உள்ளடக்கத்துக்குச் செல்

சமதர்மம்/சமதர்மம்

விக்கிமூலம் இலிருந்து

சமதர்மம்


சமதர்மம்--ருசிகரமான வார்த்தை--நாட்டிலே இன்று பலராலும் பேசப்பட்டுவரும் இலட்சியம். பலராலும் என்றால் உண்மையிலேயே அந்த உயர்ந்த இலட்சியத்தின்படி சமூகம் திருத்தி அமைக்கப்பட வேண்டும். மக்களுக்குள் எந்தக் காரணங் கொண்டும் பேத உணர்ச்சியோ, அதனாலான கேடுகளோ இருத்தல் கூடாது. வாழவேண்டும்; பிறர் வாழ்வைக் கெடுக்காமல் என்ற சிறந்த நோக்கங் கொண்டவர்கள் மட்டுமல்ல, நாட்டிலேயுள்ள காட்டு ராஜாக்கள் கூடப் பேசத் தலைப்பட்டு விட்டனர்.

நாம் அனைவரும் சமம் என்பது உறுதியாச்சு என்னும் கவிதா நடையிலே மட்டுமல்ல; "அவனும் மனுஷன் தானேய்யா, அவன் என்ன தலையில் கொம்பு முளைத்தவனா?" என்று தெருக்கோடி பாஷையில்கூட.

சமத்துவமாக வாழவேண்டும் என்றபேச்சு, ஒவ்வொருவர் பேசும்போதும் ஒவ்வொரு விதமான பொருள் இருக்கிறது.

முடிதரித்த மன்னன் கூறுகிறான்;"நமது ஆட்சியிலே அனைவரும் சமம்; நாம் நமது மக்களிலே பேதா பேதம் பார்க்க மாட்டோம்" என்று. மன்னனின் சமத்துவ நோக்கத்தை வெளிப்படுத்தும் பேச்சாகவே இது முதலில் தோன்றும். ஆனால் சற்றுச் சிந்தித்துப் பார்த்தால்... நமது ஆட்சியிலே நமது கண்களுக்கு... என்ற வாசகங்கள் மூலம் மன்னன் தன்னை அனைவருக்கும் மேலாக்கிக் கொண்டு, தனது அதிகாரத்தை ஊர்ஜிதப் படுத்திக் கொள்கிறான் என்பது விளங்கும்.

கோபமாக இருக்கும்போது குப்பன் கூறுகிறான்; "அவனவன் ஜாதி அவனவனுக்கு உயர்வுதானய்யா" என்று. அவனை பிறகு குளிர்ந்த மனதுடன் இருக்கும் போது "என்ன இருந்தாலும் அவர் மேல்ஜாதிக்காரர்" என்று பேசுகிறான். குளிர்ந்த மனதுடன் இருக்கும்போது மேல்ஜாதிக்காரன் கூறுகிறான்: "குப்பா ஜாதியிலே என்னடா இருக்கிறது? எல்லாம் அவாள் அவாள் குணத்தைப் பொறுத்து இருக்கிறது" என்று. ஆனால், கோபம் பிறந்தாலோ அவர் கொக்கரிக்கிறார். "குதிரையும் கழுதையும் ஒன்றாகுமோ? கையிலே உள்ள 5 விரலும் ஓரே அளவோ" என்றெல்லாம். இது போலத்தான் இந்தச் சிறந்த இலட்சியத்தைப் பற்றி, மக்கள் பேசுவதைக் கூர்ந்து கவனித்தால், ஊஞ்சல் ஆடுவது போலச் சருக்குமரம் ஏறுவதுபோலச் சமதர்மப் பேச்சு காணப்படும். ஊராரும் முறையாகச் சிலராலும், உபதேச மார்க்கமாகச் சிலராலும், இது பேசப் படுகிறது. பேச்சிலே மட்டுமல்ல, இந்த முரண்பாடு; இதைப் பேசும் மக்கள் நிலையலேயும் காணலாம்.

கோபால கிருஷ்ணையரும் கவுன்சிலர்தான், கோவிந்த செட்டியாரும் கவுன்சிலர்தான், கொண்டையாவும், கவுன்சிலர்தான், முனிசிபல் சபையிலே. அவர்களுக்குள் பேதமில்லை. ஒரேவிதமான அதிகாரம் அந்தஸ்து ஆசனம் எவ்லாம். கோபால கிருஷ்ணையர் கொண்டுவரும் தீர்மானத்தை கொண்டையா எதிர்க்கலாம், தடையேதும் கிடையாது, சட்டம் ஜாதியை கவனித்து தடைபோடாது. அரசியலில் அவர்கள் மூவரும் சமம். நகரசபை மண்டபத்திற்கு உள்ளே, வெளியே வந்ததும் மூவரும் வேறு வேறு--அங்கே சட்டமல்ல; சாஸ்திரம் அவர்களை ஆக்குகிறது. அந்தச் சாஸ்திரத்தைச் சட்டத்தால் தொடக்கூட முடிவதில்லை. கொண்டையாவை, கோபால கிருஷ்ணையர் சட்டப்படி நடத்துவார் நகரசபைக்குள்ளே; சாஸ்திர முறைப் படி நடந்துகொள்வார் வெளியே. கொண்டையா வெறும் கொண்டையாவாக இராமல், மிஸ்டர் கொண்டையா, பி. ஏ. ஆக இருந்தால் கோபால கிருஷ்ணையரும் கோவிந்த செட்டியாரும் அவரை நடத்தும்முறை சம்பிரதாய முறையிலிருந்து கொஞ்சம் மாறுபடக் கூடும். கனிவுடன் கூடப் பேசுவர். "என்ன செய்யலாம், அவர் அந்த ஜாதியிலே பிறந்துவிட்டார்" என்று. அதிலும் மிஸ்டர் கொண்டையா பி. ஏ. ஒரு புதிய காரிலே வந்து இறங்கினால், சம்பிரதாம் முறை உருத்தெரியாமல் மாறக்கூடும், ஆனால் எந்தக் காரணத் தைக் கொண்டோ கொஞ்சம் கோபம் பிறந்தால் போதும் உள்ளத்திலே உறங்கிக் கொண்டிருக்கும் பழமைப் பாம்பு சீறிப் படமெடுக்கும். கொண்டையாவின் ஜாதி மட்டுமே அப்பொழுது கண்களுக்குத் தெரியும்; பி. ஏ. பட்டம். புதிய மோட்டார் இவை மறையும்.

பயணம், படிப்பு இவைகளின் மூலம் ஜாதி பேதத்தின் கொடுமையை ஓரளவுக்குக் குறைக்க முடியுமேயொழிய, அடியோடு அழிக்க முடிவதில்லை. அரசியலில் சமத்துவம் ஏற்பட்டுவிட்டால் மட்டும் சமூகத்திலுள்ள பேதங்கள் போய்விடுவதில்லை. அந்தப் பேதம் இருக்கும் வரையில் "சமதர்மம்" என்ற இலட்சியம் கனவில் காணும் காட்சியாகவே இருக்க முடியும். மக்களுக்குள் ஏற்படும் பேதம் பல காரணங்களால் அமைவதால், பேதத்தின் உருவம் பலவகையாகக் காட்சியளிக்கிறது. ஜாதியால், மதத்தால், குலத்தால், அரசியல் நிலையால், பொருளாதாரத்தால் பேதம் ஏற்படுகிறது. இவையனைத்தையும் அகற்றியாக வேண்டும். ஆனால் இந்த நாட்டிலே, ஜாதிதான் மக்களுக்குள் பேதத்தை ஏற்படுத்தும் முதல் சாதனம். மக்களின் இரத்தத்திலே கலக்கப்பட்டிருக்கும் கடு விஷம்--மனதிலே இடக்கு நோயைப் புகுத்திவிட்ட முறை--எனவேதான், பேதமற்ற சமுதாயத்தை-- சத்துவத்தை--சமதர்மத்தை நாம் காண வேண்டுமானால் முதலில் ஜாதி தொலைந்தாக வேண்டுமென்று நான் சார்ந்துள்ள அறிவியக்கம் பல காலமாகக் கூறி வருகிறது.

மனதிலே உள்ள தளைகளை நீக்குவது, அவசியமான காரியமென்பதை உணர்ந்து, ஐரோப்பாக் கண்டத்திலே பேரறிவாளர்களான, வால்டேர், ரூசோ போன்றார் அறிவுத்துறைப் புரட்சிக்காகப் பணியாற்றினர். அதேவிதமான பணி தேவை. பொதுவாகவே நாம் சிந்தித்தால், இந்தப் பணியின் அவசியம் நன்கு விளங்கும். உலகில் உள்ள கஷ்டங்கள். வறுமை, பிணி, வேலையில்லாக் கொடுமை, பாட்டாளி படும் துயரம், இவைகள் எல்லோரும் இன்புற்று வாழுவதற்கு ஏற்ற வசதியில்லாததால் உண்டானவையா என்று யோசித்தால், இல்லை என்று தெரியும், ஆராய்ச்சியாளர்கள் புள்ளி விவரங்களைக் காட்டியே கூறியிருக்கிறார் கள். இயற்கை தரும் செல்வத்தை வசதியைக் கொண்டு, நாளொன்றுக்கு சராசரி இரண்டுமணி நேரம் எல்லோரும் வேலை செய்தால் எல்லோரும் வயிறார உண்டுவாழலாம் என்று கூறியிருக்கிறார்கள். அவ்வளவு இயற்கைச் செல்வமும் அதனை மக்களுக்கான உபயோகப் பொருளாக்கும் பாட்டாளியின் சக்தியும் உள்ளன. இருந்தும் இவ்வளவு இன்னலை இங்குமட்டுமல்ல, எங்கும் இன்று மட்டுமல்ல, பன்னெடுங்காலமாக, அனுபவித்துவரவேண்டியிருக்கிறது. சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சாமான்யர்களாகிய நம் காலத்திலே மட்டுமா வீராதி வீரர்கள் சாம்ராஜ்யாதிபதிகள் காலத்திலேயும் சரி யோகியாக விற்பன்னர்கள், வேத வேதாந்த சிரோமணிகள், ஆழ்வாராதிகள், நாயன்மார்கள், அஷ்டசித்தியை அறிந்தவர்கள், அரி அரனை அழைப்பவர்கள், ஆத்மஞானிகள் என்போர்களின் நாட்களிலேயும் இந்தப் பிரச்சினை இங்கிருந்து வந்ததுடன், இல்லாமை போதாமை எனும் நோயின் பிடிப்பிலே சிக்கி ஒரு பெருங் கூட்டம் அவதிப்படவும், செல்வத்திலும் சுகத்திலும் சிறுகூட்டம் அமிழ்ந்து கிடக்கவுமான நிலைமை இருந்து வந்தது. இதனை மக்கள் பல காலமாகச் சகித்துக் கொண்டனர். நம்மால் முடியாது என்றெண்ணி மருண்டனர். யாராவது இதை மாற்றும் முறையைக் கூற முன்வர மாட்டார்களா என்று ஏங்கி நின்றனர். எந்த குறுக்குவழி புகுந்தேனும் இந்தக் கஷ்டத்திலிருந்து நீங்க முடியுமா என்று பதைத்தனர். ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்திக் கொண்டனர். என்னென்னமோ செய்தனர் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க. இன்னும் ஓர் முடிவு காணவில்லை. மனிதனால் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மூடிவுகாண முடியாத காரணம் என்ன? அறிவு இல்லை என்று கூறிவிட முடியுமா? பறக்கக்கூடக் கற்றுக்கொண்டான்; பார்முழுவதையும் பாக்கேட் சைஸ் ரேடியோவுக்குள் அடக்கிவிடடான். இன்னமும் பசி, பட்டினி, பஞ்சம் இன்றி எல்லோரும் வாழ வழி கண்டுபிடிக்க மனிதனுடைய அறிவு அவனுக்குப் பயன்படவில்லை. அறிவுப் பஞ்சம் அல்ல இதற்குக் காரணம் அவனுக்குள் புகுத்தப்பட்ட அச்சம் அவனுடைய அறிவு ஊற்றைப் பாழ்படுத்துகிறது. அதனாலேயே மனிதன் மனம் அலைமோதி நிற்கிறது.

மனிதன் கஷ்டம் அனுபவித்தபோது, மிதவாதிகள் அவனுடைய கண்ணையும் கருத்தையும், எந்த உண்மைக் காரணத்தால் மனிதன் கஷ்டப்படுகிறானோ அந்தக் காரணங்களைக் காணவொட்டாமல் தடுத்து கைலாயம், வைகுந்தம், காகுந்தன், காளியாயி, ஜெபமாலை, உடுக்கை இப்படி வேறு பல பொருள்கள், முறைகள் மீது திருப்பி விட்டனர். மனிதன் திக்குத் தெரியாத காட்டைப் போலானான். எனவே தான், அவன் தன் நிலையை மாற்றிக்கொள்ளும் முயற்சியில் தோற்கவேண்டி நேரிட்டது. எடுத்துக் காட்டாக ஒன்று கூறுகிறேன், கூலி உயர்வுக்காகவோ, போனசுக்காகவோ ஒரு தொழிலாளர் சங்கம் போராடுகிறது என்று வைத்துக்கொள்வோம். பாட்டாளி கூட்டம் முடிந்து வீடு போகிறான்.

மனைவி கேட்கிறாள்: 'வேலை கூடத்தான் இல்லையே, எங்கே போய் சுற்றிவிட்டு வருகிறீர்கள். மணி பத்தாகிறதே...'

அவன்: 'பைத்தியமே, இன்று மீட்டிங்கு' என்று சொல்லுகிறான்.

'அதுதான் இருக்கிறதே ஒவ்வொரு தினமும்' சலித்த குரலில் மனைவி கூறுகிறாள்.

'வள்ளி, வர்க்கப் போராட்டம் நடக்கிறது. இதிலே பாட்டாளி வர்க்கந்தானே ஜெயிக்கும்' என்று அவன் கூறுகிறான். அன்று கேட்ட சமதர்மப் பிரசாரத்தின் ஆர்வத்தால், 'என்னமோ பொன்னியம்மாள் புண்ணியத்தாலே அந்த முதலாளி மனது மாறி, ஏழைகள்மேல் இரக்கங் காட்டவேணும்,' பரம்பரைப் பழக்கத்தால் வள்ளி கூறுகிறாள் இதுபோல்.

இவ்விதம் இருவிதமான முறைகள், ஒன்றிற்கொன்று நேர்மாறானவை பேசப்படுகின்றன. ஒரே குடும்பத்தில் ஒரே ஒரு இலட்சியத்தைப் பெற, இந்த முரன்பாடு ஒழிக்கப்பட்டால்தான் சுவையுள்ள அந்த இலட்சியத்தை நடைமுறையில் வெற்றிகரமாக்கிக் காட்டமுடியும். எனவே தான், மனதிலே உள்ள தளைகள் அறுபட்டால்தான் சமதர்மத்திற்குள்ள தடைகள் ஒழிக்கப்படும் என்று அறிவியக்கம் கூறுகிறது.

இவ்வளவு சிக்கல் நிறைந்து இந்தப் பிரச்சினையைச் சமதர்மத்தை--ஏதோ மிகச் சுலபத்திலே சாதித்து விடக்கூடும் என்ற முறையிலே பலர் பேசுகின்றனர். சாதாரணமாக நாம் பேசுவதில்லையா? சங்கீதம் என்ன சார், பிரமாதம்? சாரீரம் கொஞ்சம் நன்றாக இருக்கவேண்டும்; சுருதியுடன் சேர்ந்து பாடவேண்டும்; 'தாளம் தவறக்கூடாது இவ்வளவுதானே' என்று; பாட ஆரம்பிக்கும் போது தானே தெரிகிறது. சாரீரம் வித்வானுடன் ஒத்துழைக்க மறுப்பதும், சுருதியுடன் அவர் மல்லுக்கு நிற்பதும், தாளம் அவருக்குச் செய்யும் துரோகமும். அதுபோலத்தான் சமத்துவம் சமதர்மம் போன்ற இலட்சியங்களைப் பேசுவது சுலபம், சாதிப்பது கடினம். அந்த இலட்சியத்தின் சாயலை-- முழுப் பயனைக்கூட அல்ல--சாயலைப் பெறுவதற்குப் பல நாடுகளில் பயங்கரப் புரட்சிகள் நடக்கின்றன. இன்று நாட்டிலே மக்கள் அனைவரும் சமம் என்று பேசுமளவிற்கு வந்திருக்கிறோம்--பலர் தெளிவற்ற முறையில் விளக்கமான திட்டமும் இல்லாமல்.

"காக்கை குருவி எங்கள் ஜாதி"--"ஜாதிகள் இல்லையடி பாப்பா"--பாரதியார் பாடினார்.

அவருக்கு இல்லை ஜாதி, ஜாதி இருக்கவேண்டும் என்று பேசுபவனையே அவர் மனிதனென மதிப்பதில்லை. ஆனால் அவர் நாட்டில் என்ன நிலை? பாரதியார் பாடின அன்று அல்ல. இன்னும் என்ன நிலை? ஜாதி, மத, குல, பொருளாதார பேதங்கள் மக்களை முன்னேற ஒட்டாதபடி, மூச்சுத் திணரும்படி, முதுகெலும்பை முறிக்கும்படி அழுத்துகின்றன.

இந்நிலையில் சமத்துவம் மலர்வதெங்கே? சமதர்மம் தோன்றுவதெங்கே? அதன் முழுப்பயனாகித் தோழமையைக் காண்பது எங்ஙனம்? தோழமை ஆழ்ந்தகருத்துள்ள அழகான சிறுசொல்.

ஒற்றுமை--கூட்டுறவு--ஒப்பந்தம்--கூடி வாழ்தல்--நட்பு--அன்பு--என்றுள்ள எத்தனையோ பதங்களும், ஒவ்வோர் அளவுவரை மட்டுமே சொல்லக்கூடியவை--முழுத் திருப்தி தருபவையல்ல--தோழமை என்ற நிலையை அடையும் படிக்கட்டுகள் இவை--ஆனால் தோழமை, இவ் வளவுக்கும் மேலான ஓர் நிலை, பேதம் நீங்கிய, நீக்கப்பட்ட அல்லது கவனிக்கப்படாத நிலை அல்ல--பேதம் ஏற்படாத நிலை--ஏற்பட முடியாத நிலை.

தாங்கள் இது ஒரு தாய் நாட்டவர்--பற்று. அவ்வளவு தான் ஒரு மதக்காரர்--பாசம்; அதற்குமேல் இல்லை. ஒரே கட்சிக்காரர்--நேசம் அவ்வளவோடு நின்று விடும். ஏனெனில், இவை ஓவ்வொன்றும் கடைசிவரை நீடிக்கக் கூடியதல்ல. மனதுக்கு முழுத் திருப்தி தரக்கூடியதுமல்ல.

அவனும் உன் நாட்டவன்தானே, சொந்த நாட்டுக்காரர்கட்குள் சண்டையா? ஆகுமா இந்தச் சகோதரச் சண்டை என்று, கேட்டுப் பார்த்தால் தெரியும்--நாட்டுப் பற்றை, அவன் நையாண்டி செய்வான்.

இதோ பார் என் நாடு என்று காட்டுவான் கல் இடிந்த வீட்டை. அதோபார் அவனுடைய நாட்டை என்று காட்டுவான் மாளிகையை. காட்டிவிட்டுக் கூறுவான்; இருவரும் ஒரே நிலப்பரப்பில் இருக்கிறோம், அவ்வளவே தவிர, அவனும் நானும் ஒரே நாட்டுக்காரரல்ல, அவனுடைய நாடு உல்லாசபுரி, என் நாடு உழைத்து அறுக்கும் இடம் என்று கூறுவான், கோபங்கொண்ட ஏழைத் தொழிலாளி.

நெருக்கடியான எவ்வளவோ நேரங்களில் நாட்டுப் பற்று மதப்பற்று முதலியன மங்கிவிடும். விரோத உணர்ச்சியேகூட மூண்டுவிடும்.

தோழமை அஃதல்ல; ஒருவரை ஒருவர் கண்டவுடன் முகமலர்ச்சி சிரமமின்றி ஏற்படவேண்டும்--பயன் கருதி அல்ல--அர்த்தமற்று அல்ல--கண்டதும் களிப்பு--நம்மைப் போல ஒருவன் என்ற நினைப்பிலிருந்து அந்தக் களிப்பு மலரவேண்டும்.

பேதம் வெறும் மன உணர்ச்சியினால் மட்டுமே ஏற்படுபவதல்ல--பேதம் இலாபம் தருகிறது. எனவேதான், அதனை விட்டுவிட மனமில்லை. பேதத்தால் பிழைப்பவர்களுக்கு, ஓநாய்க்கு இரத்த பானத்தில் சுவையிருக்குமட்டும் ஜீவகாருண்யத்தை அது எப்படி வரவேற்க முடியும். பேதமும் பல காலமாக இலாபம் தரும் சாதனமாக இருப்ப தாலேயே, அதற்குச் 'சாகாவரம்' கோருகின்றனர். அதனால் இலாபம் பெறுகிறவர்கள், பேதத்தால் வரும் இலாபம் ஒழிக்கப்பட்டால் தான் தோழமை இருக்கமுடிகிறது.

இந்தத் தோழமைதான், சமத்துவத்தின் கனி, சமதர்ம மணம், இதைக் காணத்தான் ஜாதி தொலைய வேண்டும் என்று பாரதியார் சொன்னார். அவரைப் பாராட்டுபவர்களைப் பார்த்து, நாட்டைப் பார்த்து, ஆர்வமிக்க இளைஞர்களைப் பார்த்து,

"இருட்டறையில் உள்ளதடா உலகம்
         ஜாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே
மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே
        வாயடியும் கையடியும் மறைவதெந்நாள்?
சுருட்டுகின்றார் தம்கையில் கிடைத்தவற்றைச்
        சொத்தெல்லாம் தமக்கென்று சொல்வார் தம்மை
வெருட்டுவது பகுத்தறிவே இல்லையாயின்
        விடுதலையும் கெடுதலையும் ஒன்றேயாகும்."

என்று பாரதிதாசன் கூறுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சமதர்மம்/சமதர்மம்&oldid=1638701" இலிருந்து மீள்விக்கப்பட்டது