சமுத்திரக் கதைகள்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
சமுத்திரக் கதைகள்
சு. சமுத்திரம்
ஏகலைவன் பதிப்பகம்
9. இரண்டாவது குறுக்குத் தெரு,
டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர்,
சென்னை - 600 041.
☎ : 4917594
நூல் : சமுத்திரக் கதைகள்
முதற் பதிப்பு : டிசம்பர், 2001
வடிவம் : “டெமி“
பக்கங்கள் : 185+15=200
விலை : ரூ.60/-
உரிமை : ஆசிரியருக்கு
வெளியீடு :
ஏகலைவன் பதிப்பகம்
9, இரண்டாவது குறுக்குத் தெரு,
டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர்,
சென்னை - 600 041.
ஒளி அச்சு :
ஏகலைவன், சென்னை - 41.
அச்சிட்டோர் :
மணிவாசகர் ஆப்செட் பிரிண்டர்ஸ்,
சென்னை-600 021,
தொலைபேசி : 5954528
பேராசிரியர் ச. ராஜநாயகம்
லொயோலா கல்லூரி, சென்னை.
01.
திருவாங்கூர் சமஸ்தானத்து முகவரியில்லாக் குக்கிராமக் குடிசைமண்டி ஒன்றில் தொடங்கி, முகவரி தேவையில்லாத நம் பக்கத்துத் தெரு வரை பதிமூன்று கதை - அலைகளை வீசும் இலக்கியப் படைப்பாக மலர்ந்துள்ளது சமுத்திரக் கதைகள் எனும் தொகுப்பு. இன்றில் நிலைகொண்டு, நேற்றில் அழுந்தி மீண்டு, நாளையை நோக்கிப் பாயக் காத்திருக்கும் அம்புகளாய்க் கதைகள். முதுகில் பாயாதவை - நெஞ்சில் பாய்கின்றன / பாய்ச்சுகின்றன - ஈரமும் வீரமும். எனவே இத்தொகுப்பை ஒரு க/வி/தை எனலாம் - கதை. கவிதை விதை. சில இடங்களில் கதை கவிதையாகிறது; சில இடங்களில் கவிதை கதையாகிறது. ஆனால் எல்லாக் கதைகளும் விளிம்புநிலைகளில் மையம் கொண்டுள்ள விதைகள்.
02.
முகம் தெரியாத மனுஷி ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றின் மீட்சிக்கான போராட்டத்தில் முகமிழந்த பெண் போராளிகளின் முகங்களை மீளுருவாக்கும் முயற்சி - ராசம்மா வடிவில். ராசம்மா ஒரு கலகக்காரரல்ல. தன்னுடைய உடம்பை முடிக்கொள்ளும் உரிமையுள்ள, மனுவழியாக வாழத் துடிக்கும், தன்மானமிக்க ஒரு சாதாரணப் பெண். ஆனால் அதுவே ஒரு ‘கலகத்துக்கான’ காரணமாக அமைந்திருந்தது. நவீனத் தமிழகத்தில் பெண்ணுரிமைக்கான முதல் குரல் ராசம்மாவைப் போன்ற முகம் தெரியாத ஒடுக்கப்பட்ட நம் அன்னையரின் குரல். அதுவும்கூட ஒரு கட்டத்தில் வெறும் கூக்குரலாய், அவலமாய், ஓலமாய் இருந்ததுதான். ஆனால் கூக்குரல் கூட்டுக்குரலாய் ஆகும்போது, சில-பல உடல்கள் விழ நேர்ந்தாலும் அவை வாழ்வின் வித்துக்களாய் எழும் என்ற வரலாற்று உண்மையை அழுத்தமாக முன்வைக்கிறது ராசம்மாவின் கதை.
ராசம்மா, பூமாரி போன்ற வீர மகளிர் வாழ்ந்த கிராமத்துப் பெயரில்லை. ஏனென்றால், அது திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்த “குடிசைமண்டி” மட்டுமல்ல, இன்றைக்குக்கூட தமிழகத்தின் விளிம்புகளில் அடையாளமற்றுக் கிடக்கும் எந்தக் கிராமமாகவும் அது இருக்கலாம்.
அடையாளமற்ற அனைத்துலக ஆண்சந்தைகளில் நடக்கும் அழகிப் போட்டிகளில் தங்களை அவி(ழ்)த்துக்கொள்ளும் இந்தத் தலைமுறையில் ராசம்மாக்களும் ஏராளமாக இருக்கிறார்கள். உதிரிகளாகச் சிதறிக் கிடக்கும் இவர்கள் ஒருங்கிணைந்து எழுப்பும் கூட்டுக்குரலில்தான் சந்தைகளின் கூச்சல்கள் கரையேறும் - முகமுள்ள மனுஷிகளாய் - மனிதர்களாய்.
⬤
பொருள்மிக்க பூஜ்யம் உருவகமாய்ப் பேசுகிறது. இது ஒரு காட்டு மாட்டுக் கன்று பூஜ்யமாய்ப் போவதைப் பற்றிய கதை. காட்டுநாய்களின் வெறியாட்டத்துக்குத் தன் தாய் பலியாவதைப் பார்க்கின்றது கன்று. அந்நாய்களைத் தற்போதைக்குத் தன்னால் எதிர்த்துத் தாக்க முடியாது என்பதைக் கன்று உணர்கிறது. அவற்றிடமிருந்து தப்பியோடுவதே ஒரே வழி. தப்பி வெகுதூரம் செல்ல முடியாதபடி, சுற்றி வளைத்திருக்கும் நாய்கள். அங்குச் சோர்ந்து கிடக்கும் புலிக்கு வலியச்சென்று தன்னை இரையாக்கிக் கொள்ள முடிவுசெய்கிறது. அந்தப் புலியின் கதையும், சோகமானதுதான். தன் குட்டியை அந்த நாய்களிடம் பறிகொடுத்த புலி அது. துக்கத்தின் அழுத்தத்தில் துவண்டு கிடந்த புலி, வலிய வந்து உணவான கன்றைத் தின்றபின் தெளிச்சி பெறுகிறது, எழுச்சி கொள்கிறது, சினந்து தாக்குகிறது. தன் குட்டியைச் சூறையாடிய நாய்களைப் பழிதீர்த்துக் கொள்கிறது. அதன் வழியாக அந்தக் காட்டு மாட்டுக் கன்றும் தன் இறப்புக்குப் பொருள்தேடிக் கொள்கிறது. இது கதை. சில மனிதர்களை, சில வர்க்கங்களின் பிரதிநிதிகளை உருவகப்படுத்தியுள்ள இக்கதை, பன்முக வாசிப்புக்கு வழிவகுக்கிறது. தாயான காட்டு மாடு, அதன் கன்று, எண்ணிக்கையில் பலவான காட்டு நாய்கள், தாயான புலி, அதன் குட்டி என ஐந்து கதை மாந்தர்களுடன் கதைசொல்பவரும், இரண்டு தலைமுறைகள். தாயை இழந்த கன்று, வாரிசான குட்டியை இழந்த புலி என இருவேறு இழப்புக்கள். தாயும் கன்றும் (இரண்டு தலைமுறைகள்) விழுங்கப்படுகின்றன. ஆனால் புலி தன்னை மீட்டுக்கொள்கிறது. இழப்புகளுக்குக் காரணமான நாய்கள் அழிக்கப்படுகின்றன. யாருடைய பார்வையில் கதையை வாசிப்பது? எந்த இருப்பியல் சூழலுடன் இக்கதை நிகழ்வுகளைப் பொருத்திப் பார்ப்பது?... கேள்விகள் மூலமாகத் தொடர் விவாதத்துக்கு வழிவகுக்கும் கதை. பன்முக வாசிப்புக்குரிய இத்தகைய படைப்புக்களால்தான் சிந்திக்கும் வாசகரை உருவாக்க முடியும்.
⬤
நீருபூத்த நெருப்பு மிகச் சாவகாசமாக நகர்ந்து, ஒரு பெரும் பாய்ச்சலுடன் முடிகிறது. முன்றாவது நபர் கண்களுக்கு எடுத்துக்காட்டான தம்பதியர். ஆண்டவன் - அகிலா,, மிகப் பொருத்தமான பெயர்கள். ஆள்வதால் ஆண்டவன்; (அவனுக்கு) அனைத்துமாகி, அனைத்தையும் தாங்குவதால் அகிலா. கணவன் தேவையறிந்து நடந்துகொள்ளும் மனைவி. மனைவியின் சேவையைப் புரிந்துகொள்ளும் கணவன். ஆனால் புறத்தோற்றம் அகத்தின் வெளிப்பாடாய் இருக்கவேண்டிய அவசியமில்லை.
“ஆண்டவன் சாருக்கு இருக்கிற ஜாதகம் மாதிரியே அவரோட பையனுக்கு இருக்கு அகிலாம்மாவுக்கு இருக்கிற ஜாதகம் மாதிரியே இந்தப் பெண்ணுக்கு இருக்கு... உங்க ரெண்டு பேரையும் போலவே, இவாள் ரெண்டு பேரும் பிரமாதமாய் வாழ்வாள். ஒங்களோட மறு பதிப்புத்தான் இவாள். உடனே முடிச்சிடுங்கோ,” என்கிறார் சாஸ்திரி. ஆனாலும் - ஆண்டவனை ‘நேருக்கு நேராய்ப்’ பார்த்து, ‘திட்டவட்டமாக, தீர்ப்பளிப்பதுபோல்’ அகிலா சொல்கிறார்: “இது பொருத்தமில்லாத ஜாதகம். விட்டுத் தள்ளுவோம்.” இந்த ஒற்றைவரி அணுகுண்டு அந்தத் தம்பதியரை நிரிவாணமாக்கி விடுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக ஆண்மையப் பண்பாடு போர்த்தியுள்ள அடுக்கடுக்கான (அழகழகான) தாம்பத்தியத் துகில்கள் ஒற்றை வரியில் இற்றுவிழுகின்றன - விரசமில்லாத விரசம். சமுத்திரத்தால் மட்டுமே இது சாத்தியம்.
⬤
நீருபூத்த நெருப்பின் மற்றொரு பரிமாணம் முதிர்கன்னி, கொஞ்சம் பிரச்சாரத் தொனி தூக்கலாக இருந்தாலும் அறிவியல்பூர்வான அணுகுறை. பொதுவாகவே, தன் படைப்புகளின் கருவோடு தொடர்புடைய அனைத்து அறிவியல் - உளவில் நுணுக்கங்களையும் அறிந்து கொண்டு படைக்கும் வழக்கம் உள்ளவர் சமுத்திரம் - அது எய்ட்ஸ் - ஆக இருக்கட்டும் அல்லது ஒரினக் கவர்ச்சியாகட்டும். இதனால்தான் ‘முதிர்கன்னி’ என அழைக்கப்படும் கீதா என்ற விஞ்ஞானியின் கதையை சமூகவியல் நோக்கிலும் (மகள்-தாய்க்காரி உறவு) ஃபிராய்டிய உளவாய்வியல் நோக்கிலும் (மகள்-அப்பாக்காரர் உறவு) அணுகத்தக்கதாகக் கட்டமைத்துள்ளார்.
⬤
முரண்பாடுகளையும் பலவீனங்களையும் கடந்த மனிதர்கள் இல்லை என்பதை மூலம் முன்வைக்கிறது. சாதாரண மனிதர்களின் இருண்ட பக்கங்களைவிட, வெளிச்சத்திலுள்ள உயர்ந்த மனிதர்களின் இருண்ட பக்கங்கள் மிக மோசமானவையாக உள்ளன. சிலர் இந்த இருண்ட பக்கங்களைக் கடந்து வருகிறார்கள். சிலர் தனக்குள்ளே புதைத்து மறைத்துக் கொள்கிறார்கள். இப்படிப் புதைந்த அழுக்குகள் அப்படியே மக்கிப் போகலாம், அல்லது ஆளுமையில் புரையோடியும் போகலாம். “டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ராமாமிர்தம் அம்மையார், அன்னை தெரசா ஆகியோரின் முப்பெரும் உருவமாகத் திகழும்” அம்மையாருக்கும், “அவரைப் பேசவிட்டு ரசிக்கும் பெண்ணியச் சிந்தனையாளரான” கணவருக்கும் பின்னால் ‘ஒடிப்போன’ கதை. சமூகசேவகர்கள் என்ற பிம்பம் கட்டுடைக்கப்படுகிறது. வாசகராகிய நமது கைகள் ‘திரும்பிப் பாராமல் நடக்கும்’ அந்தப் ‘பழைய முகக்காரி’யையும் ‘கோராதிகோரச்’ சிறுவனையும் தடுத்து நிறுத்த நீளுகின்றன.
⬤
பாமர மேதை என்ற கதையிலும் மூலம் போன்றதொரு கட்டுடைப்பு - கொஞ்சம் கிண்டலும் வேதனையும் கலந்ததாக ஒரு விஞ்ஞானியின் மனைவியின் ஏக்கம் தோய்ந்த கரிசனை, ஆராய்ச்சியில் தன் நிலை மறந்த விஞ்ஞானியின் நிபுணத்துவ மிக்க கையாலாகாத்தனம் (‘Potent’ impotency), மூத்தாரின் அதிகாரத்தோரணைக்குள் மறைந்து கிடக்கும் ‘டூப்ளிகேட்’ தன்மை என அறிவியலையும் குடும்பவியலையும் இணைத்து ஆடும் விளையாட்டாகக் கதை அமைந்துள்ளது.
⬤
சிலந்திவலை துணிச்சலாகத் தொடங்குகிறது. ‘இரத்தத்தால் ‘சிவப்பு’ அடிக்கப்பட்டது போன்ற காவல் நிலையம்’ அது. அதற்குள் நடக்கும் ‘போலீஸ் தர்மத்தை’ நிர்த்தாட்சண்யமாக விவரிக்கிறது கதை. “மாமுலும் தொடர்ந்து கொடுக்கனும், மாமா வேலையும் செய்யணும், மெமோவுக்கு மேல மெமோவும் வாங்கணும்...” இதுதான் சிலந்தி வலைக்குள் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர்களின் நிலை, பாவம், இப்படி ‘அசோகச் சக்கர அதிகாரி’களால் அலைக்கழிக்கப்படும் சப்-இன்ஸ்பெக்டர்களின் கோபம் இயல்பாகவே தம்மிடம் அகப்படும் அப்பாவிக் ‘குற்றவாளிகள்’ மீது திரும்புகிறது என்பதையும் நாசூக்காகக் கதை சொல்லி முடிக்கிறது.
⬤
அகலிகைக் கல் நகர்ப்புற ஆயா ஒருவரின் வாழ்க்கையில் நிகழும் ஒரு சாம்பிள் நிகழ்வு. அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் ஓரத்தில் ஓசியாய் வசித்துக்கொண்டு, அங்குள்ள அறுபது வீடுகளுக்குப் பால்வாங்கித் தந்து பிழைப்புநடத்துபவர். அவருக்கென்று ஒரு வாழ்க்கை இருந்தது. குடும்பம் இருந்தது. வீடும் இருந்தது. அத்தனையும் தொலைந்த நிலையில், தன்னைத் தொலைத்து விடாதவர் ஆயா. இதனால்தான், மனிதர்களின் மெல்லிய உணர்வுகளையும் அவரால் புரிந்துகொள்ள முடிகிறது. நேரங்கெட்ட நேரத்தில் கதவைத் தட்ட மனசு கேட்கமாட்டேன் என்கிறது. அகலிகைக் கற்களாய் நிற்கும் இந்த ஆயாக்களை அவர்களின் அனுதின வாழ்க்கைப் போராட்டமே மனிதர்களாக ஆக்குகிறது.
⬤
கடைசியர்கள் மையமாகும்போது, தனிப்பட்ட இழப்புக்களே ஒருவரை மனிதநேயமிக்க போராளியாக மாற்றும் என்பதை விரிவாகச் சொல்லும் கதை கடைசியர்கள். இளைஞரைப் புரிந்துகொள்ளும் மனப் பக்குவம் இருந்தால், தலைமுறை இடைவெளிகள் தோன்றுவதில்லை என்பதைத் ‘சித்தப்பா’ மூலமாகத் தெளிவுபடுத்துகிறது இந்தக் கதை. சுயநலமில்லாத் தலைவர்களுக்கும் நல்ல வழிகாட்டிகளுக்கும் தமிழக அரசியல்-பண்பாட்டுக் களத்தில் பெரும் வெற்றிடமுள்ள இக்காலக்கட்டத்தில் தேவை. சித்தப்பாக்கள் (மாமாக்கள் அல்ல).
⬤
சரியான ‘சித்தப்பாக்கள்’ இல்லாதபோது ஒரு சமுதாயத்தில் என்ன நடக்கும் என்பதைச் சித்திரிக்கிறது கலவரப்போதை. சாதி-மதம்-வர்க்கம் எனப் பல்வேறு பிரிவினைகளால் கூறுபட்டுக் கிடக்கும் நமது சமுதாயம் மனப்பிறழ்வுக்கும் மனச்சிதைவுக்கும் ஆளாகியுள்ளது என்பதன் குறியீடாகப் பன்னிர் என்ற மனநோயாளி காட்டப்படுகிறார். “மின்சாரக் குப்பியால சூடுபோடும்” அதிர்ச்சி வைத்தியம் ஒருவேளை பன்னிரைக் குணமாக்கலாம். தன்னைக் கட்டிப்பிடித்த “அம்மாவின் தோளில் முகம் போட்டு அவர் உடல் வழியாய் தரையில் சரிந்தும்” அவர் குணமாகலாம். பன்னீர் கிடக்கட்டும். நாமெல்லாருமே ஒருவிதத்தில் மனநோயாளிகளாக ஆக்கப்படுகிறோம் என்பதையும் சொல்லாமல் சொல்கிறார் கதாசிரியர். இன்று கலவரங்கள் திட்டமிட்டு FÚRfû NVÔL LrjRlTÓ ¡u \]. BVpx (spontaneity) என்பது அரங்கேற்றப்படும் ஒரு thriller.
⬤
“எந்தக் குடியிலும் பெண் என்கிறவள் கீழ் குடிதான்” என்ற மையக்கருத்தை வலியுறுத்தும் கதை பெண்குடி. இது முகம் தெரியாத மனுஷியின் மற்றொரு வரலாற்று முகம் ஒரு பெண் அடிமை அல்லது தெய்வம் ஆகலாமேயன்றி, ஒருபோதும் சகமனிதராக ஆண்களால் கருதப்படுவதில்லை. ஒரு அடிமை தொட்ட மாத்திரத்தின் எஜமானியான ஒரு பெண்கூட அடிமையாகிவிடுகிறார் பெண்களைப் பொருத்தமட்டில் சாதிச் சுவர்கள் எவ்வளவு சன்னமானவையாக உள்ளன:
பாருக்குட்டிகளும் இசக்கிமாடத்திகளும் ‘அல்லாடி, தள்ளாடி’ நடந்துகொண்டிருக்கிறார்கள். ஒப்பாரிகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. என்றாலும் - முகம் தெரியாத மனுஷியை வாசிக்கவும்.
⬤
‘மக்கள் பத்திரிகையில் வந்த கிண்டி ரேஸ் பற்றிய செய்தி ஏழை மாடசாமிக்கு வண்ணக் கனவுகளை உருவாக்க, குதிரையாட்டத்தில் ஈடுபட்ட அவர் தனது குடும்பத்தையும் எதிர்காலத்தையும் தொலைத்துவிட்டதாக மாடசாமியின் ஊர்வலம் சொல்கிறது. 1976-இல் தொடங்கிய மாடசாமிகளின் ஊர்வலம் இன்றைக்கும் தொடர்கிறது, வெவ்வேறு வடிவங்களில் மக்கள் பத்திரிக்கைகளுக்குப் பதிலாக மக்கள் தொலைக்காட்சிகள்; பிரபல பத்திரிக்கைகளைவிட, சில இலக்கியப் பிதாமகர்களின் சிறு (இலக்கிய) பத்திரிக்கைகள்; அரசு நடத்தும் லாட்டரி திட்டங்கள்; சினிமாக் கனவுகள்; உலகவங்கிக் கடன்கள்...
⬤
சற்று எக்குத்தப்பான உரையாடல்கள் விரவிய மனிதநேயக் கதை முதுகில் பாயாத அம்புகள். சீனியம்மாவும் சக்கரையம்மாவும் பப்பாளிக் கொப்பை முன்னிட்டுச் சண்டையில் இறங்குகிறார்கள். இவர்களுக்கிடையில் ராசகுமாரி - புதிதாக வந்த சீனியம்மாவின் மருமகள். ராசகுமாரி திருமணத்துக்கு முன்பே கருச்சிதைவு செய்துகொண்ட விஷயம் எதிராளி சக்கரையம்மாவுக்குத் தெரியும், சீனியம்மாவுக்குத் தெரியாது. சண்டை உச்சத்தை நெருங்குகிறது. ராசகுமாரிக்குத் தன் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயம் “நாங்கல்லாம் பட்டுப்போன வாழைய வெட்டுவோம்; குலைபோட்டு முடிஞ்ச வாழைமரத்தை சாய்ப்போம்... ஆனால். துளிர்த்துவார வாழக்குருத்த வெட்டமாட்டோம்...” என்ற சக்கரையம்மாவின் பன்மைப் பேச்சோடு சண்டை முடிந்துவிடுகிறது. சமுத்திரக் கதைகள் தொகுப்பும்தான்.
03.
சமுத்திரத்தின் பல முகங்கள் இந்தத் தொகுப்பில் வெளிப்படுகின்றன - அமைதி விரும்பும் கோபக்காரர், பெண்ணியவாதத்தை முன்வைக்கும் ஆண், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டங்களை அனுபவபூர்வமாக அலசும் சமூக அறிவியல் விஞ்ஞானி, புதிய தலைமுறையின் குறைநிறைகளைப் புரிந்துகொண்டுள்ள உளவியல் அறிஞர், கல்மிஷமில்லா மனசுக்காரர், கிண்டல்காரரும்கூட - இப்படிப் பன்முகங்கள் இருப்பதாலேயே இவரின் கதைகளும் பன்முக வாசிப்புக்கும் விவாதத்துக்கும் இடமளிக்கின்றன.
⬤
இவரிடம் வார்த்தை ஜாலமில்லை, விரயமுமில்லை, வார்த்தைகள் ஆற்றொழுக்குப்போல் மனித மாண்பு என்னும் ஒற்றைத் திசைநோக்கிப் பயணிக்கின்றன. இவர் மனிதத்தை நேசிக்கும் எழுத்தாளர். உணர்ச்சிப்பூர்வமாய் இதயத்தில் சிந்திக்கும் எழுத்தாளர். வாழ்க்கையின் மேல் அபரிமிதமான பற்றுக் கொண்டுள்ள நம்பிக்கை எழுத்தாளர். இலக்கிய விசாரப் போதையில் மிதக்காமல், ஒடுக்கப்பட்ட மக்கள் இயக்கங்களோடு தன்னை இணைத்துக் கொண்டுள்ள செயல்படும் எழுத்தாளர்.
04.
சமுத்திரத்திற்கு எந்த முன்னுரையும் அணிந்துரையும் தேவையில்லை. இந்த உரையும் சேர்த்து. ஆனால் சமுத்திரக் கதைகளுக்கு முன்னுரை எழுத அவர் என்னைத் தேர்ந்தெடுத்தது எனக்குக் கிடைத்த பெருமை.
05.
சமுத்திரம் வற்றாது. கொஞ்சம் ஏற்றம் இறக்கம் இருக்கலாம் என்றாலும். எனவே அடுத்தடுத்த தொகுப்புகள் வரவேண்டும் வரும்.
என்னுரை
இந்தத் தொகுப்பு தவிர்த்து, இதுவரை வெளியான எனது சிறுகதைத் தொகுப்புகள் அனைத்தும், எனக்கு முழுமையான மனநிறைவைக் கொடுத்ததில்லை. பத்திரிகைகள் ‘எடிட்’ செய்து வெளியிட்ட கதைகளையே தொகுப்புகளாக கொண்டு வந்தேன். இந்த கதைகளுக்கு மூலங்களை கைவசம் வைத்திருக்காததால் ஏற்பட்ட கோளாரே காரணம். ஆனால், இந்தத் தொகுப்பில் உள்ள அத்தனை கதைகளும் கணிப்பொறியில் தக்க வைக்கப்பட்டவை.
எனவே, இந்தத் தொகுப்பில் நான் முழுமையான எழுதிய கதைகளை அப்படியே கொண்டு வந்திருக்கிறேன். இதுவே, இந்தத் தொகுப்பின் பலம், பலவீனமும். ஒரு சில கதைகள், பத்திரிகைகளில் கத்தரித்து வந்ததைவிட, சிறப்புக் குறைவாய் உள்ளதாக எனக்குப் படுகிறது. ஆனாலும், முன்னைய தொகுப்புகளைப் போல் அல்லாமல் பெரும்பாலான கதைகள், எலும்பு கூடாக காட்சி காட்டாமல், ரத்தமும், சதையுமான உள்ளடக்கத்தோடு, எலும்பு, தோல் போர்த்த உருவமாகவும் தோன்றுகின்றன என்று நினைக்கிறேன்.
இந்தத் தொகுப்பில், இன்னொரு முக்கிய சிறப்பு அல்லது அந்த சொல்லுக்கு மாறானது, இவை அத்தனையும் கடந்த இரண்டாண்டு காலத்தில் எழுதப்பட்டவை. எழுத்தைப் பொறுத்த அளவில், என் நோக்கும், போக்கும், அன்று முதல் இன்றுவரை அப்படியேதான் உள்ளது. ஆனாலும், கதை சொல்லித்தனமும், மொழி நடையும், காலத்திற்கேற்ப, என்னை அறியாமலே மாறியிருப்பதாகவே கருதுகிறேன். இதற்கு, இந்தத் தொகுப்பு ஒரு எடுத்துக்காட்டு.
முகம் தெரிய மனுசியும், பெண் குடியும், அந்தக் காலத்து திருவாங்கூர் சமஸ்தானத்தின் சாமானியர் வரலாற்றை கண்டுபிடித்து எழுதப்பட்ட மெய்யான கதைகள். இத்தகைய கதைகளை எழுதுவதற்கு தமிழாலய நிறுவனர் பச்சையம்மால் அவர்களே, முழுமுதற் காரணம். இதரக் கதைகளில் பெரும்பாலானவை நான் கண்டதும், கேட்டதுமான நிகழ்வுகள் அல்லது அமங்கலங்கள். இவற்றை நடந்தது நடந்தபடி இயல்பாக எழுதாமல், அதற்கு யதார்த்த முத்திரை மட்டுமே நான் கொடுத்திருக்கிறேன். மற்றபடி, இந்த கதைகளின் உரிமையாளர்கள் இன்றைய நமது மக்களே.
இந்தத் தொகுப்பிற்கு விரிவான முன்னுரை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், பேராசிரியர். ராஜநாயகம் அவர்களின் முன்னுரையைப் படித்த பிறகு, என்னுரைகூட தேவையற்றதாகவே எனக்குப் படுகிறது. பேராசிரியர் ராஜநாயகம் நவீனத்துவ எழுத்தாளர். எளிமையும், இனிமையும் - அதே சமயத்தில் ஆழமும் ஒருங்கே பெற்ற படைப்பாளி. இவருடைய சிறுகதைத் தொகுப்புப்பான கடைசிப் பொய், புதினங்களான சில முடிவுகளும் சில தொடக்கங்களும், சாமிக்கண்ணு எனச் சில மனிதரின் கதைகள், நவீன தமிழ் இலககியத்திற்கு அணி சேர்ப்பவை. பிற படைப்பாளிகளால், நவீனத்துவம் எதிர்மறையில் செலுத்தப்படும்போது, அதை இழுத்துப்பிடித்து நெறிப்படுத்துபவை.
சமூகப்போராளியான பேராசிரியர் எழுதிய இந்த முன்னுரையின் வாசிப்பு, என்னை ஆங்கில இலக்கிய அறிஞர் பாஸ்வெல்லை நினைவுப்படுத்துகிறது.
ஆங்கில இலக்கிய மேதை டாக்டர். ஜான்சனை, பாஸ்வெல்லின் தயாரிப்பு என்று கூறுவார்கள். டாக்டர். ஜான்சனின் வரலாற்றை எழுதியவர் பாஸ்வெல். ‘சரக்கு முடுக்கு’ அதிகமாக இல்லாத டாக்டர் ஜான்சனுக்கு ‘செட்டியார்’ முடுக்கை கொடுத்தவர் பாஸ்வெல் என்பார்கள். இது உண்மையோ, பொய்யோ, என்வரைக்கும் இது நிகழ்ந்திருக்கிறது. பேராசிரியர். ராஜநாயகம் இந்தத் தொகுப்பை கட்டிக்காட்டியவிதம், என்னை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கதாயாசிரியரான என்னை, உரையாசிரியரான அவர், நான் என்னை கண்டுபிடித்ததைவிட, அதிகமாக கண்டுபிடித்திருக்கிறார். இது பிற இலக்கிய முன்னுரைகளிலும் நிகழ்ந்துள்ளன. என்றாலும், என்தொகுப்பு இந்த கருப்பொருளுக்கு, உரிப்பொருளாகி இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இப்போது முக்கியமான ஒரு ஆய்வில் ஈடுப்பட்டிருக்கும் பேராசிரியர் ராஜநாயகம் அவர்கள், இந்தத் தொகுப்பிற்கு நாட்களை ஒதுக்கி ஒவ்வொரு கதைக்கும் ஒரு திருக்குறளைபோல் தெளிவுரை எழுதி இருப்பது எனக்குக் கிடைத்த இலக்கியக் கெளரவம்.
வழக்கம்போல், இந்த நூலை அச்சடித்துக் கொடுக்கும் பொறுப்பை மேற்கொண்ட மணிவாசக நூலகத்திற்கு நன்றியுடையேன். எனது சிறுகதைகளை இன்முகத்தோடு வெளியிட்ட ஆனந்த விகடன் ஆசிரியர், பாலசுப்ரமணியன் அவர்களுக்கும், பொறுப்பாசிரியர் வி.யெஸ்.வீ. அவர்களுக்கும், ஓம் சக்தி பொறுப்பாசிரியர் கவிஞர் பெ. சிதம்பரநாதன் அவர்களுக்கும் மற்றும் பல முகமரியா உதவி ஆசிரியத் தோழர்களுக்கும், இந்தத் தொகுப்பிற்கு ஒலியச்சு தந்த என் உதவியாளர் விஜயகுமார் அவர்களுக்கும் நன்றி மறக்காத நன்றி. இந்தப் பட்டியலில் குமுதம், புதிய பார்வை, தாமரை ஆகிய பத்திரிகைகளையும் இணைத்துக் கொள்கிறேன்.
– சு. சமுத்திரம்
| 1 |
| 19 |
| 29 |
| 40 |
| 57 |
| 67 |
| 81 |
| 94 |
| 109 |
| 126 |
| 139 |
| 158 |
| 173 |
