சீனத்தின் குரல்/நன்றி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

நன்றி

அழிவு தொடங்கிய அன்னாள் முதல் விழிப்படைந்த இன்னாள்வரை நாட்டின் இழிவைத் துடைக்கப் பல இடர்பட்டு இறந்துவிட்ட எமது மூதாதையருக்கு நன்றி, உலக உதயகால விஞ்ஞானிகளுக்கு பொது உடமை தத்துவத்தைக் கொஞ்சமும் பழுதுபடாமல் எமக்குரைக்க வந்த மாபெரிய தலைவர்களுக்கு எமது நன்றி, பாட்டாலும் கூத்தாலும், பலவற்றாலும் எமது பழமையை சாகடித்த பல பெரியோர்களுக்கு நன்றி, செல்வச் செறுக்கால் எம்மைச் செருகளத்துக் கழைத்த செல்வச் சீமான்களின் அதிகாரக் குரலை அடக்கிய அரசியல் மேதைகளுக்கு எமது நன்றி. தூக்குமேடையில் துஞ்சிய தூயநெஞ்சினரின் பரிதாபக் கல்லறைக்கு நிழல் தரும் மரங்களுக்கு எங்கள் நன்றி. பொது நலத்தை சுயநலத்திற்கு விலை கூறாமல் பொது நலத்தை பொது நலமாகவே கருதிய பொன்னுள்ளத்தாருக்கு எமது நன்றி. சீன இலக்கத்தை செம்மைப்படுத்தி என்றும் அது அழியாவண்ணம் சிகப்பு முத்திரையிட்ட சிந்தனையாளர்களுக்கு எமது நன்றி. உலக மக்கள் அனைவர்க்குமே எமது நன்றி. உன்னதத் தியாகிகளுக்கு எமது நன்றி. பாழ்பட இருந்த எமது நாட்டை தட்டி எழுப்பக் காரணமாயிருந்த பகை நாட்டார் ஆயுதங்களுக்கு எமது நன்றி, விதி விதி என்று இதுவரை இருந்த நியதியைத் தம் மதியால் மாற்றிய மாவீரர்களுக்கு எமது நன்றி, நாயினும் கேடாய் மதிக்கப்பட்டு வந்த எங்களை இந்த நாடுத் தன் உண்மையான சேயென மதிக்கச் செய்த மேதைகளுக்கு எமது நன்றி.

கேட்பாரற்று திறந்து கிடந்த தலைவாயலின் முன் வீரர்களை நிறுத்தி வேற்றாரை விசாரிக்கச் செய்த விவேகிகளுக்கு எமது நன்றி.

பராரியும் இங்கில்லை. படாடூபக்காரனுமில்லை, ஏய்ப்பவனுமில்லை. ஏமாறுபவனுமில்லை. சுரண்டுபவனுமில்லை, சுண்டிப் போகின்றவனுமில்லை. உப்பரிக்கையிலிருப்பவனுமில்லை, ஒட்டைக் குடிசையிலிருப்பவனுமில்லை. உயர் ஜாதிக்காரனுமில்லை. அந்த உளுத்தக் கொள்கைக்குக் கைக்கட்டி நிற்பவனுமில்லை. ஜாதித் திமிருமில்லை. தாழ்ந்தவனுமில்லை. சமூகச் சக்கரச்சுழலில் சகலரும் ஒன்றே என்ற சங்கநாதத்தை, ஜெகமுழுதும் கேட்கச் செய்த சகலத் தியாகிகளுக்கும் எமது நன்றி.

பொருளாதாரம், தொழிலாதாரம் அறிவாதாரம், சுகாதாரம் ஆகிய இவைகளே ஆள்வோரைத் தேர்ந்தெடுக்க ஆதாரமாகட்டும் என்ற பொக்கிஷத்தையளித்த அரசியல் மேதைகளுக்கு எமது நன்றி. அன்பு பேசிய அந்த காலகவிகளுக்கு, இன்ப தந்த இந்த காலகவிகளுக்கு, இடையறாத துன்பத்திலாழந்த எம்மை எழுதுகோல் மூலம் தட்டி எழுப்பிய வரைகோல் வேந்தர்களுக்கு சிறைக் கம்பிகளைப் பிடித்துப் பிடித்து கைகள் குளிர்ச்சியடைந்த தியாகிகளுக்கு எமது நன்றி.

மகான் கன்பூஷியஸ், மட்டில்லாத சிந்தனையாளன் சன்யாட்சன், செயல் வீரர் மாசேதுங் வரை கோல் வேந்தர் லின்-யு-டாங் ஆகிய அனைவருக்குமே எமது மறக்காத நன்றி.

எங்கும், எப்போதும், எல்லோரும் வாழ்க என்பதே எங்கள் விருப்பம். இதுவே இன்றைய சீனத்தின் குரல்!

வாழ்க சீனம்!!