சமுத்திரம் கட்டுரைகள்/024
ஒரு எழுத்தாளர், தனக்கு இன்னொரு எழுத்தாளர், |
பதிவுபெறாத உலக இலக்கியங்கள் என்று பொதுவாக எந்த |
பட்டாம்பூச்சியின் படத்தை மார்பில் பச்சை குத்தி, அதனாலேயே அந்தப் பெயரைப் பெற்ற இருபத்தைந்து வயது பிரெஞ்சு இளைஞன் ஒருவன் செய்யாத கொலைக்காக தண்டனை பெற்று, பிரெஞ்சு கயானாவில், கொடியதும், கொடூரமானதுமான தீவாந்திர சிறைக்கு கொண்டு செல்லப்பட்டதையும், அங்கிருந்தும் அதைப்போன்ற பிற சிறைகளில் இருந்தும் அவன் தப்பிக்க முயற்சிகள் மேற்கொள்வதையும் அந்த முயற்சிகள் முறியடிக்கப்படுவதையும், இறுதியில் அவன் முயற்சி வெற்றி பெற்று சுதந்திர மனிதனாக மாறுவதையும் காட்டும் விடுதலைக் காவியம் இது.
செய்யாத குற்றத்திற்காக தண்டனை பெறுவதற்கு காரணமான நீதிபதி, ஜுரர்கள், அரசாங்க நீதிபதி போன்ற சுவையில்லாத பேர்வழிகளை பழிவாங்கியே தீர்வது என்று தீர்மானத்துடன் அட்லாண்டிக் சமுத்திரத்தின் மறுகோடியில் உள்ள தீவாந்திர சிறைக்கு செல்கிறான்.
புத்தம் புதிய ரூபாய் நோட்டுக்களை கட்டை விரல் பருமனுள்ள ஒரு குழாயில் அடைத்து, அதை மறைப்பதற்காக அவன் ஆசன வாயின் வழியாக பெருங்குடலுக்குள் தள்ளிவிடும்போதே உற்சாகம், ‘திகில்’ ஆகிறது. சிறைச்சாலையில் பயங்கரமான மரணக்கூச்சல்கள்.... சித்திரவதைகள்... ஆண்டுக்கு எண்பது சதவீதம் கைதிகள் இறந்து விடும் கொடுமை.... தனிமைச்சிறை.... தலைக்கு மேலே தொங்கும் விளக்கே கண்ணை வலிக்க வைக்கும் நிலமை. ‘தேகா’ என்ற சகக் கைதியின் உதவியால், சிறையை வெடிவைத்து தகர்க்க முயற்சி செய்து பிடிபட்டுவிடுகிறான்.
இதனால், பயங்கரமான ஒரு கொட்டடிக்குள் மாட்டப்படுகிறான். எதிரே உள்ள கடல் அலைகள் அவன் இடுப்பு வரைக்கும் வந்துபோகும். இப்படிப்பட்ட சிறைகளை எல்லாம் தப்பி, கட்டுமரம் மூலம் தப்பிக்க பார்க்கிறான்.
பதிமூன்று வருடங்களாக, கொட்டடிகளில் இருந்து தப்பிக்க பல்வேறு முயற்சிகள் செய்து, 1945-ஆம் வருடம் அக்டோபர் 15-ந் தேதி தப்பித்த ‘பட்டாம்பூச்சியை’ப் படிக்கும் எவருக்கும் எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளும் உறுதி கிடைக்கும்.
ஆரம்பத்தில், பிரெஞ்சு மொழியில், பாப்பிலியான் என்ற தலைப்பில் வெளியான இந்தப் படைப்பு பின்னர் பல மொழிகளிலும் வெளியாகி திரைப்படங்களாகவும் வெளிப்பட்டது. இந்தப் படைப்பை படியுங்கள் என்றுதான் சொல்ல முடிகிறதே தவிர, இப்படி நயங்கள் உள்ளன என்று என்னால் பரிந்துரைக்க இயலவில்லை. காரணம் ஒவ்வொரு வரியுமே ஒவ்வொரு விடுதலை விரும்பியின் உயிர்த் துடிப்பு.... ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு விடுதலை விரும்பியின் விடாமுயற்சிக்கு உரைகல்....
இந்தப் படைப்பை படிப்பவர்கள், கை, கால்களை இழந்தும், கண்கள், மூக்குகளை இழந்தும் குற்றுயிராய் வாழும் தொழுநோயாளிகள் இழக்காத மனித நேயத்தையும், சிறைச்சாலைக்குள் நடைபெறும் கொலை, கொள்ளை, லஞ்ச லாவண்யங்களையும் கிட்டத்தட்ட நம்மூரில் நடப்பது போலவே சித்தரிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ‘பட்டாம்பூச்சி’ பட்டபாட்டை நினைக்கும்போது, நாம் படும் பாடு ஒரு பாடே இல்லை என்பது புரியும்.
இந்த உண்மைக்கதையை இருபத்தோரு ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் மொழி பெயர்த்து, அது குமுதத்தில் வெளியாகியது. இதை நூலாகக் கொண்டு வந்த ‘மணிவாசகர்’ பதிப்பகத்தின் உரிமையாளரும், பிரபல இலக்கியவாதியுமான டாக்டர் ச. மெய்யப்பன் ‘மூலமா’, ‘மொழி பெயர்ப்பா’ என்று ஐயுறும் வரையில் இந்த உயிரோவியத்தை வழங்கிய அவருக்குத் (ரா.கி. ரங்கராஜன்) தமிழுலகம் என்றும் கடமைப்பட்டிருக்கிறது என்கிறார். இதே கருத்தை சுஜாதாவும் தமது முன்னுரையில் சொல்லி இருக்கிறார்.
இந்த உரைநடைக் காப்பியத்தை தமிழுக்கு அப்படியே தந்த ரா.கி. ரங்கராஜன் அவர்களின், மொழிபெயர்ப்பு திறனை நமது இலக்கிய உலகம் இன்றும் அங்கீகரிக்கவில்லை. தொ.மு. சிதம்ப ரகுநாதன், த.நா. குமாரசாமி, தா.ந. சேனாதிபதி, சரஸ்வதி ராம்நாத், விஜயலட்சுமி சுந்தரராசன் போன்ற மொழி பெயர்ப்பாளர் வரிசையில் குறிப்பிடப்பட வேண்டியவர் இந்த ரங்கராஜன். இப்படி ஒரு மொழி பெயர்ப்பை நான் படித்ததில்லை. வானொலியில் மொழி பெயப்பிலேயே மூழ்கிப்போன என்னை மிகவும் சிறிதாக்கிவிட்டார் இந்த ரா.கி.ர. ஆனாலும் இவர் நம்மவர்களால் கண்டுகொள்ளப்படவேயில்லை. சென்னையில் ‘சாகித்ய அகாதமி’ நடத்திய மொழி பெயர்ப்பு கருத்தரங்கிலும் இவர் புறக்கணிக்கப்பட்டார். இதுமட்டுமல்லாமல், இவர் எழுதிய ‘கையில்லாத பொம்மை’ என்ற நாவல் திறமை இருந்தும் டிகிரி வாங்காததால் சிரமத்துக்குள்ளாகும் ஒரு இளைஞனைப் பற்றிய கதை. சுஜாதாவிற்கு முன்பே தமிழில் நவீனத்துவத்தை கொண்டு வந்தவர் ரா.கி.ரா என்று நான் அந்தக் காலத்திலேயே எனது ‘குற்றம் பார்க்கில்’ சிறுகதையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
இவரைப்போல் இலக்கியப் பதிவுபெறாத ஒரு அற்புதமான எழுத்தாளர் ஜ.ரா. சுந்தரேசன். இவரது ‘அப்புசாமி சீதாப்பாட்டி’ சிறுகதைகளுக்கும், நாவல்களுக்கும், தமிழ் இலக்கியத்தில் தனி வரலாற்றில் பதிவு செய்யப்படவேண்டியவை. ஆனால், குமுதம் பத்திரிகையில் எழுதினார் என்கிற ஒரே காரணத்திற்காகவே இவர் இலக்கியப்பதிவு பெறாமல் இருக்கிறார். இவரது நடை எளிமையாகவும். அதே சமயம் நையாண்டியாகவும் இருக்கும். மேஜீக்கல் ரியலிசம் என்று சொல்கிறார்களே-மாந்திரீக யதார்த்தம், அதை அந்தக் காலத்திலேயே ‘நெருங்கிநெருங்கி வருகிறாள்’ என்ற நாவலில் கொண்டுவந்தவர் சுந்தரேசன். இவரைப்போல் சண்முகசுந்தரம் என்ற புனிதன், சுந்தர பாகவதர் என்ற பெயரிலும், பல அற்புதமான கதைகளை சிலேட நடையில் எழுதியவர். இவர்களது குமுதக் குருநாதரான எஸ்.ஏ.பி. அவர்களின் ‘காதலென்னும் தீவினிலே’, ‘சக்தி’ போன்ற படைப்புகளும் மிகவும் ஆழமானவை, தரமானவை. இவரது படைப்புகளும் குமுதம் ஆசிரியர் என்கிற ஒரே காரணத்திற்காக பதிவு செய்யப்படவில்லை. தாசில்தார் நாய் செத்தால் துக்கம் விசாரிக்க வருகிறவர்கள் அதே தாசில்தார் செத்தால் வராமாட்டார்கள் என்ற பழமொழிக்கு ஏற்ப இவர் மரணத்தின்போது இவரால் ஊக்குவிக்கப்பட்ட பல படைப்பாளிகளை நான் பார்க்கவில்லை.
இதேபோல், அரக்கத்தனமாக நிராகரிக்கப்படுபவர் அசுரத்தனமாக எழுதும் தாமரை மணாளன். புதுமைப்பித்தனுக்கு பிறகு இவரைப்போல் அங்கதச் சுவையோடு எழுதுவதற்கு, இப்போதுகூட ஆளில்லை. வணிகப் பத்திரிகைகளுக்காக சிலசமயம் வளைந்து கொடுத்தாலும், இவரது நடையில் எள்ளல், துள்ளல், இலக்கியநயம், யதார்த்தம், புரட்சி ஆகியவை உள்ளடங்கியிருக்கும். எல்லாத் துறைகளிலும் தன் எழுத்து வல்லமையை நிரூபிப்பவர். இப்போதுகூட ‘வாசுகி’யில் இவர் எழுதும் கடைசி பக்க ‘உள்ளத்தை கிள்ளியவர்கள்’ அற்புதமான சித்தரிப்புகள்.
நெல்லை பூமியின் மண்வாசனையை அப்படியே நுகர வைப்பவர் எழுத்தாளர் தாமரை செந்தூர்பாண்டி. இவரது குடிப்பிறப்பு என்ற சிறுகதைத் தொகுப்பு லில்லி சிகாமணி அறக்கட்டளை பரிசையும், தென்னக பண்பாட்டு இயக்கத்தின் பரிசையும் பெற்றவை. தமிழக அரசு இவரது படைப்புகளை எல்லா பள்ளி கல்வி நூலகங்களிலும் வைக்கவேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறது. படிக்க மனமிருந்தும் முடியாமல் போன சிறுவர்-சிறுமிகளையும் அப்படி அவர்களை படிக்க வைக்க இயலாத ஏழைப் பெற்றோர்களையும் இந்த தொகுப்பில் படிக்கும்போது கண் கலங்காதவர்கள் கல்நெஞ்சுக்காரர்களாகத்தான் இருப்பார்கள். இப்போது இவர் கொண்டு வந்திருக்கும் இதோ ஒரு மனுஷி என்ற சிறுகதையும் சமூகப் பொறுப்பு வாய்ந்த போராளித்தன்மை கொண்டவை.
எழுத்தாளர் சிவசங்கரி அவர்களின், நான்கு தொகுதிகளைக் கொண்ட “இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு” என்ற முயற்சி ஒரு மாபெரும் இலக்கிய வேள்வி. இந்த முயற்சியை பிறமொழிப் பத்திரிகைகள் பாராட்டி பக்கம் பக்கமாக எழுதுகின்றன. ஆனால் இங்கே காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, இது கண்டுக்கப்படவில்லை. மூன்று தலைமுறைகளை கொண்டு இவர் எழுதிய ‘பாலங்கள்’ என்ற நாவல் தமிழில் வெளியான மிகச் சிறந்த படைப்பு.
இதேபோல் ஜே.எம். சாலி, ஒரு அற்புதமான எழுத்தாளர். இஸ்லாமிய மக்களின் பிரச்சினைகளை யதார்த்தமாகவும், மனிதநேயமாகவும் சித்தரித்ததோடு பொது பிரச்சினைகள் குறித்தும், எழுதியவர். அருமையான தமிழ்நடைக்காரர். இவரை போன்றவர் இனியவனும். இலக்கிய வீதியில் பல எழுத்தாளர்களை வளர்த்து விட்டவர். தரமான கதைகள் எழுதியவர்.
போதாக்குறைக்கு, பதிப்பகத்தார் தாங்கள் பதிப்பிக்கும் எழுத்தாளர்களைப் பற்றி வானளாவ துதி பாடுகிறார்கள். இதே துதியை ராயல்டியில் காட்டினால் நன்றாக இருக்கும்.
இப்படி ரோஜாகுமார், தேனீ சீருடையான், அல்லி உதயன், ஜீவகாருண்யன், ராஜாமணி, ஜனநேசன், தி.சு. வேலாயுதம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். மேலே குறிப்பிட்டவை அனைத்தும் உடனடியாய் நினைவுக்கு வந்த பெயர்கள். இதேபோன்ற படைப்பாளிகள் விடுபட்டுப்போயிருந்தால் என்னை மன்னிக்க வேண்டும். “ஒருபானை சோற்றுக்கு ஒரு அகப்பை சோற்றைத்தான்” காட்டியிருக்கிறேன். என்றாலும்-
ஒரு எழுத்தாளர் திராவிட இயக்கத்தை நாலாந்திர இலக்கியம் என்கிறார். அதில் கலைஞரைப் பற்றி ஒருவார்த்தை இல்லை. பிறகு அதே கலைஞரை கணையாழியில் புகழ்ந்து தள்ளுகிறார். ஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரைப்பற்றி திரைப்படம் எடுக்கிறார். உடனே, அந்த எழுத்தாளர் இவருக்கு ‘சாகித்ய அகாதமி பரிசு’ வாங்கிக் கொடுக்கிறார். ஒருவர், சாகித்ய விருது பெற்ற படைப்பாளியை நேர்காணல் தத்துவத்தையும் மீறி வானளாவ புகழ்கிறார். உடனே, புகழப்பட்டவர், புகழ்ந்தவரைப்பற்றி ஒரு திரைப்படம் எடுக்கிறார். இப்படி அசிங்கமாக போய்விட்டது நவீனத்தமிழ் இலக்கிய உலகம். இதனால் சாகித்ய அகாதமியின் பரிசுக்கான தமிழ்மொழியின் உயர்குழுவில் தேர்வுக்கு வந்த சிற்பியின் கவிதைகளுக்கோ, ஈரோடு தமிழன்பனின் படைப்புகளுக்கோ, அல்லது கு. சின்னப்ப பாரதியின் ‘பவளாயி’ நாவலுக்கோ கிடைக்கவேண்டிய விருது கிடைக்காமலே போய்விடுகிறது. இத்தகைய இலக்கிய தகிடுதத்தங்களில் தகுதிக்குரிய எழுத்தாளர், பதிவுபெறாமல் போவதில் ஆச்சரியமில்லை.
இதேபோல் பல எழுத்தாளர்களை தனது பத்திரிகைகள் மூலம், கைதூக்கி விட்டு பல்வேறு படைப்புகளை உருவாக்கிய நாரணத்துரைக் கண்ணன் விடுபடப்படுகிறார். சிற்றிலக்கிய சொற்பொழிவுகளில் மாமணியின் முகம் பத்திரிகையும், பொன்னடியானின் கவிதைச்சரமும், கவிஞர் செங்குட்டுவனின் கவிக்கொண்டலும், மூவேந்தர் முத்தும், வா.மு. சேதுராமனின் தமிழ்ப்பணியும் விடுபட்டுப்போகின்றன.
ஒரு படைப்பைத் தீர்மானிப்பது காலமேயன்றி, ஆய்வாளர்கள் அல்ல. இந்த “ஆய்வுக் காலன்களை” நினைக்கும்போதெல்லாம் எனக்கு பாரதி பாடலே நினைவுக்கு வருகிறது.
‘காலா! இங்கே வா! உன்னை காலால் உதைக்கிறேன்’
புதிய கட்டுரை — 1999.