சிலை யெழுபது மூலமும், 1915
௳
கடவுள் துணை
க்ஷத்திரியர்களாகிய
வன்னிய பூபதிகள் பேரில்
மகாகவியாகிய கம்பர் பாடிய
சிலை யெழுபது மூலமும்
பேழைக்குடி ம. துரைசாமி நாயகரவர்கள்
இயற்றிய தெளிவுரையும்.
வன்னிதலமித்திரன் பத்திராதிபர்
ஆ. சுப்பிரமணிய நாயகரவர்களால்
பிரசுரிக்கப்பட்டது.
1915
விலை அணா 6.] [தபாற் கூலி 2.
சென்னை வேப்பேரி மதுகரவேணிவிலாசம் பிரஸ்.
௳
கடவுள் துணை.
கம்பர்வரலாறு.
பூ மணக்கும் பொழில் மலிந்த தமிழ் நாட்டிலே “சோழவளநாடு சோறுடைத்து” என்றபடி நீர்நில வளங்களாற்சிறந்த சோழமண்டலத்திலே தஞ்சையை யடுத்த தேரழுந்தூர் எனவழங்கும் திருவழுந்தூரிலே கம்பர் வாழ்ந்திருந்தனர் என்பர். கம்பர் வீட்டில் நாடோறும் புதுமட்பாண்டங்களில் சமையல் செய்வது வழக்கமாகையால் பிரதிதினமும் சமையல்செய்தபாண்டங்களைக் கொல்லையில் ஓர் புறத்தில் எறிந்துவந்ததால் நாளடைவில் அவையோர் மேடாயின. கம்பருடைய வாழ்க்கைக்கு அறிகுறியாமாறு இம்மேட்டை எவரும் அழிக்காமல் விட்டதனால் நாளதுகாறு அதுகெடாது “கம்பர்மேடு” எனவழங்கப்பட்டு வருகின்றது.
இவரை கம்பநாடு என்னும் ஒருசிறநாட்டையாண்டுவந்த சிற்றரசனுடைய புதல்வர் என்றும், ஒச்சன்வீட்டில் வளர்ந்தவர் என்றும் சிலர் கூறுகின்றனர். இவர் தன்மகன் அம்பிகாபதி இராசகுமாரத்தியை இச்சித்ததனால் அரசன் சினந்து அவனைக்கொன்ற காரணம்பற்றிப் பழிக்குப்பழி வாங்கத் தருணம் பார்த்திருந்த இவர் வேட்டையாடும்போது ஒரு யானையால் துரத்திவரப்பட்ட அவ்வரசகுமாரனை “காட்டானை விட்டாலும் கவி யானை விடுமா” என்று ஈட்டியால் குத்திக்கொன்றனர்; என்றதொரு கதையைக்கொண்டு இவர் க்ஷத்திரியரல்லராயின் அங்ஙனஞ் செய்யத் துனியாரெனச் சிலர் கருதுகின்றனர்.
“ஈடார்தருஞ்சோழ நாடதிலுறுந்திரு வழுந்தூரினில்
பீடாருமோச்சக்குலத்தொருவனவ்வூர்ப் பெருங்கோயில்வாய்
நாடாறுதிக்குந் தொறுஞ்சென்று சங்கூ துநல்வேலையான்
கோடாமலதுசெய்து வருநாளுளொருநாளிற் கூறாயிடை.
கம்பத்தினருகோர் சிசுக்கண்டு பெருகுங் களிப்போடெடுத்
தம்பத்தனையும் வென்ற விழியுற்றமனையாள்கை யதைநல்கினான் கொம்பத்தவவண் மார்பிலமுதூறண்முதலாயகுணமெய்தலால்
நம்பத்திகண்டீ சனருள் செல்வமிதுவென்னநனியெண்ணினார்.
கம்பத்தினடியிற்கிடந்திட்டதாற் கம்பனென்னப்பெயர்
உம்பர்க்குமெய்தாதபேறான பிள்ளைக்கு வந்தோதினார்.”
எனக்கூறும் புலவர் புராணத்தால் இவர் திருவழுந்தூர் ஓச்சன்வீட்டில் சிலகாலம் வளர்ந்தவர் என்பது உறுதிப்படுகின்றது.
கம்பத்தினடியிற் கண்டெடுக்கப்பட்டவராதலால் கம்பர் எனபெயர்பெற்றாரென்றும், காளிவரம்பெற்றுக் கவிபாடுமுன்னரே அறிவிலாச்சிறியராய்க்கம்பம்போல் இருந்தவராதலின் மற்றச்சிறுவர்கள் இவரைக் கம்பன் என்றழைத்த காரணத்தால் கம்பர் எனப்பட்டார் என்றும், இவர் ஓச்சன்வீட்டில் வளர்ந்து வருங்கால், திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப முதலியார் இவரைத் தம்மில்லறத்திற்கழைத்துவந்து தம்மைந்தரோடு இவரையுங்கூட்டி ஓர்கணக்காயரிடத்தில் அநுப்பி கல்விபயில்விக்க அவ்வுபாத்தியாயரது கம்பங்கொல்லையைக் காத்திருந்த காரணம்பற்றி கம்பர்எனவாயிற்றென்றும், அவ்வாறு கம்பங்கொல்லையைக் காத்துவரும் நாட்களில் ஓர்நாள் நடுப்பகலில் நித்திரைவர அங்கிருந்த காளி கோயிலிற் படுத்து தூங்கிவிடவும் ஒருகுதிரைவந்து கொல்லையை யழிப்பதாகக் கனவுகண்டு திடுக்கிட்டெழுந்து பார்க்க அவ்வாறே அவ்வூர் அதிகாரியாகிய காளிங்கராயனது குதிரைவந்து கொல்லையை அழித்தலைக் கண்டு அதனை எவ்வளவு ஓட்டியும் ஓடாமல் மேயக்கண்டு தமது உபாத்தியாயருக் கஞ்சி “கோ” என்றழுதனர். அங்ஙனம் அழுகின்ற அச்சிறுவர் முன்பாகக் காளிகாதேவி தோன்றி “நல்லிளஞ்சிறுவ! அழாதே நின்னாவை நீட்டு” எனவும் அவ்வாறே தம்நாவை நீட்ட அத்தேவி அவர்நாவில் கலைமகளாரது பீஜாக்ஷரத்தை எழுதிவிட்டு மறைந்துபோயினள். உடனே அம்மைந்தர்
வாய்த்தவயிரபுர மாகாளியம்மேகேள்
காய்த்ததினைப்புனத்திற் காலைவைத்துச் — சாய்த்துக்
கதிரைமாளத்தின்ற காளிங்கராயன்
குதிரைமாளக் கொண்டுபோ.
என்றொரு வெண்பாபாடவும் குதிரைத்துள்ளி விழுந்து இறந்துவிட இதுசங்கதிஉபாத்தியாயருக்குத் தெரிந்து காளிங்கராயன் இதனைக்கேட்டால் என்னசெய்வானோ என்று அஞ்சி நடுங்குவதைப் பார்த்து அவர் மகிழும்படி “குதிரைமீளக் கொண்டுவா” என்றகடைசியடியை மாற்றிப்பாடவும் உடனே அப்பரியுயிர்த் தெழுந்தது.இதனைக்கேள்வியுற்ற காளிங்கராயன் இவரை வரவழைக்க இவரும் கப்பங்கொல்லையைக் காத்திருந்த கம்பத்துடனே சென்றாராதலின் இவரைக் கண்ட அரசன் “இந்தகம்பனா அது செய்தவன்” எனக் கேட்டதனால் வந்தபெயரென்றும் பலவாறு கூறுகின்றனர்.
மகாகவிச் சக்ரவர்த்தியாகிய இவர் இராமபக்தியிலும் ஆழ்வார்பக்தியிலும் ஈடுபட்டிருப்பதைக்கண்டு வியந்த ஸ்ரீரங்கத்து வித்வாமிசர்கள் இவரைக் கம்ப நாட்டாழ்வார் எனப்புகழ்ந்தனர். இவர்காலத்திருந்த புலவர்கள் புகழேந்திப்புலவர், ஒட்டக்கூத்தர், ஔவையார் முதலியவர்கள்.
கம்பர் இயற்றிய நூல்கள் சரஸ்வதியந்தாதி, சிலையெழுபது, இராமாயணம், சடகோபரந்தாதி ஏரெழுபதுமுதலியன. இவற்றுள்;
சரஸ்வதியந்தாதி:— காளி அநுக்கிரகம் பெற்ற சிறு பிராயத்திலேயே தமக்கு மேன்மை யுண்டாவதற்குக் காரணமாகிய சரஸ்வதி தேவியை முப்பது பாட்டுகளைக்கொண்ட ஓரந்தாதியினாற் பாடித்துதித்தனர். கலை மகளும் இவருக்கு அருள்புரிந்து சமயாசமயங்களில் கிருபை பாலித்து வந்ததை கம்பர் இராமாயணம்பாடி அரங்கேற்றியது முதலிய சரி தங்களாலறியலாம்.
சிலையெழுபது:— வேந்தர் மதிக்கும் வீரக்கவியாகிய இவர் அக்கினிகுலத்தரசர்கள் புகழ்ப்பொருள்விளங்கும் வண்ணம் க்ஷத்ரியர்களுக்குரிய அரசியலைத்தொகுத்து சிலையெழுபது என்னும் இப்பிரபந்தத்தைப்பாடி அக்காலத்தில் காஞ்சியில் அரசுபுரிந்த கருணாகரச் சோழனது சபையிற் கொண்டுபோய் அவனனுமதியால் மூதறிவோர் கேட்டுமகிழும்படி அரங்கேற்றுதல் செய்து, அம்மன்னனால் மகிழ்ந்து கொடுக்கப்பட்ட எழுபத்தொன்பதினாயிரம் பொன், தண்டிகை ஆபரணமுதலிய பூஷணங்களைப் பெற்றதோடு தாமனுபவம் பண்ணிவந்த நிலத்துக்கு அரசிறை கொடுக்கவேண்டியதில் வருஷம் ஆயிரம்பொன் தள்ளிக் கொடுக்கும்படியும் செய்து கொண்டனர். கருணாகரச் சோழன் தொண்டை மண்டலம் ஆண்ட சோழவரசனென்பதும், அவன் சமுகம் இதனைப்பாடிப் பரிசு பெற்றதென்பதும் இந்நூலின் 68-வது கவியில் விரிவாய்க் கண்டுகொள்ளலாம்.
இராமாயணம்:— மேற்கண்ட இரு நூற்களையும் இயற்றிய சில வருடங்களுக்குப் பின்னர் இரண்டாவது குலோத்துங்கச் சோழனனுமதியின் பேரில் இக்கவிச் சக்ரவர்த்தி இராமாயணத்தைப்வபாடினாராகையால் இவருடைய கவித்திறமை எல்லாம் ராமாயணத்தில் முற்றும் விளங்கிநிற்கின்றது.
சடகோபரந்தாதி:— இராமாயணத்தை ஸ்ரீரங்கத்திற்கொண்டுபோ யரங்கேற்ற யத்தனிக்கையில் ஸ்ரீமந்நாதமுனிகள் கம்பநாட்டாழ்வாரை நோக்கி “நீ நஞ்சட கோபனைப்பாடினால்தான் நாம் உமது இராமாயணத்தைத் திருவுளம்பற்றுவோ மென”, அவ்வாறே நூறு கட்டளைக் கலித்துறையில் சடகோபரந்தாதியைப் பாடி முடித்தார்.
ஏரேழுபது:— கம்பர் பேரும்புகழும் எய்திய பின்னரே தன்னை வளர்த்த திருவெண்ணெய் நல்லூர் சடையப்பமுதலியார் செஞ்சோற்றுக்கடனைத் தீர்க்கும் வண்ணம் வேளாளர்பேரில் ஏரெழுபதைப்பாடினார்.
சிலையெழுடதைப் பாடியகாலம்:— ராஜேந்திர பல்லவராயன், கோவிராஜ கேசரிவர்மன், கோவிராஜசக்ரவர்த்திகள் என்று சாசனங்களாலும்,ஐயதரன், ஜயதுங்கன், குலோத்தமன், அபயன் எனக்கலிங்கத்துப் பரணியாதிகளாலும், அநபாயச் சோழனெனப்பெரியபுராணத்தாலும், வழங்கப்படுபவனாகிய முதலாவது குலோத்துங்க சோழனிடம் கருணாகரத் தொண்ட னென்பவன் மந்திரியாகவும் சேனைத் தலைவனாகவும் இருந்து கலிங்கதேசத்தின் பேரிற் போருக்குச்சென்று அந்நாட்டைச் செயித்துத் திரும்பியவனென்று ஜெயங்கொண்டான் பாடிய கலிங்கத்துப் பரணியில் நன்கு உணரக் கிடக்கின்றது. முதலாவது குலோத்துங்கன் கி.பி. 1070 முதல், கி பி. 1118 வரையில், அரசாண்டவனென்று சரித்திர ஆராய்ச்சியில் வல்லோர் பலர்முடிவுகட்டி யிருக்கின்றனர். முதலாவது குலோத்துங்கனுக்குப் பிறகு சிலகாலம் கருணாகரன் காஞ்சியில் அரசு புரியும் சமயத்தே கம்பர் இந்நூலை அவனது சமூகத்தே அரங்கேற்றினாரென்பது உறுதிப்படுகிறதால் சுமார் 800-வருடங்களுக்கு முன்னென்று ஏற்படுகிறது.
இனி இராமாயணத்தை எக்காலத்தில் இயற்றினாரென ஆராயப் புகுவோமானால், நாம் மேலே கூறிய முதலாவது குலோத்துங்க சோழனது குமாரனாகிய விக்கிரமச் சோழன் கி.பி. 1118 முதல், கி.பி.1128 வரையில் அரசியற்றியவனென்றும், அவனது சமுகத்திலேயே ஒட்டக்கூத்தர் சமஸ்தான வித்வானாயிருந்து அவன்பேரில் விக்கிரமச் சோழனுலாபாடினாரென்றும் புலப்படுகின்றது; நிற்க,
௸ விக்கிரமச் சோழனது குமாரனே இரண்டாவது குலோத்துங்கச் சோழனெனப் பெயர் பெற்று கி.பி. 1128 முதல், கி.பி. 1158 வரையில் அரசியற்றியவன். அச்சோழனுக்கே ஒட்டக்கூத்தர் உபாத்தியாயராகவிருந்து கல்விபயிற்றி வந்ததனால்
“பாடும்புலவர்புக ழொட்டக்கூத்தன்பதாம்புயத்தை, சூடுங்
குலோத்துங்க சோழனென்றே யென்னைச் சொல்லுவரே”
என்றும் அம்மன்னனே கூறியிருத்தலாலும், கம்பரையுங், கூத்தரையுங் கொண்டு இராமாயணத்தைப் பாடுப்படி செய்தவன் இரண்டாவது குலோத்துங்கச்சோழனே என்பதும் வெள்ளிடைமலை போல் விளங்குகின்றது.
இத்தகைய ஆதாரங்களை நாம் உற்றுநோக்குவோமாகில் கி.பி.1090 க்குமேல் கி.பி. 1170 வரையில் சுமார் 80-வருட சாலம் கம்பர் ஜீவித்திருந்தவ ரென்பதும், தமது ஜீவதிசையின் முற்பகுதியில் சிலையெழுபதைப் பாடினாரென்பதும் மறுக்கமுடியாத விஷயமாகும். இவரது சரிதையை ஆராயப்புகுவோர் சிலர் முதலாவது குலோத்துங்கன், இரண்டாவது குலோத்துங்கன் என்பவர்களது காலவரையும் இவர்கள் மெய்க் கீர்த்தியையும் அறியாது மயங்குவர். முதலாவது குலோத்துங்கச் சோழன், ஏகசக்ராதிபதியா யரசியற்றியவன்; கலிங்கத்துப்பரணி கொண்டவன். சேக்கிழார் பெருமானுக்கு உத்தமச்சோழப்பல்லவன் என்றஉயர்பட்ட மளித்து அவருக்கு வேண்டிய உதவி புரிந்து பெரியபுராணத்தைப் பாடும்படி செய்தவன்; பொன்னம்பலத்தில் பொன்வோடு மேய்ந்து அச்சுபதினத்தைக் குறித்து,
“நானிலத்தை முழுதாண்ட ஐபதரர்க்குநாற்பது நாலாண்டில், மீனனிகழ் நாயற்று வெள்ளிபெற்ற உரோசனிநாளிடபம் போதல், தேனிலவு பொழிற்றில்லை நாயகர்தங் கோயிலெலாம் செம்பொன் மேய்ந்தா, ளேனவருந் தொழுதேத்தும் ராஜராஜன் குந்தவைபூ விந்தையாளே”
என்ற விருத்தப்பாவால் தில்லைநடராஜர் கோயில் உள்பிரகாரத்து வடசுவரில் கண்ட சாசனத்தை நாட்டியவனுமாவன். இவன் மகாசிவபக்தனென்று உமாபதி சிவாசாரியார் கோயிற்புராணத்தில் புகழ்ந்துரைதுள்ளார். இம்மன்னனதுகாலத்தில் கம்பர் இராமாயணம் பாடினாரென்று கொள்வது முரண்படும். இவனது காலத்திற்குப் பிறகே கம்பர் இரண்டாவது குலோத்துங்கன் காலத்து இராமாயணத்தைப் பாடிமுடித்தார்.
சிலையெழுப தென்னும் இப்பிரபந்தத்தின் கருத்து:— “சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களாகிய வன்னியர்கள் முதலில் தெய்வத்தை வணங்கி குரவர்களைப் புகழ்ந்து, வேதசாஸ்திரவிதி வழுவாவகையாக சுபதினத்தில் வில்லை யெடுத்துப் பயின்று பகையை அழித்துச் சயமடைந்து, நால்வகைச் சேனைகளோடும் அரண்களை யுடையவர்களாகி, துவசத்தை நாட்டி, அரசாக்ஷி மண்டபத்துள் சிங்காசனத்தின் மேலமர்ந்து, முடி சூடி, மகரகேயூர கிரீடந்தரித்து, சந்திரவட்டக் குடை நிழல் செய்யும்படி செங்கோல் நடையினால் ஆக்கினாசக்கிரத்தைச் செலுத்தி, தொழினெறி பிறழாது முத்திரை மோதிர மணிந்து, துஷ்ட நிக்கிரகஞ் செய்து, காவல் புரிந்து, யாவரும் தொழுதன் முதலியவை செய்ய செல்வாக்கினால் புகழையடைந்து, குற்றங்கடிந்து, பெருந்தன்மையோடும் இதய வண்மையுடையவராகி, தேவர்களும் பிராமணர்களும் இலக்குயும் மன்னவர்களும் பெண்களும் வித்வான்களும் பகைவர்களும் முறையே வியக்கவும், வாழ்த்தவும், வசிக்கவும், திறையளக்கவும், நடிக்கவும் துதிக்கவும், வணங்கவும், ஏற்றதாய இராஜ சமூகத்தோடும் பெரும்பதி இருந்து; அரசர்கள் புடைசூழ நெறி தவறாது, சாந்த முதலிய குணங்களோடு நிறைந்து, ஈதல் வள்ளற்றன்மையுயர்ந்து, அடுத்தவர்களுக்குத் தாழ் வைத்தராது, உமையருளோடும் அகண்ட ஐசுவரியத்தையும் தசாங்கத்தையும் உடையவர்களாகி, தமது குல ஒழுக்கப்படி மனுமுறை வழுவாது அரசு புரிந்து வருகின்ற இவர்களது வில்லைத் தேவரும், மூவரும், அகத்தியனும், அனந்தனும் கூறல் வேண்டுமே யொழிய எம்போல்பவராற் புகழுந் தகமையதோ சொல்வீர்களாக வென” கருணாகரன் கேட்டு பரிசுகொடுக்க கம்பர் பெற்றுக்கொண்டு துதித்தது என்பதாம்.
இந்நூல் உரையெழுதுவதற்காக முபற்சியெடுத்துக்கொண்ட குலாபிமான சனவான்களாகிய இராஜ வன்னியராஜஸ்ரீ, பூந்தோட்டம வன்னிகுலசேகர, வி. குருசாமி ராயர், காரைக்கால்,வ. இராமலிங்க படையாட்சியார், நாகப்பட்டினம், அரங்க இராமசாமி நாயகர், காரைக்கால் சாஸ்திர ஆராய்ச்சி வி. குருசாமி படையாட்சியார் முதலியவர்களுக்கும், சிரமம்பாராது உரையெழுதிமுடித்த பேழைக்குடி, ம.துரைசாமி நாயகர் அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான வந்தனத்தைச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.
இந்நூலை ஸ்ரீமான், வன்னி குலோத்தாரணர் கா.கோபால் நாயகரவர்கள் தாம் வெளியிட வேண்டுமெனக் கருதியிருந்தனர். அவர் காலஞ்சென்றுவிட்டமையின் அவரது ஞாபகார்த்தமாகயான் இப்போது இதனைப் பிரகடனஞ் செய்துள்ளேன். இந்நூல் நிலவுலகின் கண் நின்று நிலவுமாறு எல்லாம் வல்ல இறைவனருளைச் சிந்திக்கின்றனன்
வன்னிகுல மித்திரன், |
ஆ. சுப்பிரமணிய நாயகர். |
சாத்துக்கவிகள்.
கும்பகோணத்தில் விளங்காநின்ற
ஜகத்குரு: ஸ்ரீசங்கராசாரிய ஸ்வாமிகள்
ஸ்ரீமடத்தின் ஸன்னித தான சபையின்
ஜ்யோதிஸ் தந்திர ஸூக்ஷ்ம தர்சிகளான
பிரம்மஸ்ரீ சுந்தரேசுவர சிரௌதிகள் குமாரரும்
பண்ருட்டி ஸப் ரிஜிஸ்தராருமாகிய
T.S.விசுவநாத சிரௌதிகள். பி.ஏ.,
அவர்கள் இயற்றிய விருத்தம்.
அலைகடற் புவியை யாண்ட வங்கி மன்னவரை யேற்றி
கலைவள மிகுந்த கம்பன் கழறிய காமர் நூலாஞ்
சிலையெழு பதினை யேற்ற தெளிவுரை யொன்றுசேர்த்தி
நலமிகு சுப்ர மண்ய நாயக னச்சிட்டானே.
சேலம் ஜில்லா ஓமலூர் தாலூக்கா
வெள்ளாளப்பட்டி, பண்டித பரம்பரை
பிரம்மஸ்ரீ, சாமய்யர் அவர்கள் குமாரர்
S.கிருஷ்ணசாமி அய்யரவர்கள்,
இயற்றிய விருத்தம்.
பொன்னறம் பொதியு மேனிப் பூவையாட் சுமந்த பேற்றை
யின்னறை யிளகுங் கையா லேந்தியிப் படியை யோச்சும்
மன்னறங் கொண்ட கோசேர் வன்னியர் புகழை மேனாள்
நன்னெறி யாக வன்றே நவின்றனன் கம்ப நாடன்.
வேறு.
காவிருக்குங் கனகமணி யிருநிதிய மமுதமிகுங்
கடவு ணாட்டின்
கோவிருக்கும் பதியியலுங் கோவிந்தன் முதலாயோர்
கொள்ளும் பெற்றி
மாவிருக்கும் பண்ணுலகாள் வன்னியரின் மாக்ஷியுமிழ்
வசத்த தென்றே
நாவிருக்கு நாக்கம்ப நாடனருஞ் சிலையுலகி
னாட்டி னானே.
நாட்டியசெம் பொற்சிலையா மெழுபதென வரைந்துகம்ப
நாடன் சொன்ன
பாட்டியலின் பொருளனைத்தும் பாவகர்க்கும் பாரோர்க்கும்
பார்த்துத் தீந்தேன்
ஊட்டிநிலை நிறுத்தவெனப் பதத்தியலை யனுசரித்தின்
னுரையை போங்கித்
தீட்டியளித் தானுலகில் துரைசாமி வர்மனெனுஞ்
செவ்வி போனே.
பொன்மணக்கும் மானுடைய பூமணக்கும் பதிமணக்கும்
புத்தே ளாய
மன்மணக்கும் மகிமணக்கு மன்பதைக ளேமணக்கு
வன்னி யோர்கை
வின்மணக்குங் குலமணக்கும் மேன்மேலும் விதிமணக்கும்
விளக்க மாகச்
சொன்மணக்கும் பனுவல்களின் சுலைமணக்கு மோருரையைச்
சொல்லுங் காலே
வேறு.
இக்குவல யத்துளுபர் வுற்றிடுசெம் பொற்சிலையி
லட்சணசு விர்த்தி யுரையாய்ந்
தெக்குல முதித்தவரு மொப்பிடு மகுத்துவ
மிதற்குள தெனக் கருதியே
பக்குவ மிகுந்தவா னக்கினி குலத்திலகன்
பட்சமிகு சுப்ரமணியன்
மிக்கபொரு ளைச்செல விடுத்திதனை யச்சுதவி
மெய்ப்புகழ் படைத்தனனரோ.
வேறு.
முற்காலத் தங்கிகுல முறைமை விளைக்கியகம்பர்
முதன்மை யென்கோ
பிற்காலத் ததனைமொழி பெயர்த்தவரைப் பெரிதென்கோ
பின்பு பேணும்
நற்காலம் வாய்த்திகத்தி னாட்டியசுப் பிரமண்ய
நாயகப் பேர்
தற்காலம் பெரிதென்கோ தாரணியில் நாமுரைக்குத்
தகைமை யென்னே.
மதுராந்தகந்தாலூகா மலைவைய்யாவூர்,
கோயில் குமாண்டூர் இளையவல்லி,
பிரம்மஸ்ரீ வரதாச்சாரியாரவர்கள்
அபிப்பிராயம்.
சிலை யெழுபது என்னும் பிரபந்தம் வரப்பெற்றேன். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியினது திவ்ய சரிதையை செந்தமிழிற் புனைந்த கவிச்சக்கரவர்த்தி யாகிய கம்பநாட்டாழ்வார், அலைகடற் புவியை யாண்ட அக்கினிகுலத் தரசர்களின் குலவுற்பவம் குலமாட்சிமை அரசின் சிறப்பு முதலியவைகளை எழுபத்தொன்பது செய்யுட்களால் சொன்னயம் பொருணயம் விளங்கக் கூறியிருக்கிறார்.
இலக்கண இலக்கிய சங்க நூற்கள் யாவையும் ஒருங்கே கற்றுணர்ந்த பேழைக்குடி ம-௱-௱-ஸ்ரீ, துரைசாமி நாயகரவர்கள் நூலாசிரியரின் கருத்தைத்தழுவி ஆங்காங்கு ராமாயண முதலிய நூற்களின் மேற்கோள்களுடன் உரையெழுதியிருப்பது பெரிதும் புகழ்தற்பாலதே.
“வன்னிகுல மித்திரன்”' பத்திராதிபர் ம-௱-௱-ஸ்ரீ, ஆ. சுப்பிரமணிய நாயகரவர்கள், கம்பர் வரலாறென முதலில் எழுதி சேர்த்திருக்கும் விஷயத்தில், கம்பர் எனப் பெயர்வந்ததற்கு காரணங்களும், அவரியற்றிய நூற்களும், அவரது காலத்தினை நிலை நாட்டியதும் தற்கால சரித்திர ஆராய்ச்சி செய்வோர் அனைவரும் கொண்டாடத் தக்கதே. பழைமையும், பெருமையும் வாய்ந்த இந்நூல் வெளிவந்ததற்கு அத்யந்த சந்தோஷப் படுகிறேன். குலாபிமான மேலிட்டால் தம்மா போரனைவரும் இப்பிரபந்தத்திற் கூறும் அருமை பெருமையினை யுணர்ந்து கடைத்தேறுவார்களென இதனை வெளிப் படுத்திய நாயகரவர்கட்கு எம்பெருமான் கிருபை பாலிப்பாராக.
காஞ்சிபுரம்,மஹா வித்வான்,
ஸ்ரீமான். இராமசாமி நாயுடு அவர்கள்
இயற்றிய
அறுசீராசிரிய விருத்தம்.
சீரேறு கவிச்சக்ர வர்த்தியெனத்
திகழ்பெயராற் சிறந்த கம்பன்
போரேறு வன்னியர்தம் புகழ்புவியி
லெஞ்ஞான்றும் பொலிந்து தோன்றப்
பாரேறு தமிழறிஞர் யாவருமேத்
தெடுப்பமுன்னாள் பகர்ந்த வின்சொற்
பேரேறு சிலையெழுப தெனுநூலொன்
றெழில்மிக்கு பிறங்கு மன்றே.
அன்னதனுக் குரையில்குறை யகத்துனிப்பே
ழைக்குடிவா ழருந்தமிழ்க் கோன்
பன்னரிய துரைசாமி நாயகப்பேர்ப்
பருணிதன்ஏற் பலவும் வாய்ப்பச்
சொன்னயம்பற் பலவுமிக்குத் தோன்றவுரை
யொன்றளித்துத் துகளில் சீர்த்திக்
கொன்னுறுசுப் பிரமணியக் குரிசிலச்சிட்
டுபகரித்தான் குவல யர்க்கோ.
சித்தாந்தம் பத்திராசிரியர் அஷ்டாவதானம் பூவை,
சிவஸ்ரீ, கலியாணசுந்தர யதீந்திரர்
அவர்களியற்றிய - விருத்தம்.
கவிச்சக்ர வர்த்தியெனுங் கம்பன் முன்
னாளதனிற் கழறி வைத்த
கவினிறையுஞ் சிலையெழுப தெனுநூலுக்
கோருரையைக் கனிவ தாகப்
புலிமகிழ்பே ழைக்குடிவாழ் துரைசாமி
நாயகநற் புலவன் றீட்ட
அவிரச்சி லேற்றியுத வினன்சுப்ர
மணியனெனு மறிஞ ரேறே.
திருவோத்தூர் திருநாவுக்கரசு மடம்
மஹாவித்வான்ழத்தமிழ்ரத்னாகரம்
சைவஸ்ரீ, ம.தி, பானுகவியவர்கள்
இயற்றிய,
எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்.
தேவரும்புகழு மாண்புளார் கம்பர்
சிலையெழு பஃதென வனியர்
மேவரும் புகழை விளக்கின ரதனுண்
மேவிய பொருண்முறை யனைத்து
மேவரு முணரப் பேழையங் குடிவ
ழெழிற்றுறை சாமிநா யகப்பேர்க்
காவருங் காத்தா னுரையிட வதனைக்
கைத்தலத் தேவரு மேந்த.
அச்சுவா கனத்தி லமைத்துயர் முறையா
யாக்கின னரசரும் பிறரு
நச்சுவா கதத்தி னேற்றிடும் குணத்தா
நல்லெழின் மதனினுஞ் சிறந்தோன்
மெச்சுவா கதத்தின் மாறிலாப் புகழான்
மிகுதிறல் வன்னியர் திலகன்
எச்சுவா கதமுந் தருவனி மித்திர
னிலங்கிடப் புரிதரு வள்ளல்.
சூரனை வதைத்த வீரவே லுடைய
சுப்பிர மணியநற் பெயரை
யாரநல் லதிட்டம் பெறுபுக ழாள
னருந்தமிழ்க் கலைமகட் புணர்வாற்
சீரிய பன்னூன் மகாருட னிலங்குஞ்
சிறப்பின னிவன்புக ழென்றுந்
தாரணி யுள்ள நாளள வினுமே
தணிவற விளங்குக மாதோ.
சென்னை ஹிந்துதியலாஜிகல் ஹைஸ்கூல் தமிழ்ப்
பண்டிதரும், லோகோபகாரி பத்திராதிபரும்
வேதாந்த வித்வசிரோமணியுமாகிய
ஸ்ரீமத். கோ.வடிவேலு செட்டியார்
அவர்கள் இயற்றிய
அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்.
திண்மையமை வன்னியர்மேற் றிட்பநுட்பஞ்
செறிந்தழகு செவ்வே தோன்ற
வண்மையெலாம் பெறுகம்பர் வகுத்த சிலை
யெழுபதிற்கு வளப்ப மாகத்
தண்மைநிறைந் திடும்பேழைக் குடிவாழுந்
துரைசாமி தக்கோ ரேற்க
ஒண்மையாப் பன்னூலாய்ந் துரையெழுதி
யுலாவச்சீ ருற்றான் மாதோ.
சென்னை துரைத்தன மாதர்கலாசாலைத் தமிழ்ப்பண்டிதர்
ம-௱-௱-ஸ்ரீ கா.நமச்சிவாய முதலியார்
அவர்கள் பாடிய வெண்பா.
கலைமகளைக் கண்கண்ட கம்ப னளித்த
சிலையெழுப துக்குரையைச் செய்தான் — கலைதேர்
உரைசாமி யென்ன உலகோ ருரைப்பத்
துரைசாமி யாம்புலவன் சூழ்ந்து.
சென்னை காமைசிஸ்காலேஜ் தலைவர் ம-௱-௱-ஸ்ரீ,
M.S.பூர்ணலிங்கம் பிள்ளை,பி எ.எல்.டி,
அவர்கள்
அபிப்பிராயம்.
சிலை எழுபது என்ற அருமையான நாலும் உரையும் பார்த்தேன். உரை பழைய வுரைகளைப் போன்று நன்னடையில் ஆழ்ந்த கருத்துக்களைத் தெள்ளிதில் விளக்குகின்றது. முகவுரையில் கம்பருடைய காலநிர்ணயம் கூடியவரை சரியாகச் செய்யப்பட்டிருக்கிறது. வன்னியர்குல மகிமையை விளக்குவதுடன் பொதுநீதியும் பற்பல விடங்களில் போதிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். உரையில் எடுத்துக்காட்டியுள்ள மேற்கோள்கள் அருமையுள்ளன; பாராட்டத் தக்கன. இதைப்பதிப்பித்த நாயகரவர்களின் அரிய உழைப்பை எவரும் நன்குமதிப்ப மென்பதில் ஐயமில்லை. அடுத்தபதிப்பில் நூல்தனியாகவும் உரை பின் பாகமாகவும் பிழையின்றி பிரசுரஞ் செய்யப்படவேண்டுமென்ற என் அபிப்பிராயத்தை இவண் தந்துளேன்.
சென்னை பச்சையப்பன் கலாசாலைத்
தமிழ்ப்பண்டிதர் ம-௱-௱-ஸ்ரீ,
கா.ர.கோவிந்தராஜ முதலியாரவர்கள்
இயற்றிய
அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்.
பேரார் கம்ப நாடரெனும்
பெரிய ரளித்த நற்றமிழின்
ரார் பொருளேய் சிலையெழுப
தென்னு நூலி னுட்பொருளைப்
பாரோ ருணர்ந்து மனங்களிக்கப்
பரிவார் வன்னி குலமன்னர்
சீரார் பெருமை யுலகறியச்
சிறந்த வுரைதான் வகுத்தனனால்.
ஏழைக் குடியாங் கிலையென்ன
வேந்து செங்கோல் வன்னியர்தம்
ஆழிக் கிணையாங் குலமதனி
லழகார் மணிபி னினிதுதித்தோன்
பேழைக் குடியான் கலைநலந்தேர்
பிறங்கு மறிஞன் றுரைசாமி
வாழி வளஞ்சா ரிவ்வுரையை
வாய்ந்து புலவோர் களிப்பாரே.
மதுரைத் தமிழ்ச்சங்கத்து வித்துவான்
செங்கல்பட்டு ம-௱-௱-ஸ்ரீ,
அரங்கசாமி நாயகரவர்கள் இயற்றிய
விருத்தம்.
முக்குலமன் னரில்முதன்மை பெற்றிடுவன்
னியர்புகழ்ச்சி முழுது மன்ன
இக்குமொழிக் கம்பன்செய் சிலையெழுப
தெனுநூலுக் கிசைவ தாகத்
தக்கவுரை யியற்றினன்பே ழைக்குடிநந்
துரைசாமித் தமிழ்நா வல்லோன்
மிக்கவச்சி லதைப்பதித்துச் சுப்ரமண்யக்
குகிசிலிசை மேவி னானால்.
ஸ்ரீ கிருஷ்ண சைதன்னிய கிரந்தகர்த்தாவும், இரரமநிலய
விவேகானந்த அச்சுக்கூடத்தலைவருமாகிய ஸ்ரீமாந்,
T.பக்தவத்சலம் பிள்ளை பி. எ. M. B.P.I.
அவர்கள் இயற்றிய விருத்தம்.
சிலையெழு தெனுநூற்குச் சீருரையொன் றியற்றினனால்
மலையெழுநல் விளக்கென்ன பாதுரைசா மிப்பெரியோன்
கலையெழுநுண் பொருளிதனைக் காசினியோர் தாமறிய
விலையெழுதற் புத்தகமாய் வித்தகசுப் பிரமணியன்.
வீறுபுகழ் நிலைத்தோங்க வீணறெல்லாம் பெயர்நிலவ
மாறுபடு மறக்கொள்கை யூறுபட வண்டமிழி
னேறுபடு நன்னிலைமை யிசைந்தொளிர வச்சியற்றி
ஆறுபடு மேலொழுக்க மறைவித்தா னற்புதனே.
ம-௱-௱-ஸ்ரீ
வ சு.செங்கல்வராயப்பிள்ளை எம்.ஏ,
அவர்களால் இயற்றப்பட்ட
சந்த விருத்தம்.
கலைவல கவிமுத லுரைமுழு வதுநாடிச்
சொலவல பெரியவர் துதிபெறு துரைசாமி
சிலையெழு பதினுரை யெழுதிய திறமீதே
இலையிரு ளெனஎழு பரிதியி னியனேரும்.
கோமளேசுவரன் பேட்டை ம-௱-௱-ஸ்ரீ, வித்வான்
ம.இராஜகோபால பிள்ளை அவர்கள்
இயற்றிய
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
வரம்பிசைக்கேந் தியதெய்வ மாண்புலமை
வளர்கம்பர் மகிழ்வி னோங்கிச்
சிரம்பிசைக்கேந் திரம்தவிற் செறுநர்வலி
தெறுங்கனலித் திருக்கு லத்தார்
நிறம்பிசைக்கேந் திடவுதவு நெடியசிலை
யெழுபதிற்கு நெறிவ ழாது
பரம்பிசைக்கேள் விபர்வியக்கப் பருவுரையொன்
றியற்றினனாற் பாரீர் பாரீர்.
உரைசாரு மொழுங்கினறு மிஃதளிந்த வுத்தமன்பே
ருரைப்பக் கேளீர்
வரைசாருந் தீபிகையில் வளம்படைத்த மதியாளன்
மருவும் பேழைத்
துரைசாமி யெனுநாமன் றொல்லுலகி லச்சிட்டுத்
துலங்க வைத்தோன்
பரைசாரும் பாகத்தாற் குகப்புறுசுப் பிரமணிய
பாவல் லோனே.
ஓமலூர் தாலூக்கா தோரமங்கலம் கர்ணம் ம-௱-௱-ஸ்ரீ
வித்வான். அ.வரதநஞ்சையப் பிள்ளை
அவர்கள் இயற்றிய விருத்தம்.
புவிக்கணியா யான்றபொருள் பயக்குநல்லோர்
கவியென்று புகன்று காட்டும்
கவிச்சக்ர வர்த்தியாங் கம்பனது
தமிழ்மணக்குங் கனிவா யானே
செவிக்கினிமை பெறவமைத்த தெள்ளமுதாம்
சிலையெழுப தென்னு மிந்நூல்
உவக்கமுன முபர்கருணா கரச்சோழ
னவையினிடை யுரைத்த தாமால்.
பாட்டொன்றுக் காயிரம்பொன் பரிசுபெற்று
வன்னியராம் பாராள் மன்னர்
தோட்டுன்று நெடுஞ்சிலையின் பெருவீரம்
புகலுமிந்நூல் சுசனர்க் கெல்லாங்
காட்டொன்று நல்வழியில் மீட்கவென
வுரைதீட்டிக் கடமை செய்தான்
பாட்டளிசேர் பொழிற்பேழைக் குடித்துரைசா
மிப்பெயர்கொள் பாவலோனே.
அன்னதனைத் தன்னதச்சு விமானமிசை
யேற்றியுல கனைத்து மேற்றும்
வன்னிகுல மித்திரன்பத் ராதிபனாஞ்
சுப்ரமண்ய வள்ளல் செய்த
மன்னுமுப காரமிதற் கென்னோகைம்
மாறென்று வானை நோக்கி
யுன்னுவதல் லாற்பிறிதென் னன்னவர்தம்
வழிசிறப்புற் றோங்க வென்றே.
விஷ்ணுபாத சேகரரென்னும் ம-௱-௱-ஸ்ரீ,
வித்வான் ஜா.பசுபதி நாயகரவர்கள்
இயற்றிய
நேரிசை வெண்பா.
வாழையிளந் தாறொடிய மந்திகள்பாய்ந் தாங்கயலேய்
தாழையிள நீர்குடித்துத் தண்டலைசேர் — பேழைநகர்
நங்கள் துரை சாமிமால் நற்செயலொன் றோதுகிறேன்
இங்கெவருங் கேட்டுணர யான்.
இம்பர் தனிப்புரந்த ஏற்றமிகும் வன்னியர்க்கோர்
கம்ப ரெனும்பெரியர் கண்டளித்த — செம்பொற்
சிலையெழுப தாநூற்குத் தெள்ளுரைசெய் தீந்தான்
இலைநிகரென் றோத இவன்.
அத்தகைய நூலதனை யச்சிட்டான் வன்னிகுல
மித்திரனை யெங்கெங்கும் மேவிவர — வைத்துளனாம்
நற்சுப் பிரமணிய நாயகன்றான் வாழுகின்ற
இற்குயப் பேட்டை யெனல்.
ஸதாவதானம், யாழ்ப்பாணம்,
ஸ்ரீமான்.நா. கதிரைவேற்பிள்ளை யவர்கள்
மாணாக்கர் ம-௱-௱-ஸ்ரீ,
புரசை, மு. பாலசுந்தர நாயகர் அவர்கள்
இயற்றிய விருத்தம்.
முத்தீயின் வழிவந்த முக்குலத்தா ராயவன்னி
முதல்வர் சீர்த்தி
பத்தேழு பாவினத்தாற் சிலையெழுப தெனுநூலைப்
பரிவி னாலே
பித்தேறிப் பிதற்றுநர்நா வடங்கியிடப் பெரும்புலமைக்
கம்பன் மென்மேல்
சத்தூர வியற்றினதற் கோருரைதா னிஞ்ஞான்று
சாற்றி னானால்
அன்னவன்யா ரென்புழீஇ யரியகலை நனிதெரிந்தா
னறிவோர் சாற்றும்
மன்னவர்பே ழைக்குடிவாழ் துரைசாமிப் பெயருடைய
மகிப னின்று
வன்னிகுல மித்திரன்பத் திராதிபனாஞ் சுப்பிரமண்ய
நாய்க னச்சில்
முன்னுறவைத் தேவிடுத்தா னவைகாணவுள மகிழ்ந்தே
முலகுக் காமால்.
சென்னை கலியுகவர்த்தமானி பத்திராதிபர்
ஸ்ரீமத் கந்தஸாமி பிள்ளை மாணாக்கரி லொருவரும்,
இலவை. ஜோதிடவைத்திய சித்தாந்தி
ஸ்ரீமத் சங்கரலிங்கம் பிள்ளை குமாரரும்,
தென்காசி ஸ்ரீராமாநுஜம் பிரஸ் மானேஜருமான,
ஸ்ரீமான், E.S.சிவராமலிங்கம் பிள்ளை
அவர்கள் இற்றிய,
அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்.
பதியுறைவோர் புறவிழிப்பா லவர்தன்குறை
தீர்க்கமலர்ப் பதியன் றெய்வ
நிதியெனவே முதற்படைத்த நிருபர்வன்னி
குலக்கரும்பின் நிறையைக் கம்பன்
துதியுளசெஞ் சிலையெழுப தெனக்கவிசற்
கரைவட்டாய் தொகுத்தான் யார்க்கு
தியுளநற் றுரைசாமி வள்ள லுரை
வெனும்பாகாய் வழங்கி னானால்.
மதுரைத் தமிழ்ச்சங்க வித்வான்
காங்கயம் - அஷ்டாவதானம், ம-௱-௱-ஸ்ரீ,
சிட்டா. V.சேஷாசல நாயுடு அவர்கள்
இயற்றிய விருத்தம்.
மணிசேர்மகுட மன்னவர்கள் வணங்குங் கம்பநாடர்மிக
அணிசேர்ஒவ்வோர் கவிக்குமொவ்வோ ராயிரம்பொன்பரிசுடனே
திணிசேர்நரவாகனமடைந்து திகழுங்கருணாகரவனியன்
பணிசேர் அவையிலரங்கேற்றம் பண்ணும்செம்பொற்சிலைகவிக்கு
வாழைக்குடிகள் நறுந்தேறல் மணித்தாலடைந்து தங்கணிற
மாழைக்குடியராஞ்சுரும்பர் மாநதிமுரலுஞ் சோலையடார்
எழைக்குடிகளில்லாம லெங்குமணிமா ளிகைசூழும்
பேழைக்குடிவாழ் கலைவல்லான் பிறங்குந் துரைசா மிப்பெயரான்
கலைஞர்மதிக்குமேற்கோள்கள் காட்டிவிரிவாயோருரையைத்
தலைமையெனவே தந்தருளத் தழைவன்னிகுலமித்திரனை
உலகிலீன்றபேரிசையா றுசிதசுப்ர மண்ணியவேள்
நிலவவச்சிற்பிரசுரித்து நேர்ந்தானியாவும் தேர்ந்தானே.
கோயமுத்தூர் வித்வான் ம-௱-௱-ஸ்ரீ
கந்தசாமி முதலியார் அவர்கள் குமாரரும்,
பண்டிதர் ச. திருச்சிற்றம்பலம் பிள்ளை அவர்கள் மாணாக்கரும்
டிஸ்ட்ரிக்ட்கோர்ட்டு வக்கீலுமாகிய ஸ்ரீமரன்
C. K. சுப்பிரமணிய முதலியாரவர்கள். பி.எ.
இயற்றிய
அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்.
வன்னிகுல பூபதிகள் மேற்கம்பர் திருவாக்காய்
வையம் போற்று
மன்னுசிலை யெழுபதெனும் மாக்கவியைத் துரைசாமி
மகிபன் செய்யும்
பன்னுதெளி வுரையுடனே யச்சியற்றிக் குலம்வளரும்
பண்பு செய்து
நன்னயவான் சுப்ரமண்ய நாயகவேள் நிலவுபுகழ்
நலம் பெற்றானே.
போர்வேந்தர் படைச்சிறப்பு முலகமெலா மதனாலே
புகழ்பெற் றோங்கி
ஏர்பெறவே தழைத்துயரு மியல்பெல்லா மொவ்வொன்றா
யியம்பு மிந்நூல்
பார்பெறவே யுலகினர்க்கு விளக்கியுப கரித்ததுவும்
பண்பா லிந்த
பேர்பரவு மிருவர்களு மழியாத புகழ் பெற்று
பிறங்கு வாரே.
சென்னை இராயப்பேட்டை,
வெஸ்லிகாலேஜ் தர்க்கபோதகர் ம-௱-௱-ஸ்ரீ
S.சச்சிதா நந்தம்பிள்ளை பி.எ.எல்.டி,
அவர்களால் கொடுக்கப்பட்ட
அபிப்பிராயம்.
சிலை யெழுபது என்னும் இந்நூல் முற்காலத்துத் தமிழகத்தில் அரசுபுரிந்த அக்கினிகுல மன்னர்களது அரசியலின் உறுப்புகளைப் பெரிதும் புகழ்ந்து கூறுவதாகும். இதனை இயற்றினோர் கம்பநாடர் என்று இதிற் காணக் கிடக்கின்றது. இந்நூலின் முகவுரையில் கம்பரது கால வரையறையைப் பற்றி ம-௱-௱-ஸ்ரீ, ஆ.சுப்பிரமணியநாயகர் அவர்கள் எழுதியுள்ள விஷயங்கள் நம்மனோர் நன்மதிப்பிற் குரியன. இதற்கு வரையப்பட்டுள்ள உரையும் சாலச் சிறப்புடையதே.
திருச்சி எஸ்.பி.ஜி. காலேஜ் தமிழ்ப்பண்டிதரும்,
“செந்தமிழ்ச்செல்வம்” பத்திராதிபருமாகிய
ம-௱-௱-ஸ்ரீ, அ.சுந்தரநாதம் பிள்ளை
அவர்கள் இயற்றிய.
அறுசீர் ஆசிரிய விருத்தம்.
முந்துநான் மறைகட் கெட்டா முழுமுதல்
வழுதி நாட்டில்
வந்துதா னமர்ந்து சங்கம் வளர்தா
வமைய வாய்ந்த
நந்துறாத் தமிழில் வல்ல நயதிருக்
கம்ப நாடன்
சிந்துறா துரைத்தா னோங்குஞ் சிலையெழு
பதாநன் னூலே.
சிலையெழு பதிலே மன்னர் திருக்குலத்
தவரே யாகும்
நிலையுறு வன்னி யர்தம் நிறைபுகழ்
விளங்கு மாலோ
உலைவறு மதனுட் சொற்ற வுயர்பொரு
ளனைத்து மாய்ந்து
கலைவலர் களிக்கச் செய்தான் கருதுரை
யொருவ னம்மா.
அன்னவன் யாரே யென்னி லரசவர்
குலத்தில் வந்த
மன்னிய குணத்து மிக்கான் மகிழ்தமிழ்க்
கலையில் வல்லான்
கொன்னுபர் செல்லப் பேழைக் குடியினில்
வாழுங் கோமான்
நன்னயத் துரைசா மிப்பேர் நாயக
னாகு மாதோ.
இத்தனி நூலின் சீரு மெழிலுரை
வளமுங் கண்டு
சித்தமன் களியே பொங்கச் செவ்விய
அச்சி லேற்றி
இத்தரை முழுது நாளு மினிதினி
னுலாவச் செய்தான்
நத்துசுப் பிரமணி யப்பேர் நாயகன்
நலத்தாற் றானே.
திருவெண்ணெய்நல்லூர்,
ஸ்ரீ கம்பர் கலாமிர்த சங்க காரியதரிசி
ஸ்ரீமான், தி.வடிவேலு முதலியா ரவர்கள்
இயற்றிய விருத்தம்.
கலைவளர்க்குங் கவிபுனைந்த கம்பநாட்
ட்டிகள் புவி காவலோர் தஞ்
சிலைவளைக்கும் பெருமைதனைச் சிலையெழுப
தெனுநூலாற் சிறக்கச் சொற்றா
ரலைவளைக்கும் புவனியுளோ ரறியவுரை
விரித்துரைத்தா னழகாய்த் தெங்கு
குலைபழுக்கும் பேழைகுடி துரைசாமி
நாயகனாங் குணவா னம்மா.
அப்பெரிய காவியத்திற் கருகரா
மனற்குலத்தோ ரவாவின் வண்ண
மெப்புலவ ருங்கண்டு கும்பனுரை
யிதுவோவென் றேத் தெடுப்ப
சுப்பிரம ணியக்குரிசிற் செப்பமுட
னச்சிட்டுத் துலங்க வைத்தா
ரிப்புவியோர் செந்தமிழி னின்பாலந்
துய்ப்பரென விசைவு கொண்டே.
காரைக்கால், சாஸ்திரி ஆராய்ச்சி ம-௱-௱-ஸ்ரீ
V.குருசாமி படையாக்ஷியாரவர்கள்
இயற்றிய வெண்பா.
கற்றோறிற் கம்பனென்போன் காசினியி னாளுகையை
யுற்றோர்க்குச் செஞ்சிலையை யோதினான் — மற்றுந்
துரைசாமி நாவலனுஞ் சொன்னா னுரையுங்
குருசாமி யுள்ளங் கொள்.
மதுரைஜில்லா கெம்பூர் வீத்வான் ம-௱-௱-ஸ்ரீ,
வீ. ஆறுமுகஞ்சேர்வை யவர்களியற்றிய
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்.
வன்னியரின் புகழ்விளங்கப் புலவர்சிகா
மணிகம்பன் மகிழ்மிக் கோங்கி
முன்னுஞற்றி வைத்தசிலை யெழுபதெனும்
பநுவல்தனை முழுது மோர்ந்து
மன்னுதிரு மிகுபேழைக் குடிவாழுந்
துரைசாமி மதியில் வல்லோன்
நனனலஞ்சா லுரைவகுத்து நாவவலின்
புறவளித்தா னதனை நாளும்.
மண்டலத்திற் சிறந்ததமிழ் நாட்டிலுள்ளா
ராய்ந்துபொருள் வளங்க ளெல்லாங்
கொண்டுவகைக் கடல்குளித்தின் புறவன்னி
குலமித்திரனதிய னான
தண்டமிழ்ச்சுப் பிரமணிய நாயகனா
மிசையுடையான் தகுதி யாக
விண்டலத்தோர் வியக்குமச்சிற் பதித்துதவி
மிகுகீர்த்தி மேவி னானால்.
கோயமுத்தூர் லண்டன் மிஷன் ஹைஸ்கூல்
தமிழ்ப்பண்டிதர் ம-௱-௱-ஸ்ரீ,
C. S. சொக்கலிங்கம் பிள்ளை அவர்கள்
இயற்றிய,
கொச்சக் கலிப்பா.
வன்னியபூ பதிகளின்மேன் மகாகவியாங் கம்பர்செய்த
வின்னிசைசேர்சிலையெழுப தெனுநூற்கோ ரினியவுரை
நன்னருறச் செய்தளித்தா னானிலமெ லாம்புகழும்
மன்னுபே ழைக்குடியில் வந்ததுரை சாமியென்போன்.
அந்தவுரை யினையவனி யதனிலுள மக்களெலா
முந்துமன்பொ டினிதோதி யுணர்வடைத் லேகருதிச்
சந்தமுற வச்சேற்றித் தாரணியிற் பிரசுரித்தான்
சந்ததம்க்ஷத் திரியகுலஞ் சாரபிமா னந்தரித்தான்;
வன்னிகுல மித்திரனாம் மாண்புபெறு பத்திரிகை
சென்னையினி னடாத்திவரு செந்தமிழ்மீதார்வமுளான்
என்னனைய நண்பர்கள்பா லென்றென்று மாறாது
மன்னியிடும் விசுவாசன் வறியவர்கட் குயர்போசன்;
கங்கைநதி சடைக்கரந்த கண்ணுதலார்க் கெழிற்றாசன்
சங்கைபெறு மறிஞர்கட்குச் சாதுரிய முறுநேசன்
மங்குதலில் புகழ்ச்சுப்ர மணியநா யகனென்னு
மங்கிகுலத் தோன்றலென வனைவருஞ்சொல்தூயவனே.
மதுரைத் தமிழ்ச்சங்கத்து வித்துவானும்,
கோயம்புத்தூர் கலாசாலைத் தமிழ்ப்பண்டிதருமாகிய
ம-௱-௱-ஸ்ரீ, அ. கந்தசாமிப் பிள்ளை
அவர்கள் இயற்றிய விருத்தம்.
நமது செந்தமிழில் அளவினாற் பெயர்கொள்
நயப்புறு நூல்களி லொன்றாய்
அமைவுறும் சுவைசால் சிலையெழு பஃதென்
றரைந்திடும் அரிய நூல் தன்னை
யெமைநிகர் வாரும் எளிதினி லுணர
வியற்றின னல்லுரை யன்னோன்
கமைமுதற் குணங்கட் கிருப்பிடமாய
கனதுரை சாமிநா யகனே.
அத்தகு நூலை யச்சினி லேற்றி
யாவர்க்கும் பெரிதுப கரித்தான்
உத்தமன் சுப்ர மண்யனென் றுரைக்கும்
உயர்குணன் வன்னியர் குலத்து
மித்திர னென்னும் பத்திரா திபனாப்
விளங்குவோன் கோவைமா நகர்வாழ்
வித்தகன் பழனி யப்பபூ பதியாம்
மேதகைக் கேய்ந்த நண்பினனால்.
கோயமுத்தூர் பள்ளபாளையம்
மாணவர் தமிழ்ச்சங்க ஸ்தாபகரும் போதகாசிரியருமாகிய
ம-௱-௱-ஸ்ரீ N. வையாபுரி பிள்ளையவர்கள்
இயற்றிய விருத்தம்.
வன்னியபூ பதிகள்குல மிகவிளங்க வளம்பெறுநற்
கவியாற் கம்பன்
பன்னுசிலை யெழுபதினுக் கழகுமிகுந் தெளிவுரையைப்
பாரோர் மெச்சும்
நன்னயஞ்சால் துரைசாமி நாயகனன் பானியற்றி
நல்கி நன்
தன்னுறும்பே ழைக்குடிக்கோர் பெரும்புகழ்தந் தான் காண்பீர்
சால நன்றே.
அன்னதொரு நூலினைநன் றெனவறிஞர் கண்டேத்த
வழகான் மேவுஞ்
சென்னைவேப் பேரிமது கரவிலா சப்பிரசிற்
சேர்த்து நாளும்
வன்னிகுல மித்திரன்பத் திரவதிய னெனும்பெயரை
வழங்கப் பெற்றே
மன்னுறுமா சுப்ரமண்ய நாயகன்றந் தானுலகோர்
மகிழ மாதோ.
கோயமுத்தூர் டவுன் பள்ளபாளயம்
மாணவர் தமிழ்ச்சங்கத்தின் காரியதரிசியாகிய,
ம-௱-௱-ஸ்ரீ, S.சுவாமிநாத முதலியார்
அவர்கள் இயற்றிய,
வெண்பா.
சீர்மணக்கும் பேற்றானெஞ் செல்வக் கவிகம்பன்
நார்மணக்கும் வன்னிகுல நன்குறவே — தார்மணக்கப்
பூட்டுஞ் சிலையெழுப தென்றொருநூற் பொற்பேற
நாட்டினா னிவ்வுலகில் நன்கு.
உவந்தளித்த விந்நூலுக் கோருரையை வன்னி
குலந்தழைப்பச் செய்தளிப்பீரென்னத் — தவந்தவமென்
றார்க்குந் துரைசாமி யாய்ந்துரையைத் தந்துலகோர்
பார்க்கும் படிபுரிந்தான் பார்.
பரிந்துரைத்த விந்நூலின் பண்புரையைப் பாரில்
விருந்தளிப்பான் வேண்டியே யச்சில் — அருந்தமிழோர்
பார்க்கப் புரிந்ததனாற் பண்புறுமா சுப்ரமண்யன்
பார்க்குள் உயர்ந்தான் பரிந்து.
கோவை அக்நிகுலக்ஷத்ரிய ஜில்லாசங்க காரியதரிசி
ம-௱-௱-ஸ்ரீ, R.பூபதிபழனியப்ப நாயகர்
அவர்கள் இயற்றிய விருத்தம்.
புலவர்புகழ் கலிங்கத்துப் பரணியினான் ஜயங்கொண்டான்
புகழப் பெற்ற
அலகிலறி ஞன்கருணா கரத்தொண்ட மான்சபையி
லன்று கம்பன்
இலகவுரை சிலையெழுப தெனுநூலை யரங்கேற்றி
யின்சீர் பெற்றான்
நிலவுலகி லின்னூலுக் குறைதந்தான் துரைசாமி
நேயன் மாதோ.
வெண்பா.
உத்தம குலோத்துங்க சோழன் சரிதையுடன்
வித்தகமா யச்சில் விரைந்தேற்றி — மெச்சும்
சிலையெழுப தாகநஞ் சுப்ரமன்யன் தந்தான்
உலகினிலுள் ளோர்களிப்ப வோர்ந்து.