சிலையெழுபது, ஓலைச்சுவடி ஆய்வு நூல் 2015/001
என்னுரை
சுவடியியலும், பதிப்பியலும் என்ற பட்டயப் பேற்றிற்காக ஏதேனும் ஒரு ஓலைச் சுவடியினைத் தேர்ந்தெடுத்துப் பதிப்பிக்குமாறு என் நெறியாளர் முனைவர் திரு.வீ. அரசு அவர்கள் என்னைப் பணித்தார். பின் அந்த தேர்ந்தெடுப்பில் அவரின் தலையீடு இல்லை. இது என்னடைய தேடுதலுக்கு ஒரு நல்ல நெறியாக அமைந்தது. ஆனால் என்னுடைய அனைத்து முறையான பணிக்கும் பக்கபலத்தையும் தைரியத்தையும் கொடுத்தார். அவருக்கு இந்த பதிப்புரையின் இறுதியில் நன்றி கூறுவது வழக்கமான ஒன்றாக அமையும் என்பதினால் என் பணியினைச் செய்வதற்கு சிறப்பாக நெறியாற்றிய நெறியாளருக்கு முதற்கண் நன்றியினைத் முதலிலே கூறிவிடுவது சிறப்பாக அமையும்.
சுவடியினைத் தேர்ந்தெடுக்கும் போது, அனைவருக்கும் அறிந்திருப்பது (பெரும்பாலும் சுவடியின் பாடுபொருள் சோதிடம். மருத்துவம், இலக்கியம், தனிப்பாடல், சிற்றிலக்கியம் போன்றவை இருப்பதாகவே) போல் அறிந்திருந்தேன். ஆனால் சுவடி தொடர்பான சுவடி விவர அட்டவணையைக் காணும் போது பல செய்திகள் அறிய முடிந்தது. அதனால் பாடுபொருள்களில் மாறுபட்ட சாதி வரலாறு தொடர்பான தாள் சுவடிகள் பல இருப்பதைக் கண்டேன். அதனால் பலரும் அறிமுகப்படுத்திய இலக்கியத்தை மீண்டும் பதிப்பிக்க விருப்பமின்றி சத்திரியர் சாதி வரலாறு நாயர்மார் சாதி வரலாறு போன்றவற்றை தேர்ந்தெடுத்தேன். என் நெறியாளரும் “ரொம்ப நல்லது சிறப்பாக செய்மா” என்றார். இது போன்று எல்லா விஷயங்களுக்கும் மறுப்பே கூறாமல் நெறிப்படுத்தினார். ஆனால் சுவடி அலுவலகத்தின் முறைப்படி அதற்கு தடையே ஏற்பட்டது. பின் வேறு வழியின்றி வேறொரு சுவடியினைத் தேர்ந்தெடுத்தேன். அது மற்றவை போல் அமையவில்லை. உதாரணமாக ஏற்கனவே அச்சில் வந்த சிலையெழுபதும் நான் தேர்ந்தெடுத்த சிலையெழுபதும் முற்றிலும் (பாடல்கள்) மாறுபட்டு அமைந்திருந்தது. “இந்த மாற்றத்தைப் பதிவு செய்யும் வகையிலும், சுவடியில் பதிப்பு பணிக்காகவும்” இந்த சிலையெழுபதினைத் தேர்ந்தெடுத்தேன்.
சிலையெழுபது
சிலையெழுபது என்ற பெயர் கொண்ட மூன்று சுவடிகள் கீழ்த்திசை சுவடி நூலகத்தில் கிடைத்தது. அவற்றின் எண்கள் D282 - TD 158 11 ஏடுகளும், D283-TD159 8 ஏடுகளும், R5489 - T.R. 2430 9 ஏடுகளும் கொண்டவை.
இவற்றில் D283 என்ற எண்ணுடைய ஓலை சேதமடைந்திருந்தது. அதனால் D282 என்ற என்னுடைய ஓலைச் சுவடியினைத் தேர்ந்தெடுத்து பதிப்பிக்க முயற்சி எடுத்தேன். இது தொடர்பாக அச்சில் வந்த சிலையெழுபதினைத் தேடினேன். மறைமலை நூலகத்தில் மூன்று பிரதிகள் இருந்தது. அதன் விபரம் பின்னிணைப்பாக அச்சேற்றப்பட்டவை என்று தலைப்பிட்டுக் கொடுத்துள்ளேன்.
இரண்டினையும் ஓப்பிட்டு பார்க்கையில் முன்னர் கூறியது போல் பாடல்கள் மாறுபட்டே அமைந்திருந்தன.
ஒரு பாடல் மட்டுமே சிறிது ஒற்றுமையுடன் இருந்தது.
மலையினிற் பொலங்கொண் மேரு மலையன்றி மலைமற்றுண்டோ
கலையினி லுரைப்ப வெண்ணெண் கலையன்றிக் கலைமற்றுண்டோ
வலையினி லுகாந்த தீத்தத் தலையன்றி யலைமற் றுண்டோ
சிலையின்றிற் றிறங்கூர் வனியர் சிலையன்றிச் சிலைமற்றுண்டோ"
(அச்சு நூல்)
“மலையினிற் செம்பொன் மலையின்றி மலை வேறுண்டோ
கலையினா லறுபத்து கலையன்றி கலை வேறுண்டோ
அலையினாலு கந்தவெள்ளத் தலையன்றித் தலை வேறுண்டோ
சிலையிற் பெருத்த வன்னிச் சிலையன்றிச் சிலைவேறுண்டோ
(ஓலைச்சுவடி)
மற்றவை வேறுபட்டே அமைந்துள்ளது. R5489 T.R 2430 என்ற சுவடியும் மற்ற இரண்டு சுவடியினை ஒத்தே அமைந்துள்ளது. அவற்றைவிட சில பாடல்கள் கூடுதலாகவே அமைந்துள்ளது. ஆனால் அச்சு நூலோடு ஒன்றவில்லை.