உள்ளடக்கத்துக்குச் செல்

சீனத்தின் குரல்/புலி சம்பவம்

விக்கிமூலம் இலிருந்து

புலி சம்பவம்

அந்தப் பெண் ஆராத்துயரத்திலாழ்த்து அழுது கொண்டிருப்பதைக்கண்ட கன்பூஷியஸ் காரணம் வினவ, நடந்ததைச் சொல்லத் தொடங்கி, தானும் தன் பெற்றோர்களும் அவ்வழியே வந்து கொண்டிருந்ததாகவும், ஒரு புலி முதலில் தன் தாயையும் பிறகு தன் தந்தையையும் கொன்றதாகவும், தான் எப்படியோ தப்பித்துக் கொண்டதாகவும் சோகத்தினிடையே சொல்லி முடித்தாள், இதைக்கேட்ட கன்பூஷியஸ், "இவ்வளவு பயங்கர நிகழ்ச்சிகளுக்குப் பிறகும் நீ ஏன் இங்கிருக்கின்றாய். உன்னையும் கொன்றுவிட்டால் என்ன செய்வாய், இதை, நீ சர்க்காருக்கு அறிவித்தாயா?", என்று கேட்கின்றார். "ஆம், அறிவித்தேன், சர்க்கார் என் விண்ணப்பத்தைக் கேட்கவில்லை. இவ்வளவு கொடிய மனம் படைத்த சர்க்காரைவிட இந்த புலி வாழும் காடே நன்றென நினைத்து இங்கே புலம்பிக் கொண்டிருக்கின்றேன்" என்று தன் பரிதாப வரலாற்றைச் சொன்னாள். "ஆம், நீ சொல்வதும் உண்மைதான்." என்று சொல்லி அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு போய் பக்கத்து கிராமத்தில் விட்டு விட்டு தான் டிஸி என்ற நகரத்திற்குப் போய் அங்கு 15 ஆண்டுகள் ரெவின்யூ அதிகாரியாக வேலை பார்த்து தனது 52-வது வயதில் நீதிபதியாக நியமனம் பெறுகிறார். அந்த காலத்தில் அவர் செய்த சில சீர்திருத்தங்களால், நாடு வலிவடைகிறது என்று பொதுவாகச் சொல்லப்பட்டது. அதே நேரத்தில் நாடு பண்டைய நாகரிகத்தையிழந்து அதுவரை அது போற்றிவந்த தாய்மையையும், பெண்கள் குல பெருமையையும் உயிரோடு புதைத்து விட்டான் கன்பூஷியஸ் என்று பலர் தூற்றினார்கள். இந்த இரண்டுவித நிலமைகளுக்கும் சரியான காரணமில்லாலில்லை.