உள்ளடக்கத்துக்குச் செல்

சமுத்திரம் கட்டுரைகள்/012

விக்கிமூலம் இலிருந்து

அரவாணிகள் அல்லது
அலிகள் ஆண் உடம்புகளில்
சிறைபட்ட பெண்கள். கர்ப்பப்பை
தவிர்த்து ஒரு பெண்ணுக்குரிய
அத்தனை உணர்வுகளும்
கொண்டவர்கள். ஊனமுற்றோருக்காக ஓரளவு
உதவிகள் செய்து வரும் மத்திய,
மாநில அரசுகள், இந்த
பாவப்பட்ட மக்களுக்கும் வேலை
வாய்ப்பில் இட ஒதுக்கீடு,
இலவச வீட்டுமனை, மருத்துவ
வசதி போன்றவற்றை செய்ய
வேண்டும். காரணம் இவர்களும்
பாலியலில் ஊனப்பட்டவர்களே.

அரவானிகள்

ஆணின் உடம்பில் சிறை
பட்டிருக்கும் பெண்களைப்
பார்த்திருக்கிறோமா? கேள்விப்
பட்டிருக்கிறோமா?

அனைவரும்
பார்த்திருக்கிறார்கள். ஆனால்
கேள்விப்பட்டதில்லை
எங்கேயாவது ஒரு இடத்தில்
குறிப்பாக கடைகண்ணிகளில்,
கூத்துக்களில், கடற்கரைகளில்,
நகரப் பேருந்து நிலையங்களில்
இவர்களைப் பார்த்திருக்கிறோம்.
ஆனால் இவர்கள்தான், ஆணு
டம்பில் அடைபட்டிருக்கும் பெண்
கள் என்பதை அறிய மாட்டோம்.
இவர்களைப் பார்த்ததும், நயத்தகு
நாகரிகமான வர்களுக்கும்
உதட்டோரம் ஒரு கேலிச் சிரிப்பு
ஏற்படும். சிலர் ஒதுங்கிப்
போவார்கள். பலர் ஒதுக்கிப்
போவார்கள். கீழ்மட்ட ரவுடிகளும்,
கேடிகளும் இவர்களை
“பொட்டை” என்பார்கள். ஆனாலும்
இவர்கள் பொட்டைகள் அல்ல.
பலர் நினைப்பது போல், பாலி
யல் உணர்வு இல்லாத ஆண்மை
யற்றவர்களும் அல்ல. ஓரினச்
சேர்க்கையில் ஈடுபடுகிற
ஆண்களும் அல்ல.

இவர்கள் அவர்கள் அல்ல

ஆண்மையற்றவர்கள், ஒரு ஆணுக்குரிய சகலத்தோற்றத்தோடும் அறிவோடும் விளங்குவார்கள். அதேசமயம் இவர்களுக்கு பாலுணர்வு முற்றிலும் கிடையாது. இவர்களை நகரங்களில் ‘ஒன்பது’ என்றும், தென் மாவட்டங்களில் ‘பெத்தட்டிகள்’ என்றும் குறிப்பிடுவார்கள் இதேபோல் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறவர்கள், சராசரி சிறுவர்களாகத் துவங்கி, வக்கரித்தப் பெரிசுகளின் பணத்திற்கும், பண்டங்களுக்கும் மயங்கி, ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டு, பிறகு அந்த ரசனைக்கே அடிமையானவர்கள். இவர்களை, சென்னை நகரத்தின் பூங்காக்களிலும், கடற்கரைச்சாலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் மெல்லிய ஆடல் பாடலோடு பார்க்கலாம்.

இங்கே குறிப்பிடப்படுகிற ‘ஆண் உடம்பின் கைதிகள்’ இவர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள். அவர்கள் ஆக்கப்பட்டவர்கள். இவர்கள் பிறவியிலேயே ஆனவர்கள். இவர்கள்தான் அலிகள். இப்போது தங்களை அரவானிகள் என்று அழைக்க வேண்டுமென்று சங்கம் அமைத்து வேண்டுகோள் விடுப்பவர்கள்.

இந்த அலிகள் எப்படித் தோன்றுகிறார்கள்?

பூப்படைந்த பெண்ணிற்கு, மாதம் ஒரு தடவை கருப்பையில் ஒரு முட்டை உருவாகிறது. உடல்சேர்க்கையின் போது ஆணின் விந்தில் உள்ள கோடிக்கணக்கான உயிர் அணுக்கள் இந்த கருமுட்டைக்குள் ஊடுருவப் போட்டியிடுகின்றன. இதற்காக இந்த முட்டையை முற்றுகையிடுகின்றன. இவற்றில் ஒன்றே ஒன்றுதான் முட்டைக்குள் சேருகிறது. இந்த உயிர் உயிர் அணுவில் குரோமோசோம்கள் என்ற திரள்கள் உள்ளன. இவற்றில் பாதி ஆண்தன்மை உள்ளவை. எஞ்சிய மீதி பெண்தன்மை உள்ளவை. முட்டை இயல்பிலேயே பெண்தன்மையானது. இந்த முட்டையில் ஆண்தன்மையுள்ள குரோமோசோம் இணைந்தால், கருமுட்டை, ஆண்குழந்தையாகிறது. பெண்தன்மை உள்ளது சேர்ந்தால் குழந்தை பெண்ணாகிறது. ஆக ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்பதை தீர்மானிப்பது ஆண்தானே அன்றி, பெண்ணல்ல; (ஆனாலும் இந்த ஆண்களும் இவர்களது அம்மாக்களும், ஆண்குழந்தை பெற்றுத்தரவில்லை என்று குற்றஞ்சாட்டி மாட்டுப் பெண்ணை மாடாக்கி விடுகிறார்கள்.)

இத்துடன் இன்னொரு முக்கியமான சங்கதி, பெண்தன்மை கொண்ட கருமுட்டையும், ஆண் அல்லது பெண்தன்மை கொண்ட குரோமோசோம்களும் இணையும்போது முட்டையின் பெண்ணியல்பும் ஓரளவிற்கு இருக்கும். இதனால்தான் முழுமையான ஆண் என்றோ, முழுமையான பெண் என்றோ, எவரும் கிடையாது. ஒருவரை ஆண் தன்மை மிஞ்சியவர் என்றும், ஒருத்தியை பெண்தன்மை மிஞ்சியவள் என்று மட்டுமே அழைக்கலாம். ஆனாலும் இந்த மிஞ்சிய தன்மைக்கு ஏற்ப முட்டை ஆண் வடிவத்தையோ அல்லது பெண் வடிவத்தையோ பெற்றுவிடுகிறது. ஆளுமை மட்டும் விகிதாச்சார அடிப்படையில் இரண்டும் கலந்ததாக இருக்கும். ஒரு சிலர், ஆணிலிருந்து பெண்ணாகவோ அல்லது பெண்ணிலிருந்து ஆணாகவோ மாறியிருக்கிறார்கள். குறைவாய் உள்ள ஆண் அல்லது பெண் தன்மை இன்னொரு தன்மையை அமுக்கி விட்டு ஒரு கட்டத்தில், மேலோங்கி விடுவதே காரணம்.

என்றாலும், இந்த அலிகள் இவர்களோடும் சேர்த்தியில்லை. இவர்கள் மானுடத்தின் மூன்றாவது பரிமாணம். ஆணுடம்பில் பெண்ணுமாய், பெண்ணுடம்பில் ஆணுமாய்- இந்த இயல்பு எப்போதும் மாறமுடியாததாய் இருப்பவர்கள். நமது பக்தி இலக்கியங்கள் ஆண்டவனை குறிப்பிடும்போது ஆணாகி, பெண்ணாகி, அலியாகி என்கின்றன. இந்த அலிகள் மனதளவில் பெண்கள் அல்லது ஆண்கள். பெண்ணுடம்பில் ஆண்களாயிருக்கும் அலிகள் குறைவு என்பதால் அவர்களைப் பற்றி இங்கே பேசப்படவில்லை.

இவர்களுக்கு, ஒரு பெண்ணுக்குரிய அத்தனை உடலுறவு ஆசைகளும், ஆசாபாசங்களும் கொண்டவர்கள். ஒரே ஒரு வித்தியாசம் இவர்களுக்கு கர்ப்பப்பை கிடையாது. ஆகையால் இவர்களால் குழந்தை பெற இயலாது. என்றாலும் தங்களை முழுமையான பெண்களாக ஆக்கிக் கொள்ள, அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். ஹார்மோன் ஊசி போட்டு மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்கிறார்கள். என்றாலும், ஒரு பெண்ணைப் போலவே மனதுக்குப் பிடித்த ஆணுடன் உடலுறவு கொள்ள விரும்பும் இவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் எள்ளி நகையாடப்படுகிறார்கள். வீட்டிலும் இடம் இல்லாமல், நாட்டிலும் இடம் இல்லாமல் நிர்க்கதியாகும் இவர்களுக்கு, வயிற்றுப்பிழைப்பிற்கு, விபசாரத்தைத் தவிர வேறு வழியில்லாமல் போகிறது. கையும் களவுமாக பிடிபடும்போது இவர்களது ஜோடிகளைப் பிடிக்காமல், இவர்களை மட்டுமே காவல் துறை கைது செய்கிறது. இவர்கள் மீது விபசாரத் தடை சட்டத்தின்கீழ் வழக்கு போடமுடியாது. ஆகையால் நமது வீரதீரக் காவல் துறையினர், இவர்கள் கஞ்சா உள்ளிட்ட பல போதைப் பொருள்களை விற்பதாக வழக்கு போடுகிறார்கள். நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு முன்பு இவர்களை படாதபாடு படுத்துகிறார்கள்.

அலிகளும் குடும்பமும்

பாலியல் குணங்கள் பக்குவம்பெறும் பத்துப் பன்னிரெண்டாவது வயதில் சிறுவனாகத் தோன்றுகின்றவன் தன்னுள் ஒரு சிறுமியைக் காண்கிறான். பூப்படைந்த பெண்போல் நாணுகிறான். அவர்களைப் போலவே ரகசியமாக புடவை கட்டுகிறான். இந்தச் சமயத்தில் தன்னைப் பற்றிய புதிர் புரியாமல் அல்லாடுகிறான். இதுவே மனோ நோயாகிறது. ஒவ்வொரு அலியும், விஞ்ஞானப் பூர்வமான மருத்துவ விளக்கம் இல்லாத பின்னணியில், ஆரம்பத்தில் மனோ நோயில் சிக்கிக் கொள்கிறான். குடும்பத்தினரும் இவர்கள் சேலை கட்டுவதை பார்க்கும்போது, அடித்து உதைக்கிறார்கள்; உடம்பில் சூடு போடுகிறார்கள். அப்படியும் அந்த அலியை திருத்த முடியாததால் வீட்டை விட்டு விரட்டியடிக்கிறார்கள். இல்லையானால், அடி உதை தாங்கமுடியாமல் அந்த அலி சிறுசுகள் வீட்டை விட்டு ஓடிவிடுகின்றனர். எப்படியாவது ஒரு வழியில் தங்களைப் போன்ற அலிகளைக் கண்டறிந்து, அந்த சமூகத்தில் இரண்டறக் கலந்து விடுகிறார்கள். ஆனாலும், குடும்பப் பாசம் இறுதிவரை இவர்களை ஆட்கொள்கிறது. பெரும்பாலோர், பல வழிகளில் சம்பாதித்து அடித்து விரட்டிய தங்கள் குடும்பத்திற்கே பணம் அனுப்புகிறார்கள். ஒரு சில பணக்கார வீடுகளில் இப்படிப்பட்ட அலிகள் நாசூக்காக வைக்கப்படுகிறார்கள். எனக்குத் தெரிந்து, ஒரு சில அரசு ஊழியர்களும் பேராசிரியர்களும் ஆணுடையில் வேடம் போட்டு விளங்குகிறார்கள்.

கூவமாகிப் போன கூவாகம்

விழுப்புரத்திற்கு அருகே உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் விழா நடைபெறும் மூன்று நாட்கள் மட்டும் அனைவரும் பெண்ணுடையில் வருகிறார்கள். கூத்தாண்டவர்க்கு மாலையிட்டு, இறுதியில் மாங்கல்யம் அறுபடும்போது தங்களது நிலைமையை நினைத்துக் கத்துகிறார்கள், கதறுகிறார்கள். சராசரி மனிதராய் இருக்க முடியாமல் போய் தங்களுக்கும் தங்களது குடும்பத்திற்கும் சிக்கலை ஏற்படுத்துவதற்காக ஒப்பாரி போடுகிறார்கள். இந்த அடிமன வேதனை புரியாமல், நமது பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் இவர்களை கேலிக்கும் கேளிக்கைக்கும் உரியவர்களாக சித்தரித்துத் தொலைக்கிறார்கள்.

இந்தப் பாவப்பட்ட பிறவிகளும், தங்களை மானுடத்தின் மூன்றாவது பரிமாணமாக நினைக்காமல், புராண சங்கதிகளில் அடைக்கலமாகிறார்கள். பாரதப்போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்காக சாமுத்திரிகா லட்சணங்கள் அத்தனையையும் கொண்ட அரவானை, பாண்டவர்கள் பலியிடவேண்டிய நிலைமை. ஆனாலும் தனக்குத் திருமணம் செய்துவைத்தால்தான் அப்படி பலியாகத் தயாராய் இருப்பதாக, அரவான் கூறுகிறான். சராசரிப் பெண் எவளும் பலியாகப்போகும் அவனை மணக்க முன்வரவில்லை. ஆகையால், கிருஷ்ணனே பெண்ணாகி அரவானை மணக்கிறார். அரவானும், மணம் முடித்த மூன்று நாளில் களத்தில் பலியாக்கப்படுகிறான். இந்த அலித் தோழர்கள் தங்களை ஆணாகிப் பெண்ணாகி அரவானின் மனைவியாகிய கிருஷ்ண விதவைகளாக நினைக்கிறார்கள். இதற்காக, கூத்தாண்டவர் போன்ற பல்வேறு அரவான் கோயில்களில் ஆண்டுதோறும் சித்திரா பவுர்ணமியில் மணம் முடித்து மாங்கல்யம் இழக்கிறார்கள்.

அலிகள் உருவாக்கம்

ஒரு அலிக்குழந்தை எப்படி உருவாகிறது என்பது பற்றி இன்னும் முழுமையான ஆராய்ச்சி செய்யப்படவில்லை. குளோனிங் முறையில் சாதனை படைப்பதாய் தம்பட்டம் அடிக்கும் விஞ்ஞானிகளுக்கு மானுடத்தின் அலிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யவோ, இந்த அலித்தன்மையை போக்குவதற்கான வழிவகைகளை கண்டறியவோ மனமில்லையோ மார்க்கமில்லையோ அவர்களுக்குத்தான் வெளிச்சம். மேலே குறிப்பிட்டுள்ள குரோமோசோம்களில் ஏற்படும் கோளாறே அலிகள் உருவாவதற்கு காரணம் என்று இதுவரை பொத்தாம் பொதுவாக கூறப்படுகிறது.

என்றாலும், இது இயற்கையின் சமச்சீர் நிலை என்று தத்துவார்த்தமாகக் கூறப்படுகிறது. பொதுவாக மிருகங்களும் பறவைகளும் ஒரு குறிப்பிட்ட காலவரைக்குட்பட்டே பாலியல் உறவில் ஈடுபடும். தாவரங்களில் கூட எல்லா மலர்களும் ஒரே சமயத்தில் மலருவதில்லை. எல்லாப் பூச்சிகளும், வண்டுகளும் ஒரே சமயத்தில் தேன் எடுத்து தங்குத்டையில்லாத மகரந்தச் சேர்க்கையைச் செய்விப்பதில்லை. ஒரு பூவில் முட்டையிடும் பூச்சி, அந்த முட்டையின் பாதுகாப்பிற்காக இன்னொரு பூவையும் இழுத்து மூடி, மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்துகிறது. அந்த முட்டை, பூச்சியாய் ஆவதும், பூ பழமாய் ஆவதும் பின்னர் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. இத்தகைய பிரமிக்கத்தக்க சமச்சீர் நிலைக்கு, மனிதன் போக்கு காட்டுகிறான். இவனுக்கு அல்லது இவளுக்கு உடலுறவு என்பது 24 மணி நேர ஈடுபாடு. குழந்தை பிறப்பதிலும் தாவரங்கள், மிருகங்கள், பறவைகள் போல் வரம்பு கிடையாது. ஆகையால் இயற்கையே, குழந்தை பெற முடியாத அலிகளை உற்பத்தி செய்து, மனிதன் தாழ்த்தும் சமச்சீர் நிலையை நேராக்குகிறது என்றும் கூறப்படுகிறது.

இவர்களுக்குச் செய்யவேண்டியது

என்றாலும் ஒரு கேள்வி எழுகிறது. மனித சமூகத்தின் ஒட்டுமொத்தமான - இயற்கை மீதான பாரா முகத்திற்காக, இந்த அலிகள் ஏன் சிலுவை சுமக்க வேண்டும் என்பதுதான். இவர்களை உற்பத்தி ஆக்குவதில் தந்தைக்கும், மறைமுகமாக சமச்சீர்நிலை தாழ்த்தும் மானுடத்திற்கும் பங்குண்டு. இவர்கள் இப்படி பிறப்பதற்கு இவர்களைப் பிறப்பித்த தந்தையே காரணம். ஆகையால் இவர்களுக்கு படிப்பிலும், வேலையிலும், குடியிருப்பிலும், இடஒதுக்கீடு கொடுக்கப்படவேண்டும். அன்னை இந்திரா காந்தி இவர்களுக்கு டில்லியில் குடியிருப்பு கட்டிக் கொடுத்தார். இன்றளவும் அவரை இவர்கள் நன்றியோடு நினைவு கூருகிறார்கள். அவருக்குப் பிறகு அனாதையாகிப் போனதாய் நினைக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இவர்கள் கேலிக்குரியவர்கள் அல்ல என்று விளக்க வேண்டும். இவர்களை கிண்டல் அடிக்கும் திரைப்படங்களை, நாடகங்களை தடைசெய்ய வேண்டும்.

வாடாமல்லியின் தாக்கம்

நமக்கு நாமே என்ற தத்துவத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரவானிகள் சங்கம் என்ற ஒரு அமைப்பை அண்மையில் ஏற்படுத்தி இருக்கிறார்கள். பிற சங்கங்களைப் போல் அல்லாமல் இவர்களின் பிரதிநிதிகளே இவர்களின் தலைவர்கள். இவர்களைப் பற்றி நான் எழுதிய நாவலான “வாடாமல்லிக்கு” வழங்கிய ஆதித்தனார் விருதில் கிடைத்த ஐம்பதாயிரம் ரூபாயில் பத்தாயிரம் ரூபாயை இந்தச் சங்கத்தின் தோற்றத்திற்காகக் கொடுத்தேன். நான் எழுதிய வாடாமல்லி நாவலின் தாக்கத்தால் இப்போதெல்லாம் அரவானிகள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். பழைய பத்தாம்பசலித்தனமான முறைகேடுகளை விட்டுவிட்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

மத்திய, மாநில அரசுகள் ஊனமுற்றோருக்காக எவ்வளவோ உதவிகள் செய்கின்றன. இந்தப் பாவப்பட்ட அலிமக்களுக்கு இந்த இருவகை அரசுகளும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, வீட்டுமனை, மருத்துவ வசதி போன்றவற்றைச் செய்து கொடுக்கவேண்டும். காரணம் இவர்களும் பாலியலில் ஊனமுற்றவர்களே.

இதற்கிடையே விஞ்ஞானிகளும், அலிக்குழந்தைப் பிறப்பைத் தடுக்க ஆராய்ச்சி செய்யவேண்டும். இப்போது உயிரணுவில் உள்ள 23 குரோமோசங்களை பிளந்து பார்க்கிற முயற்சி வெற்றியின் முதல் கட்டத்தில் உள்ளது. இந்த குரோமோசங்களில் நாலு கோடியே பத்து இலட்சத்துக்கும் அதிகமான இயல்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் அலித்தன்மைக்கு உரிய இயல்புகளைக் கண்டறிந்து இத்தகைய பிறப்பைத் தவிர்க்க ஆய்வு செய்யலாம்.

அலித்தோழர்களும் தங்கள் பங்கிற்கு அரவான் கதை, முர்க்கே மாதா கதை போன்ற புராணங்களின் வம்சா வழிகள் என்று எந்தக் காலத்திலோ சொன்னதை இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது அசல் மூடநம்பிக்கை. கூவாகம் போன்ற கோயில்களில் தாலி கட்டியும், பிறகு அதை அறுத்தும் ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சிகளை நிறுத்தவேண்டும். அதே சமயம் கூவாகம் போன்ற இடங்களில் ஆண்டுக்கு ஒரு தடவை ஆரோக்கியமான முறையில் கூடுவதில் தவறில்லை.

இப்போது அலிகளைப் பரிகாசமாகப் பார்ப்பதுபோய், அனுதாபமாக பார்க்கும் போக்கு ஏற்பட்டுள்ளது. இதுவே பாசமாக வேண்டும். மேலும் கீழும் இல்லாத ஒரு தோழமை உணர்வாக மாறவேண்டும். நான் வாடாமல்லி என்ற தொடர்கதையை ஆனந்தவிகடனில் எழுதி, பின்னர் வானதி பதிப்பகத்தால் வெளியிட்ட பிறகு நிலைமையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு காலமாக அலிகளை கிண்டலும் கேலியுமாக விமர்சித்த திரைப்பட-தொலைக்காட்சியினர் இப்போது திடீர் ஞானோதயம் பெற்று அலித்தோழர்களை அனுதாபத்தோடு சித்தரிக்க துவங்கியிருக்கிறார்கள். இவை என்னுடைய நகல் போன்றவைதான். இதற்காக மூலம் கோபப்படவில்லை. காப்பி அடித்தாலும் ஆரோக்கியமாக அடிக்கிறார்களே என்கிற மகிழ்ச்சிதான்.


நவசக்தி வார இதழ் — 1999.

"https://ta.wikisource.org/w/index.php?title=சமுத்திரம்_கட்டுரைகள்/012&oldid=1863620" இலிருந்து மீள்விக்கப்பட்டது