சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/003
3. சுழலிலிருந்து மீளும் சந்தை
சிறுகதை என்பது மூன்று பக்க விளம்பரங்களுக்கு இடைப்பட்ட ஒன்றரைப் பக்கத்தை நிரப்புகிற விஷயமல்ல. வாசித்து முடித்தவுடன் கீழே போடுகிற ஐஸ் குச்சி மாதிரி, ஒரு தடவைக்கான உபயோகப் பண்டமல்ல. குமுதம் பாணியில் சொல்வதானால்... சிறுகதை என்பது ‘நிரோத்’ அல்ல. கணநேர ருசிக்கான மலினப் பொருளல்ல. ‘வாசிப்பு ருசியைத் தவிர எதிர்பார்ப்பதற்கு எதுவுமில்லை’ என்று ஒதுக்கப்படுகிற விவகாரமல்ல.
சிறுகதை என்பது எழுத்திலான வாழ்க்கைத் துளி. உணர்வு ரீதியான பிரபஞ்ச பாகம். மனிதரை பண்பாட்டுத் தளத்தில் மேன்மைப்படுத்தி வளர்க்கிற இலக்கிய ஆயுதம். சமூகத்தின்— மானுடத்தின்— மேடு பள்ளங்களை கண்டுணரச் செய்து, சிகரப்படுத்துகிற அற்புதம். வாசிக்கும் வாசக மனசின் ஓர் அங்கமாய் குடியேறி நிரந்தப்பட வேண்டிய வலிமை. மனிதச் சிறுமைகளை ஊசியாய்க் குத்தி உணர்த்துகிற விஷயம். மனிதனுக்குத் தெரியாத மனித மேன்மைகளை, மனிதனுக்கு உணர்த்துகிற விஷயம். வர்க்க சமூகக் கொடுமைகளால் சூறையாடப்பட்டு பறிக்கப்பட்ட மனிதநேயத்தை, மீண்டும் மனிதனுக்கு மீட்டுத் தருகிற சமூகப் பொறுப்புள்ள வடிவம். இருதயங்களை உழுது புரட்டி மிருதுவாக்கி விளைநிலமாக்குகிற மாயக்கலப்பை, சிறுகதை.
இயங்கி வளரும் வாழ்க்கையின் மறு படைப்பாக எழுகிற சிறுகதை வடிவம், வாழ்க்கை நெடுகிலும் உள்ளும் புறமுமாய் ரத்தமும் வர்ணமுமாய் விரவிக் கிடக்கும். வாழ்க்கையின் எந்த நரம்பைச் சுண்டினாலும், சிறுகதையின் ஒலி இசையாக எழவேண்டும்.
அப்படிச் சிறுகதை என்பது வாசித்த மனசில் வசப்பட்டு நிற்கவேண்டும். உணர்வோவியம் சிறுகதை.
பாரபட்சமாய் நடந்து கொள்கிற அதிகாரிகளைப் பார்க்கிற போதெல்லாம் செக்காவ்வின் ‘பச்சோந்தி’ நினைவுக்கு வருவதைப் போல— ஏழைக் காதலர்களின் இயலாமையைப் பார்க்கிற போதெல்லாம் ஓ ஹென்றியின் சிறுகதை நினைவுக்கு வருவதைப்போல—
நாதியற்ற ஏழைக் கர்ப்பிணியை கண்ணுற்றால்... மாக்ஸிம் கார்க்கியின் ‘மனிதன் பிறந்துவிட்டான்’ அலையடிப்பதைப் போல—
ஓடிப் போன காதலர்களுக்கு உதவி செய்த கிழவியைக் காணும்போதெல்லாம் ஜெயகாந்தனின் ‘யுக சந்தி’ கௌரிப் பாட்டி மனசுக்குள் வருவதைப் போல—
யந்திரமாய் ஓடி ஓடிச் சுழல்கிற ஓட்டல் சப்ளையரின் உயிரற்ற சப்தத்தில் புதுமைப்பித்தனின் ‘மிஷின் யுகம்’ உயிர் பெற்று எழுவதைப் போல—
பஞ்சத்தில் அடிபட்ட அகதிகளைச் சந்திக்கிற தருணத்திலெல்லாம் கு. அழகிரிசாமியின் ‘திரிபுரம்’ காட்சியாவதைப் போல—
நாடக நடிகைகள், கூத்துக்காரர்கள், திரைப்பட துணை நடிகைகளைப் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம் தி. ஜானகிராமனின் ‘அருவெருப்பு’ ஒரு சோகமாய் நினைவில் உரசுவதைப் போல—?சாலை, குடிநீர் என்று அரசுக்கான விண்ணப்பங்கள் என்றவுடன் கோமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’ பளிச்சிடுவதைப் போல...
படைக்கப்பட்ட சிறுகதை பல வருஷங்களுக்குப் பிந்தைய காலத்து வாழ்க்கைச் சம்பவங்களிலும் சாட்சியமும், வழிகாட்டியுமாய் திகழவேண்டும்; நினைவில் எழ வேண்டும்; வாழ வேண்டும்.
படைக்கப்பட்ட ஒவ்வொரு சிறுகதையும் சிரஞ்சீவியாய் வாழவேண்டும், வாழ்க்கை நிஜங்களைப் போல.
காலத்தை வென்று கம்பீரமாய் வள்ளுவத்தைப் போல வாழ்கின்ற சிறுகதைகள்தான், அசல் சிறுகதைகள்.
தமிழ்ச் சிறுகதைகள் தோன்றிய காலத்திலேயே வாழும் காலச் சமுதாயத்தை விமர்சித்துச் சாடி, புதிய சீர்திருத்தச் சிந்தனைகளை வலுவாக முன் வைத்தது. மகாகவி பாரதியின் ஆரம்ப முயற்சிகளில் மலர்ந்த சிறுகதையான ‘ஆறில் ஒரு பங்கு’ விதவை மணத்துக்காக உக்ரமமாய் குரல் கொடுத்தது. பழமை ஆசாரங்களைச் சமரசமற்றுச் சாடியது. ‘குளத்தங்கரை அரசமரமு’ம் சம கால வைதீகப் போக்குகளை விமர்சித்தது.
மணிக்கொடி, சுதந்திரச் சங்கு, கிராம ஊழியன் போன்ற சிறு பத்திரிகைகள்தான் நல்ல சிறுகதைகள் மலர்வதற்கான பூந்தோட்டமாய்த் திகழ்ந்தன. புதுமைப்பித்தன், பி. எஸ். ராமையா, கல்கி, கு. அழகிரிசாமி போன்ற படைப்பாளிகளை வாரித்துக் கொடுத்தன.
ஆனந்தபோதினி, பிரசண்டவிகடன், ஆனந்தவிகடன், கல்கி போன்ற இதழ்கள் பெருவாரியான படித்த மக்களை வாசகர்களாக்குவதற்காக சிறுகதைக் கட்டமைப்பின் இறுக்கத்தைச் சற்றுத் தளர்த்தின. பொத்தாம் பொதுவான நீதி ஒழுக்கங்களை நகைச்சுவையுடன் பேசின. அவற்றின் நீட்சியும், கால மாற்றச் சீரழிவும் சேர்ந்துதான் இன்றைய வணிக இதழ் பார்முலாவாக வந்துள்ள நகல் சிறுகதைகள். நச்சுச் சக்கரச் சுழற்சி.
மாதந்தோறும் புற்றீசலாய் 500-க்கும் மேல் புறப்படுகிற நகல் சிறுகதைகள், இலக்கிய மேன்மை குறித்தோ சமூக வளர்ச்சி பற்றியோ அக்கறைப்படாதவையாக இருக்கின்றன.
வாசிக்கும் வாசகனிடம் வேர் விடுகிற ஆற்றலோடு இல்லை.
புதியன விரும்பாமல்- ரௌத்ரம் பழகாமல்— அடிமைத்தனத்தை வெறுக்காமல்- விழிப்புணர்வு பெற்று விடாமல்— சமூக மாற்றம் குறித்து சிந்திக்காமல் வாசகர்களை ‘அச்சழியாமல்’ அப்படியே வைத்திருக்க விரும்புகிற வணிக இதழ்களின் சமூக நோக்கத்தை நிறைவேற்றிக் காட்டுகிற அசட்டுத்தனமான கதைகளாகவே இவை உள்ளன.
இந்த வணிக இதழ்களின் மோசமான சமூக நோக்கமே, நகல் கதைகளின் உள்ளடக்கத்தையும் வடிவத்தையும் தீர்மானிப்பதால்... இந்த லட்சணம்.
ஆனாலும் முழுக்க நம்பிக்கை இழந்துவிட வேண்டியதில்லை.
சரித்திரச் சக்கரங்களின் சுழற்சியையே தீர்மானிக்கிற சமூக சக்திகளாக சாமான்ய மக்கள்தான் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதுதான் சரித்திரம்.
அடிமைகளின் தலைவன் ஸ்பார்ட்டகஸ் பாஸ்டில் சிறைகளை உடைத்தெறிந்ததைப் போல— பிரெஞ்சு மன்னர்களின் கிரீடங்களோடு சேர்த்து தலையையும் வெட்டி தரையில் உருட்டிய சாதாரண குடிமக்களைப் போல— ரஷ்ய ஜார் மன்னர் வாரிசுக்கே சமாதி கட்டிய அரோரா கப்பல் படை வீரர்களைப் போல— அமெரிக்க ஏகாதிபத்தியத்தையே முப்பது வருஷ காலம் மூச்சுத் திணற வைத்து தோற்கடித்த வியட்நாமிய விவசாயிகளைப் போல—
இந்த வணிக இதழ்களின் அசுரக் குழந்தையான மலின ரசனையையும் வாழ்க்கை தாக்குகிறது. வணிக இதழ்களையே பின்வாங்கச் செய்கிறது.
ஆமாம்... அது அப்படித்தான்.
வணிக இதழ்கள் பார்முலாக் கதைகளை படை படையாக அனுப்பி, குப்பை குப்பையாகக் கொட்டி உருவாக்கி வைத்த மலின ரசனை... அந்த ரசனை வட்டத்திலிருந்து மீள முடியாமல் அதற்கே எழுதித் தள்ளுகிற நகல் எழுத்தர்கள்—
இந்த நச்சுச் சக்கரத்தை வாழ்க்கை ஆட்டம் காணவைக்கிறது.
அது எப்படி?
வாசகன் என்பது மக்கள் திரள்தான். படித்த மக்கள். இவர்கள்தான் வணிக இதழ்களின் சந்தை.
இந்தப் படித்த மக்கள்— உத்தியோக வர்க்கம்— வணிக இதழ்களின் ரசனையில் ஊறிக் கிடந்தாலும், அவரவர் சொந்த வாழ்க்கையை சொந்த வழியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
சொந்த வாழ்க்கையின் அனுபவங்கள் கற்றுத் தருவதோ... வேறு வகையான விஷயம்.
சொந்த வாழ்க்கை என்பது சமூக வாழ்க்கை. சம்பளம், பஞ்சப்படி, டவுன் பஸ் கட்டணம், டெலிவிஷன்— வரி உயர்வு இவற்றோடு சம்பந்தப்பட்ட வாழ்க்கை.இந்த வாழ்க்கை முறையில் நேர்கிற நெருக்கடிகள், இந்த மக்களை அணி திரட்டுகின்றன. ஆர்ப்பாட்டம் நடத்த வைக்கின்றன. அரசை எதிர்த்துப் போரிட வைக்கின்றன.
போராட்டம் எனும் அக்னி வேள்வியில் புரண்டெழுகிற அனுபவங்கள். பத்திரிகைகள், இலக்கியம் குறித்த விஷயங்களை புதிய கண்ணோட்டத்தில் பரிசீலிக்க வைக்கின்றன.
விளைவு?
“வர வர... இந்தப் பத்திரிகையெல்லாம் குப்பையாயிருச்சு சார். படிக்கிறாப்லே ஒன்னுமில்லே.”
“ஏதோ... பழக்க தோஷத்துலே வாரா வாரம் வாங்கிப் புரட்டுறோம். புதுசா ஒன்னுமில்லே. ரொம்பச் சலிப்பா இருக்கு சார்...”
“லைப்ரரியிலே மெம்பராயிட்டு இந்தச் சனியன் பிடிச்ச குப்பைகளையெல்லாம் நிறுத்திரலாம்னு நெனைக்கேன் சார்.”
— இப்படிப்பட்ட குரல்கள் ஒன்றல்ல ரெண்டல்ல... பல்லாயிரமாகின்றன. இது என்ன குரல்கள்?
சந்தை சலனமடைகிறது. சொந்த வாழ்க்கையில் பெற்ற அனுபவ வெளிச்சத்தில் சந்தை புதிதாகச் சிந்திக்கத் துவங்கிவிட்ட துல்லியமான அடையாளம்.
இந்த அடையாளம் வணிக இதழ்களின் விற்பனைச் சரிவில் தெளிவாக முகம் காட்டும். வணிக இதழ்கள் தன் உயிர்ப்புக்கான போராட்டத்தை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம்.
அப்போராட்டத்தின் அடையாளமாய் சில நிகழ்வுகள்.
வணிக இதழ்களிலும் சில அசல் சிறுகதைகள்.நகல் எழுத்தர்களை வெட்கிக் கூச வைக்கிற அசலான சிறுகதைகள். வாழ்க்கையின் முழுமைக் குரலாக சில நல்ல சிறுகதைகள்.
புதுமைப்பித்தன்— கு. அழகிரிசாமி போன்ற சிறுகதைச் சிற்பிகளின் இன்றைய வாரீசுகளின் சிறுகதைகள் வணிக இதழ்களிலும் இடம் பெறுவது இப்படித்தான்.
ஜெயகாந்தன் போன்ற போர்க் குணமிக்க படைப்பாளிகளுக்கு வணிக இதழ்களில் அரியாசனம் கிடைத்ததை யாரும் மறந்துவிட முடியாது.
இப்படி ஒரு பக்கம் நிகழ்கிறது என்றால்... மறுபக்கம் சரித்திரம் அறுபடாமல் தொடர்வதைப் போலவே, இலக்கியத் தரமிக்க வாழ்க்கைச் சித்திரமாக சிறுகதைகளைப் படைத்து வழங்குகிற செம்மலர், சிகரம், தாமரை போன்ற முற்போக்குச் சிறு பத்திரிகைகள்.
சரி... நகல் கதைகள் பெருகிப் போன சூழல்களுக்கு மத்தியில் அசல் சிறுகதைகளும் படைக்கப்படுகின்றனவா? புதுமைப்பித்தன் வாரீசுகள் உண்டா? கு. அழகிரிசாமி விட்டுச் சென்ற விதைகளிலிருந்து எழுந்த விருட்சங்கள் உண்டா?
எங்கே...? எப்படி வாழ்கின்றன? அது ஒரு தனிப் பாதை வளர்ச்சியா?