உள்ளடக்கத்துக்குச் செல்

சிலை யெழுபது மூலமும், 1915/006

விக்கிமூலம் இலிருந்து

செங்கோல்வண்மைச்சிறப்பு.

செங்கோல் வண்மைச் சிறப்பென்பது:— ஆணை செலுத்துங்கோல் வளத்தின் பெருமை. அது செங்கோலைக் கைக்கொண்டபிறகு வளந் தெரிதலின், இங்கே செங்கோல் சிறப்புக்குப் பின்வைத்துக் கூறினார்.

கொச்சகம்.

வீரசம்பு முனிவேள்வி விளங்கவரு முடிவேந்தர்
சீர்மருவு கரத்தேந்து செங்கோலின் றிறத்தானே
நேரறுதீக் கடைகோலு நிறைகோலு நீடுலகி
லேரடரு முழுகோலு மிடரின்றி யிருப்பதுவே. (௩௯)

(இ-ள்) வீரசம்பு முனிவேள்வி விளங்க வருமுடி வேந்தர் - வீரத்தைக் கொண்ட சம்பு விருடி யாகத்தில் உலகு விளங்கும்படி அவதரித்த மகுட மன்னர்களது, சீர்மருவு கரத்து ஏந்து செங்கோலின் திறத்தால் - சிறப்புப் பொருந்திய கையினிடத்து ஏந்தா நின்ற செங்கோல் வண்மையால், நேர் அறு தீக்கடைகோலும் - (பிராமணர்களுக்குரிய) ஒப்பில்லாத தீக்கடைகோலும், நிறைகோலும் - (செட்டிகளுக்குரிய) தராசுக் கோலும், ஏர் அடரும் உழுகோலும் - ஏரை நடத்துகின்ற (வேளாளர்களுக்குரிய) தாற்றுக்கோலும், இடர் இன்றி இருபபது - கெடுதலில்லாமலிருப்பதாகும். —எ-று.

கருத்து. வன்னியர்களது செங்கோல் வண்மையால் பிராமணர்களுக்குரிய தீக்கடைகோலும், செட்டிகளுக்குரிய நிறைகோலும், வேளாளர்களுக்குரிய தாற்றுக்கோலும் இடரில்லாது நிற்கின்றன என்பதாம்.

செங்கோனடத்தற்சிறப்பு.

செங்கோ னடத்தற் சிறப்பென்பது:— ஆணைக்கோலை நடத்துதலின் பெருமை, அது செங்கோல் வளத்தோடும் ஒற்றுமையுடைய தாதலின், இங்கே செங்கோல் வண்மைச் சிறப்புக்குப் பின்வைத்துக் கூறினார்.

சீராரும் வன்னிமன்னர் செங்கோன்மை செலுத்துதலால், சோராது சுரர்க்கும்பூ சுரர்க்குமிகு சிறப்புண்டாம், நீராரும் புவியின்மநு நெறிதவறா தென்பதன்றி, யாராலும் பழுதுரைக்க லாமோ சொல்வல்லீரே.

(இ-ள்.) சொல் வல்லீர் - புலவீர்காள் - நீர் ஆரும் புவியில் - சமுத்திரம் சூழ்ந்த உலகத்தில், வன்னி மன்னர்- வன்னிய ரென்னும் அரசர்கள், சீர் ஆரும் செங்கோன்மை செலுத்துதலால் - சிறப்புப் பொருந்திய (தமக்குரிய) செங்கோலை நடத்துகின்றதனால், சுரர்க்கும் சோராது- தேவர்களுக்கும் வலி குறையாது, பூசுரர்க்கும் மிகு சிறப்பு உண்டாம் பிராமணர்களுக்கும் மிக்க சிறப்பு உண்டாகும், (ஆதலால் இவர்கள் ராஜ்ஜியத்தில்) மனு நீதிநெறி தவறாது என்பது அன்றி - மனுமுறை வழியினின்றும் கெடாது என்னுஞ சொல் நிலைத்திருக்குமே யல்லது, யாராலும் பழுது உரைக்கல் ஆமோ யாவராலும் பழுதுகள் சொல்லலாகுமா, எ-று.

கருத்து. வன்னியர்கள் செங்கோல் நடத்தலால் மனுமுறை வழிதவறா திருக்கின்றது என்பதாம்.

அறத்தினெறிச்சிறப்பு.

அறத்தினெறிச் சிறப்பென்பது :— தரும வழியின் பெருமை. அது செங்கோல் நடத்தலால் உண்டாதலின். இங்கே செங்கோனடத்தற் சிறப்புக்குப் பின்வைத்து கூறினார்.

அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்.

தாரேந்து புயவேந்தர் தழலிடைவந்தவதரித்தோர் தனுவான்மிக்க, சீரேந்து மறத்தினெறி திறம்பாது நிற்கின்ற செயலாலன்றோ, காரேந்திச் சொரிமழையுங் கலைமறையும் வாணிபமு மடவார்கற்பும், ஏரேந்து மவர்வாழ்வு மிடரின்றி நிற்பநன்றி யென்கொண் டம்மா. (௪௧)

(இ-ள்) தழல் இடைவந்து அவதரித்தோர். அக்கினியினிடையே வந்து தோன்றியவர்களாகிய, தனுவால் மிக்கதார் ஏந்து புயவேந்தர் - வில்வலியால் மிகுந்த மாலையைத் தரிக்கின்ற புயத்தினையுடைய அரசர்கள், சீர் ஏந்தும் அறத்தின் நெறி திறம்பாது நிற்கின்ற செயலால் - சிறப்பினையுடைய தருமத்தின் வழிகெடாது நிற்கின்ற செயலினால், -கார் ஏந்தி சொரி மழையும் - மேகத்தினாலே சுமந்து பொழிகின்ற மழையும், கலைமறையும் - (பிராமணர்களது) கலையாகிய வேதமும், வாணிபமும் - (செட்டியர்களது) வியாபாரமும், மடவார் கற்பும் - பெண்களது பதிவிரதா நிலைமையும், ஏர் ஏந்தும் அவர் வாழ்வும்-ஏரை நடத்தி ஜீவிக்கின்றவர்களாகிய (வேளாளர்களது) வாழ்வும், இடர் இன்றி நிற்பது - இடர் இல்லாது நிலை பெறுகின்றது, அன்றி என்கொண்டு-வேறெதைக் கொண்டு?(சொல்வீர்களாக.) எ-று.

கருத்து. வன்னியர்களது தரும வழியினால் மேகத்தினால் சுமந்து பொழியு மழையும், பிராமணர்களது கலையாகிய வேதமும், செட்டியர்களது வியாபாரமும், பெண்களது பதிவிரதா தருமமும், வேளாளர்களது உழவாகிய வாழ்வும் இடரில்லாது நிலைத்திருக்கின்றன என்பதாம்.

ஆக்கினைச்சக்கரச்சிறப்பு.

ஆக்கினைச் சக்கரச் சிறப்பென்பது :— ஆணையாச் சக்கிரத்தின் பெருமை. அது தருமவழியாற் செல்லுதலின், இங்கே அறத்தினெறிச் சிறப்புக்குப் பின்வைத்துக் கூறினார்.

வேறு.

ஊழிக்கிறை தண்கடல்வீழ்ந்தா னும்பற் கிறையந் தரமானான், கோழிக்கிறை தன்றாதைவரை குறுகினானெஞ்சற நாணி, மேழிக்கிறைமூ விரண்டினொன்று மேவப் பெறுவன்னியர்செலுத்தும், ஆழிக்கிறை நாடொறுமாறா தகிலமுழுதுங் காத்தல்கண்டே. (௪௨)

(இ - ள்.) மேழிக்கு மூவிரண்டில் ஒன்று இறைமேவப் பெறும் வன்னியர் - மேழிக்கு (அதனையுடைய குடிகளாகிய வேளாளர்களிடத்து) ஆறிலொரு கடமையைப் பொருந்தப் பெற்றுக்கொள்ளும் (சக்கிரவர்த்திகளாகிய) வன்னியர்கள், செலுத்தும் ஆழிக்கு - நடத்துகின்ற ஆக்கினைச் சக்கிரத்திற்கு, (அதன் கடமை) நாள்தோறும் இறை மாறாது - தினந்தோறும் கொஞ்சமேனுந் தவறாமல், அகிலம் முழுதும் காத்தல் கண்டு - உலக முழுமையையுங் காத்தலைப்பார்த்து (முன்னிற்பதற்கு), நெஞ்சு அறநாணி-மனமானது மிகவும் வெட்கத்தையடைந்து, ஊழிக்கு இறைதண் கடல் வீழ்ந்தான் - சர்வ சம்மார காலத்துக் கரசனான (வடவாமுகாக்கினி யானவன்) குளிர்ச்சி பொருந்திய கடன்மத்தியிற் சேர்ந்தான், உம்பர்க்கு இறை அந்தரம் ஆனான் - தேவர்களுக்கரசனான இந்திரன் (சுவர்க்கலோகமாகிய அந்தரமாகிவிட்டான், கோழிக்கு இறை தன் தாதைவரைக் குறுகினான் - கோழிக் கொடியோனாகிய (சுப்பிரமணியனும்) தன் தகப்பன் மலையாகிய கைலைமலை (போய்ச் சேர்ந்தான். எ-று.

கருத்து, வன்னியர்களது ஆக்கினைச் சக்கிரம் ஊழித் தீயும், இந்திரனும், சுப்பிரமணியனும் நாணும்படி தந்தொழிலை நடத்துகின்றது என்பதாம்.

இதில் “அறநாணி” என்றதனால் நடுவு நிலைமையால் அக்கினியும், வைபவத்தால் இந்திரனும், யுத்த வீரத்தால் சுப்பிரமணியனும் என்க. இச்சக்கிரந்தரி த்தாலேயே இவர்களுக்குச் சக்கிரவர்த்திகள் எனப் பெயர் வந்திருக்கின்றது என்னை? சக்கிரவர்த்திகளாவார் அரிச்சந்திரன், நளன், முசு குந்தன், புரூரவன், சகரன், கார்த்தவீரியன் என அறுவர். இவர்களைதி. ௧௨-தி “அரிச்சந்தி ரனளன் முசுகுந்தன் புரூரவன் - சகரன் கார்த்த வீரிய னென்ன - அறுவகைச்சக்கிர வர்த்திகளாகும்” என்னும் க0க - வது சூ-க. அன்றியும் ஆதொண்டச் சக்கிரவர்த்தி, இரணியவர்மச் சக்கிரவர்த்தி பிருதுச் சக்கிரவர்த்தி முதலியோரும் கொள்க. ஆறிலொரு கடமைவேளாளர் தரல்வேண்டு மென்பதை ௸ தி - கஉ-வ-தி வேளாளர் பத்துவகை தொழில் “ஆணைவழி நிற்றல் அழிந்தோரை நிறுத்தல் - கைக்கடனாற்றல் கசிவகத்துண்மை யொக்கல் போற்ற லோவாமுயற்சி மன்னிறை தருத லொற்றமை கோடல் - விருந்து புரந்தருத லருந்திய வொழுக்கம் - வேளாண் மாந்தர்க்கோரீரைந்தே” என்னும் ௧௪௮ - வது சூத்திரத்துள் “மன்னிறைதருதல்” என்றதனா லுணர்க. மன்இறை -அதாவது அரசிறை அது - அரசனுக்குக் கொடுக்குங் கடமை.

தொழினெறிபிறழாமைச்சிறப்பு

தொழினெறி பிறழாமைச் சிறப்பென்பது: —தொழில்நெறிகள் தவறாமையின் பெருமை. அது ஆணையாச் சக்கிரத்தினா லாதலின், இங்கே ஆக்கினைச் சக்கிரச் சிறப்புக்குப் பின்வைத்துக் கூறினார்.

கற்பத்தொழியா மறைபயிலுங் கவின்மே வியவந் தணர்தொழிலும், சிற்பத் தொழில்வை சியர்தொழிலுந் தினமுமுயர்முக் குலத்தோரைப், பொற்பத் தொழுஞ்சூத் திரர்தொழிலும் புகலெத்தொழிலு முறைபிறழ்ந்தே, அற்பத் தொழிலா காதரசாள் வது பண்ணாட்டார் வந்தொழிலே. (௩௪)

(இ- ள்.) பண்ணாடர் தம்தொழில் - தமிழ் நாடரென்னும் (சேர சோழ பாண்டிய) வன்னியர்களது தொழிலானது, கற்பத்து ஒழியாமறை பயிலும் கவின் மேவிய அந்தணர் தொழிலும் - சர்வசம்மார காலத்திலும் அழிவில்லாத வேதங்களைப் பழகும் அழகு பொருந்திய பிராமணர் தொழில்களும், சிற்பத்தொழில் - சிற்பியரது தொழில்களும், வைசியர் தொழில்களும் செட்டியர்களது தொழில்களும், உயர்முக்குலத்தோரைப் பொற்பத்தெழும் சூத்தி ரர் தொழிலும் - (தம்மில்) உயர்ந்த (பிராமண க்ஷத்திரிய வைசியரென்னும்) மூன்று வருணத்தோர்களையும் விலக்ஷணத்தோடும் வணங்காநின்ற சூத்திரர்களது வேளாளர்களது தொழில்களும், புகல் எத்தொழிலும் - இன்னும் சொல்லா நின்ற எவ்வகைப்பட்ட வேறு ஜாதியர்களது தொழில்களும், தினமும் - எந்நாளும், மூறைபிறழ்ந்து - (அவரவர் வரன்) முறையினின்றுந்தவறி, அற்பத்தொழில் ஆகாது - அற்பத் தொழிலாகப் போய்விடாது, அரசு ஆள்வது- அரசாளுவதாகும் எ-று, ஏ-ஆசை.

கருத்து. வன்னியர்களது தொழிலானது பிராமணர்களது தொழில்களும். சிற்பியர்கள் தொழிலும், செட்டியர்கள் தொழில்களும், சூத்திரராகிய வேளாளர்கள் தொழில்களும், இன்னும் மற்றைய யாவருடைய தொழில்களும் கெடாவண்ணம் அரசாள்வது ஆகும் என்பதாம்.

இதில் தொழில்களும் என உரை கொண்டதனால் பிராமணர்கள் தொழில்கள் ஒதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஏற்றல், ஈதல் என ஆறு, வைசியர்களது தொழில்கள் ஒதல் வேட்டல் ஈதல். உழுதல், பசுக்காத்தல். வாணிகம் என ஆறு; சூத்திரர் அதாவது வேளாளர்களது தொழில்கள் உழுதல் பசுக்காத்தல், வாணிகம், குயிலுவத்தொழில், நெயல் காருக வினையாக்கல், உயர் மூவருணத்தவர்களுக்கும் ஏவிய தொழில்களைச் செய்தல் என ஆறு; சிற்பத்தொழில் கல், பொன் முதலிய லோகங்கள், செங்கல், மரம், சுதை, தந்தம், வன்னம், கண்ட சருக்கரை, மெழுகு எனப்பத்தினாலு மியற்றுவது என பலவற்றையுங் காட்டுமென்க. இவைகளை தி-௧௨-வ-தி. ஒதலோது வித்தல் வேட்டல் வேட்பித்த - லீதலேற்ற லென்றிரு மூவகைய - வாதிகாலத் தந்தணாறு தொழில்” என்னும் ௭௨-வது சூத்திரத்தானும். “வணிகாறுதொழிலோதல் வேட்டலீதலுழவு பசுக்காவல் வாணிகம்” என்னும் ௭௪-வது சூத்திரத்தானும், ”வேளாளாறு தொழி லுழவு பசு க்காவ - றெள்ளிதின் வாணிகங் குயிலுவங் காருகவினை - யொள்ளிய விருபிறப்பாளர்க்கேவல் செயல்” ௭௫-வது குத்திரத்தானும், “கல்லு முலோகமுஞ் செங்கலு மரமும் - மண்ணுஞ் சுதையுந் தந்தமும் வண்ணமுங் - கண்ட சருக்கரையு மெழுகு மென்றிவை பத்தே சிற்பத்தொழிற் குறுப்பாவன” என்னும் ௧௫௦-வது சூத்திரத்தானு முணர்க. “புகலெத் தொழிலு மென்றதனால் மற்றைய அறுபத்து நாலு ஜாதிகளின் தொழில்களையுங்கொள்க.

முத்திரைமோதிரச்சிறப்பு

முத்திரை மோதிரச் சிறப்பென்பது:— முத்திரை மோதிரத்தின் பெருமை. அது தொழினெறி பிறழாமலாளுந் தகைமையோடுந் தரித்தலின், இங்கே தொழினெறி பிறழாமைச் சிறப்புக்குப் பின்வைத்துக் கூறினார்.

கொச்சகம்.

எத்திசை மன்னவரரணு முத்திரிக்கு மீதன்றிப்
பத்திமையி லார்க்கந்தப் பரனுலகு முத்திரிக்கும்
சத்தியம்பொய்யாது வைகிச்சகம்புரக்கும் வன்னியர்கைம்
முத்திரை யாழிக்குநிகர் மூதக்கீர் மொழியீரே. (௪௪)

(இ-ள்) மூதக்கீர் - மேலாம் அறிவினையுடையீர், சத்தியம் பொய்யாது வைகி - சத்தியத்தை யொளிக்காமலிருந்து, சகம் புரக்கும் வன்னியர் - உலகத்தைக்காவல் செய்யும் வன்னியர்களது, கைமுத்திரை ஆழிக்கு-கையில் விளங்குகின்ற முத்திரை மோதிரமானது, எத்திசை மன்னவர் அரணும் உத்திரிக்கும் - எத்திசைகளிலுமுள்ள அரசர்களது நால்வகையரணும் நிலைபெறச் செய்யும், இது அன்றி - இது வல்லாமலும், (அது) பத்திமை இலார்க்கு - அடங்கி நல்லொழுக்கத்தில் நடவாதவர்களுக்கு, அந்தப்பரன் உலகு முத்திரிக்கும் - அந்தப் பரனுலகு (சித்தியாகாத வண்ணம் அடைத்து.) முத்திரை செய்யும் (ஆகையால்), நிகர் மொழியீர் - ஒப்பு சொல்வீர்களாக. எ-று.

ஆழிக்கு - வேற்றுமை மயக்கம்.

கருத்து வன்னியர்களின் முத்திரை மோதிரமானது பலதிக்குகளிலும் உள்ள அரசர்களின் அரண்களை நிலைக்கச் செய்வதோடும், பக்தியில்லாதவர்கள் சுவர்க்கம் அடையாதபடி அச்சுவர்க்கக் கதவை யடைத்து முத்திரையிடும் என்பதாம்.

துட்டநிக்கிரகச்சிறப்பு.

துட்ட நிக்கிரகச் சிறப்பென்பது :— துஷ்டர்களை யழித்தலின் பெருமை. அது முத்திரை மோதிரந்தரிக்கும் ஆண்டகையார்க்காதலின், இங்கே முத்திரை மோதிரச் சிறப்புக்குப் பின்வைத்துக் கூறினார்.

அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

தீட்டார்தமையுஞ் சிவநிந்தை செய்வோரையுஞ் செங்கோன் முறையேர், பூட்டார்தமையும் பொய்யரையும் போர்வெங்களத்துப் போந்துபுறம், காட்டார்தமையுங் கள்வரையுங் கலிதீர்ந்திடக்காட்டிய வறத்தை, நாட்டார் தமையு நானிலத்தி னுட்டார் நவில்பண்ணுாட்டாரே. (௪௫)

(இ-ள்.) நானிலத்தில் - இவ்வுலகத்தில், நவில் பண்ணாட்டார் - யாவராலும் சொல்லுகின்ற தமிழ் நாடரென்னுஞ் சேர சோழ பாண்டிய வன்னியர், தீட்டார் தமையும் - ஒழுக்க மில்லாதவர்களையும், சிவ நிந்தை செய்வோர்களையும் - தெய்வ நிந்தை செய்பவர்களையும், செங்கோன் முறை ஏர்பூட்டார் தமையும் - செங்கோன் முறைப்படி வழக்கம் போல ஏர்பூட்டாத வேளாளர்களையும், பொய்யரையும் - பொய்சொல் பவர்களையும், வெம்போர்க் களத்து போந்து - வெவ்விய யுத்தகளத்துக்கு வந்து புறங் காட்டார் தமையும் - முதுகு காட்டாத பகைவர்களையும், கள்வரையும் - திருடர்களையும், கலிதீர்ந்திடக் காட்டிய அறத்தை நாட்டார் தமையும் - (ஏழைகளுக்கு) வறுமை தீர உண்டாக்கிய தருமத்தைக் கெடுத்தவர்களையும், நாட்டார் - தங்கும்படி இடம் கொடார். எ-று.

கருத்து. வன்னியர்கள் ஒழுக்கமில்லாதவர்களையும், தெய்வ நிந்தை செய்பவர்களையும், முறைமையாக ஏருழாத வேளாளர்களையும், பொய்யர்களையும், எதிர்த்த பகைவர்களையும், திருடர்களையும், தருமத்தைக் கெடுத்தவர்களையும் இவ்வுலகத்தில் வைக்கமாட்டார்கள் என்பதாம்.

வாயில்காத்தற்சிறப்பு

வாயில் காத்தற் சிறப்பென்பது :— வாயில் காத்தலின் பெருமை. அது துஷ்ட நிக்கிரகஞ் செய்யுந் தரமுடையார்க்கே அமைதலின், இங்கே துஷ்ட நிக்கிரகச் சிறப்புக்குப் பின்வைத்துக் கூறினார்.

கொச்சகம்.

கடிந்தாரைக் களைவனியர் காப்பாளர் சமர்க்களத்தில், மடிந்தாலுஞ் சுவர்க்கமுண்டாம் வாயில்காத்தவரடியில், படிந்தாலுமரசுண்டாம் பகர்வதெவன் பாரிடத்தில், விடிந்தால்வேந் தன்வாயின் மேவாதார் யாருளரே.

(இ-ள்) பாரிடத்தில் - இவ்வுலகத்தில், கடிந்தாரைக் களைகாப்பாளர் வன்னியர் - துஷ்டர்களைச் சம்மரித்து (உலகத்தைக்) காக்கின்றவர்களாகிய வன்னியர்களது, சமர்க்களத்தில் மடிந்தாலும்-யுத்தகளத்தில் எதிர்த்து இறந்தாலும், சுவர்க்கம் உண்டாம் - சுவர்க்க பதவி உண்டாகும், (அன்றி) வாயில் காத்து அவர் அடியிற் படிந்தாலும் - (அரண்மனை) வாயிலைக்காத்து அவர்களது பாதத்தில் வீழ்ந்து பணிந்துக் கொண்டிருந்தாலும், அரசு உண்டாம் - அரசாட்சி கிடைக்கும் (ஆகையால்) பகர்வது எவன் - (இவர்களைப்பற்றி வேறே பன்னிப்பன்னி) சொல்வது என்ன இருக்கிறது, விடிந்தால் வேந்தன்வாயில் மோவாதார் யார் உளர் - சூரிய உதயமானால் அரசன் அறண்மனைவாயிலிற் சேராதவர்கள் யாவரிருக்கிறார்கள் (சொல்வீர்களாக) எ - று.

கருத்து. உலகத்திலியாவர்களும் வன்னியர்களது வாயிற்படி காத்துக்கொண்டிருந்து உயிர்பிழைக்கின்றவர்களாகிறார்களென்பதாம்.

தொழுதன் முதலியசிறப்பு

தொழுதன் முதலிய சிறப்பென்பது:— தொழுஞ்செயலோர் முதலாயினோர் சூழ்ந்திருத்தலின் பெருமை. அது பதினெண் பகுதியோராய்ப் பக்கத்திலிருந்து உஜ்ஜீவிக்க வேண்டியவர்களைச் சொல்லுதலின், இங்கே வாயில் காத்தற் சிறப்புக்குப் பின்வைத்துக் கூறினார்.

அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்

அணங்காற்றருவில் லேந்திமுறையரசாள் வன்னிச்சயதரரை, வணங்கார் யார்கை கூப்பார்யார் வாரி சூழும் வையமிசை, இணங்கார் யார்நின் றேத்தார்யா ரேவற் பணிசெய் யார்யார்நன், மணஞ்சார் முற்றங் காத்திருந்து வாழ்நாண் மகிழார் யார்யாரே. (௪௭)

(இ-ள்) வாரி சூழும் வையம்மிசை - சமுத்திரஞ்சூழ்ந்த இவ்வுலகத்தில், அணங்கு ஆற்று அருவில் ஏந்தி - (பகைவர்கள், துஷ்டர்களுக்கு) அச்சத்தைக் கொடுக்கின்ற அருமையாகிய வில்லைத் தங்கள் கையினிடந்தாங்கி, முறை அரசு ஆள்வன்னிச்சயதரரை - பரம்பரையாக அரசை நடத்திவருகின்ற வன்னிய வீரர்களை, வணங்கார் யார்- வணங்காதவர் எவர்கள் கைகூப்பார் யார் - கும்பிடாதவர்கள் எவர்கள் இணங் கார் யார் - சிநேகத்தை விரும்பி யிணக்கஞ் செய்யாதவர்கள் எவர்கள்? நின்று ஏத்தார்யார் - சந்நிதியில் நின்றுகொண்டு துதிக்காதவர்கள் எவர்கள்? ஏவல் பணிசெய்யார் யார் - ஏவிய பணிவிடைகளைச் செய்யாதவர்கள் எவர்கள்? நல்மணம் சார்முற்றம்காத்து இருந்து நல்ல மங்கலத்தைச் செய்கின்ற அரண்மனை வாயிலில் காத்திருந்து, வாழ் நாண் மகிழார் யார் யார் - தங்களுயிரைக் காப்பாற்றிக் கொள்ளாதவர்கள் எவர்கள் எவர்கள்? எ-று.

கருத்து. இவ்வுலகத்தில் வன்னியர்களை வணங்காதவர்களும், கும்பிடாதவர்களும், சிநேகத்தை விரும்பி இணக்கஞ் செய்யாதவர்களும், துதிக்காதவர்களும், பணிந்து ஏவல் செய்யாதவர்களும், வாயில் காத்திருந்து உயிர் பிழைக்காதவர்களும், இல்லை என்பதாம்.

இதில் தொழுதன் முதலியசிறப்பென்றதனால் அரசர் மூவகையிற்பதினெண் குழூஉ அடங்கிய தென்க. அதாவது மந்திரியர், புரோகிதர், சேனாபதியர், தூதர், சாரணர் என ஐந்தும்? மந்திரியர். கருமாதிகாரர், சுற்றம்,கடைகாப்பாளர், நகரமாக்கள் படைத்தலைவர், இவுளிமறவர், யானை வீரர், எனத்துணைவர்கள் எட்டும்; நட்பாளர், அந்தணாளர், மடைத்தொழிலர், மருத்துவக்கலைஞர், நிமித்திகப்புலர் என ஐந்தும் ஆகபதினெட்டென்க. இவர்களை தி-௧௨-வ-தி “அமாத்தியர் புரோகிதர் சேனாபதியர் - தவாற்றொழிற் றூதர் சாரண ரென்றிவை அரசர்க்காகு மைம்பெருங்குழுவும் - காரணத்திளைஞருங் கமவிதிகாரருங் - கனகசுற்றமுங் கடைகாப்பாளரும் நகரமாக்களு நனிபடைத் தலைவரு - மிவுளிமவரும் யானை வீரரும் மடைத்தொழிலாளரும் மருத்துவக்கிளைஞரு - மாசர்க்கெண் பெயராகு மென்ப - வடுதநட்பாளரும் மடைத்தொழிலாளரும் - மருத்துவக்கிளைஞரும் நிமித்தகாரரும - நீணில வேந்தர்க் குரைத்த வைம்பெய - ருறுதிச்சுற்றமு முரைத்த முப்பாலு - முயர்குடை வேந்தர்க்குப் பகுத்த பதினெண்கிளைப் பாலோரே” என்னும் ௧௫௬ -வது சூ-க. இதனால் வணங்குவோர்களையும், கைகூப்புவோரையும், ஏவல் கேட்போரையும், துதிப்போரையும் வாயில் காப்போரையும், அவரவர்கள் தகைமைக்குத் தக்கதாக வமைத்துக் கொள்க. தனித்தனி ஒவ்வொரு சிறப்புங்கூறினென்னையோ வெனின்! இபபிரபந்தம் எழுபதென்னும் வரையிகந்து படுமென்னுங் கருத்தால்சுருங்கச் சொல்லலென்னும் அழகுபற்றி இங்ஙனம் கூறினாரென்க.

செல்வாக்கின் சிறப்பு

செல்வாக்கின் சிறப்பென்பது:— செல்வாக்கின் பெருமை. அதுதொழுதன் முதலிய அங்கமுடைமையால் பயன்படுத்தலின் இங்கே தொழுதன் முதலிய சிறப்புக்குப் பின் வைத்துக் கூறினார்.

கொச்சகம்

பாவசையு நாவலர்பால் பத்திமிக வைத்துதவும், பூவசையு மணிமார்பர் புகழினுக்கோர் நிகரின்றான், மாவசையாப் பெருஞ்செல்வர் மாதிரங்காக்கும் வனியர், நாவசைய நிரந்தரமும் நாடசையா திருந்திடுமோ.

(இ-ள்.) பா அசையும் பாவலர் பால்மிகப் பத்தி வைத்து உதவும் - பாட்டுகளைச் சொல்லும் (நாவினையுடைய) வித்வான்களிடத்து மிக்க அன்புவைத்து உதவுகின்ற, பூ அசையும் மணிமார்பர் -மாலைபுரளும் அழகிய மார்பினைக் கொண்டவர்களும், மா அசையாப்பெருஞ் செல்வர் - இலக்ஷுமி நீங்காத ஸர்வ ஐசுவரியங்களையு முடையவர்களும், மாதிரம் காக்கும் வனியர்-உலகத்தைக்காவல் செய்கின்றவர்களுமாகிய வன்னியர்களது, புகழினுக்கு ஓர் நிகர் இன்று - கீர்த்திக்கு வொரு ஒப்புங் கிடையாது (ஆகையா லிவர்களது) நா அசைய - நாவானது அசைய, நிரந்தரமும் நாடு அசையா திருந்திடுமோ- எப்பொழுதாகிலும் நாடசையா திருக்குமா? (சொல்வீர்களாக.) எ-று.

கருத்து. வன்னியர்கள் நாவசைய நாடசையும் என்பதாம்.

இதில் பத்திவைத்தற்கு ஆதாரமாகிய இடம் இதயமாதலின் “பூவசையு மணிமார்பர்” என்றார் என்க.

புகழ்ச்சிறப்பு

புகழ்ச்சிறப்பென்பது:— கீர்த்தியின் பெருமை. அது செல்வாக்கினாதலின், இங்கே செல்வாக்கின் சிறப்புக்குப் பின் வைத்து இரண்டு கவிகளாற் கூறினார்.

ஆந்துணையாம் வன்னியர்போ லார்துணைப்பட் டாதரிப்பார், போந்தரிகள் வணங்குமிவர் புகழ்சிறிதோ யாம்புகழ்தற், கேந்துகர மிரண்டினும் பொன்னிலக்கமறச் சொரியினுமிவ், வேந்தர்புகழ்க்கிணைநாவால் வேறுபுகழ் கூறேமால். (௪௯)

(இ-ள்.) ஆம் துணை ஆம் - தகுதியினையுடைய வற்றிற்குத் துணையாகின்ற, வன்னியர்போல் - வன்னியரைப் போல, துணைப்பட்டு ஆதரிப்பார் ஆர் - துணைப்பட்டு ஆதரிப்பவர்கள் யாவர்? (ஒருவருமில்லை யென்றபடி) யாம் புகழ்தற்கு - எம்மாலே புகழ்ந்து சொல்வதற்கு, அரிகள் போந்து வணங்கும் இவர்கள் புகழ்சிறிதோ - பகைவர் வந்து வணங்கும் இவ்வன்னியர்களது புகழ் கொஞ்சமாகவா இருக்கிறது? (ஆகையால்) ஏந்து கரம் இரண்டினும் பொன் இலக்கம் அறச் சொரியினும் எந்தா நின்ற எமது கையிரண்டினும் (வழக்கமாகக் கவிக்கு ஆயிரம் பொன்னென்றும் முறையை நீக்கி) பொன்னைக் கணக்கில்லாது (மழைபோலும்) பெழிந்தாலும், இவ்வேந்தர் புகழ்க்கு இணை நாவால் வேறு புகழ் கூறேம் - இவ்வரசர்கள் புகழுக்கு இணையாக எந்நாவினால் வேறு ஒருவர் புகழையும் சொல்லமாட்டேம். எறு.

ஆல் - அசை.

கருத்து. வன்னியர்களைப்போலும் துணைப்பட்டு ஆதரிப்பவர் உலகத்தில் ஒருவருமில்லை யாதலால் எமது கைகளில் கவியொன்றுக்கு ஆயிரம்பொன்னென்னும் வரையின்றிப் பொழிந்தாலும் இவ்வரசர்கள் புகழுக்கிணையாக வேறு ஒருவர் புகழையுங் கூறமாட்டோம் என்பதாம்.

இதுவும் அது,
அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.

வளமருவு மங்கையர்கோன் சொலத்தகுபல் லவராயன் மரபிற்றோன்றிக், களமருவு கறையுடைய கண்ணுதல்கச் சியின்வாழே கம்பரேசற், குளமருவு மன்பினரா யொளிர்மகுட மணிப்பொற்றே ருதவி மேனாள், தளமருவு தாமரைபோன் முகவனியர் படைத்தபுகழ் சாற்றற் பாற்றோ. (௫௦)

(இ-ள்) மேனாள் - ஆதியில், தளம் மருவி தாமரை போல் முகம் வனியர் - இதழ் பொருந்தியதாமரை மலர் போலுங் குளிர்த்த முகத்தினையுடைய வன்னியர்கள், வளம் மருவு மங்கையர்கோன சொலத்தகு பல்லவராயன் மரபில் தோன்றி - வளப்பத்தைக்கொண்ட திருமங்கை யாழ்வாரால் சொல்லுந் தகுதியினையுடைய பல்லவராஜன் வமிசத்தில் உதித்து, களம் மருவு கறை உடைய கண்ணுதல் கச்சியின்வாழ் ஏகம்பரேசற்கு - கண்டத்தினிடத்து பொருந்திய விஷக்களங்கத்தினையும் நெற்றிக்கண்ணினையு முடைய கச்சியின் வாழ்வாகிய ஏகாம்பர நாதற்கு, ஒளிர் மகுடம் - விளங்கா நின்ற இரத்தின கிரீடமும், மணிப்பொற் றேர் - அழகிய இரத்தின இரதமும், உதவி-கொடுத்து, படைத்த புகழ் - அடைந்த புகழை, சாற்றல் பாற்றோ- சொல்லும் பகுதியினை யுடையதா? (சொல்வீர்களாக.) எ-று.

கருத்து, ஆதியில் இவ்வன்னியர்கள் திருமங்கையாழ்வாரால் சொல்லிய பல்லவராஜன் வம்மிசத்தில் தோன்றினவர்களாகி, ஏகாம்பரநாதற்குக் கிரீடம் தேர் முதலியவைகள் கொடுத்துப் புகழ் பெற்றதை இவ்வளவென அளவிடக்கூடாது என்பதாம்.

இதனால், இவ்வன்னியர்கள் விஷ்ணுவாலய சிவாலய தருமங்கள் நிரம்பவும் பிரபலமாக நடத்துகின்றவர்கள் எனக் குறிப்பிட்டார்.

இதில் “வளமருவு மங்கையர்கோன் சொலத்தகு பல்லவராயன் மரபு” என்றதற்கு, திராவிட வேதமாகிய நாலாயிரப் பிரபந்தம் திருமங்கையாழ்வார் திருவாய் மலர்ந்தருளியஷட் பிரபந்தத்துள் பெரிய திருமொழி பரமேசுவர விண்ணாகரம் பரமபாத விஷயம் பல்லவனும் சோழனுமென்பார் அநுகூலவிரத்திகளைப் பண்ணும் பரமேசுவர விண்ணகரத்தை யனுபவித்துப் பேசும் பாசுரங்கள்.

“சொல்லுவன் சொற்பொரு டானவையாய்ச் சுவையூறொலி நாற்றமுந் தோற்றமுமாய், நல்லர னாரணன் னான் முகனுக் கிடந்தான் றடஞ் சூழ்ந்தழகாயகச்சி, பல்லவன் வில்லவனென்றுலகிற் பலராய பலவேந்தர் வணங்கு கழற், பல்லவன் மல்லையர்கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரமிதுவே”

இது - க-வது பாசுரம்:

திண்படைக்கேளரியினுருவாய்த் திறலோ கலஞ்செருவின் முன்னாட், புண்படப் போழ்ந்த பிரான திடம்பொருமாடங்கள் சூழ்ந்தழகாயகச்சி, வெண்குடை நீழற்செங்கோனடப்ப விடைவேல் கொடி வேற்படை முன்னுயர்த்தப், பண்புடை பல்லவர் கோன் பணிந்த பரமேச்சுர விண்ணகரமிதுவே”

இது -௬-வது பாசுரம் மற்றைய பாசுரங்களை அந்நூலைக்கொண்டு அறிந்து கொள்க. “ஒளிர் மகுட மணிப்பொற்றேருதவி” என்றதற்கு, ஏகாம்பரச் சம்பன் அல்லது ஏகாம்பரச் செம்பியன் என்னும் பல்லவமகாராஜன் முன்னிலையில் இரட்டைப் புலவர்கள் அரங்கேற்றிய ஏகாம்பரநாதர் உலா “சம்புகுலத் தொருவன் சாற்றுகைக்கா மென்றளித்த - செம்பொன் மணிமகுடம் சேர்வித்து” என்னும் ௬௧-வது கலிவெண்பாவானும், “வடித்த சுடர்வேற்சம்பன் வாழ்மல்லி நாதன் - கொடுத்த திருத்தேர்மேற்கொண்டு” என்னும் ௧௦௨-வது கலிவெண்பாவானும் உணர்க. [1]. சம்புகுலத்தவன் சம்பன் அது சம்பியனெனினும் செம்பியனெனினும் இழுக்கா: என்னை? ஜபம் செபம், ஜயம் செயம் கந்தகம் கெந்தகம் என மரீஇ வழங்குவனபோல்; ஜம்புகுலத்தவன் சம்பன் என்னும் மொழியானது இயதோன்றி, செம்பியன் என மரூஉ மொழியாயதென் உணர்க. ஏகாம்பரநாத ருலாவை ஏகாம்பரச் செம்பியன் காலத்தில் இரட்டைப் புலவர்கள் அவன் முன்னிலையில் அரங்கேற்றிய தென்பதைத் தொண்டைமண்டல சதகம்.

“மேதைப்புலவரெண் ணேகாம்பர சம்பு மெச்சநெடுங்
காதைப் புலவ ரிரட்டையர் பாடுங்கலம் பகமு
மோதற் கரியநல் லேகம்ப வாண ருலாவு மந்த
மாதைப்பனுவலும் பாராட் டிடுந்தொண்ட மண்டலமே”

என்னும் ௮௬ - வது கவியாலுணர்க.

மாசகற்றற் சிறப்பு.

மாசகற்றற் சிறப்பென்பது :— குற்றம் நீக்குதலின் பெருமை. அது புகழ்தங்குதற்கு இடமாதலின், இங்கே புகழ்ச்சிறப்புக்குப் பின் வைத்துக் கூறினார்.

  1. சுவாயம்பு குலத்தவன் சமயன செம்பியன் என மரீஇய வென்பாரும் உளர். அப்படியமையினும் அமைக்க