சீனத்தின் குரல்/மறு மணம்
சன்னின் முதல் மனைவி இறந்து விட்டதால், 1915-ல் தன்னிடம் ஷாங்காயில் காரியதரிசியாக வேலை பார்த்தவளும், சியாங்-கே- ஷேக்கின் மனைவிக்கு மூத்தவளுமான ஷங்-லிங்-சிங் என்பவளை மறுமணம் செய்து கொண்டார். இதன் பிறகு பொதுநலத் தொண்டர்களுக்குக் கிடைக்க வேண்டிய குடல் நோய்தான் சன்யாட்சன்னுக்கு சன்மானமாகச் கிடைக்கிறது. கடைசி காலத்தைக் காட்டும். அறிகுறி. நாட்டின் நோயைப் போக்கிய இவரே ஒரு டாக்டர்தான். எனினும் தன் நோயை ஏன் போக்கிக்கொள்ளவில்லை என்று கேட்க முடியும், சர்க்காரின் பயங்கரமான கட்டளைகளுக்கெல்லாம் அடிபணியாதவர், கண்டத்துக்குக் கண்டம் கடல் தாண்டிச் சென்றவர், குடல் நோயிலிருந்து குணமடைய முடியவில்லை. நெருப்போடு விளையாடியவர்கள், பீரங்கியின் வாயில் மண்ணையடித்தவர்கள், நீரை எதிர்த்துப் போராடியவர்கள் மற்ற எவராயிருந்தாலும் நோயோடு போராட முடிவதில்லை. அதிலும் அந்த நோய்தான் தனக்கு நிரந்தரமான ஓய்வளிக்கப்போகின்றதென்று தெரிந்துவிட்டால் அதை எதிர்த்துப் போராடுவது வீண் வேலையாகும். ஆகவே அதை நன்றாக உணர்ந்த சன் படுக்கையில் சாய்ந்துவிட்டார். சிதைய இருந்த சீனத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் சிறகடித்தப் பறவை போல் பறந்து, பங்கப்பட்டிருந்த சீன மக்களை சிங்க ஏறுகளாக்கிய சன்-யாட்-சன், சிறகொடிந்த பறவை போல் படுக்கையில் படுத்துக் கொண்டார்.
சீனத்தின் செங்கதிரோன் அஸ்தமிக்கும் நேரம் வந்து விட்டது. இனி உதயமே இல்லையா உத்தமர்கள் ஆயிரக்கணக்காக அன்றாடம் கண்ணீர் சொரிந்தனர். குடல் நோய் நாளுக்கு நாள் அதிகம், ஒரு வாரத்துக்கு முன்புதான் எழுந்து உட்கார்ந்தார். அதற்கடுத்த நாள் ஆள் தூக்கினான், ஐந்தாம் நாள் உணவு ஒரே வேளை. நான்காம் நாள் அதுவுமில்லை, மூன்றாம் நாள் மயக்கம், ஆட்கள் அடையாளம் தெரியவில்லை, நேற்று பேச்சிருந்தது, இன்று அதுவும் நின்று நினைவும் மாறிவிட்டது. கண்களைச் சுழல் விளக்காக்கினார். காலத்தின் கோர வாயில் குதித்துவிட்டார் என்று 1925-ம் ஆண்டு மார்ச்சு திங்கள் பனிரெண்டாம் நாள் சீன மக்கள் அழுது புலம்பிவிட்டனர்.