சீனத்தின் குரல்/என் வரவில்லை
நாட்டுப் பற்றும் வீர உணர்ச்சியும் ஒரு சமயம் பல வெளிநாடுகளை சுற்றிப் பார்ப்பதாலும் தொடர்பு கொள்வதாலும் வரக்கூடுமா என்று யோசித்தால், அப்படியும் சீனர்கள் வெளிநாடுகளில் சுற்றி தொழிலும் வாணிபமும் செய்யாதவர்கள் என்றும் சொல்வதற்கில்லை. பத்தாவது நாற்றாண்டிலேயே தென் ஆப்பிரிக்க துறைமுகப் பட்டினங்களிலேயும், இந்தோ, சைனா, மலேயா போன்ற நாடுகளிலேயும் குடியேறி தொழிலும் வாணிபமும் செய்திருக்கின்றார்கள். மேலும், வட அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் தங்கம் கிடைக்கின்றதென்று கேள்விப்பட்டு அங்கேயும் சென்றிருக்கின்றார்கள். பல் நூற்றாண்டுகள் அங்கே வாழ்ந்துங்கூட தன் நாட்டின் நிலையை அந்தந்த நாட்டு நிலைகளோடு ஒப்பிட்டுப் பார்த்து தலை தாழ்ந்திருக்கும் தங்கள் நாட்டின் நிலையை உயர்த்த முடியவில்லை. அங்கங்கே இருந்த அரசியல் நுணுக்கங்களைக் கொண்டு வந்த தில்லை.
மொத்தத்தில் சீன மக்கள் ஏதாவது விழிப்படைந்தார்களா என்றால், பொதுவாக அபினி நாட்டில் புகுந்து, அதன் பேரால் ஏற்பட்ட இரண்டு பயங்கரமானப் போர்களுக்குப் பிறகுதான் என்றால் மிகையாகாது. அபினி உள்ளே நுழைவதற்கும் பேரறிஞனும், புரட்சித் தலைவனும், அபினியெனும் செந்தேளால் கொட்டப்பட்டு சீனத்தின் தலையிலேறியிருக்கும் விஷத்தைப் போக்கவும் தோன்றிய தலைவன் சன்-யாட்-சன் பிறப்புக்கும் ஒன்பது ஆண்டுகள்தாம் காலம் விட்ட இடைவெளி.