சீனத்தின் குரல்/புரட்சி சங்கம்

விக்கிமூலம் இலிருந்து

புரட்சி சங்கம்

சன்-யாட்-சன் அவர்களால் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட கல்விச் சங்கம், அரசாங்க அனுமதி கிடைக்காத காரணத்தால் புரட்சி சங்கமாக மாறியதையும் முன்பு குறிப்பிட்டிருக்கிறோம். அது நாளடைவில் வளர்ச்சியடைந்து கொமிங்டாங் கட்சி என்று பெயர் பெறுகிறது. இது முழுதிலும் அரசியல், நோக்கங்களையே அடிப்படையாகக் கொண்டிருப்பதால், சமூக சீர்திருத்தச் சங்கம் ஒன்று தேவைப்படுகிறது. சியாங்கே ஷேக்-ஒரு பக்கம் தன் அரசியல் ஆசானுக்குத் துணையாக - கோயிங்டாங் கட்சியை வளர்த்துக்கொண்டு, மற்றோர் பக்கம் 'நவஜீவன்' என்ற பெயரால் ஒரு மறுமலர்ச்சி இயக்கத்தையும் ஆரம்பித்து நடத்திக் கொண்டு வருகின்றார். சமுதாய சீர்திருத்தமும், பழைய கலைகளைத் திருத்தி தற்காலத்துக்கேற்ற முறையில் அமைத்துக் கொள்வதும், விஞ்ஞானத துறையில் முன்னேற்றமடைந்து மக்களுக்கு நல்வாழ்க்கையளிக்க வேண்டுமென்பவைதான் இந்த மறுமலர்ச்சி இயக்கத்தின் ஜீவாதாரமான கொள்கைகளாக இருந்தன. இதை ஷேக் சீன நாடு முழுதும் பரப்பினார்.

1923-ல் கொமிங்டாங் கட்சி இரண்டாவது, புரட்சியை நடத்துகிறது. இந்த புரட்சியில்தான் கம்யூனிஸ்ட் கட்சி கொமிங்டாக் கட்சியோடு ஒத்துழைக்கிறது. அதோடு ஒத்துழைத்தது மட்டிலுமல்ல கொமிங்டாங்கட்சியை வலுப்படுத்துகின்றார்கள் கம்யூனிஸ்ட்வாதிகள்.