சூரிய வேர்வை
சூரிய வேர்வை
மேலாண்மை. பொன்னுச்சாமி
திருவரசு புத்தகம் நிலையம்
23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை – 600 017.
- முதற் பதிப்பு : நவம்பர், 2008
- © உரிமை: ஆசிரியருக்கு
- பதிப்பாசிரியர் : வானதி திருநாவுக்கரசு
- விலை: ரூ. 80–00
❖ Title : SOORIYA VERVAI ❖ Author : Melanmai. PONNUSAMY ❖ Language : Tamil ❖ Subject : Short Stories ❖ Edition : First Edition, November, 2008 ❖ Pages : 234 ❖ Published by : THIRUVARASU PUTHAKA NILAYAM
23, Deenadayalu Street,
Thyagaraya Nagar,
Chennai – 600017.
✆ 24342810 / 24310769❖ Price : Rs. 80-00
- Laser typeset at: Amirtha Graphics, Chenai-94. ph.: 24840046
Printed at: NOVENA OFFSET PRINTING CO., Chennai-5 ✆ 28446166, 28446891
- சமர்ப்பணம்
- எனது பாலக வயசில் ஒரு வீட்டு முற்றத்தில் தினந்தோறும் கூடுகிற அந்திநேரப் பாலகர் சபையில் வகைவகையான கணக்கற்ற ராஜாராணி கதைகள் சொல்லி எனது கற்பனை வளத்தை வளப்படுத்தி அடர்த்தி செய்த அமரர் அருஞ்சுனை (எனது ‘பாட்டையா’ சிறுகதையின் நாயகன்) அவர்கள், என் பிற்பகுதி பாலக வயசில் எனக்கு வண்டி வண்டியாகக் கதைகள் சொல்லி, கிணற்று நீரில் நீச்சலும் கற்றுத்தந்து என்னை வளப்படுத்திய அமரர் செ.மு. துரைச்சாமி அவர்கள் நினைவுச் சுவடுகளுக்கு...
முன்னுரை
அணு–சூரியன்– உழவன்
ஆதியிலும் ஆதியானதும், ஆதிக்கெல்லாம் பழைமையானதும், மனித உழைப்பு. கலை, கவிதை, சிற்பம், கலாசாரம், விஞ்ஞானம், கட்டிட நாகரிகம், கணினி, ஆலயங்கள் என்று சகலமும் மனித உழைப்பின் வளர்முகங்கள்.
சூரியனைப் போன்று மூலாதார முதன்மையானது வேர்வை. வேர்வை உலகப் பேரழகுகளின் மூல ஊற்று. அணுக்களின் திரட்சி பொருட்கள் என்றால், வேர்வைத் துளிகளின் திரட்சி, பிரபஞ்சப் பேரழகு. கோடானுகோடி கால நதிப்பிரவாகப் பெருக்கில் உலகத்தின் அகமும் முகமும் உயிரும் வளர்ந்து வளர்ந்து அழகு பெற்றிருப்பது, மனித உழைப்பு எனும் மகத்தான சிருஷ்டிப்பாற்றலால் தான்.
கையால் கல்லை உடைத்து, கூர்மையாக்கி கல்லாயுதம் படைத்ததும், கல்லாயுதங்களால் வேட்டையாடப்பட்ட மிருகங்களின் மாமிசச் சதையின் ரத்தவரிகளை பச்சையாக கடித்துக் குதறியதும், வேட்டையாடப்பட்ட மிருகங்களை வசக்கி, பழக்கி, கால்நடையாக்கிக் கொண்டதும், கால்நடை மந்தைகளை காப்பாற்ற புற்காடு தேடி இடம் பெயர்ந்ததும், பெருகிய மந்தைகளின் உயிர் காக்க புல் விதைகளை உணவாக்கியதும், உணவை விளைவிக்கிற பயிர் விவசாயம் பிறந்ததும்... மனித உழைப்பினால்தான்.
காட்டுக்குகையில் ஒளிந்திருந்த காலத்திலிருந்து, நதிக்கரையோரங்களில் கூடாரமடித்த மனித சமூகம், ஊராக, நகரமாக, பெருநகரமாகப் பல்கிப் பெருகி உயர்ந்ததும் மனித உழைப்பினால்தான்.
கடவுளை விடவும் உன்னதமான மனித உழைப்பு, வரலாற்றையும், இலக்கியக்காவியங்களையும், சக்கரவர்த்திகளையும், மன்னர்களையும், ஆலைமுதலாளிகளையும், கணினிப் பிரபஞ்சவிரிவையும் படைத்திருக்கிறது.
அந்த மனித உழைப்பு ஆராதிக்கப்படுகிறதா? போற்றப்படுகிறதா? கடவுளைப் போல வணங்கப்படுகிறதா? கௌரவிக்கப்படுகிறதா? வேர்வையும், உழைப்பையும் தருகிற உழைப்பாளிகளும், உழவர்களும் உயர்த்தப்படுகிறார்களா?
“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்– வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்”
என்ற மகாகவி பாரதி மிகச்சரியான தீர்ப்பு எழுதினார். அந்தத் தீர்ப்பு, நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? சமூகத்தின் நடைமுறை நனவாக்கப்பட்டிருக்கிறதா?
இல்லை... இல்லை... இல்லை... இல்லவே இல்லை.
உழைப்பும் உழவும் காலம்காலமாக அவமதிக்கப்பட்டு வந்திருக்கிறது. அடிமைப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. விவசாயப் பொருளாதார நாடான இந்தியாவே விவசாயத்தின் முதுகெலும்பை முறித்துக் கொண்டிருக்கிறது.
உழைப்பாளிகளும் உழவர்களும் வறுமையில் ஆழ்த்தப்பட்டிருக்கிறார்கள். ஏழ்மையில் துயரப்படும்படி வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள்.
வாய்க்கு ருசியான உணவு கூட இல்லாமல், உழவுமக்கள் சீரழிவது... உலக மகா முரண்.
தாது வருஷப் பஞ்சம் போன்ற கொடிய பயங்கரமான பஞ்சம், பசி, பட்டினி, வறட்சி, வெள்ளச் சேதாரங்களையெல்லாம் மனித உழைப்பால் வென்று மீண்டு வந்த உழவு மக்கள், இப்போதைய உலகமயப் பொருளாதாரச் சீரழிவுச் சூறாவளி தாளாமல் தத்தளிக்கின்றனர். தற்கொலைகள் நிகழ்கிற பயங்கர அவலம்.
இத்தனைக்கும் மத்தியில் வாழ்க்கையுடன் எதிர்த்து நின்று மல்லுக்கட்டுகிற மன ஆற்றலை பண்பாட்டு வடிவக் கொண்டாட்டங்களில் பெறுகின்றனர்.
அவர்களே கட்டிய சிறிய கோவில்கள். அவர்களே அமரவைத்த அம்மனின் வடிவங்கள். அவர்களே சாட்டிய திருவிழா. அவர்களையே சுழற்றியடித்து கும்மாளம் போட வைக்கிற அதிசயம்.
கிராமத்து மக்களின் முடிவில்லாத் துயரங்கள், துன்பங்களை திருவிழா கொண்டாட்ட மகிழ்வில் சற்றே மறக்கின்றனர். ‘தீரும்’ என்ற நம்பிக்கையை உருவாக்கிக் கொள்கின்றனர்.
விளையாட்டு, சிறுபிள்ளைகளின் மனசுக்கும் உடம்புக்கும் உல்லாசம் தருவதைப்போல, திருவிழா பண்பாட்டுக் கொண்டாட்டங்கள் கிராமத்து ஏழை எளிய உழைப்பாளி மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன.
அந்த மகிழ்ச்சியைப் பெறுவதற்கு அவர்கள் படுகிற பாடுகளும், அல்லாடல்களும் கணக்கற்ற சோகம் நிறைந்தவை.
உழைப்பும், மானுடமும், உழவனும், உழவும் பலதளங்களில் அவமதிக்கப்படுகின்றனர். துயரத்திற்கு உள்ளாகி வருகின்றனர். படைத்ததையெல்லாம் செல்வந்தர்களுக்கு படையலாக்கி விட்டு, துன்பத்தையும் சோகத்தையும், ஏழ்மையையும், வறுமையையும் அனுபவிக்கின்றனர்.
சமகாலத்துச் சிறுகதைகளில் விவசாயமக்களின் உள்–வெளி–வாழ்வின் அவலங்களை யாரும் பிரதிபலிப்பதில்லை. மத்திய தரவர்க்க வாழ்க்கைச் சூழலையே கதைப்பொருளாக்கி கதைகள் வருகின்றன.
கிராமங்களும், விவசாயிகளும், விவசாயத். தொழிலாளர்களும், அரசாங்கத்தாலும், சமூகத்தாலும் மட்டும் புறக்கணிக்கப்படுவதில்லை. இலக்கியவாதிகளாலும் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தப்படுகின்றனர்.
நான் கிராமத்திலேயே பிறந்து கிராமத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிற எழுத்தாளன். கிராமத்து வாழ்வின் அவலங்களை மார்க்ஸீய மனசுடன் நோக்குகிறவன்.
சகலராலும் கைவிடப்பட்ட கிராமத்து உழைப்பாளி மக்களையும், கிராமத்து முரண்களையும் பற்றி நான் நெருங்கி நின்று மனசால் உணர்ந்து, மொழியால் உணர்த்திக்கொண்டிருக்கிறேன் என்பதில் எனக்கொரு நியாயமான நினைவுப்பெருமிதம். ஆத்ம மகிழ்வு.
கிராமங்களைப் பற்றி எழுதுவதிலும் ஒருவகையுண்டு. பதினேழு வயதுவரை கிராமத்தில் வாழ்ந்த நினைவுகளை மட்டும் மூலதனமாக வைத்துக் கொண்டு... கல்லூரி, உத்யோகம், கல்யாணம் என்று நகரவாழ்வில் உறைந்து போய் விட்டவர்கள் எழுதுகிற கிராமத்திலக்கியம்.
சற்றே பழைய காலத்து கிராம வாழ்க்கைதாம் இம்மாதிரியான படைப்புகளில் பதிவாகும். உயிர்கலந்த உணர்வுப் பதிவாகாது அது.
கிராமங்களிலேயே வாழ்ந்து, கிராம வாழ்க்கையின் இன்றைய நிலவரங்களுடன் ஒன்றிக்கலந்து பழகி, துயரப்பட்ட ஈரமனச்சிந்தனையுடன் இன்றைய கிராம வாழ்வின் அவலத்தையும், போராட்டத்தையும் அதற்கேயுரிய புத்தம்புதிய வெதுவெதுப்புடன் எழுதுகிற பாக்கியம் எனக்குக் கிட்டியிருக்கிறது.
கிராம மக்களின் மொழியைப்போலவே எனது கதைகளும் எளிமையானவை. இயல்பானவை. உணர்ச்சிமயமானவை.
எளிமையான மொழியில் சமூக முரணின் ஆழத்தை உணர்த்துகிற கதைகள். கிராமத்து மனிதர்களின் பண்புகளும், மன ஈரங்களும், கோப வன்மங்களும், உழைப்பு மூர்க்கமும், துயர அவலங்களும் கதைகளில் உயிர்ப்புடன் துடிதுடிக்கின்றன.
இத்தொகுப்பிலுள்ள எல்லாச் சிறுகதைகளும் எனக்குப் பிடித்தமானவை. ‘இச்சிமரம்’ ரொம்ப வித்தியாசமான சிறப்புச் சிறுகதை. ‘பூப்பாதையும் தார்ரோடும்’ ரொம்பச் சிறப்பான கதை. யாரும் தொடாத புதிய களம்.
‘கொண்டாட்டம்,’ ‘கோழிகூவியும்’ இரண்டு சிறுகதைகளும் தனித்துவமான சிறப்புகளைக் கொண்டவை.
இரண்டு சிறுகதைகளிலும் பெண், குடும்ப நிர்வாகம் செய்கின்றாள். ‘பெண் தலைமையேற்கிற குடும்பங்கள் உருப்படாது’ என்கிற ஒட்டுமொத்த சமூகத்தின் பொதுப் புத்திக்கு எதிரான கலகத்தை நிகழ்த்துகின்றன இக்கதைகள்.
‘வால்கா முதல் கங்கை வரை’ என்ற ராகுல்ஜியின் மகத்தான நூலை வாசித்தவனுக்கு... ஆதிகாலத்துக் கற்காலத்து வாழ்க்கையில் பெண்ணே சமூகத்தின் தலைவியாகத் திகழ்ந்ததையும், தாய்வழிச் சமூகம் நிலவியது என்பதையும் நிச்சயம் அறிந்திருக்க முடியும்.
கிராமத்து ஏழை உழைப்பாளி குடும்பங்களில் பெண்தலைமை இயல்பாகவே நிலவுகின்றது என்பது, மத்தியதரவர்க்கத்து வாசகர்களுக்கு அதிர்ச்சி தரத்தக்க சத்தியம். அன்றாடம் கிராமங்களில் கண்டுணர முடிகிற சத்தியம்.
அந்த சத்தியத்தை இந்த இருகதைகளிலும் உரத்துச் சொல்லியிருக்கிறேன். சிறுகதை இலக்கிய மரபுக்கே மாறான குரல் இது.
‘அன்பு விதை’ ரொம்பப் பிடித்தமான சிறுகதை. ‘இஸ்லாமியர்கள் எல்லோரையும் தீவிரவாதிகள்’ என்று எண்ணத்தக்க விதத்தில் அமெரிக்காவும், ஊடகங்களும் பிரசாரம் செய்கிற சமகால கொடிய சூழலுக்கு எதிரான எனது குரல். ஒற்றைக்குரல்.
இலக்கியவாதிகளின் கற்றைக்குரல் இதைத் தொடர்ந்து வரவேண்டியது, காலத்தின் பசி.
மற்ற சிறுகதைகளும் அதற்குரிய முக்கியத்துவமும் தனிச்சிறப்பும் பெற்றிருக்கின்றன.
இத்தொகுப்புக்கான பொதுத்தலைப்பை தேர்வு செய்வதற்குள் ‘ஆத்தாடி, அம்மாடி’ என்றாகி விட்டது. ரொம்பவே திண்டாடிவிட்டேன்.
‘சூரிய வேர்வை’ என்ற தலைப்பு சரிதானா என்ற சந்தேகம் இன்னமும் உறுத்துகிறது.
இத்தொகுப்பிலுள்ள சிறகதைகளை பிரசுரித்து, கௌரவம் செய்த எல்லா பத்திரிகைகளுக்கும், அதன் ஆசிரியர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
இத்தொகுப்புக்கான கதைகள் வந்த பிரதிகளைப் பாதுகாத்து, சேகரித்து, ஒழுங்குபடுத்தி வைத்த எனது மகள் ராஜ அன்னம் எம்.எஸ்ஸி., எம்.ஃபில் (கணிதம்) பாராட்டுக்குரியவள். இத்தொகுப்பை உருவாக்குகிற கடினமுயற்சிக்கு என்னைத் தூண்டி, சுடரச்செய்த எனது மூத்தமகள் வைகறைச் செல்வியும் பாராட்டுக்குரியவள். எனது இலக்கியப் பயணத்திற்கு ஆதாரபலமாகவும் ஆணி வேராகவும் திகழ்ந்து வருகிற எனது தம்பி கரிகாலன் என்றென்றும் நன்றிக்குரியவன்.
எனது இந்த நூலை வெளியிடுகிற திருவரசு புத்தக நிலையத்தாருக்கும், பதிப்பாசிரியர் ‘வெற்றிப்படிகள்’ புகழ் ஐயா ‘வானதி’ திருநாவுக்கரசு அவர்களுக்கும், கங்கை புத்தக நிலையம் பொறுப்பாளர் திரு. ராமு அவர்களுக்கும், அட்டை ஓவியம் அமைத்துத்தந்த ஓவியர் ஸ்யாம் அவர்களுக்கும் எனது பாசமிகு நன்றிகள் உரித்தாகுக.
இனி... நீங்களும் ‘சூரிய வேர்வை’யும்...
வாசித்து முடித்தபிறகு மௌனத்தில் ஆழ்ந்துவிட வேண்டாம். வாசித்தவுடன் எழுகிற மன உணர்வுகளை ஓர் அஞ்சலட்டையில் எழுதியனுப்புங்கள், தயவு செய்து.
உங்களது பாராட்டு வார்த்தைகள், என்னை உற்சாகப்படுத்தி என் பேனாவுக்கு இன்னும் மையூற்றும், கண்டுணர்ந்து நீங்கள் உணர்த்துகிற குறைகளும் என்னை நெறிப்படுத்தி இன்னும் கூர்மையாக்கும். இரண்டுமே இலக்கிய வளர்ச்சிக்கு உரமாகும். நன்றி!
மேலாண்மறைநாடு
626127
இராஜபாளையம் வழி
விருதுநகர் மாவட்டம்
04562/271233
9942610700
என்றும் உங்கள்
மேலாண்மை.
பொன்னுச்சாமி
| மானுடம் வெல்லும் | சிறுகதைத் தொகுப்பு | |
| சிபிகள் | ” | |
| பூக்காத மாலை | ” | |
| மானுடப் பிரவாகம் | ” | |
| பூச்சுமை | ” | |
| தாய்மதி | ” | |
| காகிதம் | ” | |
| கணக்கு | ” | |
| விரல் | ” | |
| உயிர்காற்று | ” | |
| என் கனா | ” | |
| மனப்பூ | ” | |
| ஒருமாலை பூத்துவரும் | ” | |
| அன்பூவாசம் | ” | |
| வெண்பூமனம் | ” | |
| மானாவாரிப்பூ | ” | |
| ராசாத்தி | ” | |
| மின்சாரப்பூ | ” | |
| பூமனச்சுனை | ” | |
| பூமாயன் | ” | |
| பூக்கும் மாலை | ” | |
| கோடுகள் | குறுநாவல் தொகுப்பு | |
| தழும்பு | ” | |
| மரம் | ” | |
| ஈஸ்வர | ” | |
| பாசத் தீ | ” | |
| முற்றுகை | நாவல் | |
| இனி | ” | |
| அச்சமே நரகம் | ” | |
| ஆகாயச் சிறகுகள் | ” | |
| ஊர் மண் | ” | |
| முழுநிலா | ” | |
| சிறுகதைப் படைப்பின் உள்விவகாரம் | (இலக்கியக் கட்டுரை நூல்) |
உள்ளடக்கம்
பக்கம்
| | 15 |
| | 27 |
| | 37 |
| | 49 |
| | 61 |
| | 73 |
| | 86 |
| | 97 |
| | 110 |
| | 122 |
| | 134 |
| | 146 |
| | 158 |
| | 169 |
| | 178 |
| | 190 |
| | 193 |
| | 201 |
| | 214 |