உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/005

விக்கிமூலம் இலிருந்து

5. இலக்கிய வெட்டுக்கிளிகளாக
இருண்மை வாதிகள்

ரோக்கியமான சிலிர்ப்போடும், ஆர்வப்பெருக்கோடும், யதார்த்தமான வாழ்க்கையை கற்றுணர்ந்து, கலாபூர்வமாக எழுதலாமே என்கிற அக்கறையோடும் சாளரங்களைத் திறந்து வெளியே வருகிற எழுத்தாளர்கள், பிள்ளை பிடிக்கிற பில்லி சூன்யக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

‘சற்று உண்மையாக எழுதலாமே’ என்கிற புதிய முனைப்புகளோடு மொட்டுவிடும் அரும்புகள், இந்தப் பில்லி சூன்யக்காரர்கள் கண்ணில் பட்டுவிட்டால் போச்சு. நாசக்காடு பண்ணிவிடுவார்கள்.

யார் இந்தப் பில்லி சூன்யக்காரர்கள்? ‘நவீன இலக்கியம் முழுவதற்கும் தாமே குத்தகைதாரர்கள்’ என்று நினைப்பவர்கள். ‘இலக்கியத்துக்காகவே இலக்கியம் படைத்து, இலக்கியமாய் வாழ்ந்து, இலக்கியமாய் மண்டையைப் போடுவதாக’ தம்பட்டம் போடுவார்கள்.

குமுதத்தை வெறுப்பார்கள்; செம்மலரையும் கண்டு பயந்து வெறுப்பார்கள். இது ஒரு முரண்பாட்டுக் கும்பல்.

‘அதி நவீன இலக்கிய மூலஸ்தானம்’ என்று சொல்லிக் கொள்கிற இவர்கள், மனுச மக்களுக்கான இலக்கியம் படைப்பதையும் ஏளனம் பண்ணுவார்கள். தனிமனித அராஜகமே பாதையாகக் கொண்ட இந்த இருண்மைவாதிகள் ‘கசட தபற’, ‘எழுத்து’ போன்ற இதழ்வகையைச் சேர்ந்தவர்கள். புரியாத இலக்கியம் படைப்பதே மேதாவித்தனம் என்று கருதுகிற புண்ணியவான்கள்.

இந்தப் புண்ணியவான்களிடம் போய்ச் சிக்கினால்... அவ்வளவுதான். “காஃப்காவைப் படிச்சிருக்கீயா? டி.எஸ். எலியட்டை படிச்சியா? ஹெமிங்வே படிச்சியா? நீட்ஷே? மார்க்யூஸ் படிக்கலே?”

அப்பாவித்தனமாய் 'இல்லையே' என்பது போல் வெள்ளந்தியாய் தலையை யாட்டி வைப்போம். அவ்வளவுதான்; தொலைந்தது. நம்மை ஒரு புழுவைப்போல் ஏளனமாகப் பார்ப்பார்கள். வாயில் நுழையாத வெளிநாட்டுக் ‘கடாமுடா’ பெயர்களைச் சொல்லியே நம்மை மிரட்டுவார்கள்.

அரண்டு போய் கிடக்கிற நம்மிடம் பேச ஆரம்பித்து விடுவார்கள். பேச்சு என்றால் மர்மப் பேச்சு, பில்லி சூன்யக்காரனின் புரிபடாத மந்திர உச்சாடனம் போல.

“சிறுகதைங்குறது ஒரு கலை. அரூபக் கலை. அடிமனசுலே— கனவுலே— பிரக்ஞை தவறுன நெலையுலேவர்ற படிமங்களாலே ஆன கலை. சிறுகதைங்குறது, கதையில்லே, வெறும் கதையில்லே. வெறும் சம்பவங்களைக் கோர்த்துக் குடுக்குறது சிறுகதையில்லே. அது வேற. ரொம்பப் பெரிசு. உன்னதமானது. மன தரிசனம். உள்மன உலகப் படிமம். கணநேரப் பரவசக் குறியீடு.”

நம் தலை சுற்றத் துவங்கிவிடும். கிறுக்குத்தனம் போலத் தோன்றும். மகத்தான அறிவாளி போலவும் தோன்றும். ஒரு இழவும் புரியாது.

தப்பித்து ஓடவும் முடியாது. மனசு பயப்படும். பில்லி சூன்யக்காரனிடம் மாட்டிக் கொண்டாயிற்று. விட்டு விலகி ஓடினால்... ‘ரத்தம் கக்கிச் சாவாய்’ என்பது போல அச்சுறுத்துவார்கள்.

“நீங்க சொல்ற ஆளுக எல்லாம் அயல்நாட்டாள்களாக இருக்கே... தமிழ்லே யாருமில்லியா?” என்று நாம் கேட்டால்... அவர்கள் நம்மை ஒரு தினுசாகப் பார்ப்பார்கள்.

“தமிழ்லே அப்படி யாரும் முயற்சி பண்ணலே. அந்த லெவலுக்கு தமிழ்லே ஏற முடியாது. சொல்லணும்னா... மௌனியைச் சொல்லலாம். கொஞ்சம் பரவாயில்லே. லா. ச. ரா.வைச் சொல்லலாம்... ஏதோ கொஞ்சம் தேவலை.”

அவர்கள் சுழற்றியடித்த அடியில் பொறி கலங்கிப் போய்விடுவோம்.

“மௌனியா? அவர் கதைகளைப் படிச்சேனே. ஒன்னும் புரியலியே.”

“எதுக்குப் புரியணும்? புரியவேண்டும்ங்குறது முக்கியமா? படிக்கிறப்போ மனசுலே வர்ற படிமம்தான் முக்கியம். புரிஞ்சுட்டா... அது இலக்கியமில்லே.”

“யதார்த்தமா எழுதுனா... ஏன் புரியாது?”

“யதார்த்தம்ங்கிறது காலனியாதிக்கத் தொழுநோய். யதார்த்தம்ங்கிறதே அபத்தம். உங்களுக்கு ஸ்ட்ரெக்சுரலிசம் தெரியுமா? எக்ஸிஸ்டென்ஷியலிஸம்? சர்ரியலிஸமாச்சும் தெரியுமா? தெரியாதா? அப்ப நீங்க தேறமாட்டீக.”

கேட்கிற நமக்கு ‘பக்’கென்று ஆகிவிடும் எல்லாம் தலைகீழாய்த் தெரியும். சுழலும். ஒரே குழப்பமாகிவிடும். கண்ணைக்கட்டி முள்காட்டில் விட்டதைப்போல இருக்கும்.

இந்த இருண்மைவாதிகள் திடுக்கிட வைக்கிற அதிரடிப் பேச்சுகளாலேயே மர்ம விளையாட்டுகளை நிகழ்த்துவார்கள்.

வணிகத்தரமான நகல் சிறுகதைகளை ‘வெறும் குப்பைகள்’ என்று ஒதுக்குவதைப்போலவே, முற்போக்குச் சிறுகதைகளையும் ‘வெறும் சருகுகள்’ என்று ஒரே போடாகப் போட்டு நொறுக்கி விடுவார்கள்.

பில்லி சூன்யக்காரன் அச்சுறுத்தலான பேச்சுகள் மூலமாகச் சூழலையே திகிலூட்டி கிலியடையச் செய்வதைப் போலவே... இவர்களும்.

‘இலக்கியத்திற்கு ஒரு விளைவு உண்டு. சமூகப் பயன்பாடு உண்டு’ என்பதையே இவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ‘சிறுகதை இலக்கியம் சமூக வளர்ச்சியை கலாபூர்வ முழுமையோடு பிரதிபலிப்பதன் மூலம் சமூக மாற்றத்திற்குப் பயன்பட வேண்டும்’ என்கிற ஆரோக்கியமான கோட்பாட்டையே பரிகசித்துப் பேசுவார்கள்; ஏளனப் படுத்துவார்கள்.

“சிறுகதையில் சோற்றுப் பொட்டலம் வருமா? சிறுகதை புரட்சிக்கான வெடிகுண்டை உருட்டித் தருமா? சிறுகதைகள் பேக்டரியிலே போய் சமூக வளர்ச்சிக்குப் பாடு படுமா?” என்றெல்லாம் நக்கல் அடித்து, குரூரமாகக் கிண்டல் பண்ணுவார்கள்.

ஆரோக்கியமான மக்கள் இலக்கியம் படைக்கிற அற்புதக் கனவுகளோடு அரும்புகிற இளம் படைப்பாளிகளை, இந்த இருண்மைவாத வெட்டுக்கிளிகள் கத்தரித்து விடுகிற யத்தனிப்போடு மேய ஆரம்பித்து விடுவார்கள்.

இந்த இருண்மை வாதிகளுக்கு ஒரு வரலாறு உண்டு. இன்றளவும் இவர்களது இருப்புக்கான சமூகத் தளமும் உண்டு.

மிகப் பெரிய அறிவாளிகளைப் போலவும், ஆய்வாளர்களைப் போலவும், உலக இலக்கிய விபரம் முழுவதையும் உள்ளங்கைக்குள் அடக்கி வைத்திருக்கிற மேதாவிகளைப் போலவும் பகட்டி பாவலா செய்கிற இந்த இருண்மைவாதிகள், ‘இலக்கியம் இலக்கியத்திற்காகவே’ என்ற கட்சிக்காரர்களைப் போல தோற்றமளிப்பார்கள்.

நம்பிக்கை வறட்சி— பீதி— கிலி— விரக்தி— மரண மோகம் போன்ற சைத்தான் உணர்வுகளை ஏற்படுத்துகிற சாதனமாகவே இலக்கியத்தைப் பாவிப்பார்கள்.

ஏன்?

எதிர்காலம் அவர்களுக்குச் சம்மதமான விதத்தில் மலரப் போவதில்லை என்கிற பயம்தான்; திகில்தான்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற பதாகையோடு உலகில் முதலாளித்துவம் உதயமாகிற காலத்தில் சுதந்திரப் பேரார்வமிக்க அறிவு ஜீவிகள், ‘ஆஹா ஓஹோ’ என்று வரவேற்று ஆரவாரித்தார்கள். அதன் தத்துவக் குரலாகவும், இலக்கிய முகமாகவும் கம்பீரமாக உலா வந்தனர்.

தொழில் முதலாளித்துவம் சமுதாய ஆளுமைக்கு வந்த போது, ‘சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவம்’ என்ற ஜனநாயகப் போர்வையைக் கழற்றியெறிந்துவிட்டு, குரூரமான சுயரூபம் காட்டியது.

அதன் ரூபம், லாபம் மட்டும்தான். லாபமே மூச்சாகவும், லாபமே ரூபமாகவும் கொண்ட அது, சமூக, மனித உறவுகள் அனைத்தையும் லாப நோக்குக்கு உட்படுத்தியது.

காதல், தாய்மை, பாசம், தியாகம், வீரம் போன்ற உன்னதமான விஷயங்களை மட்டுமல்ல, இலக்கியவாதி, கவிஞர், அறிவு ஜீவிகள், கலைஞர்கள் போன்ற தனி அந்தஸ்து கொண்டிருந்தவர்களையும் பணத்தின் அடிமைகளாக— விலைபொருளாக— தரம் தாழ்த்தியது. சமூக உறவுகள் முழுவதையுமே வெறும் நயாபைசா உறவாக— ரொக்கப் பட்டுவாடா உறவாக— மாற்றிவிட்டது.

முதலாளித்துவம் உலக சமுதாயத்தையே லாபம் திரட்டும் சந்தையாக்கியது; சந்தைகளைக் கைப்பற்றுவதற்கான ராட்சஸ முயற்சியாக உலகப் போர் வெடித்தது.

லாபம் ஒன்றிற்காகவே ஆயிரக்கணக்கில்— லட்சக் கணக்கில்— மனிதர்கள் மாண்டார்கள். மரண ஓலம் உலக கீதமாயிற்று.

உலக நிகழ்வின் இந்தப் போக்கில்தான், அறிவுஜீவிகளின் ஒரு பகுதியினர் அதிர்ந்தார்கள். நிலைகுலைந்தார்கள். நம்பிக்கை குலைந்தார்கள். நரம்பு நோயாளிகளைப் போல பலவீனமாய்— பய பீதியில்— அலறினர்.

அறிவுஜீவிகளுக்கென்று இருந்த ‘தனி அந்தஸ்து’ எனும் கிரீடம் நிரந்தரமாக பறிக்கப்படுவதாக உணர்ந்து கதிகலங்கினர்.

மொத்த மக்களும் கூலியடிமைகளாக மாறிப்போனதைப் பற்றிக் கவலைப்படத் திராணியற்றவர்களாகிப் போன இவர்கள், தங்கள் கிரீடம் பற்றி மட்டுமே கிலியடைந்தனர்.

அழகு பூமியாகத் திகழ்ந்த மொத்த உலகமும் பாழ் நிலமாக (வேஸ்ட் லேண்ட்) மாறிவிட்டதாக நீள் கவிதையில் புலம்பினர். மீன் பிடிக்கிற கனவுகளோடு வலையோடு கடலுக்குள் போன கிழவன், எலும்புக் கூடாகக் கரையில் ஒதுங்குவதாக இலக்கியம் படைத்தனர்.

உலக வாழ்க்கையே பிரேதக் கிடங்கு என்றனர். தோல்வி, மரணம், குரூரச் சிதைவு, மனித வக்ரம் இவையே நிஜம் என்றனர். அழகு, காதல், தாய்மை, பாசம், மனிதநேயம், மானுட ஒற்றுமை, மானுட விடுதலை, சமுதாய மாற்றம், சமூக விடியல் இவையெல்லாம் அழகான பொய்கள் என்று ஒதுக்கினர்.

இப்படியொரு நசிவுச் சித்தாந்தத்தோடு இலக்கியம் படைத்த இவர்கள் உள்ளத்தில் இருட்டும், குழப்பமும், சிக்கல் சிடுக்கலான வக்ரமும் இருப்பதால்... இவர்களது சிறுகதைகளிலும் இருண்மைத்தன்மை– புரிதலற்ற குழப்பம்– இயல்பாகவே இருந்தன.

இவர்கள் எதிர்கால சுபிட்சம் என்ற நம்பிக்கையையும் கேலி செய்வதற்கு என்ன காரணம்? முதலாளித்துவத்தைத் தொடர்ந்து நிகழ்கிற சமுதாய மாற்றமான பொதுவுடைமை அமைப்பும், இவர்களது தனி அந்தஸ்து எனும் கிரீடத்தை இல்லாமலாக்கிவிடும் என்கிற பீதி நிறைந்த முன்னுணர்வு தான்.

ஆக... ‘கடந்தகாலம் காட்டுமிராண்டித்தனமானது: நிகழ்காலம் குரூரமானது; எதிர்காலம் வெறும் பொய்யானது’ என்ற நிர்ணயிப்புக்காளாகிப்போன இவர்கள், புரியாத இலக்கியம் படைப்பதன்மூலம் பறிபோன கிரீடத்தை அவர்களாக மனத்தளவில் சூட்டிக் கொள்கிறார்கள்.

புரியாத சிறுகதைகள்தான் இலக்கியத் தரமானது; மற்றவையெல்லாம் மலின இலக்கியம் என்று புறந்தள்ளுகிற இந்த இலக்கிய நோயாளிகளிடம் புதிய எழுத்தாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

‘துஷ்டனைக் கண்டால் தூர ஒதுங்கு’ என்ற பழமொழிப்படி ஒதுங்கியிருப்பது பாதுகாப்பானது.

வாழ்க்கையின் நிகழ் அனுபவங்கள் வாசகத்திரளுக்குப் புதிய விஷயங்களைப் போதிக்கிறது. வணிக இதழ்களால் விஷவட்டமாக உருவாக்கி வைத்த மலின ரசனையை உடைக்கிறது. புதிய ரசனையைத் தோற்றுவிக்கிறது.

அதே வாழ்க்கைதான் சராசரி மனிதர்களை நம்பிக்கை யுள்ளவர்களாக்குகிறது.

அடிமைப் பாரதத்தில் வாழ்ந்து கொண்டே ‘ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ என்று மகாகவி பாரதியை எந்த நம்பிக்கை பாடவைத்ததோ...

வாழ்க்கையின் மொத்தச் சிதைவுகளையும் அனுபவித்துக் கொண்டு, அடுத்தவேளை சோற்றுக்குக்கூட வழியில்லாத ஏழைக் கிழவனை பேரனின் மீது பாசம் கொள்ள வைக்கிற அதே நம்பிக்கை மிகுந்த வாழ்க்கைத் தாகம்—

புண்ணுலகமாய் மாறி—நாறி—சீழ்வழிகிற சமகால வாழ்வில் உழல்கிற முற்போக்குப் படைப்பாளிகள், பொன்னுலகம் குறித்த சொர்க்கக் கனவுகளைப் படைப்பதற்குரிய அதே நம்பிக்கை மிகுந்த சோபிதக் கற்பனைகள்—

மொத்த மனித குலத்தையும் தழுவி வாழவைக்கிறது. வாழ்வுக்காகப் போராடத் தூண்டுகிறது. போர்க் குணத்தை மானுட சுபாவமாக அணிவிக்கிறது.

இந்த மொத்த வாழ்க்கையின் உள்ளும் புறமுமான நிகழ்வுகளையும்— வளர்ச்சித் திசையையும்— கற்று உணர்வதன் மூலம்தான் ஒரு படைப்பாளி சுயமான படைப்பாளியாக மலரமுடியும்.