சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்/002-010

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

13. அருமகள்

இளம் நங்கை ஒருத்தியை அவளின் அண்டை வீட்டு இளைஞர்கள் இருவர் மணந்துகொள்ள விரும்பினர். கீழை வீட்டுக்காரனின் (தன் கிழக்கேயுள்ள வீட்டுக்காரன்) மகன் செல்வம் மிகுந்தவன். ஆனால் அழகற்றவன். மேலை வீட்டுக்காரனின் மகன் அழகன்; ஆனால் ஏழை. இருவரில் யாரைக் தேர்ந்தெடுப்பது. பெண் வீட்டாருக்குக் குழப்பமாக இருந்தது. முடிவைப் பெண்ணின் விருப்பத்திற்கு விட்டு விட்டனர். “இரண்டு இளைஞர்களையும் மணந்து கொள்கிறேன்” என்றாள் மணப்பெண். “கீழை (கிழக்கே உள்ள) வீட்டில் உண்ணுகிறேன்; மேலை (மேற்கேயுள்ள) வீட்டில் உறங்குகிறேன்” என்று தன் முடிவுக்கு விளக்கமும் தந்தாள் அந்த நங்கை. அருமகள்.

14. உயர் அதிகாரியின் கடமைகள்

பிறர் பொருளை இச்சிக்கும் இயல்பும் கையூட்டுப் பெறும் பழக்கமும் கொண்ட உயர் அதிகாரி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவருடைய வேலைக்காரன் அவரின்

காலணிகள் நைந்திருப்பதை அவரிடம் சுட்டிக் காட்டினான். உடனே அந்த உயர் அதிகாரி, எப்போதும் புதிய காலணிகளை அணியும் வேறு ஒரு சார்புப் பணியாளரை அழைத்து வரும்படி தன் வேலைக்காரனுக்கு ஆணையிட்டார். அவ்வாறே அவனும் அழைத்து வந்தான். வந்த அந்த சார்புப் பணியாளரை மரத்தில் ஏறி பழங்களைப் பறிக்கக் கட்டளையிட்டார். அவனும் தான் அணிந்திருந்த புதிய அழகிய காலணிகளை மரத்தின் அடியில் கழற்றி வைத்து விட்டு பழத்தைப் பறிக்க மேலே ஏறினான். அவன் மேலே சென்றதும் உயர் அதிகாரியின் வேலைக்காரன் கழற்றி வைத்த காலணிகளைக் தன் அதிகாரியின் ஆணைப்படி திருடிக் கொண்டு சென்றான். இதனைக் கண்ணுற்ற அந்தச் சார்புப் பணியாளர் மரத்தின் மேல் இருந்தவாறே தடுக்க முயன்றான் முடியவில்லை. கீழே இறங்கி வந்து உயர் அதிகாரியிடம் அது பற்றி புகார் செய்தபோது, அந்த உயர் அதிகாரி “மற்றவர்களின் காலணிகளைக் காவல் காப்பது ஒரு மாவட்ட உயர் அதிகாரியின் கடமையன்று” என்றார்.

15. பிந்திவந்த சுவை உணவு

‘மூலன்’ என்பவர் ‘சோழ’ மரபினைச் சார்ந்த ஆளுநர் ஆவார். அமைச்சரின் செயலராக இருந்த அவருடைய மகன் அவருக்கு உணவளிக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருந்தார். ஆளுநருக்கு வெறுப்பு ஏற்படும்போதெல்லாம் அதற்குக் காரணமாக இருந்தவர்களுக்குச் சவுக்கடி தண்டனை வழங்குவது அவர் வழக்கம். ஒருநாள் அவருடைய மகன் அவருக்கு வகை வகையான புதிய சுவையான உணவுகளைப் பரிமாறினார். ஆளுநர் மூலன் அன்று வயிறு புடைக்கச் சாப்பிட்டார். அவரைச் சுற்றியிருந்தவர்களெல்லாம் யாரோ ஒருவர், அவரின் சவுக்கடி தண்டனைக்கு ஆளாகப்போகின்றனர் என்பதை ஊகித்து உணர்ந்தனர். வயிறு நிரம்பியதும் அத்தகைய சுவையான உணவினை இதுவரை தனக்குப் பரிமாறிய குற்றத்திற்காகச் சவுக்கடி தண்டனை வழங்கினார் ஆளுநர் தன் மகனுக்கு.

16. சாட்டையினை ஆய

பல்லவர் ஆட்சி காலத்தில் ‘மாமல்லன்’ ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஒருமுறை அவர் ஆய்வுக்காகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த போது ஒரு புதர் அருகில் வந்தார். அங்கு அழகிய சாட்டைகள் இருப்பதைக் கண்டு அவற்றில் ஒன்றையெடுத்துச் சென்றார். அந்த சாட்டையை ஆய்ந்து பார்க்க ஒரு மனிதனை தேர்ந்தெடுத்தார். தேர்ந்தெடுத்த அந்த மனிதன், "நான் தவறு ஏதும் செய்ய வில்லையே” என்று முறையிட்டான். “இனி நீ எதிர் காலத்தில் தவறுகள் ஏதும் செய்ய நேரிட்டால், சாட்டை அடியிலிருந்து உனக்கு விதிவிலக்கு அளிக்கப்படும்” என்று வாக்குறுதியளித்தார் ஆளுநர். பின்னர் எதிர்பாராத வகையில் அவன் ஒருநாள் தவறு செய்ய நேர்ந்தது. அந்தத் தவறுக்காக அவன் சாட்டையடிக்கு ஆளானபோது ஆளுநரிடம் “ஐயா, முன்பே இந்த தவறுக்கு நான் சாட்டையடித் தண்டனை பெற்றுவிட்டேன்” என்று சொல்லி ஆளுநர் கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்தினான். ஆளுநரோ “குற்றமற்றவனாயிருக்கும் போது நான் உனக்கு அந்த வாக்குறுதி தந்தேன். இப்போதோ நீ குற்றம் புரிந்திருக்கிறாய்” என்று சொல்லி அவனைச் சட்டையால் அடிக்கத் தொடங்கினார்.

17. மணமகன் தேவை

செல்வர் வீட்டு நங்கையருக்கு அரசுத் தேர்வில் வெற்றி பெற்ற சிறந்த இளைஞர்களை மணமகனாகத் தேர்வு செய்வதுண்டு. இப்படி தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களில் பலர் தங்கள் விருப்பத்திற்கு மாறாகவே இத்தகையத் திருமணங்களுக்குக் கட்டாயப்படுத்தப்பட்டனர். ஒருமுறை அழகிய படித்த இளைஞனைப் பெருமான் வீட்டுச் ஏவலன் தன் முதலாளி வீட்டிற்கு அழைத்துச் சென்றான். இளைஞனும் எவ்விதத் தயக்கமின்றி அவனுடன் சென்றான். வீட்டிற்குள் நுழைந்ததும் விலையுயர்ந்த ஆடையணிந்த ஒரு மனிதன் வீட்டின் உள்ளேயிருந்து வெளியே வந்து, இளைஞனிடம் “அழகும் அடக்கமும் நிறைந்த எங்கள் வீட்டுப்பெண் உம்மை மணமுடிக்க ஒப்புக்கொள்கிறாள்” என்றான்.

இளைஞனோ தலை வணங்கி அவனுக்கு வணக்கம் செலுத்திவிட்டு “எனக்கு இத்தகைய மேன்மையும் உயர்வும். தரப்பட்டமைக்கு மிக்க நன்றி. எனினும் நான் என் வீடு சென்று என் மனைவியிடம் ஒப்புதல் கேட்டு வருகிறேன்” என்றான். இதனைக் கேட்ட அங்குக் குழுமியிருந்த அனைவரும் சிரித்த வண்ணம் கலைந்து சென்றனர்.

18. பாதிநாள் ஓய்வு

உயர்ந்த நிலையிலுள்ள ஒரு மனிதர் ஒரு முறை தாமரை மடத்திற்கு வருகை தந்தார். போதிய அளவு மது அருந்தியவுடன் கம்பர் காலத்துக் பாடல் ஒன்றைப் பாடத் தொடங்கினார். “மூங்கில் புதரின் வழியாய் செல்கையில் துறவியுடன் உரையாடினேன்; மற்ற வேளையில், பாதி நாள் ஓய்வில் இந்த நீந்தும் வாழ்வை மேற்கொண்டேன்” என்று பாடினார். பாடலைக் கேட்டு, விருந்து கொடுத்த துறவி

சிரித்தார். அவர் சிரிப்பின் காரணம் கேட்டபோது அவர் சொன்னார். “உங்களுக்கு உண்மையில் அரை நாள் ஓய்வுண்டு. இந்த விருந்திற்காக நானோ மூன்று நாள் தொடர்ந்து ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறேன்” என்று.

19. காணமற்போன களைபிடுங்கி

உழவன் ஒருவன் கழனியில் தன் களையெடுப்பானை விட்டுவிட்டு வீடு திரும்பினான். களையெடுப்பான் எங்கே என்று அவன் மனைவி கேட்டாள். “மறந்து கழனியில் விட்டுவிட்டு வந்துவிட்டேன்” என்று உரக்கச் சொன்னான் உழவன். “உரக்கச் சொல்லாதீர்கள் யாரேனும் கேட்டால் அதனைத் திருடிச் சென்று விடுவர்” என்றாள். பின்னர் அடுத்தவர் சென்று திருடிச் செல்லுமுன், முந்திச் சென்று எடுத்து வாருங்கள்” என்றாள் மனைவி. அவனும் அவ்வாறே விரைந்து சென்று களைபிடுங்கியைத் தேடினான். களைபிடுங்கியோ காணமற் போய்விட்டது. வருத்தத்தோடு வீடு திரும்பினான். ஆவலோடு நின்றிருந்த மனைவியை அருகில் அழைத்தான். அவள் காதருகில் குனிந்து “அதனைக் காணவில்லை” என்று அக்கம் பக்கத்தினர் காதில் விழுந்துவிடாத வண்ணம் சொன்னான் அந்தப் பைத்தியக்காரன்.

20. அம்மணமாய் ஓர் அதிகாரி

கொடிய வெயில். பகலெல்லாம் உழைத்தப் பின் பொதுக்குளியல் அறைக்கு வந்தார், ஒரு கீழ்மட்ட அரசு அதிகாரி ஒருவர். குளித்து முடித்தபின், தன் ஆடையையும், உள்ளாடையையும் யாரோ திருடிச் சென்றிருப்பதைக் கண்டார். குளியலரை மேலாளர் அந்த அதிகாரி வேண்டுமென்றே வேடிக்கை செய்வதாக ஐயப்பட்டார். பின்னர் அந்த அதிகாரி தன் தலைகவிப்பினை எடுத்துத் தலையில் அணிந்தார். பின்னர் காலணிகளையும் அணிந்தார். குளியலரை மேலாளரிடம் சென்று “இந்தக் கோலத்தில் நான் வெளியே நடந்து செல்ல வேண்டுமா?” என்று கேட்டார்.

21. மந்திரத் தாயத்து

கொசுக்கடியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மந்திரவாதி ஒருவனிடமிருந்து ‘தாயத்து’ ஒன்றை வாங்கிக் கட்டிக் கொண்டான் பொன்னடி. தாயத்துக் கட்டியும் கொசுக்கடியிலிருந்து அவனால் தப்பமுடியவில்லை. கோபத்துடன் மந்திரவாதியிடம் சென்று தாயத்துத் தக்க பலன் அளிக்கவில்லை என்று முறையீடு செய்தான். மந்திரவாதியோ “தாயத்தை நீங்கள் தக்க இடத்தில் கட்டவில்லை. அதனால்தான் தப்பமுடியவில்லைக் கொசுக்கடியிலிருந்து,” என்றான், “அப்படியானால் எங்கே கட்ட வேண்டும்?” என்று கேட்டான் அந்த மனிதன். “கொசு வலைக்குக் கீழே” என்றார் அந்த மந்திரவாதி.

22. உப்பு அதிகம்

இரண்டு உடன்பிறந்தவர்கள் சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இன்று சோற்றுடன் உண்ண என்ன குழம்பு என்று இருவருள் ஒருவன் கேட்டான். “இப்போதுதான் அடுப்பில் கருவாடு சுடப்படுகிறது. சுடப்படும் கருவாட்டை ஒருமுறை பாருங்கள், பின் ஒருவாய் சோற்றினை உண்ணுங்கள்” என்றார் தந்தை. சில நொடிகளில் “அப்பா, அப்பா, ஒருவாய் சோற்றுக்கு அண்ணன் இரண்டு முறை கருவாட்டைப் பார்த்துவிட்டான் என்று தம்பி தந்தையிடம் முறையிட்டான். “அதிக உப்பு அவனைக் கொன்றுவிடும்” என்று எச்சரித்தார் பிள்ளைகள் மீது அக்கறை கொண்ட தந்தை.

23. பரிசுப் பொருளாகப் பழைய ‘நாள்காட்டி’

புத்தாண்டு பிறப்பின்போது புத்தாண்டு பரிசினை ஒருவருக்கு மற்றொருவர் அனுப்பினார். அஞ்சல்காரனிடமிருந்து அப்பரிசினைப் பெற்றுக் கொண்ட வீட்டுக்காரர், அந்த அஞ்சல்காரனுக்குப் புத்தாண்டுப் பரிசாக தன் வீட்டில்

இருந்த பழைய நாள்காட்டியைக் கழற்றிக் கொடுத்தார். இதனைக் கண்ணுற்ற வீட்டு வேலைக்காரி அந்த பழைய நாள்காட்டியால் அந்த மனிதனுக்கு எந்தப் பயனும் இல்லை என்றாள். “எனக்கும் தான் அதனால் இனி எந்தப் பயனுமில்லை” என்று சொல்லியவாறு நாள்காட்டியை அஞ்சல்காரனிடம் கொடுத்தான். அந்த வீட்டுக்காரன்.

24. களவு

திருட்டுக் குற்றத்திற்காக மரக்கட்டையொன்றில் ஒரு மனிதன் பிணைக்கப்பட்டிருந்தான். அதனைக் கண்ட அவன் நண்பன் “என்ன நடந்தது?” என்று கேட்டான். அதற்கு அந்தத் திருடன் “இது எனது போகூழ்; அவ்வளவுதான். தற்செயலாக வீதி வழியே செல்லும்போது ஒரு சிறிய கயிற்றினைக் கண்டு கையில் எடுத்தேன்” என்றான்.

“இந்த அற்பச் செயலுக்காக யாரும் தண்டிக்க மாட்டார்களே” என்றான் நண்பன். திருடன் சொன்னான் “நான் எடுத்தக் கயிற்றின் மறுமுனையில் கன்று ஒன்று கட்டப்பட்டிருந்தது” என்று.

25. தடித்த படுக்கை விரிப்புகள்

கோடையில் கொசுவின் தொல்லை தாளாத ஒரு மனிதன் அதைப் பற்றி நண்பனிடம் முறையிட்டுத் தப்பிக்க வழி கேட்டான். அப்போது நண்பன் சொன்னான் “கனமான தடித்த படுக்கை விரிப்புக்கடியில் படுத்துக் கொள்” என்று. “ஏன்” என்று விளக்கம் கேட்டான் அந்த மனிதன். நண்பன் சொன்னான், “கொசுக்கள் உன்னைக் கடிக்க முனையும் போது படுக்கை விரிப்பு அசையும். அப்போது அசையும் விரிப்பில் கொசுவின் கொடுக்குகள் சிக்கி வளைந்துவிடும் படுக்கை விரிப்பில் சிக்கி வளைந்த கொடுக்குகள் குணமடைய 120 நாள்கள் ஆகும். அதற்குள் குளிர்காலமும் தொடங்கிவிடும்” என்று.