உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/018

விக்கிமூலம் இலிருந்து

18. எண்பதுகளின் இலக்கியச் சூழலும்
தமிழ்ச் சிறுகதைகளும்

முன்னுரை

தேவைப்பட்ட நூல்களையெல்லாம் மேஜையில் பரப்பிக் கொண்டு, அதில் கிடைக்கும் விபரங்களை உரிய இடங்களில் மேற்கோள்களாகச் சொருகி, முறைப்படி கட்டுரை தயாரிக்கிற இலக்கணம் எனக்குச் சம்மதம் இல்லாத ஒன்று.

படித்தும், கேட்டும், அறிந்த விபரங்களிலிருந்து உணர்ந்த உண்மைகள் மனசுக்குள் அபிப்ராயங்களாக— கருத்தாக— படிந்து கிடக்கும். அது, எனது கட்டுரையில் வந்து முகம் காட்டும்.

கட்டுரையும் எனக்குச் சிறுகதைகளைப் போலத்தான். ஆகவே அதன் நடையும் கூட... அறிவார்ந்த கட்டுரைகளுக் குரிய ஆழ்ந்த நிதான நடையாக இருக்காது.

இது சரியோ— தவறோ— யானறியேன். ஆனால், இதுதான் நான்.

எது சிறுகதை?

எண்பதுகளின் இலக்கியச் சூழலைப் பரிசீலனை செய்வதற்கு முன்பாக... அதன் ஆணிவேர்களை விசாரிக்க வேண்டியதாகிறது.

“சிறுகதைக்கு அழகியல் முக்கியமா? செய்தி முக்கியமா?”

ஒரு காலத்தில் இந்தக் கேள்விக்கு மகத்தான அர்த்தமும் இருந்தது; அவசியமும் இருந்தது; ஒரு தத்துவக் குருச்சேத்திரத்தின் மையக் காரணமாக இருந்தது. ஆனால், இப்போது இந்தக் கேள்வி அர்த்தமற்ற அபத்தமாகி உதிர்ந்து போய் விட்டது.

மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்துவது மனித உடலா, மனிதப் பண்பா என்ற கேள்வியைப் போல, இதுவும் அர்த்தமிழந்து விட்டது.

வளர்ப்பு மிருகங்களிடம் கூட, சில மனிதப் பண்புகளின் நிழல் படியக் கூடும். மனித உடம்போடு பூமியில் திரிகிற சகல மனிதர்களும் மனிதர்கள் அல்ல.

மானுடப் பண்புகளோடு கூடிய மனித உடம்புதான் மனிதன்.

அழகியலோடு வெளிப்படக் கூடிய ஒரு செய்திதான் சிறுகதை. செய்தியற்ற தனித்த அழகியலும் கிடையாது. அழகியலற்ற செய்தியும் சிறுகதையாகாது. ஒரு செய்தியை உள்ளடக்கி இருக்கும் ஒரு படைப்பை, சிறுகதை என்று அடையாளப்படுத்துவதே— அதன் வடிவ அழகும், வசீகர வெளிப்பாட்டு நேர்த்தியும்தான்.

மேற்கண்ட இந்த முடிவுக்கு... நாம் சுலபமாக வந்துவிட வில்லை. நமது முந்தைய தலைமுறைப் படைப்பாளிகள் நடத்திய எண்ணற்ற விவாதங்கள், கருத்துப் போராட்டங்கள், விமரிசனங்கள், சுய விமரிசனங்கள், சமுதாயப் போராட்டங்கள், படைப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் கூட்டு விளைச்சல்தான், நமது இந்த முடிவு.

எது சிறுகதை? நாவல், குறுநாவல் இவற்றிலிருந்து சிறுகதையைப் பிரித்துக் காட்டுவது எது? மிகக் குறைந்த பக்கங்களைக் கொண்ட அதன் தோற்றம் தானா? குள்ளத்தனமா? அதன் குறுகலான வடிவம் மட்டும் தானா?

இப்படி அனர்த்தமாகப் புரிந்து கொண்ட திசையில் நடந்த கொச்சையான பயணம்தான், கடுகுக் கதைகள், சீரகக் கதைகள், ஒருபக்க, கால் பக்கக் கதைகள், ஒருவரிக் கதைகள் என்று வந்து முடிந்திருக்கிறது. இவையெல்லாம்... சம்பவத்தின் திருப்பத்தால் ஒரு சிறு அதிர்வை— அதுவும் கேலிக் கூத்தான அதிர்வை நிகழ்த்திவிட்டுச் செத்துப் போகும்; உணர்வில் ரத்தமாகக் கலந்து விளைவுகளை நிகழ்த்தி விடாது.

முப்பது பக்கங்களுக்கு மேல் நீள்கிற ஆண்டன் செகாவ்வின் ‘ஆறாவது வார்டும்’ சிறுகதைதான்; இரண்டே பக்கங்களில் முடிந்து போகிற ‘ஓ ஹென்றியின் கதையும் சிறுகதைதான். எது சிறுகதை என்பதை, அதன் ஒருமுனைப் பாய்ச்சலான கருவும் வடிவும்தான் தீர்மானிக்கின்றன; பக்கங்களின் அளவல்ல. கோர்வை மிக்க சம்பவங்களின் அடுக்கான ஒரு கதை சிறுகதைக்குத் தேவைதானா? அப்படியும் சிறுகதை இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். வாழ்க்கையின் தொகுப்பு மட்டுமா சிறுகதை? வாழ்க்கையின் ஒரு துளியும் சிறுகதைதான். ஒரு சிறிய சம்பவம் கூடச் சிறுகதையாகலாம். சம்பவம் சார்ந்த உணர்வோட்டம் மட்டுமே கூடச் சிறுகதை ஆகலாம்.

சிறுகதையும் சமூகமும்

சமுதாயப் பொருளாதார அரசியலுக்கும், சிறுகதைக்கும் உறவு உண்டா? வேண்டுமா?

“வேண்டாம்” என்பது சிலரின் கோட்பாடு, உள்ளடக்கம், செய்தி, கருத்து இவற்றையெல்லாம் முக்கிய மற்றதாக ஒதுக்கிவிட்டு, வடிவ நேர்த்தி பற்றி மட்டுமே அக்கறை கொள்பவர்களின் கோட்பாடு இது. சிறுகதையின் வேலை சோறு போடுவதல்ல; பொருளாதார அரசியல் பற்றிக் கவலைப்படுவது சிறுகதையின் கடமையல்ல என்று ஒதுக்கத் துவங்கியவர்கள் அரசியல்மீது ஆழ்ந்த வெறுப்பைக் கக்குகிறார்கள். மோசமான அரசியல்வாதிகளை ஒதுக்கித் தள்ளுகிற வேகத்தில் நல்ல அரசியல்வாதிகளையும் சேர்த்துத் தள்ளி விடுகிறார்கள்.

தூய்மையான அரசியல் போராளிகளாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிற ‘நிருபன் சக்கரவர்த்தி’களை ஏறெடுத்துக் கூடப் பார்க்காமல்— ‘அரசியலே அழுக்கு மயம்’ என்ற விரக்தியான— தவறான— மனநிலைக் காளான அறிவு ஜீவிகளின் நுனிப்புல் மேயும் சோம்பல் மிக்க நோயில் உதயமான கோட்பாடுதான் இது. இலக்கியத்தின் இயல்பே, பிரச்சாரம். அதையே ‘நெடி’ என்று முகம் சுளிக்கிற மேதாவிப் பகட்டு இது. பிரபஞ்சத்தை மாற்றியமைத்து ஆளுமை கொள்ளத் துணிகிற மானுட வீரப் பண்பை ‘முரட்டுத்தனம்’ என்று முகம் சுளிப்பது எத்தனை அறியாமையோ— அத்தனை அறியாமை, ‘அரசியல் அழுக்கு மயம்’ என்று ஒட்டு மொத்தமாக ஒதுக்கி வைத்தது. இந்த மேதாவிகளின் அழகியல் பற்றிய ஆரவாரங்களும், ஆடம்பரக் கூப்பாடுகளும் கூட, குறைகுடத்தின் கூத்தாட்டத்திற்கே ஒப்பானவையாகும். இந்தக் கூத்தாட்டங்களைத் தாண்டி நிற்கிற இமாலய உண்மை எதுவென்றால்— சமுதாயப் பொருளாதார அரசியலுக்கும் சிறுகதை இலக்கியத்துக்கும் அறுக்க முடியாத ரத்த பந்தம் உண்டு என்கிற சத்தியம்தான். சத்தியம் என்றாலும்— நிரூபிக்கச் சான்றுகள் வேண்டாமா? வேண்டும்.

‘குளத்தங்கரை அரச மரமா’க முளைத்து பாரதி, வ.ரா., வழியாக வளர்ந்து வந்த தமிழ்ச் சிறுகதையின் நீண்ட நெடிய வரலாற்றை நிதானமாக யோசித்துப் பார்த்தால்— ஒரு விஷயம் தெளிவாகப் புரியும்.

சிறுகதையில் இரு போக்குகள்

இந்த வரலாற்றில்- சிறுகதை இலக்கியத்தில் மாபெரும் பாய்ச்சல் வேக மாற்றங்களும் எழுச்சிகளும் நிகழ்ந்த காலம் இரண்டு.

1. 1947-க்கு முந்தைய காலம்
2. எழுபது காலம்.

முதல் காலம் என்பது— ஏறக்குறைய ‘மணிக்கொடி’க் காலம் எனலாம். மணிக்கொடிக் கால எழுத்தாளர்கள் ஒருவகைப்பட்டவர்களல்லர்.

சமுதாயப் பிரச்னை பற்றிய அக்கறை கொள்ளாமல், வெறுமனே மனஉணர்வுகளைத் தத்துவ நோக்குகளில் எழுதிய மௌனி போன்றவர்கள் ஒரு வகை.

சமுதாயப் பிரச்னைகளில் ஆழம் தொட்டு, அடித்தட்டு மக்கள் பற்றிய ஆழ்ந்த நேயத்தோடு, சமூக மாறுதல் எனும் உன்னத லட்சியத்தோடு எழுதிய கு. அழகிரிசாமி, புதுமைப் பித்தன், தொ.மு.சி. ரகுநாதன், விந்தன் போன்றோர் ஒரு வகை.

குடும்ப உறவுகளின் சிறு சிறு அதிர்வுகளையும், ஆண் பெண் உறவில் நிகழும் நுட்பமான சுழல்களையும் சிறுகதையில் கூர்மையோடு பதிவு செய்த கு. ப. ரா. போன்றோர் ஒருவகை.

அரசியல் கற்பனைச் சம்பவமும் கலந்து ஜனரஞ்சக நடையில் எழுதிய பி.எஸ். ராமையா, கல்கி போன்றோர் ஒருவகை.

இப்படிப் பலவகைப்பட்ட கருத்தோட்டங்களும் ரகரகமான வழித்தடங்களும் கொண்டிருந்த போதிலும் வடிவ ரீதியாகவும், உள்ளடக்க ரீதியாகவும் பெரும் மாறுதல் பெற்று, சிறுகதை இலக்கியமே புதிய வலிமையும், தகுதியும் பெற்றது அந்தக் காலம்தான். சிறுகதை உரிய அங்கீகாரத்தைப் பெறும் வகையில் மலர்ச்சி கண்டது, அக்காலம்தான். அந்தக் காலம் சுதந்திரப் போராட்டங்கள் மாபெரும் அரசியல் பிரளயமாக எழுந்து, சகல பகுதி மக்களையும் கவர்ந்த காலம். அரசியல் போராட்டங்களில் எல்லா மக்களும் ஏதேனும் ஒரு வகையில் பங்கெடுத்திருந்த காலம். எல்லாத் துறைகளிலும் அந்தப் போராட்ட வெக்கை பரவியிருந்த காலம் அது.

அந்தக் காலத்தின் அந்த உணர்வு வெக்கைதான் சிறுகதை இலக்கியத்தின் பாய்ச்சல் வேக மாற்றத்திற்கான— மறுமலர்ச்சிக்கு வேர்க்காரணம்.

சுதந்திரத்திற்குப் பிறகு

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு— சொந்த அரசின் வர்க்க பாசம் உணர்ந்து— மொத்த தேச மக்களும் திமிறி எழுந்த காலம். நாடு தழுவிய அளவில் ரயில்வே தொழிலாளர் போராட்டம், தபால்தந்தி ஊழியர்கள் போராட்டம், சகல மாநில விவசாயிகளின் பேரெழுச்சிகள்— எல்லாப் போராட்டங்களும் தேசிய அளவில், குமரியும் இமயமும் ஒரே போர்க் கோலத்தில், பெருந்திரள் மக்கள் பங்கெடுத்த இந்த அரசியல் போராட்டங்களின் கொந்தளிப்புகளும் உஷ்ண அலைகளும்தான் கவிதைத் துறையில் ‘வானம்பாடி’களைப் படைத்தன. சிறுகதைத் துறையில் மாபெரும் எழுத்தாளர் பட்டாளத்தையே உருவாக்கின.

எழுபதுகளில் உதயமான சிறுகதைப் படைப்புக்களின் எண்ணிக்கையும் அதிகம்; படைத்த படைப்புக்களின் வலிமையும் அதிகம். பூமணி. வண்ணநிலவன், வண்ணதாசன், ஜெயந்தன்,சு.சமுத்திரம், வீர. வேலுசாமி, பா. ஜெயப் பிரகாசம், பறம்பைச் செல்வன், புன்னை வனராஜன், களந்தை பீர்முகம்மது, ப. வேல்சாமி, முத்தானந்தன்,. பொள்ளாச்சி அம்பலம், மேலாண்மை பொன்னுச்சாமி, வேல. ராமமூர்த்தி என்று சிறுகதைப் பட்டாளமே எழுந்தது.

சிறுகதைகளும் வாழ்க்கையை மிகவும் நெருங்கி நின்று தொட்டுணர்த்தின. கரிசல் கதைகள், கொங்குக் கதைகள், கடலோரக் கதைகள் என்ற மண்வாசனை மிக்க கதைகள் அரும்பி மலர்ந்த காலமும் எழுபதுகளில்தான். ஆக... சிறுகதை இலக்கியத்திற்கும் சமுதாய அரசியலுக்கும், அறுக்க இயலாத ரத்த பந்தம் உண்டு என்கிற உண்மையை ஒப்புக்கொண்ட மனநிலையோடு எண்பதுகளின் இலக்கியச் சூழலை ஆராய நுழைவோம்.

எண்பதுகளில் சூழல்

எண்பதுகளில் சமுதாய அரசியல், நம்பிக்கைகளைச் சிதைவு பண்ணியது. 1977இல் ஏற்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க மத்திய ஆட்சி மாற்றம்; அது ஏற்படுத்திய மகத்தான நம்பிக்கைகள், எல்லாமே மூன்றாண்டுகளுக்குள் உடைந்து, சிதிலமாகி, தூள் தூளாகியதுடன்— மீண்டும் மிருக பலத்துடன் மத்தியில் 'பழைய ஆட்சியே வந்து உட்கார்ந்து கொண்டதுடன்— எண்பது முகம் காட்டியது.

அதே சமயத்தில் கேரளம், மேற்கு வங்காளம், திரிபுரா மாநிலங்களில் இடதுசாரி சக்திகளின் ஆட்சி அமைந்தன. அதன் விளைவாக... நொறுங்கித் தூளான நம்பிக்கைகள், காற்றில் அப்படியே கலந்து போகாமல்— கனவுகளில் குழைத்து, மறு பாய்ச்சலுக்கு மெல்ல மெல்ல வடிவமும் வலிமையும் சேர்த்தன.

கிழக்கு ஐரோப்பியப் பொதுவுடைமை நாடுகளில் ஏற்பட்ட எதிர்ப்பு இயக்கங்கள், 1983இல் வெடித்த ஈழப் பிரச்னை ஆகியவை தூர்ந்து கிடந்த இனவெறிக்குச் சிவப்பு வர்ணம் பூசிப் பார்த்தன.

இந்தச் சிதைவுகளைப் பொருட்படுத்தாமல்... படித்த உத்தியோக வர்க்கம் நம்பிக்கையுடன் அமைப்புகள் கண்டு... அந்த அமைப்புகளும் பேரமைப்புகளாய்ச் சங்கமித்து... ஆசிரியர்கள் போராட்டம், அரசு ஊழியர் போராட்டம், காவல் துறையினரின் போராட்டம், வங்கி ஊழியர்கள் போராட்டம் என்று, மக்களின் உணர்வுகளை உலுக்கிய காலமும் இதுவே. கொந்தளிப்பு மிக்க இப் போராட்டங்கள், அரசியல் நெருக்கடிகளை உக்கிரமமாக்கின.

அரசியல் முன்களத்தில் தேசிய முன்னணி பிரவேசம் நிகழ்ந்து... மீண்டும் மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழக் கூடும் என்கிற நம்பிக்கையுடன் முடிகிறது எண்பது.

எண்பதுகளின் இலக்கியச் சூழலும், சமுதாய அரசியல் நிலவரத்தைப் போலவே பின்னடைவுகளும் முன்னேற்றமும் கலந்ததாகவே அமைந்திருந்தது.

மலின இலக்கியம்

‘தரையில் இறங்கிய விமானமா’ய் அறிமுகமான இந்துமதியும், கணையாழி பத்திரிகையில் முகம் காட்டி வந்த சிவசங்கரியும் வார இதழ்களின் கோரப் பசிக்கு இரையாகி மலினமான விஷயங்களை எழுத்தாக்கத் துவங்கியது, எண்பதுகளில்தான்.

பி. டி. சாமி, மனோகரன், தமிழ்வாணன் போன்ற ஒரு சிலரிடம் மட்டும் இலக்கியக் கவனமற்று ஒதுங்கிக் கிடந்த குற்றவியல் நாவல்கள், சுஜாதா, புஷ்பா தங்கதுரை, ராஜேந்திரகுமார், ராஜேஷ்குமார் போன்றோரால் வாசகப் பிரபல்யம் பெற்று... வார இதழ்களும், மாதாந்திர நாவல்களும் அதன்மேல் பவனிவரத் துவங்கிய நவீனச் சீரழிவு நிகழ்ந்ததும் எண்பதுகளின் கொடையே.

இந்தச் சீரழிவிலும் வியாபாரம் பண்ணத் தொடங்கிய புத்தக முதலாளிகள், ‘பாக்கெட் நாவல்கள்’ என்ற மலின வழிகளின் மூலம் இலக்கியத்தைப் பஸ் ஸ்டாண்ட் வியாபாரமாகத் தரம் தாழ்த்தினார்கள்.

இலக்கியம் என்பது, அதன் உன்னதங்களையெல்லாம் உதறியெறிந்து விட்டு ஐஸ்புரூட் போலவும் பிற பொருள்கள் போலவும் ஒருமுறை நுகர்வுப் பொருளாக அவலப்பட்டது எண்பதுகளில்தான்.

கணையாழியிலும், சிறு பத்திரிகைகளிலும் சுப்பிரமணியராஜுவுடன் சேர்ந்து, முகம் காட்டி வந்த பாலகுமாரன், ‘மெர்க்குரிப் பூக்களா’ய் டாலடித்து, இரும்புக் ‘குதிரை’களாய் கனைத்துச் சொருமி... ஏதோ ‘சீரியஸ் ரைட்டர்’ என்கிற திகைப்பை ஏற்படுத்தி விட்டு... ‘சேவல் பண்ணையாய்’ ‘அவித்த மொச்சை’யாகிப் போனார். (அவித்த மொச்சையை அன்றே காலி செய்தால்தான் ஆயிற்று. மறுநாள் கடந்தால்... ஊசிப் போகும்; நாற்றம் குடலைப் புரட்டும்). இதுவும் எண்பதுகளில்தான்.

பாக்கெட் நாவலின் அன்றாடச் சந்தையில் பரவிய பண்டங்களாக அறிமுகமாகிப் பிரபலமானவர்கள், பட்டுக் கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார், அனுராதாரமணன் வகையறாக்கள்...

வார இதழ்களில்கூட விஞ்ஞானக் கதைகள் வரத் தொடங்கியதும் எண்பதுகளில்தான்; வளர்ந்து வரும் விஞ்ஞானம் பற்றிய இலக்கியப் படைப்புகள் வருவது ஆரோக்கியமான விஷயம்தான்; பாராட்டத்தக்க முயற்சிகள் தான். ஆனால், தமிழில் உதயமான விஞ்ஞானக் கதைகளில் அரைக்கிணறு தாண்டுகிற ஆபத்தான பலஹீனம் இருந்தது. அதன் பிரதான பலஹீனங்களை யாரும் தொட்டுக் காட்டியதாகத் தோன்றவில்லை. கி.பி. 2500ல் விஞ்ஞான வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்று கற்பனை செய்யத் தெரிந்த அவர்களுக்கு, சமுதாய அமைப்பு எவ்வாறு மாற்றமடைந்திருக்கும் என்று இணைத்துப் பார்க்கத் தெரியவில்லை. விஞ்ஞானத்தோடு சேர்ந்து சரித்திரமும் இணைந்து வளரும் என்ற முழுமையை அந்த விஞ்ஞானக் கதாசிரியர்கள் புரிந்து கொள்ளாததால் அவர்களுடைய விஞ்ஞானக் கற்பனைகள் யாவும் ராஜராஜசோழன் கையில் ‘ஸ்கட்’ ஏவுகணை தந்த மாதிரி அஞ்ஞான அபத்தமாகிவிட்டன.

விஞ்ஞானம் குறித்த படைப்புகளில் எழுத்தாளர் சுஜாதா மிகக் குறிப்பிடத்தக்க பாத்திரம் வகித்தார்; நல்ல பல நாவல்கள் தந்தார். புதிய சிந்தனைகள் அரும்பக் காரணமாக இருந்தார். ஆனால் அவருடைய விஞ்ஞான நாவல்களிலும் சமுதாயப் பார்வை ஊனமுடையதாகவே இருந்தது.

அதுமட்டுமல்ல, அந்தப் படைப்புகள் எதுவும் தமிழ்ச் சூழலிலிருந்து கருக்கொள்ளாமல், முழுக்க அந்நியத் தன்மையாகவே இருந்தன.

‘ஜீனோ’....‘மீண்டும் ஜீனோ’ போன்ற சுஜாதாவின் விஞ்ஞான நாவல்கள் யாவும் ரஷ்ய எழுத்தாளர் ஜாமியாடினின் சரக்குகள். புலனாய்வுப் பத்திரிகைகள் புற்றீசலைப் போல ரத்தவாடையுடன் வெளிவந்ததும், எண்பதுகளில்தான்.

கணையாழி : சுத்த இலக்கியம்

வணிகத்தரமான இலக்கியப் போக்குகள் இவ்வாறென்றால்... கணையாழி போன்ற இதழ்கள் வேறு வகையில் நிறம் மாறின. வடிவநேர்த்தி... கலையழகு... அழகியல் என்று வெறும் உருவவியல் கோட்பாடு மட்டும் பேசி வந்த கணையாழி, சமுதாயப் பிரச்னைகளுக்கு எதிராகவும், இடது சாரிச் சிந்தனைகளுக்கெதிராகவும் விரக்தி மனப்பான்மையோடு அழுது சிணுங்கி... ஊமைப் புலம்பலாய் மர்ம முணுமுணுப்புகளாய் நசிவிலக்கியமாய் நிறம் மாறி வெளிப்பாடு கொண்டதும் எண்பதுகளில்தான்.

‘கலையின் தோளில் எவ்விதச் சமுதாயச் சுமையும் ஏறிவிடக் கூடாது’ என்று கங்கணம் கட்டிக் கொண்டு... சுத்த இலக்கியம் பற்றிய வெற்று இலக்கிய விமரிசனக் கோட்பாடுகளைச் சொல்லி வந்த க.நா. சுப்ரமணியம் வார இதழ்களில் பிரபல்யம் பெற்றதும் எண்பதுகளில்தான். அவரது முதுமை செறிந்த விமரிசனம், இடதுசாரி எழுத்தாளர்களில் ஒரு சிலரைத் தடுமாற வைத்தது என்ற உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். முற்போக்குச் சிந்தனைக்கு எதிரான இந்த விமரிசனக் கூச்சலின் சப்த பலத்தில்தான் சுந்தர ராமசாமியின் ‘ஜே. ஜே. சில குறிப்புகள்’ போன்ற படைப்பு பிரபல்யம் பெற்றது. இதுவும் எண்பதுகளில் நடந்தது.

இதுவரை சொல்லி வந்த பட்டியல் முழுவதும் எண்பதுகளின் இலக்கியச் சூழல்.

எண்பதுகளின் சிறுகதை : சில போக்குகள்

வாழ்க்கை குறித்தும், வரலாறு குறித்தும் மானுட முன்னேற்றம் குறித்தும் கவலைப்படத் தெரிந்த கலைப் படைப்புகளாய் இலக்கியம் திகழ வேண்டும் என்கிற மிகச் சாதாரணமான உண்மையைக் கூடப் புறம் தள்ளிய பட்டியல் இவை. இலக்கியத்திற்குரிய உன்னதமிக்க சமுதாயக் கடமையை மறந்துவிட்டு மிக மிக மலினமான வியாபாரப் பொருளாகிவிட்ட அவலத்தில் வந்த இத்தகைய படைப்புகள் யாவும், வாழ்க்கை உண்மைக்கு அந்நியமாய் இருந்தன; வாசக ரசனையைச் சீரழித்தன.

அதே போலக் கலை உன்னதத்திற்காகவே உயிர் வாழ்வதாக பாவனை செய்து இலக்கியம் படைத்தவர்களும் நம்பிக்கைச் சிதைவையும், நாசகார விரக்தியையும், மனிதச் சிறுமைகளையும், வக்கிரங்களையுமே பிரதிபலித்தார்கள். இவர்கள் வாசக நெஞ்சங்களில் இயல்பாய் அரும்பி நின்ற வாழ்க்கை பற்றிய நம்பிக்கை வேரில் வெந்நீரை ஊற்றினார்கள். இந்த இரண்டு வகையினரின் வேர்கள், எண்பதுகளின் சமுதாய அரசியலிலேயே பதிந்து கிடந்தன. எண்பதுகளின் தேசிய அளவிலான கட்சி அரசியலையும், சர்வதேச அரசியலையும் மட்டுமே பார்த்து, நம்பிக்கை நொறுங்கிப் போன இவர்கள் விரக்தியில் பயணப்பட்டு நசிவிலக்கிய வாதிகளாகவும், வணிக எழுத்தாளர்களாகவும் நிறம் மாறினார்கள்.

இரு துருவங்களைப் போலத் தோற்றம் அளித்த இந்த இருவகையினரிடம் ஓர் ஒற்றுமை, நுட்பமான உறுதியோடு மறைந்து கிடந்தது.

அது என்ன ஒற்றுமை?

சமுதாயத் தேரின் சக்கரங்களாகத் திகழ்ந்து பாடுபட்ட வியர்வை மக்களை— ஜனசமுத்திரத்தை— இவர்கள் பார்க்கவுமில்லை; நேசிக்கவுமில்லை!

மனிதநேயம் இவர்களது பரிகாசப் பொருளாக இருந்தது.

ஆனால், இவர்களது படைப்புகள் யாவும், ஜன சமுத்திரத்தின் போராட்டங்களுக்கும், சரித்திரத்தை முன்னோக்கி நகர்த்துகிற முயற்சிகளுக்கும் முட்டுக் கட்டையாக இருந்து வந்தன.

எண்பதுகளில் பிறிதொரு போக்கு : எழுச்சி

எண்பதுகளில் மக்கள் கிளர்ச்சிப் போராட்டங்கள் ஏராளமாய் நடந்தன. அதிலும் படித்த உத்தியோக வர்க்கத்தினர் பெரும் போராட்டங்களை நடத்தினர்.

பேராசிரியர்களுக்கு ஜெயில் மோரை நுகர்ந்து பார்க்கிற வாய்ப்புக் கிடைத்தது எண்பதுகளில்தான். போராட்டம் நடத்திய போலீஸ்காரர்களே சிறைக்குள் அடைபட்டது இக் காலத்தில்தான். அரசு ஊழியர்கள் போராடியதும் இக் காலத்தில்தான். இந்த மக்களின் போராட்டங்களை நெருங்கி நின்று பார்த்து, நேசித்து ஆதர்ஷம் பெற்ற படைப்பாளிகளும் உண்டு. அந்தப் படைப்பாளிகள் உயர்ந்த மனித நேயத்தோடும் கலைநயத்தோடும் சிறுகதைகள் படைத்தனர்.

எண்பதுகளில் அப்படி அரும்பிய படைப்பாளிகள் நிறைய.

தமிழ்ச் செல்வன், உதயஷங்கர், எஸ். ராமகிருஷ்ணன், கமலாலயன், தனுஷ்கோடி ராமசாமி, தேனி சீருடையான், அல்லி உதயன், மாதவராஜ், முகில், தோப்பில் முகமது மீரான் என்று படைப்பாளிகள் ஏராளம்.

அறுபதுகளிலேயே இலக்கிய உலகில் பிரவேசம் செய்து விட்ட கந்தர்வன் சிறுகதைப் படைப்பாளியாக வெளிப்பாடு கண்டது எண்பதுகளில்தான். எழுபதுகளில் எழுதத் தொடங்கிவிட்டாலும் கனிந்த பக்குவத்தோடும் கலைநயத்தோடும் சிறுகதை இலக்கியத்தில் பிரகாசிப்பதில் வெற்றி கண்டவர்கள் மேலாண்மை பொன்னுச்சாமி, வேல. ராமமூர்த்தி போன்றவர்கள்; இதுவும் எண்பதுகளில்தான்.

இந்தப் படைப்பாளிகள் யாவரும் என்ன கொள்கையோடு எழுதத் துவங்கினார்களோ அதிலிருந்து இம்மிகூட விலகாமல் தொடர்ந்தார்கள் என்பதுவும், அழகியலோடு கூடிய மனிதநேய வெளிப்பாடு என்ற ரீதியில் தொடர்ந்து மெருகேறி வந்தார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. ஆகவே, சிறுகதை வடிவத்தை மென்மேலும் புதுமையாக்கிப் புதிய எல்லைக்குக் கொண்டு போக முடிந்தது. மக்கள் திரளுக்குள்ளும், மக்களின் போராட்ட அலைகளுக்குள்ளும் சுவாசம் பெற்று வந்த இந்தப் படைப்பாளிகளுக்கு வரிசைக் கிரமமான உலகளாவிய- வரலாற்றுப் பூர்வீகம் இருந்தது. ஆண்டன் செகாவ், மாக்ஸிம் கார்க்கி, மைக்கேல் ஷோலக்கோவ், லூசூன், பிரேம்சந்த், பாரதியார், கு. அழகிரிசாமி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், டி. செல்வராஜ். கு. சின்னப்ப பாரதி, தொ. மு. சி. ரகுநாதன் என்கிற வரிசைக்கிரமமான வரலாற்றுப் பூர்வீகத்தின் நேரடியான வாரிசுகளாக இருக்கிற இவர்கள் சமகால வரலாற்றை இலக்கியத்தில் பதிவு செய்தனர்.

இதழ்களும் சிறுகதைகளும்

எண்பதுகளில் தமிழ்ச் சிறுகதைகளுக்கு ஏகப்பட்ட மவுசு. வார இதழ், மாத இதழ் எதுவானாலும் சிறுகதைகள் இல்லாத இதழ்களே கிடையாது. நாளிதழ்கள்கூட வாரம் ஒரு சிறுகதை பிரசுரிக்கின்றன. ராசிபலன் இல்லாத இதழ்கள் இருக்கக்கூடும். ஆனால், சிறுகதைகள் இல்லாத இதழ்கள் எதுவும் கிடையாது. அந்த அளவுக்குச் சிறுகதை இலக்கியத்திற்கு எண்பதுகளில் ஒரு மரியாதை இருந்தது.

ஆனால் வருகிற கதைகளில் 75 சதவிகிதமான தமிழ்ச் சிறுகதைகள் மட்டரகமாக இருந்தன.

சிறுகதை இலக்கியத்திற்குரிய கலைத்தன்மையோ, மனஆழத்தில் அதிர்வை நிகழ்த்தி ஆரோக்கியமான விளைவை நிகழ்த்துகிற அழகியலோ, எதுவுமில்லாமல் சொற்செட்டு என்ற ஒரே பலத்தில் பெரும்பாலான கதைகள் வருகின்றன. பெரும்பாலான கதைகள் சமூக அமைப்பு சம்மதத்துடன் அங்கீகரித்துவிட்ட பழமை படிந்த நீதிகளையே உணர்த்துகின்றன. ‘கேடு நினைத்தால் கேடடைவான்’ என்ற மாதிரியான ரொம்பப் பொதுப் படையான நீதிகள்.

சிறுகதைகளின் பணி இதுவல்ல; பழைய மாவைப் பழைய பாணியில் அரைத்துக் கொண்டிருப்பதல்ல; சமகாலத்தின் மிகப் புதிய நிலவரத்தின் வேரின் ஆழங்களை விசாரிப்பதே சிறந்த சிறுகதையின் கடமையாக இருக்க முடியும். இந்தக் கடமையை உணர்ந்து... சமூக வாழ்க்கையின் புதிய முகங்களைப் பிரதிபலிக்கும் போதுதான்... புதிய புதிய உத்திகளின் தேவை ஏற்பட்டுச் சிறுகதை இலக்கிய வடிவம் வளர்ச்சி ஏற்பட வழிவகுக்கும்.

அப்படியெல்லாம் இல்லாதது மட்டுமல்ல... பெரும்பாலான கதைகள், ரொம்பச் சுமாரான கலைத்தன்மை கூட இல்லாமல் வந்தன. அதற்குக் காரணம், வணிக ரீதியான இதழ்களின் வசதிக்கேற்ப விருப்பத்திற்கிணங்க படைப்பாளிகள் வளைந்து கொடுப்பதுதான். வணிக இதழ்களிலும் ஒன்றிரண்டு நல்ல சிறுகதைகள் வந்ததுண்டு, எண்பதுகளில்.

இந்துமதியின் ‘குருத்து’ என்ற சிறுகதையைக் குறிப்பிடலாம்; இது குமுதம் இதழில் வந்த நல்ல சிறுகதை. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக் கொலை செய்யப்பட்டதால் சீக்கிய இனத்தவர்களைத் தேடித் தேடிக் கொன்று குவித்த ஒரு வெறிக் கும்பலிடம் ஒரு சீக்கியச் சிறுவன் மாட்டிக் கொள்ள, அவனைக் காப்பாற்ற ஒரு இந்துத் தம்பதி முயல்கிற போராட்டத்தை உணர்ச்சிச் சித்திரமாக வரைந்து காட்டியது அக்கதை... இனவெறியின் கொடிய முகத்தையும் தோலுரித்துக் காட்டியது.

அதே போல்... ‘கல்கி’யில் வந்த ‘வருகை’ என்ற ஒரு சிறுகதை; சுப்ரபாரதிமணியன் எழுதிய கதை. ஒரு பிரதமர் ஆடம்பரப் பகட்டுகளோடு கூடிய எளிமையில் கிராமங்களைப் பார்வையிட வருகிறார். அவர் வருகையினால் அரசு நிர்வாகம் மூர்த்தண்யமாகி, கிராம மக்களின் சகஜ வாழ்க்கை தடுமாற, அதில் செல்லம்மா என்ற கிழவியின் வாழ்க்கை கிழிந்து போகிறது.

முற்போக்கு

வார இதழ்களிலும் வணிக இதழ்களிலும் அத்திபூத்த மாதிரி எப்போதோ ஒரு நல்ல சிறுகதை கண் சிமிட்டும். ஆனால் இதற்கு நேர்மாறாகச் செம்மலர், தாமரை போன்ற முற்போக்குச் சிந்தனையுள்ள இதழ்களில் வருகிற சிறுகதைகள் பெரும்பாலும் சமுதாயப் பயன்பாடுமிக்க நல்ல சிறுகதைகளாகவே திகழ்ந்தன.

எண்பதுகளில் நிகழ்ந்த மக்கள் போராட்டங்களின் வெக்கையில் நெருங்கி நின்று ஆதர்சம் பெற்ற முற்போக்குப் படைப்பாளிகள் புரட்சிகரமான மனிதநேயத்தோடும், எதிர்கால நம்பிக்கை உணர்வுகளோடும் கலையழகு மிக்க அற்புதக் கதைகள் படைத்தனர். கருவிலும் வடிவிலும் காலத்தின் புதுமைகள் செய்து, நவநவமான கதைகள் படைத்ததால், சிறுகதை இலக்கிய வடிவத்தை மென்மேலும் சிறப்புடையதாக்கி முன்னெடுத்துச் சென்றனர்.

இப்படிச் சொன்னால்... போதுமா? எடுத்துக்காட்டுக்கள் வேண்டாமா?

எண்பதுகளில் வந்த கதைகளில் சில இதோ:—

கந்தர்வனின் ‘மங்கலநாதர்’— சிறுகதை. ஒரு நடுத்தர சம்சாரி. பண்ணையார் நினைப்போடு மூத்த மகளுக்கு ஏகத் தடபுடலாய் ஊர்ப்பந்தி வைத்துத் திருமணம் செய்து வைத்து, கடனாளியாகிப் போகிறார். இரண்டாவது மகளுக்கு ஊர்ப்பந்தியில்லாமல்— சிக்கனமாய்— கல்யாணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். ஆனால்— ஒரு கல்யாணத்திலேயே ஓய்ந்து போனான் என்ற இழிசொல் வந்துவிடக் கூடாதே என்கிற பயம் வேறு. ஆக— அவரது குலதெய்வமான மங்கல நாதரின் கம்பீரம் அப்போதுதான் அவருக்குப் புலப்படுகிறது. இரண்டே மாட்டு வண்டியில் போய் கோவிலில் கல்யாணம் முடிகிறது கெளரவத்தோடு. பக்தி எதற்கெல்லாம் பயன்படுகிறது என்ற புதிய உண்மையைச் சொல்வதோடு— பொருளாதார வாழ்வில் நொறுங்கிப்போன ஒரு சம்சாரியின் மனஉணர்வு ஆழத்தை மிகத் துல்லியமாக உணர்த்தி விடுகிறது.

அதேபோல்... தமிழ்ச்செல்வனின் 'கோபக்காரப் பேரன்மார்கள்'. அஞ்சலகத்தில் இன்றைக்கும் பல்லாயிரக் கணக்கில் இருக்கும் ஈ.டி. ஊழியர்கள், பரிதாபத்திற்குரிய உத்தரவாதமின்மையோடு மிகக் குறைந்த சம்பளத்தில் உழைக்கின்றனர். இப்படிப்பட்ட ஊழியர்களின் வாழ்வின் அவலத்தைச் சொன்ன ஒரே தமிழ்ச் சிறுகதை என்கிற கௌரவத்தைப் பெறுகிறது ‘கோபக்காரப் பேரன்மார்கள்’ கதை. அதையும் வரலாற்றுப் பூர்வமான ஆழத்துடன் கதை சொல்கிறது.

ராமசாமி, வீட்டில் ரொம்ப முன்கோபி, அந்தக் காலத்தில் கையில் ஈட்டியோடும், தோளில் பையோடும் ஓட்டமாய் ஓடும் அஞ்சலக ஊழியர். பணியில் அவருக்குக் கோபமே வராது. ரொம்பப் பணிவு. அரசாங்க உத்தியோக விசுவாசம். அவரது பேரனும் அஞ்சலகத்தில் பணி புரிகிறான் ஈ. டி. ஊழியனாக. தாத்தா காலத்தில் போலவே, இவனுக்கும் பரிதாபகரமான வாழ்நிலை. ஆனால் இவனுக்கு ஏகக் கோபம் வருகிறது. வாழ்நிலையை எதிர்த்த இவனது கோபம், தனிக் கோபமாக இல்லை. சக கோபங்களை ஒன்றிணைக்கிற அர்த்தமுள்ள கோபமாக இருக்கிறது.

அற்புதக் கலை நேர்த்தியோடு வெளிப்பட்டுள்ள இக்கதை பல பரிமாணங்களோடு பிரகாசிக்கிறது. கால மாற்றத்தால் மனித மனம் மாறியிருக்கிற விதம், வரலாறு மாறியிருந்தாலும் வாழ்நிலை மாறாமல் இருக்கிற நிஜம், இப்படிப் பல கோணங்களைச் சிறுகதை பிரதிபலிப்பதின் மூலம்... படிம வார்த்தையைப் போல... இக்கதை அர்த்தச் செறிவு மிக்க அழகுப் படைப்பாகத் திகழ்கிறது. வாசகனை வசப்படுத்தும் கலைநயத்தோடும், வாசக ரசனையை மேம்படுத்தும் வாழ்க்கை நேயத்தோடும் இக்கதை சிறக்கிறது.

உதயஷங்கரின் ‘தண்டவாளத்தில் புறாக்கள்’ இதைக் கூடக் கதையாக்க முடியுமா? இப்படிக் கூடச் சாத்தியமா? என்கிற பிரமிப்பை நிகழ்த்துகிற மிகப் புதிய உத்தி. கதை ஒன்றுமேயில்லை. ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் கதைதான். நகரத்தில் உத்யோகம் பார்க்கிற குடும்பஸ்த மகன், தாயைப் பார்த்துவிட்டு ஊர் திரும்ப ரயிலேறி விட்டான். ரயிலுக்கு வெளியே நின்று அம்மா வழியனுப்புகிறாள். இதுதான் கதை. இது ஒரு சிறுகதையா என்று வியப்பூட்டும். ஆனால் கதை வாசித்து முடிக்கிற போது மனம் கனத்து விடும். வளர்த்து ஆளாக்கிய தாயின் அந்திம நிலையில், தான் செய்ய வேண்டிய உதவியைச் செய்ய முடியாமல் திணறுகிற மகனின் மனத்தவிப்பும், மகனை நம்பி ஜீவனம் செய்கிற அவலத்தில் நாள்தோறும் காகிதத்தையும் மணியார்டரையும் எதிர்நோக்கிக் காத்திருக்கும் தாயின் நிலையும், இந்த இரு இதயங்களையும் இப்படி நெரித்து மூச்சுத் திணற வைக்கும் பொருளாதார வாழ்வின் மூர்த்தண்யமும் நம் மனசுக்குள் சோக சித்திரமாய்ப் படிந்து உணர்வுகளைக் கலக்கிக் கோபமூட்டி விடுகின்றன.

ஜெ. மாதவராஜின் ‘மண்குடம்’: ஆறு ஓடுகிறது. அந்நகரின் அருகில் ஆறு வறண்டு அலங்கோலமாகி விட்டது. நகரில் குடிநீர்ப் பஞ்சம். நகராட்சியின் லாரியில் அடியும் பிடியுமாய்ச் சண்டை போட்டுத் தண்ணீர் பிடிக்க வேண்டிய அவலம். ஆகவே மண்குடம் மூலை சேர்ந்தது. ரப்பர் குடம் வந்தது. குடிநீருக்கான பெண்கள் போராட்டத்தில் அரசு அலுவலகம் முன்பு உடைக்கப்படுகிற குடங்களில் ஒன்றாக அந்த மண்குடம்.

கதையில் இதன் சிறப்பு இல்லை; வடிவத்தில்தான் அளப்பரிய புதுமையும், சிறப்பும். ‘செம்பகத்தின் இடுப்பிலே இருந்தாலே... எனக்குத் தனிப்பெருமை’ என்று தொடங்கி, மூலை சேர்ந்த சோகத்தில் குடிநீர்ப் பஞ்சம் வெளிப்பட்டு போராட்டத்தில் உடைபட்டு நொறுங்குகிற போது ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டதாக மண்குடம் மகிழ்ந்து கதை முடிகிறது. மண்குடத்தின் மனத்துடிப்பும் புலம்பலுமாகவே கதை தொடங்கி, இயங்கி முடிகிறது.

மிகப் புதுமையான ஒரு விஷயம், மிகப் புதுமையான உத்தியில் பூத்து வெளிப்பாடு கொள்கிறது.

‘எண்பதுகளின் இறுதியில் வந்த எனது ‘அரும்பு’:—

குழந்தை உழைப்பு குரூரமானது என்று நிறையக் கதைகள், கவிதைகள் கட்டுரைகள் எல்லாம் வந்துவிட்டன. ஆனால் என் கதையின் தனித்துவம் அதில் இல்லை.

‘உழைப்புக் களத்துக்கு வருகிற குழந்தைக்கும் தாவணி போட்டால்தான் வேலை’ என்று நிபந்தனை போடுகிறது தீப்பெட்டி அலுவலகம். அரசு, சிறுதொழில்களுக்குத் தரும் நெருக்கடியின் விளைவு, இந்த நிபந்தனை.

நொறுங்கிப் போன கிராமங்களின் அவலம். தீப்பெட்டி அலுவலகத்தை நம்பிய வாழ்க்கை, என்றாகிவிட்ட நடைமுறை. அதனால், மானக்கேடான அந்த நிபந்தனைக்கும் உட்பட்டுத் தீரவேண்டிய கட்டாயம். இதில்தான் ‘அரும்பு’ கதையின் தனித்துவம் இருக்கிறது. வளர்ந்து செல்லும் வாழ்க்கை நடப்பான மிகப் புதிய முகத்தை அதற்குரிய ஆழத்தோடு படம் பிடிக்கிற கருப்பு மைதான் அது.

இப்படிப் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம். விஷயம் என்னவென்றால், முற்போக்குப் படைப்பாளிகளின் சிறுகதைகள், கருத்தேர்வில் சோதனை மிக்க புதிய முயற்சிகள்— வடிவப்புதுமை— உத்திப்புதுமை என்று தொடர் அறுபடாமல் முன்னோக்கி வளர்ந்திருக்கின்றன. சிறுகதை இலக்கியத்தை உள்ளும் புறமுமாக வளர்த்துச் சென்றிருக்கின்றன.

இதன் காரணம் என்ன?

மக்கள் போராட்டங்களை நேசித்து ஆதரித்ததனால் தானா? அதுமட்டுமல்ல; அதையும் தாண்டி அவர்களிடம் ஒரு தத்துவம் இருக்கிறது. நடைமுறை வாழ்க்கையில் உரசிப் பார்க்க, உரசிப் பார்க்க சொக்கத் தங்கமாய் ஜொலிக்கும் ஒரு தத்துவம். அந்தத் தத்துவ வெளிச்சமே அவர்களுக்கு உலகையும், வாழ்க்கையையும், மனிதனையும் முழுமை வடிவில் 'பார்க்கச் செய்கிறது; வரலாற்றை அதன் இயங்கு நிலையில் முன்னோக்கிப் பார்க்க வைக்கிறது. எதிர்கால நம்பிக்கை கொள்ளச் செய்கிறது. மானுடத்தைத் தழுவி நின்று நேசிக்கத் தூண்டுகிறது.

முடிவுரை

சரி... ஒரு முடிவுக்கு வந்துவிடுவோமா?

முப்பதுகளில்— சுதந்திரப் போராட்ட காலத்தில்— சிறுகதை இலக்கியத்தில் ஏற்பட்ட எழுச்சி, எழுபதுகளில் இரண்டாம் சுதந்திரப் போராட்டக் காலத்தில்— சிறுகதைப் படைப்பாளிகளின் எழுச்சி மிக்க உதயம்.

இதெல்லாம் எண்பதுகளில் இல்லை.

இதே எண்பதுகளில் வணிக இலக்கியம் வரம்பு மீறித்தரம் தாழ்ந்து, வாசக ரசனையைச் சீரழித்தது. நசிவிலக்கியப் போக்குகள், தமது அழகியல் முகமூடியைக் கலைத்துவிட்டு, இடதுசாரிச் சிந்தனைக்கு எதிரான நம்பிக்கை வறட்சிப் போரை வெளிப்படையாக நடத்தின.

இதே காலத்தில் முற்போக்குப் படைப்பாளிகளாக இருந்த ஒரு சிலர் ஈழப் பிரச்னை— கிழக்கு ஐரோப்பியப் பொதுவுடைமை நாடுகளின் எதிர்ப்புக் கலவரங்கள் ஆகியவற்றால் சிதைந்தார்கள்; அல்லது மறைந்தார்கள். இவர்கள் ராஜேந்திரசோழன், ஜெயந்தன், பா. ஜெயப்பிரகாசம் போன்ற சிலர்.

ஆனால், இதற்கு மாறாக— தத்துவப் பலத்தோடு மக்கள் போராட்டங்களில் பங்கெடுத்த முற்போக்குப் படைப்பாளிகள், உறுதியோடு நின்று நிலைத்தார்கள் என்பது மட்டுமல்ல, வடிவங்களிலும் உள்ளடக்கத்திலும் புதிய ஆழங்களையும், புதிய எல்லைகளையும் தொட்டுக் கலைநயமிக்க சிறுகதைகளை வழங்கினார்கள். சிறுகதை இலக்கியத்தையும் தங்கள் தோளில் சுமந்து... சிகரமேற்றினார்கள். தமிழ்ச் சிறுகதை மகத்துவம் பெற்றது.

—மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ்த் துறையும்,
லில்லி தேவசிகாமணி நினைவு இலக்கிய அமைப்பும்
இணைந்து நடத்திய கருத்தரங்கில் எழுதி வாசிக்கப்பட்ட கட்டுரை.