உள்ளடக்கத்துக்குச் செல்

சமயம் ஓர் உரையாடல்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




சமயம்: ஓர் உரையாடல்


தொ.பரமசிவன் ● சுந்தர் காளி

முதற் பதிப்பு: 2008
மூன்றாம் பதிப்பு: 2018
© ஆசிரியர்களுக்கு
வெளியீடு :
அன்னம்
மனை எண்-1, நிர்மலா நகர்,
தஞ்சாவூர் – 613 007
அட்டை மற்றும் நூல் வடிவமைப்பு: மதுரை பாபு
முன்னட்டைப் புகைப்படம்: ஆர். கே. கே. ராஜராஜன்
பின்னட்டைப் புகைப்படம்: கோம்பை எஸ். அன்வர்
கணினி அச்சு: பி.கி.ராம்குமார்
விலை: ரூ.75/-

முதற்பதிப்பின் முன்னுரை:
பேசப்படாத செய்திகளும் நிகழ்வுகளும்

மயம் குறித்து நண்பர் சுந்தர் காளியோடு இப்படி ஓர் உரையாடல் நிகழ்த்த வாய்ப்புக் கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சியே. அவரது வாசிப்புத் தளம் மிக விரிவானது.

அதன் காரணமாகவே இந்த உரையாடலில் இதுவரை பேசப்படாத செய்திகளும் நிகழ்வுகளும் பேசப்பட்டுள்ளன. தமிழ்ச் சமூகத்தில் ஆழ வேரோடிக் கிடக்கும் தாய்த்தெய்வ உணர்வுகள் மென்மையானவை; ஆனால், வலிமை வாய்ந்தவை. சமயம் (Religion) என்ற பொருள் உணர்த்தும் வாழ்வியல் அசைவுகள் எளிய தமிழ்மக்களுடன் இசைந்து செல்லாதவை.

மக்கள்தொகையில் செம்பாதியான பெண்மக்களிடத்தில் தமிழ்நாட்டில் மத அடிப்படைவாதம் செல்லுபடியாகவில்லை. மரபுவழி வழிபாட்டு நெறிகளின் - குறிப்பாகத் தாய்தெய்வ வழிபாட்டின் - ‘மற்றதை’ நிராகரிக்காத சனநாயகத் தன்மைதான் அதற்குக் காரணமாகும். இதன் மீதான என்னுடைய நம்பிக்கையும் ஆழமானதாகும்.

தாய்த்தெய்வ வழிபாட்டு நெறிகள், சமயங்கள் முன்னிறுத்துவது ஞான (அறிவு) நெறியல்ல; அவை பிரேம (அன்பு) நெறிகளாகும். இந்த அடிப்படைத் தன்மையே ஐரோப்பிய அல்லது மேற்குலக அளவுகோல்கள் தமிழர் சமய வரலாற்றிற்குப் பொருந்தி வரவில்லை என்பதற்கான காரணமாகும். அதனால்தான் கோபுரங்களோடும் பெரிய மதிற்சுவர்களோடும் அரசுகள் உருவாக்கிய தெய்வங்கள் மூச்சற்றுப் போக, நடைபாதைத் தாய்த்தெய்வங்கள் வாழ்ந்து காட்டுகின்றன.

இவற்றை விரித்துப் பேசும் வகையில் கூர்மையான வினாக்களை முன்வைத்த நண்பர் சுந்தர் காளிக்கு என் நன்றி.

தொ.பரமசிவன்

முதற்பதிப்பின் முன்னுரை:
கோட்பாட்டு ரீதியான பிரச்சினைகள்

மிழ்நாட்டில் சமயம் பற்றிய சமூகவியல் ஆய்வுகள் இன்னும் தொடக்க நிலையில்தான் உள்ளன. சமயத்தின் பரிணாமம் குறித்த வரலாற்றியல் ஆய்வுகளைத் தாண்டிய புதிய அணுகுமுறைகள் அண்மைக்காலத்தில்தான் அறிமுகமாகியுள்ளன. மேலும், மேலோர் சமயம் தவிர்த்த கீழோர் சமயம், நாட்டார் சமயம் ஆகியன பற்றிய ஆய்வுகள் கடந்த இருபது ஆண்டுகளில்தான் தீவிரமடைந்துள்ளன. நாட்டார் வழக்காற்றியல், மானுடவியல், வரலாறு, தொல்லியல், கலைவரலாறு, சமய வரலாறு, சமய ஒப்பீட்டியல், தத்துவம், இறையியல் போன்ற பல துறைகளையும் தழுவிய பல்துறை ஆய்வாகவே இனிவரும் சமயம் பற்றிய ஆய்வுகள் இருக்க முடியும். இத்தகைய பல்துறை ஆய்வறிவு கொண்ட புலமையாளரான தொ. ப. வுடன் உரையாடக் கிடைத்த வாய்ப்பு என் பேறு என்றே கருதுகிறேன்.

தமிழ்நாட்டில் சமயம் பற்றிய கோட்பாட்டுரீதியான பிரச்சினைகள் பலவற்றை இவ்வுரையாடல் எழுப்புகிறது. இதுவரை பேசப்படாதிருந்த பல பகுதிகளை இது வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறது. தமிழ்நாட்டு வரலாற்றின் முதல் கட்டமான சங்ககாலம் தொடங்கிப் பின்னிடைக் காலம்வரை நடந்த பல்வேறு நிகழ்வுகளை வரலாற்றுப் பின்னணியில் வைத்தும் கோட்பாட்டு அடிப்படையில் கண்டும் விளக்கிச் சொல்லுகிறது இவ்வுரையாடல்.

இந்த உரையாடலின் ஒரு சந்தர்ப்பத்தில் பெருங்கோயில்கள் பாழடையும் நாள் ஒன்றுவரும் என்கிறார் தொ. ப. வேறேதாகிலும் ஒரு வடிவத்தில் அன்றும் பிறகும்கூடச் சமய வாழ்வு தொடரும் என்பதே என் நம்பிக்கை.

சுந்தர் காளி

நன்றியுரை


சென்னையில் இரண்டு நாள்கள் சந்தித்து இரவும் பகலுமாய் உரையாடியதில் விளைந்தது இந்நூல். இது உருவாகக் காரணமாயிருந்த தென்திசைப் பதிப்பகம் சார்ந்த மை. பா. நாராயணன், திருமாவேலன், விஜயவேலவன் ஆகியோருக்கு எங்கள் நன்றிகள். தவிரவும், பல்வேறு வகைகளில் இந்நூல் உருவாவதற்குத் துணைநின்ற பொ. வேல்சாமி, ந. முத்துமோகன், ம. பெ. சீனிவாசன், மணிகண்டன், முகமது சஃபி, ரெங்கையா முருகன், சாமுவேல் சுதானந்தா, பரிமளம் சுந்தர், வீ. செல்வகுமார், பசுமைநடை முத்துக்கிருஷ்ணன், மெய்ப்புத் திருத்தியுதவிய கி. சிவா, இந்நூலைக் கணினி அச்சிடுவதில் துணைநின்ற பி. கி. ராம்குமார், சி. சுந்தர், கார்த்திகா, ராஜா, முன்னட்டையில் காணும் புகைப்படத்தை எடுத்துதவிய ஆர். கே. கே. ராஜராஜன், பின்னட்டைப் புகைப்படத்தை எடுத்ததோடன்றி அது பற்றிய குறிப்பு ஒன்றையும் எழுதியுதவிய கோம்பை எஸ். அன்வர், வழக்கம் போல் நூலையும் அட்டையையும் வடிவமைத்து அழகுபடுத்திய மதுரை பாபு, நூலை அழகுற வெளியிடுகிற அன்னம் கதிர் மற்றும் கடந்த பத்தாண்டுகளாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்நூல் எழுப்புகிற கேள்விகளை ஓயாது விவாதித்துதவிய நண்பர்கள் ஆகிய அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.

தொ.பரமசிவன்

சுந்தர் காளி

பின்னட்டைப் புகைப்படம் பற்றியொரு குறிப்பு

ஓர் அரிய காவல் தெய்வமான ‘இராவுத்த குமாரசாமி’யைக் கொங்கு நாட்டில், சிவகிரியை அடுத்துள்ள காகம் என்ற கிராமத்தில் காணலாம். காகம் கிராமத்தில், கண்ணன் கூட்டத்தினரால் காவல் தெய்வமாகவும், குல தெய்வமாகவும் பயபக்தியுடன் வழிபடப் படுகிறார் ‘இராவுத்த குமாரசாமி.’ சிறு மினாராக்கள், விமானம் என்று கோயிலின் அமைப்பே, மதங்களைக் கடந்து இங்கு மனிதநேயம் வழிபடப்படுவதை நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. கோயிலின் நுழைவாயிலிலிருந்து கருவறைவரை, வாளை உயர்த்திப் பிடித்து அமர்ந்தவாறும், வாயில் சுருட்டுடன் கைலி உடுத்தி ஒருக்களித்துப் படுத்தவாறும், குதிரையின்மேல் அமர்ந்த வண்ணமாகவும் வெவ்வேறு நிலைகளில் இராவுத்தர் சிலைகள் காணப்படுகின்றன. கருவறையில் குமாரசாமியான முருகனுக்குப் பின்னால், பீடத்தில் வாளை உயர்த்திப் பிடித்த வண்ணம் ஒரு கால் தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் இரு இராவுத்தர்கள்.

தமிழ் முஸ்லிம்களில் குதிரை வணிகர்களாகவும் வீரர்களாகவும் அறியப்பட்ட இராவுத்தர்கள் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களின், காகம் கண்ணன் கூட்டத்தாரின் குல தெய்வமானது குறித்துப் பல்வேறு கதைகள் நிலவுகின்றன. புலவர் செ.இராசுவால் ஆவணப்படுத்தப்பட்ட கொங்கு வேளாளர் குறித்த “அரசூர் முழுக்காதன்குல வரலாறும் வெள்ளையம்மாள் காவியமும்” சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவத்தின் பின்னணியை நமக்கு விவரிக்கின்றது. கொங்கு வேளாளரில், சேட குலத் தலைவருக்கு நான்கு ஆண்கள், ஒரு பெண் என ஐந்து குழந்தைகள். வெள்ளை நிறம் கொண்டிருந்த மகளை மணக்க யாரும் முன்வராத நிலையில், மணமுடிக்க முன்வருபவருக்குக் காடையூரில் கால்பங்கு காணி நிலம் தரப்படும் என்று அறிவிக்கின்றார். இதனை ஏற்று வெள்ளையம்மாளை மணமுடித்த காங்கேயன் ஒரே குடும்பமாய் மாமனார், மைத்துனர் என்று நட்டூரிலேயே வசிக்கின்றார். தந்தை மறையவும் வெள்ளையம்மாளுக்குப் பிரச்சினை ஆரம்பிக்கின்றது. காணி நிலம் கொடுக்க மறுத்து சகோதரர்கள் மைத்துனர் காங்கேயனை ஆற்று வெள்ளத்தில் தள்ளிவிட்டுக் கொன்றதாகப் பேசப்படுகிறது. சகோதரர்களால் வஞ்சிக்கப்பட்ட வெள்ளையம்மாள் தனது குழந்தைகளுடன் ஊரைவிட்டு ஓட, வழியில் ஒரு முஸ்லீம் படைத்தளபதி அவளைக் கண்டு மனமிரங்கி அடைக்கலம் தந்ததோடு மட்டுமல்லாமல் அவளது சகோதரர்களையும் ஊர்க்காரர்களையும் அழைத்து விசாரிக்கின்றார். அவள் பொய் சொல்லுகிறாள் என்று அனைவரும் அவள் கூற்றை மறுத்ததோடு மட்டுமல்லாமல், அனைவரின்முன் மூன்று சத்தியம் செய்து, தான் களங்கமற்றவள் என்று நிரூபித்தால் காணி நிலம் தருவதாகக் கூறினர். அதன்படி வெள்ளையம்மாள் பச்சை மண் கலத்தில் நீர் எடுத்து, நீரை மண் குதிரை மீது தெளிக்க அது கனைக்க வேண்டும். மூன்றாவதாக, கழுமரமாகச் சீவி வைக்கப்பட்ட விடத்தலை மரத்தில் தண்ணீர் ஊற்றித் தழைக்க வைக்க வேண்டும். இதில் வெள்ளையம்மாள் தோற்றால் அதே கழுமரத்தில் ஏறிச்சாக வேண்டும் என்றனர். அவளைக் கொன்றுவிடும் நோக்கத்திலேயே இது போன்ற சத்தியங்கள் கோரப்படுகின்றன. ஆகவே ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்று அந்த முஸ்லீம் தளபதி வெள்ளையம்மாளிடம் மன்றாட, வெள்ளையம்மாள் தெய்வீக சக்தியால் வெற்றி பெறுகிறாள் என்று ஒரு கதை. இது போல் பல்வேறு கதைகள் இருப்பினும் அவையனைத்திலும் பொதுவான ஒரு செய்தி என்பது, கண்ணன் கூட்டத்தாரின் மூதாதையர் துயரத்தில் இருந்தபோது, அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்து, குலம் தழைக்க உதவியது முஸ்லீம் இராவுத்தர்கள் என்பதுதான். அதனாலேயே காவல்தெய்வமாகவும், குலச்சாமியாகவும் இராவுத்தரை வணங்குகின்றனர் இம்மக்கள். அதன் வெளிப்பாடாகச் சிலர் தங்கள் பெயரின் முன்னால் ராவுத்தர் என்றும் இணைத்துக் கொள்கிறார்கள், உதாரணமாக ராவுத்தக் கவுண்டன்.

சில வருடங்களுக்கு முன்னர்வரை வெறும் கூரையோடு வயல்வெளியில் வீற்றிருந்த சுதையிலான இராவுத்தசாமிகளுக்கு ஆகம முறைப்படி கோயில் எழுப்ப வேண்டும் என்று கண்ணன் கூட்டத்தார் விரும்பியபோது, ஸ்தபதியின் அறிவுரைப்படி அவை வேங்கை மரத்தால் செய்யப்பட்ட சிலைகளாக மாறின. வேங்கை மரத்தின் உக்கிரத்தைத் தணிக்க, "மூன்றாவது மூர்த்தியாக குமாரசாமியான முருகனின் கற்சிலை அபிஷேக மூர்த்தியாக இடம் பெற வேண்டும்" என்ற ஸ்தபதியின் ஆலோசனைப்படி, இன்று கருவறையில் இராவுத்தர்களுடன் குமாரசாமியான முருகனும் வீற்றிருக்கின்றார் என்கிறார் கோயில் பூசாரியான மகாலிங்கம். நான்காவது தலைமுறையாகப் பூசாரியாகப் பணியாற்றும் மகாலிங்கம் கண்ணன் கூட்டத்தைச் சார்ந்தவர்.

கருவறைக்குள் குமாரசாமியுடன் அமர்ந்திருக்கும் இராவுத்தர்களுக்குப் பூ, பழம் என்று படையலிடும் மகாலிங்கமும் அவரது உறவினரும், கோயிலின் ஒரு நுழைவாயிலின் மேல் ஒருக்களித்து வாயில் சுருட்டும் இடுப்பில் கைலியும் அணிந்து காணப்படும் இராவுத்தருக்கு, பிற காவல் தெய்வங்களுக்குப் பூசையில் படைக்கும் போதை வஸ்துக்களும் மாமிசமும் படைக்கின்றனர். மூன்று வருடத்திற்கு ஒரு முறை கண்ணன் கூட்டத்தினர் அனைவரும் ஒன்றுகூடிக் கெடா வெட்டி விமர்சையாக இராவுத்த குமார சாமிக்குப் பொங்கல் வைக்கின்றனர். வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி, கார்த்திகை தீப பூசை மற்றும் மார்கழி மாதம் முழுவதும் என்று அட்டவணையின் படி பூசை நடத்துகின்றனர் காகம் கண்ணன் கூட்டத்தார். இன்று அருகில் வெவ்வேறு ஊர்களில் வசித்துவந்தாலும் தங்கள் முறை தவறாது வந்து வழிபடுவது மட்டுமின்றி, வீட்டில் எந்த ஒரு விசேஷமென்றாலும் இராவுத்தகுமாரசாமியிடம் வந்து கெடா வெட்டி ஆசி பெற்றுச் செல்கின்றனர்.

கோம்பை எஸ்.அன்வர்

(இந்து - தமிழ் இதழில் வெளியான கட்டுரையின் சுருங்கிய வடிவம்)

பொருளடக்கம்


முதற் பதிப்பின் முன்னுரை:
பேசப்படாத செய்திகளும் நிகழ்வுகளும்
தொ. பரமசிவன் 3

முதற் பதிப்பின் முன்னுரை:
கோட்பாட்டுரீதியான பிரச்சினைகள்
சுந்தர் காளி 4

நன்றியுரை 5

பின்னட்டைப் புகைப்படம் பற்றியொரு குறிப்பு 6

சமயம்: ஓர் உரையாடல் 11


"https://ta.wikisource.org/w/index.php?title=சமயம்_ஓர்_உரையாடல்&oldid=1795744" இலிருந்து மீள்விக்கப்பட்டது