சீனத்தின் குரல்/நாட்டுக்கே இரண சிகிச்சை
அன்று முதல் இரண சிகிச்சையை நாட்டுக்குச் செய்யவேண்டிய முறையை கவனித்தார். பெரிய ஆபரேஷன் ஒன்று செய்து நாட்டின் வயிற்றில் வெகு நாளாக வளர்ந்து வரும் மந்தமதி என்ற கட்டியை அறுத்தெடுத்து, நாட்டின் முதுகில் ஓடிக் கொண்டிருக்கும் புரையை நீக்கி, வெளி நாட்டாரால் கொடுக்கப்பட்டிருக்கும் மயக்க மருந்தான அபினியால் ஏற்பட்ட போதையை நீக்கி, அயல் உலக கலைகளைக் கொண்டுவந்து குவித்து, கல்விமுறையை அடியோடு மாற்றியமைத்தாலன்றி தன் நாடு உருப்படாது எனக் கண்டார். இதைச் செய்யத் துணிந்தால் என்னென்ன எதிர்ப்புகள் ஏற்படும், அதன் விளைவுகள், அவற்றால் தான் அடைய வேண்டிய துன்பங்கள் எல்லாவற்றையுமே ஆழ்ந்து சிந்தித்தார். "இவைகளில் ஒன்றையேனும் அதுவரை சீன மக்கள் அடைய முடியாமல் தடுத்து, அயல் நாட்டாரின் கைப்பாவையாய் . ஆடிக்கொண்டிருக்கும் மஞ்சு அரசாங்கத்தை ஒழித்துத் தீரவேண்டும், அது ஒன்றுதான் நாட்டின் முன்னேற்றத்துக்கு பெரும் தடைகல்லாக இருக்கின்றது" என்ற முடிவுக்கு வந்தார் சன்-யாட்-சன்.