உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/002

விக்கிமூலம் இலிருந்து

2. நச்சுச் சக்கரச் சுழற்சி

ன்றையக் காலகட்டத்தில் சிறுகதைகளுக்கு ஏகப்பட்ட கிராக்கி. மலை மலையாக சிறுகதைகளை எழுதிக் குவிக்கிறார்கள். எந்த இதழைத் திறந்தாலும் கட்டாயமாய் சிறுகதைகள். மாலைமதி போன்ற குறுநாவல் இதழில் உபரியாக ஒரு சிறுகதை. பாக்கட் நாவல்களிலும்கூட தொட்டுக் கொள்ளும் ஊறுகாயாக சிறுகதை.

சிறுகதை இடம் பெறாத இதழே தமிழில் கிடையாது என்று சொல்லிவிடலாம். ராசிபலன் வெளியிடாத இதழ்கள் ஒன்றிரண்டு இருக்கக்கூடும். ஆனால் சிறுகதை இடம் பெறாத இதழ்களே இல்லை.

கல்கி, ஆனந்தவிகடன், பாக்யா, உஷா போன்ற வார இதழ்கள், செம்மலர், தாமரை, கணையாழி, சுபமங்களா போன்ற மாத இதழ்கள், புதிய பார்வை, வாசுகி போன்ற இரு வார இதழ்கள், சகலத்திலும் சிறுகதைகள் தவறாமல் இடம்பெறும். இது போக தினத்தந்தி, மாலைமுரசு, மாலை மலர் போன்ற தின இதழ்களின் சனி, ஞாயிறு மலர்களின் சிறுகதைகள்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால்... மாதத்திற்கு 500 சிறுகதைகள் (ஏறக்குறைய) பிரசுரமாகின்றன, தமிழில். இப்படி ஓர் அசுர உற்பத்தியும், அபார பயன்படுத்தலுமாகிற தமிழ்ச் சிறுகதைகள் யாவும், சிறுகதைத் தரத்தில் இருக்கின்றனவா? கலைத்தரம் இருக்கின்றனவா?

இந்தக் கேள்விக்கு ஆயாசமே பதிலாகி நிற்கிற அவலம்.

‘இலக்கியச் சிந்தனை’ என்கிற அமைப்பு, மாதந்தோறும் வெளியாகிற சிறுகதைகளையெல்லாம் சேகரித்து, ஒரு மதிப்பீட்டாளரிடம் கொடுத்து, ‘ஒரு நல்ல சிறுகதையை தேர்வு செய்து தாருங்கள்’ என்று சொல்கிறது.

அக்கதைக்குப் பரிசும் வழங்குகிறது.

அப்படித் தேர்வு செய்வதற்கு பொறுப்பேற்கிற மதிப்பீட்டாளர் பாடு, பெரும்பாடாகி விடுகிறது. எல்லாச் சிறுகதைகளையும், வாசித்தாக வேண்டிய நிர்ப்பந்தம் நேர்கிறபோதுதான், தமிழ்ச் சிறுகதைத் தரத்தின் அவலமே புலப்படுகிறது.

பெரும்பாலான சிறுகதைகள் வெறும் குப்பைகளாக இருக்கின்றன. ஒரு சிறுகதைக்குரிய கலை வீர்யமோ— ஆழத் தடம் பதிக்கிற ஆற்றலோ— அற்றுப் போயிருக்கின்றன.

படித்த நமக்கோ பயங்கர ஆயாசம். சலிப்பு. சோர்வு. அயற்சி.

ஏனிப்படி? ஏன் இந்தத் தரத்தில் சிறுகதைகள்? இவற்றை எழுதிய படைப்பாளிக்கு இவை குறித்து திருப்தி இருக்குமா? பெருமிதம் இருக்குமா? வெட்க உணர்வு நேருமா?

இப்படி ஏகப்பட்ட கேள்விகள் உறுத்துகின்றன.

இந்தக் கதைகளில் சிறுகதைக்குரிய இலக்கணம் இல்லையா? அப்படியும் சொல்லிவிட முடியாது.

வடிவ இலக்கணம் சரியாகவே இருக்கின்றன. ஒரு எடுப்பு, ஒரு தொடுப்பு, ஒரு சுழற்சி, ஒரு திருப்பத்துடன் கூடிய முடிப்பு என்கிற இலக்கணக் கணக்கு பொருத்தமாக இருந்தாலும்கூட... சிறுகதைத் தரம் வாய்க்காமல் இருக்கின்றன. என்ன காரணம்?

உள்ளடக்கம் இல்லையா?

அதுவும் உண்டு. தப்போ, சரியோ, ஒவ்வொரு கதையிலும் ஓர் உள்ளடக்கம் நிச்சயமாக உண்டு. ஒரு நீதியும் இருக்கிறது.

வயதாகிப் போன முதுமைத் தாய். குடும்பத்துக்குச் சுமையாக இருக்கிறாள். அவளுக்கான செலவுச் சுமையை நினைத்துப் பொருமுகிற மருமகள். கணவனிடம் நச்சரிக்கிறாள். அவன் திகைக்கிறான்.

“அம்மாவை என்ன செய்ய?”
“உங்க தங்கச்சியிடம் அனுப்புங்க”

நச்சரிப்புத் தாங்காமல் அம்மாவை கெஞ்சிக் கூத்தாடி அனுப்பி வைக்கிற மகன். கிழவி போய்விட்டால் மிச்சமாகிற காசை வைத்து ஒரு சீட்டு கட்டலாம் என்ற சேமிப்புக் கனவில் மிதக்கிற மருமகள்.

கதவு தட்டப்படுகிறது. திறக்கிறாள். வாசலில் இவளது அம்மா, மூட்டை முடிச்சோடு. முகத்தில் சோக இருள்.

“என்னம்மா?” என்று திகைக்கிறாள்.
“உங்க அண்ணன் வெரட்டிட்டான்.”

இக்கதையின் உள்ளடக்கத்தைக் குறை சொல்ல முடியுமா? நீதியை மறுக்க முடியுமா?

ஆயினும் இம்மாதிரியான நீதியை உள்ளடக்கிய போதிலும் கதைகள் நிறைவளிக்காமல் போவதேன்? நிறைவளிக்காதது மட்டுமல்ல... பெரும்பாலான சிறுகதைகள் அபத்தக் களஞ்சியமாக இருக்கின்றன. குமுதத்தில் வருகிற ஒரு பக்கக் கதைகள் யாவும், நாகரீக மனிதர் யாரும் காறித்துப்புகிற ஆபாசக் களஞ்சியமாகத்தான் இருக்கின்றன.

‘திறந்து காட்டு, திறந்து காட்டு’ என்று அடம்பிடித்துக் கெஞ்சுகிற கணவன். ‘பகலில் கூடவா? ச்சே’ என்று மறுக்கிற மனைவி. ‘ஒரே தடவை ஒரே தடவை. ஆசை தீரப் பாத்துக்கிறேன்’ என்று கெஞ்சுகிற கணவன். ‘இது ஒரு நோயாய்ப் போச்சு, உங்களுக்கு’ என்று சிணுங்குகிற மனைவி. கடைசியில் நச்சரிப்பு தாளாமல் சம்மதித்து அறைக்குள் நுழைகிற மனைவி.

‘அடிக்கடி பார்த்தால் கரண்டு பில் அதிகமாகுதே’ என்று சலித்துக் கொள்வதில் ஒரு சுழற்சி. ‘ஷட்டரைத் திறந்து டி.வி.யை ஆன் பண்ணிக் காட்டினாள்’ என்ற திருப்பத்துடன் முடிகிற கதை.

வாசக மனசை ஆபாச எண்ணங்களில் ஊற வைத்து விட்டு முடிகிற இம்மாதிரிக் கதைகள், குமுதத்தில் ஒரு பக்கக் கதைகளாக அடிக்கடி வந்து தொலைக்கின்றன. வாசிக்கும் வாசக நெஞ்சத்தையே நகரசபைச் சாக்கடை லாரியாக நாற்றப்படுத்தி நாசமாக்கி மகிழ்கிற ஆபாசச் சிறுகதைகள்.

இதே போல மூடநம்பிக்கையை வலுப்படுத்துகிற கதைகள். மூடநம்பிக்கை என்பது இறை நம்பிக்கை சார்ந்த விஷயமல்ல. விதிமீது நம்பிக்கை, குளம்மீது நம்பிக்கை, ஜோதிடம்மீது நம்பிக்கை போன்ற வாழ்க்கைக்கும் யதார்த்தத்துக்கும் சம்பந்தமற்ற நம்பிக்கைகள். ‘உழைத்தால் உயரலாம்’ என்பதுவும்கூட ஒரு வகையான மூடநம்பிக்கைதான்.

ஒரு முதலாளிக்கோ— பண்ணையாருக்கோ விசுவாசமாக இருப்பதில் சோதனை நேர்ந்து, மனம் சபலப்பட்டு, அப்புறம் ஊசலாட்டத்திற்காக மனம் வெட்கி... அடிமையாக இருப்பதில் உறுதி காட்டுகிற ஏழை மனிதர்களைப் பற்றிய கதைகள்.

இப்படிப்பட்ட அடிமை மோகத்தையே ஒரு உயர்ந்த மனிதப் பண்பாக உயர்த்திக் காட்டுகிற கதைகள். இப்படிப்பட்ட சிறுகதைகள் யாவும் உள்ளடக்க ரீதியாகவே சமூக யதார்த்தத்துக்கும், சக மனிதருக்கும் எதிராக நிற்கிற கதைகள்.

இவையல்லாமல், பெரும்பாலான கதைகள் நிகழும் சமூகத்திற்கு சங்கடம் தராத நீதிகளைப் போதிக்கும். ‘அன்பாயிருத்தல் நலம்.’ ‘அறிவை மதிப்பது நலம்.’ ‘உண்மையே பேசு.’ ‘நேர்மையாய் இரு’ என்பது போன்ற பொத்தாம் பொதுவான நீதிக் கதைகள்.

சமூக மாற்றத்தைப் பற்றியோ— வளர்ந்து செல்லும் வாழ்வின் புதிய நீதி பற்றியோ— புதிய பண்பாட்டுத் தளம் அரும்புகிற நிஜம் பற்றியோ அக்கறைபடாமல்— கற்றுக் கொள்ளாமல்— சமூகத்தில் ரொம்பக் காலமாய் புழங்கிப் புழங்கிப் பழசாகிப் போன நீதிகளையே பேசுகிற கதைகள்.

சரி... இம்மாதிரியான பலவகைப்பட்ட உள்ளடக்கங்களைக் கொண்ட சிறுகதைகள். வணிக ரீதியான இதழ்களில் ஏராளமாய் காணப்படுகிற இந்த ரகச் சிறுகதைகளின் கலைத்தரம் ரொம்பத் தாழ்ந்த மட்டத்தில் இருப்பதேன்?

வாசித்த கணத்தில் ஏற்படுகிற மலின ருசியைத் தவிர, வேறு எந்த நல்விளைவும் நிகழ்த்தாமல் போவதேன்? படித்து முடித்த மறுநாளே மறந்து போகிற அளவுக்கு, அற்ப ஆயுளில் உதிர்ந்து சருகாகிப் போவதேன்?

காரணம், இந்தவகைப்பட்ட சிறுகதைகள் யாவும் ‘நகல் சிறுகதைகளாக’ இருப்பதுதான். கதைகளைப் படித்து மட்டும் கதை எழுதத் துவங்குகிற பார்முலா எழுத்தர்களின் சுயமற்ற தன்மைதான்.

ஆமாம்... இந்த ரகச் சிறுகதைகளைப் படைக்கிற படைப்பாளிகள் யாவரும் நகல் எழுத்தர்களாய் இருப்பதால் தான்; அசல் எழுத்தாளர்களாக இல்லாமல் இருப்பதால் தான்.

அசல் எழுத்தாளன் என்பது யார்? வாழ்க்கையை— அதன் வரலாற்றை— சுய சூழலை— கற்றுணர்ந்து, மன அனுபவமாகிப் போன உணர்வுகளை தனது சொந்த மொழி நடையில் வெளிப்பாடு செய்கிறவன், அசல் எழுத்தாளன். நகல் எழுத்தாளர்? வணிக ரீதியான இதழ்களின் கதைகளைப் படித்து, பார்முலாவை கற்றுணர்ந்து, அதற்கேற்ப கடன் வாங்கிய மொழி நடையில் கதைகளை ‘அமைப்பவன்’.

அசல் எழுத்தாளன், சக மனிதர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான சமூக விஷயங்களின்— லட்சியத்தின்— உத்வேகத்தால்... பகிர்வுச் சாதனமாக சிறுகதையை தேர்வு செய்பவன். இவனுக்குப் புகழ், பணம் இரண்டுமே இரண்டாம் பட்சம்.

நகல் எழுத்தாளருக்குப் புகழ், பணம் இரண்டுமே முதற் காரணம். பகிர்ந்தாக வேண்டும் என்கிற விஷய நிர்ப்பந்தமே கிடையாது. புகழ் கிடைப்பதற்குரிய எல்லா லட்சியமும் அவர் லட்சியம்தான்.

ஒரு வரியில் சொன்னால்... மனிதகுல நேயத்தில் கனிந்த லட்சியத்தின் குரலாகக் கருதுகிறவர் அசல் எழுத்தாளர். சமூகம் குறித்த எந்த லட்சியமுமில்லாமல் புகழே லட்சியமாகக் கருதுகிறவர் நகல் எழுத்தர்.

அதென்ன நகல் எழுத்தர்? அசலான படைப்பாளி சொந்த லட்சியத்திற்கேற்ற சொந்த மொழி நடையில் எழுத்தை ஆளுமை செய்கிறவர். நகல் எழுத்தரோ ஏற்கனவே உள்ள புத்தக மொழி நடையை மீண்டும் நகல் எடுப்பவர். எழுத்தின் மீதோ... மொழியின் மீதோ எந்தவிதமான ஆளுமையும் புரிய சக்தியற்றவர்.

நகல் எழுத்தர்கள்தான் தமிழ்ச் சூழலில் ஏராளம். இந்த நகல் எழுத்தரின் மூலஸ்தானம் எது? பிரபலமான வணிக ரீதியான இலக்கிய இதழ்கள்தான்.

ஆம்... மண்ணுக்குள் விழுந்த விதை நீரில் நனைந்து விம்மிப் புடைத்து, பூமியைப் பிளந்து கொண்டு கத்தியென எழுகிற முனை... சூரிய வெளிச்சத்திலும் காற்றிலும் உயிர் பெற்று நேராக வளர்ந்து விருட்சமாக— அழகாக— நிற்கிறது. பறவைகளின் சரணாலயமாகவும், நிழல் தரும் குளிர் தருவதாகவும் புகழ் பெறுகிறது. பயன் தருகிறது.

பாறைகளின் இண்டு இடுக்குகளுக்குள் விழுந்த விதையும் முளைக்கும். மரமாய் வளரும். நேராக வளராது. இண்டு இடுக்குகளின் வளைவுக்கேற்ப வளைந்து நெளிந்து அலங்கோலமாக இருக்கும். சொந்த வேர்களைப் பாய்ச்சுகிற மண் வளமில்லாததால்... உயிர்க் களையற்றுப் போய், காச நோயாளியாய் நிறம் மாறிப் போயிருக்கும். லட்சணமற்றும், வீர்யமற்றும் இருக்கும். சின்னக் காற்றுக்குக் கூட வீழ்ந்து போகிற பலவீனத்தில் இருக்கும்.

நகல் எழுத்தர், இண்டு இடுக்குச் செடிதான்.

பிரபலமான வணிக ரீதியான இலக்கிய இதழ்களில் வருகிற கதைகளை வாசிப்பார். ‘ஒரு பக்கக் கதை போடுகிறார்களா? அப்பச் சரி, நாமும் ஒரு பக்கக் கதையை அனுப்பி வைப்போம்’.

ஒவ்வொரு இதழிலும் என்ன மாதிரி கதைகளை பிரசுரிக்கிறார்கள் என்ற நிலவரம் உணர்ந்து, அவற்றைக் கற்றறிந்து அவை போலவே கதைகள் எழுதி அனுப்பி விடுவது.

பிரபலமான வணிக இதழ்கள்— ஏராளமான வாசகர்களிடம் செல்ல வேண்டிய— பெருவாரியான விற்பனையின் மூலம் உயிர் வாழவேண்டிய— நிர்ப்பந்தம் இருப்பதாலேயே, கலைத் தரம் குறித்த அக்கறை கொள்ள இயலுவதில்லை, சிறுகதைகளில் ரெண்டு நிமிஷத்தில் வாசித்து முடிக்க வேண்டும். வாசிக்க சுகமாக இருக்க வேண்டும். ஒரு ருசி வேண்டும். மலின ருசியாக இருந்தாலும் போதும்.

இவ்வளவுதான் வணிக இதழ்களின் உயிர்த் தேவை. பத்துப் பக்கச் சிறுகதையைக்கூட அங்கே நறுக்கி, இங்கே நறுக்கி, ரெண்டு பக்கச் சிறுகதையாக்கி, ஒரு பக்கப் படத்தோடு ஜோலியை முடித்து விடுவார்கள்.

இப்படிக் கருச்சிதைவாகி மலினமாகிப் போன கதைகளைப் படித்து எழுதுகிறவர் கதைகள் என்ன தரத்தில் இருக்கும்? அதுதான் இந்த லட்சணம்! 500 சிறுகதைகள் மாதந்தோறும் வந்தாலும் மணிக் கதைகளுக்கு ஏகப் பஞ்சம்.

வணிக இதழ்கள் ஒரு விஷச் சக்கரமாய் பகாசுரத்தனமாய் இயங்குகின்றன. இந்த விஷச் சக்கரத்தால் வார்க்கப்படுகிற நகல் எழுத்தர்கள் இதிலிருந்து மீளவே முடியாது.

ஆற அமர வாசித்தல், ஆழ்ந்த வாசிப்பு, அறிவு பூர்வமான இலக்கிய ஆய்வு, வாழ்க்கையை அழகுபடுத்துவதாக சிறுகதைகள் இருக்க வேண்டும் என்கிற கோட்பாடு இவற்றைப் பற்றியெல்லாம் யோசிக்கவே விடாமல், வாரா வாரச் சுழல் வேகத்தில் ஏராளக் கதைகளை மண்டைக்குள் திணித்து... இந்த விஷச் சக்கரச் சுழல் வட்டம் மட்டுமே வைகுந்தம் என்று நம்பச் செய்துவிடும்.

அதுமட்டுமல்ல... வாரா வார வேகச் சுழற்சியில் ஏராளமான வாசிப்புச் சுகங்களை வழங்குவதன் மூலம் வாசகத் திரளின் ரசனையையே தீர்மானித்துவிடும்.

“வாசித்தோமா, தூக்கிப் போட்டோமா... ஜோலியைப் பார்த்தோமான்னு போய்க்கிட்டேயிருக்கணும். உக்காந்து சிறுகதையையெல்லாம் மனப்பாடமா பண்றது? ச்சே!”

இப்படியொரு ரசனையை உண்டு பண்ணி உறைய வைத்ததில் வணிக இதழ்களின் வெற்றி, அசுர வெற்றிதான்.

அந்த ரசனையை மீற விடாத அளவில் நகல் எழுத்தர்களையும் உருவாக்கி... இந்த விஷச் சூழலைத் தொடர்ந்து பாதுகாத்து வர முடிகிறது.

இந்த நகல் எழுத்தர்கள் ஆயுள் முழுக்க ஆயிரம் சிறுகதைகள் எழுதினாலும்... அதனால் ஆகப்போகிற காரியம் என்ன? மலின ரசனையின் நிழலில் உயிர் வாழ்ந்து, மலினத்தை மேலும் இழிவு நிலைக்குக் கொண்டு போனதைத் தவிர இவர் செய்ததென்ன? இவர் தன்னை இலக்கியவாதி என்று சொல்லிக் கொள்ள முடியுமா? ‘இலக்கியச் சிந்தனை’ போன்ற கௌரவமான அமைப்புகளின் அங்கீகாரத்தைப் பெற முடியுமா? இலக்கிய உலகில் ஒரு உப்புக்கல்லை மதிக்கிற தரத்தில் கூட இவரை மதிப்பார்களா?

அட... இவ்வளவு ஏன்? இவரை யாராச்சும் நாகரீக மனிதர்களில் ஒருவர் என்றாவது மதிப்பார்களா? நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பில் நகல் எழுத்தர்கள் என்ன சுகத்தைக் கண்டுவிட முடியும்?