உள்ளடக்கத்துக்குச் செல்

சமுத்திரம் கட்டுரைகள்/015

விக்கிமூலம் இலிருந்து

ஒருவரின் தனிப்பட்ட
சொந்தப் பிரச்சினைகளையும்,
சர்வதேச பிரச்சினைகளுடன்
இணைத்து, அதற்குரிய தீர்வை
குறிப்பிடுபவர் எனது பெரியவரும்
தோழருமான, இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள்
தமிழ் மாநில செயலாளரான
எம். கல்யாணசுந்தரம்.


பொது மருத்துவமனையில்
கைபிசகி, காலொடிந்து
சேர்க்கப்பட்டிருந்த போதுகூட,
அங்கே சிபாரிசுக்காக வந்த
ஒருவருக்கு அந்த இடத்திலேயே
பிசகிய கையோடு, புன்னகை
மாறாது கடிதம் எழுதிக்
கொடுத்தவர்.

பெரியவரும்,
தோழரும்

பெரியவர் எம். கல்யாண
சுந்தரம் அவர்களைப் பற்றி
எழுதுகின்ற இந்த சமயத்தில்
உடலெல்லாம் புல்லரிக்கிறது.
எத்தனையோ தலைவர்களை
நெருங்கிய வட்டாரத்திலிருந்து
பார்த்திருக்கிறேன், பழகி
இருக்கிறேன். கசப்பும் உண்டு,
இனிப்பும் உண்டு. ஆனால்,
எம்.கே. அவர்களுடன் எனக்கு
இருந்த தொடர்பு வாழ்நாள்
முழுவதும் நினைத்து மகிழக்கூடிய
ஒன்றாகும். இப்படிப்பட்ட ஒரு
அபூர்வமான மனிதரை எனது
எஞ்சிய வாழ்நாளில் பார்க்க
முடியுமா என்பது சந்தேகம். என்
மனதுக்குள், இப்போது, எம்.கே.
அவர்கள் என்னிடம் காட்டிய
அன்பையும், உதவியையும்
உயிரூட்டிக் கொண்டே, அவர்
இன்னும் இருப்பதாகவே
அனுமானித்துக் கொண்
இருக்கிறேன்.


பெரியவர் எம்.கே.
அவர்களை எனது பள்ளிக்
காலத்திலிருந்தே அதிசயமாக
நினைத்திருக்கிறேன். தமிழக
சட்டப் பேரவையில், அவர்
ஆற்றிய உரைகளும், கேட்ட

கேள்விகளும் அந்தக் காலத்திலேயே, என் மனதில் அவரை ஒரு அதிசயத் தலைவராகவே உருவங் கொள்ளச் செய்தது. பிறகு அவரை சென்னையில் சந்திக்கும் பேறு கிடைத்தபோது, எனக்குக் கிடைத்த மகிழ்ச்சியை சொல்லால் வடிக்க இயலாது. நான் தாமரையில் பல கதைகள் எழுதியதன் மூலம் எம்.கே. அவர்களுக்கு, என்னை நன்றாகத் தெரியும்.

பதறிப்போன எம்.கே. .....

இத்தகைய பின்னணியுடன், பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எழும்பூரில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் தோழர் ஒருவரின் கல்யாண நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டோம். எம்.கே. அந்த திருமண நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நான் வாழ்த்திப் பேசினேன். அப்போது இளைஞனாக இருந்த நான் வாழ்த்துரையின் போது பழைய தலைமுறை பயனற்றுப் போய் விட்டது என்றும், புதிய தலைமுறையால்தான் நாட்டிற்கு சுகத்தைக் கொண்டுவர முடியும் என்றும் குறிப்பிட்டேன். இறுதியில் பேசிய எம்.கே. அவர்கள், இதற்குப் பதிலளிக்கும் வகையில், என் படைப்புக்களை பலவாறு பாராட்டிவிட்டு, நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்ததுடன், நாட்டைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் பழைய தலைமுறையினரை சமுத்திரம் இப்படி பேசலாகாது என்று மிகமிக இனிமையாக தெரிவித்தார். இந்த அர்த்தத்தில் அவர் சொன்னாரே தவிர, அந்த பதில் இனிமையாகவும், ஆணித்தரமாகவும், என்னைத் திருத்துவது மாதிரியும் இருந்தது.

துடித்துப்போன நான்.....

நான் துடிதுடித்துப் போனேன். எம்.கே. அவர்கள் நாட்டின் விடுதலைக்கு ஆற்றிய பணியையும், ஒரு நாளில் இருபத்துநான்கு மணி நேரமும், நாட்டு மக்களைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பதும் நான் அறிந்ததே. அப்படிப்பட்ட ஒரு உன்னத தலைவனின் மனதை புண்படுத்தி விட்டோமோ என்று கிட்டத்தட்ட அழும் நிலைக்கே வந்துவிட்டேன். திருமண நிகழ்ச்சிக்குப் பிறகு அவரிடம் என் பேச்சுக்கு விளக்கம் அளித்து, பழைய தலைமுறையினரின் தியாகத்தை குறிப்பாக எம்.கே. அவர்களின் தியாகத்தை நான் போற்றிப் பாதுகாப்பேன் என்று சொன்னதுடன், அவரிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டேன். அவரும் ஒரு தந்தைக்குரிய கனிவுடன் என் முதுகைத் தட்டிக் கொடுத்தார்.

இதற்குப் பிறகு, எம்.கே. அவர்களுடன், ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பேறு எனக்குக் கிடைத்தது. அவர் என்னைப் பார்த்து ஒரு புன்முறுவலைத் தோற்றுவிக்கும்போதெல்லாம் நான் சொக்கிப் போவேன்.

சர்வதேச பிரச்சினையும்—சொந்த பிரச்சினையும்...

நான் சென்னை தொலைக்காட்சியில் பணியாற்றியபோது எனக்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டது. அரசு பணியில் நியாயப் போராட்டம் தொடுத்த எனக்கு, அதன் விளைவாக பல்வேறு பிரச்சினைகள் சொந்த வாழ்விலும் ஏற்பட்டன. இதற்கு எம்.கே. அவர்களின் ஆலோசனையையும், உதவியையும் பெறலாம் என்று ஒரு எண்ணம் ஏற்பட்டது. எனது இனிய நண்பரும், பாட்டாளிக் கவிஞருமான திரு. கே. சி. எஸ். அருணாசலம் அவர்களுடன், திரு. எம்.கே. -வை, தியாகராயநகரில் அவர் வசித்த தோழர் வீட்டில் சென்று பார்த்தேன்.

எனது பிரச்சினைகளை அவரிடம் சொன்னேன். அவர் உடனடியாக உதவி வழங்குவதாகக் கூறினார். பிறகு எனது பிரச்சினை, சர்வதேசப் பிரச்சினையுடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று முன்னுரை கூறிவிட்டு, அதற்கு விளக்கமளித்தார். அந்த விளக்கத்தால் இன்னும் நான் ஒரு சிறந்த எழுத்தாளனாக வராமல் இருக்கிறேன் என்றால், அது என்னுடைய குற்றம்தான். பாரதம், தனது சமதர்ம இலக்கை நோக்கிச் செல்வதற்கு இடையூறாக மேல்நாட்டு சக்திகள், வர்த்தகக் கலாச்சாரத்தை நமது நாட்டில் உருவாக்கி, வியாபார நடத்தையை அறிமுகம் செய்துவிட்டதால், என்னைப் போன்றவர்கள் அதற்கு ‘அரவானாய்’ ஆக்கப்படுகிறார்கள் என்றார்.

சொந்தப் பிரச்சினைகளில், சோர்வு கொள்ளாமல், சர்வதேச ரீதியில் நிலவும் சமதர்ம எதிர்ப்புச் சக்திகளுக்கு எதிராக எனது பேனாவைத் திருப்ப வேண்டும் என்றார் இப்படி கொள்கையளவில் பேசிவிட்டு, அவர் சும்மாவும் இருக்கவில்லை. எனது பிரச்சினைகளையும் தீர்த்து வைத்தார். அவர் எனது பிரச்சினையை இப்படி வேறு முறையில் ஆக்கியபோது நான் புல்லரித்துப் போனேன். அவர் காலைத் தொட்டு வணங்கி, எனது பேனாவை அவரிடம் கொடுத்து அதை எனக்குத் திருப்பித் தரும்படி வேண்டிக் கொண்டேன். அவரும் சிறிது நேரம் என்னையும், அந்தப் பேனாவையும் மாறிமாறி உணர்ச்சித் ததும்ப பார்த்துவிட்டு, பின்னர் அதை என்னிடம் நீட்டினார். தள்ளாத வயதிலும், தன்னை பார்க்க வரும் தோழர்களிடம் அவர் பேசிய விதம் பண்பின் உச்சகட்டமாகும்.

மருத்துவமனையில் எம்.கே.

எம்.கே. அவர்கள் சென்னைப் பொது மருத்துவமனையில், நோய்வாய்ப்பட்டுச் சேர்க்கப்பட்டிருந்த நேரம். நான் அவரை அங்குப் போய்ப் பார்த்தேன். அவரது கையிலும் காலிலும் கட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த அவர், பேச்சுவாக்கில் ‘இங்கேகூட சிபாரிசுக்காக ஒருவர் என்னைப் பார்க்க வந்தார்’ என்று சிரிப்பும், கேலியுமாக சொன்னார். அவர் சொன்னதன் உள் அர்த்தம் புரிந்த நான் ‘இப்படித்தான் உலகம் ஆயிட்டுது’ என்று சலிப்பாகச் சொல்லிவிட்டு, ‘நீங்கள் என்ன செய்தீர்கள்’ என்றுக் கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே, ‘அவர் வந்த காரியத்தை முடித்துக் கொடுத்தேன்’ என்றார். எனக்கு அவரை ஐந்து நிமிடம் மெளனமாகப் பார்க்க முடிந்ததே தவிர, மறுவார்த்தை பேச முடியவில்லை. இவர் அற்புதத்திலும் ஒரு அற்புதம். மனிதாபிமானத்திற்கு ஒட்டுமொத்தமான உருவம்.

எம்.கே. தலைமையில் திரைப்படம்

எனது ‘ஊருக்குள் ஒரு புரட்சி’ என்ற நாவல் ‘புத்தம் புது காலை’ என்ற தலைப்பில் திரைப்படமானது. (படம் இன்னும் டப்பாவுக்குள்ளேயே இருப்பது என்பது வேறு விஷயம்). சோவியத் கலாச்சார மாளிகையில் இந்திய சோவியத் நட்புறவுக் கழகத்தின் ஆதரவுடன் போட்டுக் காண்பித்தோம். எம்.கே. அவர்கள் அதற்கு தலைமை வகித்தார். படம் முடியும் போது அவர் உரையாற்றுகையில், அந்தப் படத்தை பெரிதும் பாராட்டினார். இதை வெளிச்சத்திற்குக் கொண்டுவர எல்லோரும் முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பிறகு, தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசும்போது, இந்தப் படம் அரங்கேறுவதற்கு ஆவண செய்வதாகக் கூறினார். ஒரு வாரத்திற்குள், தம்மைச் சந்திக்கும்படியும் கேட்டுக்கொண்டார். அவரது செல்வாக்கில் அந்தப் படத்தை பிரபலப்படுத்தியிருக்கலாம். ஆனாலும், அவரது தள்ளாமையைக் கண்டும், அந்த மகத்தான தலைவரை, அவருக்கு இருக்கும் கட்டாயப் பணிகளைக் கருத்தில் கொண்டும், என்னளவிலாவது விட்டு வைக்க வேண்டும் என்றும் நினைத்தேன். அதனால், இது சம்பந்தமாக அவரிடம் நான் எதுவுமே பேசவில்லை. அந்த தியாகிக்கு அவரது சிரமத்தைக் கூட்டாமல் இருப்பதற்காக நான் என் வரையில் செய்த சிறு ‘தியாகம்’ இது.

மகான்களிடம் போனால் அவர்களின் இருப்பிடத்தில் நமக்கு ஏதோ ஒருவிதமான சுக உணர்வு ஏற்படும் என்பார்கள். அவர்களிடம் உள்ள ஆன்மீக சக்தியால் அவர்கள் அருகே இருக்கும்வரை வாழ்க்கைப் பிரச்சினைகளோ துக்கச் சுமைகளோ மறந்துபோய்விடும் என்பார்கள். இதுபற்றி, எனக்கு அதிகமாகத் தெரியாது. ஆனால், எம்.கே. அவர்கள் முன்னிலையில், நாம் இருக்கும்போது மட்டுமல்ல, அவரைவிட்டுப் பிரிந்து வீட்டிற்கு வந்தபிறகும்கூட, சுமையாகத் தெரிந்த வாழ்க்கை நமக்கு சுவையாகத் தெரியும். காரணம், அவர் சிறியன சிந்தியாதார். ஒரு தடவை தோழர் வி.பி. சிந்தனிடம் “உங்களுக்கும் எம்கேவுக்கும் சாவே, கிடையாது. எந்த விபத்திலிருந்தும், ஆபத்திலிருந்தும் நீங்கள் தப்பித்து விடுவீர்கள்” என்று கூறினேன். உடனே, அவர் என் கைகளைப் பிடித்துக் கொண்டு, “தயவு செய்து சிறியவனான என்னை அந்தப் பெரியவருடன் ஒப்பிடாதீர்கள்” என்று உணர்ச்சித் ததும்ப கூறினார்.

நான் எத்தனையோ கதைகள் எழுதியிருக்கிறேன். நாவல்கள் படைத்திருக்கிறேன். கவிதைகள் எழுதியிருக்கிறேன். ஆனால், எம்.கே.--யுடன் எனக்கு ஏற்பட்ட நட்பையும், தோழமையையும், அவரது இதய விசாலத்தையும் என்னால் உள்ளது உள்ளபடி விளக்க முடியவில்லை. சில சங்கதிகள் அனுபவத்தால் உணரக் கூடியதேயன்றி, அடுத்தவர்களுக்கு சொல்லியல்ல என்ற கருத்தை இப்பொழுது நான் முழுமையாக நம்புகிறேன். திரு. எம்.கே. அவர்களை, நான் எப்போதும் பெரியவர் என்ற முறையிலேயே தரிசித்தேன். ஆனால், அவரோ என்னிடம் தோழன் என்ற முறையிலேயே பேசினார்; நடந்து கொண்டார்.


எம். கல்யாணசுந்தரம் நினைவுமலர் — 1988.

"https://ta.wikisource.org/w/index.php?title=சமுத்திரம்_கட்டுரைகள்/015&oldid=1863623" இலிருந்து மீள்விக்கப்பட்டது