உள்ளடக்கத்துக்குச் செல்

சமுத்திரம் கட்டுரைகள்/016

விக்கிமூலம் இலிருந்து

தோழர் சுப வீரபாண்டியன்,
தன்னை ஆசிரியராகக் கொண்ட
“இனி” என்ற இதழக்கு
இலக்கியத்தின் ஒரு முனையில்
உள்ள என்னையும், மறுமுனையில்
நின்றாலும், மனிதாபிமானியான
எழுத்தாளர் புஷ்பா தங்கத்துரை
அவர்களையும் நேருக்கு நேர்
சந்திக்க வைத்தார்.


இலக்கியம் என்பது ஒரு
தொடர்ச்சி. இலக்கியக்
கருத்துக்கள் நிரந்தரமல்ல.
ஆனால், இலக்கியம் நிரந்தரம்-
அதாவது மனிதநேய இலக்கியம்.

காரச்
சுவையான
கலந்துரையாடல்

சமுத்திரம்: தோழர் புஷ்பா,
ரொம்ப நாளாவே நமக்கு
ஒருத்தரை ஒருத்தர் தெரியும்.
இலக்கியத்தால் சமுதாயத்தை
மேம்படுத்த முடியாதுன்னு நீங்க
சொல்லுவீங்க. இப்போ எனக்கு
புஷ்பா தங்கதுரைகிட்ட பேசுறதா,
ஸ்ரீ வேணு கோபாலன்கிட்ட
பேசுறதான்னு தெரியலே.
இருந்தாலும் முதல்ல ஸ்ரீ
வேணுகோபாலன்கிட்ட பேசுறேன்.
நீங்களே மனிதர்களை மேம்
படுத்தக்கூடிய சில கதைகளை
ஸ்ரீவேணுகோபாலன்கிற பெயர்லே
எழுதியிருக்கீங்க. அப்புறம் எதை
வச்சு இலக்கியத்தால் சமுதாய
த்தைத் திருத்த முடியா துன்னு
நீங்க சொல்றீங்க?


புஷ்பா: என்னோட கருத்து
என்னன்னா... நானும் எவ்வளவோ
படிக்கிறேன். படிச்ச பிறகு என்
அறிவு வேணும்னா கூடுதே தவிர,
பண்பாடு கூட மாட்டேங்குது.
இப்போ, நான் ரயில்லே
போயிக்கிட்டிக்குபோது, ஒரு
பிச்சைக்காரன் வாரான்னு
வச்சுகிங்க... நான் எடத்தை விட்டு
எழுந்திருந்து, கால்சட்டைப்
பையிலேயிருந்து பணத்தை

எடுத்துப் போடறதுக்குப் பொறுமை இருக்காது. ஆனா, அங்க வாழக்காய் விக்கிறவன் உக்காந்திருப்பான் சார்.... அவன் எழுந்து உள்ளேருந்து காசை எடுத்துக் குடுப்பான் சார். படிக்காத அவரு பெரியவரா, படிச்ச நான் பெரியவனா?

சமுத்திரம்: டால்ஸ்டாய் சொன்னாரு. ‘அனுபவம் முக்கியமில்லே. அனுபவத்திலேருந்து பெறக்கூடிய படிப்பினையே முக்கியம்’ன்னாரு. அனுபவம்கிறது ஜன்னல். அந்த ஜன்னல் வழியா தெருவைப் பாக்கணுமே தவிர, ஜன்னலே தெருவாகாது.... இல்லியா... இப்போ இப்போ நீங்க சொன்னது ஒருவிதத்தில் சரிதான். ‘மெத்தப் படிச்சவன் சுத்தப் பைத்தியக்கார’ம்பாங்க. சமீபத்தில் பேராசிரியர் அன்பழகன் பேசினாராம். ‘பெரியார் அதிகமாப் படிக்கலே. அதுனாலேதான் அதிகமா சிந்திச்சார்’ன்னு. சரி, நீங்க சொன்ன ரயில்லே, உங்க இடத்தில் நான் இருந்திருந்தா, அந்த வாழக்காய் விக்கிறவன் உக்காந்திருந்த தோற்றம், அவன் எழுந்து வேட்டிய தூக்கின விதம், அதிலேருந்து ரூபாய் எடுக்கிறது, அதை ஒரு கதையில் சொல்லியிருப்பேன். என் வருத்தம் என்னன்னா நீங்க அதையே கொஞ்சம் செக்ஸ் கலந்து, அந்த வாழக்காய்காரனை ஒரு பொண்ணா மாத்தி, அவ ஜாக்கெட்டுலேயிருந்து காசை எடுத்துக் குடுத்தான்னு சொன்னாலும், அதுலே மனிதாபிமானம் இருக்கு. இதை ஏன் நீங்க எழுதாம விட்டீங்க?

புஷ்பா: நான் என்ன சொல்றேன்னா, நீங்க அப்படி எழுதிட்டா மட்டும் படிக்கிறவன் உடனே மாறிட மாட்டான். இப்போ வரதட்சணையைப் பத்தி இந்திலே ஒரு சினிமா வந்திருக்கு. உருக்கமா எடுத்திருக்கான். கண்ணுலே தண்ணீர் வந்திடும். ஆனா அதைப் பாத்து எத்தனை பேர் மாறிட்டாங்க? ஒன்னும் பிரயோஜனமில்லே. எனக்கு 15 வயசுலே படிஞ்சதுதான் மனசுலே உறைஞ்சு நிக்குது. நம்மளை விடுங்க. அமெரிக்காவில நம்மவிட படிக்கிறவங்க அதிகம். அங்க சிறந்த - மிகச் சிறந்த நாவல்களைக்கூட, முதல் நாலுபக்கம் படிச்சவங்க எத்தனை பேரு, பாதி வரைக்கும் வந்தவங்க எத்தனை பேரு, முழுப் புத்தகத்தையம் படிச்சவங்க எத்தனை பேருன்னு கணக்குப் பாத்தா, முழுசும் படிச்சவங்க ரொம்பக் குறைவு சார். அமெரிக்காவிலேயே அப்படின்னா, ரொம்ப ரொம்பக் குறைவான ஆளுங்க மட்டுமே படிக்கிற நம்ம தமிழ் நாட்டில், எழுதி எழுதி கோடிக்கணக்கான மக்களையும் திருத்தப் போறோம்கிறது லேசான விஷயமில்லே.

சமுத்திரம்: புஷ்பா, சமூக வளர்ச்சிங்கிறது, ஒரு பரிணாம வளர்ச்சி. ஒரு புரட்சிப் படைக்குப் பின்னாலே ஒரு கலாச்சாரப் படை வேணும். ஆயிரம் பேருதான் படிக்கிறான். கோடிக்கணக்கானவங்களை எப்படி எழுத்து போய்ச் சேரும்னு கேக்கறீங்க. பெரியார் நடத்தின ‘குடியரசு’ பத்திரிகை ஏற்படுத்தின தாக்கத்தை, பெரிய பத்திரிகை எதுவும் ஏற்படுத்தல. நேரடியா மக்களை நீங்க தொட முடியலேன்னாலும், மக்கள்கிட்ட வேலை பாக்கிற தன்னலமற்ற தொண்டர்கள்கிட்ட உங்க எழுத்து போனாலே போதும். அவன் அதை மக்கள்கிட்ட எடுத்துக்கிட்டுப் போவான். ஹிட்லர் சொன்னான் - அவன் மோசமானவன் - ஆனா அவன் அருமையா சொன்னான் - ‘சரித்திரம் வென்றவர்களால் எழுதப்படுகிறது’ன்னான். நான் ஏதாவது துன்பத்தைச் சந்திக்கும்போது “நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்” அப்பிடின்னு என் பாட்டன் எழுதுனது தான் ஞாபகம் வருது. எப்பவும் இந்த வார்த்தை என் மனசுலே ஒலிச்சுகிட்டிருக்கு. அப்புறம் லியோ டால்ஸ்டாய், போலீஸ் அட்டகாசத்தைப் பத்தி எழுதியிருக்கிற ‘புத்துயிர்ப்பு’ நாவலை மறக்க முடியுமா?

புஷ்பா: இலக்கியத்தை, சமூக மாற்றத்துக்கான காரணங்களில் ஒன்னுன்னு வேணும்னா சொல்லலாம். ஒரே காரணம்னு சொல்ல முடியாது. உலகம், 1930-40 வரைக்கும் ரொம்ப மெதுவாத்தான் நகர்ந்தது. மாற்றங்களே இல்லை. சயின்ஸ் வந்தப்புறம் ரொம்ப வேகம். பென்சிலின் எல்லாம் கண்டுபிடிச்ச பிறகு அது வாழ்க்கை முறை, சிந்தனை எல்லாத்தையும் மாத்திடுச்சு. விஞ்ஞானத்துக்கு முன்னால் இலக்கியம் பயனற்றுப் போச்சே.

சமுத்திரம்: நீங்க சொல்றது மாதிரி என்னதான் விஞ்ஞானம் வந்தாலும், அடிப்படை மனிதன் இருக்கானே அவனோட உணர்வுகள், சமூகப் பங்கீடுகள், விஞ்ஞானத்தைக் கூட, விஞ்ஞானத்தை அதன் விளைவுகளை எப்படிப் பகிர்ந்தளிக்கிறது எல்லாத்துக்கும் இலக்கியம் வேணுமே. இப்போ, கிராமத்தில் ஒரு பெரியவரு ஒரு ஆட்டை, ஒரு கிடா கிட்டே சேர்றதுக்கு விடறாரு. நான் புது ஆளா அங்க நின்னா அது வெக்கப்படுது. நான் அந்தப் பக்கம் போனப்புறம், அது ரெண்டும் லவ் பண்ணுது. ஆட்டுக்கு இருக்கிற வெக்கம்கூட நம்ம ஊரு சினிமாக்காரனுக்கும் இல்லே. சினிமாக்காரிக்கும் இல்லே. இந்தக் காலக்கட்டத்தில் ஒரு வைராக்கியம், ஒரு மான உணர்வு இதுக்கெல்லாம் இலக்கியம் தேவைப்படுது. பிரெஞ்சுப் புரட்சிகூட, வால்டேர், ரூசோ எழுதின இலக்கியத்தாலேதானே வெடிச்சது.

புஷ்பா: அப்படியில்லே... ஒரு சமூகம் புரட்சிக்குத் தயாரா இருந்த காலத்தில் வால்டேரும், ரூசோவும் எழுதினாங்க. எந்த சமூகம் புரட்சிக்கு தயாரா இருக்கோ, அப்போ அந்த சமூகத்தில நாமும் எழுதலாம். பயனிருக்கும்.

சமுத்திரம்: அப்போ, இலக்கியத்துக்குப் பயனிருக்கு.

புஷ்பா: ஆனா அதுதான் ஒரே காரணம்னு சொல்ல முடியாது.

சமுத்திரம்: புஷ்பா, இலக்கியத்துக்கு ஒரு தொலைநோக்கு உண்டு. கார்க்கி எழுதுன ‘தாய்’ நாவல்லே, கிராமத்துலே இருக்கிற தொழிலாளி மாஸ்கோவுக்குப் போவான். ஆனா, மாஸ்கோவில் இருக்கிற படிச்ச தொழிலாளி இவனை எளக்காரமா பார்ப்பான். அப்பவே, சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு விதை ஊன்றப்படுவதை கார்க்கி எவ்வளவு சூசகமா, தொலைநோக்கோட சொல்லியிருக்கார் பாருங்க. அப்புறம், இலக்கியம்கிறது ஒரு காலப்பதிவு. இப்போ நம்ம காலத்துத் தமிழர்கள் சினிமாவுக்கு இரையாப் போயிட்டானேங்கிற வருத்தத்தை நான் ஒரு கதையில் பதிவு செய்திருக்கேன்.

புஷ்பா: ஏங்க... அவனுக்கு வேற வழியில்லே. பொழுது போக்கில்லே. சினிமாவுக்குப் போறான்.

சமுத்திரம்: கன்னடக்காரனுக்கு வேற வழியிருக்கு. ஆந்திராகாரனுக்கு இருக்கு. கேரளாக்காரனுக்கு இருக்கு. இவனுக்கு மட்டும் இல்லியா?

புஷ்பா: மனித இனம் தானாகவே மாறிப்போயிக்கிட்டு இருக்கு. யாரோட தலையீடும் தேவையே இல்லை.

சமுத்திரம்: அந்த மாற்றத்துக்கு இலக்கியம் உதவுது.

புஷ்பா: பெரிசா ஒன்னும் உதவலை. சாதாரண மனிதனுக்கு, நேத்து ரேஷன்லே அரிசி போட்டான். இன்னிக்குப் போடலை, இப்படிப் பொருளாதாரக் காரணம் தான் பெரிசா தெரியும். 1967ல் தி.மு.க. வரும்னு ஒரு பத்திரிகையும் எழுதலே. பத்திரிகைகள், இலக்கியம் எல்லாம் ஒரு கருத்தையும் உருவாக்க முடியாது.

சமுத்திரம்: ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் என்கிட்ட சொல்றாரு “எனக்கும் ஆட்சியில சலனங்கள், சபலங்கள் வரது உண்டு. ஆனா உங்க எழுத்துக்களை நினைச்சுக்கிட்டு, நான் உடனே சரி பண்ணிக்குவேன்” அப்படிங்கிறாரு. என் எழுத்துன்னா அது நான் மட்டுமில்லே, எனக்கு புதுமைப்பித்தன், அழகிரிசாமி, விந்தன் சொல்லிக் குடுத்தாங்க. மக்கள் சொல்லிக் குடுத்தாங்க. நான் வாழக் கூடிய சமூகம் சொல்லிக் குடுத்துச்சு.

புஷ்பா: ஒருத்தரை மாத்தி உங்களுக்கு என்ன நடந்திடப் போவுது?

சமுத்திரம்: அவர் சாதாரண ஒருத்தரல்ல. சாதாரணமான லட்சக்கணக்கான மக்களின் மீது நடைபெறும் போலீசின் கொடுமைகளை, அராஜகங்களை தட்டிக் கேட்கும் நிலையில் உள்ளவர்.

புஷ்பா: நீங்க என்னதான் கரடியா கத்தினாலும், பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து ஒத்துக்கிற வரைக்கும் எதுவும் பயன்தராது. இப்போ நீங்க நூறுபேர் சேர்ந்து வரதட்சிணை கூடாதுன்னு எழுதுனாலும், ஒரு பொண்ணு அவளா சுதந்திரமா இவன் இல்லைன்னாலும் இன்னொருத்தன கட்டிக்க முடியும்னு தைரியம் வந்தாத்தான் வரதட்சிணையைப் போக்க முடியும்.

சமுத்திரம்: வரதட்சிணைப் பிரச்சினைங்கிறது, மேட்டுக்குடி தங்கள் பிரச்சினையை சமூகத்தின் மீது திணிக்கிறது. சாதாரண மக்களுக்கு வரதட்சிணைப் பிரச்சினையே இல்ல. யாராவது இந்த வரதட்சிணைப் பிரச்சினையில பெண்களுக்கு சொத்துரிமை உண்டுங்கறத கேக்கறானா? சரி, இலக்கியத்துனால எந்தப் பயனும் இல்லைன்னு சொல்ற நீங்க அப்புறம் எதுக்கு எழுதுறீங்க?

புஷ்பா: சம்பாதிக்கறேன். பணம் கெடைக்குது. அதனால் எழுதுறேன். கருத்துக்காக எழுதுன புதுமைப்பித்தன் பேரே இப்ப மங்கிகிட்டுதானே வருது.

சமுத்திரம்: அதெல்லாம் இல்ல. அந்தக் காலத்த அவர் பதிவு செய்தார். இப்ப நீங்க மேல போங்க.

புஷ்பா: அப்ப இலக்கியம்கறது ஒரு காலகட்டத்துக்கு மட்டும்தான் உதவும்.... அப்படிங்கிறீங்களா?

சமுத்திரம்: இல்ல... இலக்கியம்கறது ஒரு தொடர்ச்சி... இலக்கியக் கருத்துக்கள் நிரந்தரமில்ல... ஆனா இலக்கியம் நிரந்தரம்.

புஷ்பா: கடந்த பத்தாண்டுகள்ல நிக்கக்கூடிய இலக்கியம் எது?

சமுத்திரம்: நிறைய இருக்கு. பொன்னீலனின் ‘புதிய தரிசனங்கள்’ ஒரு காலப்பதிவு.

புஷ்பா: நான் அதப் படிக்கல. இப்போ நானே படிக்காதபோது நம்ம நாட்டுல எத்தன ஜனங்க அதைப் படிச்சிருக்கப் போறாங்க.

சமுத்திரம்: போராளிகள் படிக்கிறாங்க.

புஷ்பா: அவங்க படிச்சிட்டுப் போகட்டும்.

சமுத்திரம்: அவங்க படிச்சிட்டுப் போறதில்ல. அவங்க எதையாவது செய்வாங்க.

புஷ்பா: சார்... நான் ஸ்ரீவேணுகோபாலன்கிற பேர்ல அருமையான கதைகள் எழுதுனபோது 18 வருசத்துல ஏதோ பத்துப்பேர் வந்து பாராட்டிருக்காங்க. புஷ்பா தங்கதுரைன்னு எழுத ஆரம்பித்தற்கப்புறம் ஆறு வாரத்துல நான் பாப்புலராயிட்டேன்.

சமுத்திரம்: இப்போ ‘அந்தி மந்தாரை’ படம் பாரதிராஜா எடுத்திட்டிருக்காரே நீங்களும் பாத்தீங்கள்ல.... அதுல வர்ற அந்த தியாகியவிட நீங்க என்ன பெருசா கஷ்டப்பட்டுட்டீங்க? எதுக்கு சொல்ல வர்றேன்னா அறிமுகம் கெடைக்கலேங்கறதுக்குக்கா ஸ்ரீவேணுகோபாலன் புஷ்பா தங்கதுரையா...

புஷ்பா: இருங்க... இருங்க... அப்ப எனக்கு முன்னோடிகள் ஜெயகாந்தனும், தி. ஜானகிராமனும். எப்பப் பார்த்தாலும் தி. ஜானகிராமன் ஒரு அடல்ட்ரிய எழுதறது கவனிச்சிருக்கேன். தி. ஜா.-வ ரசிக்கிறவங்க இதை மறைமுகமா ரசிக்கிறாங்கன்னு நான் புரிஞ்சிக்கிட்டேன்.

சமுத்திரம்: இத நான் உறுதியா ஏத்துக்கிறேன்.

புஷ்பா: அப்புறந்தான் நானும் இதப் புரிஞ்சிக்கிட்டு கொஞ்சம் செக்ஸ் கலந்து எழுத ஆரம்பிச்சேன். ஆகையினால் நான் உங்களுக்கும்கூட சொல்றேன் அதுல ஒண்ணும் தப்பில்ல. நல்ல கதை எழுதறதோட கொஞ்சம் பணமும் பண்ணத்தானே வேணும்.

சமுத்திரம்: நான் புஷ்பா தங்கதுரைய மாத்தணும்னு பாத்தா நீங்க என்னை மாத்த முயற்சிக்கிறீங்க. சரி அவுங்கவுங்க வழியில் நாம நடந்தாலும், மனிதநேயத்த, மனித மேம்பாட்ட நமக்கேத்த வகைகள்ல சொல்லணும்.


— “இனி”, மே 1996

"https://ta.wikisource.org/w/index.php?title=சமுத்திரம்_கட்டுரைகள்/016&oldid=1863624" இலிருந்து மீள்விக்கப்பட்டது