சமுத்திரம் கட்டுரைகள்/020
ஏழை-எளியவர்களுக்கான இந்த அவலத்தைப் போக்க |
ஏட்டுச்சுரைக்காய் ஊர்ப்பஞ்சாயத்து ஆனாலும் பல ஏழைகள், |
பெரும்புள்ளிகளின் கூட்டணி
எடுத்துக்காட்டாக, கிராமங்களில் உள்ள பெரும்புள்ளிகளிடம், ஆள்பலம், பணபலம், அதிகாரபலம் ஆகிய முப்பெரும் பலங்கள் உள்ளன. இன்றைய சூழலில் அரசியல் அதிகாரமும் இவர்களிடமே உள்ளன. எந்தக் கட்சியில் இருந்தாலும் சுயநலம் என்று வரும்போது இவர்கள் ஒன்று சேர்ந்து கொள்வார்கள். இவர்களோடு அந்தந்தப் பகுதி தாசில்தார், பத்திரப் பதிவாளர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் கூட்டணி வைத்துக் கொள்வார்கள். இந்தப் பின்னணியில் ஒரு பெரும்புள்ளியின் வயலுக்கு இடையே சிதறு தேங்காயாக ஒரு துண்டு துக்கடா நிலம் ஒரு ஏழைக்குச் சொந்தமாக இருக்கும். அந்த ஏழையின் மூதாதையர்கள் வைத்திருந்ததில், எஞ்சிய இந்த நிலம் அவனுக்கு விலைமதிப்பற்றது. ஆழ்ந்த பாசத்திற்குரியது. இதை விற்பதற்கு, மனதாலும், அவனால் நினைக்கமுடியாது. ஆனாலும் பெரும்புள்ளிக்கு, இந்த நிலம் கண்ணை உறுத்தும், அந்த நிலத்தைத் தரும்படி அன்போடு கேட்பார். அப்புறம் அடாவடியாய்க் கேட்பார். இந்த ஏழைக்கோ, அந்த நிலம் தாய்க்குச் சமம் என்பதால் தாயைப் பழித்தவனைப் பார்ப்பது போலவே அந்தப் புள்ளியைப் பார்ப்பான். ஆனாலும் ஏழையின் கோபம் செல்லத்தக்கதல்ல. இதனால்தான் செல்லாக் கோபம் பொறுமையின் அடையாளம் என்கிற பழமொழியே வந்தது. எப்படியோ கொஞ்சங்கொஞ்சமாக வரப்பு வெட்டப்பட்டு, இந்த நிலம் ஒரு புள்ளிகூட இல்லாமல் பெரும்புள்ளியிடம் போய்விடும்.
இந்த ஏழையோ, தன்னைத்தவிர எல்லாவற்றையும் விற்று நீதிமன்றம் போவான். அந்த மன்றமும், அந்த நிலத்தை பெரும்புள்ளி திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கும். ஆனாலும் இந்தத் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டியது வருவாய்த் துறை அதிகாரிகளின் பொறுப்பு. இவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது காவல்துறையினரின் பொறுப்பு. இந்த இரு துறைகளும் பெரும்புள்ளியின் பைக்குள் அடக்கம். சாக்குப் போக்குகள் சகலமும் சொல்லி தீர்ப்பு கிடப்பில் போடப்படும். அந்த ஏழைக்காக வழங்கப்பட்ட தீர்ப்பு ஊமைகண்ட கனவாகிவிடும். இந்த தீர்ப்பை அமுல் செய்யவில்லை என்று மீண்டும் நீதிமன்றம் செல்ல வேண்டுமானால், கோர்ட் அவமதிப்பு வழக்கு என்று பெரும்புள்ளியின் மீதும், அரசு அலுவலர்கள் மீதும் அதே ஏழை வழக்குப் போட வேண்டும். அதனால் அந்த ஏழைக்கு பகை இரட்டிப்பாகுமே தவிர, பலன் இருக்காது. அப்படியே இருந்தாலும், அந்த வெற்றி தோல்விக்குழியில் அடக்கமாகிவிடும். இதை வைத்துத்தான் சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழலாம் என்ற பழமொழி ஏற்பட்டிருக்க வேண்டும்.
மண்ணாகிப்போன தீர்ப்பு
ஆள்பலமோ, பண்பலமோ இல்லாத ஒரு ஏழைக்குக் கிடைக்கும் நீதியின் லட்சணம் இதுதான். பல சமயம் நடுத்தர மக்களும் பாதிக்கப்படுவதுண்டு. எனக்குத் தெரிந்த வெளி மாநிலத்தில் பணியாற்றிய தமிழர் ஒருவர், வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி, சென்னை நகரில் வீட்டுமனை வாங்கிப் போட்டார். பதவியிலிருந்து ஓய்வுபெற்று திரும்பி வந்து பார்த்தால், அந்த மனையில், ஒரு தாதா சொகுசு பங்களா ஒன்றை கட்டியிருந்தார். இவர், காவல்துறையினரிடம் முறையிட்டார். காவல்துறையோ, ஒரு விசித்திரமான சட்டத்தை அவர் மீது ஒரு ஆயுதமாக எறிந்து தாதாவுக்கு கேடயமாக நின்றது. அதாவது,
சட்டவிதியும்—தலைவிதியும்
ஒரு உடமை யாருடைய பொறுப்பில் இருக்கிறதோ அந்த உடைமைக்குச் சேதம் வராமல் இருக்க, சம்பந்தப்பட்டவருக்கு காவல்துறை, பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்பது சட்ட விதியாம். தலைவிதியைக்கூட மாற்றலாம். சட்டவிதியை மாற்ற முடியுமா? இந்த விவகாரத்தில் அந்த அப்பாவி மனிதர் வாங்கிப்போட்ட நிலம், அந்த தாதாவின் பொறுப்பில் பங்களா முளைத்த இடமாகிவிட்டது. ஆகையால் காவல்துறையினர் அந்த வீட்டுக்கும், வீட்டுக்காரனுக்கும் பாதுகாப்பு கொடுப்போம் என்றார்கள். மனையை வாங்கிப் போட்டவர் வம்புதும்பு செய்தால் கைது செய்யப்படுவார் என்று எச்சரித்தார்கள். இந்த அப்பாவியோ நீதிமன்றத்திற்குப் போனார். ஓய்வு கால இறுதியில் கொடுக்கப்படும் பணத்தை வழக்கில் போட்டு, மனையைத் திரும்பிப் பெறுவதற்கான தீர்ப்பை பெற்றுவிட்டார். ஆனால், அந்த தாதாவோ, நிதியில் தீர்த்துவிட்டான். இதனால் இந்தத் தீர்ப்பை செயலாற்ற வேண்டிய அரசு இயந்திரத்திற்கு காதுகள் செவிடாகிவிட்டது. கண் குருடாகிவிட்டது. மீண்டும் கோர்ட் அவமதிப்பு வழக்குத்தான் போட வேண்டும். கையிலோ பணமில்லை. அந்தப் பாவப்பட்ட மனிதரோ மூன்று பிடி மண் எடுத்து தன் மனையில் கட்டிய வீட்டுக்கு முன்னால் வீசியடித்துவிட்டு, எந்த மாநிலத்தில் கவுரமாகவும் சுயமரியாதையாகவும் வேலை பார்த்தாரோ, அந்த மாநிலத்திற்கு சொத்திழந்து சுயமிழந்து விரக்தியோடு ஓடிவிட்டார்.
என் கண்ணில்பட்ட இன்னொரு நிகழ்ச்சி. நான் வாழும் பகுதியில் சுமார் நாற்பது கிரவுண்டு வீட்டுமனை, நீதிமன்ற தாவாவில் இப்போதும் உள்ளது. இந்த மனைகளில் எவரும் வீடுகட்டலாகாது என்று உயர்நீதிமன்றம் பத்தாண்டுகளுக்கு முன்பே இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தத் தடைக்கு இன்னும் உயிர் இருப்பதாகக் கேள்வி. ஆனாலும் அத்தனை வீட்டு மனைகளிலும், பிளாட்டுகளிலும் சொகுசுப் பங்களாக்கள் தோன்றிவிட்டன. இன்றளவும், நீதிமன்றத்தைப் பொறுத்த அளவில் இந்த நாற்பது கிரவுண்டும் காலிமனைதான். நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான இத்தகைய சூட்சமங்கள் எப்படி நடைபெறுகிறது என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.
இரட்டை வேடங்கள்
பல ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட தீர்ப்புகள் செயல்படுத்தப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்டவர்கள், மீண்டும் நீதிமன்றத்திற்குப் போன செய்திகள் பத்திரிகைகளில் விலாவாரியாக வந்துள்ளன. நாமும் படிக்கத்தான் செய்கிறோம். இனிமேலும் படிக்கத்தான் போகிறோம். ஆனாலும் நீதிமன்ற தீர்ப்புகள் செல்லாக் காசாய் ஆக்கப்படுவது குறித்து நம்முள் ஒரு தார்மீக கோபம் ஏற்படுவதில்லை. அதே நேரம் தீர்ப்பு, ஏழைகளுக்கு எதிராகவோ அல்லது அரசுக்கு ஆதரவாகவோ இருந்தால், அது உடனடியாகவும் தடாலடியாகவும் செயல்படுத்தப்படுகிறது.
ஆகமொத்தத்தில் நீண்ட நெடிய ஆண்டுகளை உள்ளடக்கிய கொடூரமான செலவு பிடித்த வாய்தா காலத்திற்குப் பிறகு, வாராது வந்த மாமணிபோல் நியாயமான தீர்ப்பு கிடைத்தாலும் அந்த தீர்ப்புகூட, ஏழை என்றால் எள்ளி நகையாடுகிறது. இதை செயலாக்க வேண்டிய அரசு இயந்திரம் வடமொழி மந்திரம் போல் ஏழைக்குப் புரியாத சட்டச்சரத்துக்களை சாக்குப் போக்காகச் சொல்லி, காலத்தைத் தாழ்த்தி நீதியையும் தாழ்த்தி விடுகிறது. தாமதப்பட்ட நீதி - மறுக்கப்பட்ட நீதி என்ற புகழ்மிக்க சட்டப்பழமொழியை நடைமுறையில் கண்டாலும் ஒருத்தர் தாமதப்பட்ட நீதியைப் பெறுகிறார். அப்படியும் அந்த நீதி மறுக்கப்படுமானால், அதை எந்த மொழியால் அழைப்பது?
ஆக, ஏட்டுச் சுரைக்காய் தீர்ப்புகளை, எப்படி அரங்கேற வைப்பது என்பதே சமூக நீதியில் அக்கறை கொண்ட அத்தனை பேரும் சிந்தித்து பரிகார நடவடிக்கைகளை எடுத்துக்கூற வேண்டியது கட்டாயமாகிறது. காரணம் இதில் பெரும்பாலும் ஏழைகள், குறிப்பாக பெண்களே பாதிக்கப்படுகிறார்கள். இறந்து போன கணவரின் வாரிசான இளம் விதவைக்கு சொத்துக்கள் கொடுக்கப்படாமல் அவள் விரட்டியடிக்கப்படுகிறாள். நீதிமன்றத்தில் இவளுக்கு முன்கதவு திறக்கப்பட்டு, இவளது மாமியார், மாமனார், மச்சான் வகையறாக்களுக்கு பின்கதவு திறக்கப்படுகிறது.
கண்காணிப்பு ஆணையம்
எனவே, நீதிமன்ற தீர்ப்புகளைச் செயல்படுத்துவதற்கு மாநில அளவில் உயர்நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் ஒரு கண்காணிப்பு ஆணையம் உருவாக்கப்பட வேண்டும். இந்த ஆணையம் ஒப்புக்கு ஐந்தாறு பேரை மட்டும் நாற்காலியில் அமர்த்தாமல், மாநிலம் முழுவதும் ஆலமரமாய், வேர் விட்டும், விழுதுகள் விட்டும் பல்கிப் பரவி இருக்கவேண்டும். ஒவ்வொரு நீதிமன்றத்தின் தீர்ப்பும், செயல்படுத்தப்படுகிறதா என்று இந்த ஆணையமே கண்காணிக்க வேண்டும். இதுகுறித்து ஒவ்வொரு தீர்ப்பின் செயலாக்கம் பற்றி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கைக்கெட்டினாலும் வாய்க்கு எட்டாத நிலைபோல நீதி கிடைத்தாலும் அதன் பலனை அனுபவிக்க முடியாமல் தவிப்பவர்களின் முறையீடுகளுக்காக காத்திருக்காமல், இந்த ஆணையமே தன்னிச்சையாக ஒவ்வொரு தீர்ப்பையும் அது செயல்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும். இதற்கு காலவரம்பும் நிர்ணயிக்க வேண்டும். நீதியின் மறுபக்கமான தீர்ப்பை நிலைகுலைய வைப்பவர்கள் மீது சிறைத்தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் விதிக்க வேண்டும். இத்தகைய அமைப்பிலும் ஊழலும் பாரபட்சமும் இருக்கலாம். ஆனாலும், இப்படிப்பட்ட அமைப்பு ஒன்று இருக்கிறது என்கிற எண்ணமே, நீதிமன்ற தீர்ப்பிற்கு ஒரு மரியாதையைக் கொடுக்கும்.
ஒரு தீர்ப்புக்குப் முன்னால், வாய்தாக்கள் மாதங்களாகி ஆண்டுகளாகின்றன. இந்த வாய்தாவே தண்டனையைவிட கொடூரமானது. வாதிகளும், பிரதிவாதிகளும் பல்வேறு இடங்களில் இருந்து பல்வேறு சாட்சியங்களைக் கொண்டு வருகிறார்கள். இவர்கள் விசாரணை குறுக்கு விசாரணை என்று செய்யப்படுகிறார்கள். வழக்கின் ஆவணங்கள் அலசப்படுகின்றன. சட்ட நுணுக்கங்கள் இருதரப்பு வழக்கறிஞர்களாலும் பிரகாசப்படுத்தப்படுகின்றன. மாண்புமிகு நீதிபதியும் இந்த வாதப் பிரதிவாத தகவல்களையும், சாட்சியங்களையும் ஆவணங்களையும் தராசு முனையில் ஆய்ந்து வேண்டுதல் - வேண்டாமை இல்லாத நீதித்தன்மையோடு, ஒவ்வொரு வார்த்தையையும் எண்ணி எடைபோட்டு, தீர்ப்பு வழங்குகிறார். ஆனால், இந்த தீர்ப்புகளோ அரசு கோப்புகளில் சமாதியாகி விடுகின்றன. ஆயிரம் ரூபாய்க்கு குதிரை வாங்கி, அதை தக்க வைத்துக் கொள்வதற்கு ஐந்து ரூபாய்க்கு கயிறு வாங்காத கதைதான் இந்த நீதிக்கதையும்.
மாண்புமிகு உறுப்பினர்களின் பார்வைக்கு.......
பெரிய பெரிய வழக்குகளில் தீர்ப்புகள் உடனடியாய் செயல்படுவதற்காக பத்திரிகை கண்காணிப்பும், பொது நிறுவனங்களின் முன்னெச்சரிக்கையும் உதவுகின்றன. ஆனால், பத்திரிகைகளில் வராத ஏழை-எளியவர்களின் தீர்ப்புகளோ பெரும்பாலும் நீர்த்துப் போகின்றன அல்லது தீர்த்துக்கட்டப்படுகின்றன. இந்த அவலத்தைப் போக்க ஒரே வழி, சுயாட்சி அதிகாரம் கொண்ட, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கான கண்காணிப்பு ஆணையம் ஒன்றை பல கிளைகளோடு உருவாக்குவதுதான்.
நாடாளுமன்றத்திற்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நமது தமிழக உறுப்பினர்கள், இந்தப் பிரச்சினை குறித்து சிந்திக்க வேண்டும். புதிய மக்களவையும் இத்தகைய ஆணையத்திற்கு வடிவம் கொடுக்க முயற்சிக்க வேண்டும். சமூக நீதியில் அக்கறை கொண்ட நமது சட்டப்பேரவை உறுப்பினர்களும் வரும் கூட்டத் தொடரில் இந்த ஆணைய உருவாக்கம் குறித்து மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும். இதனால் எண்ணற்ற ஏழைகளின் ஊமை அழுகை, ஆனந்தப்பள்ளாக ஒலிக்கும். இந்த வரலாற்றுக் கடமையை மாண்புமிகு மக்கள் பிரதிநிதிகள் தட்டிக்கழிக்க மாட்டார்கள் என்று நம்புவோமாக.
நவசக்தி வார இதழ் — 1999.