சிலையெழுபது, ஓலைச்சுவடி ஆய்வு நூல் 2015/007
பின்னிணைப்பு
சிலையெழுபது
மூலமும் உரையும்
பாயிரம்
கடவுள் வணக்கம்
கொச்சகம்
திருவளரும் வன்னியர்செஞ் சிலையெழுப தினைவிளம்ப
மருவளர்பைங் கடுக்கையும்வெண் மதியுமிலைத் தோன்வாமத்
துருவளரும் வரைமடந்தை யுவந்தளிப்பத் தோன்றிவரந்
தருவளஞ்செய் விகடசக்ரத் தந்திமுகன் றாடொமுவாம். (1)
நூற்பெயரும், ஆக்கியோன் பெயரும்
அறுசீர்கழிநெடிலா சிரியவிருத்தம்
முந்துநாள் வீர சம்பு முனிசெய்மா மகத்திற் போந்த
சந்ததி யார்சீ ரோது கெனத்தகு முதியோர் கேட்ப
இந்தணி சடிலத் தெம்மா னிணைக்கழல் பராஅ யிசைத்தான்
செந்தமிழ்க் கம்பன் செம்பொற் சிலையெழு பதுவா மிந்நூல். (2)
கச்சித்தலத்தின் சிறப்பு
வேறு
மெச்சுந் தரங்கக் கடலுலகின் மிளிருந் தலங்கண் மிகவெனினு
மிச்சித் தவர்தங் குறைவெயின்முன் னிமம்போற் கடிதற் கியலாவே
பச்சை வண்ணத் திருமாலும் பவள வண்ணச் சோதியும்வாழ்
கச்சித் தலத்தைப் புரையுமென்க் கழறத் தலங்கள் காணேமால். (3)
கோத்திரச் சிறப்பு
சாத்திர மறைகள் சொற்ற தனிநியமம் வாழா தோர்
சூத்திரந் தவறில் வன்னி தோன்றுமெய்ப் புகழ்காப் பாளர்
மாத்திரை யளவு ஞான மறைப்பின்மா தவங்கூர் சம்பு
கோத்திர வரசர்க் கொப்பக் கூறுவ தெவரை மாதோ. (4)
உற்பவச் சிறப்பு
கொச்சகம்
திங்கண்மும் மழைபிலிற்றச் செழித்துயிர்க ணனிமல்க
அங்கமோ ராறுமறை யந்தணரா குதியோங்கத்
துங்கமனு நெறிதழைப்பத் துகளறுவன் னியினின்றும்
பங்கயனு முதலிவரைப் படைத்துலகு படைத்தாஉல். (5)
குலச்சிறப்பு
விதிகுலத்தோர் சிறப்புறச்செய் வேள்விக்குச் சிறந்தவன்னி
உதிகுலத்தோ ராதலிஉ லுயர்குலத்தோ ராமிவர்க்குத்
துதிகுலத்தோ ரொவ்வாரேற் சொலும்வணிக குலத்தோரும்
நதிகுலத்தோர் களுமெங்ங னாட்டினிலொப் பாவாரே.(6)
இதுவுமது
மறைக்குலத்தி லுதித்தாலென் மறையுணர்ந்தா லென்வணிகர்
நிறைக்குலந்தி லுதித்தாலென் னிதிபடைத்தா லென்னான்காம்
முறைகுலத்தி லுதித்தாலென் முயற்சிசெய்தா லென்வன்னி
இறைக்குலத்தில் உதித்தவரே யிகபரனென் றியம்புவரே. (7)
படைத்துஏணத்தஏலவர் குலச்சிறப்பு
விடையுடையார் வரமுடையார் வேந்தர்கோ வெனலுடையார்
நடையுடையார் மிடியுடைய நாவலர்மாட் டருள் கொடையார்
குடையுடையார் மலையமன்னர் குன்றவர்பல் லவர்மும்முப்
படையுடையார் வனியர்பிற ரென்னுடையார் பகரீரே. (8)
இதுவரையிலும் நூலுக்குப் பாயிரங்கூறி
இனி நூல் கூறுவராயிற் றென்க
பாயிரம் முற்றிற்று
நூல்
கொச்சகம்
சொன்மங்கலம் பொருந்துந் தொல்லுலகிற் பல்லுயிரும்
நன்மங்கலம் பொருந்து நான்மறையு நனிவிளங்கும்
வன்மங்கலம் பொருந்தி வளர்வனிய குலவரசர்
வின்மங்கலம் பொருந்தும் விறற்றசாமி நாட்கொளினே.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
கலையாய் வன்னி குலோத்துங்கர் கரத்திற் கவின் கொண்
டமைந்தவென்றிச், சிலையா லன்றோ வேழபுயலுஞ் சேணிற் பொலி
யுந் திவாகானும், அலையார் கடலுங் கடையனனு மடன்மா ருதமு
மடங்கியொரு, நிலையாய் நின்ற மனுநீதி நெறியு நின்ற தறியீரோ.
இதுவும் அது
வேறு
மலையினிற் பொலங்கொண் மேரு மலையன்றி மலைமற் றுண்டோ
கலையினி லுரைப்ப வெண்ணெண் கலையன்றிக் கஏலமற் றுண்டோ
வலையினி லுகாந்த தீத்தத் தலையன்றி யலைமற் றுண்டோ
சிலையினிற் றிறங்கூர் வனியர் சிலையன்றிச் சிலைமற் றுண்டோ.
இதுவும் அது
வேறு
அமரரொரு புறமரிய முனிவரொரு புறம்விசயை யரிவையொரு
புறமடலுறுஞ், சமனுமொரு புறம்விரவு கழுகுமொரு புறநெடிய தரும
மொரு புறமுடைகொள்வாய், ஞமலியொரு புறமெரிக ணலகை
யொரு புறமிடர்செய் நரிகளொரு புறமகிழவெஞ், சமர்செய்திடு மணி
மவுலி யணிவனிய குலவரசர் தமதுகர மருவுசிலையே.
இதுவும் அது
வேறு
முட்டரை யறிஞ ராக்கு முனிவரைத் தவஞ்சீர்ப் பிக்கும்
சிட்டருக் கரசு நல்குஞ் சேர்ந்தவர்க் குரம்பா லிக்கும்
மட்டறு தெவ்வர் தம்மை வலிதப வச்சு றுத்தும்,
துட்டரைத் தொலைப்ப வன்னி தோன்றுபொற் சிலையொன் றம்மா.
விற்பிடிச்சிறப்பு
மிடிகரக்கப் புலவருக்கு மிகுபொருளீந் திடுவார்தம்
அடியிரக்கத் தொடுபணிவார்க் கரசுதருங் கொடையாளர்
படிபுரக்க வவதரித்த பண்ணுடர் கரத்தமைவிற்
பிடியுரத்தி னாலன் றோ பெருஞால முரமுறலே.
இதுவுமது
மைப்படியு முடலவுணர் வருக்கமாய் வுற்றதுவும்
இப்படியோ டனைத்துலகு மிணையினலம் பெற்றதுவும்
நெய்ப்படியுஞ் சுசியுதித்தோர் நீள்பகழி தொடுசிலையின்
கைப்பிடியாண் மையினல்லாற் கடைப்பிடியே தியம்பீரே.
வின் மணிச்சிறப்பு.
பணியிறைக்கங் கணனடியைப் பழிச்சுநர்வா தாபிமுடி
துணியிறைவர் பண்ணுடர் சோதிமணி முடிவனியர்
அணியிறையேந் தியவயிர மாஞ்சிலையி லடருநவ
மணியிரையக் களகளென வயிறிரையு மாற்றலர்க்கே.
காணியின் சிறப்பு
கன்னாணும் புயமுடையார் கடனாணு மருளுடையார்
மன்னாண்மைப் பொலிவுடையார் மணிமுடிவன் னியர்தாங்கும்
வின்னாணின் வலியாலே வியனிலம்வாழ் வதுமடையார்
தந்நாண மிழந்துவலி தாழந்துகரங் குவிப்பதுமே.
கலி விருத்தம்
உலகறிமும் முரசொலிப்ப வுலைவில்கலி வெருண்டொளிப்ப,
நிலவெனவெண் குடைகவிப்ப நிகழ்பவம்பின் புறந்தவிப்ப
இலகுபுலிக் கொடிதழைப்ப விருங்குடிகள் விருந்தழைப்ப
அலகிலவா வியற்றும்வன்ய ரணிசிலையேந் துவதம்மா.
அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
இதுவும் அது.
அலையை யெடுக்கா விடிற்பரவைக் காற்ற லேதவ் வரவரசன்
தலையை யெடுக்கா விடிற்பொலிவு தரணிக் கேது விதுவளரும்
கலையை யெடுக்கா விடிற்காட்சி கங்குற கேது வன்னியர்செஞ்
சிலையை யெடுக்கா விடிலுயிர்க்குச் செழிப்பங் கேது செப்பிடினே.
இதுவும் அது
வேறு
வட்டவுல கிற்கொடிய நெட்டவுண ரைச்சமரின் மட்டறவி
டித்தெதிரெயிற், கிட்டவறு பட்டதலை நட்டுவிழ மொட்டையுடல்
கெட்டுருட ரக்குருதிநீர், கொட்டநுரை கட்டிடம் கச்சுழிசு ழித்தலை
கொழித்துநதி யிற்புகவழி, விட்டுறுமி நெட்டையிடு மக்கினி குலத்
ரச விக்ரம ரெடுத்தவிலையே.
இதுவும் அது
வேறு
குடைகொண் டெழுந்தான் மாயனெடுங் குன்றந் தனையான்
குலங்களிக்கப், புடைகொண் டெழுந்து பொழிந்தபெரும் புயல்க
விரிந்த வன்னியர்விற், படைகொண் டெழுந்தார் புவிசெழிக்கப் பதறி
யவுணர் தென்பதிக்கே, விடைகொண் டெழுந்தே யொருநாளு மீளா
வகைசென் றடைந்தனரே.
வில்வளைத்தற்சிறப்பு
கொச்சகம்
தனுவணங்கொண் டுலகளிப்பத் தார்வேந்த ரெனவுதித்தோர்,
தனுவணங்க சனும்வெள்கித் தாள்வணங்கு மெழின்மிக்கோர்,
தனுவணங்க கலவெவர்க்குந் தாய்போனன் ஈற்றும்வன்யர்,
தனுவணங்க தாயலர்க டஞ்சமென வணங்காரோ.
நாணேற்றுதற் சிறப்பு
அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
ஓங்குபுகழ் வன்னிமன்ன ரொன்னலார்த மைப்புறங்கண் டுலகங்
காக்கத், தாங்குவரிச் சிலைவணக்கிச் சரோருகக்கை யாற்றிண்டித்
தனிநாண் பூட்டப், பாங்குறுமு வுலகினரும் பைங்கழைத்தோண் மட
நல்லார் பசும்பொன் வண்ணப், பூங்கமுகின் மங்கலநாண் பூட்டுதல்
போன் மெய்ப்புளகம் போர்ப்பர் மன்னே.
குணத்தொனிச்சிறப்பு
எழுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
நெடியதிரை யெழுகடலி னொலியுமழை முகிலொலியு நிகழும்யுக
முடிவின் முடுகும், ஒடிவில்பெரு வளியொலியு முருமொலியு மிணையி
லென வுரகர்விழி விதிரவெருவிக், கொடியதிது கொடியதென விபுதர்
நிலை கெடவவுணர் குடர்குலைய வடர்தி சையுடன், படியதிர வனியர்
சிலை தழுவுகுண வொலியினிலை பகர்வதெவ னரித ரிதரோ.
அம்பறாத்தூணிச்சிறப்பு
கொச்சகம்
அம்பர்யா மென்றிறுமாந் துறைவதுண்டவ் வமரர்யாங்
கம்பரா மென்றேத்தக் கவியரசாய் வாழ்வதுமுண்
டிம்பரா ருஞ்சொல்வன்ய ரேலாருக் கிடரிழைக்கு
மம்பறாத் தூணியுண்டே லாவியங்கத் தெவர்க்குமுண்டே
பிரமாத்திரச்சிறப்பு
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
வரமிகுவன் னியர்வணங்கா முடியரசர் வண்மைதனை வரையவேண்டிற்
சிரமகுட மன்னவராய்ப் பற்பலதே யங்களினுந் திகழவோர் தம்முள்
விரவலரைப் பொன்னிலத்து மித்திரரை யிந்நிலத்தும் வீறி வாழ்வான்
பிரமசிரத் தானிறுவும் பெற்றிமைகண் டாய்ந்தெவர்தாம் பேசற்பாற்றே.
நாராயணாத்திரச் சிறப்பு
காரியலுங் கரதலவன் னியவீர ரடுசமரிற் கனன்றே யுய்க்கும்
பேரியனா ராயணாத் திரத்தினுக்கிந் திராதிபிர மாதியோரும்
நேரியல வுட்குவரே லியாவரெதிர் வாழ்த்தியதை நின்றுதாழ்வோர்
பாரியர்மங் கலநாண்பன் னாளுநிஏல பெறவரம்பா லிக்கு மம்மா.
பாசுபதாத்திரச் சிறப்பு
கொச்சம்
உருத்திரவின் வயங்குதிங்க ளுதயனெதி ரொளிர்தருங்கொல்
உருத்திரளும் வயிரவரை யுறழதோளார் வன்னிமன்னர்
உருத்திரத மிவர்ந்திகலோ ருரஞ்சாய்ப்பத் தொடுக்குமழல்
உருத்திரவன் படைக்குமற்ற வும்பர்படை யொப்பாமோ.
அபிமந்திரித்தற் சிறப்பு
அறுசீர்க்கழிநெடி லடியாசிரிய விருத்தம்
அக்கரமொன் றக்கரமூன் றக்கரமைந் தக்கரமெட் டாதி யாய
எக்கடவுண் மந்திரமு மெண்ணிலுருச் செபித்துநினை வெய்தி னோரும்
மிக்கதிது வெனவியப்ப விறல்வன்ய குலவரசர் விடுங்கோல் சென்று
தக்கவபி மந்திரமாட் சியினமர்வென் றிறைவனிடஞ் சார்த லாலே.
நாணிறங்குதற் சிறப்பு
பூதலத்தோர்க் கிடரியற்று மரக்கருடல் பிளந்துவெற்றிப்
புனைந்த வோலை. மீதலத்தோர்க் குணரவிடுத் தவர்பயந்தீர்த் தாக்கி
யர்கள் வெரீஇத்தோ டோய்ந்த, காதலருக் கழுதரற்றித் கழுத்திலகு
மங்கலநாண் கழித்த தற்பின், தாதலர்தா ரணிவனியர் தனிச்சிலைநாண்
களித்திறங்கித் தயங்கு மாதோ.
வாள்
வீரவாட்சிறப்பு
விண்ணவர்க்கு விருந்தினராய் மேவியர மாதரின்பம்
மண்ணின்மரு வலர்மருவ வாழ்விக்கும் பண்ணாடர்
திண்ணமுறு வன்னிமன்னர் திருக்கரத்தி லேந்தியமர்
நண்ணும்வய வாண்மகிமை நாமெங்ங னவில்வதுவே.
வேல்
வேலேந்தியகாலாட்படைச் சிறப்பு
செய்யகத்து வளநாடு தேர்புலவர்க் கினிதளிப்பார்
மெய்யகத்து வன்னியர்செவ் வெள்பலவா முருக்கொளல்போல்
கையகத்து வேலேந்து காலாளின் படையினன்றி
வையகத்து மருவுகலி மற்றொன்றா லகலாவே.
யானை
யானைப்படைச்சிறப்பு
ஒரானை முகத்தானை யுலகத்தோர் முன்னிறுத்திப்
பேரான கருமமெலாம் பிறழாது முற்றுகிற்பார்
காரான வுடலவுணர் கலங்குறமுன் னிறுத்திவன்யர்
போரானைப் படையானே போர்வயங்கோ டலினன்றே.
குதிரை
குதிரைப்படைச்சிறப்பு
பூவேறி நான்முகனும் புள்ளேறித் திருமாலும்
சேவேறிக் கண்ணுதலுஞ் செய்வதென்னே தீஞ்சுவைகொள்
பாவேறிப் புகழ்பெற்றுப் பாராளும் வனியர்தழல்
மாவேறிப் பகைவென்று மாநிலங்காத் தருள்வாரே.
தேர்
தேர்ப்படைச்சிறப்பு
பார்விழாப் பெறக்காக்கும் பண்ணாடர் பதமலரில்
போர்விழாப் புரிவேந்தர் பொன்னவிர்மா முடிவணக்கி
யார்விழா திருப்பார்க ளமரர்மலர் மழைசொரியத்
தேர்விழா வுறவுகைக்கிற் றிருவிழாத் தினமென்றே.
இதுவும் அது
செங்கதிரோ னோராழித் தேரேறித் திகழவதுவும்
அங்கசன்மா ருதத்தேரூர்ந் தடலாண்மை செலுத்துவதும்
துங்கமனு நெறிபிழையாத் துகளறுவன் னியவீரர்
அரண்
அகழின் சிறப்பு
பேராழிச் செலுத்திவயம் பெறவனியர்க் கிடமாகிக்
கூராழிப் பரனகரைக் குறைசொல்கம்பை நகருடுத்திட்
டோராழித் தேரிருபா லொதுங்கவுய ரெயிற்புடைசூழ
சீராழி யாமகழின் சிறப்பெவரே யுரைப்பவரே.
அரண் சிறப்பு
சரண்புகுந்தீ சனைச்சான்றோர் தம்முயிரைக் காப்பரெனும்
வரம்புளதங் கதுவியப்பின் மருவியதோர் வழக்கன்றால்
முரண்புகுதோட் செருநர்வரின் முதுலகோர் வன்னியர்தம்
அரண்புகுந்து தம்முயிர்காத் தமர்ந்திருப்ப ராதலினே.
அரசு
கொடிச்சிறப்பு
சுடர்க்கொடியும் வனக்கொடியுந் துகளில்வெற்றிப் புலிக்கொடியும்
அடற்புவிமூன் றினுந்தாமே யரசியற்றும் படிதாவக்
கடற்புவியி னிரந்தரமுங் கருணைபுரி தாயேபோல்
இடர்பகையி லாதுவன்ய ரெவ்வுயிரும் வளர்ப்பாரே.
அரசாட்சிமண்டபச்சிறப்பு
அண்டர்மலர் மழைசொரிய வந்தணர்பல் லாண்டிசைப்பத்
தண்டனிட்டுப் பொருந்தலருஞ் சயங்கூற வன்னிமன்னர்
கொண்டபசும் பொன்வேய்ந்து குலவுபல மணிகுயிற்றும்
மண்டபத்தில் வீற்றிருக்கை மண்டபம்பெற் றிடுபேறே.
சிங்காதனத்திருத்தற்சிறப்பு
எண்சீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
தங்காத னன்பனிறை யென்ன மாதர் சந்ததமுந் தொழுதெழு
வார் வலியா தாகம், தங்காத னனையநட்பிற் சிறந்தே யாவுந் தகுபு
லியு மோர்துறையிற் றண்ணீர் மாந்தும், சிங்காத னம்பசும்பொன்
மணிதூ சாதி தெளிவுறுவே தியர்க்குதவும் வன்னி மன்னர், சிங்காத
னத்தின்மிசை யமர்ந்து நாளுந் திகழரசு செயுங்கருணைச் செயலாலன்றோ.
முடிதரித்தற்சிறப்பு
கொச்சகம்
தன்முடிமேற் புவிதாங்குந் தனியரவிற் றுபில்வோற்கும்
சென்முடிவாம் பரமனுக்குந் தோன்றுமிஏளப் பொழித்திடுவார்
பொன்முடிசென் னியிற்றாங்கிப் புகழ்வனிய வரசரொன்னார்
முன்முடியக் குடிதழைய மூதுலகம் புரத்திலினே.
இதுவும் அது
தேவர்முடி திங்கண்முடி சேணாரு மிரவிமுடி
மூவர்முடி முனிவர்முடி மும்மையுல கினில்வாழ்வோர்
யாவர்முடி யும்விளங்கு மென்றுமொரு முடிவில்லாக்
கோவிறைவன் னியர்முடிமேற் குலவுமுடி விளங்கலினே.
புயகேயூர கிரீடச்சிறப்பு
இயனடுநீண் டிருபுடைதாழ்ந் திடவமைத்த லணைமூன்றின்
அயன்முதன்மூ வருந்தொழின்மூன் றாங்கியற்ற வமர்ந்ததுபோல்
வயமுறுவன் னியவரசர் வடவரைபோல் வீறியதிண்
புயமுடியு மணிமுடியும் பொருந்தியது புதுமைத்தே.
குடைச்சிறப்பு
படையுடைய படிவேந்தர் பணிந்திடுவோர் மனுநீதி
நடைவருணாச் சிரமநெறி நழுவாது காத்தெவர்க்கும்
விடையவன்ற னருன்பெற்ற வீரவன்னி மன்னர்பொற்றக்
குடைநிழலைத் தந்துகலிக் கொடைதணித் திடுவாரே.
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
வெங்கோப மதம்பொழியும் விண்ணவர்கோ னும்பனிகர் வேழ
முண்டோ, பைங்கோலஞ் சேர்கனகப் பஞ்சதரு வனையபா தபமற்
றுண்டோ, இங்கோத வான்சுரபிக் கிணையுண்டோ வன்னிமன்ன
ரெனுமேன் மக்கள், செங்கோலுக் கெதிராங்கோல் செகதலத்தி
லொன்றுண்டோ செப்பு வீரே.
செங்கோல்வண்மைச்சிறப்பு
கொச்சகம்
வீரசம்பு முனிவேள்வி விளங்கவரு முடிவேந்தர்
சீர்மருவு கரத்தேந்து செங்கோலின் றிறத்தானே
நேரறுதீக் கடைகோலு நிறைகோலு நீடுலகி
லேரடரு முழுகோலு மிடரின்றி யிருப்பதுவே.
செங்கோனடத்திற்சிறப்பு
சீராரும் வன்னிமன்னர் செங்கோன்மை செலுத்துதலால்
சோராது சுரர்க்கும்பூ சுரர்க்குமிகு சிறப்புண்டாம்
நீராரும் புவியின்மநு நெறிதவறா தென்பதன்றி
யாராலும் பழுதுரைக்க லாமோசொல் வல்லீரே.
அறத்தினெறிச்சிறப்பு
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
தாரேந்த புயவேந்தர் தழலிடைவந் தவதரித்தோர் தனுவான்
மிக்க, சீரேந்து மறத்தினெறி திறம்பாது நிற்கின்ற செயலா லன்றோ,
காரேந்திச் சொரிமழையுங் கலைமறையும் வாணிபமு மடவார் கற்பும்,
ஏரேந்து மவர்வாழ்வு மிடரின்றி நிற்பநன்றி யென்கொண் டம்மா.
ஆக்கினைச்சக்கரச்சிறப்பு
வேறு
ஊழிக் கிறைதண் கடல்வீழ்ந்தா னும்பற் கிறையந் தரமானான்
கோழிக் கிறைதன் றாதைவரை குறுகி னானெஞ் சறதாணி
மேழிக் கிறைமூ விரண்டினொன்று மேவப் பெறுவன் னியர்செலுத்தும்
ஆழிக் கிறைநா டொறுமாறா தகிலமுழுதுங் காத்தல் கண்டே.
தொழினெறிபிறழாமைச்சிறப்பு
கற்பத் தொழியா மறைபயிலுங் கவின்மே வியவந் தணர்தொழி
லும், சிற்பத் தொழில்வை சியர்தொழிலுந் தினமு முயர்முக் குலத்தோ
ரைப், பொற்பத் தொழுஞ்சூத் திரர்தொழிலும் புகலெத் தொழிலு முறை
பிறழ்ந்தே, அற்பத் தொழிலா காதரசாள் வதுபண் ணாட்டார் தந் தொழிலே.
முத்திரைமோதிரச்சிறப்பு
எத்திசைமன் னவராணு முத்திரிக்கு மீதன்றிப்
பத்திமையி லார்க்கந்தப் பரனலகு முத்திரிக்கும்
சத்தியம்பொய் யாதுவைகிச் சகம்புரக்கும் வன்னியர்கைம்
முத்திரையா ழிக்குநிகர் மூதக்கீர் மொழியீரே.
துட்டநிக்கிரகச் சிறப்பு
அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
தீட்டார் தமையுஞ் சிவநிந்தை செய்வோ ரையுஞ்செங் கோன்
முறையேர், பூட்டார் தமையும் பொய்யரையும் போர்வெங் களத்துப்
போந்துபுறம், காட்டார் தமையுங் கள்வரையுங் கலிதீர்ந் திடக்காட்
டியவறத்தை, நாட்டார் தமையு நானிலத்தி னாட்டார் நவில்பண்
ணாட்டாரே.
வாயில்காத்தற்சிறப்பு
கொச்சகம்
கடிந்தாரைக் களைவனியர் காப்பாளர் சமர்க்களத்தில்
மடிந்தாலுஞ் சுவர்க்கமுண்டாம் வாயில்காத் தவரடியில்
படிந்தாலு மரசுண்டாம் பகர்வதெவன் பாரிடத்தில்
விடிந்தால்வேந் தன்வாயின் மேவாதார் யாருளரே.
தொழுதன் முதலியசிறப்பு
அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்
அணங்காற் றருவில் லேந்திமுறை யரசாள் வன்னிச் சயதரரை
வணங்கார் யார்கை கூப்பார்யார் வாரி சூழும் வையமிசை
இணங்கார் யார்நின் றேத்தார்யா ரேவற் பணிசெய் யார்யார்நன்
மணஞ்சார் முற்றங் காத்திருந்து வாழ்நாண் மகிழார் யார்யாரே.
செல்வாக்கின்சிறப்பு
பாவசையு நாவலர்பால் பத்திமிக வைத்துதவும்
பூவசையு மணிமார்பர் புகழினுக்கோர் நிகரின்றான்
மாவசையாப் பெருஞ்செல்வர் மாதிரங்காக் கும்வனியர்
நாவசைய நிரந்தரமும் நாடாசையா திருந்திடுமோ.
புகழ்ச்சிறப்பு
ஆந்துணையாம் வன்னியர்போ லார்துணைப்பட் டாதரிப்பார்
போந்தரிகள் வணங்குமிவர் புகழ்சிறிதோ யாம்புகழதற்
கேந்துகர மிரண்டினும்பொன் னிலக்கமறச் சொரியினுமிவ்
வேந்தர்புகழ்க் கிணைநாவால் வேறுபுகழ் கூறேமால்.
இதுவும் அது
அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
வளமருவு மங்கையர்கோன் சொலத்தகுபல் லவராயன் மரபிற்
றோன்றிக், களமருவு கறையுடைய கண்ணுதல்கச் சியின்வாழே கம்ப
ரேசற், குளமருவு மன்பினரா யொளிர்மகுட மணிப்பொற்றே ருதவி
மேனாள், தளமருவு தாமரைபோன் முகவனியர் படைத்தபுதழ் சாற்றற்
பாற்றோ.
மாசகற்றற் சிறப்பு
வேறு
மின்னு மிரவி தனிற்றோன்றும் வேந்தர் குலத்தில் வருமாசும்,
மன்னு மதியந் தனிற்றோன்று மன்னர் குலத்தில் வருமாசுந், துன்னுந்
திரைத்தண் கடலுலகிற் றொஏலக்குந் தூய்தாங் கனற்றோன்றும்,
பன்னு புகழ்கொ ளரசர்களே பார்க்கின் மாசு தீர்ந்தாரே.
பெருந்தன்மையின் சிறப்பு
கலையான் மிக்கோ ருலகளிக்குங் கருத்தான் மிக்கோர் கனக
மணி, மலையான் மிக்கோர் நிலவுகுடை வளத்தான் மிக்கோ ருடை
மாறா, நிலையான் மிக்கோ ரினிதோங்கு நெறியான் மிக்கோ ரிகல்வெல்
லுஞ், சிலையான் மிக்கோர் வன்னிமன்னர்க் கெவர்தான் மிக்கோர்
தெளிதரினே.
கலிவிருத்தம்
இதுவும் அது
ஆக்கமுன் னிடினுய ரறத்தை யாக்குவர்
போக்கமுன் னிடிற்பொருந் தாரைப் போக்குவர்
காக்கமுன் னிடிற்கட னிலத்தைக் காப்பர்நல்
லூக்கமுன் னிடுகுணத் தோர்பண் ணாடரே.
இதயவண்மைச் சிறப்பு
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
சமய வளமுஞ் சிவனுமைமால் தலத்தின் வளமுங் குலவளமு
மமையு நிலத்தின் வளமுமுழவாளர் வளநல் லறவளமுந்
தமையொப் பிலர்கற் புறுவளமுஞ் சகல வளமுந் தமிழ்வேந்த
ரிமையப் பொருப்பர் பண்ணாட ரிதய வளத்தின் றிறத்தானே.
இராநுசமுகச் சிறப்பு
வானோர் வியக்குஞ் சமுகமுது மறையோர் வாழ்த்துஞ் சமுகமலர்த்
தேனார்ந் திருக்குஞ் சமுகமன்னர் திறைக ளளக்கும் சமூகம்விழி
மானார் நடிக்குஞ் சமுகமதி வல்லோர் துதிக்குஞ் சமுகமொன்னா
ரானா திறைஞ்சுஞ் சமுகம்வன்னி யரசர் சமுக மதுதானே.
பதியிருத்தற் சிறப்பு
கொச்சகம்
பண்ணாடர் தமதுபெரும் பதியிருப்ப தாலிமையோர்க்
கெண்ணார்ந்த சிறப்பிருக்கு மிம்பர்மனு முறையிருக்குங்
கண்ணாமுத் தமிழிருக்குங் கற்ஈேர்க்குப் புகழிருக்கும்
விண்ணார்ந்த மழையிருக்கு மிடியிஈக்க மாட்டாவே.
மன்னர் சூழ்தற் சிறப்பு
பொன்னணையு மரதனம்போற் புகழணையும் பெருநிதிபோன்
மன்னணையு நெடும்படைபோன் மலரணையு மளியினம்போற்
றன்னிகரா ரெனத்தழலிற் சகலகலை யுடனுதித்த
மன்னரையே மன்னரெலா மதித்தணைந்து வாழ்வாரே.
மொழிதவறாமைச் சிறப்பு
விண்ணொனிர்வெங் கதிரொளியும் விதுவொளியும் விளக்கொளியுந்
தண்ணொளிகான் மணியொளியுந் தகைசான்ற வொளியாமோ
கண்ணொனியா யுறைவனியர் காத்தருள்பொய் யாவொளியே
மண்ணொளியா வொளியெனமா மறையொளியா வழுத்தலினே.
சாந்த முதலியவற்றின் சிறப்பு
சாந்தமிரட் சகத்தாலுந் தகைபெறுவை பவத்தாலும்
ஆர்ந்தபுய பலத்தாலு மழகமைந்த திறந்தாலும்
ஏந்துபுக ழான்மாலிந் திரன்குகன் வேளெனவன்னி
வேந்துசிறந் திருப்பதையிம் மேதினியே விளம்பிடுமால்.
கொடைவளத்தின் சிறப்பு
அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
வையந் தழைப்ப மறைதழைப்ப பறையோர் புரியு மகம் தழைப்பச்
செய்ய முனிவர் தவந்தழைப்பச் செங்கோ றழைப்பச் சீர்தழைப்ப
பெய்யு முகில்போற் றுங்கவன்யர் கைமா றுகவா மற்பெறுவோர்
கையுந் தழைப்ப மெய்தழைப்பக் கனகம் பொழிவார் காணீரே.
வள்ளறன்மைச் சிறப்பு
கொச்சகம்
புள்ளிபல வாயினும்புன் பூசைபுலி யாகாவே
வெள்ளிபல வாயினும்வான் வெண்மதியொன் றாகாவே
துள்ளல்பல வாயினுமோர் தூய்கருட னாகாவே
வள்ளல்பல ராயினுநல் வன்னியர்கொப் பாவாரே.
அடுத்தவர்க்குத் தாழ்வின்றெனற் சிறப்பு
மேருவினைச் சார்ந்தவரை மிடியணுகு மோதேவ
தாருவினைச் சார்ந்தவரைத் தழற்பசிவந் தணுகிடுமோ
நேருரை செயாவனிய திருபர்நெடுங் கழலிணையைச்
சாருமவர் தமையிறையுந் தாழ்வென்ப தணுகுறுமோ.
உமையருள்பெற்றோரெனற் சிறப்பு
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
கலைமகடன் மைந்தரெனக் கலைஞானம் பெறுகையினால் கடல்சூழ் பூமித்
தலைமகடன் மைந்தரெனச் சகமுழுது மரசாளுத் தன்மை யானீ
டலைமகடன் மைந்தரென வாக்கத்தாற் றழலிலவ தரித்த றன்னால்
மலைமகடன் மைந்தரென வரமளிக்க பெறும்வனியர் மகிமை யென்னே.
அஷ்டநுசுவரியச்சிறப்பு
(வேறு)
சாகாத் துலகி னிட்டைச் சம்புமா முனியி யற்றும்
யாகவுற் பவராம் வன்ய ரியாவையும் புரக்கு மாறு
வாகன மக்கள் சுற்ற மடிமைபொன் மணிநெல் லேகம்
ஆகர சாட்சி யோடெட் டயிச்சுவ ரியம்பெற் றாரே.
தசாங்கச்சிறப்பு
கொச்சகம்
வளங்குலவு பண்ணாடு மதக்களிறான் புலித்துவசம்
விளங்குமக மேருமனோ வேகரத மும்முரசு
களங்கறுகங் காநதிவெங் கனற்பரிவா டாமாலை
துளங்கலிற்பொற் சிலைபெற்றோர் துதிபெற்ற வன்னியரே.
அரசின் சிறப்பு
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
நாடுபல வினுக்கரசு பண்ணாடு நகர்க்கரசு நலஞ்சேர் கச்சி
நீடுவரை களுக்கரசு மாமேரு நதிக்கரசு நிறைநீர்க் கங்கை
பீடுபெறு சிலைக்கரசவ்வுருத்திரன்வெஞ் சிலையகிலம் பெரிது காக்கச்
சூடுமணி முடியரசுக் கரசுவன்னி யரசன்றிச் சொலவே றுண்டோ.
பரிசுதரற் சிறப்பு
(வேறு)
அவிக்கா தரங்கூர் புனிதர்மகிழ்ந் தருன்வன் னியரை யாம்புகழச்
செவிக்கா ரமுத மெனக்கேட்டுச் சிந்தை யுவந்து சீர்தூக்கிப்
புவிக்கா யிரம்பொ னிறைநீக்கிப் பொற்றண் டிகைபூ டணத்தோடு
கவிக்கா பிரம்பொன் பரிசளித்தான் கருணா கரத்தொண்ட வன்னியனே
வாழ்த்துசிறப்பு
அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்
தனுமறை யெனுமிது வளர்கவே தரணியி லறநனி விளைகவே
மனுநெறி வகையுயிர் பெறுகவே மணிமுத லியவள நிறைகவே
கனமுறை மையின்மழை பொழிகவே களையற வுயர்பயிர் தழைகவே
இனமொடு சுரபிகள் பெருகவே யிணையறு பிலிவிரு துயர்கவே.
34
இதுவும் அது
வேறு
அவிசொரி வேள்வியைப் பாடினமே யயோநிசம் பவர்தமை
வாழத்தினமே, யவனிக் கிறைவரைப் பாடினமே யறமெண் ணான்குற
வாழ்த்தினமே, தவளக் கவிகையைப் பாடினமே தழல்வெம் புரவியை
வாழத்தினமே, தவமிகு வனியரைப் பாடினமே தனிநெடுஞ் சிலையினை
வாழ்த்தனமே.
இதுவும் அது
கொச்சகம்
பூவாழி மறைவாழி புகல்செம்பொற் சிலைவாழி
பாவாழி சுடர்வாழி பகர்சம்பு முனிவாழி
மாவாழி யகளங்க வனியர்பெருந் தமர்வாழி
கோவாழி யிவர்தனிச்செங் கோல்வாழி வாழியவே.
35