சீனத்தின் குரல்/தலைகீழ் மாற்றம்
மனைவி இறந்துவிட்டால் கணவன் ஓராண்டு அழுதுகொண்டிருக்க வேண்டும், ஆனால், கணவன் இறந்துவிட்டால், மனைவி, மூன்றாண்டுகள் அழுது கொண்டிருக்க வேண்டும். விதவை மணம் அனுமதிக்கப்படவில்லை, கற்பை தெய்வமென போற்ற வேண்டும், கற்பைக் காப்பாற்றுவதற்காகவே மிங் ஆட்சி காலத்தில் பல சங்கங்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலமாக பெண்களிடம் வீர உணர்ச்சியும், தியாக சிந்தையும் வளருமென நம்பினார்கள். அப்படி. யாரிடமாவது மேற்சொன்ன இரண்டு பண்புகளையும் கண்டுவிட்டால் அவர்களை தெய்வங்களெனப் போற்றினார்கள். இதைப் போன்ற நிகழ்ச்சிகள் தாம் சீன இலக்கியத்தின் முதல் வரி முதல் கடைசி வரி வரையிலும் காணப்படுகின்றன. கடவுளைப்பற்றி கன்பூஷியஸ் எங்கேயும் குறிப்பிடவில்லை. அவர் காலத்துக்கு முன்பிருந்த டாய்ஸ் மதத்திலும் கடவுளைப்பற்றிய குறிப்புகள் ஒன்றும் காணப்படவில்லை. இந்த நிலைமைக்குக் கொண்டு வந்தார் கன்பூஷியஸ். அவர் இவ்வளவும் செய்தது பெண் வர்க்கத்தை பழிதீர்க்க வேண்டுமென்ற உணர்ச்சியாலல்ல. ஆண் வர்க்கம் அடிமை மலையடிவாரத்திலும், பெண் வர்க்கம் அதன் உச்சியிலும் இருந்ததால் எட்டாத தூரமாய்விட்டது. இவை இரண்டையும் சம உயர்வில் கொண்டுவர வேண்டுமென்ற சமரச உணர்வால் என்று தெரிகிறது. ஒரு சீடன். தன் குருநாதனான கன்பூஷியசைப் பார்த்து, "ஆண்டவனுக்கு தொண்டு செய்வதெப்படி?" என்று கேட்டான். அதற்கு, "நீ மக்களுக்கே இன்னும் தொண்டு செய்யக் கற்றுக் கொள்ளவில்லையே, ஆண்டவனிடம் ஏன் போகிறாய்," என்று பதில் சொல்லியிருக்கின்றார்.
ஒரு காலத்தில் கற்பைப் பற்றி கவலைப்படாதவர்கள், பிறகு அதை எவ்வளவு போற்றி வளர்த்தார்கள் என்பதற்கு சீன வரலாற்றில் இரண்டு கதைகள் உண்டு.
ஒன்று :- ஒரு விதவைப் பெண்ணை யாரோ ஒரு ஓட்டல்காரன் கையைப்பிடித்து இழுத்தானாம். அதனால் அந்த பெண், அந்த ஓட்டல்காரன் தொட்டு இழுத்தக் கையை வெட்டிக் கொண்டாளாம்.
இரண்டு :- ஒரு பெண்ணுக்கு மார்பில் புண் வந்ததாம். அதை டாக்டரிடம் காட்டினால் கற்பழிந்துவிடும் என்று கருதி அந்த வியாதியாலேயே செத்துவிட்டாளாம்.
தனக்கு விருப்பமான வாலிபனைத் தன் கணவன் மூலமாகவே பெற்று அனுபவித்து வந்த இனம் - தன் உறுப்புகள் எதையுமே எந்த ஆபத்திலும் ஆண்கள் பார்க்கக்கூடாதென்ற அளவுக்கு தலை கீழாக மாறிவிட்டது. இப்படி இறந்தவர்களை வீர மரணத்துக்குறியவர்களாக எண்ணி போற்றி வந்தனர் சீனர்கள். ஒருவள் ஐம்பது வயது வரை யிலும் தன் கற்பைக் காப்பாற்றிவிட்டால் சமூகத்திலேயே மிக உயர்ந்த அந்தஸ்தில் வைத்துப் போற்றப்பட்டாள். சர்க்காரின் கட்டாயச் சேவையிலிருந்தும் இதைப்போன்றவர்கள் விதிவிலக்கு பெற்றார்கள். சீன சர்க்காரின் வரலாறு இதைப் போன்ற தற்கொலைகளையும் வீர மரண நிகழ்ச்சிகளையும் தாங்கித் தாங்கி வளைந்து போயிருக்கின்றது. சீன இலக்கியத்திற்கு பொன்முடியளித்தவர்கள் இதைப்போன்று மாண்ட பெண்கள்தாம் என்று சரித்திரப் பேராசிரியர்கள் செப்புகின்றனர்.
கன்பூஷியஸ் செய்த மாறுதல்படி பொருளாதாரம் ஆண்கள் கைக்கு வந்துவிட்டதால், சீனம் எந்தப் பக்கம் திரும்பினாலும் பொத்திக்கொள்ளும் நெருஞ்சி முள்ளின் நிலையடைந்துவிட்டது.