தந்தை பெரியார், கருணானந்தம்/005-021

விக்கிமூலம் இலிருந்து


 
3. மணந்தார்
இல்லறமாகிய நல்லறம் மேற் கொள்ளல் - வாழ்க்கைத் துணையாய் வந்து வரலாறு படைத்த வீரப் பெருமாட்டி - பெரியாரின் முதல் ஆறாண்டு மணவாழ்வு - 1899 முதல் 1904 வரை.

முரட்டுத்தனமாய்த் துள்ளித் திரிந்து, மிரட்டி வருகின்ற காளை மாட்டுக்கு, மூக்கணாங்கயிறு மாட்டுவது போலத், துடுக்கு மிகுந்த பிள்ளையை அடக்கிட, இராமசாமிக்கு மணம் பேச முனைந்தனர், வெங்கட்ட நாயக்கரும் சின்னத்தாயம்மாளும். வயதோ பத்தொன்பது; பிறந்ததோ செல்வந்தர் வீட்டில்; நண்பர்களோ, எதற்குந் துணிந்தவர்கள்; சுபாவமோ. கட்டுப்பாடற்றது! இந்தச் சூழ்நிலையில் இராமசாமியின் நாட்டம் விலைமாதர் இல்லங்களை நோக்கிச் செல்லத் தொடங்கிற்று எனப் பெற்றோர் கேள்வியுற்றபின் வாளா இருப்பதோ? செல்வச் செருக்கில் செம்மாந்து நிற்கும் தமது செழுமைக்கேற்ற நல்வளமை நிறைந்த இடத்தில், இளமையும் எழிலும் பொருந்திய பெண் கிடைக்குமா, என உறவினர்க்கெல்லாம் தூது விடுத்தனர்.

பெற்றோர் பார்த்து யாரை யாருக்குக் கட்டி வைக்கிறார்களோ, வெட்டிப் பேசாமல், அட்டியின்றி அதனை ஏற்று, ஒட்டிப் போகும் பண்பாடும் பழக்கமும் நிலவி வந்த குடும்பம்; காலமோ இருபதாம் நூற்றாண்டின் விடிவெள்ளிகூட முளைக்காத நேரம்! இந்தச் சுற்றுச் சார்பில் வளர்ந்த பிள்ளையாயினும், இராமசாமியின் போக்கும் நோக்கும் தனித்தன்மை பெற்றவை அன்றோ? எனவேதான் தாய் தந்தையரின் விருப்பத்துக்கு முரண்பட்டுத் தமக்கு வேறொரு பெண்மீது நாட்டமென்றும், மணந்தால் அந்தப் பெண்ணை மணப்பதாகவும் உறுதியாகக் கூறிவிட்டார் இராமசாமி! பெற்றோரின் கற்பனைக் கோட்டை தகர்ந்து துகளாயிற்று. 'சரி, வேறு வழியில்லை; இந்தப் பிள்ளையாண்டான் சொந்த விருப்பத்தின்படியே நடப்பான்; சொன்னால் கேட்க மாட்டான்! யார் அந்தப் பெண் பாவை?' என்று விசாரித்தனர் பெற்றோர்.

சின்னத்தாயம்மையாரின் தம்பி உறவுடைய சேலம் தாதம்பட்டி ஹெட்கான்ஸ்டபிள் ரங்கசாமி நாயக்கருக்கு மனைவி பொன்னுத் தாயம்மாள் மூலமாக தேவராஜன் என்ற ஒரு மகன், முத்தம்மாள், நாகம்மையார் இரு பெண்மக்கள். அவர்களில் இளைய பெண் நாகம்மை பதின்மூன்றாண்டு பிராயத்தில் இருந்தது. அதற்கு இராமசாமியார் மீது உள்ளுறக் காதல். சமுதாயத்தில் நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சார்ந்த அந்தப் பெண், தனது மன நாட்டத்தை வெளிப்படுத்தியும், தகுதிக்கு மீறிய செயல் எனத் தடுத்திட்ட அதன் பெற்றவர்கள், யாரோ ஒரு பண்பாடற்ற பணம் படைத்த முதியவருக்கு மூன்றாந்தாரமாக்க இசைவு தந்தனர். தன் காதல் போயின் சாதல் என்ற நாகம்மை தற்கொலைக்குத் தயாராகிவிட்டது!

இந்த நாகம்மைதான் இராமசாமியின் உள்ளங்கவர்ந்த கன்னியாம் என, இரு சாராரும் தெள்ளிதின் உணர்ந்து கொண்டனர். பிறகென்ன? இப்படியாகப் போராடிப் புனைந்த புது மணவாழ்வில் இணைந்த இரு இளம் நெஞ்சங்களும் அளவிட ஒண்ணா அன்பு வெள்ளத்தில் ஆழ்ந்து திளைத்தன. உறுதியுடன் நின்று பெற்ற வெற்றித் திருமணம், இறுதிவரை இன்ப இணைப்பாகத் திகழ்ந்ததில் என்ன வியப்பு? முப்பத்தைந்தாண்டுகள் இந்த இலட்சிய தம்பதிகள், ஒன்றிய மனத்துடன் நன்றாக வாழ்ந்து காட்டி, வரலாறு செதுக்கினர்.

மாணாக்கராயிருந்து அய்ந்தாண்டுகளை வீணாக்கியபோது, இராமசாமியின் பிள்ளை விளையாட்டுகள் பெரும் தொல்லையாயிருந்து வந்தன பெற்றோர்க்கு. ஓரளவு திசை திருப்பமாயிருக்கட்டும் என்று கருதியே திருமணவாழ்வில் ஈடுபடுத்தினர். தமக்கு முழுவிருப்பமற்ற பெண்ணை மகன் பிடிவாதமாக மணந்ததால் தமது வெறுப்பைக் காட்டிட வெங்கட்ட நாயக்கர், திருமணத்தன்று, உணவுக் கூடத்திலேயே இருந்தனராம். அய்ரோப்பிய விருந்தினர் மணம் விசாரிக்க வந்தபோது மட்டும் வெளியே வந்தாராம். நாளடைவில் நாகம்மையாரிடம் மிகுந்த பாசம் கொண்டிருந்தாராம். பால்யக் குறும்புகள் வாலிபப் பருவத்தில் மறைந்தா போய்விடும்? பெற்றோரின் வைதிக சனாதனப் போக்குப் பிடிக்காமல் எதிரிடையாய் நடைபோட்டு வந்த இராமசாமி, அதேபோலத் தன் மனையாளும் தன்னையே பின்பற்றி வரவேண்டுமென விரும்பியது தவறல்லவே!

மாமனார் மாமியார் வைணவ சம்பிரதாயங்களில் மூழ்கி ஊறித் திளைத்துக் கிடப்பவர்கள். தம் மருமகளுக்கும் ஆச்சார முறைகளை அவ்வாறே புகட்டிவிட்டனர். நோன்புகள் விரதங்கள் சடங்குகள் பூசை புனஸ்காரங்கள் அனைத்தும் கற்பித்துத் தந்தனர். இராமசாமியின் அநாச்சாரப் பழக்க வழக்கங்களால் பெற்றோர் அவரைத் தொடக்கூட மாட்டார்கள். வேண்டுமென்றே அவர் தமது தாயாரைத் தீண்டினால், தீட்டாகிவிட்டது என்று திட்டிக்கொண்டே அவர் மறுபடியும் ‘ஸ்நானம்’ செய்வார். இதே பாடத்தை நாகம்மையாருக்கும் போதித்தார்கள். முடியுமா?

இராமசாமி தம் மனையாட்டியைத் தம் வழிக்குக் கொணரப் பல முறைகளைக் கையாண்டார். நாகம்மையார் மூத்தோர் ஆணைப்படி மரக்கறி உண்பவர். அவர் தலைமுழுகி விரதம் அனுஷ்டிக்கும் நாளில், தனக்குக் கட்டாயம் புலால் உணவு தேவையெனக் கணவர் அடம் பிடிப்பார். கொண்டான் குறிப்பறியும் பெண்டாட்டியோ, மாறாக நடக்க முனைவாரா? தனியே சமைத்துத் தனியே பரிமாறி வேண்டுமளவு வயிறு புடைக்க உண்ணுமளவு - அன்னாருக்குப் படைத்திட அவரை வீட்டுக்கு வெளிப்புறத்து முற்றத்திலோ தாழ்வாரத்திலோ அமர்த்திச் சாப்பிடச் செய்துவிட்டுத், தாம் பிறகு நீராடிப், பூசை முடித்துத், தனியே சைவ உணவு சமைத்துத், தமக்கு எடுத்து வைத்துக் கொண்டு உண்ணப் போவார். அதுவரை வெளிப்புறத்திலேயே பதுங்கியிருந்து, தாம் மென்று துப்பிய எலும்புத் துண்டுகளை எடுத்துவந்து, அம்மையாருக்குத் தெரியாமல் அவரது தனிச் சமையலில் மறைத்து வைத்துவிட்டு, வெளியேறுவார் இராமசாமி; அவ்வளவுதான்! இந்த எலும்பைக் கண்ட அம்மையார், அய்யோ அய்யோ எனக் கதறிப் பதறித் தமது விரதம், பதியின் சதியால் இந்தக் கதியானதே என மாமியாரிடம் வழக்குரைப்பார். தீர்ப்பு மகன் பக்கம் சாயும். மருமகள் விரதம் கைவிட ஆணைபிறக்கும். மகனுக்கு வெற்றி; இனித் தடையில்லாமல் மாமிச உணவு கிடைக்கும்!

நாகம்மையார் பழைமையில் ஊறிய பெண்தானே; மூட நம்பிக்கை, குருட்டு பக்தி இவற்றுக்கு ஆட்பட்டவர் தானே; தேர், திருவிழா, கோயில், உற்சவம் இவைகளைக் காண விருப்பம் கொண்டு கோயிலுக்குச் செல்வார். அவர் இன்னாரென்றறியாத சில முரட்டு ஆட்களை இராமசாமி கூலிக்கு அமர்த்திக்கொண்டு, அம்மையாரைக் காட்டி “அவள் நமது ஊர்க்கோவிலின் புதிய தேவதாசிப் பெண்; அவளை எள்ளி நகையாடி, ஏளனம், ஏகடியம் செய்து வாருங்கள்!” என்று தூண்டிவிட்டுத் தாம் மறைந்திருப்பார். எய்து விடப்பட்ட அம்புகள் தம் பணியை இனிது முடிப்பர். ஏவியவரோ கள்ளத்தனமாய் நகைத்து நிற்பார். காலிகளின் கண்வீச்சுக் கணைகளைக் கண்டஞ்சும் நாகம்மையார், விரைந்து வீட்டுக்கு ஓடி, இனிக் கோயிலுக்கே செல்வதில்லை என, அங்கு நல்ல பிள்ளையாய் முன்னதாகச் சென்றிருக்கும் கணவரிடம் நடந்ததைக் கூறிச், சத்தியம் செய்வார்.

மனைவிக்குக் கணவன் தாலிகட்டுவது, அவளை என்றென்றும் தனக்கு அடிமையாக வைத்துக்கொள்வதற்காகத்தான். பெண்ணடிமை தீர்வதற்குப் பெண்கள் தாலி அணியாப் பேராட்டம் நடத்த வேண்டும் என்பது இராமசாமியின் பிற்காலக் கொள்கை. இதற்கான முளை அப்போதே அவர் மூளையில் தோன்றிவிட்டது போலும்! பழங்காலப் பழக்கவழக்கங்களில் தோய்ந்து, பிடிவாதமாக, மாற்றங்களுக்கு இடங்கொடுக்காமல், மற்றவைகளை ஓரளவு விட்டுக் கொடுத்தாலும், இன்னமும் தாலியணியும் பழக்கத்தைத் தாய்மார்கள் விடாப்பிடியாய்க் கையாண்டு வருகிறார்கள். தாலியே பெண்களுக்கு வேலி என்று, ஆண்கள் வேலிதாண்டுவதற்கு அனுமதியாகப், பழமொழி ஒன்றும் வழங்குவார்கள். கணவரிடம் மதிப்பு, மரியாதை குறைந்திடும் பெண்டிரும், தாலியிடம் குறைக்கமாட்டார்களே! புனிதம், தெய்வீகம், மங்கலம் இப்படியாக - மஞ்சள் மகிமை தாலிக்கு மிகவும் உண்டு!

இவ்வாறு போற்றிப் பாதுகாக்கப்படும் தாலியை வைத்து இராமசாமி, ஒரு சிறு விளையாட்டு நடத்தினார். இரவு நேரம். உல்லாச வேளை. சல்லாபம் நடக்கிறது. எல்லாமே இன்பமயம். தாலி எதற்கு இடையூறாக இந்த வேளையில் என்பதாகக் கொஞ்சிப் பேசிய இராமசாமி, தயங்கித் தடுத்த நாகம்மையாரை வஞ்சகமாய்ச் சரிக்கட்டி, அவருடைய தாலியைக் கழற்றித் தம் சட்டைப் பையில் வைத்துக் கொண்டார். காலையில் மறந்தது போல், அதே சட்டையைப் போட்டுக் கொண்டு கடைக்கும் போய்விட்டார். உறங்கி எழுந்த பின், நினைவின்றி இருந்த அம்மையாருக்குத் தம் கணவர் வெளியிற் சென்ற பின்னரே, தாலியின் நினைவு எழுந்தது. திடுக்குற்றவராய், அக்கம்பக்கம் பார்த்துத் தமது புடைவை முன்தானையால், கழுத்தினை மூடி மறைத்துக்கொண்டார். எவ்வளவு நேரத்துக்கு இது இயலும்? தமது பதற்றத்தினாலேயே, வெறுமையான கழுத்தை வெளியே காட்டிக் கொண்டார். கேலியாகவும் கடுமையாகவும் மற்ற பெண்டிர், தாலி எங்கே என்று கேட்டபோது, அம்மையார் தாமே முந்திக்கொண்டு சமாதானம் கூறினார். “கணவர் நல்லபடியாக ஊரில் இருக்கும் போது, தாலி இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? குடியா முழுகி விடும்?” என்றார். இனி என்ன? இராமசாமிக்கு இதிலும் வெற்றி!

துவக்கத்தில் எல்லாப் பெண்களையும் போல் பண்டைய வழிமுறைகளையே பின்பற்றி வந்த நாகம்மையார், அவையெல்லாம் தம் கணவருக்குப் பிடிக்காதவை என்பதைப் படிப்படியே உணர்ந்து, தாமே திருத்திக்கொண்டார். சமுதாயக் கொள்கைகளில் மட்டுமின்றி, அரசியல் கொள்கைகளிலும் கணவரையே அடியொற்றி நடை போட்டார். விருந்தோம்பலில் அவர்க்கு நிகரானவர் எவருமிலர். பிற்காலங்களில் தமது கணவர் நாட்டுத் தொண்டுக்குத் தம்மை அர்ப்பணித்துத் தலைமைப் பொறுப்பேற்ற காலை, பெரிய சத்திரம்போல் விளங்கிய அவர் வீட்டில் வந்து தங்கி அன்னையாரின் அறுசுவை உண்டிகளை அருந்தி மகிழாதார் இல்லை! இந்தியாவிலேயே, முதன்முதலில் அரசியல் போராட்டக் களத்தில் குதித்துச் சிறைவாசம் ஏற்ற முதல் பெண்மணி நாகம்மையாரே ஆவர். கஸ்தூரிபாகாந்திக்கும் இப்பெரும் புகழ் கிட்டியது கிடையாது புறநானூற்று வீரத் தாய்மார்களுக்கு ஏற்றிச் சிறப்பிக்கப்பெறும் அத்தனை உயர்பண்புகளும் அம்மையாரிடம் நிறைந்து காணப்பட்டன. கற்ற கல்வி சொற்பமாயினும், கணவர் வழிநின்று கற்றுக்கொண்டது ஏராளம்!

கணவர் இராமசாமி சிக்கனத்துக்கே இலக்கணம் வகுத்தவர். நிறைய நண்பர்களும், தொண்டர்களும் வீட்டுக்கு உணவருந்த வரும்போதெல்லாம், ஏன் இவ்வளவு வகையான உண்டிகள், கறிகள் என்று நாகம்மையாரிடம் கடிந்துகொள்வார். அந்நேரங்களில் அவருக்கு மட்டும், சோறும் மோரும் சிக்கனமாய்ப் பரிமாறிவிட்டு, உழைத்து ஊர் சுற்றி, மக்கள் தொண்டாற்றும் மக்களுக்கு விருந்துணவு படைப்பது அன்னையாரின் வாடிக்கை. மிகப்பெரிய கூடம் நிறைய இலைகளைப் போட்டுவிட்டுத்தான், வந்த விருந்தினரின் தலைகளை எண்ணுவார் அம்மையார்.

அன்புக்கும் பண்புக்கும் இருப்பிடமான நாகம்மையாரைக் கொள்கைப் புடமிட்ட தங்கமாய்ப் பொலிவும் ஒளியும் பெறச்செய்த இராமசாமியின் இல்லற வாழ்வு, இனிதே ஆறாண்டு காலத்தைக் கடந்தது. இன்ப மனைமாட்சியின் மங்கலச் சின்னமாய் இரண்டாவது ஆண்டில் பிறந்த ஓர் பெண் மகவும் அய்ந்தே மாதங்களில் மறைந்து போயிற்று! பின்னர் மகப்பேறு வாய்க்கப் பெறவில்லை இராமசாமிதம்பதியர்க்கு!

உலக மக்களினத்தையே தம் மக்களாய் ஏற்கவிருக்கும் பெருமகனுக்குத் தன்மகவு என ஒன்று உண்டா?

இளமையிலேயே இராமசாமி பொய்ம்மையை வெறுத்து விலக்கி, எத்தகைய இன்னல் எதிர்கொளினும் மெய்ம்மையை நிலைநாட்டவல்லார் என்பதும், வணிகராயினும், தேவையற்று யார்க்கும் தீங்கு விளைத்திட நினையார் என்பதும் இனிது விளங்கிட, நல்ல நகைச்சுவை ததும்பும் நிகழ்ச்சி ஒன்றினை இங்கு நினைவு கூரலாம். 1903-ஆம் ஆண்டு, இவர் தந்தையார்க்கு உதவியாய், வணிகத் துறையில் ஈடுபட்டிருந்தார்; வயது 24. திருச்சியில் ஒருவரிடமிருந்து வரவேண்டிய ஓராயிரம் ரூபாய்க்கான வழக்கிற்கு, வக்காலத்து நமூனாவில் தமது தந்தையார் பெயரைத் தாமே கையெழுத்துப் போட்டு, ஒரு வழக்கறிஞரிடம் கொடுத்துவிட்டு, இவர் ஈரோடு திரும்பிவிட்டார். வழக்கறிஞர் ஆத்திரப்பட்டுத், தந்தை கையெழுத்தை மகன் ஃபோர்ஜரி செய்து, மோசடி செய்துவிட்டதாக, ஒரு வழக்கைத் தொடுத்து விட்டார். தந்தை வெங்கட்ட நாயக்கர் பயந்துபோய்த், தங்கள் பிரசித்தமான பெயருக்குக் களங்கம் விளையுமே என அஞ்சி, சேலம் விஜயராகவாச்சாரியார், சென்னை நார்ட்டன் துரை போன்ற மிகப் பிரபல வழக்கறிஞர்களின் உதவி நாடினார்.

இராமசாமி, தான் இந்தக் கையெழுத்தைப் போடவில்லை என்று சொல்லிவிட்டால், தப்பித்துக் கொள்ளலாம்; அது ஒன்றுதான் வழி; என்று அவர்கள் ஆலோசனை கூறினர்! ஆனால் ஈ.வெ. இராமசாமி, பிடிவாதமாகப் பொய் கூற மறுத்து, வருவது வரட்டுமெனச், சிறை வாழ்க்கைக்கு ஒத்திகை பார்க்கத் தொடங்கி விட்டார்! அதாவது, தன் காப்பு, கொலுசு, கடுக்கன் முதலிய நகைகளைக் கழற்றிவிட்டுச் சவரம் செய்து கொள்ளாமல் கேழ்வரகுக் களி சாப்பிட்டுத், தலையணையில்லாமல், வெறும் பாயில் படுத்துப் பழகி வந்தார்.

இரண்டு மாதங்கழித்துத், திருச்சியில் உதவி கலெக்டரான ஆங்கில இளைஞர் ஒருவர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்து விட்டது. பிரபல வியாபாரியானதால், வழக்கு விசாரணையை வேடிக்கை பார்க்க, நீதிமன்றத்தில் நிறையக் கூட்டம் நிரம்பி வழிகிறது. அரசு வழக்குரைஞரான கணபதி ‘அய்யர், பெரிய கலெக்டரிடம் அனுமதி பெற்று, ஈ.வெ. ராமசாமிக்காக வழக்காட வருகிறார். குற்றம் சாட்டப்பட்ட இளைஞராகிய இராமசாமியின் தோள்மீது கைபோட்டபடி, உள்ளே நுழைகிறார். உதவி கலெக்டர், கணபதி. அய்யரைப் பார்த்து விவரம் விசாரிக்கிறார். பின்னர் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இராமசாமியையும் கேட்கிறார். தகப்பனாருக்காகத், தானே வியாபார விஷயங்களைக் கவனிப்பதால், வயதான அவருக்காகத், கையெழுத்துப்போட்டதாக, ஒத்துக் கொள்கிறார். வெங்கட்ட நாயக்கரும், அச்சத்துடன் ஆமோதிக்கிறார்.

வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. காரணம், இராமசாமி, யாரையும் மோசடி செய்யும் கருத்தோடு இந்தக் கையெழுத்தைப் போடவில்லை; உண்மையை ஒத்துக்கொண்டார் என்பதால்! எப்படியோ உண்மை வென்று விட்டதல்லவா? இந்தச் சம்பவத்தால், வாலிப நிலையிலும் வாய்மையாளராக விளங்கிய நேர்மை தெரிகிறதே!