உள்ளடக்கத்துக்குச் செல்

சமுத்திரம் கட்டுரைகள்/011

விக்கிமூலம் இலிருந்து

போராளிக் கவிஞர்
சாலய்யார் சிறிது விட்டுக்
கொடுத்திருந்தால், அவரது
தகுதிக்குரிய பல்கலைக் கழகத்
தலைவர் பதவி உள்ளிட்ட பல
பொறுப்புகள் அவருக்கு
வந்திருக்கும். ஆனாலும், மெய்ப்பொருள்
என்பது பதவியைவிட மேலானது
என்று திட்டவட்டமாகக்
கருதியவர்; கடைபிடித்தவர்.
எந்தப் பதவியும் மனிதப் பதவிக்கு
மேலானது அல்ல என்று உறுதிபட
நம்பியவர். வாய்ப்புகளை புறந்
தள்ளிய ஒரு போராளித் துறவி
சாலய்யார்.

போராளித் துறவி
சாலய்யார்...

பேராசிரியர் சாலய்.
இளந்திரையனார் அவர்களைக்
குறித்து, இந்தக் கட்டுரையை
எழுதும் இந்தத் தருணத்தில், நான்
நெகிழ்ந்தும், குழைந்தும் போகிறேன்.
அவரோடு சம்பந்தப்பட்ட எனது
உறவாடல் நிகழ்ச்சிகளை நினைத்துப்
பார்க்கிறேன். பொதுவாக கடந்தகால
நிகழ்ச்சிகள் மனதில் மங்கலான
சுவடுகளாகவே தெரியும். ஆனால்,
சாலய்யாரைப் பற்றிய எனது
நினைவுகள் முன்னைய
நிகழ்ச்சிகளைவிட வலுவான
நிகழ்ச்சிகளாக, மனதில் மறு
காட்சிகளாய்த் தோன்றுகின்றன.

1966ஆம் ஆண்டு ஏப்ரல்
மாதம்.... நான் புதுதில்லியில்
வானொலி அமைப்பின் செய்திப்
பிரிவில் உதவி ஆசிரியராக
பொறுப்பேற்ற வேளை. என்
பணியிடத்தில் எனக்குப் பெரிய
அதிர்ச்சியே காத்திருந்தது. அங்கு
பணியாற்றிய மேட்டுக்குடி
தமிழர்கள் என்னைப் பகைப்
பார்வையாகவே பார்த்தார்கள். என்
மொழி பெயர்ப்பை சிதைத்து, என்
மனதைச் சிதைக்க முயற்சித்தார்கள்.
பிறமொழி மேலதிகாரிகளுக்குப்

‘போட்டு’க் கொடுத்தார்கள். அவர்களுக்கு, நான் ஒரு தீண்டத்தகாதவனாகவே தென்பட்டேன். என் நிறமும், பேச்சும், பதவியும் அவர்களின் காலங்காலமான பதவிப் பட்டாவிற்கு வில்லங்கமாக தோன்றியது. நான் வாழ்ந்த கரோல் பாக்கிலும் இதே நிலைமைதான். அப்போதுதான், வடமொழித் தமிழர்கள் பெரும்பான்மையாய் இருக்கும் இடத்தில்தான், அவர்களது சுய ரூபத்தை அடையாளம் காணமுடியும் என்று தந்தைப் பெரியார் தெரிவித்த கருத்தின் முழுத் தாக்கமும் எனக்குப் புரிந்தது.

இந்தச் சமயத்தில்தான் சாலய்யார் அவர்கள் எனக்கு அறிமுகமானார். அதுவும் வேறுபட்ட சூழலில் அறிமுகமானார். அங்குள்ள ஒரு சாதியினர், ஒரு சாதி அமைப்பை உருவாக்கி, சாலய்யாரை அதில் சேரச்சொன்னார்கள். அவர், அவர்களை “திட்டி”யதோடு, திட்டவட்டமாக மறுத்துவிட்டார். ஆனால் நான், இந்த முயற்சியை, புதுதில்லிக்கு வந்திருக்கும் ‘காலா மதராசி’களில் ஒரு பிரிவினரின் எழுச்சி என்று அனுமானித்து, பட்டும் படாமலும் கலந்து கொண்டேன். சொந்தச் சாதியைச் சேர்ந்தவர்களை, கைத்தடிகளாக பல இலக்கியவாதிகள்கூட பயன்படுத்திக்கொள்ளும்போது, பேராசிரியர் அதற்கு மறுத்தது, நாளடைவில் என்னை ஒரு சாதிய மறுப்பாளனாக பரிணமிக்க வைத்தது.

இரண்டு வகை உறவாடல்

எவருக்கும் இரண்டு வகையான உறவாடல் உண்டு. ஒன்று சொந்த உறவாடல். இன்னொன்று சமூகச் சிந்தனை வெளிப்பாடுகளில் ஏற்படும் சமூக உறவாடல். இத்தகைய இரண்டு உறவாடல்களும், ஒன்றுக்கொன்று, சம்பந்தமில்லாமல் இருக்கலாம். இப்படித்தான் எல்லோரையும்போல் எனக்கும் இந்த இரண்டு வகை உறவாடல் உள்ளன. ஆனால், சாலய்யாரிடமும், அவரது துணைவியாருடனும், நான் கொண்ட உறவு, இந்த இரண்டு வகைகளையும் கொண்டது. என்னை சொந்த சகோதரனாகவே இருவரும் கருதினார்கள். அதே சமயம், தமிழ்ச் சமூகத்தின் புதிய முளைகளில் ஒன்றாகவும் அனுமானித்தார்கள். தில்லித் தமிழ்ச் சங்கத்திலும், பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளிலும், என்னைப் பங்கெடுக்க வைத்தார். இந்த மகத்தான குடும்பத்திடம், நான் ஒரு மாணவனைப்போல சமூக நிகழ்வுகளுக்கான காரணங்களை கண்டுபிடித்திருக்கிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசு ஊழியர்களும் தத்தம் அரசாங்கக் குடியிருப்புகளை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பதற்காக, அதே குடியிருப்பில், ஒற்றை அறையில் தங்களைத் தாங்களே சிறைவைக்கும் சூழலில், சாலய்யார் விசாலமான வீட்டில் குடியிருந்தார். இப்படி குடியிருப்புகளை வாடகைக்கு விட்ட எம்.பி.க்களை கண்டித்தும் கட்டுரை எழுதினார். அண்ணா உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும், டில்லிக்கு வந்தால் அவரைப் பார்க்காமல் சென்றதில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் அவரது மாணவர்கள். இப்படி, சமூகத் தலைமை கொண்ட பலருடன் பேசுவதற்கே நேரமில்லாமல் இருந்த சாலய்யார், என்னையும் அவர்களுக்கு இணையாகவே நடத்துவார். என்னை மட்டுமல்ல, டில்லி மாநகரில் படிக்காத பாமரத் தமிழர்களிடமும்கூட, படிப்பாளிகளிடம் எப்படி நடந்து கொள்வாரோ, அப்படியே நடந்து கொள்வார்.

தொழில் ரகசியம்

நானும், ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில், அவரது வீட்டிற்குச் செல்வேன். அரிசியில்லாச் சாப்பாடு அதிகாரப் பூர்வமாக செயல்பட்ட சமயத்தில், சாலய்யார் வீடு எனக்கு ஒரு பசியாற்றும் தளமாக விளங்கியது. சாலய்யாருடனும், அவரது துணைவியார் சாலினியுடனும், நான் பணியில் படுத்தப்படும் பாட்டை, அழாக்குறையாகத் தெரிவித்ததுண்டு. அப்போது, சாலினி அவர்கள், ஒரு தாய்மைப் பார்வை வீசுவார். சாலய்யார் ஒரு கோபப் பார்வை வீசுவார். எனது இன்னல்கள் தொடர்வதைக் கண்ட அவர், ஒரு நாள், ஒரு தொழில் ரகசியத்தையும் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தில், விளம்பரக் கண்காட்சித் துறையில், சிறிதுகாலம் தாம் பணியாற்றியதைச் சுட்டிக்காட்டி, அங்கே, இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் தான் கொடுத்தப் பதிலடியை எனக்கு விலாவாரியாக விளக்கினார். இதனை நானும் பயன்படுத்தத் துவங்கியதில் இருந்து, எனது இன்னல்கள் ஒரேயடியாகப் போயின. என்னுள் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை போயிற்று.

தில்லிப் பெருநகரில், இப்போது எப்படியோ, அப்போது அதாவது முப்பது, முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, சிவப்புத் தமிழர்களும், கறுப்புத் தமிழர்களும், எண்ணெயும் நீறுமாகவே இருந்தார்கள். மண்வாசனைத் தமிழர்கள், தந்தைப் பெரியாரின் தீவிரப் பணியாலும், பெருந்தலைவர் காமராசரின் அரசுத் தலைமையாலும், அப்போதுதான் சிறிது சிறிதாக, தில்லியில் காலூன்றிய காலம். இவர்கள் அத்தனைப் பேருக்கும். சாலய்யார் அவர்களே தலைவராகவும், முன்மாதிரியாகவும் விளங்கினார். இதை, மனதில் கொண்டோ என்னவோ, சிவப்புத் தமிழர்களைக் கொண்ட தில்லித் தமிழ்ச்சங்கம், நமது பேராசிரியரின் தலைமையை ஏற்றுக்கொண்டது. இவரது பங்களிப்பு இல்லாமல், அந்தக் காலத்தில் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகள் எதுவுமே நடந்ததில்லை. சாலய்யாரின் தாக்கத்தால், இத்தகைய மேட்டுக்குடி தமிழர்களும், தங்களைத் தாங்களே, மறுபரிசீலனை செய்து மண்வாசனைக்கு உரியவர்களாய் மாறினார்கள் என்பதையும் பதிவு செய்தாக வேண்டும்.

தமிழ்ச்சங்கத் தலைமை

நானும், தில்லித் தமிழ்ச்சங்கத்தில், சாலய்யார் தலைமையில், கவியரங்கம், பேச்சரங்கம் போன்றவற்றில் பங்கெடுத்திருக்கிறேன். ஒரு நிகழ்ச்சி இன்னும் நன்றாகவே நினைவுக்கு வருகிறது. அந்தச் சங்கத்தின் மலரை (சுடர்), உருவாக்கும் பொறுப்பு சாலய்யாரிடம் வழக்கம்போல் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பேராசிரியரும், தமிழ்ச்சங்க துணைத்தலைவரும், தமிழறிஞருமான விஸ்வநாதன், அவர்களின் உதவியோடு, இந்த மலர்களை செம்மையாகத் தயாரிப்பதுண்டு. இவற்றில் ஒன்றில், “நான் ஒரு மூடன்” என்று நான் எழுதிய கவிதை பிரசுரமானது. சராசாரியான ஒருவருக்கு, வானொலிப் பெட்டியின் உள் நுணுக்கங்களோ, அல்லது ஒலிபரப்பின் விஞ்ஞான முறைமைகளோ தெரியாதுபோனாலும், அந்த வானொலிப்பெட்டியில் எதைஎதை எப்படித் திருகினால், இசையோ அல்லது சொற்பொழிவோ கேட்கும் என்பதைத் தெரிந்து வைத்திருப்பார். இதுபோல் ‘எனக்கு முருகனுக்கு வேல் இருப்பதாகவோ, மயில் இருப்பதாகவோ, முருகன் என்ற ஒன்று இருப்பதாகவோ தெரியாது. ஆனாலும், முருகக் கோயிலுக்கு நான் போனால் எனக்கு நினைத்தது நடக்கிறது, வேண்டுமானால் என்னை மூடன் என்று சொல்லுங்கள், கவலையில்லை’ என்ற பொருளில் அந்தக் கவிதையை எழுதி இருந்தேன். இதைப் பற்றிக் கருத்துச் சொல்லும்படி, சாலய்யாரை வம்புக்கும் இழுத்தேன் உடனே அவர், “நீங்கள் மூடனாகவே இருப்பதாகத் தீர்மானித்தால், நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார். என் முகம் சுருங்கியதைப் பார்த்த, மிகச்சிறந்த மனிதநேயரான அவர், “உங்கள் கவிதை எனக்கு ஏற்புடையது இல்லையென்றாலும், அது நல்ல கவிதை” என்பதுமாதிரி பாராட்டினார்.

வால்டேர் வழியில்....

சாலய்யாரிடம், எனக்கு பல கருத்து வேறுபாடுகள் உண்டு. இது எப்போதுமே மோதல்கள் ஆனதில்லை. அந்தக்காலத்தில், அவரது வீட்டில், உணவருந்திக்கொண்டே அவரது கருத்துகள் சிலவற்றை மறுப்பேன். சாலினி அவர்கள், தனது துணைவரோடு சேர்ந்து எனது கருத்துகளுக்கு எதிராக வாதாடுவார். பலசமயம், சாலய்யாரின் அணுகுமுறைக்கு என்னை உட்படுத்திக் கொள்வேன். சில சமயம், முற்றிலும் மாறுபடுவேன். இந்த இரண்டு சமயங்களிலும், சாலய்யார் மகிழ்ச்சியும் அடையமாட்டார். வருத்தமும் கொள்ள மாட்டார். பிறருக்கு உள்ள மறுப்புரிமையை வால்டேரைப்போல, முழுமையாக அங்கீகரித்தவர். ஆரம்பகாலத்தில் அவருடன், நான் மேற்கொண்ட கருத்துப் பகிர்வு, என்னை ஒரு சமூகப் போராளி எழுத்தாளனாக உருவாக்குவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். நான் ஆரம்ப காலத்தில் எழுதிய, ‘வளர்ப்பு மகள்’ என்ற நாவல், நடுவண் அரசின் மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாவது வகுப்பிற்கு பாடநூலாக வைக்கப்பட்டதற்கு, சாலய்யாரே காரணம்.

பலாப்பழம் போல்வார்....

சாலய்யார் அவர்கள், ஒரு பலாப்பழம் மாதிரி. அவரது அடலேறான தோற்றமும், பேச்சும் ஆரம்பத்தில், முன்பின் அறியாதவர்களுக்கு ஒரு அச்சத்தைக் கொடுக்கும். ஒரே ஒரு நிமிடம் தான். அதற்குள் அந்த பலாப்பழமே தானே உடைந்து, தனது சுளைகளைக் காட்டும். ஒருபக்கம் போராளியாக இருந்த அவர், மறுபக்கம் எல்லாப் போராளிகளையும்போல ஒரு சேயாகவும், தோன்றினார். இத்தகையப் பலாப்பழத்தை கண்டறிந்து, உண்டறிய முடியாத - தமிழகத்தில் வாழும், சாதிகெட்ட தமிழனை, செம்மைப்படுத்த பல்வேறு திட்டங்களோடு சென்னைக்கு வந்தார். இதற்காகவே வசதியாக வாங்கிய சம்பளத்தையும் உதறிவிட்டு ஓடிவந்தார். ஆனால், இந்தத் தமிழன் அவரை கண்டுகொள்ள வேண்டிய அளவிற்கு கண்டுகொள்ளவில்லை. இது அவரது தோல்வி அல்ல. சினிமாத்தனங்களிலும், காலடிக் கலாச்சாரத்திலும் சிக்கிக் கிடக்கும் தமிழனின் தலைவிதி இது. இவன், சாலய்யார் போன்றோரின் தலைமைக்கு தகுதி இல்லாதவனாகவே இருந்து வருகிறான்.

வித்தும்—விளைச்சலும்...

எனது நிழல் முகங்கள் என்ற நாவலில் ஒரு காட்சி. இந்திய ஆட்சிப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளங்கோ என்ற கருப்புத் தமிழ் இளைஞன், தமிழகத்தின் அவல நிலைக்கு தமிழ்ப் பழைமை மீட்பு வாதத்தில் மனம் செலுத்தும் தமிழாசிரியர்களும் ஒரு காரணம் என்று ஒரு ரயில் பயணத்தில் விமர்சித்தபோது, அதற்குப் பதிலாக பேராசிரியர் சோமய்யா என்ற பாத்திரம் இப்படிப் பேசும்:

“முற்போக்குத் தமிழனுக்கும், கெட்டதுகளில் நல்லது இருப்பதைக் கண்டுபிடிக்க இப்போதைக்கு முடியவில்லை என்பதற்கு நீயும் ஒரு உதாரணம். இப்போதைய தமிழறிஞர்களிலே உன்னைவிட வேகமாக சிந்திப்பவர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள்.... உதாரணத்துக்கு காலஞ்சென்ற இலங்கைத் தமிழறிஞர் கைலாசபதி.... நெல்லைத் தமிழறிஞர் வானமாமலை..... இன்னும் நம்மிடையே வாழும் பேராசிரியர்கள் சிவத்தம்பி.... சாலய் இளந்திரையன்... முகவை ராசமாணிக்கம்.....”

அந்த நாவலில் தமிழாசிரியரான சோமய்யா, தனது துணைவியாருடன் தில்லிப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றுபவர். கோடை விடுமுறைகளில் தமிழகம் முழுவதும், பகுத்தறிவு அடிப்படையில் இலக்கியச் சொற்பொழிவுகளை நிகழ்த்துபவர். இந்த சோமய்யா பாத்திரத்தையும், சாலய்யாரையும், சாலினியையும் மனதில் வைத்தே எழுதினேன்.

சமூகக் காரணங்களுக்காக சாலய்யார் அவர்களோடு நான் தொடர்பற்றிருந்த காலக்கட்டத்தில், எழுதப்பட்ட நாவல் இது. அப்படி எழுதியதாக நான் அவரிடம் தெரிவிக்கவும் இல்லை. ஆனாலும் அந்த நாவல் அவரது பார்வைக்குச் சென்றுள்ளது. ஒரு நிகழ்ச்சியில் சாலய்யாரை சந்திக்கும்போது, இந்த நாவலில் அவரை நான் குறிப்பிட்டதற்காக சிறிது நெகிழ்ந்து போனார். இப்படிச் சொல்வதால், நான் அவருக்கு ஏதோ சலுகை வழங்கியதாகக் கூறவில்லை. இன்றையக் காலக்கட்டத்தில் மண்வாசனைப் படைப்பாளிகளுக்கும், தமிழாசிரியர்களுக்கும் பொதுவாக தொடர்போ, அல்லது இலக்கியப் பரிமாற்றமோ அதிகமாக இல்லை. ஆனால் சாலய்யார் பழமை இலக்கியத்தையும், நவீன இலக்கியத்தையும் நன்கு அறிந்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக தமிழாசிரியர்கள் இடையே சுயமரியாதையைக் கொடுத்த ஒருசில பேராசிரியர்களில் ஒருவர், சாலய்யார். அவரது முன்மாதிரி நோக்காலும், போக்காலும், தமிழாசிரியர்கள் புதுமைச் சிந்தனையாளர்களாகவும், சமூகப் போராளிகளாகவும் விளங்குகிறார்கள். சாலய்யார் போன்றவர்கள் நட்ட வித்துக்களே இப்படிப்பட்ட விளைச்சலாகப் பெருகியுள்ளது.

புகழ் மறுத்த துறவிப் போராளி

சாலய்யார் சிறிது விட்டுக்கொடுத்திருந்தால், அவரது தகுதிக்குரிய பல்கலைக் கழகத் தலைவர் பதவி உள்ளிட்ட பல பொறுப்புகள் அவருக்கு வந்திருக்கும். ஆனாலும் மெய்ப்பொருள் என்பது, பதவியைவிட மேலானது என்று திட்டவட்டமாகக் கருதியவர், கடைபிடித்தவர். எந்தப் பதவியும், மனிதப்பதவிக்கு மேலானதல்ல என்று உறுதியுடன் நம்பியவர். ஆகையால் அருகில் தோன்றிய பொறுப்புக்கான வாய்ப்புக்களை, தொலைவாய்ப்..... புறந்தள்ளிவிட்டு, ஒரு போராளித் துறவியாகச் செயல்பட்டவர்.

என்றாலும், சாலம்யார் அவர்கள் மரணத்திற்குப் பிறகு, மறுபிறவியாய் விசுவரூபம் எடுத்திருக்கிறார். இவரது மரணம் நம்முள் மரணமுற்ற சுயமரியாதை, தன்னல மறுப்பு, தமிழ் நேயம் போன்ற நெறிகளை மரித்தெழச் செய்திருக்கிறது. இப்போதாவது, பல்வேறு அமைப்புகள் சாலய்யாரின் மரணம், தமிழ் நெறிகளின் மரணமாகும் சூழலைப் புரிந்து கொண்டது பாராட்டத்தக்கது. அவரை மையமாக வைத்து நிகழ்ச்சிகளை நடத்தாத அமைப்புகள்கூட. இப்போது, அவரைப்பற்றி நிகழ்ச்சிகளை அமைப்பதும், நிகழ்ச்சிகளை இதழ்களில் எழுதுவதும், காலம் தாழ்த்திய செயற்பாடு என்றாலும், பாராட்டிற்குரியது. சாலய்யாரின் நினைவைப் போற்றுவதென்பது, அவரது நெறிகளைப் போற்றுவதே! அவரைப்போல், புகழை விரும்பாதத் துறவியாக, எந்த விவகாரத்திலும் உள்ளதை உள்ளபடிச் சொல்லும் சிந்தனையாளராக, எந்தப் போராட்டத்திலும் முதலில் நிற்கும் போராளியாக நாம் நிற்பதே அவருக்குச் செய்யும் சேவையாகும்.

சாலய்யார் விட்டுச் சென்ற பணிகளை, அவருக்கு இணையாக செயல்படுத்தும் ஆற்றல் கொண்டவர் சாலினியார் அவர்கள். இவர்கள் இருவரும், வீட்டிலும் மேடையிலும் ஒரேமாதிரியான பார்வை கொண்டவர்கள். ஒரு இம்மி அளவுகூட கருத்து வேறுபாடு கொள்ளாதவர்கள். ஒரு சுயமரியாதைப் போராளி, எப்படி மனைவியை நடத்த வேண்டும் என்பதற்கு சாலய்யாரும், இதே நெறிகளைக் கொண்ட ஒரு மனைவி, எப்படிக் கணவனிடம் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கேற்ப என்பதற்கேற்ப சாலினியாரும் இருந்தனர். இந்த இருவருக்கும் இணையாக எவரும் இருப்பார்களா என்பது சந்தேகமே. இப்படி இவர்கள் இணையான இணை. இந்த இணையில் ஒருவர் நம்மோடு வாழ்கிறார். அந்தச் சாலினியாரின் தலைமையில் நம்மிடையே நிலவும் ஒருசில கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட, தமிழனுக்கு உரிய பொதுவிவகாரங்களுக்கு போராடுவது சாலய்யாருக்கு ஒரு நிரந்தரமான நினைவாகும். அதேசமயத்தில், தக்காரும் மிக்காரும் இல்லாமல் மானுட சேவைக்கென்றே வாழ்ந்த சாலய்யாருக்கு, அரசோ அல்லது நாமோ ஒரு நினைவு மண்டபத்தை அமைக்க வேண்டும்; அமைத்தாக வேண்டும்.


சாலய் இளந்திரையனார் நினைவுமலர் — 1999.

"https://ta.wikisource.org/w/index.php?title=சமுத்திரம்_கட்டுரைகள்/011&oldid=1863619" இலிருந்து மீள்விக்கப்பட்டது