உள்ளடக்கத்துக்குச் செல்

சமுத்திரம் கட்டுரைகள்/021

விக்கிமூலம் இலிருந்து

இலக்கியத்திலும், வானொலியிலும், டி.வி.யிலும்
மற்றும் அரசாங்கத்தின் பல்வேறு செய்தித்
துறைகளிலும் எழுத்தாளர் சு. சமுத்திரத்திற்கு
ஏராளமான அனுபவங்கள். இங்கே தமது
வாழ்க்கையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறார்.


(‘வாழ்க்கை ஒரு சமுத்திரம்’ என்ற தலைப்பில்
குமுதம் வெளியிட்ட கட்டுரைக்கான கருத்து)

தாழ்த்தப்பட்ட- பிற்படுத்தப்
பட்ட, முதல் தலைமுறை படித்த
கிராமிய இளைஞர்கள், தூசி
படிந்து உள்ள கண்ணாடிகள்.
இந்தக் கண்ணாடிகளை
துடைத்தால், அவை காலம்
எல்லாம் பள பளக்கும். ஆனால்,
பலர் இதனை உடைக்கத் தான்
பார்ப்பார்கள்.

இந்த உடைப்பை
முறியடிப்பதற்கு, நேர்மை,
விசுவாசம், திறமை, கண்டிப்பு,
கனிவு ஆகியவையே கேடயங்கள்
என்பது எனது முப்பதாண்டு கால
அலுவலக அனுபவம்.

வேரில் பழுத்த
பலா

1962ஆம் ஆண்டு பி.ஏ.
தேர்வில் பிரமாதமாக வரலாம்
என்று நினைத்து இருந்தேன்
ஆனால் ஆங்கிலத்தில் ‘அவுட்’
இதுவரை, முதல் நான்கு
மாணவர்களில் ஒருவனாக வந்த
எனக்குப் பெரிய அதிர்ச்சி.
இளமையிலேயே பெற்றோரை
இழந்த என்னை வளர்த்துப்
படிக்க வைத்த என் சித்தப்பா
வுக்கும், சித்திக்கும் என் மீது
பயங்கரமான கோபம். அரசியல்
மேடைகளில் பேசியதால்தான்,
நான் ‘அவுட்டாகி’ விட்டேன்
என்று கருதி, என்னை ‘கெட்
அவுட்’ என்று சொல்லக்
காத்திருந்தார் என் சித்தப்பா.
சென்னையில் அப்போது கோணி
வியாபாரம் செய்து வந்தார்.
பி.ஏ.வில் தோற்றுப் போனதால்
இனிமேல் உயிரோடு இருக்கப்
போவதில்லை என்று நான்

சூளுரைத்தேன். சித்தப்பா-சித்தி பயந்து விட்டார்கள். ஒரே ராஜமரியாதை-நான்கு நாட்களுக்கு. நான் சாப்பிடுகிற வேகத்தைப் பார்த்த சித்தப்பா ‘இவன் சாப்பிடப் பிறந்தவனே தவிர, சாகப் பிறந்தவன் அல்ல’ என்பதைப் புரிந்து கொண்டு திட்டத் துவங்கினார். ஒருநாள், எனக்கு வெறுப்பும் வந்துவிட்டது. “வேலையில் சேராமல் இந்த வீட்டுல நுழைய மாட்டேன்,” என்று சொல்லிவிட்டு, இரண்டு பேண்ட் சட்டைகளை ஒரு கைப் பையில் வைத்துக் கொண்டு, வெளியேறி விட்டேன்.

கையில் ஐந்து ரூபாய்

எங்கே போவது என்று தெரியவில்லை. கையில் ஐந்து ரூபாய்தான் இருந்தது. நேராக காஞ்சிபுரம் போனேன். அப்போது காங்கிரஸ் பேச்சாளராகவும், லாரி டிரைவராகவும் இருந்த என் நண்பர் வடமலை ராஜ் அங்கே இல்லை. திடீரென்று ஒரு எண்ணம். கல்லூரி மாணவனாக இருந்தபோது, அச்சரப்பாக்கம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திரு. வெங்கட சுப்பா ரெட்டியாரை ஆதரித்து மேடைகளில் பேசியிருந்தேன். அவருடைய மருமகன் திரு. ஸ்ரீராமுலு ரெட்டியார் (எழுத்தாளர் சரோஜினியின் கணவர்) அப்போது சொற்பொழிவிற்காக பணம் நீட்டினார். நான், அதை வாங்க மறுத்துவிட்டேன். இதனால், அவருக்கு என் மீது அளவு கடந்த பற்றுதல். அப்போது அவர் அச்சரப்பாக்கம் பஞ்சாயத்து யூனியன் தலைவர். அவரிடமே வேலை கேட்கலாமே?

கூடவே ஒரு போலீஸ்

காஞ்சிபுரத்தில் இருந்து, மதுராந்தகம் கூட்டு ரோட்டில் இறங்கி, வேடந்தாங்கலைப் பார்த்து நடந்தேன். ஒரு போலீஸ்காரரும் என்னுடன் வந்தார். ஒரு கிலோமீட்டர் வரைக்கும் ‘நீங்க’ போட்டார். இரண்டாவது கிலோமீட்டரில் ‘அப்பா’ போட்டார். மூன்றாவது கிலோமீட்டரில் நான் கேடியாக இருப்பேன் என்று ‘டா’ போட்டார். நல்ல வேளையாக வேடந்தாங்கல் வந்துவிட்டது. இல்லையானால், நான்காவது கிலோமீட்டரில், அவர் என்னை அடிக்கவும் அடித்து இருப்பார்.

ஸ்ரீராமுலு ரெட்டியார் என்னைப் பார்த்ததும் எழுந்து நின்று வரவேற்றார். எதிரே உள்ள நாற்காலியில் உட்கார வைத்தார். போலீஸ்காரர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் ஏதோ பேசி அனுப்பிவிட்டு, என்னைப் பார்த்தார். நான் வந்த காரியத்தைச் சொன்னேன். ‘இவ்வளவுதானா’ என்று சொல்லிவிட்டு “நான் யூனியன் கமிஷனருக்குப் போன் செய்றேன். இன்னும் இரண்டு நாளில், அவரைப் பார்த்துவிட்டு, வாத்தியார் வேலையில் சேருங்கள். அப்புறம் வேற வேலை தேடலாம்” என்றார்.

நான் புறப்பட்டேன். இரண்டு நாட்களுக்கு என்ன செய்வது? கையில் ஒரு ரூபாய்தான் இருந்தது. அவரிடம் கேட்க வெட்கம். தயங்கித் தயங்கி திரும்பி நடந்தேன். வழியில் எனக்காக காத்திருந்தவர் போல் தோன்றிய போலீஸ்காரர்! “ஐயாதான் ரெட்டியார்கிட்டச் சொல்லி என் மகளுக்கும் வேலை வாங்கித்தரணும். செகண்டரி கிரேட்” என்றார்.

விபரீத எண்ணம்

எனக்கு ஒரு விபரீத எண்ணம். ‘அதுக்கும் நானாச்சு. நூறு ரூபாய் தள்ளும்’ என்று கேட்கலாமா? லாக்கப்பில் தள்ளத் தயாராக இருந்தவர், பணத்தைத் தள்ளுவார் என்பதில் சந்தேகம் வரவில்லை. ‘சீ, இப்பவே இந்த புத்தியா?’ என்று என்னை நானே கோபித்துக் கொண்டு நடந்தேன். திடீரென்று, ரெட்டியார் கூப்பிடுவதாக, ஒருவர் வந்து சொன்னதும், ஸ்ரீராமுலு ரெட்டியாரிடம் ஓடினேன். அவர் சிரித்தபடியே ‘தம்பி, தப்பா நினைக்கப்படாது. எல்லோருக்கும் பணத்தட்டுப்பாடு வரத்தான் செய்யும். எனக்குக் கூட வந்திருக்கு. அதனாலதான் கேட்கிறேன். கையில பணம் இருக்கா, இல்ல நான் தரட்டுமா?’ என்றார். எனக்கு அழுகை வந்தது. அடக்கிக்கொண்டேன். சொற்பொழிவுக்கு அவர் நீட்டிய பணத்தை வாங்க மறுத்த நானா இப்போது பணம் கேட்பது? கூடாது. கூடாது. “பணம் இருக்கு” என்று கம்பீரமாகப் பதிலளித்துவிட்டு திரும்பி நடந்தேன். பஸ் கட்டணத்திற்குரிய பணம் இல்லை. காஞ்சிபுரம் வரை நடப்பது என்று தீர்மானித்து நடந்து கொண்டிருந்தேன். கண்ணீர் தானாக வந்தது. இவ்வளவு தூரத்தையும் எப்படி நடப்பது? திடீரென்று ஒரு கார் வந்து நின்றது. ஸ்ரீராமுலு ரெட்டியார் சிரித்தபடியே ‘நானும், உட்களுக்காக இன்னைக்கே காஞ்சிபுரம் வாரேன், ஏறுங்கோ,’ என்றார்.

குளத்தில் விழுந்து சாகலாமா?

காஞ்சிபுரத்தில் என் நண்பர் வடமலைராஜ் இல்லை. எப்படியோ அங்கே ஒரு நாள் சமாளித்துவிட்டு, அச்சரபாக்கம் போய்ச் சேர்ந்தேன். யூனியன் அதிகாரிகள் எதுவுமே தெரியாது என்றார்கள். ஸ்ரீராமுலு ரெட்டியாரோ, டெல்லிக்குப் போய்விட்டார். கையில் இருந்தது நாலாணா. பசி தாங்க முடியவில்லை. அச்சரபாக்கம் குளக்கரைக்குப் போனேன். குளத்தில் தண்ணீர் இருந்தது. ஆழம் எவ்வளவோ. காட்டுக் கொடிகளால் கை கால்களைக் கட்டிக் கொண்டு, குளத்தில் விழுந்து சாகலாமா, எவனாவது இந்த நாலணாவுக்கு விஷம் தருவானா. இரவு மணி எட்டு இருக்கும். அக்கம் பக்கம் நாதியில்லை. காட்டுக் கொடிகளை எடுக்கப் போனேன். திடீரென்று கதராடை அணிந்த ஒருவர், நான்கைந்து பேர்களுடன் வந்தார். எடுத்த எடுப்பிலேயே “நீ சமுத்திரம் தானேடா?” என்றார். நான் தலையாட்டினதும் “முட்டாள் ஒன்னை எங்கெல்லாம் தேடறது. நீ நேராய் என்னைப் பார்த்திருக்கணும். என் பெயர் சீனிவாசன். கல்வி வளர்ச்சி அதிகாரி. ரெட்டியார் என்கிட்ட சொல்லியிருக்கிறார். காட்டுக்கரணை பள்ளிக்கூடத்திற்கு நீதான் ஹெட்மாஸ்டர். சரி, வா, என் ரூமுக்குப் போகலாம். டேய்.... ஏண்டா அழறே.... சரி வா மொதல்ல சாப்பிடலாம்” என்றார்.

பி.ஏ. வாத்தியார்

காட்டுக்கரணை என்ற கிராமத்தில் அப்போது ஒரு சின்னக் கடை கூடக்கிடையாது. கார் போக முடியாது. அப்படியே தப்பித் தவறி போகிற கார் திரும்ப முடியாது. ஆனால் நல்ல ஜனங்கள். பஞ்சாயத்துத் தலைவர் என்னை வரவேற்று ஒரு வீட்டின் முன்னறையைத் தயாராக வைத்திருந்தார். அரிசி பருப்பு வகையறாக்களை அவரே வாங்கி வைத்திருந்தார். அப்போது எட்டாவது வகுப்பை ஈ.எஸ்.எல்.சி. என்பார்கள். அரசாங்கப் பரீட்சை எழுதியாக வேண்டும். ஆனால் மாணவர்களுக்கு நான் போய்த்தான் ‘ஏ.பி.ஸி.டி.’ சொல்லிக் கொடுத்தேன். நல்ல ஆசிரியர் வேண்டும் என்று இந்த எட்டாவது மாணவர்கள் ‘ஸ்டிரைக்’ செய்ததாலேயே, என்னை அங்கே, தலைமை ஆசிரியராகப் போட்டார்களாம். நானும், இரவு பகலென்று பாராது, மாணவர்களுக்குப் பாடம் நடத்தினேன். அவர்களுக்கும், நானென்றால் உயிர். பாடம் நடக்காத சமயத்தில் மாணவர்களோடு தேக்குத் தோப்புகளில் திரிவேன். காடுகளுக்குச் சென்று, நாகப் பழங்களைத் தின்பேன்.

ஊரிலும் எனக்கு நல்ல மரியாதை. எனக்கு ‘பி.ஏ.’ வாத்தியார் என்று பெயர். அந்த பள்ளிக்கூடத்திலேயே ‘பழமும் தின்று கொட்டையும் போட்ட’ ஒரு வயதான ஆசிரியருக்கு இது பிடிக்கவில்லை. அவர், மாணவர்களை, தன் வீட்டு சமையலுக்கு பள்ளிக்கூட நேரத்தில் பயன்படுத்தக்கூடாது என்று நான் உத்தரவு போட்டது காரணமாக இருக்கலாம். அல்லது ஒருவேளை நானே ‘கிராஜுவேட்-தலைமை ஆசிரியர்’ என்று அகங்காரமாக நடந்திருக்கலாம். சமயத்தை எதிர்பார்த்து இருந்தார்.

சாதிய மேலாண்மை

ஒரு நாள் நல்ல மழை. பள்ளிக்கூடம் ஒழுகியது. இதே இந்த ஆசிரியர் என்னிடம் வந்து “ஸார்... ஸ்கூல் ஒழுகுது. பேசாமல் கிருஷ்ணன் கோவிலுல ஒரு வகுப்பை வைக்கலாம்,” என்றார் வினயமாக, நானும் அதற்கு உடன்பட்டு, இன்னொரு ஆசிரியரை, மாணவர்களுடன் கோயிலுக்குப் போகும்படி சொன்னேன்.

அரைமணி நேரத்திற்குப் பிறகு இரண்டு ஹரிஜன மாணவர்கள் அழுது கொண்டு வந்தார்கள். “கோவிலுக்குள் எப்படிப் போகலாம்?” என்று அவர்களை ஊர் மக்கள் அடித்தார்களாம். “இதை விடக்கூடாது ஸார்,” என்றார் அந்த ஆசிரியர். நான் கோபத்துடன் கோவிலுக்குப் போனேன்.

ஹரிஜன மாணவர்களின் சிலேட்டுக்களும், நோட்டுப் புத்தகங்களும், கோவிலுக்கு வெளியே சிதறிக் கிடந்தன. ஓரிரு பெஞ்சுகள் உடைக்கப்பட்டு வெளியே கிடந்தன. ஹரிஜன மாணவர்களுடன், இதர மாணவர்களும் சேர்ந்து அழுது கொண்டிருந்தார்கள்.

என்னைப் பார்த்ததும், சத்தமாக புலம்பினார்கள். “இந்த நாட்ல எல்லாரும் சமம்டா... வாங்கடா கோவிலுக்குள்ளே போகலாம். ஊர்க்காரங்க என்ன செய்யுறாங்கன்னு பார்த்துடுறேன்,” என்று சொல்லிக் கொண்டே, கோவிலுக்குள் நுழையப் போனேன்.

ஊர்க்காரர்களில் ஒருவர், “வாத்தியாரே, நீர் வேணுமுன்னால் போகலாம். காலனி பசங்க போனால்....” என்றார். நான், அதைப் பொருட்படுத்தாமல், உள்ளே ஹரிஜன மாணவர்களை இழுத்துக் கொண்டு நுழையப் போனேன். பஞ்சாயத்துத் தலைவர் ஊரில் இல்லை. ஊர்த் தலைவர்கள் என்னைத் தாக்கலாம் என்ற சூழல். எனக்கோ, மகாத்மா காந்தியின் நினைவு மட்டுமே நின்றது. திடீரென்று, தையல் ஆசிரியரான கேசவன் செட்டியார் என்பவர், என் காலில் நெடுஞ் சாண்கிடையாக விழுந்து, “ஸார்.... இந்த ஊருக்குப் புத்தி வர இன்னும் இருபது வருடம் ஆகும். வத்தி வச்சு விட்டது கிழட்டு வாத்தியான். இவங்க அப்பாவிங்க. ஒங்களால ஊர்ல ரத்தக்கறை வேண்டாம்,” என்று சொல்லி, என் கால்களைப் பிடித்துக் கொண்டார். நானும் “எக்கேடாவது கெட்டுப் போங்க,” என்று சொல்லிவிட்டு, பெட்டி படுக்கையை சுருட்டிக் கொண்டு புறப்பட்டேன்.

மாணவர்கள் கதறி அழுதார்கள். என்னிடம் லேசாகப் பிரியம் காட்டிய இரண்டு இளம் பெண்கள், கண்ணீர் மல்க நின்றார்கள். ஊர்க்காரர்கள் கூடத் தடுத்தார்கள். (‘கிழட்டு’ வாத்தியார்தான், நான் போகக்கூடாது என்று அதிகமாகக் கெஞ்சினார்.) உருண்டோடிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, திரும்பிப் பாராமல் நடந்தேன்.

மீண்டும் மீண்டும் சித்தப்பா

மீண்டும் சென்னை. மீண்டும் சித்தப்பா. மீண்டும் திட்டு. ஓரிரு மாதங்களில் தென்னாற்காடு மாவட்டத்தில், ஓர் உயர்நிலைப் பள்ளியில், ‘பி.டி. அஸிஸ்டெண்ட்’ என்ற வாத்தியார் வேலை கிடைத்தது. தலைமை ஆசிரியரின் தில்லு முல்லுத்தனம் (சம்பளம் சரியாகத் தராமலே கையெழுத்து வாங்கிக் கொள்பவர்) பொறுக்காமல் வெளியேறினேன்.

மீண்டும் சென்னை. மீண்டும் சித்தப்பா. மீண்டும் திட்டு. இரண்டு மாதங்களுக்குள் சீனியர் கோவாபரேட்டிவ் இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்தது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில், பாய் நெசவு கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டேன். எனக்கு முன்னால் இருந்தவர், கூட்டுறவு சங்கத் தலைவரை ‘முதலாளி’ என்று சொல்லிப் பழகிவிட்டார். என்னிடமும் இதை எதிர்பார்த்தார். நடக்கவில்லை. இதனால் அடிக்கடி தகராறு வந்தது.

மீண்டும் சித்தப்பா வீடு. இப்போது, அவர் என்னைத் திட்டவில்லை. தேறாத கேஸை எதுக்காகத் திட்டணும்? பேச மறுத்துவிட்டார். சித்தி, ஊரில் விவசாயத்தைக் கவனிக்கப் போய்விட்டார். பசியால் துடித்தேன். என் பெரியம்மா மகன், காசு கொடுப்பான். என் ஒன்றுவிட்ட பெரியப்பா மகள் சோறு போட்டாள், எப்படியோ மூன்று மாதத்திற்குள் பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி வேலை கிடைத்தது. ஸ்ரீபெரும்புதூரில் பஞ்சாயத்து யுனியனில் வேலை. பஞ்சாயத்துகளுக்கு, அய்யாதான் ஆடிட்டர்!

இதே சமயத்தில், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில், எப்போதோ எழுதி மறந்துபோன பரீட்சைக்கு ‘இன்டர்வியூ’ வந்தது மத்திய தகவல் சர்வீஸுக்கான பேட்டி. புதுடில்லிக்கு புறப்பட்டேன்.

மத்திய தகவல் சர்வீஸுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, டில்லி வானொலித் துறையில், தமிழ்ச் செய்திப் பிரிவில் ‘சப் எடிட்டராக’ நியமித்த ஓர் ஆர்டர் வந்தது.

டில்லி வானொலியில், தமிழ்ச் செய்திப் பிரிவில் சேர்ந்தேன். எல்லா மொழி செய்திப் பிரிவுகளும், குதிரை லாயம் போன்ற ஒரு கட்டிடத்திற்குள் இருந்தன. எல்லா மொழிக்காரர்களையும் ஒரே சமயத்தில் பார்த்ததும், பழகியதும் இனிமையான அனுபவம். முதல் நாளே, கான்டீனுக்குப் போன் செய்து ‘இட்லி ஹை... வடா ஹை...’ என்றேன். ‘குச் நை’ பதில் வந்தது. உடனே ‘ஏக் பிளேட் குச்சி நை ஹை’ என்றேன். (‘குச்சி நை’ என்றால் ஒன்றும் இல்லை என்று இந்தியில் அர்த்தம்.)

செய்தி வாசிப்பாளராக...

ஒரு மாதம் ஆகிவிட்டது. செய்திகளைப் படிப்பது என் வேலை இல்லை என்றாலும், எனக்குப் படிக்க ஆசை. எப்படியோ படிக்கும் பணியும் கிடைத்துவிட்டது. நான்கு கோடி தமிழ் மக்களும் என் வாசிப்பைக் கேட்க உன்னிப்பாய் இருப்பதுபோல் எனக்குள் ஒரு எண்ணம். அந்த நாளும் வந்தது. மத்தியானச் செய்தியைப் படிக்க, சகாக்களுடன் போனேன். ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட ஸ்டூடியோவிற்குள் என் உடம்பு வேர்வையில் நனைந்தது. கைகால்கள் ஆடின. பேடரைத் திறக்க வேண்டும். சிவப்பு விளக்கைப் பார்க்க வேண்டும். படிக்கத் துவங்கினேன். பத்து நிமிட செய்தியை ஆறு நிமிடத்திற்குள் முடித்துவிட்டு, நான்கு நிமிடத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன்.

சகாக்கள், தயாராகக் கொண்டு வந்திருந்த, ஏற்கனவே காலையில் படித்து முடித்த செய்திகளை, பலாத்காரமாய்ப் பிடுங்கி, அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படித்து முடித்தேன்.

சென்னையில் பல்வேறு பேச்சுப் போட்டிகளில் வென்றும், தமிழ் மாணவர் தலைவராக திகழ்ந்தும் செயல்பட்ட எனக்கு அங்கே என்னுடைய சகாக்களோடு ஒன்றிக்க முடியவில்லை. இதற்கு நான் காரணமல்ல. என்னுடைய ஆங்கில உச்சரிப்பிற்காக எதிரே உள்ள மலையாளப் பிரிவு அலுவலர்களை கண்சிமிட்டி சிரிப்பார்கள். எனது பணி செய்திகளை மொழியாக்கம் செய்வது. ‘சொன்னார்’ என்று எழுதினால் அதை அடித்துவிட்டு ‘தெரிவித்தார்’ என்று திருத்துவார்கள். ‘தெரிவித்தார்’ என்று எழுதினால் ‘சொன்னார்’ என்று திருத்துவார்கள். இப்படி பக்கம் பக்கமாக திருத்தப்பட்டதை தமிழ் தெரியாத ஒரு வங்காளி இயக்குநரிடம் காட்டி “சமுத்திரம் இவ்வளவு தப்புகள் செய்திருக்கிறார்” என்று சொல்லியிருக்கிறார்கள். அவர் இதனாலேயே என்னை வேறு துறைக்கு மாற்றும்படி அமைச்சரவைக்கு கடிதம் எழுதியதாகப் பின்னர் அறிந்தேன்.

என் நிறத்திற்காக சிரித்தவர்கள்-என் உச்சரிப்பிற்காக சிரித்தவர்கள். இப்படி நாளெல்லாம் சிறுமைப்பட்டுக் கொண்டிருந்தேன். இந்தச் சமயத்தில் எங்கள் பிரிவுத் தலைவர் எனக்கு சரியாக மொழி பெயர்ப்பு வரவில்லையென்றும், ஆகையால் எனது மொழி பெயர்ப்பை பிற சகா திருத்தவேண்டும் என்றும் ஒரு சர்க்குலரை ஆங்கிலத்தில் எழுதி வெளியே தொங்கபோட்டார்.

இந்த சர்க்குலர் எனக்கு ஒரு தன்மானப் பிரச்சினையாகியது. அப்படி எழுதியவர் அன்று மட்டும் என் கண்ணில் பட்டிருந்தால் நிச்சயம் கொலை செய்திருப்பேன். கரோல்பாக்கில், அவரது சின்னவீட்டில் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. இந்த சர்க்குலர் படி ஒவ்வொருவரிடமும் குட்டுப்படுவது என்பது என்னால் முடியாத காரியம். ஆகையால் வங்காள மேலதிகாரிக்கு ஆங்கிலத்தில் ஒரு விடுமுறைக் கடிதம் இப்படி எழுதினேன்.

“எனது தமிழ் செய்திப் பிரிவுத் தலைவர் இன்னொரு சகாவான ஒரு பெண்ணின் தூண்டுதலால் என்னை இழிவுபடுத்தி ஒரு சர்க்குலர் போட்டிருக்கிறார். ஆகையால் என் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மனம் பழைய நிலைக்கு வருவதற்காக எனக்கு இரண்டு நாள் விடுமுறை கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.”

(Sir, As I am Mentaly upset by a circular issued by the unit incharge, Mr..... denigrating me, instigated by our lady collague Miss..., I request you to give me two days casual leave, to recover my shattered feelings)

இந்த மாதிரியான விடுமுறைக் கடிதம் வானொலி நிலைய வரலாற்றிலேயே புதிதாக இருந்திருக்கும். மேல் அதிகாரியான வங்காள இணை இயக்குநர் அதிர்ந்து போனார். அந்தக் கடிதத்தை அவரால் ஏற்க முடியாது. ஆகையால் கரோல்பாக்கில் நான் தங்கி இருந்த அறைக்கு வானொலி கார் வந்தது. என்னை அந்த அதிகாரியின் அறைக்குள் கொண்டு போய் போட்டது. நான் போவதற்கு முன்பே எனது சகாக்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து அங்கு வாதிட்டுக் கொண்டிருந்தார்கள்.

என்னைப் பார்த்ததும் அந்த அதிகாரி கத்தினார். சஸ்பெண்ட் செய்யப் போவதாக மிரட்டினார். உடனே நான், எனக்குத் தெரிந்த ஓட்டை ஆங்கிலத்தில் அப்படி ஏற்பட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சொன்னேன். வேலைபோய் வெளியே சோற்றுக்கு திண்டாடுவதைவிட உங்கள் அறையிலேயே உண்ணாவிரதம் இருப்பேன் என்கிற மாதிரி ஏதோ ஒரு விரக்தியில் உரத்துக் கத்தினேன். அந்த அதிகாரி தனது சுருக்கெழுத்தாளரை வரவழைத்தார். நானோ என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று வீம்பாக இருந்தேன். உடனே அந்த அதிகாரி எனது செய்திப் பிரிவுத் தலைவர் வெளியிட்ட சர்க்குலரை ரத்து செய்வதாகவும், இப்படிப்பட்ட சர்க்குலரை இனிமேல் அவர் வெளியிடக்கூடாது என்றும் டிக்டேஷன் கொடுத்தார். இந்த வெற்றியை என்னால் ரசிக்கக்கூட முடியவில்லை. இந்தப் போரில் நான் வெற்றி பெற்றாலும் அதில் கிடைத்த காயங்கள் இப்போதுகூட வலிக்கின்றன.

சிறையில் செய்தி வாசிப்பாளர்

இந்தச் சமயத்தில் இன்னொரு போதாத வேலை. நான் தனியாக அறை எடுத்து ஒரு தோழரோடு தங்கியிருந்தேன். அதற்கு முன்பு தமிழர்களுக்கு பரிச்சயப்பட்ட ராமானுஜம் மெஸ்ஸில்-அதாவது உண்டு உறையும் இடத்தில் தங்கி இருந்தேன். அப்போது தமிழ்நாட்டு இளைஞர் ஒருவர் தடபுடலாக தங்கியிருந்தார். சென்னையில் ஒரு பிரபலமான ஒரு டாக்டரின் மகனாம். இவரைச் சுற்றி பத்து பதினைந்து பேர் சூழ்ந்திருப்பார்கள். சில சமயம் ஓரிரு பெண்களைக்கூட கூட்டி வருவார். இவர் எனக்கு பழக்கமே தவிர. நட்பல்ல. ஆனால் என்னிடம் மிகவும் கண்ணியமாகப் பழகுவார்.

நான் தனியறைக்குப் போன பிறகு ஒருநாள் என் அறைக்குள் ஓடி வந்து, “என்னை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்று கதறினார். ஒரு நிமிடத்திற்குள் ஒரு சர்தார்ஜி இளைஞன் ஒரு தடியோடு ஈட்டிக்காரன் மாதிரி வந்து அந்த இளைஞனை என் கண் முன்னாலேயே அடித்து வெளியே இழுத்தான்.

எனக்கோ இந்தி வராது. அதோடு எங்கள் இரண்டு பேரையும் சேர்த்து அடிக்கும் வலிமை கொண்டவன் அவன். ஆனாலும் என்னால் தாளமுடியவில்லை. அரைகுறை ஆங்கிலத்தில் “யூ பேஸ்டட் டாக்” என்று சொல்லிக்கொண்டு அவன் கையைப் பிடித்தேன். உடனே அவன் நான் இந்த இளைஞன் வாங்கிய கடனுக்கு கேரண்டி கொடுக்க முன் வந்திருப்பதாகக் கருதி சிரித்தான். அதையே இந்தியில் விளக்கமாகக் கேட்டான். உடனே நான் “நோ நோ” என்றேன். பழையபடியும் அந்த இளைஞனை கண்ணத்தில் ரெண்டுபோடு போட்டு வெளியே இழுத்துக் கொண்டு போனான். அவனோ என்னை கையெடுத்துக் கும்பிட்டான்.

எனக்கு மனசு கேட்கவில்லை. அந்த சர்தார்ஜி இளைஞனை அதட்டியபடியே அவன் வீட்டுக்குப் போனேன். அவனும் சிநேகிதமாக சிரித்தபடியே அந்த இளைஞனை ஒன்றும் செய்யப் போவதில்லை என்றும் தெரிவித்தான். என்னையும் வரும்படிக் கேட்டான். இந்த இளைஞன் வாங்கிய ஆயிரக்கணக்கான ரூபாய்க்கான ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும். மற்றபடி ஒன்றுமில்லை என்றான். இந்த இளைஞனும் என்னைப் பார்த்துக் கெஞ்சினான். வேறு வழியில்லாமல் நானும் அவனோடு போனேன். ஒரு அறைக்குள் எங்களை உட்கார வைத்தான். நாங்கள் உட்கார்ந்ததுதான் தாமதம்..... உடனே அறைக்கு வெளியே போய் கதவை சாத்தி விட்டான். ஜன்னல் வழியாக எங்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே, தந்தையைக் கூப்பிடுவதற்காகப், போய்விட்டான்.

எனக்கோ நடுக்கம். அன்று மத்தியானம் நான் செய்தி வாசிக்கவேண்டும். அதுவும் மொழி பெயர்த்து செய்தி வாசிக்க வேண்டும். சில சமயம் செய்தி வாசிக்காத ஒருவர் மொழி பெயர்ப்புக்காக வந்திருப்பார். நான் போகவில்லையானால் நாள், மணி, நேரம் தவறாமல் வரும் செய்தி நின்று போகலாம். வேலையும் கோவிந்தாவாகி விடும். ஒரே குழப்பம். அந்தச் சமயத்தில் நான்கைந்து பெண்கள் எதுவுமே நடக்காதது போல் அங்கே வந்தார்கள். உள்ளே ஒரு டெலிபோன் இருப்பதை அப்போதுதான் பார்த்தேன். உடனே அந்தப் பெண்களிடம் கைகளை அங்குமிங்குமாக ஆட்டி, ‘ஐ கவர்மெண்ட செர்வண்ட், போலீஸ் மே கம்ளைண்ட் ஹே’ என்று டெலிபோன் ரீசிவரை தூக்கினேன். அந்தப் பெண்கள் பயந்து விட்டார்கள். அப்போது புதுடெல்லியில் போலீஸ் என்றால் எல்லோருக்குமே பயம். உடனே அந்தப் பெண்கள் கதவை திறந்து விட்டார்கள்.

நாங்கள் இருவரும் எடுத்தோம் ஓட்டம். ஒரு கிலோமீட்டர் வரை ஓடிய பிறகு அந்த இளைஞனுக்கு ‘ஆளைவிடு’ என்கிற அர்த்தத்தில் ஒரு கும்பிடு போட்டு விட்டு, ஒரு ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு வானொலி நிலையத்திற்குள் பாய்ந்தேன்.

சென்னை திரும்பல்

நான் சென்னையிலுள்ள வேறு பதவிக்கு திரும்புவதற்கு ஆசைப்பட்டேன். பேருந்து நிலையத்தில், கூட்டத்தில் தவிப்பவரை எப்படிக் கூட்டம் உள்ளே தள்ளிவிடுமோ, அப்படி எனது சகாக்களில் பலர் என்னை சென்னைக்கு தள்ளிவிடுவதில் உதவிகரமாய் இருந்தார்கள். மூன்றாண்டு காலம் சென்னையில் களவிளம்பரத்துறை அதிகாரியாக காரோடும், பேரோடும், மேலதிகாரிகளோடு சண்டை சச்சரவுகளோடும், நீடித்தேன். இதில் கிடைத்த அனுபவங்களும், களநிகழ்ச்சிகளும் நான் கதை எழுத உதவின. மூன்றாண்டுகளுக்குப் பிறகு, உதவி செய்தி ஆசிரியராக பதவி உயர்வு ஏற்பட்டு டெல்லிக்கு மாற்றப்பட்டேன்.

பைத்தியக்கார மருத்துவமனையை போல...

டெல்லியில் அத்தனை இந்திய மொழிகளுக்கும் செய்திகளை ஆங்கிலத்தில் கொடுக்கும் ஒரு மாபெரும் கூடம். இதற்கு ஜி.என்.ஆர்., அதாவது ‘ஜெனரல் நியூஸ் ரூம்’ என்று பெயர். இப்போது குளிர்சாதன வசதிகளோடு நவீனமாக உள்ள அந்தக்கூடம் அப்போது மாட்டுத் தொழுவம்போல் இருந்தது. இதன் மத்தியில் மிகப்பெரிய நாற்காலியில் பொறுப்பாசிரியர் உட்கார்ந்திருப்பார். பக்கவாட்டில் தென்னிந்திய, வடஇந்திய, கிழக்கிந்திய மொழிகளுக்கான உதவி செய்தி ஆசிரியர்கள் இருப்பார்கள். டெலிபிரிண்டர்கள் இரையும். டெலிபோன்கள் கத்தும். இண்டர்காம்கள் அலறும். தந்திகள் குவியும். பிறநாட்டு ஒலிபரப்புகள் முனங்கும்.... உதவி செய்தி ஆசிரியர்கள் பொறுப்பாசிரியரை சூழ்ந்து கொண்டு தத்தம் தலைப்பு செய்திகளைக் காட்டி அங்கீகாரத்திற்காக நிற்பார்கள். செய்தி நேரம் நெருங்குவதைப் பார்த்து, பல்வேறு வினோதமான குரல்களை எழுப்புவார்கள். ஆகமொத்தத்தில் புரியாதவர்களுக்கு அது ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியாகவே தெரியும்.

தொழில் குருநாதர் இராமநாதன்

இத்தகைய மருத்துவமனையில், உதவி செய்தி ஆசிரியரான அடியேன், என்னை எந்த செய்திப் பிரிவு இழிவுப்படுத்தியதோ அந்த செய்திப்பிரிவிற்கும், செய்திக் கட்டளைகளை தீர்மானிக்கும் பொறுப்பில் இருந்தேன். பொறுப்பாசிரியர்கள் பெரிய அதிகார அந்தஸ்து கொண்டவர்கள். அவர்கள்தான் செய்திகளின் போக்கை தீர்மானிக்க வேண்டியவர்கள். இதில் குறிப்பிடத் தக்கவர் ‘இந்தியன் எக்ஸ்பிரஸி’ல் மூத்த செய்தியாளராக பணியாற்றிவிட்டு, டெல்லியில் வானொலி செய்தி ஆசிரியராக பணியாற்றிய திருமிகு. இராமநாதன் அவர்கள். இவர்தான் எனது தொழில் குரு. தூசி படிந்த இந்தக் கண்ணாடியை துடைத்துவிட்ட செய்தி மேதை. ‘வருவதைப் படி, படித்ததை தூர எறி எது மனதில் நிற்கிறதோ அதுதான் செய்தி’ என்பார். இவருக்கு ஈடான செய்தி ஆசிரியர் எவருமே கிடையாது. எல்லோரின் பிரமிப்புக்கும் உரியவர். இப்போதும் நன்றாகவே நினைவுக்கு வருகிறது.

பங்களாதேசம் விடுவிக்கப்பட்ட செய்தி வந்தது. அதேசமயம் பாகிஸ்தானிய அதிபர், சண்டை தொடரும் என்கிறார். இந்த இரண்டையும், நம் மக்களின் மகிழ்ச்சி குன்றாத வகையில் செய்தியாகப் போடவேண்டும். எங்கள் செய்தி இயக்குநர் டாக்டர் பஜாஜ் அவர்கள் குழம்பிப் போனார். பொறுப்பாசிரியர் குழப்பிக் கொண்டிருந்தார். உதவிச் செய்தி ஆசிரியர்கள் உதட்டைப் பிதுக்கினார்கள். அப்போது டெஸ்கில் இருக்க வேண்டிய அவசியமில்லாத என் குரு இராமநாதன் எங்கிருந்தோ வந்தார். எல்லோரும் அவரை மொய்த்தார்கள். சோமபானம் கொடுக்கவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், அவர் ஒரு தலைப்புச் செய்தியை ஆங்கிலத்தில் கொடுத்தார். அதன் தமிழ்வடிவம் இதுதான்.

“பங்களாதேஷ் விடுவிக்கப்பட்டாலும், இந்தியாவுடனான போர் தொடருமாம். இந்த விடியலுக்கு மத்தியில் பாகிஸ்தான் அதிபர் தன் மக்களுக்கு ஆறுதலாக இப்படி ஒரு ஆண்மையற்ற அச்சுறுத்தலை அறிவித்திருக்கிறார்.”

இந்த தலைப்புச் செய்தியை கேட்டு, அனைவரும் மகிழ்ந்து போனார்கள். இப்பேர்பட்ட இவர், என்னை பொறுப்பாசிரியரான தனக்கு, உதவி ஆசிரியராக வைத்துக் கொண்டார். அரசியல் முக்கியத்துவம் உள்ள செய்திகளை ‘எடிட்’ செய்து எழுதுவது என் பொறுப்பு. அவரிடம் காட்டினால், என்னை கண்டபடி திட்டுவார். எல்லோரும் சிரிப்பார்கள். இன்னொரு நாளும் இப்படி திட்டி முடித்துவிட்டு சிரித்தவர்களை தன்னருகே கூப்பிட்டார். “சமுத்திரத்தை திருத்த முடியும். அவனுக்கு இயல்பான அறிவு இருக்கிறது. அதனால்தான் திட்டுகிறேன். நீங்களோ புத்தி கெட்டவர்கள். ஆகையால்தான் உங்களை திட்டவில்லை” என்று ஆங்கிலத்தில் முழங்கினார்.

என்றாலும் திட்டிக்கொண்டே இருந்தார். நான் ஒரு தந்திரத்தை கடைப்பிடித்தேன். அவர் சிகரெட்டிற்காக அங்குமிங்கும் பார்க்கும்போது, என்னிடம் உள்ள சிகரெட்டை அவர் வாயில் வைத்து, நெருப்பிட்டுக்கொண்டே, தலைப்புச் செய்தியைக் காட்டுவேன். ‘சிங்கக்குட்டிடா நீ’ என்று அதை கிளியர் செய்துவிடுவார். பிறகு, என் செய்தியில் உள்ள தப்பை அதற்கென்ற உள்ள சில சகாக்கள் சுட்டிக்காட்டும்போது அவர் கண்ணுக்குத் தெரிந்த இந்தச் சிங்கம் அசிங்கமாகிவிடும். ஆனால், வெளியே வந்தாலோ நாங்கள் தோழர்கள். ஒவ்வொரு திட்டுக்கும் ஒரு பெக் சோமபானம் கொடுப்பார். பிராமணராக இருந்தாலும், தந்தை பெரியாரிடம் அளவற்ற பற்று கொண்டவர்.

இந்த சந்தர்ப்பத்தில் என் புது மனைவி ஒன்பது மாதத்தோடு ஊருக்குப் போய்விட்டார். எனக்கு சமையலை சொல்லிக் கொடுத்தார். செய்ய முடியவில்லை. எப்படியோ கண்டதைத் தின்று வேலை பார்த்தபோது, துப்பினால் ரத்த ரத்தமாக வந்தது. நான் பயந்து போனேன். மருத்துவமனைக்குப் போனால் எனக்கு டி.பி. வந்திருப்பதாகத் தெரிவித்து மருந்தும் கொடுத்தார்கள். இதைக் காரணம் காட்டி என் மேல் அதிகாரியிடம் வேறு துறைக்கு மாற்றம் கேட்டேன். அதற்குள் என் வேலையையும் விசுவாசத்தையும் புரிந்துகொண்ட என் குரு இராமநாதன், ‘எளிதாக ஷிப்ட் கொடுக்கிறோம். இங்கேயே இரு’ என்றார். என்னுடைய உடல் இளைக்காததை பார்த்துவிட்டு, நான் வேண்டுமென்றே பொய் சொல்லுவதாக மேலதிகாரிகளுக்கு ஒரு அனுமானம்.

என்றாலும், அமைச்சரவை ஆணையிட்டு, புதுடெல்லியில் உள்ள பத்திரிகைத் தகவல் அலுவலகத்தில் உதவித் தகவல் அதிகாரியாக மாற்றினார்கள். ஆனால், வானொலி அதிகாரிகள் என்னை விடுவித்த மறுத்தார்கள். இது தெரிந்ததும் என்னைப் போல் மாறுதலாகி விடுவிக்கப்படாமல் இருக்கும் அனைவரையும் ஒன்று திரட்டி, “உதவி செய்தி ஆசிரியர்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிர்ப்பான சங்கம்” (Society for prevention of cruelties on Assistant News Editors) என்று ஒன்றைத் துவக்கினோம். இதைக் கேள்விப்பட்ட அதிகாரிகள் உடனடியாக என்னை விடுவித்தார்கள். என்குரு ‘அல்பம்... அல்பம்...’ என்றார்.

பப்பாளி தர்பார்

நான் டி.பி.க்காக ஊசி போட்டும், ரத்தம் கொட்டுவது நிற்கவில்லை. பயந்துபோய் சென்னைக்கு விடுப்பில் வந்தேன். அப்போது என்னுடைய ஆன்மீகக் குருவான ரங்கசாமி செட்டியார் ரத்தம் கொட்டுவதற்கான காரணத்தை கண்டுபிடித்தார். மனைவி இல்லாத இரண்டுமாத இடைவெளியில் தினமும் பப்பாளிப் பழங்களையே ஆகாரமாக உண்டேன். ‘அடே! பாவி. அபார்சனுக்கு உரிய பழத்தை சாப்பிட்டிருக்கியே, உனக்கு அறிவு இருக்கா?’ என்று கடிந்து கொண்டார். பப்பாளி பழக்கடியும் நின்றது. ரத்தகொட்டலும் நின்றது. மீண்டும் டெல்லியில் வேலைக்குச் சென்றேன்.

இந்தப் பின்னணியில் ஒன்று சொல்லவேண்டும். புதிதாய் வேலையில் சேர்ந்த ஆறுமாத காலத்திற்குள் ஒன்றை புரிந்து கொண்டேன். மத்திய அரசு செய்தி-தகவல்துறை அலுவலருக்கு, தமிழ் அறிவு மட்டும் போதாது. ஆங்கில அறிவும், பொது அறிவும் தேவை என்பதை உணர்ந்து கொண்டேன். இதனால் வானொலிச் செய்திகளையும், அவற்றின் உச்சரிப்பையும் மணிக்கணக்கில் கேட்பேன். நூலகத்தில் இருந்து பல்வேறு புத்தகங்களை வாங்கிப் படிக்கத் துவங்கினேன். நுணுக்கமான ஆங்கில வார்த்தைகளை எழுதிக் கொண்டு மனப்பாடம் செய்தேன். பத்திரிகைகளை பாடநூல் போல் படித்தேன். ஆங்கிலத்தில் உரையாடுபவர்களை உன்னிப்பாக கவனித்தேன். திறமையில்லாமல் கௌரவத்தை நிலைநிறுத்த முடியாது என்று எனது கல்லூரி ஆசிரியர் ஒருவர் சொன்ன கருத்தை சிக்கெனப் பிடித்துக் கொண்டேன்.

பத்திரிகைத் தகவல் அலுவலகத்தில் உதவி அதிகாரியாக மாற்றப்பட்ட பணியில் சேர்ந்தேன். வானொலி செய்தி கிணற்றிற்குள் தவளையாக இருந்த எனக்கு, ஒரு பரந்துபட்ட அனுபவம் கிடைத்தது. அனைத்து மாநில அலுவலர்களும் என்னை “காலா மதராசி” (கறுப்பு மதராசி) என்றும், “ராம்” என்றும் அன்போடு அழைப்பார்கள்.

இந்தச் சமயத்தில் ஒரு மூத்த தமிழ் அதிகாரி, ஒரு காக்டைல் பார்ட்டியில், ஒரு இழிவான காரியம் செய்ய முயற்சித்திருக்கிறார். இதற்காக அரசாங்கம், அவரை கட்டாய விடுமுறையில் அனுப்பிவிட்டது. விசாரணைக்கும் உத்தரவிட்டது. துறைத்தலைவரான இந்த அதிகாரி, நான் களவிளம்பர அதிகாரியாக சென்னையில் பணியாற்றிய போது, என்னை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்ப்பவர். இவரை எங்களது சங்கத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று பேரவை கூட்டப்பட்டது. கூட்டியவர்களோ, இவரைவிட இழிவானவர்கள். இந்த அதிகாரியும், எவரையும் மதிக்காமல் ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று பேசும் ஆசாமி. பேரவையில் ஒருவர் மாற்றி ஒருவராக இவரை திட்டித் தீர்த்தார்கள். எனக்குப் பொறுக்க முடியவில்லை. உடனே நான் எழுந்து, ‘இங்கே பேசியவர்களில் பெண்பித்து இல்லாத - அதை செயலில் காட்டாத யாராவது ஒருவர் உண்டா?’ ‘அரசாங்கமே நடவடிக்கை எடுக்கும்போது, உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது’ என்று கத்தியதில், பேரவை கை தட்டியது. நான் திடீர் கதாநாயகனானேன்.

திடீர் கதாநாயகன்

இதன் விளைவாக, ஓரிரு மாதங்களில் இந்திய செய்தி தகவல் அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். எனது மேல் அதிகாரிகளில் பலர் தங்களுக்கு அமைச்சரவை சிக்கல் கொடுக்கும் போதெல்லாம் இந்த காலா மதராசியிடமே வருவார்கள். எந்த அமைச்சகத்துக்கு கைகட்டி வாய் பொதித்து சென்றேனோ, அந்த அமைச்சகத்தில் மூத்த அதிகாரிகளோடு, என்னால் முரண்டுபிடித்து வாதாட முடிந்தது. இது என் பலம் அல்ல. ஒரு இயக்கத்தின் பலம் என்பதை உணர்ந்து கொண்டேன்.

எங்கள் அமைச்சரவைக்கு, நான் ஒரு தலைவலியாக ஒரு கட்டத்தில் தோன்றியது. அமைச்சரவைக்கு எதிரான, நியாயமான போராட்டத்தில் இப்போது என்.எப்.டி.சி எனப்படும் தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்தின் சென்னை மேலாளர் திரு. பி.ஆர். பரமேஸ்வரன், மத்திய கிராமிய மின்சார வாரியத்தில் மூத்த அதிகாரியாக உள்ள நாயர் (அப்படித்தான் கூப்பிடுவேன் முழுப்பெயர் தெரியாது), எங்களது மூத்த அதிகாரியும், சங்கத் தலைவருமான திரு. எஸ்.சி. பட் போன்றவர்கள் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள். இப்போது சென்னை தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியராக இருக்கும் பாலசுப்ரமணியம், எனது சங்க நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவினார். அமைச்சரவை, செய்தித்துறைக்காக நியமிக்கும் ஆணைகளின் நகல் ஒவ்வொன்றும், என் பெயருக்கும் வரும். இந்தியா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள மத்திய செய்தித் துறைத் தோழர்களுக்கு என் பெயர் அத்துபடி.

இந்தப் பின்னணியில் குடும்பச் சூழ்நிலை காரணமாக சென்னைக்கு மாற்றும்படி அமைச்சரவைக்கு விண்ணப்பித்தேன். முன்பு ஆண்டுக்கணக்கில் கையெடுத்து கும்பிடாத குறையாக போட்ட விண்ணப்பங்களை கண்டுகொள்ளாத அமைச்சரவை, தங்களது தலைவலி தீர்ந்ததுபோல் காலையில் போட்ட விண்ணப்பத்திற்கு மாலையிலே சென்னை வானொலி பத்திரிகைக்கு உதவி செய்தி ஆசிரியராக மாற்றியது.

ரப்பர் இல்லாத மின்சாரம் (LIVE WIRE)

எவருக்கும் இல்லாத வழக்கமாக சங்கம் எனக்கு பிரிவு உபச்சாரவிழா நடத்தியது. இதில் பேசிய ஒரு இளையசகா, “சமுத்திரம் இரண்டு மகத்தான காரியங்களை சாதித்திருக்கிாறர். ஒன்று, நமக்கெல்லாம் கெஜட்டட் அந்தஸ்து வாங்கி கொடுத்திருக்கிறார். இரண்டாவதாக, அவருக்கு டிரான்ஸ்பரையும் வாங்கிக்கொண்டார். ரப்பர் இல்லாத மின்சார ஒயரான இவர் நம்மிடையே இருந்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

இப்படியாக, வானொலி செய்தி ஆசிரியராய், மீண்டும் களவிளம்பர அதிகாரியாய், “திட்டம்” பத்திரிகையின் உதவி ஆசிரியராய், சென்னை தொலைக்காட்சியின் உதவி செய்தி ஆசிரியராய், பெங்களூரில் களவிளம்பரத் துறை தலைமை அதிகாரியாய், சென்னை வானொலி நிலையத்தின் செய்தி ஆசிரியராய், அங்கிருந்து சென்னை தொலைக்காட்சி செய்தி ஆசிரியராய், பின்பு அங்கிருந்து துரத்தப்பட்டு, அதே சென்னை வானொலி நிலையத்தில் மூத்த செய்தியாளராய், இறுதியாக சென்னை சாஸ்திரிபவனில் செய்தி விளம்பரத்துறை இணை இயக்குநராய் பணியாற்றி, வயதுக்கு வராமலேயே ஓய்வு பெற்றேன். அதாவது, கிராமத்தில் என் உண்மையான வயதை ஒன்றே முக்கால் வருடம் கூட்டிப் போடப்பட்டதே காரணம்.

இந்த 33 ஆண்டுகால அலுவலக வாழ்க்கையில் ஐந்து இணைச் செயலாளர்களுக்கு எதிராக எழுத்து மூலமாக போராடி இருக்கிறேன். இரண்டு உடனடித் தலைமை அதிகாரிகளுக்கு எதிராகவும் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. உயர்நீதிமன்றம், மத்திய அலுவலர் தீர்ப்பு ஆணையம் போன்ற நியாயத் தலங்களுக்கு அரசை எதிர்த்து பலதடவை சென்றிருக்கிறேன். அத்தனை வழக்குகளிலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் தோழர் செந்தில்நாதன் எனக்காக வாதாடினார். ஏதாவதொரு வகையில் வெற்றிகள் எனக்கு கிடைத்தன. ஆனால், அதில் விழுப்புண்கள் இன்னும் வலித்துக்கொண்டே இருக்கின்றன.

நான் 1998 மார்ச் மாதத்தில் பதவியிலிருந்து ஓய்வு பெற்றேன். அப்போது மத்திய அரசு அதிகாரிகளுக்கு நீட்டிப்பு கொடுக்கும் பொறுப்புள்ள துறைக்கு அமைச்சராக இருந்தவர் என் இனிய நண்பர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் அவர்கள். தோழர் செந்தில்நாதனைப் போல முப்பதாண்டு கால நண்பர். எஸ்.ஆர்.பி. என்று அழைக்கப்படும் இந்தத் தோழர், எனக்காக பலதடவை மேலதிகாரிகளோடு வாதாடியவர். என்னிடம் பதவி நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொண்டார். இவர் என் நண்பர் என்பதை தெரியாத எங்கள் களவிளம்பரதுறை தலைமை இயக்குநரான சுரோஷ் சோப்ரா அவர்களும், நிர்வாக துணை இயக்குநர் பீர் அவர்களும் நீட்டிப்பு கேட்கும்படி என்னை கேட்டுக்கொண்டார்கள். எந்த சமுத்திரம் மேல் அதிகாரிகளுக்கு தலைவலி போல் தோற்றம் காட்டினானோ அந்த சமுத்திரத்திற்கு அவர்கள் உதவ முன்வந்தது நெஞ்சை நெகிழ்த்தியது. இந்த நிறைவோடு ஓய்வு பெறவேண்டும் என்று தீர்மானித்து அவர்களது வேண்டுகோளை நன்றியோடு மறுத்தேன்.

பதவியில் இருப்பவர்கள் எப்போதாவது ஒருநாள் நாற்காலியை காலி செய்தாக வேண்டும். இதை உணர மறுக்கிறவர்கள்தான் அவதிக்கு ஆளாகிறார்கள்.

அதோடு ஒரு மூத்த அதிகாரியின் நீட்டிப்பு இளைய சகாக்களின் பதவி உயர்வுகளை பாதிக்கும். இதுவும் என் மறுப்பிற்கு ஒரு காரணம். சுருக்கமாகச் சொல்லப்போனால் என் எஞ்சிய வாழ்க்கை நன்னடத்தை ஜாமீனில் விடுதலையாகி உள்ளது. இந்த பதவி ஓய்விற்குப் பிறகு எனக்கு நிற்கக்கூட நேரமில்லை. எழுத்தாளர் பணி.... இலக்கிய பேச்சுப்பணி.... இளைய தோழர்களின் படைப்புகளுக்கு முன்னுரை கொடுக்கும்பணி, கூடவே சும்மாதானா இருக்கீங்க இந்த வேலைய செய்யுங்க என்ற என் மனைவி கொடுக்கும்பணி.... வாழ்நாள் முழுதும் இனிமையான வேலைதான்.

நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து வந்தவன். ஐந்து வயதிற்குள்ளேயே தாய்-தந்தையை இழந்தவன். ஒற்றைப் பையன், என்னுடைய தாய்மாமா தங்கய்யா, சித்தப்பா பாண்டி ஆகியோரின் உதவியால் கல்லூரிப் படிப்பை முடித்தவன். நான் டெல்லிக்குப் போனபோது காலா மதராசிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால் இப்போதோ எங்குமே ‘டால்’ அடிக்கும் கறுப்பு மயம். என் நிறத்திற்காக அன்று சிரித்தவர்கள் முகத்தில், இப்போது எந்த இளக்காரமோ ஏளனமோ இல்லை. காலா மதராசிகள் கண்டிப்பானவர்கள் என்பது அவர்களுக்குப் புரிந்து விட்டது.

என்றாலும் இங்கே ஒன்றை நான் சுட்டிக்காட்ட வேண்டும். நான் தங்கியிருந்த ராமானுஜம் மெஸ்ஸுக்கு எதிரே ஒரு பிராமண குடும்பம் இருந்தது. இளந்தம்பதிகள். அவர்கள் என்மீது காட்டிய அன்பு இருக்கிறதே அதை சொல்லியும் தீராது; சொன்னாலும் மாளாது. அந்த சகோதரிக்கு மது என்று ஒரு சகோதரன். என் இனிய தோழன். இப்போது எங்கே இருக்கிறார்களோ? எப்படி இருக்கிறார்களோ? நிச்சயம் நன்றாகத்தான் இருப்பார்கள்.

இறுதியாக, எனது அரசு அலுவலக அனுபவம் இதைத்தான் சொல்கிறது.

“நேர்மையாக இருக்கவேண்டும்... விசுவாசமாகவும் இருக்க வேண்டும்... திறமையையும் வளர்த்துக் கொள்ளவேண்டும்... பொதுச் சொத்தில், ஒருகாசு கூட எந்த வகையிலும், நம் பையில் விழக்கூடாது... கெட்டது நடந்தால் அவ்வப்போது சாடி நல்லதின் பக்கம் நிற்கவேண்டும்... கோடிக்கணக்கான மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிற என்னைப் போன்ற அரசு ஊழியர்கள், அந்த மக்களை மனதில் நினைத்து விசுவாசமாக பணியாற்றினால், நமது குடும்பம் ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரூன்றும்”

இரண்டாவதாக, தாழ்த்தப்பட்ட—பிற்படுத்தப்பட்ட மக்கள் தூசி படிந்த கண்ணாடி. இந்தத் தூசியை, மேல் அதிகாரிகளாக இருப்பவர்களில் நான் குறிப்பிட்ட இராமநாதன் அவர்களைப் போல் துடைப்பவர்களும் உண்டு. எனது தமிழ் செய்தி துறைத்தலைவர் போல் தூசியை துடைக்கிறேன் என்கிற சாக்கில் உடைப்பவர்களும் உண்டு.

புதிதாக பணியில் சேருகின்ற இந்த இருபிரிவு இளைஞர்களும் இதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில்தான் நான் ‘வேரில் பழுத்த பலா’ என்ற நாவலை எழுதி ‘சாகித்ய அகாதமி விருது’ம் வாங்கினேன்.

இந்தச் சந்தர்ப்பத்தில், ஆரம்பத்தில் தூசி படித்த இந்தக் கண்ணாடியை உடைக்க முயற்சித்தவர்கள் மீது எந்தக் கோபமும் கொள்ளாமல், அதன்மீது படர்ந்த தூசிகளை துடைத்து விட்ட மேல் அதிகாரிகளையும், சகாக்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். காலா மதராசிகளுக்கு இக்கட்டான அறுபதுகளில், டெல்லியில் நுழைந்த எனக்கு என் போர்க்குணத்தை கூர்மைப்படுத்திய அப்போதைய டெல்லிப் பேராசிரிய தம்பதிகளான சாலய் இளந்திரையன், சாலினி இளந்திரையன், கோயில்பிள்ளை, எனக்கு யோகாசனம் சொல்லிக்கொடுத்த உறவினரான திரு. தங்கச்சாமி, முடித்திருத்தகம் நடத்திய என் தோழர் முதலியோருக்கு நன்றிக்கடன் பட்டவன்.

மத்திய தேர்வாணையக் குழுவிற்கு 1966-ஆம் ஆண்டு நேர்காணலுக்காக சென்ற முகம் தெரியாத இந்த முகத்திற்கு தன் சொந்த வீட்டிலேயே இடம் கொடுத்து ஆதரித்த முத்துச்சாமி என்ற தோழரையும் (இப்போது மதுரையில் இருக்கிறார்), இப்போதும் எனது பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளும் தொலைக்காட்சி இணை இயக்குநர் இராமகிருஷ்ணனையும், துணை இயக்குநர் பீர்முகம்மதையும், இந்திய திரைப்பட நிறுவனத்தின் தென்னக மேலாளர் பி.ஆர். பரமேஸ்வரனையும், சென்னை தொலைக்காட்சி இயக்குநர் ஏ. நடராசனையும், சென்னை வானொலி இயக்குநர்களான எம்.எஸ். கோபால், செல்வம், விஜய திருவேங்கடம், வேணுகோபால் ரெட்டி, சுப்பிரமணியம், நெல்லை வானொலி இயக்குநர் குக நமச்சிவாயம், சென்னை வானொலி நிகழ்ச்சி தயாரிப்பு அதிகாரி ரவீந்திரன், குமார், என்னை கேளாமலேயே எனது நாவல்களை ஒலிபரப்பிய இப்போதைய சென்னை வானொலி நிலைய இயக்குநர் வி.ஆர். குமார், இனிய தோழர் நல்லதம்பி, தஞ்சைவாணன், ஓய்வுபெற்ற-இப்போதும் என்னுடன் தொடர்பு வைத்திருக்கும் எனது இளைய சகாக்களான, களவிளம்பர அதிகாரிகள் தனசேகரன், திரேசநாதன், தமிழ்மணி, ரவி போன்ற தோழர்களையும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கும்போது மனம் நெகிழ்கிறது. அன்புக்கு ஈடாக எதுவும் இல்லை என்று அழுத்தமாகச் சொல்கிறது.

எனக்கு அரசுப் பணியில் சோதனை நேரும்போதெல்லாம் என்பக்கம் நின்ற யு.என்.ஐ. தோழர். ரமேஷன், தினமணி சிகாமணி, தினந்தந்தி சுகுமார், தினமலர் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, அதன் செய்தியாளர் அமுதன், செம்மலர் ஆசிரியர் கே.எம். முத்தையா, என் இனிய நண்பர் செந்தில்நாதன் ஆகியோர்கள் ஏதோ ஒருவகையில் அரசுப் பணியில் நான் நிலைத்திருக்க உதவி செய்தவர்கள்.

இந்தக் கட்டுரையும், வீட்டைக் கட்டிப்பார் கட்டுரையும் பிரசுரமாக காரணகர்த்தாவாக இருந்த குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்களும், ஜ.ரா. சுந்தரேசன் அவர்களும் இந்த கட்டுரைகளை பிரசுரிக்கவில்லை என்றால் உங்களோடு நான் இப்படி விரிவாக என் அனுபவங்களை பகிர்ந்திருக்க முடியாது.

மேலே குறிப்பிட்டட அத்தனை பேரும் எனக்கு இனிய நினைவுகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஓய்வுபெற்ற ஒருவருக்கு இனிய நினைவுகள் மட்டுமே இருந்தால் அதற்கு ஈடேது? இணையேது? இன்றைய இளைஞர்களுக்கு அண்ணல் காந்தியடிகள் சொன்னதுபோல் என் வாழ்க்கையே ஒரு செய்தியானால் மகிழ்வேன்.

பின்குறிப்பு:

இந்தக் கட்டுரையில் சில பகுதிகள் குமுதத்தில் வந்தவை அல்ல.


குமுதம் — 1983.

"https://ta.wikisource.org/w/index.php?title=சமுத்திரம்_கட்டுரைகள்/021&oldid=1863629" இலிருந்து மீள்விக்கப்பட்டது