சமுத்திரம் கட்டுரைகள்/025
அன்று ஆடு, மாடுகளை இந்தப் பின்னணியில் |
திராவிட இயக்கப் திராவிட இயக்கத்தின் பெரியார்—அண்ணா—கலைஞர் இந்த இயக்கத்தின் நிறுவன |
மூவர் தாக்கம்
தந்தை பெரியார் தமிழை பகுத்தறிவாக்கி கொண்டிருந்தபோது பேரறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும் தமிழை வீதிக்கு கொண்டு வந்தார்கள். ஒவ்வொரு சாதாரண தமிழனின் வாயிலும் தமிழ் அருவிபோல் ஆவதற்கு இவர்களே காரணம். அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’வில் வருவதுபோல் ஒரு பெண்ணுக்கு பைத்தியப்பட்டம் சூட்டி அவளை ஆண்டுக்கணக்கில் ஒரு அறையில் அடைத்துப்போட்ட கொடூர நிகழ்ச்சி அண்மையில் செய்தியாக வந்தது. அண்ணாவின், ‘பணத்தோட்டம்’, ‘நல்லதம்பி’, இன்றைக்கும் பொருத்தி பார்க்கக்கூடிய படைப்புக்கள். கலைஞரின், ‘பொன்னர் சங்கரும்’, ‘தென்பாண்டி சிங்கமும்’, ஏராளமான சிறுகதைகளும் இன்றைய யதாத்தங்களாகவும் இருக்கின்றன. இந்த இருவரின் தமிழ்வீச்சு வடமொழியால் அமுக்கப்பட்டிருந்த தமிழை மீட்டியது. இது இலக்கியப்பணி இல்லையென்றால், இது இலக்கிய வரலாற்றில் இடம்பெறக்கூடியது அல்ல என்று சாகித்ய அகாதமியின் முன்னைய அறிவுரைக்குழு முடிவெடுத்தது ஒரு மூடத்தனமான செயல்.
என்றாலும், அண்ணா, கலைஞர் என்ற ஆலமரங்களுக்கு அடிவாரத்தில் தோன்றிய திராவிட படைப்பிலக்கியங்கள் பேசப்படாமல் போயிற்று. இதற்கு பாதிக்காரணம் அண்ணாவையும், கலைஞரையும் முன்னெடுத்ததுபோல், இவர்களை கொண்டு செலுத்த ஆளில்லை. அதோடு திராவிட இயக்க எதிரிகளின் கையில் இலக்கிய வரலாற்றை தீர்மானிக்கும் பொறுப்பு இருந்ததும் ஒரு காரணம். மேல்நாடுகளில் தரமான கட்டுரைகளும், இலக்கியங்களாக கருதப்படுகின்றன. இங்கேதான் சமூகப் பிரக்ஞை உள்ள படைப்புகள் கூட கட்டுரைத்தனமாக விமர்சிக்கப்படுகின்றன.
அண்ணா வழிச் சிறுகதைகள்
இந்த இயக்கத்தில் ஊறித் திளைத்த ப. புகழேந்தி தொகுத்த ‘அண்ணா வழிச் சிறுகதை’களை படிக்க நேர்ந்தது. இவரும் தமது முன்னுரையில் “தெரிந்தோ, தெரியாமலோ ஒரு எல்லைக் கோட்டினுள் உலவும் ஒரு குறிப்பிட்ட சார்பு எழுத்தாளர்களின் கதைகளே தொகுக்கப்பட்டுள்ளன” என்று ஆதங்கப்பட்டுள்ளார். “சில முன்னுரைகளில், தமிழில் சிறந்த சிறுகதைகள் எழுதுவோர் என்ற பெயர்ப் பட்டியலில் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, டி.கே. சீனிவாசன், கே.ஜி. இராதாமணாளன் போன்ற பெயர்கள் குறிக்கப்பட்டிருப்பினும், அவர்களில் எந்த ஒருவரின் கதையும் அந்தத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கவில்லை” என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அப்போதைய போக்கு இப்போதும் நீடிப்பதற்கு இந்த திராவிட இயக்கமும் ஒரு காரணம். இவர்களும் அழகிரிசாமியையோ, புதுமைப்பித்தனையோ, வல்லிக்கண்ணனையோ கண்டு கொண்டதில்லை. இந்தப் பாரம்பரியம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆகையால் சிந்தனையாளர் புகழேந்தி திராவிட இயக்கப் படைப்பாளிகள் விடுபட்டுப் போனதற்கு, வருத்தப்படுவதில் தவறில்லை.
காவியமான கோமதி
புகழேந்தி தொகுத்த ‘அண்ணா வழிச் சிறுகதைகள்’ என்ற தொகுப்பு, மிகச் சிறப்பானது. பாமர மக்கள், பாட்டாளி மக்கள் ஆகியோரின் பழக்க வழக்கங்களையும், அழகுறச் சித்தரித்திருக்கிறது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இத்தொகுப்பில் சிறந்த கதைகளில் ஒன்றாக எனக்குத் தோன்றுவது திருவனந்தபுரத்தில் வசிக்கும் எழுத்தாளர் ஆ. மாதவன் எழுதிய ‘கோமதி’ என்ற சிறுகதை. இவர் எப்படி அண்ணா வழியில் வந்த திராவிட இயக்கக்காரர், என்பது புதிராக உள்ளது.
ஆனாலும், நல்ல கறுப்பியான-மதமதத்த உடம்புக்காரி, கோமதி என்ற பசு, கோட்டை, நகர பஸ் நிலையம், அரசமரத்தடி ஆகிய இடங்களில் சுதந்திரமாக சுற்றித் திரிந்தது என்பதையும், கண்டன் வாசுவும், ஜாலி மணியனும், தலைக்கட்டு வேலப்பனும், இதனோடு எப்படி குதூகலித்தார்கள் என்பதும் செம்மையாகக் கூறப்பட்டுள்ளது. இவர்களின் இந்த ‘இஷ்ட தோழியை’ மலடு என்பதற்காக வீட்டை விட்டு தள்ளி வைத்த ஒரு பிராமணரைப் பற்றியும், அவரது மனிதநேயத்தைப் பற்றியும் (பசுவைக் கசாப்புக் கடைக்குக் கொடுக்காமலிருப்பது ஒரு மனிதநேயம் தானே) மாதவன் அழகுறச் சொல்கிறார். இறுதியில், கோமதியால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதை அறிந்த கார்ப்பரேஷன்காரர் அதைச் சுற்றி வளைக்கும்போது, கோமதி, கால்களை வெட்டி, வாயில் நுரை தள்ள வைத்து செத்துப்போனது போல் ஒரு பாவலா செய்துவிட்டு, பிறகு எல்லோரும் அசட்டையாக இருந்தபோது, ஜாலி மணியுடன் ஒரேயடியாய் ஓட்டம் போட்டதையும் “யாரப்பா பிடிங்க அந்த -தந்திரக்கார மூதேவியை” என்று மற்றவர்கள் இயலாமல் கத்துவதையும் இந்தக் கதை ஒரு காவியம் போல் சித்தரிக்கிறது.
இந்தத் தொகுப்பின் முதல் கதை “சொல்வதை எழுதேண்டா” என்ற அண்ணாவின் கதை. ராகவாச்சாரி, திவான் பகதூர் தீர்த்தகிரி முதலியாருக்கு, அவரைப் பாராட்டி எழுதிய ஒரு கடிதமும், தனது மகனுக்கு, திவான் பகதூரை திட்டித் தீர்த்து எழுதிய கடிதமும், இருவருக்கும் இடம் மாறிப்போனதால் ஏற்பட்ட பிரச்சினையை அங்கத பாணியில் அழகாகச் சொல்லியிருக்கிறார். திவான் பகதூருக்கு, தனது மைத்துனியை ‘இஸ்கு தொஸ்காகக்’ கொடுத்த ராகவாச்சாரியார், அவளையே ஒரு பகடைக் காயாக்கி, அவளிடம் திவான் பகதூர் தவறாக நடந்து கொண்டார் என்று பத்திரிகைகளில் அறிக்கைகள் கொடுக்கிறார் என்று கதை முடிகிறது. இந்தக் கதையை எந்தவித இழிவும் இல்லாமல் மிக யதார்த்தமாக எல்லோருக்கும் புரியும்படி எழுதியிருக்கிறார், அண்ணா.
பல்மொழி கண்ட குப்பைத்தொட்டி
கலைஞரின் ‘குப்பைத் தொட்டி’ என்ற கதை ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு சுமாராகத்தான் தெரிந்தது. இப்போது நவீனத்துவம், பின்நவீனத்துவம், மேஜீக்கல் ரியலிசம், அமைப்பியல் போன்ற இலக்கிய இசங்கள் பிரபலமான இந்தக் காலக்கட்டத்தில் இதன் மறுவாசிப்பு பிரமிக்க வைக்கிறது. ஒது குப்பைத் தொட்டி மூலம் சொல்வதுபோல் கலைஞர் சமுதாயத்தை விமர்சிப்பது மேஜீக்கல் ரியலிசத்திற்கு எடுத்துக்காட்டான கதை. இதனால் இது இடதுசாரி இலக்கிய இதழான செம்மலரில் சிகரங்களைத் தொட்ட சிறுகதை வரிசையில் பிரசுரிக்கப்பட்டது. தோழர் கு. சின்னப்பப்பாரதியை ஆசிரியராகக் கொண்ட, ‘ILA’ என்ற மும்மாத இதழில் மொழி பெயர்க்கப்பட்டது. எனது ‘வாடாமல்லி'க்கான ஆதித்தனார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலைஞரோடு மேடையை பகிர்ந்துகொண்ட நான் இந்தக் குப்பைத்தொட்டி பற்றி குறிப்பிட்டேன். உடனே, கலைஞர் தனது இறுதி உரையில், ‘குப்பைத்தொட்டி இங்கே குப்பைத்தொட்டியாக ஒதுக்கப்பட்டாலும் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது’ என்று இங்கே நிலவும் இலக்கிய போலித்தனங்களை தோலுரித்துக் காட்டினார்.
‘உங்களைப் போன்ற ஒரு மனிதாபிமானியைப் பார்க்கவே முடியாது’ என்று நாடாளுமன்றத்தில் மக்களவைத் தலைவரால் போற்றப்பட்ட இரா. செழியன் ‘ராஜாதி ராஜா’ என்ற சிறுகதையை எழுதியிருப்பது எனக்குப் பெருத்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. சிந்தனையாளர்கள், தங்களது சக்தியை இலக்கிய வடிவுகளாகவும் ஆக்க முடியும் என்பதற்கும், சிறுகதை எழுதுவதற்கு என்று யாரும் தனியாகப் பிறக்க வேண்டியதில்லை என்பதற்கும், இந்தக்கதை ஒரு உதாரணம். இந்த இரா. செழியனையே சிறுகதை வரலாற்றில் பேசப்படவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
மாரி என்ற சேரிவாசி, கர்ணம் கை தவறி கீழே போட்டு, தொலைக்கும் அந்தக் காலத்து நாலணாவை எடுத்துத் திரும்பக் கொடுக்கும் அளவுக்கு நேர்மையானவன். ஆனால் அவனுக்கு ஒரு சோதனை. ஒரு நாயின் வாயில் வெள்ளையாகத் தெரிவதை வெள்ளி டப்பியாக நினைத்து துரத்துகிறான். புதர், புல்தரை, சுடுமணல், கல், முள் ஒன்றையும் பார்க்காமல் ஓடுகிறான். தாக்குப்பிடிக்க முடியாத நாயும், வாயிலுள்ள தேங்காய்த் துண்டைத் துப்பிவிட்டு ஓடிவிடுகிறது. அவனும் தேங்காயை நாயின் பற்கள் பதிந்த இடத்தைக் கடித்துத் துப்பிவிட்டு மீதியை வாய்க்குள் போட்டுக் கொள்கிறான். இதைப் பார்த்த குருக்கள் ஐயர், அக்கிரகாரத்திற்குப் பின்புறமாக வரவேண்டிய சேரிக்காரன், முன்புறமாக-அதன் மத்திக்கே வந்து விட்டதைக் கண்டு கத்துகிறார். தேங்காய் திருடிப் பட்டமும் சுமத்துகிறார். அம்பலக்காராரை வைத்து அடிக்க வைக்கிறார். ‘கூக்குரலைக் கேட்டு ஐயர் அசையாது நின்றார். புளிய மிளாறோ அசைந்தபடி இருந்தது’ என்று செழியன் விளக்கும் விதமே கண்களில் நீரை வரவழைக்கும். இப்படித் திருட்டுப் பட்டம் சூட்டப்பட்ட மாரியை அனைவருமே திருடன் என்கிறார்கள். அவனும், முற்றும் நனைந்தவர்க்கு ஈரமில்லை என்பதுபோல் திருடத் துவங்கி விடுகிறான். மனைவியிடம் ‘ராஜாடி ராஜா’ என்கிறான். இத்தகைய பழக்க வழக்கத்திற்கு புதிதான அவன் மனைவி, “நீ திருடும்போது யாரும் பார்த்தால் தெரியும்-ராஜாபாடு” என்கிறாள். உடனே நமது மாரி,
“இந்த ராஜாபாடு மட்டுந்தானா? நெசமாலும் ராஜா கூடத்தாண்டி சண்டையிலே தோத்துப்போனா, இன்னொரு ராஜா கையில் அடிபடுவான்,” என்று சொல்லிவிட்டுச் சிரிப்பாய்ச் சிரிப்பான். கதை என்றால் இதுதான் கதை. “மழையை லட்சியம் செய்யாத எருமை போல அலைந்தேன்.” ‘அடுப்பில் கஞ்சி கொதிக்கும் சத்தம் அஞ்சலைக்கு இன்னிசையாக இருந்தது’ போன்ற உதாரணங்கள் தனித்துவம் பெறுகின்றன; இப்போது அரசியல் ஓரங்கட்டப்பட்ட இரா. செழியன், அதுவும் நன்மைக்கே என்று நினைத்து இலக்கியத்திற்குத் திரும்ப வேண்டும். கண்டவர்கள் எல்லாம் இன்றைய அரசியலை யானை பார்த்த எவனோ போல கேளிக்கையாகச் சித்தரிக்கும் இந்தக்காலத்தில், திரு. இரா. செழியன் நல்லதோர் அரசியல் நாவலைப் படைக்க முடியும்.
இதர திராவிடக் கதைகள்
இந்தத் தொகுப்பில் இராம. அரங்கண்ணலின் ‘உலகம் யாருக்கு?’ என்ற சிறுகதை வசன பாணியில் உள்ளது. ஆனாலும், அந்தக் காலத்திலேயே ஒரு நாடோடிக் கும்பல்களில் நலிந்தவளான ஒரு குறத்தியை கதாநாயகியாய் ஆக்கியிருப்பது பாராட்டுதற்குரியது. சின்னப் பெரியார் என்று பாரட்டப்பெற்ற ஏ.வி.பி. ஆசைத்தம்பியின் “திருச்செந்தூர் முருகன்,” முருக பக்தியை கிண்டல் செய்வதற்காக, எழுதப்பட்ட ஒரு சராசரிக்கதை. ஆனால், “ஒருவரை ஒருவர் ஆண் பெண் வித்தியாசமின்றி அத்வைத வேத அடிப்படையில் இடித்துக்கொண்டு ரயில் ஏறினர்” என்பது போன்ற வர்ணனை நன்றாக வந்துள்ளது. திராவிட இயக்கத்தில் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திரு. கே.ஜி. இராதாமணாளன் ‘அந்தப் புன்னகை’ என்ற சரித்திரக் கதையை எழுதியிருக்கிறார். திப்புவின் சேனாதிபதி அலிகாரால் கற்பழிக்கப்பட்ட ஒருத்தி, திப்புவின் யோசனைப்படியே, அவனையே திருமணம் செய்து முதலிரவிலேயே அவனைக் கொன்று போடுவதுதான் கதை. கர்நாடகத்தை ஒரு தளமாக எடுத்துக்கொண்டு இந்தக் கதையை மிக அழகாக எழுயிருக்கிறார்.
அங்கத இலக்கியம்
இந்தச் சிறுகதைத் தொகுப்பில் வரலாற்று பூர்வமான கதையம்சத்திற்கும், அங்கத இலக்கியத்திற்கும் எடுத்துக்காட்டாக இருப்பது மலையாளத்திலும் தமிழிலும் வன்மை மிக்க ரா. இளஞ்சேரன் எழுதிய சரித்திரக்கதை. இந்தக் கதையை மேல்ஜாதியைச் சேர்ந்த ஒருவர் எழுதியிருந்தால், இந்நேரம் இதற்கு ஒரு அகில உலகப்புகழ் கிடைத்திருக்கும். ஆனால், இங்கே சோகம் என்னவென்றால், இளஞ்சேரன் என்ற ஒருவர், ‘பாண்டியன் கொன்ற அபிராமி’ என்ற சரித்திரச் சிறுகதை எழுதினார் என்பது மறந்து போனதுதான். இப்படி எத்தனை கதைகள்... எத்தனை ஆசிரியர்கள்... மண்ணின் மணத்தை நுகர வைத்த படைப்பாளிகள். மறக்கடிக்கப்பட்டார்களோ? இந்தக் கதையில் தென்காசியிலுள்ள ஒரு மடத்தில் பெரிய சந்நிதானமும், சிறிய சந்நிதானமும், காம இச்சையில் ஈடுபட்டிருந்ததும், முஸ்லிம்களின் படையெடுப்பிற்குத் தாக்குப் பிடிக்க முடியாத மதுரைப் பாண்டியர்கள் தென்காசிப் பக்கம் வந்ததும், பெண்கள் எப்படி தங்கள் வீரத்தைக் காட்டினார்கள் என்பதுமே கதை.பாண்டிய மன்னனால், அபிராமி என்ற ஆரணங்கு ஏற்கனவே சந்நிதானங்களின் கண் பார்வைக்குத் தப்பித்து வந்த அந்தப் பெண்ணழகி எப்படி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள் என்பதே கதை. ஆனால், இளஞ்சேரன் அதைச் சொன்ன விதமோ தனிப்பாணி. எந்த எழுத்தாளராலும் காப்பி அடிக்க முடியாத நடை. இளைய தம்பிரான், சம்பங்கியிடம் சொல்வது போலவும், பெரிய தம்பிரான் இளைய தம்பிரானிடம் சொல்வது போலவும், இருவரிடமும் சம்பங்கி சொல்வது போலவும் கதை பின்னல் பின்னலாய்ப் பின்னப்பட்டு ஒரு மோகன வடிவம் பெறுகிறது. இடையிடையே அடைப்புக் குறிக்குள், பேசுபவர், பேசப்படுபவரிடம், அவருக்குத் தெரியாமல் வைத்திருக்கும் அபிப்பிராயம் அழகிய முறையில் சித்தரிக்கப்படுகிறது.
மூழ்கிப்போன சேகரன்
‘தெய்வத் திருப்பணிகளையும்; தரும நீதிகளையும் சுல்தான்கள் பிரியாணியாக்கிச் சாப்பிட்டு விட்டார்கள்’ என்ற வாசகமும், ‘கழுத்திலிருந்த நகக்குறியை மறைக்க பிணத்தின்மீது குங்குமத்தைப் பூசியவர்தானே நீர்?’, ‘கிளைகளிலிருந்து வேர்கள் இறங்கிய மாதிரி எல்லா மரங்களிலும் பிணங்கள் தொங்குகின்றன’ என்ற உதாரணமும், ‘விக்கிரகங்கள்’ புதைந்த இடத்தைக்காட்டி விடாதீர்கள். அவ்வளவும் சொக்கத் தங்கத்தில் செய்த “விக்கிரகங்கள்” என்ற நையாண்டியும் இந்த சிறுகதையை இலக்கியத்துள் இலக்கியமாக்கி விடுகிறது. ஆனால், அந்த பரிதாகபரமான இளஞ்சேரன், எந்த இயக்கத்தில் தோன்றினாரோ அந்த இயக்கத்தாலேயே சொல்லப்படவில்லை. இவர், சமூக பிரக்ஞை கொண்ட ஒரு புதுமைப்பித்தன். சாமான்யர்களின் வழிகாட்டி. ஆனாலும் இவர் இலக்கியத்திலிருந்து ஒரு ‘வழி’ செய்யப்பட்டு விட்டார்.
திராவிட இயக்கத்தில் சிறுகதை மன்னன் என்று சொல்லப்படுகிறவர் அது டி.கே. சீனிவாசன், இதைவிட்டு விட்டு, அவருக்குத் தத்துவ மேதை என்று சம்பந்தமில்லாத ஒரு பட்டத்தைச்சூட்டி, அதில் அவரும் மயங்கி, சிறுகதையை விட்டுவிட்டார். இதனால் அவருக்கு நஷ்டமோ என்னமோ, சிறுகதை உலகிற்கே நஷ்டம்தான். இவரது ஆடும் மாடும் மிகச்சிறந்த நாவல். ‘பொன்னி’ இலக்கிய இதழில் பல சிறுகதைகளை எழுதியவர். இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள இவரது ‘துன்பக்கதை’ ஒரு காதலையும், கூடவே பொருந்தாத திருமணத்தையும் உள்ளடக்கியது. ‘நான் என்று தொடங்கி எழுதப்படும் பெரும்பாலான கதைகளில் எப்படியோ சோகத்தின் சாயல் படிந்து விடுகிறது’ என்று சுயமரிதையாகக் கதையைத் துவக்கும் இவர், இந்த ‘நான்’ தந்தையால், தாயின் ஊக்குவிப்போடு, அடிக்கப்படுவதைக் கண்டு ‘நான் பேய்க்கும் பிடாரிக்கும் பிள்ளையாகப் பிறந்திருப்பேனோ’ என்று சொல்ல வைப்பது நெஞ்சை நெகிழச் செய்கிறது.
இளமையிலேயே அவருடன் பழகிய சக்கு, அவர் தந்தையிடம் அடிபடும் போதெல்லாம் ‘வலிச்சுதா’ என்று கேட்கிறாள். பிறகு ஒரு கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டு வாழ்க்கையைக் சருகாக்கிக் கொள்கிறாள். அப்போது அவளிடம் உரிமையோடு, சரசமாடப்போன, ‘நானை’ அவள் அடிக்கிறாள். கன்னத்தில் அறைந்த கையோடு வீட்டை விட்டு வெளியேறச் சொல்லுகிறாள். ‘வலிக்குதா’ என்று கேட்கவில்லை. இதுதான் கதை. இதைப் படிக்கும்போது நமக்கே வலிக்காதா? சரளமாக நடையில் தனித்துவமான கருத்துக்களைத் தெரியப்படுத்தியவர் டி.கே. சீனிவாசன்.
தில்லை மறை முதல்வன்
ஆயுதப்புரட்சி இலக்கியங்களெல்லாம் அங்கீகரிக்கப்பட்டு வரும் இன்றைய கால கட்டத்திற்கு முன்பே, அப்படி ஒரு கதையை எழுதியவர் தில்லை மறை முதல்வன். ‘திராவிடன்’ இதழில், ‘சங்கப் பலகை’ என்ற பெயரில், பல கருத்துக்களைச் சிறப்புற எழுதிய எழுத்தாளர் புகழேந்தியால் அறிமுகப்படுத்தப்படும் இவர், குடும்பத்தின் மீது பற்று பாசம் இருந்தாலும், அதற்கு பயன்பட முடியாமல் போன ஒரு புரட்சிவாதியையும், பிள்ளை பெண்டு என்று முடங்கிப்போன அவனது நண்பனையும் சித்தரிக்கும் சீரிய கதை. குமாரசாமி என்ற புரட்சிவாதி, மனைவியையும் பெற்றோரையும் விட்டுவிட்டுத், தலைமறைவாகி நண்பனிடம் வருகிறான்.
அந்த நண்பனின் அன்பான வேண்டுகோளின்படி, மீண்டும் குடும்பத்திற்குச் செல்ல முயற்சிக்கிறான். அதற்குள் அவன் ஆந்திராப் பக்கம் ‘வழக்கமான வேலைக்கு’ போவதென்று முடிவெடுக்கிறான். இறுதியில், தெருப்பின்றி வேள்வி நடத்த முடியாது என்பதை நினைவுபடுத்திக் குடும்பத்தின் வாழ்க்கையை அந்த வேள்வியில் தாரை வார்க்க அவன் தயங்கவில்லை. ஆனால், கல்லூரிக் காலத்தில் அவனோடு புரட்சி வேகம் கொண்டிருந்து நண்பனோ, நெஞ்சில் லட்சிய நெருப்பு கிளம்பாதிருக்க மனைவியின் உடல் நெருப்போடு ஒட்டிக் கொள்கிறான். கல்லூரிக் காலத்தில் லட்சியம் பேசிவிட்டு, பிறகு குடும்ப வாழ்க்கையில் அதை அலட்சியப்படுத்தும் முன்னாள் புரட்சிக்காரர்களுக்கு இது ஒரு அருமையான சவுக்கடி.தென்னரசின் முத்தாயி
எஸ்.எஸ். தென்னரசு, திராவிட நாவலாசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர் தென் மாவட்டங்களில் நிலவிய, இப்போதும் ஓரளவு நிலவும் ஆவேசப் போக்கையும், அதன் பின்னணியிலுள்ள அன்புப் பிரவாகத்தையும் ‘முத்தாயி’ என்ற சிறுகதையில் அழகாகச் சித்தரிக்கிறார். இந்தக் கதையில் அந்த மண்ணுக்கே இயல்பாயுள்ள வீரம் ஒளிர்கிறது. காதலுக்காக அனைத்தையும் அலட்சியப்படுத்தும் ஒரு வீராங்கனையின் ஆளுமை அழகாகச் சித்தரிக்கப்படுகிறது.
கருமுயலை திருமணம் செய்து கொள்கிறாள் முத்தாயி. இது அவள் அண்ணன் செந்தட்டிக்குப் பிடிக்கவில்லை. கருமுயல் கொலை செய்யப்படுகிறான். செந்தட்டி சிறைக்குச் சென்று பதினான்காண்டுகள் கழித்து, தான் கொலை செய்ததாகக் கோர்ட்டில் சாட்சியம் சொன்ன தங்கையின் தலையறுக்கச் சபதமிடுகிறான். ஆனால், அவள் திருமணம் செய்துகொண்ட வைரஊசி, தான்தான் கருமுயலைக் கொன்றதாகச் சொல்லுகிறான். இந்தக் கதையில் மண்வாசனைப் பெயர்கள். அதோடு கருமுயலைக் காதலித்துக் கைப்பிடித்த முத்தாயி, அவன் கொலையுண்டதும், வைரஊசியைத் திருமணம் செய்து கொள்ளும் யதார்த்தமான முடிவு. இப்படி மாறுபட்ட கதையைத் தென்னரசால் மட்டுமே சொல்ல முடியும்.
புகழேந்தியின் உறவு
பேராசிரியர்கள் கதை எழுத வரக்கூடாது என்பதற்கு மிகச்சிறந்த சிந்தனையாளரான பேராசிரியர் நா. பாண்டுரங்கன் எழுதிய ‘அரசியல்’ என்ற சிறுகதை ஒரு உதாரணம். குடும்பத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவன், தந்தையால் விரட்டியடிக்கப்பட்ட நான்காவது பிள்ளை, எப்படி அரசனானான் என்பதே சிறுகதை. இதேபோல், தொகுப்பாசிரியர் ப. புகழேந்தி எழுதிய ‘உறவு’ ஒரு உறவைக் கொச்சைப்படுத்தினாலும், சிறிது வித்தியாசமானது. ஆண்மையிழந்த ஒருவனுக்கு மனைவியான ஏழைப் பெண் மீனாட்சி, மாமனார் மூலம் குழந்தை பெற்று இறுதியில் அவர் இறந்த பிறகு, அவருக்குத் தான் பெற்ற பிள்ளைகளைப் போல் தனது கணவனையும் ஒரு பிள்ளையாக நினைக்கிறாள் என்பதே கதை. இங்கே பொறுப்பற்ற மாமனார் மனிதாபிமானியாக சித்தரிக்கப்படுகிறார். என்றாலும், சிறுகதை என்பது குறிப்பிட்ட ஒரு சமூகக் கோட்பாட்டுக்குள் இயங்கலாகாது என்று எடுத்துக் கொண்டால் இது ஒரு நல்ல கதை.முரசொலிமாறனின் வால் நட்சத்திரம்
முரசொலி மாறன் ‘வால் நட்சத்திரம்’ என்ற சிறுகதையை எழுதியிருக்கிறார். நல்ல நடை இயல்பான விறு விறுப்பு. ‘காதல் வராத கதைகள் சோபிப்பதே இல்லை’ என்பது அவரது பார்வை. புரட்சி வசியன் என்ற எழுத்தாளன் உயிரிழக்க அவனுக்கு அனுதாபக் கூட்டம் நடைபெறுகிறது. அவன் ஏற்படுத்திய சமூகத் தாக்கங்கள் பற்றி பத்திரிகை ஆசிரியர் கனவான் கருப்பையா முதலியார் பொரிந்து தள்ளுகிறார். அவரது பத்திரிகையிலேயே இதே புரட்சி வசியன் ‘இன்பப்பித்தன்’ என்ற பெயரில், “நிக்கல் நாணயத்திற்கு நிர்வாண அழகிகள்” என்பது மாதிரியான தொடர்கதைகளையும் எழுதியிருப்பது அவருக்கு மட்டுமே தெரியும். இப்படிப் புரட்சி படைப்பாளியாகவும், செக்ஸ் மன்னனாகவும் ரெட்டை வேடம் போடுகிறவனைப் பற்றியும், அப்படி அவனைப் போட வைக்கிற பத்திரிகை ஆசிரியரைப் பற்றியும், இப்படிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பது மாதிரி, சிறந்த எழுத்தாளரான முரசொலி மாறன் சொல்லியிருப்பது சிறப்பாக இல்லை ஆனாலும், வியாபாரப் பத்திரிகை ஆசிரியர்களின் பேச்சுக்குக் கட்டுப்படாமலும், அந்தப் பத்திரிகைகளுக்கு செக்ஸ் தீனி போடாமலும், சுயமரியாதையோடு எழுதும் ஒரு சில எழுத்தாளர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்பது முரசொலிமாறன் அவர்களுக்கும் தெரியும். ஆலடி அருணாவும், டாக்டர் தயானந்தன் பிரான்ஸிஸும் பல்வேறு திராவிட இயக்கக் கதைகளை எழுதியவர்கள்.
திராவிட இயக்கக் கவிஞர்கள்
நான் கல்லூரிக் காலத்தில் தேசியவாதியாக இருந்தபோது பல்வேறு தி.மு.க. வாசக சாலைகளில் நம்நாடு, முரசொலி, இனமுழக்கம், தென்றல், திராவிட நாடு போன்ற எண்ணற்ற இயக்கப் பத்திரிகைகளை பொறாமையோடும், பொச்சரிப்போடும் படித்தவன். கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன், கா. வேழவேந்தன், பொன்னிவளவன், மதியழகனைப் பற்றி அண்ணா எழுதிய கவிதை, அண்ணா இறந்தபோது கலைஞர் எழுதிய கவிதை, ஆகியவை எனக்கு மிகவும் பிடிக்கும். தேசிய எரிச்சலோடு இந்த திராவிடக் கவிதைகளை ரசிப்பேன். தென்றலில் கண்ணதாசன் ஈற்றடி கொடுத்து வெண்பா எழுத வைத்தது சிறப்புக்குரிய செயல். கவிஞர் செங்குட்டுவன் கவிக்கொண்டல் என்ற பத்திரிகையை இதே பாணியில்தான் இப்போது நடத்துகிறார்; இவர்கள் அல்லாது திராவிட இயக்கத்தின் பிற கவிஞர்களான பாரதிதாசன், கண்ணதாசன், சுரதா, நா. காமராசன், சாலய் இளந்திரையன், ஈரோடு தமிழன்பன், இன்குலாப், அப்துல் ரகுமான், பொன்னடியான், நிர்மலா சுரேஷ், வைரமுத்து, பொன்மணி வைரமுத்து, கனிமொழி ஆகியோரது கவிதைகள் இப்போதும் எனக்கு கற்கண்டு மாதிரி, கடிக்கும்போதே இனிப்பதுபோல் படிக்கும்போதே பரவசப்படுத்துபவை.
மறுபதிப்பும்—மறுவாசிப்பும்
இத்தகைய பெருமைமிக்க திராவிட இயக்க படைப்புகள் அனைத்தையும் மறுவாசிப்பு செய்வதற்கு வசதியாக மறுபதிப்புகளாக வெளியிடவேண்டும். அன்று ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களின் வாரிசுகள், இன்று என்னைப் போன்ற படைப்பாளி வாசகர்களாய் திகழ்வதால் திராவிட படைப்புகளுக்கு மிகச்சிறந்த வரவேற்பு கிடைக்கும்.
இந்தக் கட்டுரையை முடிக்கும் இந்த தருவாயில் தேசியவாதியான என்னுடன் பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு தோழமையோடு பழகிய முன்னாள் அமைச்சர்களான கே.ஏ. கிருஷ்ணசாமி, விசுவநாதன், வேழவேந்தன், முன்னாள் சட்டப்பேரவை துணைத்தலைவர் பெ. சீனிவாசன், இப்போதைய அமைச்சர்களான என் மேடைக்கு எதிர்மேடை போட்ட எஸ்.பி. சற்குணம், இன்னும் என்னுடன் வாஞ்சையுடன் நடந்து கொள்ளும் துரைமுருகன், அண்மையில் பழைமைகளை பகிர்ந்துகொண்ட வழக்கறிஞர் ஜின்னா, பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்ட பிரபல பின்னணிப் பாடகி வாணி ஜெயராம், ஏழிசை வல்லி போன்றோரை நினைத்துப் பார்க்கிறேன். கட்சி வேறுபாட்டிலும் அப்போது கண்ணியம் காக்கப்பட்டது. மாணவர்களிடையே ஒரு சமூகப்பொறுப்பும் சகோதரத்துவமும் நிலவின.
வாசுகி — 1994.