சமுத்திரம் கட்டுரைகள்/023
இந்த உலகம்மையையே, ஏனென்றால், உலகம்மையில் |
உலகம்மை-என் எனது சிறுகதைகளிலும், இக்கருத்தைத்தான், என் சுந்தரி — மல்லிகா — ஓர் இளம் பெண்ணின் |
ஆரம்ப காலத்தில் தன் நகைகளை மூலதனமாக்கி தொழிற்சாலையை துவங்கிய கணவனும், புகுந்த வீடும், தனக்க. குஷ்டரோக நோயின் அறிகுறிகள் தெரிய துவங்கியதும், கொடுமை புரிய, அவற்றின் வெம்மை தாங்காமல், அனாதை விடுதியில் அடைக்கலமாகி பிறகு அந்த விடுதியின் வளர்ச்சிக்காக, கணவனையும், அண்ணன் தம்பிகளையும் எதிர்த்துப் போராடி, தன் சொத்தைப் பிரிக்கும் இல்லந்தோறும் இதயங்கள் ‘மணிமேகலை’—
ரௌடியைக் கல்யாணம் செய்ய மறுத்ததற்காக, வளர்ப்புத் தாயால் விரட்டப்பட்டு, வறுமையால் வாடும் பெற்ற தாயிடம் வந்து, ஏழைப் பெண்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் வீட்டுக்கார அம்மாவுக்கு எதிராகப் போராடி, தன்னை பாட்டாளி வர்க்க ஜனசங்கிலியில் இணைத்துக் கொள்ளும் “வளர்ப்பு மகள்” மல்லிகா—
ஆகிய இந்தப் பாத்திரங்கள் என்னை எழுத்தாளனாக அங்கீகரித்தவை. ‘சோற்றுப் பட்டாளம்’ ஒரு கல்லூரியில் பாட நூலாகவும், ‘வளர்ப்பு மகள்’ மத்திய செகண்டரி போர்டின் கீழ் இயங்கும் உயர்நிலைப் பள்ளிகளில் 12வது வகுப்பிற்கு பாட நூலாகவும் வைக்கப்பட்டுள்ளன. என்றாலும்—
உலகம்மை உலகம்மைதான்
எனக்கு மிகவும் பிடித்த பெண் பாத்திரம், இதுவரை சுந்தரி போலவோ, அல்லது மல்லிகா போலவோ, நாட்டு மக்களுக்கு அதிகமாக அறிமுகமில்லாத ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ நாவலில் வரும் உலகம்மைதான்! முன்னைய கதாபாத்திரங்கள், நான் பெற்ற பெண்கள். ஆனால் உலகம்மையோ, எனது தாய். முன்னவர்களை நான் எழுதி வளர்த்தேன். இவளோ, என்னை எழுதச் சொல்லி வளர்த்தாள்.
முதலில் கதையைச் சொல்கிறேன்.
உலகம்மை, குட்டாம்பட்டியில் உள்ள ஒரு பனையேறியின் மகள். இளம் வயதிலேயே தாயை இழந்தவள். இருபத்தோரு வயதுக்காரி. பனையில் இருந்து விழுந்து, முடங்கிப் போன தந்தையைக் காப்பாற்ற வேண்டியவள். விவசாயக் கூலிப் பெண் அவள் வீட்டின் மனைகூட, ஒரு பண்ணையாருக்கு உரியது. தன்னையறியாமலே-கண்ணுக்குப் புலனாகாத, கருத்துக்குப் புலனாகாத ஏதோ ஒரு சமூக உணர்வு உள்ளவள்.
ஆள் பலமும், பண பலமும் கொண்ட பீடிக்கடை ‘ஏஜெண்ட்’, பீடி சுற்றும் தன்னை பெண்டாள நினைப்பதை அறிந்து, ‘ஒனக்கு அறிவிருக்கா? ஒன் அக்கா தங்கச்சிய இடியேண்டா’ என்று சொல்லி விட்டு, வயல் வேலைக்குப் போகும் வைராக்கியம் கொண்டவள்.
வகுப்பும்-வர்க்கமும்
சக கூலிப் பெண்கள், அவளின் தொழில் மாற்றத்திற்குக் காரணம் கேட்டபோது, ஏஜெண்டைப் பற்றி முறையிட, ‘அவனை செருப்பால் அடித்திருக்க வேண்டும்’ என்று யோசனை சொன்ன ஒருத்தியைப் பார்த்து - ‘நீயாயிருந்தா அடிக்கலாம்..... ஒனக்கு அண்ணன், தம்பி, சொக்காரான் சொகக்காரன் இருக்கு.... எனக்கு யாரிருக்கா?...... அவன் திருப்பியடிச்சா கேட்க நாதியில்லியே..... இல்லாதவன் பொண்ணு எல்லாத்துக்கும் மயினிதான் (அண்ணி)’ என்று, தன் நிலையை உணர்ந்த யதார்த்தமான பெண். அதே சமயம், பண்ணையார் மாரிமுத்து நாடாருடன் வயலில் இருந்து ஊருக்குள் போகும்போது, அவர் தன் மகள் சரோஜாவை பெண் கேட்க வரும் மாப்பிள்ளைக் குடும்பத்தை ‘பனையேறிக் பய குடும்பமா?’ என்று கர்ணத்திடம் கேட்டபோது, பனையேறியின் மகளான உலகம்மை, தனக்குள்ளேயே சிந்திக்கிறாள்.
“பனையேறிப் பய குடும்பமான்னு” மாமா, நாக்கு மேல பல்லு போட்டு கேக்காரே.... ஏன்.... இவரு தாத்தா.... பனை ஏறினாராமே.... பனையேறுற நாடார் சாணான்னும், ஏறதவங்க நாடார்னும் ரெண்டு சாதியா மாறிட..... இப்படித்தான் ஜாதிங்க வந்திருக்குமோ?.... இத்தன சாதி இல்லாம.... ஏழைசாதி.... பணக்கார சாதின்னு ரெண்டு இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்! பிராமணன்ல ஏழை, பறையன் மாதிரி கஷ்டப்படுறான்... பறையன்ல பணக்காரன் பிராமணன் மாதிரி குதிக்கான். ஏழைப் பறையனும், ஏழை சாணானும், ஏழை பிராமணனும் ஒண்ணாச் சேர்ந்தா ஊரையே மாத்திப்பிடலாம்..... அம்மாடி என் புத்தி ஏன் இப்படிப் போவுது?..... எந்த ஜாதி சந்தைக்குப் போனால் நமக்கென்ன....?
இப்படி சமூக உணர்வுக்கும், தனது பலவீனமான நிலைமைக்கும் இடையே ஊசலாடும் உலகம்மை, பின்னதை வென்று, முன்னதைப் பலப்படுத்திக் கொள்கிறாள்.
மாரிமுத்து நாடார், சட்டாம்பட்டியில் உள்ள பட்டதாரி வாலிபனான லோகுவிற்கு, அழகான பெண்ணான உலகம்மையை தன் மகள் சரோஜாவாகக் காட்டி பையனை மயங்க வைத்து, இறுதியில் மணமேடையில் தன் மகளை உட்காரச் செய்வதற்காக, ஆள் மாறாட்டம் செய்கிறார். உலகம்மை, இந்த தில்லுமுல்லில், அவளை அறியாமலே பயன்படுத்தப்படுகிறாள். விவரம் தெரிந்ததும், நேராக சட்டாம்பட்டிக்குப் போய், லோகுவிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு வந்து விடுகிறாள்.
பிராந்தனை ஏவி...
மாரிமுத்து நாடாரின் ஆதிக்க பலமும், அசுரத்தனமும், தெரிந்திருந்தாலும், தன் உடம்பைக் காட்டி, ஒரு திருமணம் நடப்பதையோ, பிறகு மணமக்கள் இருவரும் கஷ்டப்படுவதையோ விரும்பாத உலகம்மை, நியாயத்தின் பொருட்டு, சிலுவை ஏந்திக்கொள்ளத் தயாராகிறாள்!
தந்தை மாயாண்டி, அவள் மானபங்கப் படுத்தப்படலாம் என்று சொன்னபோது, ‘நான் புலிக்குப் பொறந்தவ..... ஒம்மோட மவள்..... எந்தப் பய வேணுமுன்னாலுங் வாலாட்டிப் பார்க்கட்டும். அவன் தலய வெட்டி ஒம்ம காலுல வைக்காட்டி, நான் உலகம்மல்ல’ என்று சூளுரைக்கிறாள்.
உலகம்மை, லோகுவிடம் தெரிவித்த உண்மை ஊருக்குத் தெரிந்து விடுகிறது. மாரிமுத்து நாடாரின் வயலில் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருக்கும் அவள், மாரிமுத்துவின் சொந்தக்காரன் ‘பிராந்தனால்’ கண்டபடி திட்டப்பட்டு வெளியேற்றப்படுகிறாள். சக கூலிப்பெண்கள் உதவிக்கு வந்தாலும், உலகம்மை அதை நாசூக்காக நிராகரித்து விட்டு, சட்டாம்பட்டியில் வயல் வேலைக்குப் போகத் தீர்மானிக்கிறாள்.
ஒரு கோட்டுக்கு உள்ளே...
விவகாரம் இத்துடன் நிற்கவில்லை. அவள் தந்தை மாயாண்டி, மாரிமுத்து நாடாரிடம் என்றோ வாங்கிய கடனுக்காக, ஒரு கோட்டுக்குள் நிறுத்தப்படுகிறார். இன்னும் சில கிராமங்களில் நடந்து வரும் சம்பிரதாயப்படி, வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காத ஏழை எளியவர்கள், வட்டமாகப் போடப்பட்ட கோட்டுக்குள் வைக்கப்படுவார்கள். அதை அவர்கள் தாண்டக் கூடாது. தாண்ட முடியாது. உலகம்மை, சட்டாம்பட்டி வயலில் இருந்து நேராக தந்தை சிறை இருக்கும் கோடு போட்ட இடத்திற்கு வருகிறாள்.
அவர் ‘தண்ணீர் தண்ணீர்’ என்று கதறுகிறார். அவரை மீட்கப்போகும் மகளை, மாரிமுத்து கோஷ்டி அச்சுறுத்துகிறது. அக்கம் பக்கம் நிற்பவர்கள், ‘கண்டுக்கவில்லை’.காளியம்மன் கோவிலைப் பார்த்து, ‘அடியே.... காளி... இவ்வளவு நடந்த பிறகும் ஒனக்கு.... அங்க இருக்க என்னடி யோக்கியத இருக்கு?’ என்று கத்திக்கொண்டே, நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள போலீஸ் நிலையத்தைப் பார்த்துப் போகிறாள்.
ஆரம்பத்தில் அதட்டிப் பேசிய தலைமைக் கான்ஸ்டபிள், உலகம்மையின் ஆவேசத்திற்குப் பயந்து, குட்டாம்பட்டி வருகிறார். அவரைக் கண்டதும், கோடு அழிக்கப்படுகிறது. கான்ஸ்டபிளுக்கு ‘கலர் பாட்டல்’ உடைக்கப்படுகிறது.
மாயாண்டியே குடித்து விட்டு கோடு கிழித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. உலகம்மை, சுற்றிலும் நின்ற கிராம மக்களைப் பார்த்து, போலீஸாரிடம் உண்மையைச் சொல்லும்படி மன்றாடுகிறாள். எல்லா வாய்களும், நோய் கண்டது போல் மூடுகின்றன.
தலைமை கான்ஸ்டபிள் அரசியல் பின்னணியும், ஆள்பலமும் கொண்ட மாரிமுத்து நாடாருடன் சேர்ந்து கொண்டு, மாயாண்டியை ‘குடித்துக் கலாட்டா செய்தான்’ என கைது செய்து கொண்டு போகிறார்.
உலகம்மை ‘அய்யா அய்யா’ என்று முனங்கிக் கொண்டே, பின் தொடர்கிறாள். ஊர் ஜனங்களோ, வேடிக்கைப் பார்க்கிறார்கள். அதுவும், அவனைப் பின் தொடர்ந்து சென்று வேடிக்கை பார்க்கிறார்கள்.
புதுமைப் பெண்ணாய்...
உலகம்மையால் பொறுக்க முடியவில்லை. வெடிக்கிறாள். நாடி நரம்பெங்கும் வியாபித்திருந்த தைரிய அணுக்கள் ஒன்றிரண்டாய், இரண்டு நான்காய், நான்கு பதினாறாக, பதினாறு இருநூற்று ஐம்பத்தாறாய் பிளந்து, அடக்க முடியாத ‘அணு பிளப்பாகி’, அணு குண்டை அடியில் வைத்திருப்பவள் போல் கத்துகிறாள்.
“நீங்கள்ளாம் மனுஷங்களாய்யா... பொட்டையிலயும் கேடு கெட்ட பொட்ட பயலுவ.... ஏன் பின்னால வாரீக? உள்ளதைச் சொல்ல பயப்படுற நீங்களெல்லாம் எதுக்காவ மனுஷன்னு பூலோகத்துல லாந்தணும்? போங்கய்யா.... ஒங்க வேலையைப் பாத்துக்கிட்டு....”
மாயாண்டி லாக்கப்பில் அடைபடுகிறார். வழியில் சென்னைக்குப் போகும் லோகுவைப் பார்த்தாலும், உலகம்மை-அவன் கேட்டும்-தன் கஷ்டத்தைக் கூறவில்லை.போலீஸ் நிலையத்தில் காத்துக் கிடந்து, வேலைக்குப் புதிதாகையால் இன்னும் கெட்டுப் போகாமல் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து, எங்க அய்யாவ.... மாரிமுத்து நாடார் குடுத்த கடனெ சாக்கா வச்சி... கோட்டுக்குள்ள நிறுத்திட்டாரு..... போலீஸ்.... ஏழை மக்களோட துணைவன்னு சொல்லு தாங்களேன்னு இங்க வந்து, இந்த அய்யாகிட்ட சொன்னேன். இந்த அய்யாவும் வந்தாரு.... கோட்டுக்குள் நிறுத்துனவங்கிட்டயே கலர் குடிச்சிட்டு, ‘பட்ட போட்டார்’னு என் அய்யாவ, இழுத்துக்கிட்டு வந்துட்டாரு நானும் கேக்குறேன்... எங்கய்யா சாராயம் குடிச்சதுக்கும், இந்த போலீஸ் அய்யா, மாரிமுத்தோட கலர் குடிச்சதுக்கும் என்ன வித்தியாசம்? சொல்லுங்க எசமான்?
மாயாண்டி விடுதலை செய்யப்படுகிறார். மாரிமுத்து நாடார் எச்சரிக்கப்படுகிறார். ஆனால் விவகாரம் முடியவில்லை. சப்-இன்ஸ்பெக்டரை, உலகம்மை ‘வச்சிக்கிட்டு’ இருப்பதாக ஊரில் செய்தி அடிபடுகிறது. ஊர்க்காரர்களை, பொட்டப்பயல்கள் என்று சொன்னதற்காக, ஊர் கூட்டப்பட்டு, உலகம்மைக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதோடு, மாரிமுத்துவின் ஆட்கள் உலகம்மையின் வீட்டைச் சுற்றியுள்ள தத்தம் நிலத்தை, சுவரெழுப்பி அடைக்கிறார்கள். அவளுக்கு இருந்த ஒரே வழியும் அசுத்தம் செய்யப்படுகிறது. இரவில் கூரையில் கற்கள் விழுகின்றன.
உலகம்மை அதிகாரிகளிடமும், பஞ்சாயத்துத் தலைவரிடமும் முறையிடுகிறாள்.
பஞ்சாயத்தின் முன்னால்...
ஊர்க் கூட்டம் கூட்டப்படுகிறது. ஆனால், அவள் புகாரை எடுத்துக் கொள்ளாமல், அவள் சக்திக்கு மீறிய அபராதத் தொகையை ஏன் கட்டவில்லை என்று அங்கு கேட்கப்படுகிறது. ஊராரை, ‘பொட்டப் பயலுக’ என்று முன்பு சொன்னதற்கு, இப்போதும் விளக்கம் கேட்கப்படுகிறது.
உலகம்மை, ஊரில் இருந்து தள்ளி வைக்கப்படுகிறாள். தனிமையில் தவிக்கும் அவள், சேரிக்குச் செல்கிறாள். சேரி ஜனங்கள்-குறிப்பாக பட்டதாரி இளைஞன், அருணாசலத்தின் ஆதரவு கிடைக்கிறது.
தண்ணீர் பிரச்சினையில் உண்ணாவிரதம் இருக்கும் அருணாசலம், அதை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் வெற்றியுடன் முடித்துக் கொள்ளும் போது, உலகம்மை அவனுக்கு வாழைப் பழம் கொடுக்கிறாள். ஊர்ப் பிரமுகர்கள் வெகுண்டெழுகிறார்கள்.புரட்சிப் பெண்ணாய்...
உலகம்மை வயலுக்குப் போயிருந்த போது, அவள் வீட்டுக்கு உள்ள ஒரே வழியும் அடைபடப் போகிறது. வீட்டுக்குள்ளேயே சிறைப்படப் போகும் நிலையில், மாயாண்டி மன்றாடுகிறார். கதறுகிறார். ஊர் மக்கள் காலில் விழுகிறார். பலனில்லை. இறுதியில் வழி அடைபடும் முன்னே அவர் உயிர் விடை பெறுகிறது.
வீட்டுக்கு வந்த உலகம்மை, கதறுகிறாள். விடிய விடிய அய்யாவை வைத்து ‘அழகு’ பார்க்கிறாள். மறுநாள் காலையில் பிணத்தைத் தூக்க வந்த ஊர்க்காரர்கள் முன்னால் கண்ணீர் விடுவதே பாவம் என்று கருதி, அழுகையை ஆவேசமாக்கி, ஊராரை உள்ளே விடாமல், தன்னந்தனியாய் பிணத்தைத் தூக்கிக்கொண்டு போய் சேரி ஜனங்களின் ஒத்தாசையுடன் எரிக்கிறாள்.
அருணாசலம் ‘கொள்ளி’ வைக்கிறான்.
“ஊர்க்காரன் காலுல விழுந்ததுக்காக, நான் திட்டுவேன்னு பயந்து செத்துட்டீரா? என்ன பெத்த அய்யா! கோழி மிதிச்சு குஞ்சு சாவாதுன்னா, குஞ்சி மிதிச்சி கோழி சாவுமாய்யா... என்னப்பெத்த அய்யா?”
உலகம்மை கதறுகிறாள்.
சேரியில் சில நாள் இருக்கும் உலகம்மை, ஒரு முடிவுக்கு வந்து விடுகிறாள். ‘மேல் ஜாதியில் இருக்கும் ஏழை பாழைங்களும், ஹரிஜனங்கள் தான்.... அவங்களும் ஹரிஜனங்களோட சேரணும்’ என்று நினைத்து, அதற்கு முன் மாதிரியாக நடக்க விரும்பி, கிராமத்திற்கு வந்து, தன் வீட்டு தட்டு முட்டுச் சாமான்களை எடுக்கிறாள்.
‘ஜாதிப் பெண்’ சேரியில் போயிருப்பதை விரும்பாத ஊர் மக்கள், இப்போது அவளை, அங்கே வரும்படி கெஞ்சுகிறார்கள். பலருக்கு அவளை அளவுக்கு மீற கொடுமைப்படுத்திவிட்ட குற்ற உணர்வும் வருகிறது.
“பறக் குடியில் போய் இருக்காதே! அது உனக்கும் கேவலம்...... எங்களுக்கும் கேவலம்” என்று சொல்லும் கணக்கப் பிள்ளையைப் பார்த்து உலகம்மை கர்ஜிக்கிறாள்.
“நான் இப்போ பறச்சிதான்...... அப்படி ஆனதுனால சந்தோஷம் இல்லாமப் போவல. நான் ஒருத்தி போறதால.... மேல் ஜாதி எல்லாம் போயிடுமுன்னா, ஒங்க ஜாதிங்க எவளவு இத்துப் போயிருக்கணும்? என்னைப் பத்திக் கவலைப்படாம ஒங்களைப் பத்தி மட்டுமே கவலைப்படுங்க.... நான் மேல் ஜாதியில் செத்து, கீழ் ஜாதியில் பொழைச்சிக்கிட்ட பொம்பல!.....”
உலகம்மை சேரியில் சேர்கிறாள்.
ஹரிஜனப் பையன் அருணாசலம் மூலம் நான் சொன்னேன்.
“மேல் ஜாதி ஏழையும், கீழ் ஜாதி ஹரிஜனங்களும் ஒரே வர்க்கமாய் போற காலம் வரப்போவது...... நீ சேரியில் சேருற காரியம், எதிர்காலத்தில் ஒருவேளை நடக்கப் போற சமதர்மப் புரட்சிக்கு ஒரு காரணமாய் அமையலாம்.”
உலகம்மையை வெறும் வீரப் பெண்ணாக-உணர்ச்சிகளை ஒடுக்குகிறவளாக மட்டும் நான் சித்தரிக்கவில்லை. அவளின் மென்மையான உணர்வுகளையும் காட்டியிருக்கிறேன்.
லோகுவிடம், ஆள் மாறாட்டத்தைச் சொல்லப் போகிறவள், அவன் மாரிமுத்து நாடார் மகள் சரோஜாவை மணந்து கொள்ள வேண்டும் என்று வாதாடுகிறாள். அவன் இளநீர் சாப்பிடச் செல்லும்போது, “சாப்பிட்டால் சரோஜாக்கா கூடத்தான் சாப்பிடுவேன்” என்கிறாள்.
லோகு, பஸ் நிலையத்தில் அவளைப் பார்த்து, ‘இதுதான் கடைசி பஸ். போகட்டுமா? என்று சொல்லிவிட்டு, அவன் போனபோது கடைசி பஸ்ஸா.... கடைசி சந்திப்பா’ என்று தனக்குள்ளேயே மருகுகிறாள்.
சரோஜாவுக்கு, வேறொரு இடத்தில் திருமணமானதும் லோகுவை அல்லும் பகலும் நினைக்கிறாள். வக்கீல் நோட்டீஸை, அவன் எழுதிய காதல் கடிதமாகக் கூட நினைத்துப் படிக்கிறாள்.
ஓர் ஏழைப் பெண்-அதுவும் இளம்பெண், ஊரை எதிர்த்து தன்னந்தனியாகப் போராட முடியுமா? என்று சில விமர்சகர்கள்-அதுவும் கண்ணகி மதுரையை எரித்ததை நம்புகிறவர்கள்-கேட்டார்கள். உலகம்மையைப் போன்று, பல பெண்கள் குக் கிராமங்களில் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஊரில் முக்கால் வாசிப் பேர் ஏழை எளியவர்கள். இவர்கள், உள்ளூர, உலகம்மை மீது அனுதாபம் கொண்டாலும், வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க முடியாதவர்கள் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறேன். அதோடு காலம் மாறி, சமூக அமைப்பு மாறுதலுக்குட்பட்டு வருகிறது.
இந்த நிலைமை, இயல்பிலேயே வீரமுள்ள பெண்கள், நியாயத்திற்குப் போராட களம் அமைத்துக் கொடுக்கிறது. இது சென்னை நகர சாளரங்கள் வழியாக கிராமங்களைப் பார்ப்பவர்களுக்குப் புரியாது.
இந்த உலகம்மையை தமிழில் வந்த தனி ரக நாவல் என்று வல்லிக்கண்ணன் வர்ணித்தார்.
‘உலகம்மை தமிழில் பின்னால் தோன்றும் நாவல்களில் எதிரொலிசெய்வாள்’ என்று ஈழத்துத் தமிழறிஞர் டாக்டர் கைலாசபதி கருத்துத் தெரிவித்தார்.
சென்னை வானொலியில் நாடகமாக்கப்பட்டு, இருமுறை ஒலி பரப்பாகியது. பிறகு அகில பாரத நாடக நிகழ்ச்சியில், 14 மொழிகளில், 87 நிலையங்கள் மூலமாக, ஒரே சமயத்தில் குரல் கொடுத்தாள் உலகம்மை.
உலகம்மை படைப்பின்போது...
உலகம்மையைப் படைக்கும் போது அழுதிருக்கிறேன். முஷ்டிகளால் மேஜையைக் குத்தியிருக்கிறேன். அவள் தந்தை இறந்தபோது என் தந்தை இறந்ததுபோல், ஏங்கி அழுதேன். ஏனென்றால், உலகம்மையில் என் சாயலைக் கண்டேன். ஏழைப் பெண்களின் அவல நிலையின் அடையாளத்தைப் பார்த்தேன். உலகம்மை சேரிக்குப் போன பிறகு ஏற்பட்ட நிகழ்ச்சிகளை இரண்டாவது பாகமாக எழுதும்படி நண்பர்கள் சொல்கிறார்கள். அதே சமயம், இனிமேல் அப்படி எழுத முடியுமா என்று கேட்கிறார்கள். எனக்கும் பயமாக இருக்கிறது.
எப்படியோ கச்சிதமாக அமைந்த உலகம்மையை, பலவீனப்படுத்த நான் விரும்பவில்லை. நாவல் எழுதுவதற்கு முன்பு, இவளை சென்னைக்குக் கொண்டு வந்து, சீரழிய வைக்க நினைத்தேன். ஆனால் அவளோ ஒரு கட்டத்திற்கு வந்ததும், ‘இப்படித்தான் எழுதணும்’ என்று ஆணையிட்டு விட்டாள்.
நீங்கள் சொன்னால் நம்புவீர்களோ என்னமோ, இந்த உலகம்மையையே, சிக்கல் வரும்போதும், இலக்கிய வெற்றிக்கும், நான் மானசீகமாக இப்போது வணங்கி வருகிறேன். என்னால் படைக்கப்பட்டவள், இப்போது என்னைப் படைத்துக் கொண்டு இருக்கிறாள்!
பின்குறிப்பு:
அண்மையில் பேராசிரியர் சிவத்தம்பியை நான் சந்தித்தபோது இந்த நாவலில் எதிர்கால தலித்திய போராட்டத்திற்கான விதை உள்ளடங்கி இருந்ததாக குறிப்பிட்டார்.
மங்கை — 1980.