குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1/குட்டிப் பென்சில்
குட்டிப் பென்சில்
சாது வான நமது காந்தி
தமது அறையி னுள்ளே
ஏதோ ஒன்றைத் தேடித் தேடி
இங்கு மங்கும் பார்த்தார்.
ஆர்வ மாக அந்த அறையை
அலசிப் பார்க்க லானார்.
கூர்ந்து மூலை முடுக்கு யாவும்
குனிந்து பார்த்தும் காணோம்!
அறையி னுள்ளே சீடர் ஒருவர்
அந்தச் சமயம் வந்தார்.
“சிரமப் பட்டே எந்தப் பொருளைத்
தேடு கின்றீர்?” என்றார்.
“சின்னப் பென்சில் ஒன்றை நானும்
தேடு கின்றேன் இங்கே.
என்னை அதுவும் ஏய்த்து விட்டே
எங்கே சென்ற” தென்றார்.
சட்டைப் பையில் கையை விட்டுச்
சட்டென் றந்தச் சீடர்
நெட்டைப் பென்சில் ஒன்றை எடுத்து
நீட்டி னாரே முன்னால்.
“நெட்டைப் பென்சில் எனக்கு வேண்டாம்.
நீரே வைத்துக் கொள்ளும்.
குட்டைப் பென்சில் அதனை நானும்
விட்டுப் பிரிய லாமோ?”
இந்த வார்த்தை கூறி, காந்தி
இங்கு மங்கும் தேட,
அந்தச் சீடர் என்ன செய்தார்?
அவரும் தேட லானார்!
பாடுபட்டுத் தேடி, காந்தி
பலனைக் கண்டு விட்டார்!
“தேடிப் பார்த்த பென்சில் கையில்
சிக்கிக் கொண்ட” தென்றார்.
சிரமம் கொடுத்த பென்சில் தன்னைச்
சீடர் உற்றுப் பார்த்தார்.
சரியாய் ஒன்றே அங்கு லம்தான்!
சற்றும் பெரிதாய் இல்லை!
பொக்கை வாயைத் திறந்து காந்தி
புன் சிரிப்பு சிரித்தார்.
“மிக்க நல்ல பென்சில் இதனை
விடவே மனமும் வருமோ ?
சென்னை நகரில் இருந்த போது
சின்னப் பையன்[1] ஒருவன்
அன்ப ளிப்பாய்த் தந்த திந்த
அருமைப் பென்சில்!” என்றார்.
- ↑ ‘இந்தியன் ரெவ்யூ’ என்ற பத்திரிகையை நடத்தியவரும், பொது வாழ்வில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவருமாகிய காலஞ் சென்ற ஜி. ஏ. நடேசன் அவர்களின் புதல்வனே அந்தச் சிறுவன்.