சீனத்தின் குரல்/கன்பூஷியஸ்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

கன்பூஷியஸ்

கிருஸ்துவுக்கு முன் 551-ல் ஷங்- டியாங்- ஹெய் என்பவருக்கும், சிங்-டாசி என்ற அம்மையாருக்கும் கடைசி மகனாகப் பிறந்தவர்தான் கன்பூஷியஸ். கன்பூஷ்யஸ் என்றால் தத்துவத்தின் தந்தை என்று பொருள். உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணனும் ஒன்பது. சகோதரிகளும் இருந்தார்கள், கன்பூஷிஸின் ஐந்தாவது வயதிலேயே தந்தை இறந்து விட்டார். குடும்பம் ஏழ்மையைத் தழுவியிருந்த காரணத்தால் சிறு வயதிலேயே வேலை செய்து பிழைக்க வேண்டியவராய்விட்டார். பத்துப் பனிரெண்டாவது வயதிலேயே சிந்தனா சக்தி அதிகமுடையவராகக் காணப்பட்டார். பதினைந்தாவது வயதில்தான் படிக்க வேண்டுமென்ற எண்ணம் வந்தது. பத்தொன்பதாவது வயதில் திருமணம் முடிந்தது. ஒரு ஆட்டுப் பண்ணையின் முதலாளி யிடம் வேலை பார்க்கின்றார்; பிறகு இருபத்தி இரண்டாவது வயதில் ஒரு சிறிய பள்ளிக்கூடத்தை வைத்து மாணவர்களுக்கு பயிற்சியளிக்கின்றார். ஒரு பாடத்திலுள்ள ஒரு கோணத்தைத் தொட்டுக்காட்டி விட்டால் மற்ற கோணங்களை மாணவர்களே தெரிந்துகொள்ளவேண்டும். அப்படி தெரிந்து கொள்ள சக்தியற்ற மாணவர்களை விரும்புவதோ, அல்லது அந்த மாணவர்களுக்கு மறுபடியும் அந்தப் பாடத்தைச் சொல்லிக் கொடுப்பதோ இல்லை என்கிறார் கன்பூஷியஸ். தன்னுடைய இருபத்திரண்டாவது வயதில் தாயும் இயற்கையெய்திவிட்டாள். அன்றிலிருந்த சீன சர்க்காரின் சட்டப்படி யாருக்கும் சமாதி கட்டக்கூடாது. எனினும் கன்பூஷியஸ் சட்டத்தை மதிக்காமல் இறந்த தன் தாய்க்கு ஒரு சமாதியைக் கட்டிவைத்தார். ஏனென்றால் தான் லூ என்ற மாகாணத்துக்குத் தொழில் சம்மந்தமாகப் போக வேண்டுமென்று திட்டமிட்டிருப்பதால், மறுபடியும், என்றாவது ஓர் நாள் தன் தாயகத்துக்குத் திரும்பி வரும்போது, தன் தாயின் சமாதியைக் காணலாமே என்பதுதான் அவர் எண்ணம். மகன் தாயன்புக்குக் கட்டுப்பட்டவன், தாயும் தான் ஈன்ற மக்களுக்காக எவ்விதத் தியாகமும் செய்வாள்.