சொன்னால் நம்பமாட்டீர்கள்/முதல் காங்கிரஸ் கூட்டம்
நான் ‘மைக்’ இல்லாத காலத்தில் மேடையில் பேசத் துவங்கியவன். நான் காங்கிரஸ் கூட்டங்களில் பேச ஆரம்பித்த காலங்களில் கூட்டம் நடத்த யாரும் முன் வரமாட்டார்கள். அச்சகத்தில் துண்டுப்பிரசுரம் அச்சடித்துக் கொடுக்கமாட்டார்கள். “காங்கிரஸ் கூட்டம் என்று” அச்சடித்தால் ஒரு வேளை போலீஸ் தொந்தரவு ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்ற பயம்தான் காரணம்!
முதன் முதலில் நான் பேசிய காங்கிரஸ், கூட்டம் என் நினைவுக்கு வருகிறது. கூட்டம் நடத்துவதற்கு அப்போது நான் கையாண்ட முறை, கழுத்தில் ஒரு தமுக்கைக் கட்டிக்கொண்டு தெருத் தெருவாகச் சென்று தமுக்கடித்து, “இன்று மாலை ஜவஹர் மைதானத்தில் மாபெரும் காங்கிரஸ் பொதுக்கூட்டம், நானே பேசுவேன் அனைவரும் வருக” என்று உரக்கச் சத்தம் போட்டுக் கொண்டே சென்றேன்.
மாலையில் ஜவ்ஹர்மைதானம் சென்றால் மேடை இல்லை. ‘மைக்’ இல்லை எதுவுமே இல்லை. அதற்காக கொஞ்சமும் மனம் தளராமல் பக்கத்திலிருக்கும் பெட்டிக்கடையிலுள்ள ஒரு பெஞ்சைத் தூக்கிப் போட்டு, ஒரு கம்பை ஊன்றி அதில் ஒரு அரிக்கேன் விளக்கை மாட்டி, காங்கிரஸ் கொடியை ஒரு பக்கம் நட்டு, பெஞ்சிமேல் ஏறி நின்று, “அன்பார்ந்த சகோதர சகோதரிகளே” என்று உரக்கப் பேச ஆரம்பித்தேன். எதிரில் பிரம்மாண்டமான கூட்டமாக ஏழேபேர் அமைதியின் சொரூபமாக அமர்ந்திருந்தார்கள். அனைவரும் எனது நெருங்கிய உறவினர்கள், சொந்தக்காரப் பையன் என்ன பேசப் போகிறான் என்று பார்க்க வந்தவர்கள்.
நானும் அவர்களைப் பார்த்துக் கொண்டே நம் நாட்டை வெள்ளைக்காரன் ஆள்கிறானே உங்களுக்கு வெட்கமில்லையா, ரோஷமில்லையா, மானமில்லையா என்று அடுக்கிக் கொண்டே போனேன். அந்தப் பக்கம் இந்தப்பக்கம் திரும்பிக்கூடப் பார்க்க வில்லை.
அந்த ஏழு பேரைப் பார்த்தே பேசிக் கொண்டிருந்தேன். கொஞ்சம் நான் அசந்தாலும் ஏழு பேரில் யாராவது எழுந்து போய்விடுவார்கள். ஆகவேதான் என் பார்வை அவர்கள் மேலே இருந்தது.
சொற்பொழிவின் மத்தியில் போலீஸ் ஏட்டய்யாவின் சிகப்புத் தொப்பி தூரத்தில் தெரிந்தது. ஏட்டையா வருவது தெரிந்ததும் கூட்டத்திலிருந்த ஏழுபேரில் நால்வர் உலக “ரெக்கார்டை” முறியடிக்கும் அளவிற்கு “லாங் ஜம்ப்” செய்து பக்கத்திலிருக்கும் வெற்றிலைப்பாக்குக் கடையில் குதித்து ஏதோ வெற்றிலை போட வந்தவர்கள்போல் பாவலா செய்து கொண்டு நின்றார்கள்.
பாக்கி மூவரும் ஓடவும் முடியாமல் உட்காரவும் முடியாமல் திரிசங்கு சொர்க்கம்போல் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். அந்நாளில் காங்கிரஸ் கூட்டங்களுக்கு வரவே மக்கள் அப்படிப் பயந்து கொண்டிருந்தார்கள்.
ஏட்டய்யா ஜம்மென்று மீசையை முறுக்கிவிட்டுக்கொண்டு என்முன்னால் வந்து நின்று மிக மரியாதையாக, டேய் நிறுத்துடா என்றார்.
“ஏன்?” என்றேன்.
“144” என்றார்
“உத்தரவு எங்கே?” என்றேன்.
ஏட்டய்யாவை நான் இவ்வளவு தூரம் எதிர்த்துப் பேசியதும் கேள்வி கேட்டதும் சுற்றி நின்ற் மக்களுக்கு ஒரு நடுக்கத்தையே கொடுத்தது. ஏனென்றால், அக்காலத்தில் போலீஸ் ஏட்டய்யா என்றால் எல்லோரும் நடுங்குவார்கள். அக்கால ஏட்டுகளுக்கு நிறைய அதிகாரம் இருந்தது. மீசையும் நிறைய இருந்தது. இக்கால ஏட்டுகளுக்கு மீசையும், சுருக்கம், அதிகாரமும் சுருக்கம். ஒரு கிராமத்திற்கு ஏட்டு வந்தால் கிராமமே நடுங்கும். வெள்ளைக்காரன் தன் அதிகாரத்தைச் சாமர்த்தியமாக அப்படி நடத்திக் கொண்டிருந்தான் நம் மக்களின் அன்றைய நிலை பற்றி மகாகவி பாரதியார் கூறினார்.
"சிப்பாயை கண்டு அஞ்சுவார். ஊர்ச்
சேவகன் வருதல் கண்டு மனம்பதைப்பார்;
துப்பாக்கிக் கொண்டு ஒருவன்-வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்;
அப்பால் எவனோ செல்வான்-அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார்;
எப்போதும் கைகட்டுவார்-இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கி நடப்பார்
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்.”
இது வெறும் பாரதியாரின் கவிதை அல்ல அவர் கதறி அழுதது. பாரதியாரின் இந்தக் கூற்றை அன்று நான் நேரில் கண்டேன். சுற்றி நின்ற மக்கள் பயந்து செத்துக் கொண்டிருந்தார்கள். உறவினர்கள் என் வாயை மூடும்படி சைகை காட்டினார்கள்.
இதற்குள் இன்ஸ்பெக்டர் அங்கு வந்து விட்டார். ஏட்டய்யாவிற்கே அந்தப் பயம் என்றால், இன்ஸ்பெக்டர் வந்தால் கேட்கவா வேண்டும்? அந்தக் காலத்து இன்ஸ்பெக்டர் சரிகை டர்பன் வைத்திருப்பார். அட்டகாசத்தின் மறுபெயர் இன்ஸ்பெக்டர் எனலாம்.
இன்ஸ்பெக்டரைக் கண்டதும் ஏட்டய்யா நாய்க்குட்டி போலக் குழைந்தார். இன்ஸ்பெக்டர் மிடுக்காக, ஏட்டய்யா வையும் என்னையும் சேர்த்து மரியாதை யாக என்னடா சொல்றான்? என்றார்.
“144 உத்தரவைக் கேட்கிறான்” என்றார் ஏட்டு
“கேட்டால் கொடுக்க வேண்டியதைக் கொடு” என்றார் இன்ஸ்பெக்டர்.
ஏட்டய்யா “உத்தரவை"க் கொடுத்தார் என்றா நினைக் கிறீர்கள்?
பெஞ்சிமேலே ஏறி என் பிடரியில் ஓங்கி ஒரு அறை கொடுத்தார். எதிர்பாராத இந்த அடியால் பெஞ்சிலிருந்து தரையில் குப்புற விழுந்தேன்.
உடனே அங்கு நின்ற நாலைந்து போலீஸ்காரர்களும், “ஐயோ பெரிய இடத்துப் பையன் கீழே விழுந்து விட்டானே” என்று துக்கி விட்டார்கள் என்றா நினைக்கிறீர்கள்? அவர்கள் சிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் போலவும் நினைத்து என்னை காலால் உதைத்துத் தூக்கிவிட்டார்கள்.
இவ்வளவு நடந்தும் “ஏன்” என்று கேட்பார் யாரும் இல்லை. அங்கு நின்ற ஊர்மக்கள், உறவினர்கள் அனைவரும் ஊமையராய், செவிடர்களாய்-குருடர்களாய் நின்று கொண்டிருந்தார்கள்.
போலீசார் என் கையில் விலங்கை மாட்டி ஒரு சங்கிலியால் அதைப் பிணைத்து நாயை இழுத்துக் கொண்டு செல்வதுபோல் என்னை கொண்டு சென்றார்கள். அப்போது அந்த இன்ஸ்பெக்டர் “புண்யவான்” சொன்னார்.
இவனைக்கடைவீதி வழியாக நாலுபேர் பார்க்க இழுத்துச் செல்லுங்கள். அப்பொழுதுதான் ஊரில் மற்றவர்களுக்கும் பயம் இருக்கும். இந்த மாதிரி இனி எந்தப் பயலும் காங்கிரஸ் கீங்கிரஸ் என்று வாலாட்ட மாட்டான் என்று திருவாய் மலர்ந்தருளினார்.
பின்னர் போலீஸ் ஸ்டேசனுக்கு கூட்டிச் சென்று என்னை எச்சரிக்கை செய்து விடுதலை செய்து விட்டார்கள். இந்தச் சம்பவத்தின்மூலம் என்னைப் பற்றி ஊரில் பலருக்குத் தெரிய ஆரம்பித்தது. பலர் இதைப் பற்றி ரகசியமாகப் பேசினார்கள். சிலர் தைரியமாக வெளிப்படையாகவும் பேசினார்கள்.
இதற்குப் பிறகு சில இளைஞர்கள் என்னுடன் நட்புக் கொண்டார்கள். அவர்களும் கதர் கட்ட ஆரம்பித்தார்கள்.
சொன்னால் நம்பமாட்டீர்கள் என் முதல் கூட்டம் ஏழு பேரைவைத்து ஆரம்பித்தேன். அதுவே பின்னர் ஏழுநூறாயிற்று. ஏழு ஆயிரமாயிற்று. இப்படி என் அனுபவத்தில் எழுபதாயிரம் மக்கள் கூடிய கூட்டத்திலும் நான் பேசியிருக்கிறேன்.