உள்ளடக்கத்துக்குச் செல்

சமுத்திரம் கட்டுரைகள்/019

விக்கிமூலம் இலிருந்து

உள்ளதை உள்ளபடி
எழுதாமல், அந்த உள்ளதில்
ஒளிந்திருக்கும் உண்மையை
கண்டு எழுதுவதே யதார்த்தம்.


மக்கள் எழுத்தாளர்களான
கு. சின்னப்பபாரதியின் ‘சங்கம்’,
டி செல்வராஜின் ‘தேநீர்’, எனது
‘உயரத்தின் தாழ்வுகள்’ இந்த
வகையான யதார்த்தப்
படைப்புகள்.


1976-ஆம் ஆண்டு வாக்கில்
கல்வராயன் மலைக்கு, அரசு பணி
சம்பந்தமாய் நான் சென்றபோது
இருந்த சூழலே இந்தக்
கட்டுரை. இந்தச் சூழல்
இப்போது மாறியிருக்கிறதா?
அல்லது மாற்றப்பட வேண்டுமா?

முகடுகளிலும்
அடிவாரங்களிலும்

அடித்தள மக்களின்,
அடிப்படைப் பிரச்சினைகளை
எழுதும் எழுத்தாளர்களுக்கும் ஒரு
அடிப்படைப் பிரச்சினை உண்டு.
யாருக்காக நாம் எழுதுகிறோமோ,
அவர்கள், நம் படைப்புக்களைப்
படிப்பதில்லை. படிக்கும்
நிலையிலும் இல்லை. இதனால்,
ஒரு எழுத்தாளனுக்கு தன்
எழுத்தின் நேரடித் தாக்கம்
பிடிபடுவதில்லை. சம்பந்தப்பட்ட
படைப்பை, பெரும்பாலும்
‘ரசிப்பவர்கள்’ நடுத்தர
வர்க்கத்தினர் தான். இவர்களின்
ரசனை, ஒரு பெண்ணின் அழகை
மட்டும் பார்ப்பதுபோல, அந்த
அழகிற்கு அப்பாலும், ஒன்று
இருப்பதைச் சுட்டிக்
காட்டும்போதுதான், சமூகப்
பிரக்ஞையுள்ள எழுத்தாளன்
திருப்தியடைவான். இந்த ‘திருப்தி’
கிடைக்காததால், பலர் கீழே
விழுந்துவிட்டார்கள். சிலர், எதிரே
முகாமிற்குப் போய் ‘அழகுணர்ச்சி...
இலக்கியம், நயம்’ என்றவற்றைப்
பேசினால் மட்டும் பரவாயில்லை.
இவற்றின் அனாவசியங்களாகவும்
போய்விடுகிறார்கள். போய்
விடுவதோடு, இலக்கிய
நீரோக்களோடு சேர்ந்து, இவர்கள்
‘இலக்கிய பர்வெர்ட்டுகளாகவும்’

மாறி விடுகிறார்கள். மாறுவது மட்டுமல்ல, நமக்கே இலக்கிய உபதேசம் செய்ய முற்படுகிறார்கள்.

இயல்பும்—யதார்த்தமும்

இவர்கள், அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றி எழுதுபவர்களாக மட்டும் இருந்து விடுவதுதான். வித்தியாசமான படைப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்தப் பிரச்சினையை எடுத்துக் கொள்வதுதான். எந்த சமூகத் தவிப்பைப் பற்றி எழுதுகிறோமோ அந்த சமூகத்தளம் உய்வடைவது வரைக்கும் அதைப்பற்றி எழுதிய எழுத்தாளனும் அங்கீகாரத்திற்கு அலையக்கூடாது என்ற இலக்கியக் கம்பீரம், மக்கள் எழுத்தாளனுக்கு இருக்க வேண்டும். புத்தர் உலகில் உள்ள எல்லோருக்கும் ‘நிர்வாணம்’ கிடைப்பது வரைக்கும் தனக்கு ‘நிர்வாணம்’ வேண்டாம், என்று கிடைத்த நிர்வாணத்தை உதறிவிட்டதாகக் கூறப்படுகிறதே, அப்படித்தான் மக்கள் எழுத்தாளனும் இயங்க வேண்டும்.

நான், பெரும்பாலும் அப்படித்தான் இயங்குவதாக நினைக்கிறேன். ‘உயரத்தின் தாழ்வுகள்’ தொடர்கதைக்கு நான் எதிர்பார்த்த வரவேற்பு, தினமணிக்கதிர் வாசகப் பரப்பில் கிடைக்கவில்லை. அது வாசகப் பரப்பின் முடத்தனத்தைக் காட்டுவதோடு, இன்றைய படித்ததாகக் கூறப்படும் வர்க்கம், அடித்தள மக்களின் பிரச்சினைகள், இலக்கியமாக வடிவெடுக்கும்போது, ‘புரியாத வார்த்தைகள்’ என்று பேச்சுத் தமிழை சுட்டிக் காட்டித் தங்களின் புரியாத்தனத்தைக் காட்டிக் கொள்வதுண்டு. ஆனாலும் அந்த தொடர்கதையை, ‘விழலுக்கு நீர் பாய்ச்சியதாக நினைக்கவில்லை’. சோற்றுப் பட்டாளத்தைவிட, ‘உயரத்தின் தாழ்வுகளைச்’ சிறப்பாகக் கருதுகிறேன். அதற்கான அளவுகோல் வைத்து அளந்துதான் சொல்கிறேன். கவிஞர் இளவேனில், இது நன்றாக இருக்கிறது என்றார். என் இலக்கிய வீச்சுக்கு, அவர் சொல்வதே அளவுகோல். அவர் சொல்வது, ஆயிரமாயிரம் தோழர்கள் அடித்தள மக்களை கரையேற்ற உழைக்கிறார்களே - அவர்கள் சொல்வது மாதிரி. ஆகையால்தான், தோழர் இளவேனில், என்னிடம், ‘உயரத்தின் தாழ்வுகளை’ எந்த சூழலில் எழுதினேன் என்பதை ஒரு கட்டுரையாகத் தரும்படிக் கேட்டதும், அதை இலக்கியக் கௌரவமாகக் கருதி, எழுதத் தீர்மானித்தேன்.

கல்லாக்கப்பட்ட கல்வராயன் மலைமக்கள்

கல்வராயன் மலையைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், சேலத்தில் இருந்து, ஐம்பது அறுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த மலைப் பகுதியில் பல கிராமங்கள் சிதறிக் கிடக்கின்றன.

கொத்தடிமை முறையில் இருந்து “மீட்கப்படுவது” வரைக்கும், இந்த மலைவாசிகள் மூன்று ஜாகிர்தார்களின் கட்டுப்பாட்டில் காட்டு தர்பாரில் இருந்தார்கள்.’

இந்த நூற்றாண்டின் எழுபதுகளில், கல்வராயன் மலைக்குப் போகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது அரசு அதிகாரிகள் முகாம் போட்டிருந்தார்கள். இந்த மலைப்பகுதியில் மக்களை கொத்தடிமையில் இருந்து மீட்டு, தேனும் பாலையும் ஓட வைப்பதே இவர்களின் விருப்பம். நானும் எனது பதவி அடிப்படையில்தான் சென்றேன்.

அங்கிருந்து, இருபது கிலோ மீட்டர் தொலைவுவரை பல குக்கிராமங்களைப் பார்த்தேன். பொதுவாக, மலை ஜாதி என்றால், வில் அம்போடு, முரட்டுத்தனத்துடன் இருப்பார்கள் என்பதும், இவர்கள் தங்களின் பெண்டு பிள்ளைகள், பிறரால் பயன்படுத்தப்படுவதை அனுமதிப்பார்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

இந்தக் கருத்தின் அடிப்படையில் பாரதம், முழுவதும் பல அப்பாவி மலைமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் சூறையாடப்பட்டிருக்கிறார்கள். கல்வராயன் மலை மக்களைப் பற்றியும் ‘சமவெளிக்காரர்கள்’ இப்படித்தான் கருதுகிறார்கள். இது உண்மையா?

சூரிய இருட்டு

உண்மை மாதிரி. ஆனால் உண்மையல்ல. காட்டில் நடக்கும்போது, உடம்பில் முள் குத்தலாகாது என்பதற்காக, கோவணத்தைக் கட்டிக் கொண்டு, தலை முழுவதையும் வேட்டியால் மூடிக்கொள்ளும் இந்த மக்களைப் பார்த்ததும், சூரியனைப் பற்றிப் படித்த ஒரு விஞ்ஞானப் புத்தகம் எனக்கு நினைவுக்கு வந்தது. சூரியனின் அடிப்பாகம், சொல்ல முடியாத கருநிறத்தில் உள்ளதாம். இங்கே நினைத்துப்பார்க்க முடியாத உஷ்ணம் ஆட்சி செலுத்துகிறதாம். மற்ற பகுதிகளை விட அளவற்ற உஷ்ணம் அளவற்ற இருட்டு. உஷ்ணம் அதிகமானதால், அதிகமாய்ப் போன இருட்டு. பொதுவாக, உஷ்ணத்தில் தான் ஒளி பிறக்கிறது என்று நினைத்திருந்தேன். இங்கேயோ மையிருட்டையும் ஒளிப்பிரளயமாய்க் காட்டும் இருட்டான இருட்டு.

இதற்கு அந்தப் புத்தகத்திலேயே விளக்கம் இருந்தது. அளவுக்கு மீறிய உஷ்ணம் ஒரு அளவில் இருக்க வேண்டுமாம். இதே மாதிரிதான் இந்த மக்களும். இவர்கள் கோழைகள் அல்ல, பெண்டு பிள்ளைகளை மனமொப்பிக் கொடுப்பவர்கள் அல்ல. இவர்களுக்கும் தன்மானம் இருக்கிறது. காலங்காலமாக, கற்காலத்தில் இருப்பதுபோல் வாழ்ந்து வாழ்ந்து, வாழ்க்கை என்பது தங்களைப் பொறுத்த அளவில் இப்படித்தான் என்று நினைத்துப் பழகி விட்டார்கள். புலி என்றால், மானை அடிக்கும் என்பது எப்படி தவிர்க்க முடியாத இயற்கை விதியோ, அப்படி, நாகரிக மனிதன், இவர்களுக்குக் கொடுத்த செயற்கை விதியை, இயல்பாக மட்டுமல்ல, இயற்கையாகவும் எடுத்துக் கொண்டார்கள்.

நான், இவர்களிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன் ‘மலையாளி’ (அதாவது ஜாஹிர்தார்கள்) போன பிறகு, தேனும் பாலும் ஓடுவதாகத்தான் சொன்னார்கள். அதிகாரிகளும் சரி, என்னைப்போல் அங்கு போகிறவர்களும் சரி, தேவ தூதர்கள் என்றும், மிலேச்சர்காளான தங்களை வாழ்விக்க வந்த மகான்கள் என்றும் நினைக்கிறார்களாம் மலைமக்கள். தலைவர்களின் முகங்களையும் பேச்சையும் ஊடுருவிப் பார்த்தபோது, ‘அட சரிதான் வந்தவன் பத்தாதுன்னு நீ வேறயா... ஆள விடுய்யா’ என்ற சொல்லாத சொல் ஒலிப்பது போல் கேட்டது.

இரண்டு நண்பர்களைக் கூட்டிக் கொண்டு, ஒரு கிராமத்திற்குப் போனேன். அங்கே, தினம் மூன்றுபடி வரகுக் கூலிக்கு, ‘நிலத்தைக் கொத்த’ வந்திருந்த சேலம் மாவட்ட நாடோடிப் பெண்களைப் பார்த்தேன். அவர்கள், ஏதோ கும்மியடித்துப் பாடிக் கொண்டிருந்தார்கள். நானும் என் பங்குக்குத் தாளம் போட்டேன். (இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். நான், அந்தக் கிராமத்திற்குப் போன போது, அவர்களைப் பற்றி கதை எழுதும் நோக்கம் எதுவுமே எனக்குக் கிடையாது. அவர்களின் வாழ்க்கை முறையை அறிய வேண்டும் என்ற ‘டாக்டரேட்’ மனபான்மை கூட கிடையாது. புரட்சித் தீயைப் பற்றவைப்பதும் நோக்கமல்ல)

என் கிராமத்தின் நகல்

இந்த மக்களின் கலைப் போக்கையும், வீட்டையும், வேலையின் இயல்பையும் பார்த்தபோது, சின்ன வயதில் நான் வாழ்ந்த என் வீட்டிற்கும். நான் உண்ட உணவிற்கும், இவர்களின் இருப்பிடங்களுக்கும், எந்த வித்தியாசமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் ‘சோளக் கஞ்சி’ குடித்தேன். இவர்கள் ‘கேழ்வரகுக் கூழ்’ நான் ‘வில்லுப்பாட்டு’ பாடியிருக்கிறேன். இவர்கள் கரிராமன் பாட்டு, ஆக, கிராமங்களில் வாழும் எளியவர்களை இங்கே கொண்டு வந்து நிறுத்தினாலோ, அல்லது இவர்களை அங்கே கொண்டு நிறுத்தினாலோ, வாழும் முறையிலும், கலாச்சார ரீதியிலும் வேறுபாடு காண முடியாது. எப்படியோ, என்னிடம் அவர்களும் தங்களைக் கண்டிருக்கக் கூடும். சரளமாகப் பேசத் துவங்கினார்கள்.

ஜாஹிர்தார் காலத்தில், பல்வேறு வகையான வரிகளைச் செலுத்தியிருக்கிறார்கள். கல்யாணமாகாத பையனுக்கு ‘காவாலி வரி’, ‘அரிவாள் வரி’, விதவைப் பெண்களுக்கு ‘வாழா வெட்டி’ வரிகளோடு, ஜாஹிர்தாரர்களுக்கும், சமவெளிக்காரர்களுக்கும் ‘பெண் வரி’யையும் கொடுத்திருக்கிறார்களாம். கூச்சத்தோடுதான் சொன்னார்கள். ஆனாலும், அப்போது, இஷ்டப்பட்ட இடத்தைக் கொத்தி நிலமாக்க முடிந்தது. பொதுவாக, காட்டு மரங்களுக்குத் தீயிட்டு அவற்றின் சாம்பலைக் காட்டில் தூவி உழுது, வரகு பயிரிடுவார்கள். இதற்கு ‘புனக்காடு’ என்று பெயர், இந்த நிலத்தில், இரண்டு போகத்திற்குப் பிறகு பயிரிட முடியாது. அப்படிப் பயிரிட்டால், விளையும் வரகு, போதையைக் கொடுக்குமாம். ஆகையால், நிலம் விட்டு நிலம் தாவும் வழக்கத்தை வைத்திருந்தார்கள். இப்போது, அரசாங்க அதிகாரிகள், புனக்காடு உருவாவதைத் தடுக்கிறார்கள். ஆக, நிலம் இல்லை. காட்டுச் சொத்துக்களான முந்திரி, தேக்கு முதலியவை, காண்டிராக்டர்களுக்கு போகின்றன. இவர்கள் என்ன செய்வார்கள்? இதுதான் இவர்கள் பிரச்சினை. இது அரசாங்கத்தின் பிரச்சினையாக மாறவில்லை. இதுவே மொத்தப் பிரச்சினை ‘சரி நம்ம தலையெழுத்து’ என்று இவர்கள், அரசிற்கு பிரச்சினையாகாமல் இருக்கிறார்கள். இதற்குக் காரணம், ஏற்கனவே சொன்னது போன்ற சூரியக் கறுப்பு...

ஆளில்லாத பிரசவம்

இந்தக் கறுப்பு போக வேண்டுமானால், இவர்களை உஷ்ணப்படுத்த வேண்டியதில்லை. இவர்களின் உஷ்ணத்தைக் குறைக்க வேண்டும். இதற்கான அறிகுறிகள், பல கிராமங்களில் தோன்றத் துவங்கியுள்ளன. ஜாஹிர் காலத்தில் தங்களுக்குள்ளே வாழ்ந்த மூப்பன் போன்ற உள்ளூர் அலுவலர்கள் நடந்து கொண்ட விதத்தை வெறுப்போடு பேசி, உஷ்ணத்தைக் காக்கும் இவர்கள், விரைவில் ஒளி சிந்தத் துவங்குவார்கள். ஆனால், இவர்களுக்குள் ஒரு தலைமை இன்னும் உருவாகவில்லை. உருவாகக்கூடிய பிரசவம், உள்ளது. பிரசவம் என்றதும் இன்னொன்று நினைவுக்கு வருகிறது. சமீபகாலம்வரை, இந்த மக்கள் பிரசவநிலையில் உள்ள பெண்களை, தனியாக ஒரு குடிலில் ஆளுதவி இல்லாமல் விட்டு விடுவார்களாம். அவள் பெற்று வந்தால் உண்டு. இல்லையானால், குடும்ப நலத்திட்டம், வாஸெக்டமி டூபெக்டமி இல்லாமல் செயல்படுவதாக அர்த்தம்.

இப்படி, அனர்த்த வாழ்வு நடத்தும் இந்த மக்கள், என் மனத்தைப் பெரிதும் பாதித்த தருணத்தில் ஒரு பிரபல பத்திரிகை, என்னிடம் ஒரு சிறு தொடர்கதை கேட்டது. உடனே வேண்டும் என்றார்கள். இந்த மக்களையே மையமாக வைத்து எழுதியனுப்பினேன். இதற்கிடையே அந்த ‘பிரபல’ பத்திரிகை, செக்ஸ் எழுத்தாளர்களுக்கு, ஒரு மரியாதை. எனக்கு இன்னொரு மரியாதை வைத்திருப்பதாக அறிந்து, அந்த பத்திரிகை ஆசிரியருக்கு அதைக் கண்டித்து, கடிதம் எழுதிப்போட்டேன். இரண்டு மாதம் கழிந்து கதை திரும்பி வந்தது, ‘கனமான’ கதையாம். பிரசுரிக்க இயலாதாம். தினமணிக்கதிரின் ஆசிரியரான திரு. நா. பார்த்தசாரதி அவர்கள் என்னிடம், தனது உதவி ஆசிரியரை அனுப்பி தொடர்கதை கேட்டார். இந்தக் கதையைக் கொடுத்தேன். பிரசுரமாயிற்று.

‘கதையே’ இல்லாமல், கல்வராயன் மக்களின் வாழ்க்கை முறையை மையமாக வைத்து விளங்கும் இந்த திரில் இல்லாத கதையை பிரசுரித்த நா.பா. வுக்கு, நான் நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும். ஆனால், இந்தக் கதைக்கு வரையப்பட்ட சித்திரங்கள், பிரச்சினையையே கொச்சைப்படுத்தியதோடு, அசிங்கப்படுத்திவிட்டன. மலைப்பெண்கள் சாக்கெட் போடமாட்டார்கள் என்று, யார் சொன்னார்களோ. பிரதான பெண் கதாபாத்திரத்தை ‘ஏ’ பெண்ணாக வரைந்தது மட்டுமல்ல, ஒரு ஆடவனை, கையுங் காலுமாய் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் நிகழ்ச்சியை வரையாமல், கட்டப்பட்டிருக்கும் தம்பியைப் பார்க்க வரும் வெள்ளச்சியை ஒருவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதை செக்ஸியாக வரைந்து, எந்த வியாபாரத்திற்கு மனச்சாட்சி இருந்தாலும் சதை வியாபாரத்திற்கு இருந்தாலும், கதை வியாபாரத்திற்கு கிடையாது என்பதை நிரூபித்து விட்டார்கள். எழுதியது பிரசுரானபோது ஏண்டா எழுதினோம் என்ற குறை, இந்த கட்டுரை எழுதும் இந்தத் தருணத்தில்தான் ஓரளவு போயிருக்கிறது.

இந்தத் தொடர்கதை, அரசு யந்திரத்தின் அசமந்தப் போக்கை, பெரிதும் சித்தரிக்கிறது. ஆனாலும் இது மாவட்ட மட்டத்திலோ, நமது செகரட்டேரியட் மட்டத்திலோ, யாருடைய மனச்சாட்சியையும் உசுப்பவில்லை. சம்பந்தப்பட்ட, இலாகா நண்பர்களிடம் சொன்னால் ‘அப்படியா... எப்போ எழுதினிங்க’ என்று என்னையே, சினிமா எழுத்தாளர் மாதிரி கதை சொல்லச் சொல்கிறார்கள். இவ்வளவுக்கும் இத்தகைய செய்திகளைச் சேகரிக்க ஒரு தனி இலாகா வேறு இருக்கிறது. இந்த மக்களின் பிரச்னைகளைப் பற்றித் தப்பாகவோ அல்லது சரியாகவோ எழுதப்பட்ட ஒரு படைப்பைப் பற்றித் தெரியாதவர்கள் இந்த மக்களைப் பற்றி எப்போது தெரியப் போகிறார்கள்?

இந்தப் பகுதிக்கு, செக்ஸ் எழுத்தாளர்கள் போயிருந்தால் வண்டி வண்டியாக எழுதலாம். சின்னப் பையன்களுக்கு, பெரிய பெண்களைக் கட்டி வைப்பது, அங்கே வழக்கம். ஆனால், இப்போது ஓரளவு விழிப்புற்று வரும் அந்த சமூகத்தில், இப்போது, இது பல வெளிப்படையான பிரச்சினைகளையும், எதிர்ப்புக்களையும் தோற்றுவித்திருக்கிறது. ஆரோக்கியமான அறிகுறிதான். ஆனாலும், நமது பிரபல எழுத்தாளர்களுக்கு, இந்த பாவப்பட்ட மக்கள், சரியான அறுவடை. இதை வைத்து, பிரபல பத்திரிகைகளில் ஆண்டு முழுக்க கதை எழுதி, மலை மக்களின் அடிமனவருடலை வெளிக் கொண்டு வந்தவர்கள் என்றுகூட பாராட்டுகள் வாங்கலாம்.

என்னால் அப்படி எழுத முடியாது. எனக்கோ அல்லது இளவேனிலுக்கோ, எதை எழுதுகிறோம் என்பதோடு, எதை எழுதாமல் விடுகிறோம் என்பதும் முக்கியம். இதுதான் நானறிந்த எதார்த்தம். இதில் இன்னொரு எதார்த்தம் அடிப்படுகிறது. அதுதான், பத்திரிகைகளுக்கு ஏற்றபடி, இவர்களை கிளு கிளுப்பாக எழுதி, குளு குளுப்பான ‘புகழை’ வாங்குவது.

எந்த எதார்த்தம் முக்கியம் என்பதே கேள்வி.

மக்களின் எதார்த்தத்திலும் எதார்த்தமாக இருக்க வேண்டிய அம்சங்களா? அல்லது அடிப்படைப் பிரச்னையையே திசைதிருப்பும், ‘மேனாமினுக்கி’ எதார்த்தங்களா?

எதார்த்தம் பல்முனைப்பட்டது. எனது எதார்த்தம் - நமது எதார்த்தம் பிரச்சினையை திசை திருப்பாத எதார்த்தம். உள்ளதை உள்ளபடி எழுதுவது எதார்த்தமல்ல. உள்ளபடி இருப்பதில் உள்ளதைக் கண்டு எழுதுவதே எதார்த்தம். இந்த எதார்த்தத்திற்கு ஒரு இலக்கிய உதாரணமாக ‘உயரத்தின் தாழ்வுகள்’ இருப்பதாக நினைக்கிறேன். ‘கார்க்கியில்’ இதுபற்றி ஒரு கட்டுரை வருவதே, இந்தக் கதை வீணடிக்கப்பட்ட கலாச்சார சூழலில் தோன்றினாலும், எதிர்காலத்தில் இது மாதிரியான பிற படைப்புக்களுக்கு அடித்தளமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நம்புவது என் உரிமை. அது சரியா தவறா என்று சுட்டிக்காட்ட வேண்டியது, உங்கள் கடமை.


கவிஞர் இளவேனிலை ஆசிரியராக
கொண்டு கார்க்கி இதழ் — 1981.

"https://ta.wikisource.org/w/index.php?title=சமுத்திரம்_கட்டுரைகள்/019&oldid=1863627" இலிருந்து மீள்விக்கப்பட்டது