சமுத்திரம் கட்டுரைகள்/026
பெருந்தலைவர் |
நான் கண்ட அப்போது எனது கிராமத்தில் |
காமராசர் முதல்வரானதால்...
நல்லவேளையாக ஒருநாள் எங்கள் ஆசிரியர் வீட்டுக்கு வந்து, இனிமேல் மாணவர்கள் வழக்கம்போல் காலையிலும், மாலையிலும் பள்ளிக்கூடம் வரலாம் என்று தெரிவித்தார். பிறகுதான் எனக்கு மெல்லமெல்ல புரிந்தது. முதலமைச்சரான மூதறிஞர் இராஜாஜி கொண்டு வந்த கல்வித் திட்டத்தால், பள்ளிக் கூடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட என்னைப் போன்ற ஏழை மாணவர்கள், பெருந்தலைவர் காமராசர் முதலமைச்சரானதால் மீண்டும் மறு வாழ்வுப் பெற்றார்கள் என்பது புரியத் துவங்கியது. அதிலிருந்தே காமராசர், என் கல்விக் கண்களைத் திறந்த கடவுளாகத் தென்பட்டார்.
இலுப்பம் பூவான நான்...
எடுத்த எடுப்பிலேயே என் மனதைக் கவர்ந்த பெருந்தலைவரின் காங்கிரசு இயக்கத்தில் என்னை அறியாமலேயே ஒரு பற்று ஏற்பட்டது. மாணவர்களின் நிறுத்தப்பட்ட படிப்பை நீடிக்கச் செய்த அவரை ‘படியாதவர்-பாமரர்’ என்று பலர் கிண்டலும் கேலியும் செய்தபோது, எனக்கு அவரிடம் ஓர் அனுதாபம் ஏற்பட்டது.
கல்லூரிக் காலத்தில் காமராசரை ஆதரிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு காங்கிரசுக் கட்சியில் சேர்ந்தேன். “இல்லாத ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரை” என்பதுபோல், நான் அந்தக் கட்சியின் முக்கியப் பேச்சாளர்களில் ஒருவரானேன். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், என் பேச்சை பல்லாயிரக்கணக்கான மக்கள் அடிக்கடி கைதட்டி வரவேற்றார்கள். அப்போது பெருந்தலைவர் என்னை உற்றுப்பார்த்து மனதுக்குள் குறித்துக் கொண்டார் என்று நினைக்கிறேன். அவர் பேசும்போது என் பேச்சை முன்னுதாரணமாக எடுத்துக்காட்டினார். எனக்கு மெய் சிலிர்த்தது. ஆனாலும் அவரிடம் பேசப் பயம். அவரது செல்வாக்கைப் பயன்படுத்திக்கொள்ளும் திறமையோ, மனமோ எனக்கு இல்லை என்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது.
அடிக்கடி சத்தியமூர்த்தி பவனில் அவரைப்பார்க்கும் வாய்ப்பு பலமுறை கிட்டியதுண்டு. சிலரை, ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்று பேசுவார். பிறகு விசாரித்தால் சம்பந்தப்பட்ட அவர்கள் சரியான பெருச்சாளிகள் என்பது தெரியவரும். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், பெருந்தலைவரைப் போலவே சிலர் பேசி கெட்டபெயர் வாங்கிக் கொண்டதுண்டு. காரணம், தொண்டர்கள் பெரியவர் ஒருவருக்குத்தான் அப்படிப் பேச உரிமை கொடுத்திருந்தார்கள். எனக்குப் பெருந்தலைவரிடம் பல தடவை பேச வாய்ப்புக் கிட்டியும், என்னால் பேச இயலவில்லை.
சித்தப்பாவின் அப்பாவித்தனம்
ஒரு தடவை, சென்னையில் வண்ணைப்பகுதியில், என் சித்தப்பா வீட்டில் அவருக்கும் எனக்கும் ஒரு விவாதம். அவர்தான் என்னைப் படிக்க வைத்தார். பேச்சு வாக்கில், “ஆனானப்பட்ட காமராசரே உன்னை வரும்படி ஆள் அனுப்பினார். உன் படிப்பைக் கெடுக்க நானா சம்மதிப்பேன். சாக்குப் போக்குச் சொல்லி அனுப்பிவிட்டேன்” என்று கூறினார். அந்த காமராசர மாதிரி பெண்டாட்டி-பிள்ளை இல்லாம உன்னை அலையவிடுவேனா? நான் யாராக்கும்? என்றார் பாமரத்தனமாக. அதில் அப்பாவித்தனமான பாசம் ஒலித்தது. அப்போதுதான் எனக்குப் புரிந்தது. எனது அப்பாவி சித்தப்பா, நான், காமராசருக்குத் துணையாகி அரசியலில் சேர்ந்தால் என் படிப்புக் கெட்டுவிடும் என்றும், பிரம்மச்சாரியாகவே இருந்துவிடுவேன் என்றும் மனப்பூர்வமாக நம்பியிருக்கிறார். அதற்குப்பிறகு பெருந்தலைவரை சந்தித்து நிலைமையை எடுத்துக்கூறும் துணிச்சல் எனக்கு இல்லை.
கேள்வியும்—காட்டமான பதிலும்
கல்லூரிப்படிப்பு முடிந்தபிறகு, சென்னைக்கு அருகே உள்ள செங்குன்றத்தில் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக வேலை கிடைத்தது. அப்போது டெப்டிக் கலெக்டர் தேர்வுக்கு நான் படித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று வேலையில் சேர்ந்த பத்து நாள்களுக்குள், ஈக்குவார்பாளையம் என்ற இடத்திற்கு என்னை மாற்றிவிட்டார்கள்.
இந்த மாற்றம், என் தேர்வை கெடுக்கக்கூடியது. அதோடு மாவட்ட உயர் அதிகாரி ஒருவரின் மகனுடைய வசதிக்காக, என்னை மாற்றியது எனக்கு அதிகப்படியாகத் தெரிந்தது. ஆகையால், நான் ஆவேசத்துடன் காமராசரின் இல்லத்திற்கு நேராகச் சென்றேன். அவரும் என்னை அடையாளம் கண்டவர்போல் தலையாட்டினார். எங்களுக்கிடையே இப்படிப்பட்ட பேச்சு நடந்தது.‘என் பேரு சமுத்திரங்க’
‘தெரியும். என்ன சேதி?’
‘நான் செங்குன்றத்தில் ஆசிரியரா வேலை பார்க்கிறேன். என்னை அநியாயமா ஈக்குவார்பாளையத்துக்கு மாத்திட்டாங்க. நீங்க தான் அத கேன்சல் பண்ணிக் கொடுக்கணும்.’
‘நீ மேல் அதிகாரிகளுக்கு வேலையிலே சேரதுக்கு முன்னால மனுப்போட்டியா?’
‘போட்டேங்க’
‘மேல் அதிகாரிகளோட உத்தரவுக்குக் கீழ்படிவேன்னு அந்த மனுவில எழுதினியா?’
‘ஆமாங்க’
‘மேல் அதிகாரி உத்தரவு போட்டிருக்கான். அவன் சொன்னபடி ஈக்குவார்பாளையத்துக்குப் போ’
‘அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுங்க’
‘நீயே எனக்கு உத்தரவு போடறயா? போ... போ... அவனவன் வேற எதுக்கலாமோ வருவான் நீ என்னடான்னா...’
நான், வெறுமையா வெளியே வந்தேன். அப்போது செய்தியைக் கேள்விப்பட்ட நெல்லை ஜெபமணி அவர்கள், பெருந்தலைவர் கடைசியாகச் சொன்ன சொல்லுக்கு வியாக்கியானம் கொடுத்தார். அதாவது நான் ஐ.ஏ.எஸ், டெப்டி கலெக்டர் ஆகிய பதவிகளுக்காக அவரை அணுக வேண்டும் என்றும், பதவி மாற்றம் போன்ற சில்லறைக் காரியங்களுக்குப் போகக்கூடாது என்றும் பெருந்தலைவர் கருதுவதாகக் கூறினார்.
செங்குன்றத்தில் நான் பள்ளிக்கு சென்றபோது. தலைமையாசிரியர் உட்பட ஒரு பெரிய கூட்டமே என்னை எதிர் பார்த்துக் காத்திருந்தது. என்னை ஈக்குவார்பாளையத்துக்கு மாற்றிய உத்தரவு ரத்து செய்யப்பட்டுவிட்டதாம்.
பயமான பக்தி
நான் பெருந்தலைவரை மானசீகமாக வணங்கினேன். அவருக்கு நேரில்போய் நன்றி செலுத்த வேண்டும் என்ற புத்தி எனக்கு இல்லை டெப்டிக் கலெக்டர் தேர்வில் தேறினாலும், செல்வாக்கால் மட்டுமே தேறக்கூடிய நேர்முகத் தேர்வில் பெருந்தலைவரை அணுகுவதற்கு எனக்கு துணிச்சலும் இல்லை. ஆகையால், புதுதில்லியில் வானொலி நிலையத்தில் தமிழ் செய்திப் பிரிவில் துணை ஆசிரியராக இடறி விழுந்தேன் அப்போது செய்திகளையும் வாசித்துக் கொண்டு இருந்தேன் பொதுத் தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன பெருந்தலைவர் காமராசர் விருதுநகரில் தோற்றுவிட்டார் என்ற ஒரு செய்தி. எனக்கு, அழுகையும், ஆத்திரமுமாக வந்தது. மத்தியானம் செய்தி படிப்பதற்காக ஸ்டூடியோவிற்குள் சென்ற நான், அப்போதுதான் கிடைத்த பெருந்தலைவரின் தோல்விச் செய்தியைப் படிக்கும்போது அழுது விட்டேன். இதைத் தமிழகம் முழுவதுமே கேட்டது. இப்போதுகூட என்னைப் பார்க்கும் பெரியவர்கள் நான் அப்படி அழுததை சுட்டிக் காட்டுகிறார்கள்.
மறையா உருவம்
பெரியவர் தோற்ற ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு நான் நாடாளுமன்ற வளாகத்தில் அவரை சந்தித்தேன். உடம்பு பழுத்துப் போய் இருந்தது. ஆனாலும், அந்தக் கண்களிலே ஒரு பிரகாசம். நான் என்னை அறிமுகம் செய்து கொள்ளப் போனபோது - ‘உன்னை எனக்குத் தெரியாதா சமுத்திரம்? நான் தோத்தத அழுதுகிட்டே படிச்சியே, கிறுக்கா... அப்படியா படிப்பது?’ என்றார். சிறிது நேரம் என்னையே பார்த்துவிட்டு, ‘செய்தி படிக்கும்போது நம்மோட உணர்ச்சிய காட்டக்கூடாது தெரியுமா?’ என்று நான் ஐநூறு பக்கங்களில் படித்ததை ஒரே வரியில் சொன்னார். மீண்டும் என்னை உற்றுப் பார்த்துவிட்டு, ‘போகட்டும், இதுக்காக ஒனக்கு மெமோ கொடுத்தாங்களா?’ என்று வினவினார். ‘இல்லீங்கய்யா, திட்டுனாங்க.’ என்றேன்.
நான் பெருந்தலைவரை வைத்த கண் வைத்தபடியே பார்த்தேன். அப்போது என் கண் வழியாக மனதுக்குள் பதிந்த அவரது உருவம் இன்னும் அப்படியே நிற்கிறது.
மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட இலஞ்ச லாவண்யமற்ற அந்த மாபெரும் மனிதரைப் பற்றி, மக்கள் இப்போது முழுமையாக உணருவதைக் கேட்கும்போது, ‘கற்பூரமே... உன் வாசனையை இப்போது அனைவரும் உணர ஆரம்பித்து விட்டனர்’ என்று சொல்லிக் கொள்கிறேன். அவர் பெருந்தலைவர் என்பதை அப்போது மட்டுமல்ல இப்போதும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்.
காங்கிரஸ் பேச்சாளனாய்...
1962-ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காஞ்சீபுரம் லோக்கல் பேச்சாளர்களில் நான்தான் நட்சத்திரப் பேச்சாளர். காங்கிரஸ் வேட்பாளர் நடேச முதலியாருக்கு ஆதரவாகவும், அண்ணாவிற்கு எதிராகவும் தினமும் இரண்டு, மூன்று கூட்டங்களில் பேசுவேன். காஞ்சீபுரம் கல்லூரிக்கு போகும்போதும், வரும்போதும் அவரை அவர் வீட்டுமாடியில் பார்ப்பேன். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரண்டு நின்று ‘வாழ்க’ போடுவார்கள். அவர் இயல்பாகவே நிற்பார். எளிமையாகப் பார்ப்பார். அன்பின் உயிர்ச்சக்தி அனைத்தும் அவர் முகத்தில் நடனமிடும். மேடைகளில் நான் அவரை அண்ணாத்துரை என்றுதான் அழைப்பேன்.
அண்ணாத்துரை அண்ணாவானது...
ஒருதடவை காங்கிரஸ்காரர்கள் மூன்று கேள்விகளுக்கு பதில்சொல்ல முடியுமா? என்று அவர் ஒரு மேடையில் கேட்டார். வெள்ளைக்காரன் வைத்துவிட்டுப்போன ஸ்டெர்லிங் நிதியை என்ன செய்தீர்கள்? என்பது முதல் கேள்வி. சுதந்திரத்திற்குப் பிறகு விலைவாசி ஏன் கூடியது? என்பது இரண்டாவது கேள்வி. மூன்றாவது கேள்வி எனக்கு நினைவில்லை. அண்ணாவின் தெருவிலேயே ஒரு கூட்டம். அவர் மாடியில் நின்று உற்றுக் கவனிக்கிறார். நான் பொருளாதாரப்பாட மாணவன். பல புள்ளி விபரங்களோடும், வேடிக்கையாகவும் அவரது கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன்.
மறுநாள் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க பேச்சாளர்கள், அண்ணாவின் முன்னிலையில் என்னை கண்டபடி ஏசியிருக்கிறார்கள். இறுதியாகப் பேசிய அண்ணா, ‘அந்த இளைஞர் நல்லவர், வல்லவர், சிறந்த பேச்சாளர். சேராத இடத்தில் சேர்ந்திருக்கிறார். என்னிடத்தில் இருந்தால், அவரை எங்கேயோ வைத்திருப்பேன். ஆகையால், அவரை திட்டாதீர்கள். அவருக்காக அனுதாபப்படுங்கள்’ என்று நயம்பட உரைத்திருக்கிறார்.
எனக்கு இந்த செய்தி வந்ததும் கிட்டத்தட்ட நான் நெகிழ்ந்தேன். குற்ற உணர்வில் தவித்தேன். எவ்வளவு பெரிய மனிதர்! எவ்வளவு பெரிய உள்ளம்! ஆனாலும் நான் அவர் பக்கம் போகவில்லை. அதே சமயம் மேடைகளில் அண்ணாத்துரை என்று சொல்லாமல் அறிஞர் அண்ணா என்றே அழைத்தேன்.
கவிஞர் பூ கணேசன் குடும்பநல திட்ட துணை இயக்குநராக இருந்த என் நண்பர். அண்ணாவிற்கு வேண்டியவர். அவரைப்பற்றி சொல்லுக்கு சொல் சொல்லுவார். அண்ணாவின் முன்னிலையில் நாம் இருக்கும்போது நமக்கு எந்த கெட்ட எண்ணங்களும் வராது. அவரைப்போலவே அந்தச் சமயத்திலாவது நாம் சிறியென சிந்திக்கமாட்டோம் என்பார். இத்தகைய அற்புத மேதையோடு உறவாட முடியாமல் போயிற்றே என்கிற வருத்தம் இன்னும் என் நெஞ்சில் முள்ளாய் குத்துகிறது.
கல்லூரியிலிருந்து வெளியேற்றம்...
1962-ஆம் ஆண்டு அநேகமாக நவம்பர் மாதம்... வட சென்னையிலுள்ள சர் தியாகராயா கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டு படிக்கிறேன். எம்.ஜி.ஆர். அவர்களை அறக்கட்டளை தலைவராகக் கொண்ட அந்தக் கல்லூரியில், நூற்றுக்கு தொன்னூற்றொம்பது சதவீத மாணவர்கள் கழகக் கண்மணிகள். நானும், எனது மூத்த சக மாணவருமான ச. ராஜாவும் (முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தலைவர் ச. செந்தில்நாதனின் அண்ணன்), ஆகிய இருவர் மட்டுமே காங்கிரஸ் மாணவர்கள். தேசிய முழக்கம், ஐக்கிய இந்தியா ஆகிய பத்திரிகைகளில், நேருதாசன், பகத்சிங், கரிகாலன், தர்மலிங்கம், ராஜா, அடியேன் ஆகியோர் ஆசிரியர் குழு உறுப்பினர்கள். தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தவர்கள். அப்படியிருந்தும் தமிழ்ப்பற்றால் அனைத்து மாணவர்களும் என்னை தமிழ் மாணவர் மன்றத் தலைவர் ஆக்கினார்கள். ராஜாவை சரித்திர மாணவர் சங்க தலைவர், ஆக்கினார்கள். அந்தச் சமயத்தில் தெலுங்கு தமிழ் மாணவர் கெடுபிடிப்போர் நிலவியது. ஆசிரியர்களும் இருபிரிவாய் செயல்பட்டார்கள். ராஜா படிப்பை முடித்துவிட்டு போய்விட்டார். இப்போதைய அட்டர்னி ஜெனரல் மாசிலாமணி, முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் பசுபதி தன்ராஜ், சடகோபன், காங்கிரஸ் செயலாளர் அஜீஸ், தெய்வசிகாமணி போன்ற காங்கிரஸ் மாணவர்கள் பக்கமும் இந்த பத்திரிகை தேசியவாதிகள் பக்கமும் ஒரே சமயத்தில் பழகியவன் நான்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தியாகராய கல்லூரியின் தெலுங்கு நிர்வாகம் ஒரு மாணவரை பழிவாங்கியபோது, நானும், இதர தோழர்களும் போராட்டத்தில் ஈடுபட்டோம். இதில் பெல், ரங்கநாதன், சிறில் டேவிட், அடியேன் ஆகிய நால்வரும் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டோம்.
கல்வி காத்த பெரியார்
சக மாணவர் ரங்கநாதனின் தந்தை பெரியாருக்கு வேண்டியவர். பெரியார் பட்டப்படிப்பு மட்டும் படித்த ஒருவர் காஞ்சீபுரம் தியாகராய கல்லூரியில் முதல்வராய் நியமிக்கப்படவேண்டும் என்று காமராசருக்கு பரிந்துரைத்திருக்கிறார். பல்கலைக்கழக வரலாற்றிலேயே பெரியாரின் முயற்சியால் முதுகலைப்பட்டம் படிக்காத, அதேசமயம் திறமையுள்ள ஒருத்தர் முதல்வராக நியமிக்கப்பட்டது முதுகலைப்பட்ட ஆசிரியர்களுக்கு பிடிக்கவும் இல்லை. பிடிபடவும் இல்லை. தந்தை பெரியார் அந்த முதல்வரிடம் எங்கள் நால்வரையும் சேர்க்கவேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறார். உடனே அந்த முதல்வரும் எங்களை சேர்த்துக்கொண்டார். ஒரு கல்வியாண்டில் இரண்டு பருவங்கள் தாண்டி இறுதிப்பருவத்தில் மாணவர்களை அதுவும் வெளியேற்றப்பட்ட மாணவர்களை சேர்ப்பது என்பது மிகப்பெரிய காரியம். இதை எளிதாகச் செய்து எங்கள் கல்வியை காப்பாற்றியவர் தந்தை பெரியார்.
1966-ஆம் ஆண்டு டெல்லி வானொலி நிலையத்தில் வேலையில் சேர்ந்துவிட்டு, 1968-ஆம் ஆண்டு வாக்கில் சென்னைக்கு வருகிறேன். எனது மாணவர் காங்கிரஸ் தோழரும், அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த க.பா. பழனி அவர்கள் பெரியாருக்கு மிகவும் வேண்டியவர். அப்போது பெரியார் சென்னை பொது மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டு அனுமதிக்கப்பட்ட வேளை.
அய்யா... அய்யாவே....
தோழர் பழனி என்னை கூட்டிக்கொண்டு பெரியாரிடம் சென்றார். கட்டிலில் படுத்திருக்கிறார் பெரியார். சோகமே உருவாக அருகே அமர்ந்திருக்கிறார் மணியம்மை அம்மையார். என்னைப் பெரியாரிடம் அறிமுகம் செய்ததும் நான், எப்படி அவர் எனது கல்லூரிப் படிப்பை காப்பாற்றினார் என்று ஒரே மூச்சாக விளக்கினேன். பின்னர், ‘அய்யா! காங்கிரஸ் இளைஞன் என்கிற முறையில உங்க கருத்தை எதிர்த்து நான் பிரச்சாரம் செய்திருக்கிறேன். ஆனால், டெல்லிக்கு போனபிறகுதான் உங்க அருமை எனக்குத் தெரிஞ்சது. அதோட ராஜாஜியின் புதிய கல்வித் திட்டத்தை ரத்து செய்த காமராசர் ஒரு கருவி. அதை கையாண்டவர் தாங்கள் என்பதை அறிந்தேன்.’
‘அய்யா! நீங்களும் காமராசரும் இல்லையானால் நான் இந்நேரம் ஒரு விவசாயியாகி வரப்பு வெட்டுகிறவனை வெட்டியோ அல்லது அவனால் வெட்டப்பட்டோ கொலையாளியாக அல்லது சிறைவாசியாக இருந்திருப்பேன். என்னை காப்பாற்றிய தெய்வமே!’
என்னால் தொடரமுடியவில்லை. அழுகை முந்துகிறது. அந்தத் தந்தையை கையெடுத்து கும்பிடுகிறேன். அவர் பதிலுக்கு என் கைகளை பிடித்துக்கொண்டு ‘இந்த நன்றியே போதுங்கய்யா! போதுங்கய்யா!’ என்று குரல் தழுதழுக்க பேசுகிறார். என்னையே பெருமிதமாகப் பார்க்கிறார். பிறகு, ‘மன்னிச்சிடுங்கய்யா, உங்கள எழுந்திருச்சு என்னால வரவேற்க முடியல’ என்று அழாக்குறையாக கெஞ்சுகிறார். எழுந்திருக்கவும் முயற்சிக்கிறார். தோழர் பழனி என்னை தள்ளிக்கொண்டே போகிறார். அப்போது அழுததுபோல் இந்தக் கட்டுரை எழுதும் இந்த சமயத்திலும் நான் அழுகிறேன்.
தமிழ் இளைஞர் பண்பாட்டுக் கழகம் — 1988
பின்குறிப்பு:
இந்த கட்டுரையில் பல பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
....................