சீனத்தின் குரல்/பெரிய வேலை நிறுத்தம்
1925 மே திங்களில் ஹாங்காங்கில் 15 மாதங்கள் ஒரு பெரிய வேலை நிறுத்தம் நடைபெறுகிறது, அதில் பிரெஞ்சு பிரிட்டிஷ் சாமான்களை வாங்காமல் பகிஷ்கரித்தனர். இந்த வேலை நிறுத்தத்தை முன் நின்று வெற்றிகரமாக நடத்தியவர்கள் கம்யூனிஸ்டுகள், இது ஷேக்குக்குப் பிடிக்கவில்லை. யார் செய்தாலும் நாட்டுக்கு நன்மை கிடைத்தால் சரி, என்ற அளவில் தாராள மனப்பான்மை நாகரிக மிக்க நாடுகளுக்கே இன்னும் வரவில்லையே. சமீப காலம் வரையில் அரசியல் காற்றே அடிக்காத சீனத்துக்கு மாத்திரம் எளிதில் வந்துவிடுமா? அந்த மண்ணில் தோன்றியவர்தானே - ஷேக், ஆகவே இதைப் போன்ற வேலைகளை யாரோ நடத்திவைக்கின்றார்கள் என்று நினைத்துக் கொண்டார். இந்த எண்ணம் நாளடைவில் வலுவடைந்து - ஷேக் ஒரு பக்கமும், கம்யூனிஸ்டுகள் அவருக்கு எதிராகவும் நின்று பகைத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இவர்கள் மேல் கொண்ட ஆத்திரத்தின் விளைவாக, காண்டனில் அமைக்கப்பட்ட சர்க்கார் முறையே அவருக்குப் பிடிக்காமல் பார்லிமெண்டரி முறைப்படி ஜனநாயக சர்க்காரை அமைக்கலாமா என்ற முடிவுக்கும் வந்துவிட்டார். இந்தக் கொள்கை இருதரத்தாருக்கும் இருந்த மன வேற்றுமையை இன்னும் அதிகமாக்கிற்று. அன்று முதல் ஷேக்கின் பேச்சில், எழுத்தில், பிரசங்கத்தில், கம்யூனிஸ்டுகள் என்பதற்குப் பதில் கொள்ளைக்காரர்கள் என்றே உச்சரிக்க ஆரம்பித்தார். தலைமைப் பதவி என்றாலே தலைக்கிறுக்கு ஏறி மாற்றுக் கட்சிகளின் உண்மையான பெயர்களை இட்டழைக்காமல் வேறு பெயரை இட்டழைக்கும் சுயநலத் தலைவர்கள் இல்லையா அந்த நோய் ஷேக்குக்கும் பிடித்துக் கொண்டது.
ஒரு சமயம் இந்த சர்ச்சைகளில் ஷேக் இறங்காமல் முன்னாடியே ஏற்பட்ட கூட்டுறவைப் பலப்படுத்தி ஜப்பான் மேல் படையெடுத்திருந்தால் நன்மையாக இருந்திருக்குமோ என்ற அளவுக்கு வந்துவிட்டது அன்றைய சினத்தின் அரசியல் நிலை.