சமுத்திரம் கட்டுரைகள்/017
சில மனிதர்கள், சிறந்த பாரதியின் கவிதைகள் |
பாரதி என்ற இதுவரை பாரதியார் |
தமிழறிந்த தண்டல்காரர்கள்
பாரதியாரை, இப்படி தமிழ்படித்தவரெல்லாம் தண்டல்காரர்களாகி கண்டபடி விமர்சிப்பது தமிழ் இலக்கியத்தில், இன்னும் தீர்க்கப்படாமல் வழி வழியாக வரும் ஒரு குறையையே எடுத்துக் காட்டுவதாக நினைக்கிறேன். தமிழ் இலக்கியத் திறனாய்வில் படைப்பாளிகளின் பின்னணியையும், அவற்றின் காலக்கட்டத்தையும், படைப்பாளியின் நிலையில், அந்தக் கட்டத்தில் நாம் இருந்திருந்தால் எப்படிச் செயல்பட்டிருப்போம் என்ற “பின் நோக்கும்” இல்லாததையே இது காட்டுகிறது. இந்த குறைதான் “தான் கள்ளி பிறரை நம்பாள்” என்பது மாதிரி பாரதி மேல் குற்றம் காண வைக்கிறது.
எடுத்துக்காட்டாக சொல்லப்போனால், குழந்தை அழுவதன் மூலம், பிறநாட்டு எதிரிகள், தன்நாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, கொன்று விடக்கூடாதே என்பதற்காக, பெற்ற குழந்தையையே கொன்ற தாய்க்கும், ‘தீர்மானம் என்று வந்து விட்டால், என் பிள்ளையைக் கூட கொல்வேன்’ என்று வீறாப்பு பேசிய, ஷேக்ஸ்பியரின் “லேடி மேக்பெத்”துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நம்மவர்களால் காண முடியாது. முன்னவள் செய்தது கொலை என்றாலும், அது தியாகம். பின்னவள் செய்தது கொலையல்ல என்றாலும் அது கொலையினும் கொடிய நெஞ்சத்தைக் காட்டுவது. இப்படிப்பட்ட தமிழ் இலக்கியச் சூழலில் பாரதியை, சரியாக அடையாளம் காட்ட வேண்டியது, நமது பொறுப்பாகிறது. பாரதியாரின் ஒவ்வொரு பாடலுக்கும் உரித்தான நிகழ்ச்சிகளையும் சமூகப் பின்தளத்தையும் ஆராய வேண்டும். இந்த முறைமைக்கும் காணிக்கையாக - நான் கேள்விப்பட்ட நிகழ்ச்சிகளை பகிர்ந்து கொள்கிறேன்.
கடையத்தில் கண்டனம்
பாரதியாரின் மனைவி செல்லம்மா பாரதி பிறந்த கடையத்தில், என் பள்ளியிறுதிப் படிப்பை முடித்தேன். பொதுவாக, பள்ளிப் பேச்சுப் போட்டிகளில் முதற் பரிசுகள் வாங்குபவன் நான். எஸ்.எஸ்.எல்.சி படிக்கும்போது, பாரதி நினைவாக நடந்த பேச்சுப் போட்டியில், எனக்குத்தான் முதற்பரிசு என்பது, மாணவர்கள் மத்தியில் முடிவான தீர்ப்பு. ஆனாலும் எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. நான், பாரதியாரின் “சொல்லத் தகாத” பாடல்களை சொல்லி விட்டேன் என்பதுதான் காரணம். ஒருவேளை என்னை, திராவிட இயக்கத்துடன் இணைத்துப் பார்த்திருக்கலாம். 1956ஆம் ஆண்டு வாக்கில், பாரதி என்ற பனை மரத்தடியில், அவன் கவிதை நுங்கின் சுவையைச் சொன்ன என் வார்த்தைகள் நடுவர்களுக்கு, கள்ளாக தெரிந்திருக்கலாம். ஆகையால், எனக்குக் கோபம் இல்லை. பரிசு என்பது ஒரு அங்கீகாரம். அந்த அங்கீகாரம் எனக்குத்தான் பரிசில்லாமல் கிடைத்தது என்பதால் - அதுவும் முதல் பரிசு வாங்கிய மாணவர் தோழனே ‘ஒனக்குத்தாண்டா கிடைத்திருக்கணும்’ என்று பெருந்தன்மையாக சொல்லிவிட்டதால், எனக்கு வருத்தமும் இல்லை. ஆனால் விவகாரம், அதோடு முடியவில்லை. அதுவரை, என்னைச் செல்லப் பிள்ளையாக நடத்திய ஆசிரியர்கள், என்னை விரோதப் பிள்ளையாக நடத்தத் துவங்கினார்கள். நின்றால் குற்றம், எழுந்தால் குற்றம். தனிப்பட்ட முறையில், வகுப்புகள் முடிந்ததும், என்னிடம் நிமிடக் கணக்கில் பேசும் என் அபிமான ஆசிரியர்கள்கூட, என்னை விரோதி மாதிரி பார்த்தார்கள்.
எனக்கோ தர்ம சங்கடம். பிராமண எதிர்ப்பு மாணவர்களோடும் சேர முடியவில்லை. பிராமண மாணவர்களுடனும் இணைய முடியவில்லை. பள்ளியில் இருந்து, நீக்கப்பட்டு விடக்கூடாதே என்பதற்காக, எனக்கு கொடுக்கப்பட்ட அத்தனை “பாராமுகங்களையும்” பார்த்து சகித்துக் கொண்டேன். என்றாலும், எனக்கு ஆசிரியர்கள்மீது கோபம் ஏற்படுவதற்குப் பதிலாக, பாரதி மீது பச்சாதாபம் ஏற்பட்டது. 1956-ஆம் ஆண்டில் பாரதியார் பாடல்களைப் பாடிய - அதுவும் பூசி மழுப்பிப் பாடிய எனக்கே இந்தக் கதி என்றால், நான் சொன்னதை விட கடுமையான பாடல்களை பாடியது மட்டுமல்ல - யாத்ததுபோல் வாழ்ந்த பாரதியை என்ன பாடுபடுத்தியிருப்பார்கள்! பாரதியின் அந்த ஊர் நடமாட்டத்தை விசாரிக்கத் துவங்கினேன்.
விசித்திர பாரதி
நல்ல வேளையாக, பாரதியாரின் சமவயது கிழவர்கள், அப்போது வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு, பாரதி மீது துவேஷமோ அல்லது ஆவேசமான பக்தியோ கிடையாது. அவர்களைப் பொறுத்த அளவில் பாரதி ஒரு விசித்திரமான மனிதன். அவ்வளவுதான். நான், அந்த முதியவர்களை, மெல்ல அணுகியதும் கொட்டிவிட்டார்கள். “சுப்பிரமணியமா, செல்லம்மா ஆத்துக்காரனா. சரியான கிறுக்கன்.... கழுதைக் குட்டி வாலைப் பிடித்துக்கிட்டு... அது பின்னாடியே, இந்த ஆறு பக்கமா ஓடுவான். இன்னொரு நாளைக்கு சேரில போய் வம்பளப்பான்.... அவங்க டீக்கடையில் ஒக்காருவான்.... ஒரு நாள்... சுடல மாடசாமிகூட ஆடுறான். ஆனால் மனுஷாள்னா உயிரை விடுவான்.... இப்போ என்னடான்னா, அவனுக்கு....” இந்த முதியவர்களின் தொனி, பாரதிக்கு, இத்தகைய கிறுக்குத்தனம் இல்லாதிருந்தால், இன்னும் அதிக பேர் புகழ் கிடைத்திருக்கும் என்பது மாதிரியும், அவனை ஒரு கெட்ட உதாரணமாக நினைத்து, ‘ஆசாரப்படி வாழ்ந்த தங்கள் பெயர், தெருவிற்கு குறுக்கே போகவில்லையே’ என்ற ஆதங்கம் ஒலிப்பது போலவும் தோன்றியது.
மறவன் பாட்டின் மர்மம்
பாரதியார், கடையத்தில் இருந்தபோது, பட்ட அவமானங்களும், ஏற்பட்ட வறுமையும் கொஞ்ச நஞ்சமல்ல. பொதுவாக, தீவிரமாக வாழ்க்கையை துவக்கி, பிறகு வாழ்வால் ‘குட்டுப்படுபவர்கள்’ இறுதியில் ‘ராமா கோவிந்தா’ ஏன்றோ அல்லது இயல்பான குழு உணர்வினால், சொந்த ஜாதியினருடனோ, சரண் புகுவது இயற்கை. பாரதி, அப்படிப் பட்டவன் அல்ல. கடையத்தில் வாழும்போது (அல்லது வாடும் போது) பக்கத்துச் சேரிக்குப் போய், அந்த மக்களோடு, உரக்கப்பேசி, பலமாகச் சிரித்து வாழ்ந்தவன். ஒரு சமயம் சேரியில் சுடலை மாடனுக்கு ‘கொடை’, மேளத்தோடு, வில்லுப்பாட்டும் அமர்க்களப்பட்டது. பாரதியார், சாமியாடத் துவங்கி விட்டாராம். உடனே பக்தர்கள், அவர் கையில் தட்டைக் கொடுத்து கற்பூரத்தை ஏற்றி விட்டார்கள். நாணயங்களை காணிக்கையாகப் போட்டார்கள். உடனே பாரதி கேட்டானாம்.
“நான் கேட்கிறதை ஒங்களால காணிக்கை கொடுக்க முடியுமா?”
“எது கேட்டாலும் கொடுக்கோம்.”
“முடியாது. நான் மூளையைக் கேட்பேன். உங்களால் தரமுடியுமா? கடவுள்தான் ஒங்களுக்கு ‘அதைக்’ கொடுக்கலியே”
பக்தர்கள் துணுக்குற்றபோது, பாரதி கலகலவென்று சிரித்தானாம். ஒருவேளை, சாமியாடும் பாமரமக்களை, அவன் செல்லமாகக் கண்டித்திருக்கலாம். எப்படியோ... உயர் ஜாதியில் பிறந்தவன் ‘ஹரிசன’ சுடலைமாடனை ஆடியது கண்டு பொறுக்காதவர்கள் பாரதியை எள்ளி நகையாடினார்கள். செல்லம்மாவை இளக்காரமாகப் பார்த்தார்கள். விருந்து, கேளிக்கைகளுக்கு, சுப்பையா (பாரதியின் செல்லப்பெயர்) அழைக்கப்படவில்லை. மொத்தத்தில், தள்ளாமல் தள்ளி வைத்தார்கள். இந்தச் சமயத்தில் அவன் பாடியதுதான் “மறவன் பாட்டு.”“மண்வெட்டி கூலிதின்னலாச்சே” என்று துவங்கி
“பேராசைக் காரனடா பார்ப்பான் ஆனால்
பெரியதுரை என்றிடில் வேர்ப்பான்”
என்று நீட்டி,
“வீர மறவன் நாமன்றோ? — இந்த
வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?”
என்று முடித்தானாம்.
இருட்டடிப்பு
பல பிரசுர நிறுவனங்கள், பாரதியின் இந்தப் பாடலை ‘எடிட்’ செய்திருக்கின்றன. பிராமணர்களை, கடுமையாகச் சாடும் வரிகளை நீக்கியிருக்கிறார்கள். இதிலிருந்து இவர்களுக்கு, பாரதியைப்பற்றி புரியவில்லை என்பது தெளிவாகும். பாரதி, “உடன் பிறந்தே கொல்லும் நோய்போல்” பிராமண விரோதி அல்ல. அதனால் பின், பிராமணம் - பிராமணர் அல்லாதோர் என்ற ஜாதி இந்துக்களின் பிரபுத்துவ போராட்டத்தை, பல கட்டுரைகளில் அம்பலப்படுத்தியதுடன், பல அரிய கருத்துக்களை, தொலை நோக்கோடு கட்டுரை வடிவுகளாகத் தந்தான். எந்த ஜாதி ஆதிக்கத்தையும் விரும்பாத பாமர ஜாதிக்கு மாறியவன் பாரதி. சாதீய சமூகத்தில், தான் பட்ட இன்னல்களையும் மீறி, அவற்றை சமூக நோக்கோடு பார்த்தான். இவனின் ‘எடிட்டான’ கவி வரிகள், ஒரு ஜாதிக்கு எதிரான கீதமல்ல. தொழிலாளர்-பாமரர் வர்க்கம் அப்போதைய சூழலில் தங்களுக்கு தடங்கலாக இருந்த இன்னொரு வர்க்கத்திற்கு எதிராக, தனக்கே இயல்பாக உள்ள முரட்டுத்தனத்தில் முழக்கிய பாடல். பாரதி இந்த நலிவுற்ற வர்க்கத்தின் வாய். அந்த வாயையே இந்த நிறுவனக்காரர்கள், அடைக்கிறார்கள்.
பாரதியின் பாடல்களுக்குப் பின்னே
பாரதியின் ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் ஒரு வரலாற்றுப் பின்னணியோ அல்லது குடும்பப் பின்னணியோ சமூகப் பின்னணியுடன் இணைந்துள்ளன என்று பல பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால், இவை பற்றி முழுமையான கள ஆராய்ச்சி ஏதும் நடத்தப்படவில்லை. எனக்குத் தெரிந்த ஒரு நிகழ்ச்சியை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பி.ஜி. தீவினிலே எம்குல மாதர்...
அந்தக் காலத்தில், வெளிநாட்டு மலைத் தோட்டங்களிலும், இதர முதலாளித்துவ அமைப்புகளிலும் வேலை செய்வதற்காக, நம் நாட்டவர்கள் குறிப்பாக தமிழர்கள், கொத்தடிமைகளாகச் சென்று குற்றுயிராகத் துடித்த சோக நிகழ்ச்சிகள் பாரதியாரை உலுக்கியிருக்கின்றன. பல பாடல்களாக புனைந்தான் பாரதி. இவற்றில் இரண்டு பாடல்களுக்கு, நான் கேள்விப்பட்ட நிகழ்ச்சிகள் இவை.
நெல்லை நகரில் ஒரு இளம் தாய். கூலித் தொழிலாளி பெற்ற பெண் குழந்தையை, உறவினர் குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு, மகளின் எதிர்காலம் கருதியோ என்னவோ, பிஜித் தீவிற்குப் போய் விடுகிறாள். அங்கிருந்து, மாதா மாதம் குழந்தையின் பராமரிப்பிற்காக பணம் அனுப்பி வைக்கிறாள். கரும்புத் தோட்டத்திலே ஊழியம் செய்யும் அந்த கூலிப் பெண்ணால் மகளை மறக்கவும் முடியவில்லை. எப்படியோ, காலம் உருண்டு மகளை கன்னி பெண்ணாக்கி விடுகிறது. நெடிய கொடிய பிரிவிற்கு பிறகு ஆசை மகளின் ஒவ்வொரு அணுவையும் பார்த்து ரசிப்பதற்காக, தாயகம் திரும்புகிறாள்.
நெல்லை நகரில் இருந்து இளம் பெண்ணாய் போய் மூதாட்டியாய் திரும்பும் அந்த தாய்க்கு, ஒரு தயக்கம். மகள் வாழும் வீட்டிற்கு போகத் துடித்த மனத்தை கல்லாக்குகிறாள். பி.ஜி. தீவில் இருந்து அங்கங்கள் குறைந்து, குஷ்டரோகியாகத் திரும்பிய தன்னை, மகள் அடையாளம் காணக்கூடாது என்று அவள் மனம் வைராக்கியப்படுகிறது. எப்படியோ ஒரு உறவினர் மூலம், மகளை தாமிரபரணி நதிக் கரையோரம் வரவழைத்து விடுகிறாள். மகளைக் கண்டு கண்ணீர் கொட்ட அதாவது மகளை ‘கண்குளிரப்’ பார்த்த அந்த தாய், தாயை அடையாளம் காணாமலே அந்த இளம்பெண் சென்ற பிறகு அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கிபோட்டு தன்னைத்தானே மாய்த்துக்கொள்கிறாள்.
இந்த நிகழ்ச்சி பாரதிக்கு எட்டுகிறது. துடியாய் துடிக்கிறான். மூன்று நாட்கள் வரை அவனுள் மூச்சு மட்டுமே இயங்குகிறது. இறுதியில் “பி.ஜி. தீவினிலே எம்குல மாதர்” என்ற பாடலை கண்ணீரும் கம்பலையுமாக எழுதுகிறான். இதனால்தான் அவனால் பாமரர்களும் படிக்கக்கூடிய கவிதைகளை எழுத முடிந்தது.
சில மனிதர்கள், சிறந்த கவிஞர்களாக இருப்பார்கள்; ஆனால், நல்ல மனிதர்களாக இருக்கமாட்டார்கள். சில கவிஞர்கள், நல்ல மனிதர்களாக இருப்பார்கள்; ஆனால் சிறந்த கவிஞர்களாக இருக்கமாட்டார்கள்; பாரதியோ இந்த இரண்டிலும் உச்சம்.
தீக்கதிர் மலர் — 1995.