உள்ளடக்கத்துக்குச் செல்

சிலை யெழுபது மூலமும், 1915/003

விக்கிமூலம் இலிருந்து

படை.


படையென்பது: தானை. அது அரசியலுக்கு முதன்மைய தாதலின் இங்கே நூலுக்கு முதலில் வைத்து வில், வாள், வேல், யானை, குதிரை, தேர் என ஆறுவகையாக, ௨௮ - கவிகளால் கூறினார். நாயனாரும் “உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையு ளெல்லாந் தலை” என்றாரென்க. அறுவகைத் தானையை தி ௧௨ -வ-தி. “வேற்றானை வாட்டானை விற்றானை மேலோர் - தேர்த்தானை பரித்தானை களிற்றுத் தானையென - வாற்றல் சான்ற வறுவகைத்தானை” என்னும், ௮௨. வ-சூ-க.

வில்.


வில்லென்பது அறுவகைத்தானையு ளொன்று. அப்படையுறுப்பாறனுள் ஒன்றாகிச் சிறத்தலோடும் அதன் பெயர்களுள் ஒன்றினாலேயே இந்நூற்குப் பெயர் அமைத்தலின், இங்கே அதைவலி யுறுத்தற்கு ஈற்றினுங் கூறுவதோடு படைக்கு முதலிலேவைத்து விஜைய தசமி நாட்கோடல், வில், விற்பிடி, வின்மணி, நாணி, வில்லேந்துதல், வில்வளைத்தல், நாணேற்றுதல், குணத்தொனி, அம்பறாத்தூணி, பிரமாத்திரம், நாராயணாத்திரம், பாசு பதாத்திரம் அபிமந்திரித்தல், நாணிறங்குதல் எனப் பதினைந்து சிறப்பாக இருபத்திரண்டு கவிகளால் கூறினார்.

இவைகளை ஸ்மிருதி, புராண, இதிகாசாதிகளிற் கண்டுணர்க.

[1]விஜய தசமி நாட்கோடற் சிறப்பு.

விஜய தசமி நாட்கோடற் சிறப்பென்பது:— வருடந்தோறும் வரும் புரட்டாசிமாத சுக்கிலபட்ச தசமி திதிவிரதங் கொள்ளுதலின் பெருமை. அது ஆயுத மெடுத்தல் அல்லது அம்புபோடுந் தினமாதலின், இங்கே பாயிரத்துட் கூறிய ஆயுதங்களை யுடையவராகிய படைத்துணைத் தலைவர் சிறப்பைத் தழுவி வில்வகுப்பிற்கு முதலில் வைத்தார்.

கொச்சகம்.

சொன்மங்கலம் பொருந்துந் தொல்லுலகிற் பல்
லுயிரும் நன்மங்கலம் பொருந்து நான்மறையு நனி
விளங்கும் வன்மங்கலம் பொருந்தி வளர்வனிய குல
வரசர் வின்மங்கலம் பொருந்தும் விறற்றசமி நாட்கொ
ளினே. (௧)

(இ - ள்) தொல் உலகில் - பழமையான உலகத்தில், வன்மம் கலகம் பொருந்தி வளர் வனிய குலஅரசர் - போர்க்கவசத்தை (தங்களுக்கு அலங்காரமாகிய) ஆபரணமாப் பொருந்தி விளங்காநின்ற வன்னியகுல அரசர்களானவர்கள், வில் மங்கலம் பொருந்தும் விறல் தசமி நாள் கொளின்-வில்லுக்குச் சுபகரத்தைப் பொருந்தும் விஜய தசமி நாள் விரதத்தைக் கொண்டால், சொல்மங்கலம் பொருந்தும் - யாவருடைய சொற்களும் நீதியுடையனவாக இருக்கும்; பல்உயிரும் நலமங்கலம் பொருந்தும் -பலவாகிய உயிர்களும் நல்லசெழிப்பை யடையும், நான்மறையும் நனி விளங்கும்-நான்கு வேதங்களும் மிக்க பிரகாசத்தை யடையும். எ - று.

கருத்து வன்னியர்கள் விஜயதசமி நாட்கோடலால் சொற்கள் நீதியும், உயிர்கள செழிப்பும், வேதங்கள் பிரகாசமும் அடையும் என்பதாம்.

அமரம் இரண்டாங் காண்டம் க்ஷத்திரிய வர்க்கம்


என்னும் ௫௨௧-வது சுலோகத்தினால் - வர்மம் கவசம் கர்மம் கன்மம்; தர்மம்; தன்மம் என்பபோல, வர்மம் வன்ம மென்றாயது.


விற்சிறப்பு.

விற்சிறப்பென்பது:— வில்லின் பெருமை அது தகுதியான நாளில் கைக்கொண்டு பழகுதலின், இங்கே விஜயதசமி நாட்கோடற் சிறப்புக்குப் பின்வைத்து நான்கு கவிகளினால் கூறினார்.

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

கலையாய்வன்னி குலோத்துங்கர் கரத்திற்கவின்
கொண் டமைந்தவென்றிச், சிலையாலன்றோ வேழ்புய
லுஞ் சேணிற்பொலியுந் திவாகரனும், அலையார்கட லுங் கடையனனு மடன்மாருதமு மடங்கியொரு, நிலை
யாய் நின்ற மனுநீதி நெறியு நின்றதறியீரோ. (௨)

(இ-ள்) குல உத்துங்க வன்னியர் - ஜாதியி லுயர்ந்த வன்னியர்களது, கரத்தில் கலையாய் கவின்கொண்டு அமைந்த-கையினிடத்துக் குல வித்தையாக அழகோடு பொருந்திய, வென்றிச் சிலையால் - வெற்றியதை தரத்தக்க வில்லினால், ஏழ்புயலும் - சத்தமேகங்களும், திவாகரனும்-சூரியனும், சேணில் பொலியும் - ஆகாயத்தில் விளங்குவனவாகும், அலை ஆர்கடலும்-அலைகள் நிறைந்த சமுத்திரமும், கடை அனலும் ஊழித்தீயும், அடல் மாருதமும் - பிரசண்ட காற்றும், ஒருநிலையாய் அடங்கிநின்ற (தத்தம் வரம்பு கடவாது) ஒரு நிலையைப் பற்றினதாகவே அடங்கி நின்றிருக்கின்றன, மனுநீதி நெறியும் நின்றமனுதரும வழியும் நின்றிருக்கின்றது அறியீரோ - அறியீர்களா (எ-று.) அன்று - ஓ - ஓ - அசைகள்.

கருத்து:-வன்னியர்கள் கையில் அமைந்த வில்லினால் சத்த மேகங்களும் சூரியனும் ஆகாயத்திற் பொலிதலும் சமுத்திரமும் வடவனலமும் பிரசண்டக் காற்றும் தத்தம் வரம்பு கடவாது அடங்கி நிற்றலும், மனுமுறை நிலைத்திருக்கின்றதும் ஆம் என்பதாம்.

இதுவும் அது.

வேறு,

மலையினிற் பொலங்கொண் மேருமலையன்றி மலை மற்றுண்டோ, கலையினி லுரைப்ப வெண்ணெண் கலையன்றிக் கலைமற் றுண்டோ, வலையினி லுகாந்த நீத்தத் தலையன்றியலைமற் றுண்டோ, சிலையினிற் றிறங்கூர்வன் யர் சிலையன்றிச் சிலைமற் றுண்டோ. (௩)

(இ-ள்.) மலையினில் பொலன்கொள் மேருமலை அன்றி மற்றுமலை உண்டோ - மலையில் பொன்மயங் கொண்ட மகாமேருவைத் தவிர வேறு மலை இருக்கிறதா? கலையினில் எண் எண் கலையன்றிமற்று உரைப்ப கலையுண்டோ கலைக்கியானத்தில் அறுபத்துநான்கு கலையைத்தவிர வேறு சொல்வதற்குக் கலை இருக்கிறதா? அலை உண்டோ-அலையில் பிரளய நீத்தத்தின் அலையைத்தவிர வேறு அலை இருக்கிறதா? (என்பதுபோல) சிலையினில் திறம் கூர்வன்னியர் சிலை அன்றிமற்று சிலை உண்டோ வில்லில் வன்னியரது (அக்கினியிற்றோன்றிய) வில்லைத் தவிர வேறுவில் இருக்கிறதா? எ - று.

கருத்து. வன்னியர்களது அக்கினியிற் றோன்றியவில்லை சிறந்ததாகின்றது என்பதாம்.

இதுவும் அது.
வேறு,

அமரரொரு புறமரிய முனிவரொரு புறம் விசயை யரிவையொரு புறமடலுறுஞ், சமனுமொரு புறம்விரவு கழுகுமொரு பிறநெடிய தருமமொரு புறமுடைகொள்வாய், ஞமலியொரு புறமெரிக ணலகை யொரு புறமிடர்செய் நரிகளொரு புறமகிழவெஞ், சமர்செய்திடு மணிமவுலி யணிவனிய குலவரசர் தமதுகர மருவுசிலையே. (௪)

(இ-ள்) மணி மவுலி அணி வனியகுல அரசர் தமது-இரத்தின கிரீடத்தைச் சூடி விளங்கா நின்ற வன்னியரென்னும் வரசர்களது, கர மருவு சிலைகையினிடத்துத் தங்கும் வில்லானது, அமரர் ஒருபுறம் - தேவர்கள் ஒரு பக்கமும், அரிய முனிவர் ஒரு புறம் - அரிய (தவத்தினையுடைய) இருடிகள் ஒரு பக்கமும், விஜயை அரிவை ஒரு புறம் - துர்க்கை ஒரு பக்கமும், அடல் உறும் சமனும் ஒருபுறம் - கொல்லுகின்ற இயமனும் ஒரு பக்கமும், விரவு கழுகும் ஒருபுறம் - காக்கை பருந்துகளுடன் கலந்த கழுகுகள் ஒரு பக்கமும், நெடிய தருமம் ஒரு புறம்-அழியாத தருமம் ஒருபக்கமும், முடை கொள்வாய் ஞமலி ஒருபுறம்-புலால் நாற்றத்தைக் கொள்ளும் வாயினையுடைய நாய்கள் ஒரு பக்கமும், எரிகண் அலகை ஒருபுறம் - அக்கினிக் கண்களை உடைய பேய்கள் ஒரு பக்கமும், இடர்செய் நரிகள் ஒருபுறம் - துன்பத்தைச் செய்யும் நரிகள் ஒரு பக்கமும் (சூழும்படி நின்று) மகிழ-களிப்பை யடைய, வெம் சமர் செய்திடும் - உக்ர யுத்தத்தைச் செய்யும் (எ-று.)

கருத்து. வன்னியர்களது வில் தேவர்களும், முனிவர்களும், துர்க்கையும், இயமனும், பருந்துகாகங்களோடு கலந்த கழுகுகளும், தருமமும், நாய்களும், பேய்களும், மகிழும்படி உக்கிர யுத்தத்தைச் செய்யும் என்பதாம்.

இதில் தேவர்கள் முனிவர்கள் - அசுரர் பயந்தீர்தலாலும், அவிகிடைத்தலாலும், இயமன்பாபாத் துமாக்க ளில்லாமையால் கவலையற் றிருத்தலாலும், துர்க்கை பலி கொள்ளுதலாலும், நாய் நரி காக்கை பருந்து கழுகுகள் ஆகாரங்கிடைத்தலாலும், பேய்கள்நிணக் கூழுண்ணுதலாலும், தருமம் நிலை கிடைத்தலாலும் மகிழ்வடைந்த வென்க.

இவைகளைக் கருணாகரசசோழன் பேரிற்செய்த கலிங்கத்துப்பர ணியிலும், இராமாயண பாரதாதி இதிகாச புராணங்களுள் யுத்த கட்டங்களினுங் காண்க.

இதுவும் அது
வேறு,

முட்டரை யறிஞராக்கு முனிவரைத் தவஞ்சீர்ப் பிக்கும் சிட்டருக் கரசுநல்குஞ் சேர்ந்தவர்க்குரம்பா லிக்கும், மட்டறு தெவ்வர் தம்மை வலிதபவச்சுறுத்தும், துட்டரைத் தொலைப்பவன்னி தோன்றுபொற் சிலையொன்றம்மா. (௫)

(இ - ள்) துட்டரைத் தொலுப்ப - துஷ்டர்களைத் தொலைக்கும் பொருட்டு, வன்னி தோன்றுபொற்சிலை ஒன்று - அக்கினியிற் றோன்றும் அழகிய வில் ஒன்றே, முட்டரை அறுஞர் ஆக்கும்-மூடர்களை விவேகிகளாக்கும், முனிவரைத் தவம் சீர்ப்பிக்கும் - முனிவர்களைத் தவத்தினால் சிறக்கச்செய்யும், சிட்டருக்கு அரசு நல்கும்- சிநேகர்களுக்கு அரசைக்கொடுக்கும், சேர்ந்தவர்க்கு உரம்பாலிக்கும்-தன்னை யடைந்தவர்களுக்குப் பலத்தைக் கொடுக்கும், மட்டு அறு தெவ்வர்தம்மை வலிதபவச்சுறுத்தும்-மிதமில்லாத பகைவர்களுக்கு வலி கெடும்படி அச்சத்தைக் கொடுக்கும் எ-று. அம்மா அசை,

கருத்து. வன்னியர்களது விம் மூடர்களுக்கு விவேகமும், முனிவர்களுக்குத் தவமும், சினேகர்களுக்கு அரசும், தன்னைச் சேர்ந்தவர்களுக்குப் பலமும் உண்டாக்கும் என்பதாம்.

இதில் வன்னியர்களோடும் யாகத்திற்றோன்றிய வென்பார் “வன்னி தோன்று பொற்சிலை” என்றார். அழகிய சிலையொன்று கொள்ளலாமோ வெனின் கொள்ளினும் அமையுமென்க என்னை? அரிச்சந்திரபுராணம் விவாக காண்டம்.

“நற்றேரை விட்டிறங்கி நாயகியைத் தொழுதிறைஞ்சி நண்ணிராசன், முற்றேரை நோக்குதலு முடிவேந்தன் கருணை விழிமுனை கண்டாக்க, கற்றேருங் கற்பரியுங் கற்சிலையுங் கற்கணையுங் கன்னிமுன்னே, பொற்றேரும் பொற்பரியும் பொற்சிலையும் பொற்கணையாப் பொலிந்த வன்றே”

என்னும் க௨௫-வது செய்யுளில் “பொற்சிலையும்” என்றதனால் அறிக. பொன்னாதலால் மூங்கிலாகிய விற்போலும் குணங்கள் பொருந்து மோவெனின்! தெய்வத் தன்மையால் பொருந்துமென்க. என்னை? புகலி திருஞானசம்பந்த நாயனாருக்குச் சிவபிரானால் கொடுக்கப்பட்ட பொன்னாலாகிய தாளம் ஓசையுற்றதாக திருத்தொண்டர் புராணமென்னும் பெரிய புராணத்துள் திருஞானசம்பந்த நாயனார் புராணத்தாலுணர்க.

விற்பிடிச்சிறப்பு

விற்பிடிச்சிறப்பென்பது:- வில்லைப்பிடித்தலின் பெருமை. அது வில்லின் வடிவுகண்டு உரிமையுற்றபிறகு பற்றுதலின். இங்கே விற்சிறப்புக்குப் பின் வைத்து இரண்டு கவிகளால் கூறினார்.

மிடிகரக்கப் புலவருக்கு மிகுபொருளீந் திடுவார்தம்
அடியிரக்கத் தொடுபணிவார்க்கரசு தருங்கொடையாளர்
படிபுரக்க வவதரித்த பண்ணுடர் கரத்தமைவிற்
பிடியுரத்தி னுலன்றோ பெருஞால முரமுறலே. (௬)

(இ-ள்.) புலவருக்கு மிடிகரக்க மிகுபொருள் ஈந்திடுவார்-வித்வான்களுக்குத் தரித்திரம் நீங்கும்படி மிக்க திரவியத்தைக் கொடுக்கின்றவர்களும், தம் அடிபணிவார்க்கு - தமது பாதத்தில் (வீழ்ந்து) வணங்குவோர்களுக்கு, இரக்கத்தொடும் அரசுதரும் கொடையாளர்- இரக்கத்தோடும் அரசு கொடுக்கும் கொடையினை யுடையவர்களும் (ஆகிய) - படிபுரக்க அவதரித்த பண்ணாடர் - பூவுலகையாளும்படி யவதரித்த தமிணாடரென்னும் சேர சோழ பாண்டிய வன்னியர்களது, கரத்து அமைவிற்பிடி யுரத்தினால் அன்றோ - கையினிடம் அமைந்த விற்பிடி யுரத்தினாலல்லவா, பெருஞாலம் உரம் உறல் - பெரிய வுலகமானது நிலைபெற்றிருத்த (லாகின்றது).

கருத்து. வன்னியர்கள் விற்பிடித்தலால் உலகு நிலை பெற்றிருக்கின்றது என்பதாம்.

இதில் “மிடுகரப்புலவருக்கு மிகுபொருளீந்திடுவார்” என்பதற்குச் சத்திமுத்தப்புலவர் பாண்டியனது மதுரைக்கு வந்தபொழுது மழையிடரினால் அவ்வழி சென்ற நாரையைப் பார்த்து,

“நாராய் நாராய் செங்கானாராய் பழம்படுபனையின் கிழங்குபிளந்தன்ன - பவளக்கூர்வாய் செங்கானாராய் நீயு நின்மனைவி தென்திசை குமரியாடி - வடதிசைக் கேகுவீராயினெம் - மூச்சத்தி முத்த வாவியுட்டங்கி - நனை சுவர்க்கூரைகனை குரற்பல்லி-பாடுபார்த்திருக்குமெம் மனைவியைக்கண்டு - எங்கோன்மாறன் வழுதி கூடலி - வாடையின்றி வாடையின் மெலிந்து - கையது கொண்டு மெய்யது பொத்திக் - காலதுகொண்டு மேலது தழீஇப் - பேழையுள்ளிருக்கும் பாம்பென வுயிர்க்கு - மேழை யாளனைக் கண்டனமெனுமே”

என்னும் பாடலை நகரிசோதனையாக வந்த பாண்டியன் அருள் புரிந்ததைக் காண்க.

“வெறும்புற்கையு மரிதாங்கிள்ளைச் சோறுமென் வீட்டில் வருமெறும்புக்கு மாஸ்பதமில்லை முன்னாளென்னிருங் கலியாங் குறும்பைத் தவிர்த்த குடிதாங்கியைச்சென்று கூடியபின் தெறும்புக்கொள் யானைக் கவளங்கொள்ளாமற் ரெவுட்டியதே.”

என்னுங் கவியால் காண்க. விசேஷம் வரது சரித்திரத்திற்காண்க. அன்றியும், சேரமான் பெருமாள் பாணபத்திரனுக்கு “மதிமலி புரிசை மாடக் கூடற்-பதிமிசை நிலவு பானிற வரிச்சிற்-கன்னம் பயிற்பொழி லாலவாயின்-மன்னிய சிவன்யான் மொழிந்திடு மாற்றம்-பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்- கொருமையினுரிமையினுதவி யணிதிகழ் - குருமா மணிதிகழ் குலவிய குடைக்கீழ்க்- செருமாவுகைக்குஞ் சேரலன் காண்க-பண்பால் யாழ்பயில் பாணபத்திரன்-றன் கோலென்பா லன்பனறன்பாற்-காண்பது கருதிப் போந்தனன் - மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே,”

என மதுரை சோமசுந்தரக்கடவுள் எழுதிக் கொடுத்தனுப்பிய திருமுகத்தைக் கண்டு கொடுத்த சரித்திரத்தைப் - பெரியபுராணம் திருவிளையாடல்களிற் காண்க. “தம் அடி இரக்கத்தோடும் பணிவார்க்கு அரசுதரும கொடையாளர்” என்பதற்கு இராமன் தம்மையடைந்தவர்களாகிய விபீஷணன், சுக்ரீவன் முதலியோர்களுக்குப பட்டாபிஷேகஞ் செய்திருப்பதால் - அசசரிதங்களை இராமாயணதிற் காண்க, “படிபுரக்க அவதரித்த பண்ணாடர்” என்றதனால் அரசர்கள் உலகத்தைக் காக்கவேண்டியதற்கு ஏற்படுத்தப் பட்டார்கள் என்பதை - மனுஸ்மிருதி எ-வது அத்தியாயம் இராஜதருமம் “வேதத்திற் சொல்லிய உபநயன முதலான சமஸ்காரங்கள் செய்துகொண்டவனாயிருக்கிற க்ஷத்திரியனாலே இவ்வுலகம் விதிப்படி காப்பாற்றத் தக்கதென்று ௨-வது சுலோகத்தானும், “உலகத்தில் அரசனில்லாமற் போனால் பலமுள்ளவரிடத்தில் பலமில்லாதவர்கள் பயத்தினா லழிந்து போவார்கள் ஆகையினால் இவ்வுலக மெல்லாம் அழியாமலிருக்கும் பொருட்டுச் சுவாமியானவர் அரசனை யுண்டு பண்ணினார்” என்னும் ௩-வது சுலோகத்தானும் உணர்க. பண்ணாடரென்றது தடிணாடர். பண் இசை. அது இயல் இசை நாடகம் என்னும் தமிழின் பகுதி மூன்றனுளொன்று “கிளந்த வல்ல வேறுபிற தோன்றினுங் - கிளந்தவற் றியலா லுணர்ந்தனர் கொளலே” என்றதனால் ஆகுபெயராய்த் தமிழ் என்றாயது; அது வழங்கும் நிலத்தைப் பரிபாலிக்கின்றவர்க ளாகையால் தமிணாடரென்றாயது. தமிணாடரென நேரிற்கூறாத தென்னை யோவெனின் நன்று கூறினாய்! உலக முழுமையுந் தன் வயத்ததாதலோடு தமிழைப் பரிபாலிக்கின்ற வரசர்களும், தமிழும், அது வழங்கும் நிலமும் மிக்க கீர்த்தியும் வாய்ந்த தென்னுங் கருத்தால் பண்ணாடரென்றா ரென்க. இதற்கு - இவர்களுக்குத் தமிழ் வேந்தரென வந்திருப்பதே சான்று. இதைப் பாயிரத்துட் காட்டிய திருவிளையாடற் கவியினும் இந்நூல் அரசின் ௨௪-வது கவியினும், உலக முழுமையும் தன்வயத்ததாதலென்பதை ௸ ௩௪-வது கவியினுங் காண்க.

இதுவுமது.

மைப்படியு முடிலவுணர் வருக்கமாய் வுற்றதுவும்
இப்படியோ டனைத்துலகு மிணையினலம் பெற்றதுவும்
நெய்ப்படியுஞ் சுசியுதித்தோர் நீள்பகழி தொடுசிலையின்
கைப்பிடியாண்மையினல்லாற் கடைப்பிடியே தியம்பீரே.

(இ-ள்.) மைப்படியும் உடல் அவுணர் வருக்கமாய்வுற்றதுவும் - கருமை படியும் உடலினையுடைய இராக்ஷதர்களது வமிசம் (அடியோடும்) நாசமடைந்ததுவும், இப்படியோடு அனைத்து உலகும் இணை இல் நலம் பெற்றதுவும் - இந்த உலகத்துடன் மற்றைய உலகங்களும் இணை சொல்லக்கூடாத நலத்தை அடைந்ததுவும், (ஆகும் - ஆகையால் இவைகளெல்லாம்,) நெய்படியும் சுசி உதித்தோர் - நெய்யா குதியேற்று விளங்கும் அக்கினியில் உதித்தவர்களாகிய வன்னியர்கள், நீள்பகழி தொடு சிலையின் - நீண்ட பாணங்களை விடுக்கும் வில்லை, கைப்படி ஆண்மையின் அல்லால் - கையால் பற்றும் ஆண்மையால் அல்லது, ஏது கடைப்பிடி - ஏதுவேறு உறுதி, இயம்பீர் - சொல்லுவீர்களாக. (எ - று.)

இயம்புவீர் இயம்பீரென இடை குறைந்து நின்றது. சிலையின் - என்றது உருபு மயக்கம்.

கருத்து: வன்னியர்கள் விற்பிடித்தலால் இராக்ஷத வருக்கங்களற்றதுவும், அதனால் இவ்வுலகத்தோடு மற்றைய உலகும் நல்ல நலத்தைப் பெற்றதுவும் ஆகும் என்பதாம்.

வின்மணிச்சிறப்பு என்பது:— வில்லிற்கட்டிய மணியின் பெருமை. அது வில்லைப்பிடித்த பிறகு அசைவுண்டு ஓசையுறுதலின், இங்கே விற்பிடிச் சிறப்புக்குப் பின் வைத்துக் கூறினார்.

வின் மணிச்சிறப்பு.

பணியிறைக்கங் கணனடியைப் பழிச்சுநர்வா தாபிமுடி
துணியிறைவர் பண்ணாடர் சோதிமணி முடிவனியர்
அணிபிறையேந் தியவயிர மாஞ்சிலையிலடருநவ
மணியிரையக் களகளென வயிறிரையு மாற்றலர்க்கே. ()

(இ-ள்) பணி இறைக் கங்கணன் அடியைப் பழிச்சுநர்- ஆதிசேட கங்கணனாகிய சிவபெருமான் திருவடிகளைத் துதிக்கின்றவர்களும், வாதாபி முடிதுணி இறைவர் - வாதாபியின் சிரத்தைத் துணித்துப் பெருமையிற் சிறந்தவர்களும், பண்ணாடர் - தமிணாடரென்னும் சேர சோழ பாண்டியரும், சோதி மணி முடி வனியர் - பிரகாசம் பொருந்திய இரத்தின கிரீடந் தரிக்கின்றவர்களுமாகிய வன்னியர்களது, அணி இறை ஏந்திய - அழகிய கையினாற்றாங்கிய, வைரம் ஆம் சிலையில் - வைரமலைக்குச் சமதையாகிய வில்லில், அடரும் நவமணி இரைய - நெருங்கக் கட்டிய புதிய மணிகள் இரைய, மாற்றலர்க்கு வயிறு களகள என இரையும் - பகைவர்களுக்கு வயிறு கள கள என்று இரையும், (எ - று.) ஏ - ஆசை. இறை-ஆகுபெயர்.

கருத்து. வன்னியர்கள் வின்மணி இரைய பகைவர் வயிறு களகளவென்று இரையும் என்பதாம்.

இதில் “பணிஇறைக் கங்கணன் அடியைப் பழிச்சுனர், என்றதனால், பெரிய புராணத்துட் கூறிய முடிமன்னர் அறுவர், குறுநிலமன்னர் ஐவர், திருவிளையாடலிற் கூறிய மது ரைப் பாண்டியர்கள், இவைகளை யல்லாது சிதம்பரமாண்ட இரண்ணிய வன்மச்சோழன், அன்பாயச் சோழன், திருவருணை வல்லாள மகாராஜன், முசுகுந்த சக்கரவர்த்தி முதலினோர் திருச்சரிதங்களானும் “வாதாபி முடிதுணி இறைவர்” என்றாதனால் உருத்திர வன்னிய மகாராஜன் சரித்திரத்தாலும் உணர்க.

நாணியின் சிறப்பென்பது வில்லிற்றொடுக்கும் கயிற்றின் பெருமை. அது மணியோசை யற்றபிறகு அமைதலின் இங்கே வின்மணிச் சிறப்புக்குப் பின்வைத்துக் கூறினார்.

நாணியின் சிறப்பு

கன்னாணும் புயமுடையார் கடனாணு மருளுடை
யார், மன்னாண்மைப் பொலிவுடையார் மணிமுடிவன்
னியர்தாங்கும், வின்னாணின் வலியாலே வியனிலம்
வாழ் வதுமடையார், தந்நாண மிழந்துவடி தாழ்ந்து
கரங் குவிப்பதுமே. (௯)

(இ-ள்.) கல் நாணுபுயம் உடையார் - மலையும் நாணும் புயத்தினை யுடையவர்களும், கடல் நாணும் அருள் உடையார் - சமுத்திரமும் நாணும் அருளினை உடையவர்களும், மன் ஆண்மைப் பொலிவு உடையார் - நிலைபெற்ற ஆண்மைத் திறத்தினை யுடையவர்களுமாகிய, மணி முடி வன்னியர் - இரத்தின கிரீடந்தரித்த வன்னியர்கள். தாங்கு- தாங்கா நின்ற, வில் நாணின் வலியால் - வில் நாணின் பலத்தினால், வியன் நிலம் வாழ்வதும் - விசாலமாகிய இந்தப் பூமி நிலைத்திருப்பதும், அடையார் தம் நாணம் இழந்து வலிதாழ்ந்து கரம் குவிப்பதும் - பகைவர்கள் தமது நாணத்தை விடுத்துப் பலம் கெட்டுக் கையைக் குவித்து வணங்குவதும் ஆகும்.

கருத்து வன்னியர்கள் எடுக்கும் வில் நாணியினால் பூமி நிலைத்திருத்தலும், பகைவர்கள் வணங்குதலும் ஆகும் என்பதாம்.

வில்லேந்துதற் சிறப்பு

வில்லேந்துதற் சிறப்பென்பது : வில்லைத் தாங்குதலின் பெருமை. —அது நாணி அமைந்த பிறகு ஆதலின், இங்கே நாணியின் சிறப்புக்குப் பின்வைத்து நான்கு கவிகளால் கூறினார்.

கலி விருத்தம்

உலகறிமும் முரசொலிப்ப வுலைவில்கலி வெருண்டொளிப்ப, நிலவெனவெண் குடைகவிப்ப நிகழ்பவம் பின் புறந்தவிப்ப, இலகுபுலிக் கொடிதழைப்ப விருங்குடிகள் விருந்தழைப்ப, அலகிலவா வியற்றும்வன்ய ரணிசிலையேந் துவதம்மா. (௧௦)

(இ-ள்.) வன்னியர் அணி சிலை ஏந்துவது- வன்னியர்கள் (தங்கள் கையினிடம்) அழகிய வில்லை ஏந்துவதானது, உலகு அறி மும்முரசு ஒலிப்ப - உலகெங்கும் பிரசித்தமாகும் படி மூன்று பேரிகை முழங்கவும், உலவு இல்கலி வெருண்டு ஒளிப்ப - துணிவினைக் கொள்ளும் கலியும் பயந்து மறையவும், நிலவு என வெண்குடை கவிப்ப - சந்திரனைப்போலும் வெள்ளிய முத்துக்குடை கவிந்து நிழல் செய்யவும், நிகழ்பவம் பின் புறந்தவிப்ப நடக்கின்ற ஊழானது முதுகுகாட்டி ஓடி நின்று தவிக்கவும், இலகு புலிக்கொடி தழைப்ப - விளங்கா நின்ற புலிக்கொடியானது செழுமையோடு நிலைக்கவும், இரும் குடிகள் விருந்து அழைப்ப - பெரியகுடி சனங்கள்வரும் அதிதி முதலியவர்களுக்கு அழைத்து விருந்து செய்யவும், அலகு இவ்வா இயற்றும் - (இவைகள் போலும் இன்னும்) கணக்கில்லாதன வாகிய விசேடங்களைச் செய்யும், அம்மா-அசை.

கருத்து. வன்னியர்கள்வில்லைத் தாங்குதல் மூன்று பேரி முழங்கவும், கலி ஒளிக்கவும். சந்திர வட்டக் குடை நிழல் செய்யவும், ஊழ் முதுகுகாட்டி ஓடவும், புலிக்கொடி தழைத்து நிலைக்கவும், குடிகள் அதிதி முதலியவரை, விருந்துக் காக அழைக்கவும், இன்னுங் கணக்கில்லாதனவும் செய்யும் என்பதாம்.

மும்முரசு, மங்கல முரசு, கொடை முரசு, வெற்றி முரசு.

“இதில் நிகழ்பவம் புறந்தவிப்ப” என்றதனால் நாயனார் “ஊரையும் உம்பக்கங் காண்ப குலவின்றி தாழாது ஞற்றுபவர்” எனக்கூறியதுபோல் இவர்கள் வில்லெடுக்கும்போதே முயற்சியிற் றாழா ரென்பதைக் குறிப்பிட்டார்.

அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்.
இதுவும் அது.

அலையை யெடுக்கா விடிற்பரவைக் காற்றலேதவ் வரவரசன், தலையை யெடுக்கா விடிற்பொலிவு தரணிக் கேது விதுவளரும், கலையை யெடுக்கா விடிற்காட்சி கங்குற் கேது வன்னியர்செஞ், சிலையை யெடுக்கா விடிலுயிர்க்குச் செழிப்பங் கேது செப்பிடினே. (௧௧)

(இ-ள்.) செப்பிடின் - சொன்னால், அலையை எடுக்காவிடில் பரவைக்கு ஆற்றல் எது - அலையை எடுக்காவிட்டால் சமுத்திரத்துக்கு ஆற்றல் எது ? அவ் அரவு அரசன் தலையை எடுக்காவிடில் தரணிக்குப் பொலிவு எது - அவ்வாதிசேடன் தலையை (நிமிர்ந்து) எடுக்காவிட்டால் பூமிக்கு விளக்கம் ஏது? விது வளருங் கலையை எடுக்காவிடில் கங்குற்கு காட்சி ஏது - சந்திரன் வளருங்கலையை எடுக்காவிட்டால் இரவிற்குச் சிறப்பேது? (என்பனபோல்) வன்னியர் செம சிலையை எடுக்காவிடின் - வன்னியர்கள் அழகிய வில்லை (தங்கள் கையினிடம்) எடுக்காவிட்டால், அங்கு உயிர்க்கு செழிப்பு ஏது - அப்பொழுது உயிர்களுக்குச் செழிப்பென்பது ஏது? (எ - று.)

கருத்து. வன்னியர்கள் வில்லை எடுக்காவிட்டால் உயிர்களுக்குச் செழிப்பே இல்லை என்பதாம்.

இதுவும் அது.
வேறு.

வட்டவுல கிற்கொடிய நெட்டவுணரைச்சமரின் மட்டற விடித்தெதிரெயிற், கிட்டவறு பட்டதலை நட்டுவிழ மொட்டையுடல் கெட்டுருட டாக்குருதி நீர், கொட்டநுரை கட்டிட மிகச்சுழி சுழித்தலை கொழித்துநதி யிற்புகவழி, விட்டுறுமி நெட்டையிடு மக்கினி குலத்தரச விக்ரம ரெடுத்தசிலையே. (௧௨)

(இ-ள்.) வட்டவுலகில் - சக்ராகாரமாகிய இவ்வுலகத்தில், விக்ரமர் அக்கினி குலத்து அரசர் எடுத்தசிலை - விஜயத்தைக் கொண்டவர்களாகிய வன்னிய ரென்னும் அரசர்கள் எடுத்த வில்லானது-கொடியநெடு அவுணரை சமரில் மட்டு அறஇடித்து - கொடுமையைக் கொண்ட கூட்டமாகிய இராக்ஷசர்களை யுத்தத்தில் கணக்கில்லாது கொன்று (பின்பு) எதிர் எயில்கிட்ட -(யுத்தஞ்செய்து பூமியைக் கட்டிக்கொள்ளும் பொருட்டு) பகைவர்கள் மதிலை நெருங்க (வளைத்துக் கொள்வார்களாயின் அவர்களையும்) அறுபட்ட தலை நட்டுவிழ - (அவ்வியல்பைக் கண்டவுடன் தன்னிடத்து நின்றும் விடப்படும் அம்புகளால்) அறுபட்ட தலைகள் கவிழ்ந்து விழவும், நுரை கட்டிட குருதி நீர் கொட்ட (அப்படி அறுபட்ட வாயினின்றும்) நுரைக்கட்டிகள் மிகும்படி இரத்த நீர் பொழியவும், மொட்டை உடல் கெட்டு உருள்தர - (அவ்விரத்த நீர்) தலைபோன உடல்களானவை கெட்டு உருள ஓடி, நதியிற்புக வழிவிட்டு - ஆறுகளிற்போய் விழும்படி வழிவிட்டு, உறுமி நெட்டையிடும் - பிறகு உறுமுதலோடும் தள்ளும். எ-று.

கருத்து. வன்னியர்கள் வில்லை எடுத்தல் யுத்தத்தில் இராக்ஷசர்களை கணக்கில்லாது கொன்று, பின்பு பகைவர்கவரில் அவர்களையும் எதிர்த்து, அறுத்து வீழ்த்திய முண்டங்களும் தலைகளும் இரத்த வெள்ளத்திலுருண்டோடி நதியில் விழும்படி வழிகாட்டி, பின் உறு முதலோடுந் தள்ளும் என்பதாம். ௧௨

இதுவும் அது.
வேறு.

குடைகொண் டெழுந்தான் மாயனெடுங் குன்றந் தனையான் குலங்களிக்கப், புடைகொண் டெழுந்து பொழிந்த பெரும் புயல்களிரிந்த வன்னியர்விற், படைகொண் டெழுந்தார் புவிசெழிக்கப் பதறியவுணர் தென்பதிக்கே, விடைகொண்டெழுந்தே யொருநாளு மீளாவகைசென் றடைந்தனரே. (௧௯)

(இ-ள்.) மாயன் ஆன் குலம் களிக்க நெடு குன்றந்தனை குடைகொண்டு எழுந்தான் விஷ்ணுவானவர் பசுக்கூட்டங்கள் மகிழும்படி உயர்வாகிய கோவர்த்தனகிரியை (ஒருக்கால்) குடையாகக் கொண்டெழுந்தார் (அதனால்) புடை கொண்டு எழுந்து பொழிந்த பெரும் புயல்கள் இரிந்த - கனங்கொண்டெழுந்து (மழை) பொழிந்த பெரிய மேகக்கூட்டங்கள் விலகின (அதுபோல) வன்னியர் புவி செழிக்க வில் படை கொண்டு எழுந்தார் வன்னியர்கள் புவி செழிக்கும்படி விற்படை கொண்டெழுந்தார்கள், (அதனால்) அவுணர் விடை கொண்டு எழுந்து ஒருக்காலும் திரும்பாவகையாகவே-தென்திசை சென்று அடைந்தனர் - இயமலோகம் போய்ச் சேர்ந்தார்கள். எ-று.

கருத்து. வன்னியர்கள் வில்லை எடுத்தார்கள் இராக்ஷசர்கள் ஒருநாளுந்திரும்பா வகையாக எமலோகம் போய்ச் சேர்ந்தார்கள் என்பதாம்.

வில்வளைத்தற்சிறப்பு.

வில்வளைத்தற்சிறப்பென்பது:— வில்லை வளையும்படி செய்தலின் பெருமை. அதுவில்லைத் தாங்கியபிற காதலின், இங்கே வில்லேந்துதற் சிறப்பிற்குப் பின்வைத்துக் கூறினார்.

கொச்சகம்.

தனுவணங்கொண் டுலகளிப்பத் தார்வேந்த ரெனவுதித்தோர், தனுவணங்கசனும் வெள்கித்தாள் வணங்கு மெழின்மிக்கோர், தனுவணங்க கலவெவர்க்குந் தாய்போனன் றாற்றும்வன்யர், தனுவணங்கத் தரியலர்க †[2] டஞ்சமென வணங்காரோ. (௧௪)

(இ-ள்) உலகு அளிப்ப - உலகத்தைக் காக்கும்படி, தார்வேந்தரெனத் தனு வணங்கொண்டு உதித்தோர் - (அக்கினியும் மற்றைய கடவு ளம்சங்களுமே) மாலையைத் தரித்த க்ஷத்திரியர்களென சொல்லப்படுகிற மானுட வடிவங்கொண்டு பிறந்தவர்களும், தன் உவண் அங்கசனும் வெள்கிதாள் வணங்கும் எழில் மிக்கோர் - தன்னிடத்து மன்மதனும் நாணி பாதத்தில் வணங்கும்படி அழகில் மிகுந்தவர்களும், தனு அணங்கு எவர்க்கும் அகல தாய்போல நன்று ஆற்றுவன்யர் - யாவர்க்குஞ் சிறுமை நோயகல தாய்போல (அருள் வைத்து) மனுநெறி முறையாகக் காவல் செய்கின்றவர்களுமாகிய வன்னியர்களது, தனுவணங்க - வில்லானது வளைய, தரியலர்கள் தஞ்சம் என வணங்காரோ - பகைவர்கள் (எதிரில் வந்து எங்களை சம்மரிப்பது) எளிது (கோபித்து வில்லைவளைக்காதீர்கள்) என வணங்கமாட்டார்களோ? (எ-று.)

கருத்து. வன்னியர்கள் வில்வளையப் பகைவர்கள் தஞ்சம் என வணங்குவார்கள் என்பதாம்.

இதில் “தார்வேந்தரெனத் தனுமணங் கொண்டு” என்றதனால் அக்கினியும், மற்ற தேவ அம்சங்களும் என்றதற்கு மனுஸ்மிருதி எ-வது அத்தியாயம் அரசன் சிறப்பு. “இந்திரன்,வாயு, யமன், சூரியன், அக்கினி, வருணன், சந்திரன், குபேரன் இவை களம்சங்களினாலேயே அரசனுண்டாக்கப்பட்டான் என்னும் ௪-வது சுலோகத்தாலும் “இப்படிக்கொத்த, தேவர்களின் அம்சமாகையால் அரசன் சகல மனிதர்களைவிட அதிக காந்தியுள்ளவனாயும், அனைவரையும் ஆளத்தக்க வீரியமுள்ளவனாயும் இருக்கிறான்” என்னு ௫ வது சுலோகத்தாலும் “இந்த வாசன் சூரியன் போல் தன்னைப் பார்க்கிறவன் கண்களையும், மனதையும் தகிக்கிற படியால் பூமியிலொருவரும் அவனுக்கெதிராக நின்று பார்க்கக் கூடாதவராக யிருக்கிறார்கள்” என்னும் ௬வது சுலோகத்தாலும் “இவ்வரசன் தன் மகிமையினால் சமயத்துக்குத் தக்கபடி அக்கினியாகவும்; வாயுவாகவும் சூரியனாகவும், சந்திரனாகவும், இயமனாகவும் குபேரனாகவும், வருணனாகவும், தேவேந்திரனாகவும் இருப்பான்” என்னும் எ-வது சுலோகத்தர்லும்,௸ ஸ்மிருதி ௯-வது அத்தியாயம் “இந்திரன், சூரியன், வாயு, இயமன், வருணன் சந்திரன், அக்கினி, பிரிதிவி இவர்களினுடைய நடையை அனுசரித்து அரசன் நடக்கவேண்டும்” என்னும் ௩௦௩-வது சுலோகத்தாலும்.” ஆவணி முதல் நாலு மாதம் வரையில் இந்திரன் மழையை உண்டுபண்ணி சந்தோஷப்படுத்துகிறதுபோல் அரசன் தன் இராஜ்ஜியத்திலிருக்கிற பிரஜைகளுக்கு அபீஷ்டத்தை உண்டுபண்ணுகிறது இந்திரன் “விரதம் என்னும் ௩௦௪-வது சுலோகத்தாலும் சூரியன் மார்கழிமாத முதல் எட்டுமாதம் வரையில் தன்னுடைய கிரணங்களாலே அதிமாகத் தபியாமல் பூமியிலிருக்கிற ஜலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழுக்கிறதுபோல் அரசன் சனங்களை உபத்திரவப்படுத்தாமல் மாதந்தோறும் சிறிது கிறிதாக தீர்வை வாங்குவது சூரியவிரதம் என்னும் ௩௦௫-வது சுலோகத்தாலும், “வாயு சகல ஜந்துக்களிடத்திலும் பிராண ரூபமாய் உள்ளே நுழைந்து சஞ்சரிக்கிறதுபோல் அரசன் வேவுகாரர்களால் எதிரியின் பட்டணத்தில் பிரவேசித்திருப்பது வாயுவின் விரதம்” என்னும் ௩௦௬ வது சுலோகத்தாலும், “இயமன் தண்டனை காலத்தில் மித்திரனென்றும், ஈத்துறுவென்றும் பேதமின்றி யாவரையும் சரியாக சிக்ஷி க்கிறது போல் அரசன் குற்றம் செய்த பிரஜைகளை பக்ஷபாதகமில்லாமல் சரியாகத்தண்டிப்பது இயமன் விரதம்” ௩௦௭- வது சுலோகத்தாலும், “வருணன் தன்னால் தண்டிக்கத்தக்கவர்களான பாபஞ்செய்த பிரஜைகளை பாசங்களால் யோசனையின்றி கட்டுகிறதுபோல் அரசன் பாபிகளை தயை யில்லாமல் தண்டிக்கிறது வருணன் விரதம்” என்னும் ௩௦௮-வது சுலோகத்தாலும் பூரணசந்திரனைப்பார்த்து மனிதர்கள் சந்தோஷப்படுகிறதுபோல், அரசன் தன்னை பார்த்து மந்திரி முதலிய பரிசனங்கள் சந்தோஷிக்கும்படி செய்வது சந்திரன். விரதம்” என்னும் ௩௦௯-வது சுலோகத்தாலும், “அரசன் அக்கினிபோல சோம்பலில்லாமல் பிரதாபமுள்ளவனாய்த் துஷ்டர்களையும் அபகாரஞ் செய்தவர்களையும் சிக்ஷித்துக் கொண்டிருப்பது அக்கினிவிரதம்” என்னும் ௩௧௦-வது சுலோகத்தாலும் பூமி யானஜங்கம ஸ்தாவர ரூபமான சகல பிராணிகளையும் உயர்வு தாழ்வில்லாமல் சரியாய்த் தரிக்கிறதுபோல அரசன் சாதாரணமாய் பண்டித பாமர பேத மின்றி அனைவரையும் காப்பாற்றுவது பிரிதீவி விரதம்” என்னும் ௯௧௧- வது சுலோகத்தாலும், “இந்த உபாயங்களாலும் அந்தந்த காலத்துக்கு தக்கபடி தனக்கு தோற்றுகிற மற்றுமுள்ள உபாயங்களாலும் அரசன் தன் தேயத்தில் வாசஞ் செய்துக்கொண்டிருக்கிற திருடர்களையும் அயலான் தேசத்தில் வாசஞ் செய்துக்கொண்டு தன்தேசத்திற் திருடுகிற திருடர்களையும் தண்டித்து அடக்குக “என்னும் ௩௧௨-வது சுலோகத்தாலும் அறிக. அன்றியும் இக்ஷ்வாகுவம் சத்கில் விஷ்ணுவே இராமனாகவும், புரூரவாவம்சத்தில் கிருஷ்ணனாகவும், பலராமனாகவும், மதுரை பாண்டியன் வம்சத்தில் தடாதகைப் பிராட்டியாராக பார்வதியும் சிவபெருமான் சௌந்தர பாண்டியனாகவும் சுப்ரமண்யர் உக்ர குமார பாண்டியனாகவும், அக்கினி உருத்திரவன்னிய மகாராஜனாகவும் போந்த சரித்திரங்களாலு முணர்க.

தன் † உவண் — தனுவன். என்றது தொகுத்தல் விவகாரம்.

நாணேற்றுதற் சிறப்பு.

நாணேற்றுதற் சிறப்பென்பது:—நாணியை வில்லினிடத்துப் பூட்டுதலின் பெருமை. அதுவில்லை வளைத்த பிறகே யாதலின், இங்கே வில் வளைத்தற் சிறப்புக்குப் பின் வைத்துக்கூறினார்.

அறுசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்.

ஓங்குபுகழ் வன்னிமன்ன ரொன்னலார் தமைப்புறங்கண் டுலகங் காக்கத், தாங்குவரிச் சிலைவணக்கிச் சரோருகக்கை யாற்றீண்டித் தனிநாண் பூட்டப், பாங்குறுமூ வுலகினரும் பைங்கழைத் தோண் மடநல்லார் பசும்பொன் வண்ணப், பூங்கமுகின் மங்கலநாண் பூட்டுதல் போன் மெய்ப்புளகம் போர்ப்பர் மன்னே. (௧௫)

(இ-ள்) ஒங்கு புகழ் வன்னி மன்னர் - உயர்ந்த கீர்த்தியைக்கொண்ட வன்னிய அரசர்கள்-ஒன்னலார்தமைப் புறங்கண்டு-பகைவர்களை முதுகுகாட்டச் செய்து, உலகம் காக்க - உலகத்தைக்காக்கும் பொருட்டு, வரிதாங்கு சிலை சரோருகக் கையாற்றீண்டி வணக்கி-இடைக்கட்டுகளையுடைய வில்லைத் மலர் போலும் கையினால் பற்றி வளைத்து, தனி நாண்பூட்ட-ஒப்பற்ற நாணியேற்ற, பாங்கு உறு மூவுலகின்-பகுப்பினைக்கொண்ட மூன்று உலகினும், (வசிக்கின்றவர்கள்), நறும் பைம் கழைத்தோள்களை மடநல்லார்-நன்மையாகிய பசிய மூங்கில்போலும் தோள்களையுடைய இளம்பருவப் பெண்களது, பசும் பொன் வண்ணப்பூம் கமுகில் மங்கலநாண் பூட்டுதல்போல் - பசும் பொன்னிறம் வாய்ந்த அழகிய கழுத்தில் தாலிக்கயிற்றைச் சேர்ப்பதுபோல, மெய்ப்புளகம் போர்ப்பர்- சரீரம் புளகித்து மகிழ்வார். எ - று.

கமுகு - ஆகுபெயர். மன்-ஒ-அசைகள்.

கருத்து. வன்னியர்கள் வில்லில் நாணியைப்பூட்ட மூன்றுலகத்தவர்களும் மாங்கல்ய தாரணகாலம் போலும் மகிழ்வார்கள் என்பதாம்.

  1. இத்தினம்
    - என்றும் எந்தத் தோஷமும் இதற்கில்லை என்றும் வித்தை ஆரம்பத்துக்குத் தகுதியான நாளென்றும் வழங்கும்
  2. தஞ்சமென்றது — தொல்காப்பியம் இடைச் சொல்லியல் “தஞ்சக்கிளவி எண்மைப் பொருட்டே” என்னும் ௧௨-வது சூத்திரத்தாலுணர்க.