உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/006

விக்கிமூலம் இலிருந்து

6. காலடி மண்ணில் கண் பதிக்கலாம்

ரோக்கியமான சிலிர்ப்போடு– யதார்த்தபூர்வமான சிறுகதைகளை– கலைத்தரத்தோடு படைப்பது என்ற முடிவோடு புதிதாக நிமிர்ந்து பார்த்தால்...

சமுத்திரமாய் விரிந்து கிடக்கிற வாழ்க்கை. வாழ்க்கையின் ஒவ்வொரு துளியிலும் கதைக்கான கருக்கள் மின்னி டாலடிக்கின்றன. கண்களால் பார்க்கப்படுகிற– காதால் கேட்கப்படுகிற– மனதால் வாசிக்கப்படுகிற எண்ணற்ற செய்திகள், ஏராளமான பிரச்சினைகள், கணக்கற்ற காட்சிகள் எல்லாமே மொத்த வாழ்க்கையின் இணுக்குகள் தான். சகலமுமே கதைகளுக்கான கருக்கள் தான்.

இதில் எதை எடுப்பது, எதைத் தவிர்ப்பது? மேலோட்டமாகப் பார்த்தால், இது ரொம்பச் சாதாரணமான கேள்வி. ஆனால், ஆழ்ந்து யோசித்தால், இதில்தான் ஒரு படைப்பாளியின் அசலான ஆற்றல் வெளிப்படும்.

இலங்கையில் நடந்ததாக பத்திரிகைகளில்– தொலைக் காட்சியில் பார்த்த செய்தியோ– காட்சியோ மனதை ஆழமாகப் பாதித்துவிடக்கூடும். சில இரவுகளின் தூக்கத்தைக்கூடச் சாப்பிட்டுவிடலாம். நிம்மதியற்ற மன உளைச்சல் ஏற்படலாம். வேறு எதைப் பற்றியும் யோசிக்க விடாமல், மனசின் சகல மூலைகளையும் ஆக்ரமித்து விடலாம்.

‘இதையே ஒரு கருவாக வைத்து ஏன் ஒரு கதை எழுதக் கூடாது’ என்ற சிந்தனை நமக்குள் மாறிமாறி ஓடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்புறம் என்ன செய்வோம்?

நம் ஞாபகப் புதைகுழிக்குள் பதுங்கிக் கிடக்கிற பொது அறிவுக் களஞ்சியத்தைக் குடைய ஆரம்பித்து விடுவோம்.

இலங்கை மக்களின் முகங்கள்... மூக்குகள்... உடைகள்... தொப்பிகள்... பெண்களின் முகச்சாயல்கள்... நடை இயல்புகள்... சிறப்புத் தாவரங்கள்... மண்ணின் தன்மைகள்... நதியின் பெயர்கள்... எல்லாமே ஒவ்வொன்றாக சிறகு முளைத்து அகவானில் பறந்து வரும்.

நமக்கே நாம் சபாஷ் போட்டுக் கொள்வோம், ‘அடடே, நமக்குள்ளே இம்புட்டு விஷயங்கள் கிடந்துருக்கே.’

“அப்ப... எழுதிப் போட வேண்டியதுதான்.”

கதையை எழுதி முடித்துவிட்டுப் பார்த்தால்... நமக்கே ரொம்ப திருப்தியாக இருக்கும். பெருமிதமும் பொங்கி வழியும்.

தமிழ்ச் சூழலுக்கு புதிய சம்பவம். புதிய திசை புதிய முடிவு. எல்லாம் சரி... ஆனால், கதை தோற்றுவிடும். படித்தவர்கள், ‘புதுசா இருக்கு. ஆனா... நல்லாயில்லே’ என்பார்கள்.

நமக்கோ ஆத்திரம் பொங்கி வரும்.

ஏன் ‘நல்லால்லே’ என்கிறார்கள்?

சிறுகதைக்குரிய சகல இலக்கணங்களும், வடிவ நேர்த்தியும், உள்ளடக்கப் புதுமையும் சரியாக அமைந்த பின்னும், ஏன் ‘நல்லால்லே’ என்ற பதிலைச் சம்பாதிக்கிறது?

ஏனெனில், இம்மாதிரிக் கதைகளில் கதை இருக்கும். கலை இருக்காது. அறிவு ரீதியான உண்மைகள் இருக்கும். அனுபவத்தில் ஊறி நனைந்த உணர்ச்சிகள் இருக்காது.

ஒரு கதையை கலாபூர்வமாக்குகிற விஷயம், அந்த மன அனுபவ உணர்ச்சி வெளிப்பாடுதான்.

புரண்டு உருண்டு, கட்டித் தழுவி, அழுது சிரித்த மண்ணையும், மக்களையும், அனுபவங்களையும் படைப்புகளில் பிரதிபலிக்கிற போதுதான்... படைப்பாளியின் ரத்தத்தில் உறைந்து கிடக்கிற அணுக்களே சொற்களாய் வந்து உட்காரும். படைப்பாளியின் ஆழ்மனப் பதிவுகள் அவனுக்கே தெரியாமல் எழுத்தில் வெளிப்பட்டு, கலை அழகாய் கம்பீரம் பெறும். வீர்யம் பெருகும்.

படைப்பாளியையே அசர வைக்கிற படைப்புகள் பிறப்பது இப்படித்தான். குறிப்பிட்ட ஒரு படைப்பு, பலரால் பாராட்டப்படுகிறபோது— அதிலுள்ள பல்வேறு சிறப்புகளைக் குறிப்பிட்டு வியாக்யானங்கள் செய்கிறபோது... அந்தக் கதையை எழுதிய எழுத்தாளனுக்கே வியப்பு வரும்.

‘நம்ம கதைக்குள் இத்தனை அருமைகளா இருந்துருக்கு?’ என்று ஆச்சர்யம் வரும். படைப்பின் வெற்றி என்பது இதுதான். அனுபவம் சார்ந்த மனஉணர்ச்சிகள் வெளிப்படக் கூடிய வகையில் நெருக்கமான— பரிச்சயமான— வாழ்க்கைச் சூழலிலிருந்து கருவைத் தேர்வு செய்வதில்தான், ஒரு படைப்பாளியின் வெற்றியும் தகுதியும் வெளிப்படும்.

படைப்பாளியின் உள்ளாற்றல் முழு வீர்யத்துடன் பாய்ச்சலோடு சீறி வெளிப்படும்.

நாடு விடுதலையாகி இத்தனை ஆண்டுகளாகியும் கிராமங்களுக்குச் சாலை வசதிகள் செய்யப்படாமலிருக்கிறது என்ற செய்தியைச் சொல்வதற்கு ஒரு கதை எழுதுவது என்று முடிவு செய்தேன்.

அப்போது எங்கள் ஊருக்கு ரோடு வேண்டும் என்ற கோரிக்கைக்காக ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்தக் கோரிக்கையையே கதையாக்குவது என்று முடிவு செய்து... யோசித்துப் பார்க்கிறேன்.

களமாக எனது கிராமம். கருப்பொருளாக ஒரு விவசாயத் தொழிலாளியின் மனைவி பிரசவம். பிரசவச் சிரமம்.

முழுக்க முழுக்க செட்டப் செய்து, கட்டமைத்த சிறுகதை, அது. செம்மலரில் பிரசுரமாகிவிட்டது. பிரசுரமான பிறகு, தோழர்களிடமிருந்து ஏகப்பட்ட பாராட்டுக் கடிதங்கள். சாலை வசதியின்மையின் சிரமங்களை உணர வாய்ப்பில்லாத நகரவாசிகளிடமிருந்துகூட நிறைய பாராட்டுக் கடிதங்கள். அவர்கள் நெஞ்சையும் தொட்டு அசைத்திருந்தது, அந்தக் கதை.

அம்மாதம் தமிழில் வெளியான கதைகளிலேயே சிறந்த கதை என்ற முத்திரையோடு ‘இலக்கியச் சிந்தனை’யின் பரிசையும் பெற்றது.

இதெல்லாமே என்னைத் திகைக்க வைத்தது. இந்த வெற்றி ரொம்பக் காலம் என்னை ஆச்சர்யப்படுத்தியது. ‘இதில் மட்டும் அப்படி என்ன சிறப்பு அமைந்துவிட்டது’ என்ற விஷயம் எனக்குப் பிடிபடவே இல்லை.

பாராட்டுக்கள் சந்தோஷப்படுத்தினாலும், படைப்பாளி என்ற முறையில் எனக்குள் ஒரு குழப்பம்.. 'இந்தக் கதையின் வெற்றிக்குக் காரணமான தனித்துவம் எது?'

எனது அம்மாவின் கடைசிப் பிரசவம் இக்கதையில் உள்ள மாதிரியே சிரமப்பட்டது. ரோடு இல்லாமல், டாக்டர் வர இயலாமல், மருத்துவமனை கொண்டு போகவும் வழியில்லாமல் நேர்ந்த சிரமத்தில்தான் பிரசவம் சிக்கல்பட்டு, நோயாளியாகி படுத்த படுக்கையாகிப் போனார்கள்.

ஆனால் அப்போது எனக்கு வயது ஆறு அல்லது ஏழு. அறிவுபூர்வமாக சம்பவங்களைப் பரிசீலனை செய்து ஞாபகத்தில் குறித்துக் கொள்கிற வயதல்ல, அது. மனக் கலக்கத்தோடு பார்த்திருப்பேன். அழுகையும் பதற்றமுமாய் உணர்ந்திருப்பேன்.

அந்த வயசில் உணர்ச்சி ரீதியாக மனசின் ஆழத்தில் பதிந்துவிட்ட அனுபவ உணர்வுகள்தான், மேற்கண்ட கதையான ‘கொலை’யில் என்னையும் அறியாத விதத்தில்— உள்ளாற்றலாக— வெளிப்பட்டிருக்கிறது.

அந்த ஆழ்மன உணர்வனுபவக் கசிவுதான், ‘கொலை’ என்ற கதையின் கலைத்தரமாகியிருக்கிறது. இதுதான், வெற்றியின் சூட்சுமம்.

இதற்கு நேர் எதிரானதோர் அனுபவம்.

வலுவான கதையமைப்பு, சிறுகதைகளில் பொதுவாக தனித்தன்மையான குணங்கள் கொண்ட பாத்திர வார்ப்பு இருப்பதில்லை என்று சொல்வார்கள். ஆனால், அந்தக் கதையில் ஜானகி ஒரு தனிக் குணம் கொண்டிருந்தாள். நல்ல நுட்பமாக சமூகப் பார்வை. மிகப் புதுமையான உள்ளடக்கமும் கூட. ஆயினும் கதை வெற்றி பெறவில்லை.

ஏனெனில் கலை இல்லை.

‘நிஜத்தின் நிறம்’ என்ற கதைதான். அது சிரமப்பட்டு, எனது தொழில்நுட்பம், வித்தைச் சாமர்த்தியம் முழுவதையும் பயன்படுத்தி எழுதிய அந்தக் கதையில் ஏன் கலையில்லாமல் போய்விட்டது?

பக்கங்களைச் சாப்பிட்ட அந்தக் கதை, வாசக மனசுகளை நெருங்குகிற அளவுக்குக்கூட கலைத்தரம் அமையாமல் போனதேன்?

மன அனுபவம் சார்ந்த உணர்வுண்மை இல்லாமல் போனதுதான், காரணம். உணர்வுண்மை கரைந்து வெளிப்படாத சிறுகதையில், கலை உண்மை எங்கிருந்து வரும்?

கதையின் களம் சென்னை. உத்தியோக வர்க்க மனிதர்கள், அவர்களுக்குள் வருகிற காதலும், சமூகப் பிரச்னையும். என் அறிவால் மட்டுமே உணரப்பட்டிருந்த விஷயங்கள். மனஉணர்ச்சி அனுபவமாக உறைகிற அளவுக்கு நெருக்கமாய் மனசோடு ஒட்டி உராய்ந்த விஷயங்களல்ல.

ஆக, கதையில் எனது மொழி சார்ந்த சாமர்த்தியம்தான் வெளிப்பட்டிருந்ததே தவிர, உள்ளுணர்வில் ஊறிக் கனிந்த உள்ளாற்றல் வெளிப்படவில்லை. அசலான மன அனுபவம் வெளிப்படவில்லை.

ஒரு சிறுகதை படைப்பு இலக்கியத் தகுதி பெறுவதே அதன் கலாபூர்வ நேர்த்தியில்தான். கலாபூர்வ நேர்த்தி என்பது உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுகிற உணர்வனுபவங்களால்தான் நிர்ணயம் செய்யப்படுகிறது.

நமது சிறுகதைகள் கலைத்தரமானதாக அமைய வேண்டுமானால், விபரம் தெரிந்த நாட்களுக்கும் முந்தைய ஆழ்மனப் பதிவுகள் கசிந்து வெளிப்படக்கூடிய வாய்ப்புள்ள பழக்கப்பட்ட களத்திலிருந்தும்— மனிதர்களிடமிருந்தும்—வாழ்வியல் சம்பவங்களிலிருந்தும் கருவைத் தேர்வு செய்ய வேண்டியதாகிறது.

இப்போது அடிப்படையான இன்னொரு பிரச்னை முன்வந்து நிற்கிறது.

நமக்கு மட்டும் பரிச்சயப்பட்டிருக்கிற களமும், வாழ்க்கை முறைகளும் கதைகளாக வெளிப்படுகிறபோது— இந்தக் களத்திற்கும் வாழ்க்கை முறைகளுக்கும் பரிச்சயமாகாத தமிழ்நாட்டின் பிற்பகுதி வாசகர்கள் உள்வாங்கிக் கொள்வார்களா? முடியுமா?

இந்தச் சந்தேகம் படைப்பாளியின் மனசை நியாயமாகவே அலைக்கழிக்கக்கூடும். இந்த அலைக்கழிப்பும், சந்தேகங்களும் படைப்பாளியை பல்வேறு தவறுகளுக்கு இட்டுச் செல்லும்.

சம்பவங்களின் தனித்தன்மையை உணர்த்த வேண்டுமே என்கிற உந்துதலில், தேவையற்ற நிகழ்ச்சி வர்ணனையை திணிக்க வேண்டியதாகிவிடக் கூடும். வார்த்தைச் செறிவு இல்லாமல் அளவுக்கும் அதிகமாக சொற்களைப் பிரயோகித்துவிடக்கூடிய தவறு நேரக்கூடும்.

இம்மாதிரியான சின்னச் சின்ன தவறுகள், மொத்தப் படைப்பின் கலைத்தன்மையை ஊனமாக்கிவிடும். வாசிப்போட்டத்தைத் தடுத்துச் சலிப்பூட்டிவிடும்.

இம்மாதிரியான தவறுகளை இழைக்கும்படி படைப்பாளியை ஆக்குவது, இந்த அலைக்கழிப்புகளும், சந்தேகமும் தான்.

தேவையேயில்லை.

இலக்கியம் என்பதே உணர்வு ரீதியான தொடர்புச் சாதனம்தான். தனித்துவமிக்க நமது களமும், வாழ்க்கை முறைகளும் சிறுகதையாகிற போது, அதன் கலாபூர்வ நேர்த்தியே சகல பகுதி மக்களின் பொதுமையான அனுபவமாக அவற்றை அறிமுகம் செய்துவிடும். மனசின் ஆழத்தில் கவ்விப் பிடித்துவிடும்.

களமும், வாழ்க்கைச் சம்பவங்களும் மட்டுமேயல்ல சிறுகதை என்பது. அதன் சாராம்சமான உணர்வு மட்டும் தான் சிறுகதை. வாசித்த சிறுகதை வாசகனின் மனசில் பதிவதும், நிலைப்பதும், விளைவு நிகழ்த்துவதுவும் அந்தச் சாராம்சமான உணர்வுதான்.

அந்த உணர்வு, உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது. அதனால்தான் உலகம் முழுக்க வெவ்வேறு தேசங்களில்— வித்தியாசப்பட்ட கலாச்சாரச் சூழல் கொண்டகளங்களில்— உதயமான சிறுகதைகள், மொழி மாற்றம் செய்யப்பட்டு நம்மிடம் வருகிறபோது... நம்மால் அவற்றில் கரைய முடிகிறதே... அது அந்த உணர்வுப் பொதுமையினால் தான்.

ஒரு படைப்பாளி எந்தளவுக்கு தன்னுள் கரைந்த விஷயங்களை படைப்பாக்குகிறானோ... அந்தளவுக்கு அவை கதையின் சாராம்ச உணர்வை வாசக நெஞ்சில் ஆழப் பதிக்க முடிகிறது.

தகழி சிவசங்கரம்பிள்ளை எழுதிய புகழ் பெற்ற நாவல், ‘செம்மீன்’. இந்த நாவலை எழுதுவதற்கு அவர் எடுத்துக் கொண்ட நாட்கள் மொத்தம் இருபத்திரண்டு மட்டுமே!

அன்றாடம் அவர் பார்த்துப் பழகிய வாழ்க்கையைப் பற்றி எழுதியதால், விறுவிறுவென்று புயல் வேகத்தில் எழுதி முடித்துவிட்டார். அத்தனை விரைவாக எழுதி முடிக்கப் பட்டதால்... அது சராசரிப் படைப்பாகி விடவில்லை.

அது கேரள அரசின் சாகித்ய அகாடமி பரிசையும், மத்திய அரசின் சாகித்ய அகாடமி பரிசையும், இன்னும் பல விருதுகளையும் வாங்கிக் குவித்தது. தமிழக மக்களிடம் கூட ‘செம்மீன்’, உயர்ந்த செல்வாக்கையும், பரந்துபட்ட வரவேற்பையும் பெற்றது.

அவரது ரத்தமும் சதையுமான அசலான வாழ்க்கையை அப்படியே எழுதியதால்... விரைவாக எழுதப்பட்டிருந்தும், கலாபூர்வச் சிறப்புகளோடு கம்பீரமாக நின்றது.

அந்த நாவல், முழுக்க முழுக்கக் கடலோர மக்களின் மீன் பிடிக்கிற தொழில்— அவர்களிடையே நிலவும் மரபார்ந்த நம்பிக்கைகள், உணர்வுகள் பற்றியதுதான். கடலும், கடல் சார்ந்த வாழ்க்கையும் பரிச்சயமேயில்லாத மக்களிடமெல்லாம், மீனவ மக்களின் அவலங்களையும், மனத்தவிப்புகளையும், நெருக்கடிகளையும், நம்பிக்கை களையும் அறிமுகம் செய்து வைக்க மட்டுமல்ல, ஆழப்பதிக்கவே முடிந்தது அந்த நாவலால். கறுத்தம்மாவும், அவளது மெல்லிய காதலும், காதலுக்குச் சம்பந்தமற்ற மணவாழ்வும், அது சார்ந்த அவள் மனச்சோகமும் இன்னும் நம் நெஞ்சில் அப்படியே உயிர் வாழ்கின்றன.

மாக்ஸிம் கார்க்கியின் ‘பிரம்மச்சாரியின் டைரி’ என்ற நாவலின் மூலமாக அக்கால ரஷ்ய வியாபாரிகளின் மனப்போக்கில் தலை தூக்கிய ஜனநாயக உணர்வையும், அதற்குக் காரணமாயிருந்த சமூக நிலவரத்தையும், அக்கால ரஷ்ய மக்களின் வாழ் நிலையையும் நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.

மாக்ஸிம் கார்க்கியின் இத்தாலிச் சிறுகதைகளை விட, அவரின் ‘ஆர்த்தமனோவ் சகோதரர்கள்’ நாவலும், ‘பிரம்மச்சாரியின் டைரி’ நாவலும் மிகச் சிறந்த— உயர்ந்த கலைப்படைப்புகளாக கம்பீரமாக நிமிர்ந்து நிற்பதற்குக் காரணம், அவற்றின் கலாபூர்வ நேர்த்திதான். அந்தக் கலாபூர்வ நேர்த்தியை சாத்தியமாக்கியது, அந்த நாவல்களின் களமும் மக்களும், மாக்ஸிம் கார்க்கியின் அசலான வாழ்க்கையோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை என்பதால்தான்.

‘யான் பயின்ற பல்கலைகழகம்’ என்ற கார்க்கியின் சுயசரிதையில் இந்த உண்மையை உணர முடிகிறது. சிறுவனாக இருந்த கார்க்கியை வளர்த்த தாத்தா சாயப்பட்டறை வியாபாரியாகத்தான் வாழ்ந்திருக்கிறார். அந்த வியாபாரத்தின் நொடிப்புகளும் வீழ்ச்சிகளும் அவரை அலைக்கழித்திருக்கிறது.

அதனால்தான் வியாபாரிகளை பாத்திரங்களாகக் கொண்ட அவரது படைப்புகள் யாவும் அவருக்குப் புகழ் சேர்த்திருக்கின்றன.

ஆகவே, சொந்த மன அனுபவங்களை— தனித்துவமான சொந்தக் களத்தை— வாழ்க்கைச் சூழலைப் படைப்பாக்குகிற போது... மற்ற பகுதி மக்கள் இதை உணர்ந்து கொள்வார்களோ என்கிற சந்தேகத்திற்கும் அலைக்கழிப்புக்கும் இடம் தர வேண்டியதேயில்லை.

விவசாயத் தொழிலாளிப் பெண் காட்டிலும் உழைத்து, வீட்டிலும் உழைத்து— உழைப்பின் அலுப்பால் குடும்பச் சண்டையாக மாறிச் சமனமடைகிற விஷயத்தை, கிராமத்தைத் தளமாகக் கொண்டு நான் ‘யுகமாய் நகரும் பொழுது’ என்று கதையாக்கினேன். கல்கியில் வந்த கதையைப் படித்துவிட்டு, கல்லூரிப் பேராசிரியை ஒருவர் உளப்பூர்வமான மனக்கிளர்ச்சியோடு பாராட்டினார்.

அவரிடம் நான் அசட்டுத்தனமாகக் கேட்டேன். “கூலி விவசாயத் தொழிலாளியான கிராமத்துப் பெண்ணின் பிரச்னை... உங்களுக்கு எப்படி ‘ரீச்’ சாயிற்று?”

அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்: “களமும் வேலையும் தானே வேற. பிரச்னையும் உணர்வும் ஒன்றுதானே?”

எனக்குள் அன்றுதான் நிறைய வெளிச்சம் கிடைத்தது. நிறைய விஷயம் புரிந்தது.

‘படைப்பிலுள்ள உண்மையின் வீர்யமே கலாபூர்வமாகி, சகல நெஞ்சங்களின் உள் உணர்வுகளை உசுப்பி விடுகிற உயர்ந்த படைப்பாகி விடுகிறது’ என்ற நிஜம் எனக்குள் விளங்கியது.

உயர்ந்து கம்பீரமாய் நிற்கும் தூரத்து மலைத்தொடர்களைப் பார்த்துக் கொண்டு, படைப்பில் அவற்றைக் கொண்டுவர முடியாமல் திணறி, பொய்யாகச் செய்வதைவிடவும், காலடிகளைத் தழுவிக் கொண்டு வற்றாது ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை நீரோடைகளை உற்றுப் பார்ப்போம்; அதில் கரைந்தோடுகிற மண் துகளையும், உருண்டு நகர்கிற கூழாங் கற்களையும் நுட்பமாகக் கவனிப்போம். அதைப் படைப்பாக மாற்றித் தமிழுக்கு வழங்கலாம்.

இதுதான்... யதார்த்த இலக்கியம். பொய்யான கற்பனைகளைத் தவிர்த்து, அசலான வாழ்க்கையின் உள்முகங்களை- அதன் ஒவ்வொரு நுண்ணிய அசைவுகளை- சிறுகதைகளாக மாற்றினால்... அதுவே வாழ்க்கையை முன் நகர்த்துகிற முற்போக்கு இலக்கியமாகப் பரிமாணம் கொள்கிறது.

வாழ்க்கையின் மறுபடைப்புதான் இலக்கியம். நிகழும் வாழ்க்கையை அப்படியே எழுத்தில் வடிப்பது (புகைப்படம் எடுப்பது போல...) மட்டுமல்ல, வாழ்க்கையின் உள்ளும் புறமுமாய் தழுவி நிற்கும் முழுமையை (ஓவியம் போல) வரைவதுதான் மறுபடைப்பு. ஓவியத்தில் உருவம் மட்டும் இருக்காது. உணர்வும் இருக்கும். ஆத்மாவும் ததும்பும்.

நாம் வாழ்ந்த— வாழ்ந்து கொண்டிருக்கிற— நம் வாழ்க்கைச் சூழலில் இருக்கிற அனுபவங்களை, அது சார்ந்த கருத்துணர்வோடு படைப்புகளாக மாற்றுகிறபோது... மீண்டும் ஒரு கேள்வி எழுகிறது.

வாழ்க்கையில் நிகழும் சகலமும் சிறுகதைக்குரிய கருவாகி விடுமா?

விடுவதில்லை.

கருவாகத் தேர்வு செய்வதற்குத் தகுதியுள்ளது எது, இல்லாதது எது என்பதை தீர்மானிப்பதில்தான் ஓர் எழுத்தாளனின் ஆளுமையின் முழுமை வெளிப்படும்; வர்க்கச் சாய்மானம் புலப்படும்; எழுத்தாளனின் தத்துவ நோக்கு வெளிப்படும்; வரித்துக் கொண்டிருக்கிற லட்சியக் கடமைகள் தெளிவாகும்.

வாழ்க்கையில் நிகழ்கிற பல்வேறு சம்பவங்களில் மனிதச் சிறுமைகள் வெளிப்படுவதும் உண்டு. மனிதப் பெருமைகள் முகம் காட்டுவதும் உண்டு. உடன் பிறந்த அண்ணன் தம்பிகள்கூட வரப்புச் சண்டைக்காக குரூரமாக முட்டி மோதி, வெட்டு குத்தாகி சீரழிகிற காட்சிகளும் உண்டு. ஒரு ‘நல்லது, பொல்லது’ நிகழ்கிற காலத்தில் நீண்டகாலப் பகைமையின் வெம்மையை மறந்து கூடிக் கலக்கிற குடும்ப உறவுக் காட்சிகளும் உண்டு.

கூலிக்காரனிலேயே ஒருவன் இன்னொருவனை ஜாதியின் காரணமாய் பகைத்துக் கொள்கிற அற்பத்தனமும் உண்டு. ஜாதீயப் பகை ஒரு தீயாக ஊரெல்லாம் எரிக்கும் வெப்பமான நேரத்தில்கூட, இன்னொரு ஜாதியைச் சேர்ந்த கூலிக்காரனின் சிரமங்களுக்கு மனம் இரங்கி தோள் கொடுக்கிற மனித நேய அற்புதங்களும் உண்டு.

ஆசையாய் வளர்த்து பாடுபட்டு ஆளாக்கிய அப்பனுக்கு கஞ்சி ஊற்றாத பிள்ளைகளும் இருக்கலாம். பொறுப்பற்று திரிந்து கிழடாகிப் போன அப்பனுக்கும்கூட கஞ்சி ஊற்றி கௌரவமாய் பராமரிக்கிற மருமகளையும் பார்க்கலாம்.

இப்படி எண்ணிறந்து பல்வகைப்பட்ட காட்சிகளில், கதைக்கருவாக எப்படிப்பட்டதைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்? எவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்?

இதற்கு முடிந்த முடிவான பதில்கள் எதுவுமில்லை. மனிதநேயமிக்க படைப்பாளி எதைக் கருவாகத் தேர்வு செய்து கொண்டாலும் மனித மேன்மை பாடுவான். மானுடத்தை மகிமைப்படுத்துவான்.

இப்போதுதான்—

ஓர் எழுத்தாளனின் சமூகம், மனிதன், வாழ்க்கை குறித்ததத்துவ நோக்கு ரொம்ப முக்கியத்துவமடைகிறது. இவை குறித்த ஆழ்ந்த ஞானமும், உறுதியான பாதையும் அவசியமாகிறது.

மனிதனுக்கும், பொருளாதார சமூகத்திற்கும் உள்ள பரஸ்பர உறவுகள்— அதன் விளைவுகள்— மனிதன்மீது சமூகம் செலுத்துகிற வலிய ஆதிக்கம்— சமூகத்தின் தாடையில் ஓங்கி மிதித்து, அதன் முகத்தையே மாற்றி மனிதன் படைக்கிற சரித்திரம்— இவற்றைப் பற்றியெல்லாம் ஆழ்ந்த பார்வைகளும், நுண்ணிய மதிப்பீடுகளும் ஓர் எழுத்தாளனுக்கு அவசியம் இருந்தாகவேண்டும். இருந்தால் தான்... பார்க்கும் பிரச்னைகளை சரியான முறையில் கருவாக்கி, தெளிவான நோக்கில் வெளிப்படுத்த முடியும்.

சமூகப் பார்வையில் ஊனம் இருந்துவிட்டால்... அவனால் வாழ்வின் உண்மைகளையே முழுமையாகப் புரிந்துகொள்ளவும் முடியாது; கலாபூர்வ நேர்த்தியோடு வெளிப்படுத்தவும் முடியாது.

சமூகப் பார்வையில் தெளிவற்று இருக்கும் பட்சத்தில், யதார்த்த எழுத்தை நேசிக்கிற படைப்பாளியின் சிறுகதைகள்கூட யதார்த்தத்தைச் சொல்லத் தவறி விடக்கூடும். படைப்பாளியின் பார்வைக்கு விரோதமாய், அவன் படைப்புகளே நிற்கிற பரிதாபமும் நிகழக்கூடும்.

சமூக ப்ரக்ஞையும், சரியான தத்துவ நோக்கும் உள்ள ஒருவனால்தான் அசலான யதார்த்தச் சிறுகதைகள் படைக்க முடியும். அச்சிறுகதைகள் கலாபூர்வ வெற்றி பெறுவதிலும் கூட, சமூகப் பார்வையின் தெளிவு நிச்சயமான காரணமாக நின்று செயல்படும்.