவர் நம் சிப்பாய்களின் தலைவர். அவருடைய கூர்த்த அறிவையும், திறமையையும் மட்டுமன்றி — ஊழியம் செய்வதில் அவருக்குள்ள ஊக்கத்தையும், விழிப்பையும் எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். எதையும் நான் சொல்லுவதற்கு முன் அவரே முன் வந்து, செய்ய வேண்டியதைச் செம்மையாகவும், விரைவாகவும் செய்து முடிக்கிறார். பயனுடைய அவ்வீரருக்குத் தாங்கள் ஒரு பாராட்டுக் கடிதமும், ஒரு சிறு பரிசும் அனுப்பினால், அவர் திறமைக்கு வெகுமதி அளிப்பது மட்டுமல்லாமல், அவருக்குப் பேரூக்கத்தையும் அது தரும்.”

லாரன்சின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு உடனே தீர்மானமும் செய்தது கிழக்கிந்தியக் கும்பினி. அச்செய்தியை லாரன்சுக்கும் தெரிவித்தது.

கிழக்கிந்தியக் கும்பினி லாரன்சுக்கு எழுதிய கடிதத்தில், ‘நாங்கள் எப்போதும் திறமையைப் போற்றுவோம். வீரர்களுக்குச் சிறு சிறு வெகுமதிகளைத் தருவதை விடப் பகிரங்கமான பாராட்டுதல்களை அளிப்பதே சிறந்ததாகும். இக்கண்ணோட்டத்தில்தான், நீங்கள் முகம்மது யூசுப்பைப் பற்றிக் கூறியுள்ள பாராட்டைக் கவனிக்கிறோம். மேலும், கும்பினியின் எல்லாச் சிப்பாய்களுக்கும் ‘கமாண்ட’ராக அவரை நியமிக்கவும் முடிவு செய்துள்ளோம். அதே சமயத்தில், அவருக்குத் தங்கப் பதக்கம் அளிக்கவும் விரும்புகிறோம்,’ என்று மகிழ்வுடன் தெரிவித்திருந்தது. இக்கடிதம் வந்த ஏழே நாளில், கான் சாகிபுக்குக் ‘கமாண்டர்’ (கும்மந்தான்) பட்டமும், அதிகாரமும் வழங்கப் பெற்றன. ‘எல்லாச் சிப்பாய்களுக்கும் தளபதி’ என்ற பொருள் தரும் இந்தப் பட்டத்தை, ஆங்கிலக் கும்பினியின் ஊழியத்தில் இருந்த ஒரு சுதேசி அடைந்தது இதுவே முதல் முறை என்று அறிஞர் ஹில் தம் நூலில் ஆராய்ந்து கூறியுள்ளார்.

சந்தா சாகிபு கொலையுண்டதும், முகம்மது அலி ஆர்க்காட்டு நவாபு ஆனார். கருநாடகத்தில் தங்கள் பலத்தை அசைக்க முடியாத வகையில் நிலைநாட்ட ஆசை கொண்ட ஆங்கிலக் கும்பினி, ஆர்க்காட்டு நவாபின் உரிமைகளைப் பாதுகாக்கும் பெயரால், தென் பாண்டிப் பாளையங்களின் மேல் கர்னல் ஹீரானைப் படையெடுக்கும்படி செய்தது. அவனுக்குத் துணையாகக் கான் சாகிபையும் படை திரட்டிச் செல்லப் பணித்தது. கர்னல் ஹீரான் தலைமையில், 1755ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி எழுந்த இப்படையெடுப்பே, வீரத்தின் விளைநிலமான தென் பாண்டித் திருநாட்டின் மீது வெள்ளையர்கள் துணிந்து மேற்கொண்ட முதல் படையெடுப்பு. திருச்சியை விட்டுப் புறப்பட்ட ஏகாதிபத்தியப் படை, மதுரை செல்லும் வழியிலுள்ள மணப்பாறையில், தன்னை எதிர்த்த ஒரு பாளையக்காரனை வாட்டி வதைத்துக் கப்பம் கட்டச் செய்தது. அந்தப் ‘புனித’ச் செயலில், கான் சாகிபு தன் கை வரிசையைப் பூரணமாகக் காட்டினான்.

பின்பு கர்னல் ஹீரான் 1755ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் தேதி மதுரை போய்ச் சேர்ந்தான். அவ்வமயம், மதுரையைக் கைப்பற்றியிருந்த மியானா என்பவன் அஞ்சி நடுங்கிக் கோவில்குடிக் கோயிலுக்குள் ஓடி ஒளிந்தான். அவ்வாறே, திருநெல்வேலியில் இருந்த முடேமியா, நபி கான் என்ற இருவரும் திருநெல்வேலி மாவட்டத்து மேற்குப் பாளையங்களின் பெருந்தலைவராகிய பூலித் தேவரிடம் சரண் புகுந்தனர். இராமநாதபுரம் மறவர் நாடுகளும், கர்னல் ஹீரான் படையெடுப்புக்குப் பணிந்தன. இப்படி வெற்றி மேல் வெற்றி பெற்ற ஆணவத்தோடு, கர்னல் ஹீரான் கோவில்குடிக் கோயிலைத் தாக்கத் துணிந்தான். அந்தத் தாக்குதலுக்குக் கான் சாகிபையே முன்னோடியாக அனுப்பினான். எமன் போலக் கான் சாகிப் வரும் செய்தி கேட்டுக் கோவில் குடியில் ஒளிந்திருந்த மியானோ தப்பி ஓடி விட்டான். பகைவன் ஓடி ஒளிந்த நிலையிலும், பிரிட்டிஷ் தளபதியின் பேய் உள்ளத்தில் பொங்கி எழுந்த கோபத் தீ அடங்கவில்லை. கையில் தீவட்டிகளை எடுத்துக் கொண்டு, கோவில்குடிக் கோயில் கதவுகளுக்குத் தீயிட்டான். வெள்ளைத் தளபதியைச் 'சிரம'ப்படும்படி விட்டு விட்டு நாம் சும்மா இருப்பதா என்று கான் சாகிபு ராணுவ விதிகளையெல்லாம் மீறிக் கையில் தீவட்டிகளை எடுத்துக் கொண்டு, வெள்ளைத் தளபதியுடன் போட்டி போட்டுக் கொண்டு தீ மூட்டினான். என்னே அவனது கொடிய உள்ளம்! கோயில் கதவுகளைக் கொளுத்திய பின், ஏகாதிபத்தியப் படை ஆலயத்துக்குள் இருந்த அழகிய வெண்கலச் சிலைகளையெல்லாம் சூறையாடியது. அதைக் கண்டு கொதித்தெழுந்த அந்தணர்களுக்கு 5,000 ரூபாய் தருவதாகச் சமாதானம் பேசினான் ஹீரான். ‘அழிவு வேறு, அவமானம் வேறா?’ என்று அந்தணர்கள் ஆத்திரம் கொண்டனர். அதைப் பார்த்த கர்னல் ஹீரான், ‘திருச்சிக்குத் திரும்பியதும், நம் பட்டாளத்துக்குப் பணமாக்கிக் கொடுக்க நாம் வைத்திருக்கும் ஓட்டை, உடைசல், ஈயம், பித்தளைகளோடு, இந்த விக்கிரகங்களையும் போடுங்கள்’ என்று தெய்வச் சிலைகளைத் தூக்கி எறிந்தானாம்.

மதுரையில் தங்கள் படைகளை வைத்து விட்டுக் கர்னல் ஹீரானும், அவனுக்குத் துணையாக வந்த ஆர்க்காட்டு நவாபின் அண்ணன் மாபூஸ் கானும் 1755-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25-ஆம் தேதி திருநெல்வேலி போய்ச் சேர்ந்தனர். அங்கிருந்து நாற்பது கல் தொலைவில் இருந்த நிலைக்கோட்டையைக் கைப்பற்றச் சாடினர். அந்த முயற்சியில் ஏகாதிபத்தியப் படை செய்த அட்டூழியங்கள் எழுத்தால் வருணிக்க இயலாதவை. ஆடவர் என்றும், மகளிர் என்றும், படுகிழவர் என்றும், பச்சிளம் பாலகர் என்றும் பாராமல், கண்ணில் கண்ட உயிர்களையெல்லாம் வெட்டி வீழ்த்தி, வேட்டையாடினர் வெள்ளை வெறியர்களும், அவர்களோடு வந்த புல்லியர்களும். ஏகாதிபத்தியத்தின் சார்பில் நடத்திய முதற் படையெடுப்பின் கொடுமையின் எல்லையைக் கண்டது இந்த இடந்தான். பிரிட்டிஷ் படையெடுப்பின் வன்மையைக் கண்டு நடுங்கினர் பாளையக்காரர் அனைவரும். அதன் பயனாக, அவர் தம் கப்பத் தொகை கர்னல் ஹீரான் காலடியில் குவிந்தது. அச்சமே நிறைந்திருந்த அந்நிலையிலும், அந்நியப் படையெடுப்பை எதிர்க்க இரண்டு உள்ளங்கள் துள்ளின. ஒன்று, பாஞ்சைத் தலைவனாகிய பொல்லாப் பாண்டியக் கட்ட பொம்முவின் உள்ளம். மற்றொன்று, மறவர் குல திலகமாகிய பூலித் தேவரின் பேருள்ளம். பொல்லாப் பாண்டிய கட்ட பொம்முவுக்கு ஆசை இருந்தது போல், ஆற்றல் இல்லை. அதனால் கர்னல் ஹீரானுக்குக் கப்பம் கட்டினார்; கருணையின்றித் தமக்கு வேண்டியவர்களையே, ஆள் பிணையாகக் கொடுத்துத் தலை வணங்கிப் போனார். ஆனால், நெற்கட்டுஞ் செவ்வல் பாளையத் தலைவராகிய பூலித் தேவரோ, ‘ஒரு ரூபாய் கூடக் கப்பம் தர முடியாது. உன்னால் ஆனதைப் பார்!’ என்று சொல்லிக் கர்னல் ஹீரானை நிலை குலையச் செய்து, பல நாள் முற்றுகையிட்டும் ஒரு பயனும் காணாமல், ஏமாற்றம் உற்ற நரி போல் மதுரைக்கு ஏகச் செய்தார்.

1755-இல் நிகழ்ந்த கர்னல் ஹீரான் படையெடுப்பில் தன் பங்கைத் தயக்கமின்றிச் செய்த கான் சாகிபு, கும்பினிக்கு மேலும் தன் ஆற்றலைக் காட்டி, அரும்புகழ் எய்துவதிலேயே, கண்ணுங்கருத்துமாய் இருந்தான். அந்நிலையில், தமிழகத்தின் வடக்கே, வேலூரில் இருந்த மூர்த்தாஸ் அலி என்பவன், ஆர்க்காட்டு நவாபுக்குப் போட்டி நவாபாக உருவாகி வந்தான். அவனை அடக்க ஆர்க்காட்டு நவாபின் வேண்டுதலின் பேரில், கும்பினி அரசாங்கம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகள் தோல்வியையே கண்டன. ஆனால், அந்த நடவடிக்கைகளில் பெரும் பங்கு கொண்ட கான் சாகிபின் வீரத்தை நேரில் கண்டவர் இராபாட் ஓர்ம். ஒரு சமயம் கான் சாகிபு, தன்னிடம் கும்பினிக்கு லட்சக் கணக்கில் கப்பம் செலுத்துவதாக ஒப்புக் கொண்டு, பின் ஏமாற்றப் பார்த்ததோடு, தன்னைப் பொய்யனாகவும் ஆக்க முனைந்த முசரத் அலியைக் கூர்வாளால் குத்தப் பாய்ந்தான். அவனை அப்பொழுது இராபர்ட் ஓர்மே தடுத்து நிறுத்தினார். இப்படி வெள்ளை வீணருக்காக வாளுருவியமையாலே, கான் சாகிபை இராபர்ட் ஓர்ம், ‘இந்திய முஸ்லிம்களுள் மிகப் பெரிய வீரன் யூசுப் கான்’ என்று புகழ்ந்துள்ளார். தமிழகத்தின் வடவெல்லையின் நிலைமை இதுவாக, மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் பூலித் தேவர் இட்டது சட்டமாய் இருந்தது. மாபூஸ் கானைப் பூலித் தேவரும், அவர் தலைமையில் உரிமைக் கொடி உயர்த்திய தென்பாண்டி நாட்டு மேற்றிசைப் பாளையக்காரர்களும் ஒரு முறைக்கு இருமுறை போரில் முறியடித்தனர்.

இந்நிலையில், ‘தென்பாண்டிப் பாளையங்களில், நிலைமையைச் சீர்ப்படுத்தக் கான் சாகிபு ஒருவனால்தான் முடியும்’ என்று கும்பினி அரசாங்கம் கருதியது. அதன் விளைவாக 1756-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14-ஆம் தேதி பிறந்த உத்தரவின் வாயிலாக, கான் சாகிபு மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களின் பேரதிகாரியாக (கவர்னராக) நியமனம் பெற்றான். இந்த உத்தரவின் வாயிலாக, கான் சாகிபு கையில் இம் மாவட்டங்களின் இராணுவ, சிவில் அதிகாரங்கள் யாவும் ஒப்படைக்கப்பட்டன. ‘வசூலிக்கும் கப்பத் தொகையை எல்லாம் திருச்சியில் உள்ள காப்டன் காலியாட்டுக்கு அனுப்ப வேண்டும்’ என்றும் கான் சாகிபுக்கு உத்தரவிடப்பட்டது. கான் சாகிபைப் பேரதிகாரியாக்கிக் கும்பினி அரசாங்கம் பிறப்பித்த இவ்வுத்தரவு ஆர்க்காட்டு நவாபாலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால், கான் சாகிப் பேரதிகாரியானதால், நாடு ஒன்றும் சீர் பெறவில்லை. பாளையக்காரர்களுக்குக் கான் சாகிபு என்றால் குலை நடுக்கம். ஆனால், வீரத் தலைவர் பூலித் தேவர் கொடுத்த தைரியத்தை வைத்துக் கொண்டு, நாட்டின் சீர்கேடான நிலைமையையும் பயன்படுத்திக்கொண்டு, பாளையக்காரர்கள் கான் சாகிபுக்குக் ‘கண்ணாம்பூச்சி’ காட்டி வந்தார்கள். கான் சாகிபைக் கண்டால் பதுங்குவதும், அவன் அப்புறம் நகர்ந்தால் பாய்வதுமாக இருந்தனர்.

சுதந்திர உணர்வு படைத்த பாளையக்காரர்கள் தந்த தொல்லை ஒரு புறம் இருக்க, கான் சாகிபுக்கு அவன் நண்பர்களாலேயே பெரிய தலைவலி ஏற்பட்டது. கான் சாகிபு நாளுக்கு நாள் கும்பினியார் கண்களில் முக்கியத்துவம் பெறுவதை உணர்ந்து ஆர்க்காட்டு நவாபு முணுமுணுத்தான். கடனாளித் தம்பி ‘ஆர்க்காட்டு நவாபு’ என்றாலும், அரைக் காசுக்குப் பயனில்லை என்று அறிந்து, மாபூஸ்கான் அவனுக்குத் ‘துரோகி’யாகி விட்டான்; மணிக்கு மணி தங்கள் பலத்தைப் பூலித் தேவர் தலைமையில் பெருக்கி வந்த பாளையக்காரர்கள் பக்கம் சாய்ந்தான். இன்னும் இது போல் நாட்டில் அப்போது இருந்த குட்டிப் பிசாசுகள் பல ஆடுவதும், அடங்குவதுமாய் இருந்தன. இந்நிலையில் கான் சாகிபு மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், எடுத்த காரியத்தைக் கும்பினியார் எண்ணி எண்ணி மகிழ, ஆவன புரிந்து வந்தான். முக்கியமாக, மதுரை மாநகர் பகைவர் கையில் சிக்கி விடாமல் இருக்கக் கும்பினியின் சார்பில் அவன் செய்த முயற்சிகள் கொஞ்சம் அல்ல. ஆனால், இவ்வளவு செய்தும், தென் பாண்டிப் பாளையப்பட்டுகளின் நிலைமை ஆர்க்காட்டு நவாபும், கும்பினி அரசாங்கமும் விரும்பியது போலக் கட்டுக்குள் அடங்குவதாய் இல்லை. 1755 அக்டோபர் 8ஆம் தேதி தளபதி காலியாட்டின் அழைப்பின் பேரில் திருச்சி சேர்ந்தான் கான் சாகிபு. அவன் மதுரையை விட்டு அகன்ற உடனே, நாட்டின் நிலைமைகள் வியக்கத்தக்க அளவிற் சடுதியில் மாறின. பாளையங்கோட்டை தவிரத் தென்பாண்டி நாட்டின் பிற பகுதிகள் யாவும் சுதந்திர உணர்வு படைத்த பாளையக்காரர் வசம் ஆயின. அவர்களுக்குத் தலைமை தாங்கினார் பூலித் தேவர். அப்பாளையக்காரர்களுக்குக் கைப்பாவை ஆனான் மாபூஸ்கான். ஆம்; தம்பி ஆங்கிலேயர் கையில்; அண்ணன் பாளையக்காரர் கையில். இப்படி நடந்தது நவாபு தர்பார்!

தென்பாண்டிப் பாளையக்காரர்கள், கர்னல் ஹீரான் படையெடுப்பைக் கண்டது முதற் கொண்டே, மைசூர் மாவீரன் ஹைதரோடு தொடர்பு கொண்டிருந்தனர். அத்தொடர்பு, பயன் தரத் தொடங்கிற்று. ஹைதர் தமிழகத்தின் மீது படை செலுத்தி வந்தான். திண்டுக்கல்லைத் தன் வசமாக்கிக் கொண்ட அவன், சோழவந்தானையும் பிடித்தான். செய்தியறிந்து, திருச்சியிலிருந்து காற்றாய்ப் பறந்து வந்தான் கான் சாகிபு. ஹைதருக்கும் கான் சாகிபுக்கும் ‘நத்தம்’ என்ற இடத்தில் கடும் போர் நடந்தது. அப்போரில் ஹைதரை முறியடித்துத் திண்டுக்கல்லுக்குத் தலை தெறிக்க ஓடச் செய்தான் கான் சாகிபு. கும்மந்தான் நோக்கத்தில் நமக்கு வெறுப்பு இருப்பினும், ஹைதரையும் தோற்கடிக்கும் ஆற்றல் பெற்றிருந்த அத்தமிழ் மகனின் ஆற்றலை நாம் போற்றாமல் இருக்க முடியாது. ஹைதர் அலியைத் தோல்வியுறச் செய்த வெற்றி வேகத்தில், கான் சாகிபு திருநெல்வேலி போய்ச் சேர்ந்தான். 1757 நவம்பர் இறுதிக்குள் மாபூஸ் கானைப் பாளையக்காரரிடம் அகதியாய் வாழும்படி செய்தான். இப்பெரும் சாதனைக்குப் பின்பு மதுரைக்குத் திரும்பிய கான் சாகிபு தனக்கு முன்னே அவ்வூரில் ஆட்சி புரிந்த பார்க்கத்துல்லா என்பவனால் ஹிந்து ஆலயங்களுக்கு ஏற்பட்டிருந்த சேதங்கள், பாதகங்களையெல்லாம் நீக்கி, எல்லார் அன்பையும் பெற்றான்.

இந்நிலையில் பிரஞ்சுக்காரர்களால் மறுபடியும் ஏற்பட்ட ஆபத்தினின்றும், கருநாடகத்தைக் காப்பாற்ற அவனை ஆங்கிலக் கும்பினி திருச்சிக்குப் பெருத்த படையைச் சேர்த்துக் கொண்டு வருமாறு கட்டளையிட்டது. பிரஞ்சுத் தளபதி லாலி 1757 மே மாதம் கடலூரையும், ஜூன் மாதம் ஆங்கிலேயரின் செயிண்ட் டேவிட் கோட்டையையும் கைப்பற்றினான். இவ்வாறு ஆங்கிலேயருக்கு ஏற்பட்ட ஆபத்தைப் போக்க, ஜூன் 16-ஆம் தேதி கான் சாகிபு இரண்டாயிரம் சிப்பாய்களுடன் திருச்சி வந்து சேர்ந்தான். திருச்சி வந்த தேதி முதல், கான் சாகிபு ஆங்கிலக் கும்பினியின் அழிவுக்காக-அயராது-உழைத்தான். ஏறத்தாழக் காலாண்டுக் காலம் படாத பாடு பட்டு, ஆங்கிலக் கும்பினி வெற்றிக் கொடி உயர்த்தத் தன் வாழ்வை அர்ப்பணமாக்கினமைக்காகக் கும்பினியாரிடமிருந்து வைரம் பதித்த மோதிரம் உட்படப் பரிசுகள் பல பெற்றான். 1759-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3-ஆம் தேதி அவன் செலவுகளுக்காகக் கும்பினி மூன்று லட்ச ரூபாய் தந்தது. அவன் சொந்த முறையில் அனுபவிக்க முந்நூறு பகோடா நாணயங்கள் பெறுமான பட்டு வெல்வெட் ஆடைகளையும், ஏராளமான படைக்கருவிகளையும் பரிசாக அளித்தது.

இந்நிகழ்ச்சிகளை அடுத்துக் கான் சாகிபு தென் பாண்டிப் பாளையங்களை அடக்கிக் கப்பம் வசூலிக்குமாறு மறுபடியும் கும்பினி அரசாங்கத்தால் 1759ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டான். மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு மறுமுறையும் சர்வாதிகாரியான கான் சாகிபு செய்த முதல் வேலை மதுரைக்கு அருகில் இருந்த ஒரு பாளையக்காரனைக் கடுமையாகத் தாக்கி, அவனையும், அவனுக்காகப் போரிட்ட ஐந்நூறு கள்ளர்களையும் ஒரே நாளில் தூக்கிலிட்டுக் கொன்றதுதான். தன் பகைவர் நெஞ்சில் பெருந் திகிலை மூட்டக் கான் சாகிபு திட்டமிட்டுச் செய்த பெருஞ்செயலே அது. வீரம் நிறைந்த கள்ளர்களை அடக்கி ஒடுக்கிய பின், கான் சாகிபு சுதந்திர உள்ளம் கொண்ட பாளையக்காரர்களை அடக்குவதில் கண்ணுங் கருத்துமாய் ஈடுபட்டான். எழுநூறு சிப்பாய்களும், முந்நூறு குதிரை வீரர்களும் கொண்ட ஒரு பெரும் படையைக் கான் சாகிபு பூலித் தேவர் வசமாகியிருந்த பாளையங் கோட்டையைக் கைப்பற்றவும், மேற்கத்திய பாளையக்காரரான பூலித் தேவருடன், எட்டயபுரம் பாஞ்சாலங் குறிச்சிப் பாளையக்காரர்கள் சேர்ந்து விடாதபடி பார்த்துக் கொள்ளவும் அனுப்பி வைத்தான். 1759-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி, தானே 6400 சிப்பாய்களையும், 600 குதிரை வீரர்களையும் கொண்ட ஒரு பெரும் படையுடன், சுதந்திர வீரர்களை வாட்டி வதைக்கும் நோக்கத்துடன், ஏகாதிபத்தியக் கொடுங்கோலர்கள் சார்பில் புறப்பட்டான். முதலில், பூலித் தேவரும், வடகரைப் பாளையக்காரரும் கைப்பற்றியிருந்த கொல்லங் கொண்டானைப் பிடித்தான். பின்னர் மூன்றே நாளில், கோலார்பட்டியைத் தன் வசமாக்கிக் கொண்டு திருநெல்வேலி போய்ச் சேர்ந்தான்.

இங்கேதான், பூலித் தேவரிடம் சிறைப்பட்டு இருந்த மாபூஸ் கான், ‘கருநாடகத்தை விட்டே ஓடிப் போகிறேன்; வளமாக வாழ வழி காட்டினால் போதும்’ என்று தன் பிறவிப் புத்தியைக் காட்டி எழுதிய கடிதத்தைக் கண்டு பூரித்தான் கான் சாகிபு. மாபூஸ் கான் வேண்டுகோளுக்கும் அவன் இசைந்தான். அடுத்து ஊற்றுமலை, சுரண்டை ஆகிய இடங்களையும் அடிமைப்படுத்தினான். இதற்கு இடையில் வடகரை மேல் வன்மம் கொண்டும், கான் சாகிப்புக்குக் கை கொடுக்கும் வகையிலும், திருவாங்கூர் மன்னன் 10,000 பேர் கொண்ட படையோடு, வடகரைப் பாளையத்தைத் தாக்கினான். அப்பெரும் படையின் சீற்றத்துக்கு ஆற்றாது வடகரையார் பூலித் தேவரிடம் சரண் புகுந்தார். சிறிது காலத்துக்கு முன்பே, சுரண்டையில், கான் சாகிபின் படைத் தலைவர்களுள் ஒருவனைத் தோற்கடித்து வெற்றி கண்டிருந்த பூலித் தேவர், கும்பினியின் ஆதரவால் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வரும் கான் சாகிபின் கொடிய பலம் கண்டு, பெருமூச்செறிந்தார். எனிலும் கலங்காது, கொள்கையைக் காற்றில் பறக்க விடாது, திருவாங்கூராரை வட கரையாரோடு ஒத்துப் போகும்படி வேண்டினார். ஆனால், திருவாங்கூராரோ, ‘வடகரையைத் தாக்கியதன் வாயிலாகக் கான் சாகிபிடம் நல்ல பெயர் வாங்கிக் களக்காட்டுச் சீமையைப் பரிசாகப் பெறுவதே எங்கள் நோக்கம்,’ என்பதைச் சடுதியில் புலப்படுத்தி விட்டனர். கான் சாகிபும் கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது போல், களக்காட்டுச் சீமையைத் திருவாங்கூராருக்குத் தாரை வார்த்துத் தந்தான். அதன் பயனாகத் திருவாங்கூராரின் படைப்பலத்தையும், தூத்துக்குடி, அஞ்சங்கோ முதலிய இடங்களில் இருந்து வந்த பீரங்கிகளையும் துணையாகக் கொண்டு, 1759 டிசம்பர் 4-ஆம் தேதி பூலித் தேவரின் பலம் பொருந்திய கோட்டைகளில் ஒன்றாகிய வாசுதேவ நல்லூரைக் கடுமையாகத் தாக்கினான் கான் சாகிபு.

சாவைக் கண்டு சிரிக்கும் சுதந்திர வீரர்களைக் கொண்ட வாசுதேவ நல்லூர்க் கோட்டை தாக்கப் பெற்றது பற்றிக் கான் சாகிபின் சிறப்புக்களை ஒன்று விடாமல் ஆராய்ந்து சொல்வதையே ஆராய்ச்சி அறிவின் பயனைப் பெற்றதாகக் கருதி, 320 பக்கங்களில் நூல் எழுதியுள்ள அறிஞர் ஹில் சொல்வதைப் படிப்போம்:- ‘கான் சாகிபிடம் பெரும் படை இருந்தாலும், அந்த நகரின் அமைப்பு, அவன் முகாமை வீர மறவர்கள் அடுத்தடுத்துத் தாக்குவதற்கு ஏற்றாற் போல் அமைந்திருந்தது. மேலும் கோட்டைக்குள் இருந்தவர்கள் அரும் பெரும் வீரர்கள். கான் சாகிபிடம் இருந்த ஒரு பெரும் பீரங்கியும், அது ஏற்றப்பட்ட மறு நாளே வெடித்து விட்டது. என்றாலும், கோட்டையைத் தாக்கக் கான் சாகிபு முடிவு செய்தான். அவன் தன் ஆட்களில் 200 பேரை இழந்தான். திருவாங்கூராரும் ஏறத்தாழ இதே அளவு இழந்தனர். பகைவர்களுக்கு (பூலித் தேவருக்கு) இதை விடச் சேதம் அதிகம். என்றாலும், கான் சாகிபின் தாக்குதலை முறியடித்தனர். போதிய போர்த் தளவாடங்களும் இல்லாமையால், கான் சாகிபு முற்றுகையைக் கை விட்டான். 1760 ஜனவரி 28 ஆம் தேதி கான் சாகிபு தோல்வியுற்ற செய்தி சென்னைக்கு எட்டியது. திருவாங்கூரார் தங்கள் நாட்டுக்குத் திரும்பினர்; கான் சாகிபு திருநெல்வேலிக்குத் திரும்பினான். வாசுதேவ நல்லூர்த் தோல்வி ஒன்றுதான் கான் சாகிபு கண்ட தோல்வி.

வாசுதேவ நல்லூரில் அடைந்த அவமானம் கான் சாகிபின் வாழ்வைத் திருத்தவில்லை. பழி வாங்கும் நாளை எண்ணிக் கறுவவே செய்தது. இதற்கிடையில், 1760 டிசம்பரில் மட்டும் திருச்சியில் இருந்த காப்டன் ஜோஸப் ஸ்மித்துக்குக் கும்பினிக்குக் கட்ட வேண்டிய கப்பத் தொகை ரூபாய் 2 லட்சத்தை அனுப்பினான். இதே சமயத்தில், மாபூஸ் கானும் பூலித் தேவர் பிடியினின்றும் நழுவி ஓடிப் புதுக் கோட்டைத் தொண்டைமான் நிழலில் இளைப்பாறி, நவாபிடம் மன்னிப்புப் பெற்று உயிர் பிழைத்தான். கான் சாகிபு 1761-ஆம் ஆண்டு வரை போராடிப் போராடிப் பூலித் தேவரின் கோட்டைகளைப் பிடித்தான் என்று சில குறிப்புக்கள் கூறுகின்றன. இவ்வாறு இராணுவ வாழ்வு தொடங்கிய நாள் தொட்டு விடுதலை வீரர்களைத் தாக்கியும், அழித்தும், கோழைகளை வளர்த்தும், வாழ்வித்தும் நாச வேலைகளை நடத்தி வந்த கான் சாகிபு, அதுவரை தான் விதைத்த விதைகளையெல்லாம், தானே அறுவடை செய்ய ஆரம்பித்தான்.

ஆரம்ப முதல் கான் சாகிபு கும்பினியின் நல்லெண்ணத்தில் பெருநிலை பெற்றிருப்பது ‘கடன்காரன்’ ஆர்க்காட்டு நவாபுக்குப் பிடிக்கவில்லை. மேலும், தென் பாண்டிப் பாளையங்களையெல்லாம் அழித்து ஒழித்து, ஹைதரையும் கலக்கும் அளவுக்கு கான் சாகிபு வலிமை பெற்று வருவதும், தன் திறமை மிக்க ஆட்சியால் இந்துக்களும், வெள்ளையரும் போற்றப் புகழ் பெற்று வருவதும் வருங்காலத்தை மோப்பம் பிடிப்பதில் வல்ல ஆர்க்காட்டு நவாபுக்கு அணுவளவும் பிடிக்கவில்லை. கான் சாகிபைப் பற்றிக் கணத்துக்குக் கணம் கும்பினியிடம் புகார்கள் படித்த வண்ணம் இருந்தான். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் அன்றோ? கும்பினியாருக்குச் சந்தேகமும், சஞ்சலமும் தோன்றின.

ஆர்க்காட்டு நவாபு தொடக்க முதல் தனக்குப் பகையாய் இருக்கும் உண்மையை உணர, உணரக் கான் சாகிபுக்கு ஆத்திரம் பொங்கிற்று. கும்பினி தன்னால் பெற்ற நன்மைகளை மறந்து விட்டு, நவாபின் பேச்சைக் கேட்பது அவன் ஆத்திரத்தை அதிகப் படுத்தியது. ஆத்திரம் பொங்கப் பொங்க, அவன் அறிவு எவ்வெவ்வாறோ பாய்ந்து பதறியது. தனக்கு விரோதமாகக் கும்பினிக்குச் செய்தி சொல்பவர்கள் ஆர்க்காட்டு நவாபும், திருவாங்கூர் மன்னனும், திருச்சியில் இருந்த ஆங்கில அதிகாரிகளுமே என அறிந்தான். பற்களை நற நறவென்று கடித்தான். என்ன பயன்? அத்தனை நாளும் பாம்புக்கு அல்லவோ பால் வார்த்தான் கான் சாகிபு! எந்தத் திருவாங்கூர் மன்னனுக்குக் களக்காட்டைக் காட்டிப் பூலித் தேவரையும், அவர் தோழர்களையும் தாக்கச் செய்தானோ, அதே திருவாங்கூர் மன்னன் கான் சாகிபு ஆர்க்காட்டு நவாபின் பிடியிலிருந்தும், கும்பினியின் பிடியிலிருந்தும் விடுதலை பெற ஆசை கொண்டிருக்கும் செய்தியைக் கண்ணும் மூக்கும் வைத்துக் கும்பினியின் காதுகளில் ஓதினான். செய்தி அறிந்த கான் சாகிபு பெரும்படை கொண்டு திருவாங்கூரை மோதப் புறப்பட்டான்; கும்பினி தடுத்தது. ஆனால் உத்தரவைப் புறக்கணித்துக் கான் சாகிபு போர்க் கோலம் பூண்டான். அவ்வமயம் மார்ச்சந் என்ற பிரெஞ்சுத் தளபதி கான் சாகிபுக்குத் துணையாக வந்து சேர்ந்தான்; அதனை அறிந்து நடுங்கிப் போனான் திருவாங்கூர் மன்னன். கொள்கை, குறிக்கோள் எதுவும் இல்லாத அவன், கான் சாகிபு தந்த பரிசுகளைப் பெற்றுக் கொண்டு, சமாதானப் பத்திரத்தில் கையெழுத்திட்டு விட்டு, நச்சரவெனத் தன் அரண்மனைக்குள் நுழைந்து கொண்டான்.

கான் சாகியின் கண்கள் ‘யாரெல்லாம் ஆர்க்காட்டு நவாபின்— கும்பெனியின்—பகைவர்கள்?’ என்று சுழன்று, சுழன்று நாலு திசைகளிலும் பார்த்தன. அவன் படைத்திருந்த சுடுகாடே அவனைப் பார்த்துச் சிரித்தது; அழைத்தது. கான் சாகிபின் சதித் திட்டங்கள் நாளுக்கு நாள் உரம் பெற்றன. அவை ஒன்று விடாமல், ஆங்கிலக் கும்பினிக்கும் தெரிந்தன. கான் சாகிபின் பிரெஞ்சுத் தோழன் தளபதி மார்ச்சந் ஆங்கிலக் கும்பினிக் கொடியைக் கொளுத்தி விட்டுப் பிரெஞ்சுக் கொடியைக் கான் சாகிபின் அனுமதி பெற்றே, கோட்டைகளின் மீது உயர்த்தியது முதற்கொண்டு எல்லாச் செய்திகளும் சென்னைக்கு எட்டின; கும்பினி அரசாங்கத்தின் கண்கள் சிவந்தன; எட்டுத் திசைகளிலும் இருந்த ஏகாதிபத்திய ஏஜெண்டுகளுக்கு எச்சரிக்கைச் செய்திகள் பறந்தன. எந்த வினாடியிலும் கான் சாகிபைத் தாக்கி முறியடிக்கக் கும்பினிப் படைகள் தயாராயின. இதற்கிடையில் கான் சாகிபைச் சென்னைக்கு வந்து சமாதானங்களைக் கூறவும், சந்தேகங்களை நீக்கவும் கும்பினி அரசாங்கம் அழைத்தது. ஒவ்வொரு முறையும் நொண்டிச் சமாதானங்கள் கூறி, வர முடியாது என்றான் கான் சாகிப். அதைக் கேட்ட வெள்ளை வேந்தர்களின் வயிறு பற்றி எரிந்தது. ஏறத்தாழ இரண்டாண்டு காலமாகக் கான் சாகிபு, தன்னைத் தென்பாண்டிப் பாளையங்களின் சக்கரவர்த்தியாக்கிக் கொள்ளச் செய்த சதிகள் யாவும் பல வாயில்களாலும் தெரிந்து விட்டன. எனவே, ‘எல்லாக் கடமைகளிலும் பெருங்கடமை கான் சாகிபைக் கொல்லும் கடமையே’ என்று கும்பினி வர்க்கம் குமுறியது.

கும்பினி அரசாங்கத்துக்கு 1763 மார்ச் 24-ஆம் தேதி வெள்ளைத் தளபதி லாரன்சிடமிருந்து கிடைத்த கடிதம் வருமாறு: “கான் சாகிபு விசுவாசத்தைக் கை விட்டு விட்டான். உங்கள் உத்தரவுகளை எல்லாம் உதறி எறிந்து விட்டான். தன்னைச் சுதந்திரப் புருஷனாகப் பிரகடனம் செய்து விட்டான். இந்த மனிதனின் மாமேதைமையையும், பேராசையையும் கருதும் போதும், தன்னிடமுள்ள பெரும் பட்டாளத்தை ஒரு பெரும் போருக்கு இவன் தயார் செய்வதைப் பார்க்கும் போதும், உடனடியாக இவனுடைய ஆக்கிரமிப்புகளை ஒழிப்பது மிகவும் அவசியமாகிறது. மேலும், இவன் நாளும் தரங்கம்பாடி, நாகப்பட்டினத்தில் உள்ள பிரஞ்சுக்காரர்களிடமிருந்தும், மைசூர் ஹைதர் அலியிடமிருந்தும் உதவிகள் பெற்ற வண்ணம் இருக்கிறான். இவனை இப்படியே விட்டால், நம்மால் அடக்க முடியாத அளவுக்குப் பெரும் படைப்பலம் பெற்றவனாக ஆகி விடுவான். அதன் விளைவாக, ஆர்க்காட்டு நவாபு நமக்குத் தர வேண்டிய கடன்களைத் தராமற் போவதோடு, கம்பெனி மேலும் பெருத்த செலவுக்கு இரையாக நேரிடும்; கான் சாகிபை அழிக்கக் குறைந்தது 900 ஐரோப்பியர்களும், 5000 கம்பெனிச் சிப்பாய்களும், 2000 குதிரைப் படை வீரர்களும், ஏராளமான பாளையக்காரர் உதவியும், இன்ன பிறவும் தேவை.”

இவ்வாறு லாரென்ஸ் எழுதிய கடிதத்தாலும், கான் சாகிபைப் பற்றிய வேறு பல உண்மைகளை உணர்ந்தமையாலும், தீர ஆலோசித்துக் கும்பினி அரசாங்கம் கான் சாகிபைக் கசக்கி எறிய முடிவு செய்தது. வெள்ளைத் தளபதிகளாகிய பிரஸ்டன், லாரென்ஸ் முதலியவர்களைப் பெரும் படையுடன் கான் சாகிபை அழிக்கப் புறப்படுமாறு கட்டளையிட்டது. அது மட்டும் அன்று; கான் சாகிபை உயிரோடு பிடித்து இன்ன செய்ய வேண்டும் என்றும் கட்டளையிட்டது. கிழக்கிந்தியக் கம்பெனி, அது பற்றி லாரென்சுக்கு எழுதிய கடிதம் வருமாறு: ‘ஆர்க்காட்டு நவாபு கான் சாகிபை அரசியல் கைதியாக உயிருடன் வைத்திருக்க விரும்புவானானால், அது எவ்வளவு ஆபத்தானது என்பதை எண்ணி அஞ்சுகிறோம். ஆனால், கான் சாகிபைப் பார்த்தவுடன், அவனது பட்டாளமெல்லாம் பார்க்கும் வகையில், கண்ணுக்குத் தெரியும் முதல் மரத்தில் அவனைத் தூக்கிலிட்டுக் கொன்றால், அதுவே எங்களுக்குத் திருப்தி அளிக்கும்.’

இந்த உத்தரவோடு ஆரம்பமாகியது கான் சாகிபைத் தாக்கும் படலம். ஏறத்தாழ, ஓர் ஆண்டும் மூன்று மாதங்களும் அவனைப் பிடிக்க ஓயாது முயன்றது கும்பினி அரசாங்கம்; பெருத்த பட்டாளத்துடன், கான் சாகிபு கைப்பற்றியிருந்த மதுரை மாநகரைத் தாக்கியும், முற்றுகையிட்டும் அழிக்க முயன்றது. தாக்குதலின் கடுமை பயங்கரமாய் இருந்தது. எண்ணற்ற உயிர்ச் சேதங்கள் ஏற்பட்ட போதிலும், பிரிட்டிஷ் படைகளால் கோட்டையை நெருங்கக் கூட முடியவில்லை. கான் சாகிபின் படைகளுக்குத் தலைமை தாங்கிய பிரெஞ்சுத் தளபதியாகிய மார்ச்சந் மிகுந்த திறமையோடு போராடினான். கான் சாகிபும், அவனுடைய வீரர்களும் உயிரைத் துச்சமாக மதித்து, உறுதி குலையாமல் சமர் புரிந்தனர். அதன் விளைவாகப் பெருத்த முயற்சிகளோடு செய்யப்பட்ட ஆங்கிலக் கும்பினியின் முதல் தாக்குதல் ஒரு பயனையும் தராமல் பாழாய்ப் போயிற்று.

அடியும், அவமானமும் பொறுக்க முடியாமல் திரும்பிச் சென்ற கும்பினிப் படைகள் மறுபடியும் சில காலம் கழித்து வந்து, மதுரையைத் தாக்கின; முற்றுகையிட்டன. படைப்பலத்தால் போர் புரிந்து, வீரன் கான் சாகிபை வெற்றி கொள்ள இயலாது என்பதை உணர்ந்து, அவன் கோட்டைக்குள் துரும்பு கூட நுழையாதபடி இரும்புத் திரையமைத்து, முற்றுகையிட்டுப் பட்டினி போட்டு, அவன் ஆட்களைக் கொல்ல வேண்டும் என்று ஆங்கிலக் கும்பினியும், அதன் தளபதிகளும் தீர்மானித்தனர். கடுமையான முற்றுகை நடந்தது. அந்தோ! அந்த முற்றுகையால், கோட்டைக்குள் நேர்ந்த அவலங்களை வர்ணிக்க எந்தக் கவிஞனாலும் இயலாது. மதுரைக் கோட்டைக்குள் இருந்த பிரஞ்சுத் தளபதிகள் உண்ண உணவில்லாமல், குதிரைகளையும், கழுதைகளையும், ஏன், பூனைகளையும் கூடக் கொன்று தின்றார்களாம்! பெண்களும், குழந்தைகளும் பசியால் துடிதுடித்துப் புசிப்பதற்கு ஒன்றுமில்லாமல், கான் சாகிபின் காலடியில் பிணங்களாகி வீழ்ந்தார்களாம். வீழ்ந்த பிணங்களை ஒதுக்கித் தள்ளுவதற்கும் ஒய்வில்லையாம்; வழியில்லையாம். இச்செய்திகளை எல்லாம் தெரிந்து, மேலும், மேலும் தங்கள் முற்றுகையைக் கடுமையும், கொடுமையும் உள்ளதாக்கினர் ஆங்கிலக் கும்பினியார். தமிழ்நாட்டு வீரர்கள் குடிக்கக் கஞ்சியில்லாத நிலையிலும், வாயில் வெற்றிலையையும், புகையிலையையும் குதப்பிக் கொண்டே எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும், எமனையும் எதிர்த்துப் போரிடுவார்கள் என்ற செய்தியை அறிந்திருந்த ஆங்கிலக் கொடுங்கோலர்கள், கோட்டைக்குள்ளே வெற்றிலையும், புகையிலையுங்கூட நுழையாத படி காவல் காத்தார்களாம். அது மட்டும் அன்று; மதுரைக்கருகே எங்கிருந்து வெற்றிலையும், புகையிலையும் கொண்டு வரப்படுகின்றன என்று ஆராய்ந்து அறிந்து, வெற்றிலைக் கொடிக்காலையும், புகையிலைக் காட்டையும் தீ வைத்து அழித்தார்களாம்.

எந்தக் கொடுமையும் கான் சாகிபின் உள்ளத்தைக் கலக்கவில்லை. ஆயினும், வயிற்றுக்கு ஆகாரம் இன்றி, வாடி வதங்கிய வீரர் கூட்டத்தில், பலர் எதிரிகளின் கூட்டத்தில் போய்ச் சேர்ந்து விட்டனர் என்ற செய்தியையும், அவர்களுக்குப் பிரெஞ்சுத் தளபதிகளே வழி காட்டுகிறார்கள் என்ற உண்மையையும் அறிந்த அவன் உள்ளம், கொல்லன் உலைக் களம் போல் கொதித்தது. அதனால், எந்தப் பிரெஞ்சுத் தளபதி மார்ச்சந்தை நம்பிப் போர் தொடுத்தானோ, அதே மார்ச்சந்தைக் கோபத்தால் கடிந்தான்; கைத்தடியால் அடித்தான். அவமானம் அடைந்த மார்ச்சந், ‘இனிப் பொறுப்பதில்லை’ என்று தன் பிறவிப் புத்தியைத் திட்டமிட்டுக் காட்டத் தீர்மானித்தான். கான் சாகிபின் தலைமை அமைச்சனாக இருந்த சீநிவாசராவ் என்பவனையும், பாபா சாகிபு என்பவனையும் கைக்குள் போட்டுக் கொண்டு சதித் திட்டங்களை உருவாக்கினான். கொடிய வதந்திகளைக் கோட்டை முழுவதும் பரப்பினான். ‘நம்மையெல்லாம் ஆங்கிலச் சிப்பாய்களின் கைகளில் நாசமாகும்படி விட்டு விட்டுக் கான் சாகிபு மட்டும் தப்பி ஓடி விடப் பார்க்கிறான்’ என்ற செய்தியைப் பரப்பினான்.

அதைக் கேள்வியுற்ற வீரர்களின் நெஞ்சம் கொதித்தது. இயற்கையாகவே பட்டினியால் கொதித்திருந்த அவர்களை, மேலும் கொதிப்படையச் செய்வதில் வெற்றி கண்ட மார்ச்சந், 1764 அக்டோபர் திங்கள் 13 ஆம் நாள் மாலை 5 மணிக்குக் கான் சாகிபு மனம் உடைந்து போன நிலையில், மண்டியிட்டு ஆண்டவனைத் தொழுது கொண்டிருக்கும் வேளையில், தேர்ந்தெடுத்த சிப்பாய்களின் உதவியுடன், அவன் இருக்கும் தனியிடம் சென்று சுற்றிச் சூழ்ந்து கீழே தள்ளி, அவன் தலையில் கட்டியிருந்த தலைப்பாகையைக் கொண்டே அவன் கை கால்களை எல்லாம் கட்டிப் போட்டான், ஆங்கில நாடோடிகளுக்குச் சற்றும் இளைக்காத பிரெஞ்சு நாடோடி. சதி வெற்றி பெற்று விட்டது என்பதை அறிந்த கான் சாகிபு, கொடியோனின் உள் நோக்கம் என்ன என்பதைக் கணப்போதில் உணர்ந்து கொண்டு, தன்னைச் சுற்றியிருந்தோரைப் பார்த்து, ‘பெரியோர்களே, காசுக்கும், வாழ்வுக்கும் ஆசைப்படும் நீங்கள் என்னை இங்கேயே உங்கள் கை வாள்களாலேயே கண்டதுண்டமாக வெட்டி எறிந்து விடுங்கள்; என் பகைவர்களாகிய ஆர்க்காட்டு நவாபிடமோ, ஆங்கிலச் சிப்பாய்களிடமோ ஒப்படைத்து விடாதீர்கள்’ என்று கை கூப்பி வேண்டினானாம்.

பிரஞ்சுத் தளபதி மார்ச்சந் சதிகாரர்களோடு சேர்ந்து, கான் சாகிபைக் கொண்டு போய் ஓர் அறையில் அடைத்தான். அதிகாரிகள் செய்தது கோட்டையெங்கும் காட்டுத் தீப் போல் பரவி விட்டது. கான் சாகிபின் மனைவியான பறங்கிப் பெண் மார்ச்சந்துக்கு ஒரு கடிதம் எழுதி, ‘ஐயனே, நாட்டையும், கோட்டையும் அதில் இருக்கும் நானாவிதச் செல்வங்களையும் உனக்கே தந்து விடுறேன்; என் நாயகனை மட்டும் விட்டு விடு’ என்று கண்ணீர் விட்டுக் கதறி அழுதாள். ஆனால், மார்ச்சந் கோரச் சிரிப்புச் சிரித்தான். அந்தப் பிரெஞ்சுத் தளபதியின் சதிகாரச் செயலைக் கேட்ட ஒரு முதலி, தாயை இழந்த சேய் போல் துடித்துப் புலம்பிக் கோட்டையெல்லாம் சுற்றி வந்து கூவினான். அவனைச் சுற்றி நூற்றுக் கணக்கான வீரர்கள், ‘எங்கே எங்கள் கான் சாகிபு? எங்கே அந்த மார்ச்சந்?’ என்று கேட்ட வண்ணம் வாளையுருவி வலம் வந்தனர். நிலைமையை உணர்ந்த மார்ச்சந் முதலியின் மார்பில் குறி பார்த்துச் சுட்டுக் கீழே வீழ்த்தினான். தலைவன் சாயக் கண்டதும், ஆத்திரம் அடைந்த வீரர்கள் செய்வதறியாது திகைத்து, ஓடி மறைந்தனர். மார்ச்சந் வெற்றிச் சிரிப்புச் சிரித்தான். தன் கையாட்களை அனுப்பி, அதே அக்டோபர் 13-ஆம் தேதி நள்ளிரவில் ஆர்க்காட்டு நவாபிடமும், ஆங்கில நாடோடிகளிடமும் உறவு பேசினான்; ஒப்பந்தங்களைக் கூறினான். அஞ்சா நெஞ்சன் கான் சாகிபை, கைகால்களையும் அசைக்க முடியாத நிலையில் பந்து போல் சுருட்டிக் கட்டிப் பகைவர்களின் கையில் ஒப்படைத்தான். அப்புறம் நடந்தது என்ன? ‘புரட்சித் தளபதி கும்மந்தான் கான் சாகிபு’ என்ற அரிய பெரிய ஆராய்ச்சி நூலை எழுதியுள்ள ஹில்லே அதைச் சொல்லி முடிக்கட்டும்:

1764-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி மாலை 5-மணிக்குக் கான் சாகிபு, படை முகாமின் வழியாக அழைத்துச் செல்லப்பட்டான். திண்டுக்கல் செல்லும் பாதையில், ஒரு பெரிய மாமரத்தில் தூக்கிலிடப்பட்டான். அவன் தலை, சந்தா சாகிபின் தலையைப் போல் வெட்டித் திருச்சிக்கு அனுப்பப்பட்டது. அவனது உறுப்புக்கள், கூறு கூறாகக் கொஞ்ச காலம் மதுரை மாநகரின் தலை வாயிலில் வைத்திருந்த பின், தஞ்சை, பாளையங்கோட்டை, திருவாங்கூர் முதலிய இடங்களுக்கு அனுப்பப்பட்டன.

ஆங்கில அதிகாரிகளின் சாட்சியங்களை வைத்துப் பார்க்கும் போது, கலங்காமல் தனக்கு நேர்ந்த கதியை ஏற்றுக் கொண்டான் கான் சாகிபு என்றே தெரிகிறது. வெள்ளைத் தளபதி கேம்பல்லிடமும், ஆர்க்காட்டு நவாபிடமும் தன் உயிரைக் காப்பாற்றும்படி எந்த விதமான வேண்டுகோளும் விடுக்கவில்லை.

கான் சாகிபைத் தூக்கிலிட்டுக் கொல்ல முயன்ற போது, அவனைக் கொல்ல முடியாதபடி ஒரு முறையோ, இரு முறையோ தூக்குக் கயிறு அறுந்து விழுந்து விட்டது என்று நாட்டு வரலாறுகள் சொல்லும் செய்தியில், ஒரு சிறிதும் சந்தேகம் இல்லை.