சீனத்தின் குரல்/சீனம் சீனர்களுக்கே

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

“சீனம் சீனர்களுக்கே”

இதே நேரத்தில்தான். மேல்நாட்டார் கொண்டு வந்த ஆயுதங்களால் பட்ட பலமான அடியின் எதிரொலியாக, "சீனம் சீனர்களுக்கே அயல் நாட்டார் ஆதிக்கம் ஒழிக", "அபினி வியாபாரம் ஒழிக", "இலஞ்சம் ஒழிக", "மஞ்சு அரசாங்கம் ஒழிக", என்ற பேரொலி நாட்டின் எல்லா மூலை முடுக்குகளிலும் கேட்டது. உதை வாங்கி வாங்கி பழகி விட்ட ஒருவன் என்றாவது ஒருநாள் அவனாலும் பொறுக்க முடியாத அலவுக்கு பலத்த அடி வாங்குகின்றபோது, மூர்க்கனாய், முரடனாய், காட்டுமிராண்டியாய் மாறிவிடுவதைப்போல, சீன மக்கள் அடி வாங்கி வாங்கி தழும்புகள் ஏறி பழகிப் போயிருந்ததால், ஏழெட்டு வல்லரசுகளின் அடி ஒன்றாகச் சேர்ந்து விழும்போது தாங்க முடியாமல் கொக்கரித்து போர்க்கோலம் கொண்டு மரண தைரியத்தோடு மாற்றாரை புறங்காணப் புறப்பட்டு விட்டார்கள். பலமான எதிர்ப்பு முகாம் அமைக்கப்பட்டுவிட்டது. சீனயந்திரம் பல நாட்களாகக் கெட்டுக் துருப்பிடித்துக் கொண்டிருப்பதற்குக் காரணத்தைக் கண்டு, அந்த காரணந்தான். மஞ்சு அரசாங்கம் என்று முன்பு சந்தேகப்பட்டதை இப்போது ஊர்ஜிதப்படுத்தி விட்டார்கள். அயல் நாட்டார், கொண்டு வந்த துப்பாக்கிகளும், குண்டுகளும் இவர் களுக்கு வீரத்தை பூட்டியிருந்தாலும் சரியாக செப்பனிடப்பட்ட அரசியல் பொருளாதார சமூக அமைப்புகளை இவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும். அதோடு விஞ்ஞான அறிவு பெறவேண்டும். இதற்கென்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தார் சன்-யாட்-சன்.