சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/001
1. அரும்பாய்... மலராய்...
அரும்புகிற படைப்பாளிக்குள் ஆயிரத்தெட்டு நினைவோட்டங்கள். கற்பனை ஊற்றெடுப்புகள். கண்ணில் தட்டுப்படுகிற காட்சிகளையெல்லாம் வார்த்தைப் படுத்திப் பார்க்கிற முயற்சிகள். காணும் சூழலிலெல்லாம் ஏதோ ஒரு தனித்துவத்தை கண்டறிகிற தேடல் மனோபாவம்.
புஞ்சைப் பொழியில் நடந்து கொண்டிருப்பான். பாதங்களுக்கடியில் நீளும் பொழியை (வரப்பை) என்ன சொல்லி வர்ணிக்கலாம்? அவன் படித்த கதைகளில் வந்த உவமைகளை யெல்லாம் நினைத்துப் பார்க்கிறான். ‘நாடா போல நீண்டு கிடக்கும் பாதை’, ‘உச்சி வகிடெடுத்ததைப் போல நீளும் ஒற்றையடிப் பாதை.’
இவனுக்கு அந்த உவமைகளெல்லாம் பொருத்தமற்றதாகத் தெரிகின்றன. இவன் பாதத்துக்கடியில் நீளும் வரப்பின் இருபுறமும் பரட்டைத் தலையாய் காய்ந்துகிடக்கிற அருகம்புல். கால் மிதிபட்டு மிதிபட்டு நிறம் மாறிக்கிடக்கிற புல்லின் நிறம். வளைவும் நெளிவுமாய் நீளும் பொழியில், ஆங்காங்கே மஞ்சணத்திக் கன்றுகள். ஆத்திச் செடிகள். அதன் பூக்கள். பச்சை மிளகுபோல கொத்து கொத்தாய் காய்கள்.
இவற்றுக்கெல்லாம் வேறு உவமைகள் வேண்டும். வேறு விதமான வார்த்தைகளில் சித்திரப்படுத்த வேண்டும். எந்த வார்த்தைகளில்? எந்த வகையான உவமைகள்?தெளிவில்லை. எதிலோ போய் முட்டிக்கொண்டு நிமிர்ந்து பார்க்கிற அனுபவம். உள்ளுக்குள் வார்த்தைகளேயில்லாமல் வற்றிப் போன ஒரு பிரமை. எந்த உவமையையும் பிடிக்க முடியாத தனது பலவீனம். உணர்கிற கற்பனை வறட்சி. ஒரு சுய பரிகாசத்தோடு சிரித்துக் கொள்கிறான்.
அவனுக்குள் சமீபமாய் படித்த கதைகள். அதன் நடைச்சிறப்பு. அதைவிடப் பெரிய விஷயம். அக்கதைகளின் வர்ணிப்பெல்லாம்... இவன் அன்றாடம் பார்த்துப் புழங்கிய சாதாரணக் காட்சிகள். பொருட்படுத்தாமல் ஒதுக்கிய சூழல். இதையெல்லாம் கதையில் வர்ணிக்க முடியும் என்ற நினைப்பேயில்லாமல், கவனத்தில் பதிந்து கொள்ளாமல், அலட்சியமாய் விட்ட இடங்கள்.
இவன் படித்த கதைகளில் அதே காட்சிகள் வர்ணிக்கப் பட்டிருந்த விதம். வர்ணித்த முறையிலேயே மனசில் ஓவியமாய் படிந்து விடுகிற அதிசயம்.
அது எப்படி...?
இவனோ ஆற்றின் மணற் துகளை- அதன் நிறபேதங்களை— பசுமையான மரங்களை— அதன் தளிர்க்குளுமையை— பூப்படர்வை— அதன் வாச வித்தியாசத்தை— பசுமை அடர்த்தியான தோட்ட விரிவை— வீட்டு வரிசைகளின் நேர்த்தியை இம்மாதிரியான அழகின் அற்புதங்களையே பார்த்து பார்த்து, அவற்றையே வார்த்தைப் படுத்திப் பழகிய இவனுக்குள், இந்தக் கதைகளில் மிகப் புழக்கமான காட்சிகளைச் சித்தரித்திருந்த வினோதம்.
அந்த வியப்பே இவனுக்குள் வியாபித்து— இவனை விழுங்கி ஏப்பமிட... அனுபவத் திணறல்.
சிறுகதை என்றால் ஏதோ ஒரு மலைப் பிரமாண்டம், அதி வினோத விஷயத்தை, வினோதமாய் சொல்லுகிற வினோத விவகாரம் என்று மலைத்துப் போயிருந்த இவனுக்குள் புதிய உலகம்.
சாதாரண விஷயத்தைச் சாதாரண வார்த்தைகளிலேயே கச்சிதப் படுத்துகிற நேர்த்தியில் நேர்கிற பிரமிப்பு. சிறுகதை வடிவத்தையே ரொம்ப நெருக்கப் படுத்துகிறது.
‘அட... இதுதான் சிறுகதையா’ என்று மனசுக்குள் பரிச்சயமாக்கி விடுகிறது. தொட்டுணர முடியாத ஆகாயமல்ல சிறுகதை, கைக்கெட்டும் பூக்கள்தான் என்று மனசுக்குள் அரும்பு விடுகிற புரிதல் வெளிச்சம்.
வரப்பில் நின்று நிமிர்ந்து பார்க்கிறான். மிளகாய் மார்ப்படப்பு. அதில் வாடிச் சுருங்கிக் காய்ந்து போன மிளகாய்ப் பிஞ்சுகள். அவற்றைக் கொறித்து விளையாடுகிற அணில். பக்கத்தில் மஞ்சணத்தி மரம். அதில் ஏறி ஊர்ந்து ஏறுகிற கரட்டான். மரத்தில் இலைகளின் அடர்த்திக்குள் மைனாக்களின் கிச்சட்டிக் கரைச்சல். அதற்கும் மேலே வெளிறிய ஆகாயம். நடுவில் நகரும் மேகக் கூட்டத்தின் மேல் மாலைச் சூரியனின் மஞ்சள் சிரிப்பு.
கண்களின் வரம்புக்குள் காட்சியாகிற இச்சூழலை ஒரு சிறுகதைக்குள் வார்த்தைப் படுத்த முடியுமா? இயலுமா? அட... முயற்சித்துத்தான் பார்ப்போமே...
அவனுக்குள் நிறம் பிரிந்து, கலந்து, குழம்பித் தெளிவாகிற வார்த்தைகள். வர்ண வாக்கியங்களின் கண்ணாமூச்சி.
‘பழுத்த இலைகளோடு சோகமாய் நின்று, காற்றுக்குப் புலம்புகிற மஞ்சணத்தி மரத்தில் விலைவாசியைப் போல ஊர்ந்து ஏறிக்கொண்டிருக்கும் கரட்டானை (ஓணான்)ப் பார்த்து அணில் பரிகாசமாய் கீச்சிடுகிறது. வறுமைப்பட்ட வாழ்வின் தொல்லையைப் போல மைனாக்களின் சத்த நச்சரிப்பு முடிவில்லாமல் நீள்கிறது. அந்த நச்சரிப்பு தாங்காமல் பதறிப் பதறி கலைந்து சிதறுகிற மேகங்களின் இன ஒற்றுமையை உணர்த்தும் மஞ்சள் வெயில். எல்லாவற்றையும் பார்த்தும், எதுவும் செய்ய முடியாத கையறு நிலைமையில் முகம் வெளுத்துக் கிடக்கிற ஆகாயம்.’
அவனுக்குத் திருப்தியாக இல்லை. ஏதோ ஊனம் தட்டுப்படுகிறது.
இயலாமையை உணர்ந்த சலிப்பு அவனுள். ஒன்றின் வாலை ஒன்று பிடித்துக்கொண்டு ஓடிவந்த வர்ணவார்த்தைகள், சட்டென்று மாயமாகிப் போன மாதிரியோர் வெறுமை.
அவனைக் கவ்விப் பிரமிக்க வைத்திருந்த கதைகளின் வர்ணனைகளில் இத்தனை சிக்கல்கள் இல்லை. இத்தனை ‘கமா’க்கள் கொண்ட நீள நீள வாக்கியங்களில்லை. கச்சிதமாய் அறுபட்ட நூல்துண்டு போல, ‘நறுக், நறுக்’ கென்று வாக்கியங்கள். வரிசை தப்பாத சுருக்கமான வார்த்தைகள். ஒழுங்கு மயமான அடுக்கு. வாசித்த கணத்திலேயே மனசுக்குள் வசிக்கத் துவங்கி விடுகிற வர்ணிப்பு.
இவனுள் ஆயாசம், அதைக் கடந்தும் மெல்லிய திருப்தி. ‘விலைவாசியாய் ஏறும் கரட்டான்.’ வித்தியாசமான உவமை. இயற்கை வர்ணனையிலேயே சமூக நடப்பைச் சொல்ல முடிகிற புதிய உவமை.
‘அடடே... கொஞ்சம் முயற்சி பண்ணினா... நாம் கூட கதை எழுதிடலாம் போலிருக்கே’ என்கிற நம்பிக்கை. கனவுகள் காலூன்றி எழக் கூடிய நம்பிக்கை.
இந்த நம்பிக்கையின் பலத்தில் அசுரமாய் எழுகிற தேடல் மனோபாவம். நிறைய வாசிப்பு. வெறி பிடித்த வாசிப்பு. எந்நேரமும் புத்தகமும் கையுமாய். நள்ளிரவுக்குப் பின்பும் பரீட்சைக்குப் படிக்கிறவனைப் போல புத்தக வாசிப்பு. வகை வகையான நடைகள். தினுசு தினுசான வார்த்தைப் பிரயோகங்கள்.
எந்நேரமும் புத்தகமும் கையுமாய் அலைகிற இவனைப் பார்க்கிற கிராமத்தாட்கள், வினோதமாய் சிந்திக்கின்றனர். ‘இந்தப் பயலுக்கு கிறுக்கு பிடிச்சிருக்கா?’
பரீட்சை, பள்ளிப்படிப்பு இப்படி எந்தத் தேவையுமில்லாமல் புத்தகமும் கையுமாய் புது உலகவாசியைப் போல வினோதமாய் திரிகிற இவனை வினோதமாய் பார்க்க—
அதுவே இவனுள் ஒரு போதையாக அலைக்கழிக்கிறது. ‘தான் சராசரியானவனல்ல... தனிப்பிறவி’ என்ற உணர்வு. உழைப்பும் சோறும் பிழைப்புமாய் வாழ்கிற சாதாரண மனிதர்களிடமிருந்து, இவன் உணர்வளவில் உயர்ந்து விட்டான். வித்தியாசப்பட்டு விட்டான்.
இலக்கியம் என்னும் புது உலகம் இவனுக்குள் பரிச்சயமாகி விரிந்து படர்ந்து விட்டது.
வாழும் மனிதரை வாசித்தறிவதைக் காட்டிலும், புத்தக மனிதரை வாசித்து உணர்வது சுலபமாய் இருக்கிறது. ஒவ்வொரு புத்தகத்திலும் பத்துக்கும் மேற்பட்ட மனிதர்களின் குணங்கள். செயல்கள். உலகங்கள்.
பார்த்தறியாத பிரதேசத்திற்கெல்லாம் போய் வந்துவிட்ட அனுபவம். கனவிலும் கண்டறியாத மனிதர்களின் உள்மனம் கூட பிடிபட்டுப் போன ஆச்சர்யம்.
குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டு, ‘இதுவே உலகின் எல்லை’ என்று நினைக்கிற மனிதர்களுக்கு மத்தியில் வாழ்கிற இவனுக்குள், புத்தக சாளர வழியாய்ப் புரிந்து போன பரந்த உலகம்.
சோவியத் நாட்டின் ஸ்டெப்பி வெளி கண்ணுள் வருகிறது. குட்டைத் தோற்றத்தில் துள்ளித் திரியும் குல்சாரிக் குதிரை; சோவியத் அரசை எதிர்த்துப் போராட வன்மம் கொண்ட பாண்டலிமான் எனும் கொசாக்கியன்; மாப்பசானின் ஓசி நகையைத் தொலைத்துவிட்டு வாழ்வு முழுவதும் அல்லாடும் பெண்; செக்காவின் பச்சோந்தியான போலீஸ் அதிகாரி; அந்தக் குப்பைக் காட்டு நாய்; துர்கனேவின் விஞ்ஞானி பாசரேவ்; ஓ ஹென்றியின் ஏழைக் காதலர்கள்; மாக்ஸிம் கார்க்கியின் பாவல்கர்ச்சாகினும், ஆண்ட்ரூஷாவும், தாயும், நடால்யாவும்; புதுமைப்பித்தனின் கந்தசாமி பிள்ளையும், சப்ளையரும்; கு. அழகிரிசாமியின் ‘திரிபுர’த் தாயும் மகளும்; ஜெயகாந்தனின் கௌரிப் பாட்டி; இவர்களது வகைவகையான வாழ்க்கைத் தத்துவங்களும்...
இப்படி ஏராளமான மனிதர்கள், இவனுக்குள், விரிந்து பரந்த உலகம். நிறைய செய்திகள். மலைமலையாய் உணர்வுகள்.
ஆமாம்... சுற்றி வாழும் சராசரி மனிதர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான நிறைய செய்திகள் இவனுக்குள் முண்டுகின்றன, ஊறி நனைந்த விதையைப் போல.
எப்படிப் பகிர்வது? கதை எழுதியா?
ஆம்... கதை எழுதி விடலாம். முடியுமா நம்மால்? ஏன் முடியாது? ‘விலைவாசியாய் ஏறும் கரட்டான்’ என்று புது உவமை படைக்க முடிந்த தன்னால்... ஏன் கதை எழுத முடியாது? முடியும். முயன்றால் முடியும்.
ஆக... கதை எழுதிவிட வேண்டியதுதான்.
இந்த முடிவிலிருந்து எழுகிற வகைவகையான கனவுகள். கற்பனைச் சிறகடிப்புகள். ரெக்கை கட்டிப் பறக்கிற மனப் பயணம்.
அச்செழுத்தில் தன் பெயரைப் பார்க்கிற ஆசைகள். உலகில் உள்ள மனிதர்களுக்கெல்லாம் அச்செழுத்தில் தன் பெயரைப் பார்ப்பதில் ஒரு பெரும் போதையே இருக்கிறது. சகல மனிதர்களுக்கும் தன் பெயரை அச்செழுத்தில் பார்க்கிற வாய்ப்பு, வாழ்விலேயே ஒரு தடவைதான் லபிக்கும். திருமணப் பத்திரிகை.
இந்த ஒரு வாய்ப்பு கூட சில தம்பதிகளுக்கு லபிக்காமலேயே போய்விடும். பாவம்.
இந்த அரும்புப் படைப்பாளிக்கும், அச்செழுத்தில் தன் பெயரைப் பார்க்கிற ஆசை. அது சார்ந்த ஆயிரத்தெட்டு நினைவோட்டம்.
பொன்னுச்சாமி. ச்சே! பாமரத்தனமான பெயர். நவீனத்துவமில்லை. புதுமைப்பித்தன் மாதிரி கவர்ச்சியான பெயரில்லை. பொன்மணியன். பொன்னொளி, பொன்னெழிலான். பொன்னரசன். பொன்முடி. பொன்துளிர். பொன்காந்தன்.
— இப்படி தன் பெயரையே விதவிதமாய் அடித்து, நெளித்து, வளைத்து சைஸ் பார்க்கிறான். எதுவும் தோரணையாகத் தெரியவில்லை.
சரி... கதை எழுதி... அதுவும் பிரசுரமாகி விட்டால்...?
புத்தகமும் கையுமாய் அலைகிற தன்னை ஒரு கிறுக்கனைப் போலக் கருதுகிற இந்த ஊர் மனிதர்கள்... கதையைப் படித்தால் என்ன நினைப்பார்கள்? இவன் கதைகள் பிரசுரமாகிவிட்டால்...
“நாலுபேரைப் போல உருப்படுறதுக்கு வழியைப் பாரு. உப்புக்கல்லுக்குக் கூடப் பெறாத தறுதலையா திரியாதே” என்று வாய்க்கு வாய் உபதேசிக்கிற உறவினர்கள்... அப்புறம் எப்படிச் சொல்வார்கள்?
தன்னைப் பற்றிய மதிப்பீடே தலைகீழாய் மாறும்— உயரும்— என்கிற கற்பனை லாகிரி.
தனக்குள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய வாழ்க்கைச் செய்திகளின் அடர்த்தி. தன்னைப் பற்றி ஏளனமாய் நினைக்கும் சுற்றுச் சார்புக்கு, தனது அசலை நிரூபணம் செய்து காட்ட வேண்டும் என்கிற வெறி வேட்கை. ஆம்...ஓர் எழுத்தாளன் மலர்வதற்கான சூழல்க் கனிவு. விம்மிக் கொண்டிருக்கும் ஒரு விதை விழித்தெழுந்து, மண்ணைப் பிளந்து பாதை கண்டுபிடித்து, சூரிய தரிசனம் காணும் நிலைமை.
இவன் டீக் கடையில் உட்கார்ந்திருக்கிறான். அரிஜன விவசாயக் கூலிகளும் பிற ஜாதி மக்களும் இருக்கிறார்கள். டீ குடிக்கிறார்கள். ஒரு பெரியவர் வருகிறார். அவருக்கு உட்கார வசதியான இடமில்லை. உட்கார்ந்திருக்கிற அரிஜன மனிதர்களை எரித்து விடுவதைப் போலப் பார்க்கிறார். எப்படியோ ஓரிடத்தில் உட்கார்கிறார். அவருக்குள் குமைச்சல்.
டீக்கடை உள்ளிருந்து ஒரு குரல்.
"மாமா... வெயில் இப்படி வெளுத்து வாங்குதே... 'மழை கிழை' வருமா?
"மயித்துக்குள்ளே வரும்" என்று சீறுகிறார், பெரியவர். பொருத்தமற்ற- காரணமற்ற சீற்றம். தொடர்கிறார்:
"பெரிசு சிறிசு வித்தியாசமில்லே... எல்லாச் சின்னச் சாதிப்பயகளும் தோள்லே ஏறி உட்காரணும்னு திரியுறாங்க. இப்படி இருந்தா... தர்மம்தான் நிக்குமா? மழைதான் எட்டிப் பாக்குமா?"
இவனுக்குள் ஏதோ பிடிபட்ட மாதிரித் தெரிகிறது. இந்த உரையாடலிலேயே ஒரு கதை ஒளிந்து கிடக்கிறது என்று படுகிறது. 'இன்னும் வாழும் ஜாதிக் கொடுமை' என்பது நல்ல உள்ளடக்கம். அற்புதமான விஷயம்.
ரெண்டு நாளாய் இவனுள் போட்டு அலைக்கழிகிற யோசனைகள். அமைத்துப் பார்க்கிற காட்சிகள். வர்ணித்துப் பார்க்கிற சூழல்கள். அடுக்கி வைத்துப் பார்க்கிற உரையாடல்கள்.கதை எழுதி முடித்தபோது... உலகத்தையே ஜெயித்து விட்ட மாதிரியானதோர் மனத்திருப்தி. மனத்திமிர்.
வாசித்துப் பார்த்தால்... அவனுக்கே ஆச்சர்யம்.
‘நான்தானா? இப்படி எழுதியிருப்பது நான்தானா? அடடே, நமக்குள் இம்புட்டு ஞானத்திறமையா?’
போதையாய் எழுகிற சுய லயிப்பு.
நகல் எடுத்து திருத்தமாய் எழுதி... கவர் போட்டு, முகவரி எழுதி... சுய விலாசமிட்டு...
பத்திரிகையாசிரியர் இந்தக் கவரை உடைத்துப் பார்த்தால்... ‘இதோ ஒரு புதுமைப்பித்தன் உதயம்’ என்று அலுவலகமே குலுங்க ஆச்சர்யக் கத்தல் கத்துவாரோ...
இவனுக்குள் சிறகு முளைத்த கனவுப் பறவைகள்.
அனுப்பிவிட்டான். அடுத்த மாதம் சில இரவுகளை உறக்கமேயில்லாமல் கழித்து... காத்திருந்து... அலைந்து... அந்த இதழை வாங்கி.. அவசர அவசரமாய் பிரிக்கிறான். ஆவலாய் பாய்கிறான்.
அவன் கதை வரவில்லை.
சப்பென்று மனசுக்குள் அறைகிற ஏமாற்றம். ஊமை ரணம். உள்ளிறங்கிப் பாய்கிற வேதனையதிர்வு.
ஆற அமர யோசிக்கிறான். தன்னிலையடைந்து அந்த இதழைப் படிக்கிறான். அதிலுள்ள கதைகளெல்லாம் ரொம்பச் சுமாராய்த் தோன்றுகிறது. இவன் அனுப்பிய கதையைவிட தரக்குறைவாய் இருப்பதாக உணர்கிறான்.
நாலைந்து மாதமாயிற்று. இதே நிலைமை. இதே உணர்வு. இதே அனுபவம்.
பத்திரிகை ஆசிரியர்களைத் திட்டத் துவங்குகிறான். அநீதியைப் பேசுகிறான். விளம்பரமாகிவிட்ட எழுத்தாளர்களின் குப்பைச் கதைகளை ஆராதிக்கிற அற்பத்தனத்தை கொதிப்போடு சாடுகிறான். அறிமுக எழுத்தாளர்களின் அற்புதச் சிறுகதைகளைக் கண்டுகொள்ளாத அலட்சியத் திமிரை வைது தீர்க்கிறான்.
இது நிஜமான கொதிப்பா? அவசியமான ஆவேசமா? நியாயமான சீற்றமா?
இல்லை.
விளம்பரமாகி விட்டவர்களின் சராசரிப் படைப்புகள் கூட பிரசுரமாவது நிஜம்தான். மீதி நிஜமில்லை. சுய லயிப்புள்ள இளம் படைப்பாளிக்கு சுயவிமர்சனம் எழுவதில்லை. தன் படைப்பிலுள்ள ஊனம் புரிவதில்லை.
உள்ளடக்கம் அருமையானது. தேவையானது. ஆனால்... உருவம் சரிதானா?
பத்திரிகைகள் அதிகமாய் விரும்புவது வடிவ நேர்த்தியும், இயல்பான மொழி நடையும். விஷயம் மலினமாய் இருந்தால்கூட பரவாயில்லை, பல வார இதழ்களுக்கு.
சிக்கலற்ற— வாசிப்போட்டமுள்ள— மொழி நடையில் லாவகமாய் கதை சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பதே சகல பத்திரிகைகளின் தேவை.
இங்கே—
எழுத்தாளரின் உள்ளடக்க நம்பிக்கையும், பத்திரிகையின் வடிவ நேர்த்தித் தேவையும் முரண்படுகின்றது.
இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளத் துவங்கியவுடன் நிறைய மாத— வார— தின இதழ்களை வாசிக்கிறான். அதன் கதைகளை உள் வாங்குகிறான். ஒவ்வொன்றின் பார்முலாவையும் கணிக்கிறான்.எப்படிப்பட்ட பார்முலாவுக்கு உட்பட்டு கதை எழுதுவது என்ற திசையில்— திசை தவறிய நிலையில்— சிந்திக்கிறான்.
பார்முலாவுக்குள் கரைந்து காணாமல் போன எழுத்தாளர்கள் தமிழில் நிறைய்ய. நிறைய எழுதியும் மரியாதை பெற முடியாமல் போன எழுத்தாளர்கள் ஏராளம்.
இப்போது—
நம்முன் சில கேள்விகள்.
பார்முலாவுக்குள் அடங்கலாமா, கூடாதா?
அசலான சிறுகதை எது?
அருமையான உள்ளடக்கம் மட்டுமே சிறுகதையாகாதா?
வடிவ நேர்த்தி மட்டுமே சிறுகதையா?
எதுதான் நல்ல சிறுகதை?
உலகிலேயே ரொம்ப ரொம்பச் சிக்கலான கேள்விகளுள் ஒன்று, ‘எது நல்ல சிறுகதை’ என்ற கேள்வி.
ஆக... வண்டி வண்டியாய் குவிந்து கிடக்கிற கேள்விகள். இந்தக் கேள்விகளுக்குப் பதில்கள் உண்டா? எங்கே கிடைக்கும்?
சிக்கலான விஷயம்தான். ஆனால், தீர்வேயில்லாத வழக்கு உலகில் இல்லை.
வீடு என்றால் வாசல்படி உண்டு. நாலு சுவர்கள் இருந்தால்... வாசல் நிச்சயமாய் இருக்கும்.
நமது கேள்விகளுக்கு மட்டும் பதில்கள் இல்லாமல் போய்விடுமா... என்ன?
ஆனால்... பதில்களை நோக்கி, விடாமல் தேடியலைகிற முயற்சியும், வைராக்கியமும், தேடல் மனோபாவமும் நிரந்தரமாய் வேண்டும்.