உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுகதைப் படைப்பின் உள் விவகாரம்/019

விக்கிமூலம் இலிருந்து

19. “புதுமைப்பித்தன் வீதி”
வருமா?

சிறுகதை என்பது உரைநடைக் கவிதை. செறிவான வார்த்தைகளுக்குள் கச்சிதமான உள்— வெளிப்படப்பிடிப்பு, வாழ்க்கையை— காட்சியை— களத்தை— இயங்கும் மனிதனை— மனிதனுள் இயங்கும் உள்உலகை— சகலத்தையும் வார்த்தைத் தூரிகையால் வண்ணமயமான உணர்ச்சி ஓவியமாய் தீட்டுகிற கலை.

சிறுகதை என்பது வெறுமனே கதை சொல்கிற விஷயமாக இருந்த காலமும் உண்டு. முட்டாள்களின் கூறுகெட்ட காரியங்களின் குழறுபடியை வரிசைப்படுத்திச் சொல்கிற ‘பரமார்த்த குரு’ கதைகாலம் மட்டுமல்ல— நவீனச் சிறுகதை தோன்றத் துவங்கிய குளத்தங்கரை ‘அரசமர’க் காலத்திலும்கூட கதை சொல்லும் காரியமாகவே இருந்தது.

‘ஸ்ரீமகள் சாவித்திரி வந்தாள், அழுதாள், சிரித்தாள், நினைத்தாள், பார்த்தாள்’ என்ற மாதிரியாக கதை சொல்கிற போக்குத்தான் நீடித்தது.

அப்படியிருந்த தமிழ்ச் சிறுகதையை உலகளாவிய சிறுகதைத் தரத்தோடு உயர்த்துகிற மாதிரி நவீனக் கலையாக வார்த்தைகளின் மூலமாய் உணர்வுலகை வரைந்து காட்டுகிற—ஓவியக் கலையாக சிகரப்படுத்திக் காட்டியவர், புதுமைப்பித்தன்.

உலகளாவிய நவீனச் சிறுகதைகளின் தந்தைகள் என்று ஆண்டன் செகாவ், ஓ ஹென்றி, மாப்பசான், சார்லஸ் டிக்கன், கார்க்கி போன்ற மேதைகள் அறியப்பட்டிருந்தார்கள்.

தமிழ் நவீனச் சிறுகதைகளின் தந்தை என்று ஆணி அடித்த மாதிரி சொல்ல முடியும் என்றால்... அது புதுமைப் பித்தன் ஒருவர்தான்.

பெரும் பத்திரிகை, வணிகப் பத்திரிகை, ஜனரஞ்சகப் பத்திரிகை என்று அறியப்படுகிற தினமணி போன்ற நாளிதழ்களில் எழுதினார், பணிபுரிந்தார். அதே சமயத்தில் மணிக்கொடி, கிராம ஊழியன் போன்ற சிறு பத்திரிகைகளிலும் எழுதினார் புதுமைப்பித்தன்.

எல்லாரும் வாசிக்கத்தக்க கனத்த சிறுகதைகளை மணிக்கொடியில் எழுதினார். விமர்சகர்களையே சிக்கல்படுத்துகிற நுட்பமான சிறுகதைகளை தினமணியில் எழுதினார். பிரசுரமான இதழ் எதுவாயிருந்தாலும், எழுதப்பட்ட கதைகள் யாவற்றிலும் புதுமைப்பித்தனின் ஆத்மா முரணின்றி பேசியது.

புதுமைப்பித்தனின் கதைகளில் சமுதாய நடப்பு குறித்த தாட்சண்யமற்ற விமர்சனம் இருந்தது. ‘பொன்னகரம்’ போன்ற கதைகளில் வாசகனின் சட்டையைப் பற்றி உலுக்கி, நிஜத்தைச் சொல்லியது.

‘காஞ்சனையின் கனவு’, ‘சாபவிமோசனம்’ போன்ற சிறுகதைகள், இதிகாச விஷயங்களை சமுதாயப் பிரச்னைகளோடு பொருத்திக் காட்டி புதிய பரிமாணம் வழங்கி, தமிழ்ச் சிறுகதைக்கே புதிய வழித்தடம் போட்டுக் காட்டியது.

‘கடவுளும், கந்தசாமிப்பிள்ளையும்’, ‘ஒருநாள் கழிந்தது’ போன்ற கதைகள் சமூக நடப்பை சாட்டை வீச்சாக வீசிச் சொன்னது. ‘யந்திரம்’ என்ற சிறுகதை உலகத்தரமான சிகரச் சிறுகதை.

யந்திரமாய் மாற்றுகிற சமூகச் சூழலுக்குள்ளும் அசலைத் தொலைக்காமல் இயங்குகிற மனித சக்தி பற்றிய உன்னதத்தை மிகச் சாமான்ய மொழி நடையில்— ஒரு ஓட்டலை களமாக வைத்து— சொல்லப்பட்ட சிறுகதை.

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். நிறைய கட்டுரைகள் எழுதினார். சில நையாண்டிக் கவிதைகள் எழுதினார். நாவலும் கூட எழுதினார். ஆயினும்— சிறுகதை எழுத்தாளர்தான்.

கலைத்தரமுள்ள நவீனத் தமிழ்ச் சிறுகதைக்கு தந்தையாக இருந்த புதுமைப்பித்தன் முழுக்க முழுக்க வாழ்க்கை யதார்த்தங்களை யதார்த்தமாய் படைத்தளித்தார். அவரது சமகாலத்திலேயே மௌனி போன்றவர்கள் உணர்ச்சியற்ற மொழி நடையில் யாருக்கும் புரியாத இருண்மையாக சிறுகதைகள் எழுதி சுயமேதாவித்தனத்தை தம்பட்டம் அடித்தனர்.

மௌனி, லா. ச. ரா. போன்ற எழுத்தாளர்களின் இருண்மைமிக்க குழப்பக் கதைகள் பற்றி புதுமைப்பித்தனின் சமகாலத்தவரும், புதுமைப்பித்தன் மீது தீராக் காதல் கொண்டவருமான கு. அழகிரிசாமி இப்படி எழுதுகிறார்.

“என்ன எழுதுகிறோம் என்று தனக்கே தெரியாமல், தனக்குத் தெரிந்தாலும் மற்றவர்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்று எதையோ எழுதினால் எப்படி இருக்குமோ, பிரமாதமான விஷயம் உள்ளே அடங்கியிருப்பது போல பாவனை பண்ணுவதற்காக எழுதினால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிற கதைகளுக்கு இந்த இருவருடைய (மௌனி, லா. ச. ரா) கதைகளையும் உதாரணங்களாகச் சொல்லத் தோன்றுகிறது. இந்தக் கதைகளில் கருத்தாழமோ, இலக்கியச் சுவையோ, எந்த ஒருவகை இலக்கியச் சிறப்புமோ அறவே இல்லை.”

இதே கருத்துத்தான் புதுமைப்பித்தனுக்கும். ஆனால் இவ்வாறு சொல்லிக் கண்டிக்கவில்லை. யாராலும் எழுத முடியாத அறிவார்ந்த மொழி நடையில் எழுதப்படுவதாய் கருதப்பட்ட இக்கதைகள் மாதிரியே இவரும் எழுதிக் காட்டினார். நீங்கள் ஒன்றும் மேதாவித்தனமான காரியம் ஆற்றவில்லை' என்பதை செயலில் நிரூபித்துக் காட்டினார். புதுமைப்பித்தன். மௌனி போன்றவர்களை திகைக்க வைத்துத் திணறடிப்பதற்காகவே, ‘கயிற்றரவு’ ‘மனக்குகை’ போன்ற சிறுகதைகளை எழுதிக் காட்டினார்.

இப்படிச் சமகால இலக்கிய நோய்களை எதிர்த்து, இலக்கியப் போராட்டமும் நடத்தி நவீன யதார்த்தவாதச் சிறுகதைகளைக் காப்பாற்றி கௌரவப்படுத்தியவர் புதுமைப்பித்தன்.

இந்த அற்புத நாயகனைப்பற்றி கு. அழகிரிசாமி எனும் மிகச் சிறந்த படைப்பாளி மனம் திறந்து இப்படி எழுதுகிறார்: “சிறுகதைகளை இவரைப் போன்று இவ்வளவு உன்னதமான முறையில் புதுமையும், கனமும், வேகமும், தரமும், ஆழமும், உருவமும் கொண்டவையாக வேறு யாரும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஆசியாவிலேயே எழுதியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உலகம் முழுவதுமே சிறுகதை இலக்கியத்தின் தந்தையர் என்றும், ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்கள் என்றும் போற்றப்படும் மாபஸான், செகாவ் என்ற இரு எழுத்தாளர்களோடு ஒன்றாக வைத்து எண்ணத்தக்க எழுத்தாளர் புதுமைப் பித்தன்.

இன்னும் பிரமாதமாக வர்ணித்துப் பாராட்டுகிறார் கு. அழகிரிசாமி. இடை செவலைச் சேர்ந்தவரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கு. அழகிரிசாமியால் பாராட்டப் பெற்ற— ஜெயகாந்தன் போன்ற படைப்பாளிகளால் ‘ஆசான்’ என்றும், ‘முன்னோடி’ என்றும் போற்றப்பட்ட— இன்றளவிலான வாசகனுக்கும் புத்தம்புது படைப்புகளாகத் தோற்றமளிக்கிற கதைகளை வழங்கியவர் என்று மக்களால் ஆராதிக்கப்பட்ட— எழுத்தாளர் புதுமைப் பித்தனை அரசாங்கம் அங்கீகரித்திருக்கிறதா?

‘தமிழ், தமிழ்’ என்று ஓயாமல் உச்சரித்தவர்கள்— ‘தமிழைக் காக்க உயிரைத் தருவோம்’, என்று சபதமிட்டு முழங்கியவர்கள் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள், ஆண்டார்கள்.

தமிழின் சிறந்த இலக்கிய மேதையான புதுமைப் பித்தனை அரசாங்கம் இன்றும் அங்கீகரிக்கவேயில்லை என்பது எத்தனை கசப்பான— அவல்மான— அநீதியான— முரண்பாடு! உலகத் தரத்திற்கு தமிழ்ச் சிறுகதையை உயர்த்தி தமிழுக்கு மகுடம் சூட்டி மகிமைப்படுத்திய புதுமைப் பித்தனுக்கு தமிழக அரசு சிலை வைத்து கௌரவித்தது உண்டா? இல்லை!

புதுமைப்பித்தன் விட்டுச் சென்ற குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்க முயற்சித்தது உண்டா? இல்லை.

புதுமைப்பித்தன் படைப்புகள் யாவையும் தேச உடைமையாக்கி, அச்சிட்டு எளிய விலையில் மக்களுக்கு வழங்க முன்வந்தது உண்டா? இல்லை.

புதுமைப்பித்தன் பெயரில் நினைவுப் பரிசு ஒன்றை அறிவித்து, ஆண்டுதோறும் சிறுகதைப் போட்டிகள் நடத்தி, தமிழ்ச் சிறுகதையை வளர்ப்பதற்கு தமிழக அரசு விரும்பியதுண்டா? இல்லை.

சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் ‘5 பிரதான வீதி’யில் இன்றும் புதுமைப்பித்தன் வீடு இருக்கிறது. அந்தப் பிரதான வீதிக்காவது ‘புதுமைப்பித்தன் வீதி’ என்று பெயர் வைக்கிற எளிய முயற்சியாவது தமிழக அரசு செய்தது உண்டா? இல்லை.

எத்தனை இல்லைகள்! தமிழையும் தமிழ்ச் சிறுகதையையும் போற்றிக் காக்க வேண்டிய தமிழக அரசு கடமை தவறிய குற்றத்திற்கு சாட்சிகளாக... எத்தனை ‘இல்லை’கள்!

ஆனால்... மொழி வளர்ச்சிக்காகவும், இலக்கிய வளர்ச்சிக்காகவும் ஆண்டுதோறும் சில கோடிகள் செலவழித்து (!?) வருகிறது என்பதை யாரும் மறுக்கவும் முடியாது.

புதுமைப்பித்தன் வீடு இருக்கிற வீதிக்குக்கூட ‘புதுமைப் பித்தன் வீதி’ என்று பெயர் வைப்பதுபற்றிக்கூட யோசிக்க முடியாத அளவுக்கு வெகு ‘பிஸி'யாக இயங்குகிறது, அரசு!

இதுபற்றி— தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், மக்கள் யோசித்தாக வேண்டும். தமிழுக்குரிய கௌரவத்தை போராடிப் பெற்றுத் தருகிற உரிமையும், கடமையும் தமிழக மக்களுக்கு உண்டு.

தமிழக அரசு... இனியேனும் புதுமைப்பித்தனைப் பற்றி யோசிக்குமா?