உள்ளடக்கத்துக்குச் செல்

சீனத்தின் குரல்/சீனத்தின் குரல்

விக்கிமூலம் இலிருந்து
சீனத்தின் குரல்

ஆசியா கண்டத்திற்கு ஆதவனை அறிமுகப்படுத்திய அவனி. உலக ஏழு அதிசயங்களிலே ஒன்றான பெருஞ்சுவற்றின் பிறப்பிடம், ஆகாய விமான காலத்திற்கு முன்பு அகிலத்தின் அவாலைத் தன்பால இழுத்த அதிசயத்தின் தாயகம். யாராலும் எளிதில் தாண்டமுடியாதென்ற அசையாத நம்பிக்கையால் சீனப் பொதுமக்கள் தங்கள் நரம்பின் வண்மையால் கட்டிக்காத்த நெடுஞ்சுவர். இன்று அதன் மேல் வட்டமிட்டு பறக்கும் ஆகாயவிமானம் வல்லூறாகவும், அதன் கீழ் பயந்து பதுங்கிக்கிடக்கும் பாம்பு போலவும் 1400 மைல் நீளத்தில் மேற்கே இருந்து கிழக்குக் கடற்கரைவரை படுத்துக் கொண்டிருக்கும் அப்பெருஞ்சுவற்றின் தாய் நாடு.

அதிசயம் ஒன்று கூடுவிட்டு கூடு பாய்வதைப் போல் ஒருகாலத்தில் அப்பெருஞ்சுவற்றில் குடியிருந்த அதிசயம் இன்று ஆகாய விமானத்திலும், இன்னும் அதைவிட சிறந்த பல பொருள்களிலும் குடிபுகுந்துவிட்டது. அவ்வித பண்டைக்கலைகளுக்குத் தாயகமாக விளங்கிய தரணி.

ஐம்பெரும் துறைமுகங்களை ஆங்கிலேயர்க்கும், அதிசயக் கோட்டைகளை மற்ற அயலாருக்கும் அர்ப்பணித்துவிட்டு கடலில் கால் ஊன்ற முடியாமல் கப்பல் களை நங்கூரத்தோடு நிறுத்திவிட்டு அளவற்ற ஆற்றலை, அபினி போதைக்கு அடிமைப்படுத்தி வேற்றுநாட்டார் படையெடுப்புக்குத் தன் நாட்டின் தலைவாயிலைத் திறந்துவிட்டு விட்டு, கைகட்டி. வாய் புதைத்து, கண்களில் ஒளி மங்கி, வீரங்குன்றி, அதுவரை அனுசரித்து வந்த மூன்று மதங்களால் அறவழி செல்ல, அரசியலுக்கு வேண்டிய மறப்போரை மறந்து காலாகாலத்தில் செய்யவேண்டிய கடமையை கைவிட்டு, விழிப்புக்கும் தூக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் சதா போதையெனும் சாகரத்தில் வீழ்ந்து கிடந்த நாடு எந்தவகையாலும் பகை முடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த பகை நாட்டரசர்கள் வஞ்சனையால் போட்ட திட்டத்தின் தூதுவனாக உள்ளே கள்ளத்தனமாக நுழைந்த அபினி தன்னைப் பின்தொடர்ந்துவரும் செங்கோலுக்கு வழிகாட்ட, மாற்றார் மணிமுடி ஜொலிக்கத் தன் மண்ணில் இடந்தந்துவிட்ட மண்டலம்.

தன் நாட்டு அழிவுக்குக் காரணமாயிருந்த போதை மருந்தாம் அபினியை உள்ளே வரவிடாமல் தடுத்த மன்னன் சின் -யுவான் - தீ அறியாவண்ணம் இரவோடு இரவாக அந்த மயக்க மருந்தை சீனத்திற்குள்ளே கொண்டுசெல்ல அரசியல் கள்ளர்கள், ஒன்றுகூடி பெருக்கிய கள்ளமார்கட் என்ற வார்த்தையை முதன் முதலில் உலகப் பேரகராதியில் சேர்த்த தரணி.

அகில உலக வல்லரசு நாடுகளிலும் அதிக ஜனத்தொகை கொண்ட நாடு. ஆசியாவின் தலை வாயில், கீழ்நாடுகளுக்குக் கடல்வழி வகுத்துத்தந்த கடல் மன்னன் மார்க்க போலோ கண்டு களித்த களம். இந்தியாவின் நாகரிகத்தையறிய இருபெரும் தூதுவர்களை ஈன்றனுப்பிய நாடு. மகாகவி லீபோ, வரைகோல் வேந்தன் லின்-யு-டாங் போன்ற அறிஞர்கள் பிறந்த பூமி.

"பகையை பகையால் வெல்ல முடியாது, அன்பால் அனைத்தையும் வெல்லலாம், என்ற பொன் மொழியையும், "நீதி வெல்லும் நிச்சயம் வெல்லும்," என்ற பொதுமறையையும் பூதளத்திற்களித்த சாக்கிய சிம்மன் புத்தர் பிரான் பேரொளியை போற்றும் நாடு. ஞானச் சீனமாயும், தர்க்கச் சீனமாயும் இருந்த நாடு, பாசீசச் சீனமாக மாறி இன்று செஞ்சீனமாகத் திகழ்ந்து புகழேனியில் நிற்கும் நாடு

சீனத்தின் ஜோதி மகான் கன்பூஷியஸ். சீனத்தின் சீர்த்திருத்தவாதி, சன்-யாட்-சன் சீனத்தின் நோய் சியாங்-கே-ஷேக், சீனத்தின் தந்தை மா-சேதுங். இந்த நால்வர்களிட்ட எல்லைக் கோடுகளுக்குள்ளே அடங்கிவிட்ட அகிலம்.

கன்பூஷியஸ் காலத்துக் கேற்றவாறு கட்மையைச் சொன்னான், சன்-யாட் அதைச் சற்று மாறுதலோடு மக்களுக்குப் பொதுவாக்கினான், ஷேக் மடமையை வளர்த்தான், மாசே அந்த மடமைக்கு மரண சாசனம் படித்தான் ஒருநாடு வாழ்வதற்கும் வீழ்வதற்கும் அந்த நாட்டு மக்கள் மாத்திரம் காரணஸ்தர்கள் அல்லர். அவர்களை அழைத்துச் செல்லும் தலைவர்களும் காரணமாகின்றார்கள் என்பதை மிக விளக்கமாக நாம் தெரிந்து கொள்வதற்குண்டான வசதியை தேடித்தருகிறது சீனம். மற்ற நாடுகளிலே அதைத் தெள்ளத் தெளியத் தெரிந்து கொள்ள முடியாமல் போய்விடுவதும் உண்டு. ஏனெனில் தலைவர்கள் குற்றம் செய்துவிட்டு அதைத் தொண்டர்கள் மேல் சுமத்திவிட்டுத் தங்களைக் குற்றமற்றவர்கள் என்று காட்ட தொண்டர்களைக் காரணமில்லாமலே துரோகிகளென்று தூற்றுவார்கள். அப்பேற்பட்ட கள்ளமார்கெட் தலைவர்களுமுண்டு. தங்கள் குற்றத்தை உணர சாத்தியமற்றத் தலைவர்கள் தங்கள் மேதாவிலாசம் மறையாமலிருக்க சில போலி பக்தர்களை அமர்த்திக்கொண்டு, கோபுரத்தைத் தாங்கும் பொம்மைகளைப் போலிருப்பார்கள். இதேபோல் சீனத்தின் வாழ்வும் வீழ்ச்சியும் தலைவர்களையே சார்ந்து நின்றிருக்கிறது.