உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/007

விக்கிமூலம் இலிருந்து

7. நிகழ்வுகள் – சமூக நோக்கு – தத்துவம்

ரு படைப்பாளியின் தத்துவ நோக்கு, அவனது சமூகப் பார்வையை மட்டுமல்ல, அவனது படைப்பின் கலைத் தன்மையையும், ஆழ் நுட்பத்தையும் தீர்மானிக்கிறது.

படைப்பாளி என்கிற தனிமனிதன், தன்னைச் சுற்றிச் சுழன்று இயங்குகிற சமுதாய வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து அனுபவங்களைச் சேகரிக்கிறான். சேகரமான அனுபவங்கள் குறித்த கருத்துகளை— அதன் சாராம்ச தொனியை— உருவாக்குவது சமூகப் பார்வை. சமூகப் பார்வைக்குக் காரணியாக இருப்பது தத்துவம்.

அனுபவங்கள்— சமூகப் பார்வை— தத்துவம் மூன்றும் ரொம்ப நெருக்கமானவை; ஒன்றையொன்று சார்ந்திருப்பவை; ஒன்றுக்கு ஒன்று காரணியாக இருப்பவை.

மொத்த சமூகத்தின் கடந்த கால வரலாறு, எந்த அளவுக்குத் துல்லியமாகப் புரியப்பட்டிருக்கிறதோ... அந்த அளவுக்குத்தான் நிகழ்காலச் சமூகம் பற்றிய புரிதல் சரியானதாக இருக்கும். நிகழ்காலச் சமூகச் சுழற்சியின் விதமும், திசையும் தெளிவாகிறபோதுதான், எதிர்காலச் சமூகம் பற்றிய கனவுகளும் லட்சியமும் நிஜமாகக் கூடிய விஞ்ஞானமாகும்.

இந்தப் புரிதலுக்கான வெளிச்சமும், வழித்தடமுமாய் இருப்பதுதான், தத்துவம்.

மேற்கத்திய முதலாளித்துவ நாட்டு அதிபர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தால்... அவர்களை அழைத்துப் போய், இந்திய தேசத்தின் பெருமைச் சின்னமான அழகு தாஜ்மகாலைக் காட்டி விளக்குவார்கள். பார்த்தவர்களெல்லாம் கட்டடக் கலையின் புராதனப் புதுமை குறித்தும், எல்லையற்ற நவீனத்துவ அழகு குறித்தும் வியந்து பிரமித்துப் பாராட்டுவார்கள்.

‘பளிங்கு ரோஜா’ என்றார்கள். ‘அமரத்துவ காதல் சின்னம்’ என்றார்கள். “பார்த்த நெஞ்சில் பதிந்து விடுகிற அற்புதம்” என்றார்கள். இப்படியே அதன் அழகையும், அற்புதத்தையும், சௌந்தர்ய உணர்வுகளையும் வார்த்தைப் படுத்தினார்கள்.

சோசலிச சோவியத் நாட்டின் கம்யூனிஸத் தலைவர் ஒருவர் வந்தார். அவரையும் அழைத்துக் காட்டினார்கள்.

சுற்றிப் பார்த்தார். அழகையும், அற்புதத்தையும், மாறாத சௌந்தர்யத்தையும் பாராட்டியதோடு... “மனித உழைப்பின் அற்புதம்” என்றும் பிரமித்தார். “கோடிக்கணக்கான அடிமைகளின் ரத்த வியர்வையின் மினுமினுப்புதான்... உறைந்து போன இந்தப் பளிங்கு மின்னல்” என்றார்.

அவருடைய கருத்து, முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அழகை ரசித்ததோடு நிற்காமல், அழகின் வேர்களாக இருந்த மனித உழைப்பையும் பார்த்தார். ‘அது அடிமைகளின் ரத்தக் கொப்பளிப்பு’ என்று வரலாற்று பூர்வமாகவும் நோக்கினார்.

அவருடைய மாறுபட்ட— முழுமை நோக்கை— தீர்மானித்தது, அவரது மார்க்ஸீய தத்துவம்தான்.

பஸ்ஸுக்குள் பயணிகளில் சிலரோடு கண்டக்டர் காரசாரமாய் சர்ச்சை செய்கிறார். பின்சீட்டில் உட்கார்ந்திருக்கிற வெள்ளையும் சொள்ளையுமான வேறொரு பயணி சொல்கிறார்: “கை நிறைய சம்பளம் வாங்குற திமிரு, கண்டக்டருக்கு. அதான், பேசன்ஞ்சரை மதிக்காமப் பேசுறாங்க. பேசாம... பஸ்ஸை பூராவும் தனியார்கிட்டே ஒப்படைச்சிரணும், சார். அப்படிச் செஞ்சாத்தான்... இந்தக் கண்டக்டர்களெல்லாம் ஒழுங்குக்கு வருவாங்க.”

கிராமத்து மெட்டல் ரோட்டில் அந்த வெள்ளைப் பஸ் தடதடக்க, உள்ளுக்குள் இன்னொரு பிரயாணி அவரை மறுக்கிறார்:

“பொதுத்துறையாயிருக்குறதாலேதான் இந்த மாதிரி பட்டிக்காட்டுக்கெல்லாம் டவுன் பஸ் வருது. தனியார் துறைக்கு கை மாறிட்டா... இந்த மாதிரி சின்ன ஊருக்கெல்லாம் பஸ் வருமா? கிராமத்து ஜனங்க ஆத்திர அவசரத்துக்கு பஸ் ஏற முடியுமா? அதையும் சேர்த்து யோசியுங்க.”

சாதாரணமாய் அடிக்கடி இம்மாதிரியான விவாதங்கள் நம் காதுகளில் விழுவதுண்டு.

முன்னவரின் குரலில் தனியுடைமையை ஆதரிக்கிற முதலாளித்துவச் சித்தாந்தம் துல்லியமாக ஒலிக்கிறது. பின்னவரின் மறுப்புக் குரலில்... தனியுடைமைக் கொடுமை தீர தொண்டு செய்யும் மார்க்ஸீயத் தத்துவம் கசிகிறது.

இப்படி ஒவ்வொரு பொருளையும், நிகழ்ச்சியையும், காட்சியையும் சந்திக்கும்போதெல்லாம், அது சார்ந்த கருத்தை நிர்ணயிப்பதில் தத்துவம் ஒரு நிர்ணயகரமான காரணியாக நிற்கும்.

தத்துவ நோக்கு கூர்மையற்று— சற்று தெளிவற்றுப் போயிருந்தாலும்கூட, சிறுகதை படைப்பில் நிச்சயமாய் ஊனத்தை ஏற்படுத்திவிடும்.

ஒரு வழக்கறிஞர் எனது நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் நடத்துகிற ஒரு வினோத வழக்கைப் பற்றிக் கூறினார். அந்த வழக்கின் நிலவரத்தையும், வழக்குக்குரிய சம்பவம் ‘நிஜமாகவே எப்படி நடந்தது’ என்பது குறித்தும் ரொம்ப நேரம் விளக்கினார். விளக்கிவிட்டு... “இதை வைத்து நீங்கள் ஒரு கதை எழுதுங்களேன்” என்றார். என்னிடம் கூறவில்லை. என் நண்பரிடம்தான் சொன்னார். பக்கத்திலிருந்த என்னுள் அந்த வழக்கும், நடந்திருந்த சம்பவ வினோதமும் வித்தியாசமாய் உணர வைத்தது. நிஜமாய் நடந்த அந்தச் சம்பவத்தை கருவாக வைத்து, எனது எழுத்துச் சாமர்த்தியம் முழுவதையும் காட்டி ஒரு சிறுகதையாக்கினேன். செம்மலரில் பிரசுரமான அந்தச் சிறுகதையின் பெயர், ‘மனசில் ஏறிய பாறாங்கல்.’

வடிவ ரீதியான வெற்றியைப் பெற்றிருந்தது, அந்தச் சிறுகதை. உத்தியும் உள்ளடக்கத்திற்கேற்ப அமைந்திருந்தது. துவக்கமும், சொற் பிரயோகமும், மொழி நடையும் ரொம்பக் கச்சிதம். வாசித்தவர்களுக்குள் கதையின் சாராம்ச உணர்வைக் கடத்தியிருந்தது. ஆனால், கதையை யாருமே ஒப்புக்கொள்ளவில்லை.

கதையின் உள்ளடக்கத்தையும், சாராம்ச உணர்வையும் எவரும் ஒப்புக்கொள்ளவில்லை. என் நெருக்கமான தோழர்கள் எல்லோரும் என்னைச் சாடினர். என் படைப்பின் மீதும், என் மீது நம்பிக்கையும் அன்பும் கொண்டிருந்த நெல்லை எழுத்தாளர் கிருஷி, மிகுந்த உள்ளார்ந்த வேதனையோடும் கொதிப்போடும் கூறியிருக்கிறார்.

“ச்சே! மோசமான மனிதன் இவன். பாறாங்கல்லைத் தூக்கி நம்ம மனசுலே போட்டுட்டானே, பாவி.”

அந்த அன்புரிமையான விமர்சனங்களைப்போல... நிறைய விமர்சனங்கள். அந்தச் சமயத்தில் அந்த விமர்சனங்களை ஜீரணிக்கவே முடியவில்லை, என்னால்.

‘இத்தனை அழகான— அற்புதமான கதையை இப்படிக் குறை சொல்கிறார்களே’ என்று உள்ளுக்குள் குமுறினேன்.

அந்த விமர்சனங்களின் உண்மையை— நியாயத்தை— உணரவும்,ஒப்புக் கொள்ளவும் எனக்கு ரொம்பக் காலம் ஆயிற்று.

அது என்ன கதை?

‘வரதட்சணை பாக்கியை வாங்காமல் வராதே’ என்று விரட்டப்பட்டு வீடு வந்த தங்கை. விவசாய நொடிப்பில் கடன் பட்டு அல்லல்படுகிற அண்ணன். தங்கை விவகாரம் ஊர்ப்பஞ்சாயத்து வடிவில் நிர்ப்பந்தமாகிறது. தேதி கெடு வைத்தாகிவிட்டது. அண்ணனின் மனைவி வேறு நச்சரிக்கிறாள். நாத்தனாரை திட்டித் தீர்க்க... அவர்களுக்குள் சண்டை. ‘நீ சாகணும், இல்லே நா சாகணும்’ என்கிற அளவுக்குச் சண்டை.

இந்த நிலையில் தங்கை சாகடிக்கப்படுகிறாள், பம்ப்ஷெட் ரூமில். சாகடித்தது அண்ணன்தான் என்று தங்கைக்கு மட்டும் தெரியும்.

இதுதான் கதை.

என்னைப் பொறுத்தவரையில்... ‘உண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைத்தானே கதையாக்கியிருக்கிறேன். இது தப்பா?’ என்ற நியாயமான குமுறல்.

ஆனால்... “இது யதார்த்தமேயில்லை. மோசமான விளைவு உண்டாக்குகிற கதை. வரதட்சணை பிரச்னைக்கு தங்கையை கொல்வதா... தீர்வு? இது உலக மகா அபத்தம்” என்பது கதை படித்தவர்களின் ஒட்டு மொத்தமான விமர்சனம்.

உண்மையில் நடந்த நிகழ்ச்சியை கதையாக்கிவிட்டு, ‘யதார்த்தமில்லை’ என்கிற விமர்சனத்தைச் சந்தித்த அனுபவம், பல எழுத்தாளர்களுக்கும் நேர்ந்திருக்கக் கூடும்.

தனிப்பட்ட— ரொம்ப ரொம்ப விதிவிலக்கான— ஒரு சம்பவம், சகல மனிதர்களும் ஒப்புக் கொள்ளக்கூடிய ஒரு படைப்பாக பொதுமை உண்மையாக மாறும் என்று சொல்ல முடியாது. பொதுமைப்படுத்தப்பட்ட உண்மையாக முடியாமல் போகிற விதிவிலக்கான உண்மை, அம்மாதிரியான எதிர்மறை விமர்சனத்தை எதிர்கொள்ளும். உண்மைதான்.

ஆனால் என் விஷயம், அது மட்டுமல்ல.

எனது தத்துவ நோக்கிலுள்ள பலவீனமே, அக்கதையின் பலவீனமாகி விட்டது. அது என்ன பலகீனம்?

பொருளாதாரம், கலாச்சாரம், மரபு ரீதியான உறவுகள் எல்லாம் உள்ளடங்கிய சமுதாய அமைப்பு. தனிமனிதனின் மீது வலிய ஆதிக்கம் பண்ணும். வாட்டியெடுக்கும். நிறம் மாற்றும். அவனை அவனுக்கே எதிராக நிறுத்தும். ‘வாழ்நிலையும், சூழ்நிலையும் மனிதனின் குணநிலையை தீர்மானிக்கும்’ என்ற இந்த உண்மை, பாதியளவான உண்மைதான்.

வாழ்நிலைக்கும் சூழ்நிலைக்கும் பலியாகிற அதே மனிதன், மானுடன் என்ற பண்பால்— போர்க்குணத்தால்— அந்தச் சூழல்மீது எதிர்வினை நிகழ்த்துவான்.

சமூகத்தின் வார்ப்பாக இருக்கிற மனிதன், சமூகத்தை மாற்றுகிற சரித்திரமாகவும் மாறுகிறான். இதுவும் சேர்ந்தது தான் முழு உண்மை.

ஆனால், என் கதையில் புறச்சூழலின் உக்கிரத்திற்குப் பலியாகிப் போனதை மட்டும் சித்தரித்திருக்கிறேன். கலாபூர்வமாக. ஆனால், புறச்சூழல்மீது இவன் நடத்திய தாக்குதலை கவனிக்காமலேயே— சித்தரிக்காமலேயே விட்டுவிட்டேன்.

சமுதாயம்— மனிதன் இருவருக்கிடையே பரஸ்பரம் நிலவுகிற உறவின் தன்மை குறித்த தத்துவ நோக்கில் ஏற்பட்ட தடுமாற்றமே, இந்தக் கதையின் வீழ்ச்சிக்குரியமையக் காரணமாக மாறியிருக்கிற நிதர்சன நிஜம், எனக்குப் புரிய ரொம்பக் காலம் ஆயிற்று.

‘வசந்தம் வருகிறது’ என்ற இதழுக்காக இரா. ஜவஹர் என்னிடம் ஒரு சிறுகதை கேட்டார். எழுதித் தந்தேன். அதன் கையெழுத்துப் பிரதியை கவிஞர் இளவேனில் படித்தார்.

“உங்களுக்கு ஃப்ராய்டிசத்தில் உடன்பாடு உண்டா?” என்றார்.

“இல்லை” என்றேன்.

“இந்தக் கதையில் ஃபிராய்டிசம்தான் வந்திருக்கிறது” என்றார்.

நான் அதிர்ந்து போனேன். அவரே கதையின் சுழல் பகுதியான கடைசிப் பக்கத்தில் ஒரு பாராவை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

நிஜம்தான். என்னையறியாமலேயே, என் கதையில், எனக்குச் சம்மதமில்லாத ஒரு தத்துவம் வெளிப்பட்டிருந்த வியப்பான உண்மை, அன்று என்னை ரொம்பத் திகைக்க வைத்தது.

தத்துவ நோக்கில் சறுக்கல் ஏற்பட்டு விடுகிறபோது, கதையின் கட்டுமானம் பிசகி விடுகிறது; கதையின் குறியும் தவறி விடுகிறது.

விளைவு?

கலைத்தன்மையும் விளைவும் எதிர்மறையாகி விடுகிற கசப்பான அனுபவம்.

இப்படி... ஒவ்வொரு கணத்திலும் படைப்பாளியை வழிநடத்துவதில், செயல்பாட்டு வேகத்தைத் தீர்மானிப்பதில், தத்துவம் ஒரு முக்கிய பங்கை மறைமுகமாக வகிக்கிறது.

....நேற்றுச் சாயங்காலம். எதிர் வீட்டில் கூலி வேலை பார்க்கிற புருஷனுக்கும் பெண்டாட்டிக்கும் தாறுமாறான சண்டை. நாராச வசவுச் சொற்பிரயோகங்கள். அவனிடமிருந்து சீறிப் பாய்கிற கோபச் சொற்கள். அவளிடமிருந்து இயலாமையோடு பொங்கிக் குமைகிற சாபங்கள்.

கோபத்தின் உக்கிரத்தில் காலால் எற்றுகிறான். முடியை பற்றி முதுகில் அறைகிறான். பக்கத்து வீட்டுப் பெண்கள் தலையிட்ட பிறகு... எரிச்சலுடன் வைது விட்டு வேளியேறுகிறான்.

மறுநாள் காலையில் பார்த்தால்... புருஷனும் மனைவியும் பேசிச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள், குழைகிற வார்த்தைகளில் மனசுகளின் ஒருமையும் அந்நியோந்யமும் முகம் காட்ட...

அந்த வீட்டின் எதிரில் ஒரு பெட்டிக் கடை. ஒரு வாலிபனும், ஒரு பெரியவரும் உட்கார்ந்திருக்கின்றனர். இந்தக் காட்சியில் தலைகீழான உணர்வு மாற்றத்தைக் கண்டு திகைத்துப் போய் விடுகின்றனர்.

சண்டைக்கான காரணம் என்ன? சமரசம் எவ்வாறு நிகழ்ந்தது? சமரசத்திற்கான காரணம் என்ன? ஒரு இழவும் புரியவில்லை.

விசாரித்துப் பார்த்தாலும் விபரம் கிடைக்கவில்லை. குடைந்து குடைந்து கேட்டாலும் பொத்தாம் பொதுவான பதில்தான் கிடைக்கிறது.

மாலையும், காலையும் பார்த்த காட்சிகளுக்கிடையில் என்ன நடந்தது என்பதையும் இணைத்துவிட்டால்... ஒரு சிறுகதை உருவாகி விடும்.

“ரெண்டு கழுதைகளும் விவஸ்தை கெட்ட கழுதைக. ரெண்டுக்கும் புத்தியில்லே. ஒன்றுக்குமற்ற காரியத்துக்கு சண்டை போடுதாக. அப்புறம் ராசியாயிடுவாக. இதுக்கெல்லாம்... பெரிசா என்ன காரணம் வேண்டிக் கிடக்கு? துப்புக் கெட்ட பொழைப்பு பொழைக்குற துப்புக் கெட்ட கழுதைக. யோசிச்சுப் பார்த்தா... நாம எல்லாருமே துப்புக் கெட்ட கழுதைகதான். நம்ம பொழைப்புலே மட்டும் என்ன காரண காரியம் இருக்கு?”

என்று அந்தக் கிழவர் சொல்லிவிட்டு, உதட்டை ஏளனமாய் பிதுக்கிவிட்டுப் போகிறார்.

இதுவும் ஒரு சமூகப் பார்வைதான். இதற்கும் அடிப்படையாக ஒரு தத்துவம்.

“காரண காரியமற்று மொத்த வாழ்க்கையும் ஒரு குருட்டாம் போக்கில் இயங்குகிறது. மாற்றமோ வளர்ச்சியோ இதில் சாத்தியமில்லை. மனித வாழ்க்கையே அறிவுக்குச் சம்பந்தமற்ற அபத்தங்களின் குவியல்தான்” என்கிற இருண்மை வாதத் தத்துவம் கிழவரின் புலம்பலில் கசிகிறது. லா. ச. ரா., மௌனி போன்ற சிறுகதை படைப்பாளிகளிடம் இதுபோன்ற சமூகப் பார்வையும், தத்துவமும்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

வேறொரு வாலிபன் சொல்கிறான்:

“முந்தா நாள் ராத்திரி அவன் போய் சீண்டியிருப்பான். அவா... ‘சள்’ளுன்னு எரிஞ்சு விழுந்துருப்பா, ‘சீ, நாயே’ன்னு தள்ளி விட்டிருப்பா. அந்தக் காட்டத்துலேதா, நேத்து சண்டை தூள் பறந்துச்சு. நேத்து ராத்திரி இடம் குடுத்திருப்பா. அதான், கொந்தளிப்பு அடங்கி சமாதானம் ஆகிப் போச்சு. எல்லாம்... ‘சிட்டுக்குருவி’ விவகாரம்தான்”

அந்தரங்க நிஜத்தை ஆழமாய் தோண்டி எடுத்துவிட்ட பெருமிதத்தில்— ஆபாசத் தொனியில்— கண்ணடித்து கெக்கலிப்போடு சிரிக்கிறான், அந்த வாலிபன்.

இந்த நக்கலான சிரிப்புக்குப் பின்னாலும் ஒரு சமூகப் பார்வையும் தத்துவமும் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கிறது.

அது என்ன தத்துவம்?

அம்மா—மகன், பாட்டி—பேரன், தாத்தா—பேத்தி, சகோதரன்—சகோதரி, ஆசிரியர்—மாணவி, அத்தை—மருமகன் இது போன்ற மொத்த மனித உறவுகளும், உறவுகளுக்குள் நிகழ்கிற கோபம், காதல், வீரம், சோகம், பெருமிதம், நகைச்சுவை போன்ற சகல விதமான உணர்ச்சிகளும் பாலுணர்வின் அச்சில்தான் இயங்குகிறது என்கிற ஃப்ராய்டிச தத்துவம்தான், இந்தச் சிரிப்பில் குரூரமாக பல்லைக் காட்டுகின்றது. ஆண்—பெண்ணுக்கிடையேயுள்ள காமரீதியான ஈர்ப்பும், மறுப்பும்தான் சகல வாழ்வியல் உணர்வுகளுக்கும் அடிப்படை என்கிற பொய்யான தத்துவம், இங்கே மாரீச மானைப்போல அழகுமயச் சிரிப்பாக நிற்கிறது.

கடைக்காரன் இந்த இரண்டு நையாண்டிகளையும் கேட்டுவிட்டு, ஏளனமாய் உள்ளுக்குள் நகைக்கிறான். அவனுக்குள் வார்த்தையாகாத ஓர் உணர்வு ஓடுகிறது:

“கடுமையான உழைப்பும் வறுமையான பிழைப்புமான அன்றாட வாழ்க்கை அவஸ்தையோட வெக்கை. குறிதவறிப்போன கோபம், உள்ளுக்குள் பாய... சண்டையாகிப் போச்சு. பரஸ்பர அன்புலே மனுஷ ஈரத்துலே யோசிச்சுப் பாத்து... ஒருத்தர் சிரமத்துக்கு ஒருத்தர் இரக்கப்பட்ட மனக்கசிவுலே முகம் பார்த்துச் சிரிச்சுக்கிட்டாக. வெளி வாழ்க்கை சண்டை போட வைச்சது. வாழ்வின் உள்வட்டம் ஒன்னு சேர்த்திருச்சு.”

ஓடுகிற இந்த உணர்வில் அர்த்த அடர்த்தி இருக்கிறது. அன்றாட ஜீவனத்திற்கான மல்லுக்கட்டின் உக்கிரம் புரியப்பட்டிருக்கிறது. மனிதர்களைக் கட்டி இழுத்துச் செல்லும் மொத்த வாழ்க்கையின் நீட்சி உணரப்பட்டிருக்கிறது. மனித மனங்களின் ஆழ நீரோட்டம் பற்றிய நுட்பமான புரிதலும் இருக்கிறது.

இதுவும் ஒரு வகையான சமூகப் பார்வை. இதற்குப் பின்னும் ஒரு தத்துவம் வீர்யமாக இயங்குகிறது. அது மார்க்ஸீய தத்துவம்.

இந்தப் புரிதலுடன் அந்தக் குடும்பச் சண்டை சிறுகதையின் பாடுபொருளானால்... அசலான வாழ்க்கையின் உள்முகங்களும், வெளி முகங்களும் ஒன்றிணைந்த தெளிவோடு பதிவாகும்.

இந்தச் சரியான சமூகப் பார்வை... அந்தத் தம்பதிகளின் முரண்பாடான உணர்ச்சி வெளிப்பாடுகளையும், நினைவோட்டங்களையும் தெளிவாக உள்வாங்கித் தன்மயமாக்கிக் கொண்டிருப்பதால்... படைப்பாக வெளிப் படுகிறபோது, வாழ்க்கையின் ஆழ் நிஜமே கலாபூர்வமாகக் கசிந்து புன்னகை செய்யும்.

ஃப்ராய்டிச பார்வையிலோ, ‘வாழ்வே அபத்தம்’ என்கிற கண்ணோட்டத்திலோ இதே சம்பவம் கதையாக்கப்பட்டிருந்தால்... நிஜமான வாழ்க்கை நிகழ்ச்சிகளை, பொய்யான கண்ணோட்டத்தில் சொல்லப்பட்டதாக அமைந்திருக்கும்.

பொய்க்குரிய ஊனம், கதையின் கலைத் தன்மையிலும் பனி ஈரமாய் படிந்து விடும். படித்து முடித்தவுடன் மனசுக்குள் நெருடும். வாசகருக்குள் ஏமாற்றம் வந்து உட்கார்ந்து கொள்ளும். சர்க்கரை என்று நினைத்து ஆசையுடன் வாயில் அள்ளிப் போட்ட பிறகு உப்புக் கரித்தால் எப்படியிருக்குமோ... அப்படித்தான் அந்தக் கதையைப் படித்தவுடன் மனசில் முரணான உணர்வு தோன்றும்.

படைப்பாளியின் சமூகப் பார்வையில் ஊனமிருந்தால்— வாழ்க்கையைப் பரிசீலிக்கிற தத்துவ நோக்கில் குறைபாடிருந்தால். அது படைப்பின் கலைத்தன்மையை நிச்சயமாகச் சிதைக்கும். படைப்பின் நம்பகத் தன்மை மீது சந்தேகம் ஏற்படுத்தும். காலத்தை வென்று நிற்கிற அதன் வலிமையையும் பறித்துவிடும்.

இன்றைக்கும் கு. அழகிரிசாமியையும், புதுமைப்பித்தனையும், ஜெயகாந்தனையும் நம்மிடையே வலிமை குன்றாமல் வாழ வைத்துக் கொண்டிருப்பது... அவர்களுடைய சிறுகதைகளின் கலைத்தரமும், அதற்குக் காரணமான சரியான சமூகப் பார்வையும்தான்.

மகாகவி பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை இவர்கள் இளமை குன்றாமல் இன்னும் நம்மிடையே வாழ்வதற்குக் காரணம் அதேதான்.