உள்ளடக்கத்துக்குச் செல்

சமுத்திரம் கட்டுரைகள்/014

விக்கிமூலம் இலிருந்து

ஊனமுற்றோர், வாதாடி -
போராடி, அரசை ஓரளவு
நிர்ப்பந்திக்க முடிகிறது. ஆனால்
மனநோயாளிகள் இதற்கு
மாறானவர்கள். இந்த,
உள்ளத்தில் ஊனமுற்றோர்
தங்களுக்காக வாதாடவும்
முடியாது... போராடவும்
முடியாது—


இவர்களை பராமரிக்க
வேண்டியவர்களும், ஒரு
கட்டத்தில், இவர்களை சுமை
போலவே நினைக்கிறார்கள்.
இவர்களிலும் ஏழை-எளியவர்
வீடுகளில், குழந்தை மன
நோயாளிகள் பிறந்தால் அதற்குப்
பெயர் சித்திரவதை.

ஒரு மனநோய்ச்
சிறுவனுக்காக...

‘உருவுகண்டு எள்ளாமை
வேண்டும்’
என்று ஒளவையார்
அறிவுறுத்தினார். இதனால்
அந்தக்காலத்திலேயே ஊனமுற்ற
வர்கள் ஏளனம் செய்யப்பட்டார்கள்
என்பது புலனாகிறது. கூடவே
இத்தகைய போக்கிற்கு ஒரு
எதிர்ப்பும் இருந்துள்ளது. நமது
தமிழில் காதுகேளாதவர்கள்,
பார்வை அற்றவர்கள், கால், கை
இழந்தவர்கள் போன்றவர்கள்
மோசமானவர்கள் என்பதுபோல்
பழமொழிகளும் உள்ளன. இங்கே
இவற்றைக் குறிப்பிடுவது, அவற்றை
அங்கீகரிப்பதுபோல் ஆகிவிடும்.
எனவே தவிர்க்கப் படுகிறது.
இப்போதும், வெந்த புண்ணில்
வேலைப்பாய்ப்பது போல் இந்த
மக்களை நகைச்சுவை என்ற
பெயரில் தொலைக் காட்சிகளிலும்,
திரைப்படங்களிலும் கேவலமாகச்
சித்தரிக்கிறார்கள். இத்தகைய மக்கள்
விரோதக் கலைச்சிதைவு வெளிப்
பாடுகளைக் கொண்ட திரைப்
படங்களையும், நாடகங்களையும்
அரசாங்கத் தொலைக்காட்சிகூட
ஒளிபரப்பி மனிதநேய எதிரியாக
விளங்குகிறது. என்றாலும்,
இத்தனை இழிவுகளையும், மீறி
ஊனமுற்றோர் உலகெங்கும் எதிர்க்

காற்றாய் வீசுகிறார்கள். இவர்களின் நலனுக்காக மூன்றாண்டுகளுக்கு முன்பே நமது நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது ஏட்டுச்சுரைக்காயாய், இருந்தாலும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று நம்பலாம். இதேபோல் தமிழக அரசு, உடல் ஊனமுற்றோர்களுக்காக அண்மையில் ஒரு தனி ஆணையாளரை நியமித்து இருக்கிறது.

ஊனமுற்றோர், வாதாடி - போராடி, அரசை ஓரளவு நிர்ப்பந்திக்க முடிகிறது. ஆனால் மனநோயாளிகள் இதற்கு மாறானவர்கள். இந்த உள்ளத்தில் ஊனமுற்றோர் தங்களுக்காக வாதாடமுடியாது. இவர்களை பராமரிக்க வேண்டியவர்களும், ஒரு கட்டத்தில் இவர்களை சுமையாகவே நினைக்க வேண்டியது ஏற்படுகிறது. இவர்களிலும் குழந்தை மனநோயாளிகள் - குறிப்பாக ஏழை பாளை வீட்டில் பிறப்பவர்கள் பிறந்திருக்கவே வேண்டாம் என்ற நிலைதான் இன்றுவரை உள்ளது. இது சம்பந்தமாக எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வறுமை வியாபாரிகள்

எனது உறவுப்பையன் - தெளிவாகச் சொல்லப் போனால் எனது மைத்துனியின் மகன் அவன் பிறந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகே, அவனுடைய மனச்சிதைவு கண்டுபிடிக்கப்பட்டது. ஏழைப் பெற்றோரால் எதுவுமே செய்ய இயலவில்லை. இந்தச் சிறுவனுக்கு ஏழுவயது எட்டியபோது சென்னைக்கு வாந்தார்கள். ஒரு எளிய தொழிலை செய்து வருகிறார்கள். இந்தச் சிறுவனை அடையார் பக்கமுள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் சேர்த்தேன். எல்லா நிறுவனங்களையும் போல இந்த நிறுவனமும் இந்திய வறுமையையும், ஏழைகளின் இயலாமையையும், இத்தகைய மனச்சிதைவுகளையும் வெளிநாடுகளுக்கு விற்று பணம் சம்பாதித்து வருவதை மூன்று மாத காலத்திலேயே அறிந்துகொண்டேன். இதன் நிர்வாகத் தலைவரோ அல்லது ஏகபோக முதலாளியோ, அரசு அதிகாரியாக உள்ள என் செல்வாக்கின் மூலம் அப்போதைய குடியரசுத் தலைவர் திரு. வெங்கட்ராமன் அவர்களை அந்த நிறுவனத்தின் புதிய கட்டிடத்திறப்பு (ஜப்பானில் இருந்து மட்டும் இந்த நிறுவனம் கோடிகோடியாய் வசூலித்து இருப்பதாய் கேள்வி) விழாவிற்கு அழைக்க விரும்பினார். குடியரசுத் தலைவரின் வருகையைப் பயன்படுத்தி, அந்த வளாகத்தின் முன்னால் உள்ள ஏழெட்டு கிரவுண்டு நிலத்தை வாரிச்சுருட்டவும் விரும்பினார். நான் இதற்கு உடன்படவில்லை. இதன் விளைவாக அந்தச் சிறுவன் அந்த மனிதரின் மனநோய்ச்சிறுவர் காப்பகத்தில் இருந்து விரட்டப்பட்டான். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், குடியரசுத்தலைவரை எப்படியோ, யார் மூலமோ வரவழைத்து திறப்புவிழாவையும் நடத்தி விட்டார். அந்த நிலத்தையும் விழுங்கி விட்டார்.

மன்னிப்பு மட்டும் போதுமா?

வேறுவழியில்லாமல் அப்போதைய சமூகநலத்துறை அமைச்சர் திருமதி. இந்திரகுமாரியின் பரிந்துரையின் பேரில் தாம்பரத்திலுள்ள அரசு மனநோய் சிறுவர் காப்பகத்தில் சேர்த்தேன். அங்கே, இந்தச் சிறுவன் துரும்பாக இளைத்து விட்டான். விசாரித்துப் பார்த்ததில் இத்தகைய சிறுவர்களுக்குரிய உணவு, உடை வகையறாக்கள் அதன் பராமரிப்பாளர்களுக்கே போய்ச் சேர்ந்ததாக தெரிந்தது. ஒரு அரசு நிறுவனத்தின் மோசடித்தனத்திற்கு இந்த நிறுவனம் ஒரு முன்னோடியானது. சகித்துக் கொண்டோம். ஒரு நாள், இந்த நிறுவனத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. கடிதம் இல்லை... கட்டளை. ‘உங்கள் பையன் நோய்வாய்ப் பட்டிருக்கிறான். அவனை நீங்கள் உடனடியாக வீட்டிற்கு கூட்டிப்போகவேண்டும். இல்லையானால் அவன் உயிருக்கு நாங்கள் பொறுப்பல்ல.’ என்று ஒரு அரக்கத்தனமான தாக்கீது வந்தது.

ஒரு அரசு நிறுவனம், தன்னிடம் உள்ள பிள்ளைகளுக்கு மனநோயைத் தீர்க்க முடியவில்லையானாலும், உடல் நோயையாவது தீர்க்க வேண்டும். இதற்கான மருத்துவர்களும் இருப்பார்கள் என்று நம்புகிறேன். சிறுவனுடைய உடல்நலத்தின் கடுமையை நாகரீகமாகவும் குடும்பத்தினருக்கு தெரிவிக்கலாம். இதற்குப் புறம்பாக, இப்படி ஒரு காட்டு மிராண்டித்தனமான கடிதத்தை அனுப்பியது. இந்தக் கடிதவிவரத்தை எத்திராஜ் கல்லூரியின் சமூக அமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் நான் குறிப்பிட்டேன். மனிதநேயரான தமிழக அரசின் சமூகநலத்துறை செயலாளர் திரு. தீனதயாளு அவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். ஆனாலும் அவர் இத்தகைய போக்கிற்கு எதிராக எதுவுமே செய்யவில்லை. செய்ய முடியவில்லையோ என்னவோ....

பதிலுக்குப் பதிலாய்.....

மத்திய அரசின் களவிளம்பரத்துறையில் இணை இயக்குநராக பணியாற்றிய நான், இந்தச் சிறுவனை மதுரைப் பக்கம் அரசு நிதியோடு இயங்கும் அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்றில் (என்.ஜி.ஒ) சேர்த்தேன். எனது பரிந்துரையை மிகப்பெரிய கவுரவமாக அந்த நிறுவனம் கருதியது. ஆனாலும் அடுத்த மாதமே அந்த இயக்குநர் சென்னையில் சாஸ்திரி பவனில் என்னைச் சந்தித்து தமது நிறுவனம் தயாரித்து மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு அனுப்பி இருக்கும் லட்சக்கணக்கான ரூபாய் செயல்திட்டங்களுக்கு நான் அனுமதி வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் தலையாட்டியிருந்தால் கமிஷனும் கொடுத்திருப்பார். நான் கையை விரித்தபோது, அந்த பையனின் காலை இடறிவிட்டார்கள்.

நானும் சளைக்கவில்லை. சமூகநலத்துறைக்கு புதிய அமைச்சராக சேர்ந்த திருமதி. சற்குணபாண்டியன் அவர்களைச் சந்தித்தேன். கல்லூரி காலத்தில் அவர் தி.மு.க. பேச்சாளராகவும், நான் காங்கிரஸ் பேச்சாளாராகவும் எதிரும் புதிருமாக செயல்பட்டாலும் நன்கு பரிச்சயமானவர். அவரும் பாலவாக்கத்திற்கு அருகே உள்ள ஒரு நிறுவனத்திற்குப் பரிந்துரைத்தார். இந்தச் சிறுவனை கூட்டிக்கொண்டு சென்ற அவன் தந்தையின் ஏழ்மைக்கோலத்தை பார்த்தோ என்னவோ, அந்த நிறுவனமும் கைவிரித்துவிட்டது.

சமூகசேவை நடிகை

ஒரு பொது நிகழ்ச்சியில் நானும், பிரபல ‘சமூகசேவை’ நடிகையும் கலந்து கொண்டு உரையாற்றினோம். ஏற்கனவே அவர் எனக்கு நன்கு பழக்கமானவர். சமூகநல அமைப்புக்களில் செயல்படுவதாகக் கூறி மாலை மரியாதைகளை வாங்கிக் கொள்கிறவர். சென்னை கோட்டூரில் உள்ள இத்தகைய சிறுவர் காப்பகத்தில் ஈடுபாடு கொண்டவராய்க் கருதப்படுகிறவர். இந்தச் சிறுவனை அங்கே சேர்க்கலாமா என்று அவரிடம் கேட்டேன். அந்தப் பையனின் நிலைமையை எடுத்துச் சொன்னேன். ‘இயலாது’ என்று ஒற்றைச் சொல்லில் முடித்து விட்டார். ஒருவேளை இவர் இந்தச் சிறுவனைப்பற்றி திரைப்படமோ அல்லது தொலைக்காட்சித் தொடரோ தயாரித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி பத்மஸ்ரீ பட்டம்கூட வாங்கலாம்.

அஞ்ஞான வாசத்தில்...

இவனது அஞ்ஞான வாசத்தை தடுக்கும் விடுமுறைக் கால ஏற்பாடாக, நான் வாழும் பகுதியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் இவனைச் சேர்த்துக் கொண்டது. சேர்த்த மறுநாளே, இந்த நிறுவனத்திற்கு யாரோ ஒருவர் ஒரு காரை அன்பளிப்பாய் வழங்கியிருப்பதாகவும், அமைச்சர் சற்குணபாண்டியன் அவர்கள் அந்த கொடையாளி சார்பில் காரின் சாவியை தொலைக்காட்சி சாட்சியாக இவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இதற்குரிய ஏற்பாடுகளை நான் செய்யவேண்டும் என்றும் எனக்கொரு செய்தி வந்தது. நான்கூட, இந்தப் பையனின் நலத்திற்காக இந்த ஏற்பாட்டை செய்வதற்கு முயற்சித்திருப்பேன். ஆனால் சம்பந்தப்பட்ட அமைச்சர் அவர்கள், தனது மகன் திருமண அழைப்பிதழை என் இல்லத்திற்குக் கொண்டு வருவதாகவும், நான் வீட்டிலேயே இருக்கவேண்டும் என்றும், அவரது நேர்முக உதவியாளர் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார். இதற்காக நான் இரண்டு நாள் வீட்டுக்காவலில் இருந்தேன். அந்த அமைச்சரின் மகன் திருமணம் இனிதே நடைபெற்றதை பத்திரிகைகளில் தெரிந்துகொண்டேன். சில சமயம் வேண்டியவர்களுக்கு நேரில் அழைப்பிதழ்களை கொடுக்க வேண்டும் என்ற ஆர்வக் கோளாறில், இப்படி ஏற்படுவதுண்டு. இதற்காக அமைச்சர் மீது எனக்கு வருத்தமும் இல்லை. என்றாலும், இந்தப் பின்னணியில் நான் அவரைச் சந்திக்க விரும்பவில்லை. இதனால் அந்தச் சிறுவனை அந்த நிறுவனமும் தன்னிடம் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. என்றாலும்-

வழக்கமான தொண்டு நிறுவனங்களிலிருந்து சிறிது விதிவிலக்காக உள்ள ஒரு நிறுவனத்தில் இப்போது இந்தச் சிறுவன் இருக்கிறான். இவனது ஏழைப்பெற்றோர் சில நூறு ரூபாய் நோட்டுக்களை செலவழித்து மூன்று மாதத்திற்கு ஒரு தடவை, முறை வைத்து இவனைப் பார்த்து வருகிறார்கள். இந்தச் செலவைவிட இன்னொரு சிக்கல்... பதினைந்து வயதை தாண்டிய சிறுவர்களை இந்த நிறுவனத்தில் வைத்துக்கொள்ள இயலாதாம். இப்போது இவனுக்கு பதினான்கு. ஓராண்டு காலத்தில் இவன் சென்னையில் பெற்றோரிடம் அனுப்பப்படுவான். இப்போது விடுமுறையில் வரும்போதெல்லாம் வீட்டை விட்டு ஓடிவிடுகிறான். அவனது பெற்றோர்கள் தங்களது அன்றாட ஜீவனத்தொழிலை ஒதுக்கிவிட்டு, இவனை நாடு நகரெங்கும் தேடிப்பிடித்து கொண்டுவரவே பொழுது போய்விடும்.

பதிலுக்காக ஒரு கேள்வி

இந்தச் சிறுவனாவது, ஓரளவு வசதிபடைத்த எனது பராமரிப்பில் இருக்கிறான். எங்காவது தொலைந்து போனாலும், எப்படியாவது அவனை என்னால் மீட்டு விடமுடியும். ஆனால் ஏழைப் பெற்றோருக்குப் பிறந்து, உற்றோருக்கும் முகச்சுழிப்பை ஏற்படுத்தி, திக்கற்று திசையற்று திரியும் மனநோயாளி குழந்தைகளை முழுமையாய் அரவணைக்க தமிழக அரசிடம் காப்பகம் ஏதும் இருக்கிறதா? உடல் ஊனமுற்றோர், விதவைகள், முதியவர்கள், படித்த ஏழைப்பெண்கள். போன்றவர்களுக்கு நிதியுதவி வழங்கும் தமிழக அரசிடம் இத்தகைய சிறுவர்களையும் பராமரிக்க ஏதாவது திட்டம் இருக்கிறதா? இந்தப் பாமரனுக்கு அப்படி இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழக அரசு இந்த கேள்விக்கு எனக்கு பதிலளிக்கவில்லை என்றாலும், இத்தகைய சிறுவர்களுக்காக புள்ளி விபரங்களில் போகாமல், ஒரு நல்ல விடையை கண்டுபிடிக்க வேண்டும்.


நவசக்தி வார இதழ் — 1999.

"https://ta.wikisource.org/w/index.php?title=சமுத்திரம்_கட்டுரைகள்/014&oldid=1863622" இலிருந்து மீள்விக்கப்பட்டது