உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்/பொய் சொன்ன வியாபாரி

விக்கிமூலம் இலிருந்து

30
பொய் சொன்ன வியாபாரி


வியாபாரி ஒருவன் பயணம் செல்லும் போது, தன்னுடைய பணப் பையை இழந்து விட்டான்.

தன்னுடைய பணப்பையில் இரண்டாயிரம் ரூபாய் வைத்திருந்ததாகவும், அதைக் கண்டு பிடித்துக் கொடுப்பவருக்கு, 500 ரூபாய் பரிசு அளிப்பதாகவும் அறிவித்தான். ஒரு தொழிலாளியின் கையில் அந்தப் பை அகப்பட்டது.

அதைக் கொண்டு போய் வியாபாரியிடம் கொடுத்தான். ஆனால், அந்த வியாபாரிக்கு 500 ரூபாய் பரிசு கொடுக்க மனம் வரவில்லை.

“என் பையில் பணத்துடன் ஒரு வைர மோதிரம் இருந்தது. அதைக் கொண்டு வந்து கொடுத்தால், நான் அறிவித்தபடி 500 ரூபாய் தருகிறேன்” என்று பொய் சொன்னான். வியாபாரி.

தொழிலாளி, நீதி மன்றத்தில் முறையிட்டான்.

வியாபாரியைப் பார்த்து நீதிபதி, 'உன்னுடைய பையில் 2000 ரூபாய் இருந்ததாகவே அறிவித்தாய். வைர மோதிரமும் இருந்ததாக இப்போது கூறுகிறாய். ஆகையால், தொழிலாளி கண்டு எடுத்த பையில் வைர மோதிரம் இல்லை. எனவே, இந்தப் பை, உன்னுடைய பையாக இருக்க முடியாது. அதனால், இந்தப் பை, யாருடையது என்று தெரியும் வரை நீதிமன்றத்திலேயே இருக்கட்டும். மறுபடியும், நீ விளம்பரம் செய், வைர மோதிரத்துடன் கூடிய உன் பை ஒரு வேளை அகப்படலாம்!” என்று தீர்ப்புக் கூறினார்.

வியாபாரி தான் கூறிய பொய்யை உணர்ந்து, மன்னிப்புக் கேட்டு, தொழிலாளியிடம் 500 ரூபாயைக் கொடுத்து விட்டுத் தன் பையைப் பெற்றுக் கொண்டான்.