உள்ளடக்கத்துக்குச் செல்

சமுத்திரம் கட்டுரைகள்/013

விக்கிமூலம் இலிருந்து

புதுடெல்லியிலுள்ள அரசு
அலுவலர்களிடம் ஒரு பழக்கம்.
கோப்புகளை பார்ப்பதில்லை என்ற
பழக்கம். காலை பதினோரு
மணிக்கு முன்போ, மாலை
நான்கு மணிக்கு பின்னரோ
அலுவலகத்தில் இருப்பதில்லை
என்ற சபதம்.


ஆனால், நேரில் போய்
விட்டால், நம்மை உட்காரச்
சொல்லி தேநீர் வாங்கிக்
குடுத்து, எந்தப் பிரதிபலனையும்
எதிர்பார்க்காமல் அப்போதுதான்
கோப்பை படித்து விட்டு
உடனடியாக உதவுவது அவர்களது
பண்பாடு.

வீட்டைக்
கட்டிப் பார்!

எந்தக் காலத்திலோ,
‘கடன்படத் தயார்’ என்று
விண்ணப்பித்து, அந்த நாளே
மறந்துபோன சமயத்தில், அரசு என்
விண்ணப்பத்தை அங்கீகரித்து வீடு
கட்டக் கடன் தொகை
‘ஸாங்க்க்ஷன்’ செய்தது. அந்தச்
சமயம் பார்த்துப் பதவியுயர்வு
என்ற பெயரில் நான் சென்னையிலி
ருந்து பெங்களூர் போகும்படி
ஆகிவிட்டது. மொத்தக் கடன்
எழுபதாயிரம் ரூபாயில்,
இருபதாயிரம் ரூபாய் வந்து
சேர்ந்தது. பெங்களூரில் எப்படி
வீடு கட்டுவது என்று நான்
யோசித்த போது, என் மனைவி
‘நீங்க... இங்கே இருந்தால் மட்டும்
வீடு கட்டுவீங்களாக்கும். எழுத்துல
கோட்டை கட்டுறது வேற...
நிலத்துல வீடு கட்டுறது வேற’
என்றார். இதனால், என்
மனைவியையே ‘ஐடியா’ கேட்டேன்.
உடனே அவர் ‘அப்பா... எங்கப்பா...’
என்றார். நெல்லை மாவட்டத்தில்
கோவங்கோடு என்ற கிராமத்தில்
உள்ள என் மாமனாரை
வரவழைத்தோம். சென்னைக்கு
அருகே உள்ள குன்றத்தூரில்
வசிக்கும் என் சகலபாடி (அதாவது
சட்டகர்) லிங்கசாமி, தனது

கோழிப்பண்ணையில் வேலைப் பார்ப்பவர்களை, வீடுகட்ட அனுப்புவதாகக் கூறிவிட்டார். இதற்கிடையே ‘வீட்டுப் பிளான்’ புதுப்பிக்கப்பட்டது. மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் உதவியாலும், சம்பந்தப்பட்ட இன்ஜினீயர்கள் கண்ணியமானவர்களாய் இருந்ததாலும், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலக அதிகாரி உதவியாலும் சிமெண்ட் பெர்மிட்டும் தயாராகிவிட்டது.

ஒரு நல்ல நாளில் -

பூசை முடிந்து, நிலத்தில் செவ்வகக் கோடு வரையப்பட்ட பகுதிகளில், வேலையாட்கள் கம்பியோடும் மண்வெட்டியோடும் இறங்கினார்கள். இந்தச் சமயத்தில், கல்வெட்டுத் துறை நிபுணரும், இஞ்சினீயருமான நண்பர் கொடுமுடி சண்முகம் வந்தார். இவர்தான் எனக்கு இந்த இடத்தை வாங்கிக் கொடுத்தவர்.

“இங்கே என்ன பண்றீங்க...?”

“வாங்க ஸார்... வாங்க... வீடு கட்டப் போறோம்...!”

“மகிழ்ச்சி... ஆனால், உங்க நிலத்துலதானே வீடு கட்டணும்?”

“அப்போ!...”

“ஒங்க நிலம் அங்கே... அதோ!”

நான், என் மனைவியின் கண்களுக்குத் தப்பித்துக் கொண்டிருந்தேன். அவர் பிறந்தகம் போயிருந்தபோது, சும்மா இருக்கக் கூடாது என்பதற்காக வாங்கிப்போட்ட இடம். சென்னை திரும்பியதும், இந்த இடத்தைக் காட்டி, மனைவியிடம் சபாஷ் பட்டம் வாங்கினேன். ஆனால், இப்போதோ என் மனைவி என்னிடம் பேசவில்லை. அப்பாவை அழைத்தார்.

“வாங்கப்பா... வீட்டுக்குப் போகலாம்... அந்த நிலத்துல வீடு கட்டுறதுக்குப் பதிலாய் பெஸண்ட் நகர்லே ஒரு குடிசை போட்டுக்கலாம்.... நிலம் வாங்கத் வாங்கத் தெரிஞ்சா வாங்கணும்... வாங்கப்பா....”

வம்புச் சுவரும் — வராத சுவரும்

என் மாமனார் பொறுமைசாலி. உருப்படாத தன் மாப்பிள்ளை, எந்த நிலமோ ஒன்றை வாங்கிப் போட்டாரே என்ற சந்தோஷக்காரர். மகளைச் சமாதானப்படுத்திவிட்டார். அப்புறம் நான் வாங்கிப்போட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டது. நிலத்தில் மீண்டும், பிளான்படி சுண்ணாம்புக் கோடுகள் போடப் போகிற சமயத்தில், என் மாமனார் ஓர் ஆட்சேபணையைக் கிளப்பினார்.

“மாப்பிள்ளே... நிலத்தைக் கவனிக்காமல் போயிட்டியளே... மோசம்...”

“யாரு மாமா... எது மோசம்...?”

“நிலத்துக்கு அடுத்தபடியாய் இருக்கிற வீட்டைப் பாருங்க... அதுல காம்பவுண்ட் சுவர் கண்ணுல படலியா? நம்ம இடத்துக்குள்ளே நாலு அடி எடுத்திருக்கு.”

“அய்யய்யோ... அதனாலே!”

“வீட்டுக்காரரைப் பார்த்துக் கேட்கணும்... அவர் சாக்குப் போக்குச் சொன்னால்... வேற வழியில்ல... காம்பவுண்ட் சுவரை இடிக்கணும்...”

என் மாமனார் பழைய காலத்து ஆள். வைரம் பாய்ந்த உடல் கட்டுள்ளவர். வம்புச் சுவருக்கும் போக மாட்டார். வந்த சுவரை விடவும் மாட்டார். நான் யோசித்துச் சொன்னேன்.

‘நாலடிதானே. வீடு கட்டுறபடி கட்டுவோம். அப்புறம் பேசுறபடி பேசுவோம்.’

மாமனாரும் பதிலளித்தார். ‘ஊர்ல எனக்கு நிறைய வேலை இருக்குது.’

அத்துமீறிய வீட்டுக்காரரைப் பார்க்கப் போனேன். அங்கே நீக்ரோ மாணவர்கள்தான் கிடைத்தார்கள். ‘வீட்டுக்காரர் எங்கே?’ என்று அவர்கனே என்னிடம் கேட்டார்கள். இதற்குள் என் மாமனார் டேப்பை வைத்து நிலத்தை மேஸ்த்திரியின் உதவியோடு அளந்து கொண்டிருந்தார். நான் மனத்துக்குள் பிரார்த்தித்துக் கொண்டேன். “கடவுளே... கடவுளே... நீ இருப்பதை நான் நம்புறேன். ஆனால், ஒரு நிபந்தனை. அந்தக் காம்பவுண்ட் சுவர் என் நிலத்துக்குள்ளே இருக்கப்படாது. மாயம் செய்தோ, மந்திரம் செய்தோ மாற்று... மாற்றி வை.”

நல்ல வேளையாக காம்பவுண்ட் சுவர், நிலத்தின் எல்லையிலேயே இருந்தது. என் நிலத்தில் அடுத்தவர் ஆக்கிரமிப்பு இல்லை. எப்படியோ, தொழிலாளர்கள், நிலத்தில் இறங்கினார்கள். நானும் ஒப்புக்கு ஒரு மணி நேரம் இருந்துவிட்டு, “மாமா... நீங்க எனக்குப் பெண் கொடுத்தது மாதிரி எப்படிப் பெரிய காரியமோ அதே மாதிரி இதுவும் மாமா.” என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குத் திரும்பி விட்டேன். அப்புறம் பெங்களூருக்குப் போய்விட்டேன்.

லாக்கப்பில் தொழிலாளர்கள்

சென்னையில் உருவாகும் என் வீட்டைப் பற்றிய சுவையான கற்பனையோடு, நான் லால் பாக்கைச் கற்றிவிட்டு, அலுவலகம் திரும்பியபோது, வங்காளி சௌகிதார், தனது ஆங்கிலத்தை என்னிடம் பரீட்சித்தார்.

“சார்... மதர் டெலிபோன்ஸ்...”

“யூ வாண்ட் பெர்மிஷன்?”

“நோ ஸார்... மதர்... டெலிபோன்ஸ்...”

“யுவர் மதர்...?”

“நோ ஸார்... அவர் மதர்...”

“க்யா ஹலோ... மை மதர் டைய்ட்...!”

“மை மதர் ஆல்ஸோ டைய்ட்... பட் மதர் டெலிபோன்;”

எனக்கு ஒன்றும் புரியவில்லை. சௌக்கிதார் கிழவர், நான் பார்த்த பார்வையில், தனக்கு ‘குல்பர்க்காவுக்கு’ டிரான்ஸ்பர் கிடைக்குமோ என்று பயந்து பார்த்தபோது, ஒரு டெலிபோன் கால். என் மனைவியின் குரல். “இந்த அநியாயத்தைக் கேளுங்க. நம்ம நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களில் இரண்டு பேரை, திருவான்மியூர் போலீஸார் பிடித்துக் கொண்டுபோய் விட்டார்கள்.”

நீக்ரோ மாணவர்கள் வீட்டில் நடந்த ஏதோ ஒரு திருட்டுக்கு இவர்களைச் சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்திருக்கிறார்களாம். நமது போலீசாரின் சர்வதேச அபிமானத்தால்; இரண்டு தொழிலாளர்கள் லாக்கப்பில் இருக்கிறார்களாம்... “ஒங்களுக்கு இன்புளூயன்ஸ் இருக்குன்னு பெரிசாப் பேசுவீங்களே... அதை இப்போ காட்டுங்க...” என்ற முடிவுரையுடன், என் மனைவி என்னை முடுக்கிவிட்டார்.

எனக்குத் தெரிந்த போலீஸ் அதிகாரிகளிடம் முறையிட்டேன். எந்த ஏரியாவைச் சேர்ந்த அதிகாரி மேற்படி கேஸுக்கு உதவுவார் என்பதைக் கண்டுபிடிக்கவே என் கிராப்பில் பாதி பிய்ந்துவிட்டது.

மாலையில், என் மனைவி டெலிபோன் செய்தார். பிடிபட்ட தொழிலாளர்கள் விடுதலையாகி விட்டார்களாம். ஆனால் அவர்களின் குடும்பத்தினர் “எந்த வீடு கட்டும்போதும் இந்த அநியாயம் நடக்கல... இந்த நிலத்துக்கு வந்த பிறகுதான் இப்படி” என்று சொல்லிவிட்டு, அவர்களைத் தடுத்துவிட்டார்களாம். ஆகமொத்தத்தில், வேறு ஆட்களைப் பார்த்துத்தான் வீட்டு வேலையைத் துவங்க வேண்டுமாம்.

மார்ச் மாதம் முடிந்த பிறகுதான், அடுத்த செட் தொழிலாளர்கள் ‘மார்ச்சாகி’ வந்தார்கள். கட்டிடச் சுவர் நிலத்திற்கு மேலே மூன்றடி வந்தபோது, கையில் காசு இல்லை. ‘என்ன செய்யலாம்’ என்று யோசித்தபோது, என் சட்டகர் லிங்கசாமி, தொழிலாளர்களுக்குக் கூலி சப்ளைக்கும் பொறுப்பேற்றார். எனது நண்பரான நூலக வெளியீட்டாளர் முனைவர் ச. மெய்யப்பன் அவர்கள், ‘பிடிங்க ரூபாயை... அப்புறம் அட்ஜெஸ்ட் செய்துக்கலாம்’ என்று பணம் கொடுத்து உதவினார்.

கிரில் ஆசாமி

வீடு கட்டும் பணி தொடர்ந்தது. ஜன்னல்களுக்கு, ‘கிரில்’ வைக்கும் கட்டம் வந்தது. அடையாறில் உள்ள ஒருத்தர், கிலோ இரும்பு பதினோறு ரூபாய்க்குக் கிடைக்கும்போது பத்து ரூபாய் விகிதத்தில் செய்து தருவதாக வாக்களித்தார். மாமனார், ஐந்நூறு ரூபாயை அட்வான்ஸ் தொகை கொடுக்கப் போனபோது, நான் ஆயிரம் ரூபாயைக் கொடுத்து வைத்தேன். ஒரு மாதம் ஆகியது. அட்வான்ஸ் வாங்குவதில் அட்வான்ஸாக இருந்த அந்த ஆசாமியைக் காணவில்லை. கடையில் பொறுப்பான பதில் கிடைக்கவில்லை. விசாரித்துப் பார்த்ததில், “அவர் அப்படித்தான்!” என்று கேள்விப் பட்டோம்.

ஒவ்வொரு பைசாவின் அருமையையும் தெரிந்து வைத்திருந்த என் மாமனார் கோபங் கொண்டார். வீடு கட்டும் தொழிலாளர்கள் உதவியுடன், எப்படியோ அந்த ஆசாமியை என் வீட்டுக்குப் பலவந்தமாகக் கொண்டுவந்துவிட்டார். மாமனாரின் மிரட்டலுக்கும், தொழிலாளர்களின் பார்வைக்கும் பயந்துபோன அந்த மனிதர், கடிகாரத்தைக் கழட்டிக் கொடுக்கப்போனார். ஒரு மனிதனைச் சிறுமைப்படுத்தலாகாது என்று சிறுமையான அனுபவங்கள் மூலம் பட்டறிந்த நான், அந்த மனிதரை நெருங்கினேன். உடனே நான் அவரை அடிக்கப்போவதாக நினைத்து, அவர் என்னை பயந்து பார்த்தபோது, “ஒங்களை நம்புறேன். நீங்கள் கடிகாரத்தைத் தர வேண்டாம். இன்னும் பதினைந்து நாட்களுக்குள் கொடுத்த பணத்தையோ அல்லது அதற்கான கிரில்களையோ கொடுங்கள். நீங்கள் போகலாம்.” என்று கிரில் மனிதரைப் போக விட்டேன். அவரைக் கடத்தி வந்த தொழிலாளர்கள், சூள் கொட்டினார்கள். “கடைசியில் நமக்குத்தான் கெட்டபேரு.” என்றார்கள். என் மாமனார், என் கையில் இருந்து, தன் கையை உதறியபடியே சொன்னார்.

“நான் ஊருக்குப் போகணும். நிறைய அங்க வேலை இருக்குது... டேய், யாராவது டிக்கெட்...”

மரமும் — மாமனாரும்...

எப்படியோ மாமனார் முறுக்கைச் சமாளித்தேன். மீண்டும் வீட்டு வேலை துவங்கி, கதவு ஜன்னல்களுக்கு மரம் வாங்கும் கட்டத்திற்கு வந்தோம். கர்நாடக மாநிலத்தில், காட்டிலாகா அதிகாரிகளிடம் எனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, இருபதாயிரம் ரூபாய்க்கு, ‘ஹென்னே மரம்’ வாங்கப் போவதாகவும், இதன் மார்க்கெட் மதிப்பு முப்பதாயிரம் ரூபாய் என்றும் மாமனாரிடம் சொன்னேன். உடனே அவர், “என்ன மாப்பிள்ளே... (அதாவது என்னய்யா நீ மாப்பிள்ளே....) எட்டாயிரம் ரூபாய்ல அடங்குற மரத்துக்கு இருபதாயிரம்... அப்புறம் லாரிச் செலவு.” என்றார். உடனே நான், “சும்மா கிடங்க மாமா... எட்டாயிரம் ரூபாய்ல எதுவும் வாங்க முடியாது... வாங்கப் போறது சிக்மங்கலூர்ல... கொடுக்கப் போறது இருபதாயிரம் ரூபாய்.” என்றேன். மாமனார் பதிலளித்தார்.

“நான் ஊருக்குப் போகணும். நிறைய வேலை இருக்கு.”

மரத்தை விடலாம். மாமனாரை விட முடியுமா...? விட்டுக் கொடுத்தேன். மாமனார் கணக்குப்படியே, எட்டாயிரம் ரூபாய்தான் ஆனது. நல்ல வேளையாக என்னைச் சுமார் பதினையாயிரம் ரூபாயில் இருந்து காப்பாற்றினார்.

மாமனார் போட்ட கணக்கு

என் மாமனார் போட்ட கணக்கு தப்பியதே இல்லை. எங்களோடு எங்களாக, ஒரு வாலிபன் கட்டிட வேலை பார்த்து வந்தான். ஒரு ஏழைக் குடும்பத்துடன் வசித்து வந்தான். ஏழைகளுக்குள் எந்த வித்தியாசமும் இல்லை என்ற என் கோட்பாட்டுக்கு எடுத்துக்காட்டான அந்தப் பையன் மீது எனக்கு அபார பிரியம். மாமனாருக்கும் அப்படியே. அவருக்கு நாங்கள் கொடுத்தனுப்பும் சாப்பாட்டின் பாதியை அவனுக்கே கொடுத்துவிடுவார். அவனும், என் மாமனாருடனேயே இரவில் கட்டிடத்திற்குள் தங்குவான்.

ஒருநாள்...

மாமனார் என்னிடம் சொன்னார்.

‘மாப்பிள்ளை... இந்தப் பையனும் அந்தக் குடும்பமும் இங்கே தங்குறாங்க. கட்டிடத்துல... நிறைய சாமான் இருக்குது. இவங்க முழிக்கிற முழி சரியில்ல. அதனால்... இங்கே தங்கப்படாதுன்னு சொல்லப்போறேன்.’

‘சரியான ஆளு மாமா நீங்க! நமக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை பார்க்காங்க. இப்போ மெட்ராஸ்ல ஒரே வெள்ளக்காடு இந்தச் சமயத்துல விரட்டினால் எப்படி.’

நான் பெங்களூர் வந்துவிட்டேன். ஒரு வாரம் கழித்து, என் மனைவியின் கடிதம் வந்தது. என் மாமனார் குறிப்பிட்ட அந்தப் பயலும், அந்தக் குடும்பமும் கொட்டும் மழையிலும், நடு ராத்திரியில், கட்டிடத்திற்குள் கிடந்த ஆயிரம் ரூபாய் இரும்புக் கம்பிகளையும், கார்ப்பென்டரின் கருவிகளையும் எடுத்துக்கொண்டுபோய் விட்டார்களாம். என் மாமனார், நான் அவர் பேச்சை கேட்கவில்லை என்று காரணம் காட்டி, நிஜமாகவே ஊருக்குப் போய்விட்டாராம். கடிதம் போதாது என்று என் மனைவி டெலிபோனில் கத்தினார். பெங்களூரில் தற்செயலாக கண்ணில்பட்ட அந்தப் பயலிடம், நான் விபரம் கேட்க, அவன், ‘நான் அப்படி செய்வேனா?’ என்று அழுது புலம்ப, அதை நம்பி அவனுக்கே பத்து ரூபாய் அன்பளிப்பு கொடுத்த விபவரத்தை மனைவியிடம் சொல்லவில்லை.

டில்லிக்குக் காவடி

இதற்கிடையே, அரசாங்கக் கடனில் இறுதித் தவணைப் பணமான இருபத்தெட்டாயிரம் ரூபாய் வரவில்லை. மூன்று மாதமாக எழுதி எழுதிப் பார்த்தும் பலனில்லை. வேறு வழியில்லாமல், உடனடியாகப் பணம் வரவில்லையானால், அட்மினிஸ்டிரேட்டிவ் டிரிப்யூனலுக்குப் போகப்போவதாக மிரட்டி எழுதினேன். இரண்டு மாதமாகியும், இதற்கும்கூட எதுவும் தெரியவில்லை. வேறுவழியில்லாமல், புதுடில்லிக்குப் போனேன். போகும்போது சாங்ஷன் ஆர்டர் வந்துவிட்டது. பலனில்லாமல், அதாவது மூன்றாவது தவணை என்பதற்குப் பதிலாக, இரண்டாவது தவணை என்று தவறுதலாய்ப் போட்டுவிட்டார்கள். இவ்வளவுக்கும் என் நண்பர் ராவ் என்பவர்தான் நிர்வாக அதிகாரி; தென்னிந்தியர். இந்த தவறை குறிப்பிட்டு மேலதிகாரிக்கு குறிப்பு எழுதி அவரது அனுமதியோடு புது சாங்ஷன் ஆர்டர் வருமென்றும், அந்த அதிகாரி வெளிநாடு போயிருப்பதால் காரியம் பழுக்க ஒருமாதம் ஆகும் என்றும் எனக்கு சலுகை காட்டுவதுபோல் பேசினார்.

நான் ஓடினேன்; ஓடினேன். ஏ.ஜி.சி.ஆர். ஆபீஸ்வரை ஓடினேன். அங்கே சாங்ஷனுக்கு ஏற்பப் பணம் வழங்கும் ‘இர்லா’ அலுவலகம் போனேன். சம்பந்தப்பட்ட கிளார்க்குக்கு சல்யூட் அடித்ததும், பைலைப் புரட்டினார். ஒரு காகிதத்தைப் பார்த்து ‘கியர் ஹாலே... அட்மினிஸ்டிரேட்டிவ் டிரிப்யூனல்’ என்றபடி, அவர் லேசாய்ப் படிக்கப் போனார். அப்போதுதான், அந்த ஆசாமி அப்படி ஒரு கடிதம் நான் எழுதியிருப்பதை பார்க்கப்போனார். நான் அந்த கடிதத்திலேயே கையைப் பரப்பி மறைத்துகொண்டு “டெல்லி ஆத்மி, அச்சா ஆத்மி” என்றேன். அதாவது, டெல்லிக்காரர்கள் நல்ல மனிதர்கள் என்றேன்.

அந்த அஸிஸ்டெண்டைப் பார்த்து, சாங்ஷன் ஆர்டரில் இரண்டாவது தவணை என்று தப்பாகப் போடப்பட்டதை சுட்டிக் காட்டி, ஒரு மாதத்தில் மூன்றாவது தவணை என்ற திருத்தம் வந்துவிடும் என்றும், அப்படி வந்தவுடனே, எனக்கு பணத்தை அனுப்பிவிட வேண்டும் என்றும் வேண்டினேன். அவர் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு, நான் காட்டிய காகிதத்தில், இரண்டாவது தவணை என்ற ஆங்கில வாசகத்தை அடித்துவிட்டு, மூன்றாவது தவணை என்று கையால் எழுதினார். என்னை கையெழுத்து போடவும் சொன்னார். திடீரென்று எழுந்தார். ஒருமணி நேரத்தில் அவரே எல்லா செக்க்ஷன்களுக்கும் போய், இருபத்தெட்டராயிரம் ரூபாய்க்கு ‘செக்’ வாங்கி வந்துவிட்டார். இது போதாதென்று இரண்டு தடவை ‘டீ’ வாங்கிக் கொடுத்தார். இந்த வடஇந்திய அலுவலர்களிடம் ஒரு பழக்கம். அதாவது; பைல்களைப் படிப்பதில்லை என்ற பழக்கம். அலுவலத்திற்கு காலை பதினோரு மணிக்கு முன்போ, மாலை நான்கு மணிக்கு பின்னரோ இருப்பதில்லை என்று ஒரு சபதம். ஆனால், நேரில் போய்விட்டாலோ, எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல், உடனடியாக உதவுவதும் அவர்களின் பண்பாடு.

ஈரம் காயாத உள்ளம்

வீடு கட்டி முடித்துப் பால் காய்ச்சும் கட்டம் வந்தது.

குடிபுகு விழாவைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை அதே சமயம், உறவினர்களுக்குக் கொடுத்த வட்டியில்லாக் கடனை (அதாவது பரிசுப் பொருட்களை) திருப்பி வசூலிக்காமல் விட மனமில்லை. ஆகையால் உறவினர்களுக்கென்றே அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன. அதே சமயம், மிகவும் நெருங்கிய பிரமுகர்களுக்கும், நண்பர்களுக்கும் அழைப்புக்கள் அனுப்பினேன். பல்வேறு ஊர்களில் இருந்து உறவினர்கள் குழுமினார்கள். ‘தேறாத கேஸ்’ என்று கருதப்பட்ட நான், வீடு கட்டிவிட்டதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. மாமனார் முறுக்கோடு கோபித்துப்போய் திரும்பி வந்த என் மாமனாருக்கு இந்த மருமகனே பட்டு வேட்டி, பட்டு சட்டை வாங்கிக் கொடுத்தான். எல்லாவற்றிக்கும் மேலாக,

குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்குகூட நேரம் இல்லாமல் அல்லாடும் தினத்தந்தி இயக்குநர் திரு. சிவந்தி ஆதித்தன் அவர்கள் தனது மூத்த செய்தியாளர் சுகுமாரோடு, முட்டளவிற்கு தண்ணீர் தேங்கியிருந்த தெருவழியாக நடந்து, ஈரக்கால்களோடு என் வீட்டிற்கு வந்தது இன்னும் என் நெஞ்சில் ஈரம் காயாமல் உள்ளது.


குமுதம், 12—11—1987

"https://ta.wikisource.org/w/index.php?title=சமுத்திரம்_கட்டுரைகள்/013&oldid=1863621" இலிருந்து மீள்விக்கப்பட்டது