க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்/முன்னுரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

முன்னுரை


இந்தியத் துணைக் கண்டடத்தின் சமூக வரலாறு இன்னமும் முழுமையாக ஆராயப்படாத, எனவே முறையாக எழுதப்படாத ஒன்று. பொதுவாய வரலாற்று உணர்வின்மை, பன்மொழி மரபுகள், உதிரியான அகழ்வாராய்ச்சிகள் இந்நிலைக்கான சில காரணங்களாகக் காட்டப்படுகின்றன. எனினும் இது போன்ற ஏனைய சந்தர்ப்பங்களில் பூகோளம், மானிட இயல் முதலான சமூக அறிவியல்களின் யுக்திகளைப் பயன்படுத்திப் பண்டைக்கால வரலாறுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆனால் இங்கோ, பெரும்பாலும் வடமொழி புராண இலக்கியங்களை ஓரியன்டலிஸ்டுகள் என்னும் மேனாட்டார் கணிப்பின்படி, முக்கிய ஆதாரங்களாகக் கொண்டு தொன்மை வரலாற்றுக் கண்ணோட்டம் அமைந்துள்ளது. இவ்வடிப்படையிலான ஆய்வுகள் ஒருதலைப்பட்சமாக வெளிவருவதுடன் அகில இந்திய அளவிலான ஆதிக்கக் குழுக்களின் மேலாண்மைக்கான கற்பனைகளையும் கனவுகளையுமே மிகுதியாகப் பிரதிபலிக்கின்றன.

பெரும்பாலும் வட இந்திய ஆற்றுப்படுகைகளின் வருண கலாச்சாரங்களைச் சார்ந்து எழுந்த பேரரசுகளின் தொடர்ச்சியே தேசிய வரலாறாகக் கொள்ளப்படுவதால் பல்வேறு மொழி - இனக் குழுக்களின் தோற்றம், வளர்ச்சி, சமய - சித்தாந்தங்களின் எழுச்சி வீழ்ச்சிகள் இவைகளுக்கிடையான முரண்பாடுகள் முதலியவை ஆதாரமின்மை என்ற காரணம் காட்டப்பட்டு பின்தள்ளப்படுகின்றன; அல்லது இவையெல்லாம் வட்டார, மாநில அளவிலானவை என்று ஒதுக்கப்படுகின்றன. இத்தகையப் பொதுநிலை பண்டை வரலாற்றியலுக்கு மட்டுமே பொருந்துமென்பதில்லை. ஆதாரங்கள், ஆவணங்கள் மிகுந்த நவீன காலத்திலும் தொன்மைப் பேரரசுகளின் நேரடி வாரிசாக ஆங்கிலேயப் பேரரசின் வரவும் வளர்ச்சியும், அதனையொட்டியும் அதற்கு இணையாகவுமே தோன்றிய இந்திய தேசிய இயக்கம் - அரசு இவற்றின் ஓர் முக வருணனையே தற்கால இந்திய வரலாறென்று ஏறக்குறைய எல்லாப் பகுப்புகளையும் சேர்ந்த வரலாற்றியலாளரும் ஏற்றுக்கொள்கின்றனர். ஏனையவை - சமஉரிமைப் போராட்டங்கள், சாதி ஒழிப்பு முயற்சிகள், கல்வி, வேலை, தொழில் முதலியவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான கூட்டு இயக்கங்கள், குழுக்கள் - குமுகங்களின் புதிய வெளித்தோன்றல்கள் யாவும் சமூக உள் சீர்திருத்தம் சம்பந்தப்பட்டவையென்று வரலாற்றியலாளரால் பின்தள்ளப்பட்டு, சமூக அறிவியலாளரால் சாதி இயக்கங்கள் என்றும் மேம்பாட்டு முயற்சிகள் என்றும் தனித்து ஆராயப்படுகின்றன.

ஆனால் அண்மையில் ஓர் புதிய வரலாற்றியல் - சமூக அறிவியல்களின் தாக்கம் துணைக்கண்டத்திலும் மாறுபாடுகளை தோற்றுவிக்கத் தொடங்கிவிட்டது. பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் வெளிப்பட்ட சமூக உள்சீர்திருத்தங்கள் என்று ஒதுக்கப்படுவனவையும் தேசிய - அரசியல் விழிப்புணர்ச்சி என்று தூக்கிக்கொள்ளப்படுவனவையும் ஒரே எண்ணச் சூழல்களின், மோதல்களின் மையத்திலிருந்தே எழுந்தவை; அவை முரண்பாட்டுடன் தோன்றி ஒன்றையொன்று முண்டியடித்துக்கொண்டே மேலாண்மையை நோக்கி வளர்ந்தன; அரசியல் இயக்கத்தின் சுய உருவத்தையும் சமூக சீர்திருத்தங்களின் கூட்டு மொத்த விளைவுகளையும் தனித்தனியே புரிந்துகொள்ள இயலாது, இரண்டையும் தொடர்புபடுத்தியே பார்க்க வேண்டும் என்ற உண்மைகள் ஆங்காங்கே சிற்சில ஆய்வுகளில் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

ஆராய்ச்சிகளின் போக்கில் தோன்றிவரும் இம்மாறுதல், சமூகத்தில் வளர்ந்துவரும் முரண்பாடுகளின் அல்லது சிக்கல்களின் நிர்ப்பந்தத்தினால்தான் என்பது தெளிவு, ஓர்முக, ஒருதலைப்பட்சமான வரலாற்றின் அடிப்படையில் எழுப்பப்பட்ட அரசியல் பிரச்சினைகளும் அவைகளின் தீர்ப்புகளும், சிந்தாந்தங்களும் அவற்றின் குழறுபாடுகளும், வளர்ச்சித்திட்டங்களும் அவைகளின் ஏலாமையும் சமூகத்தைத் திரும்பமுடியாதவொரு சங்கடத்தை நோக்கி இழுத்துச் செல்வது ஓர் காரணம். மற்றுமொன்று சட்ட அளவில், காலகட்டத்தின் நிர்ப்பந்தத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவீன இந்தியாவின் சமத்துவக் கொள்கையைப் பயன்படுத்தி இதுகாறும் சமூக இருட்டடிப்பில் இருந்து வந்த பெரும்பான்மை மக்களின் வெளியேற்றவெழுச்சி. இவ்விரண்டு காரணங்களாலும் வரலாற்றை மறுபரிசீலனை அல்லது மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. வரலாற்றின் இருண்ட கிடங்குகளுக்குள் இதுவரை தேவையற்றவை, மீந்தவை, பயனற்றவை ஆகவே இல்லாதவை என்று விடப்பட்ட எண்ணக் குவியல்களையும் பல்வேறு சமூக சக்திகளைப் பிரதிபலிக்கும் இயக்கங்களையும் அவற்றின் தலைமைகளையும் தேடிப்பிடித்து, தட்டி எடுத்து, மாசு - தூசி துடைத்து உருவாகி வரும் புதிய வரலாற்றில் அவையவைகளுக்கான நியாய நிலையில் நிறுத்துவதும் சமூக மாற்ற முயற்சிகளின் ஓர் அங்கமே. இவ் விதமாகப் புதியதோர் வரலாறு, அறிவார்ந்த - நெறியமைந்த சமூகம் படைக்கும் துணைக்கண்டத்தளவிலான முயற்சிகளுக்கு ஓர் சிறிய தூண்டுகோலே இந்த அயோத்திதாசர் சிந்தனைகள்.

நவீன இந்தியாவின் மாபெரும் அறிஞர்களுள் ஒருவர் பண்டிதர் அயோத்திதாசர் காலனியாதிக்கத்தின் இக்கட்டான காலகட்டமாகிய பிந்திய பத்தொன்பதாம், முந்திய இருபதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த இவர் பண்டைய இலக்கிய - சமூக - சமய - வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் புதிய சமுதாயம் நிர்மாணிக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருந்தார். நவீன இந்தியாவில் பரவலாக எழுந்த சமத்துவம், பகுத்தறிவு, நவீனத்துவம் முதலாய கொள்கைப்போக்குகளில் தமிழக அளவில் தந்தை பெரியாருக்கும், இந்திய அளவில் அண்ணல் அம்பேத்காருக்கும் முன்னோடியாக விளங்கினார்.

சமயம், சமூகம், வரலாறு, இலக்கியம், அரசியல் பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகள் ஒரு தனி மனிதனின் கருத்துகளாக மட்டும் அமையாமல் அகன்ற சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்தும் சித்தாந்தங்களாகச் சிறந்தன. எனினும் தமிழக - இந்திய வரலாற்று ஆய்வேடுகளில் அயோத்திதாசரைக் காண்பது அரிது. இவ்வுண்மை சமூகத்தில் அறிவும் அதிகாரமும் என்றும் இயைந்தே செயல்படுகின்றன என்பதற்கு ஆதாரம்.

அயோத்திதாசரின் சிந்தனைகள் அவரால் 1907 முதல் 1914 வரை ஏழாண்டுகள் நடத்தப்பட்ட தமிழன் என்னும் வார இதழில் எழுத்து வடிவம் பெற்றன. இத் தமிழன் இதழ்கள் முறையாக நூலகங்களிலோ, ஆவணகங்களிலோ பாதுகாக்கப்பெறாமல் பண்டிதரின் கருத்து வாரிசுகளிடம் சிதறிக்கிடக்கின்றன. ஏறக்குறைய நூற்றாண்டைக் காணவிருக்கும் இவ்விதழ்களின் நிலையைப்பற்றிக் கூறவேண்டிய தேவையில்லை. இந்நிலை தொடருமாயின் இன்னும் பத்தாண்டுகளில் அவை இல்லாமல் அழிந்து போய்விடுமென்பது நிச்சயம். இவற்றைத் தேடிக் கண்டுபிடித்து, கோவைப்படுத்தி அதில் அயோத்திதாசரால் எழுதப்பட்ட கட்டுரை, தொடர் கட்டுரை, சங்கைத் தெளிவு முதலியவைகளை காலக்கிரமத்தின்படி, இதழாதாரத்துடன், அரசியல், சமூகம், சமயம், இலக்கியம் என்று பாகுபடுத்தி இரு தொகுப்புகளாக இங்கே வெளியிடப்படுகிறது. தொகுப்பாளரின் முயற்சியால் ஏழாண்டுகளுக்குரிய அனைத்து இதழ்களும் ஏறக்குறைய கோவையாய் கிடைத்துவிட்டது தமிழகம் செய்த பெரும்பேறு என்றே கருதவேண்டும். நான்கு பாகுபாடு வாசிப்போர் வசதிக்காக ஏற்பத்திக்கொண்டயுக்தி என்று மட்டுமே கொள்ளல் வேண்டும். இதழ்களில் சில சிதைந்த நிலையிலேயே கிடைத்தபடியால் கட்டுரைகள் பலமுறை மூலப்பிரதிகளோடு ஒப்பிட்டுப்பார்க்கப்பட்டு எங்கெங்கு விடப்பட்டுள்ளனவோ அங்கே தெளிவில்லை என்றே குறிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆராய்ச்சியாளர் இத் தொகுப்புகளை அயோத்திதாசரின் மூல எழுத்துகளின் உண்மைப் பிரதியாகவே தயங்காமல் கொள்ளலாம். பண்டிதரின் மொத்த எழுத்துகளில் பெரும்பான்மையானவை - ஏறக்குறையதொண்ணாறு விழுக்காடு எனலாம், இவ்விரு தொகுப்புகளில் அடங்கியுள்ளன, மிஞ்சியவையும் எஞ்சியவையும் இயலும் போது மூன்றாம், பின்னிணைப்புத் தொகுதியாக வெளியிடப்படும். அயோத்திதாசர் வெறும் எழுத்தாளராக மட்டும் இராமல் ஓர்பெரும் தமிழ் - பௌத்தமறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவராகவும் விளங்கினார். அவரது காலத்திற்குப் பின்னும் ஏறக்குறைய கால் நூற்றாண்டளவுக்கு இயக்கம் தொடர்ந்து செயல்பட்டது. இயக்கத்தின் தேவைகளுக்காக பண்டிதரின் கட்டுரைகள் தொகுக்கப்பெற்று கோலார் தங்க வயலிலிருந்து, சித்தார்த்த புத்தக சாலையார் மூலம் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. அவைகளில் பண்டிதரின் கருத்துகள் இயக்கத்தின் தேவைகளுக்கேற்ப சிலது கூட்டியம் குறைத்தும் வெளியிடப்பட்டன. அவ்வாறு பண்டிதரின் காலத்திற்குப் பின் அவர் பெயரால் வெளியிடப்பட்ட புத்தகங்கள், இத்தொகுதிகளின் ஆதாரமாக அமையவில்லை. பண்டிதரால், அவர் மூலம் வெளியிடப்பட்ட தமிழன் இதழ்களை மட்டுமே ஆதாரமாக இத்தொகுதிகள் கொண்டுள்ளன. அயோத்திதாசர் உயிருடன் இருக்கும்போது தமிழனில் தொடர்கட்டுரையாக வெளிவந்து பின்பு அவரது மேற்பார்வையிலேயே 1912இல் வெளியிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட ஆதிவேதம் என்னும் நூல் மட்டும் வசதி கருதி நேரடி ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பண்டிதர் தமிழ் எழுதிய காலம் தமிழ் உரைநடை முழுமையாக நவீனத்துவமோ, நிலைநிறுத்தலோ பெறாத காலம். ஆகவே இப்போதிருக்கும் நிலையிலிருந்து படிப்போருக்குச் சில எழுத்துகளும், சொற்களும், வாக்கியங்களும் மாறுபட்டிருப்பது தோன்றும். மொழி ஆராய்ச்சியாளரின் பயன் கருதி ஏறக்குறைய முழுமையாகவே பண்டிதரின் தமிழிலேயே தொகுப்புகள் தரப்பட்டிருக்கின்றன.

தொகுப்பாளரின் பணி எழுத்துகளைக் கோவைப்படுத்தி பதிப்பிப்பதில் முடிந்துவிடுவதில்லை. காலக்குறிப்புகள், விளக்கங்கள், வாழ்க்கைக் குறிப்புகள் இத்தியாதிகளை அளிப்பதும் அவரது கடனே. ஆயினும் பண்டிதர் போன்ற பேரறிஞரின் ஆழமும் அகலமும் ஒருங்கே அமைந்த எழுத்துகளுக்கு அடிக்குறிப்பு தருவது சுலபமான காரியம் இல்லையென்பது வாசிப்போருக்கு உடனே விளங்கும். அதற்கு வரலாறு, இலக்கியம், சமயம், சமூகம், அரசியல் இன்னும் பல்வேறு கலைகளில் பாண்டித்தியம் தேவை. மேலும் பண்டிதர் மேற்கோள் காட்டும் இலக்கிய நூல்கள் எளிதில் கிடைப்பனவாயில்லை. கிடைப்பனவும் மாறுபட்டும் வேறுபட்டுமே உள்ளன. இன்னமும், முறையாக குறிப்பு, விளக்கங்களுடன் பதிப்பிக்க வேண்டின் வெளியிட வேண்டிய காலம் தள்ளிக்கொண்டே போகும். இவை கருதியே இம்முதல் பதிப்பின் முக்கிய நோக்கம், பண்டிதரின் சிந்தனைகளை விரைவில் அச்சேற்றி தமிழக மக்களுக்கு அதைப் பொதுச் சொத்தாக்கிவிட வேண்டும், பதிப்பின் பலவீனங்களை சிறுகச் சிறுக அடுத்தடுத்த பதிப்புகளில் நீக்கிக் கொள்ளலாம் என்பதே.

இதற்குமுன் அயோத்திதாசரால் தொடங்கி வைக்கப்பெற்ற தமிழ்-பெளத்த மறுமலர்ச்சி இயக்கம் பற்றிய எனது ஆராய்ச்சிக்கும் அதன்பின் அயோத்திதாசரின் மூல எழுத்துகள் கொண்ட இத்தொகுப்புகளுக்கு வேண்டிய ஆதரவும், வசதியம் அளித்து இடைபறாது ஊக்குவித்து வந்தவர் Christian Institute for the Study of Religion and Societyயின் இயக்குநர் சரல் சட்டர்ஜி அவர்கள். அவருக்கு எனது நன்றி மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே நன்றிக் கடன்பட்டுள்ளது.

இத்துடன், இதுகாறும் பெரும்பாலும் குடும்பச் சொத்தாகவே இருந்து வந்த தமிழன் இதழ் இப்போது தமிழகத்தின் பொதுச் சொத்தாக மாறியிருக்கிறது என்றால் அதற்கு அன்புபொன்னோவியம் அவர்களின் கொள்கைப் பற்றும் தாராள பண்புமே காரணம். இத்தொகுப்புகளுக்கு ஆதாரம் அவர் அன்புடன் அளித்த தமிழன் இதழ் கோப்புகளே. அவரது கோப்புகளில் இருந்த குறைவுகளை நிறைவு செய்ய முன் வந்தவர்கள் சென்னையில் டி.பி. கமலநாதன், எஸ்.வி. ராஜதுரை, பெங்களூரில் ஐ. உலகநாதன், வேலூரில் டி.குப்புசாமி, எஸ். பெருமாள், கோலார் தங்கவயலில் ஐ. லோகநாதன் ஆகியோர் இவர்களனைவருக்கும் என் நன்றி.

தொகுப்புப் பணிகளுக்கிடையே ஏற்படும் அயர்வு, தளர்வுகளை நீக்கி, ஆலோசனைகள் பல அளித்து ஊக்குவித்து வந்த நண்பர்குழாம் மிகப்பெரியது. அவர்களுள் சிலரையே இங்கு குறிப்பிட முடியும், தில்லியில் கஜேந்திரன், லட்சுமணன், மற்ற தமிழ் நண்பர்கள், சென்னையில் வ.கீதா, மனுவேல் அல்போன்ஸ், எம்.எஸ்.எஸ்.பாண்டியன், பாளையங்கோட்டையில் தே.லூர்து, த.தருமராஜ், திருநெல்வேலியில் ஆ.இரா.வேங்கடாசலபதி, பெங்களூரில் எஸ்பி. லாசர், திருச்சியில் அந்தோணி டி குருஸ் முதலியோர்.

அச்சுக் கோக்கும் பணியைக் கவனமுடனும், பொறுமையுடனும் நிறைவேற்றியவர்கள் சரஸ்வதியும், ஹரிநாராயணனும். இவர்கள் பணிபுரியும் நிறுவனம் SVA Computer Centre, சென்னை. இவர்களுக்கும் என் நன்றி.

அயோத்திதாசர் சிந்தனைகளை அச்சேற்றி, அரங்கேற்றி, உலகறியச் செய்யும் அரும்பணியை ஏற்றுக் கொண்டவர் பாளையங்கோட்டை, புனித சவேரியார், கல்லூரியில் அமைந்துள்ள நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மைய இயக்குநர் பிரான்சிஸ் ஜெயபதி. அவர்களுக்கும் தமிழகம் நன்றிக் கடன்பட்டுள்ளது. என்னளவில் வடிவமைத்து இறுதிப் படிவம் எடுத்துவிட்ட போதிலும் வடிவமைப்பில் நுட்பமான மாற்றங்கள் செய்த சி.மோகனுக்கும், அம்மாற்றங்களை கணினியில் செம்மையாக நிறைவேற்றிய நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையக் கணினியாளர் காட்வினுக்கும், அச்சுப் பணியை அழகுடன் ஆக்கித் தந்த ஹேமமாலா சிண்டிகேட் அச்சகத்தாருக்கும் நன்றி.

பல்வேறு பணிகளுக்கிடையே நடைபெற்று வந்த இந்தத் தொகுப்புப் பணி இரண்டாண்டு காலமாக நீடித்தது. இந்த நீண்ட காலத்தில் தன்னலம் பாராது உறுதுணையாய் நின்றவர் துணைவி ஜோஸ்னா. அவர்களது ஒத்துழைப்பு பணியின் பளுவை வெகுவாய் குறைத்தது. என் நன்றி உரித்தாகுக.

தமிழகத்தின், தமிழரின், தமிழின் நலனில் அக்கறை கொண்ட யாவரும் இத்தொகுப்புகளை ஆவலுடனும் ஆர்வமுடனும் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை. இருபத்திபொன்றாம் நூற்றாண்டிலாவது, சாதிபேதமில்லா தமிழ்ச் சமுதாயத்தை - தமிழ் தேசத்தை - படைக்கத்துடிக்கும் தமிழ் இளைஞர்களுக்கு இத்தொகுப்புகள் அர்ப்பணம்.

புது தில்லி ஞான. அலாய்சியஸ்